இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரி 194(கி..பி.810) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை புகாராவில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இயற்பெயர் முஹம்மது அபூ அப்தில்லாஹ். ஹதீதில் அமீறுல் முஃமினீன், நாஸிறுல் அகாதீஸின் நபவிய்யா, நாஷிறுல் மவாரீதில் முஹம்மதிய்யா என்பன சிறப்புப் பெயர்களாகும். ஆனால், ‘புகாரி‘ என்ற பெயராலேயே இமாமவர்கள் பிரபலமாயிருந்தார்கள்.

இமாமவர்களின் முப்பாட்டனார்‘முஙீறா‘ என்பவர் அப்போது புகாறாவின் அதிகாரியாக விளங்கிய யமான் ஜுஃபி என்பவர் மூலம் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இமாமவர்களின் தந்தை இஸ்மாயீல் பின் இப்றாஹீம் பின் முஙீறா என்பவர் மிகச் சிறந்த அறிஞரும் கண்ணியத்திற்குரிய மகானாகவும் விளங்கினார்கள்.

குழந்தை பருவம்

இமாமவர்கள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அநாதையானார்கள். தாயின் மடியிலேயே வளர்ந்தார்கள். குழந்தைப் பருவத்தில் பார்வையை இழந்தார்கள். இயலுமான எல்லா வழிகளாலும் பரிகாரம் தேடியும் பலன் கிட்டவில்லை. தனது செல்ல மகனின் நயனம் திறக்க நாளெல்லாம் தாய் அழுது அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருந்தார்கள்.

ஒரு நாள் கலீலுர் ரஹ்மான் ஹழரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இமாமவர்களின் அன்னையவர்கள் கனவில் கண்டார்கள். அல்லாஹ் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுள்ளான். உங்கள் செல்லப் பிள்ளையின் பார்வை மீண்டுள்ளது என்று சோபனம் கூறினார்கள். பொழுது புலரும்போது பார்வையுடன் கண் விழித்தார்கள் இமாமவர்கள் அவர்களின் கூர்மையான பார்வையால் நிலா ஒளியிலும் ஏடெடுத்து வாசிக்கும் திறன் பெற்றிருந்தார்கள்.

இளமைக் கல்வி

தனது கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலேயே தனது கல்வியை தொடங்கினார்கள். பத்து வயதானபோது ஹதீதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் அதிகரித்தது. அப்போது புகாறாவில் மிகப் பிரசித்திபெற்றிருந்த முஹத்திதுகளிடம் ஹதீஸைக் கற்கச் சென்றார்கள். ஹளரத் ஸலாம் பின் முஹம்மது பேகின்தி, முஹம்மத் பின் யூஸுப் பேகின்தி, அப்துல்லாஹ் பின் முஹம்மது முஸ்னதி, இப்றாஹீம் பின் அஷ்அத் இவர்களுள் முக்கியமானவர்களாகும்.

ஆதாரம் : தபகாத்துல் குப்றா, பாகம் – 2, பக்கம் – 4

சில மாதங்களிலேயே ஆசிரியர்கள் வியக்கத்தக்க வகையில் அவர்களின் திறமை காணப்பட்டது. புகாறாவில் மிகவும் பிரபல்யமான ஒரு முஹத்தித் இருந்தார். இவர் பெயர் ‘தாகிலி‘ ஆகும். இமாமவர்கள் இவரிடமும் சென்று ஹதீது கற்கலானார்கள்.

இமாமவர்களிடம் அபார நினைவாற்றல் காணப்பட்டது. தனது 16வது வயதில் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக், இமாம் வகீஃ ஆகியோரின் நூற்களையெல்லாம் மனனமிட்டார்கள்.

ஆதாரம் : தபகாத்துல் குப்றா பாகம் – 1, பக்கம் – 4

ஹஜ்ஜுக்குச் செல்லல்

ஹிஜ்ரி 210இல் இமாமவர்களுக்கு வயது 16 ஆகும். இப்போது தங்களது மூத்த சகோதரர் அஹ்மத் இப்னு இஸ்மாயீல் மற்றும் அருமைத் தாயாருடன் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். ஹஜ்ஜுக் கடமைகளை முடித்தபின் தாயும், சகோதரரும் நாடு திரும்பினார்கள். இமாமவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டார்கள். அங்கு அறிவைத் தேடுவதிலும், நூல் எழுதுவதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.

தனது 18வது வயதில் ஸஹாபாக்கள், தாபிஈன்களின் தீர்ப்புக்களைத் திரட்டினார்கள். இதே ஆண்டில் அன்னாரின் புகழ்பூத்த ‘கிதாபுத்தாரீஹ்‘ என்றநூலை றஸுலே அக்றம், நூறே முஜஸ்ஸம், முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் திரு ரௌலாவுக்கு முன் அமர்ந்து கொண்டு நிலா வெளிச்சத்தில் எழுதினார்கள்.

இமாமவர்கள் மக்கத்துல் முகர்ரமா புகுந்தால், அங்குள்ள அதி உயர் தரத்தில் உள்ள முஹத்திதுகளிடம் எதுவித சிபாரிசும் இன்றி நேரே சென்று பாடம் படிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தார்கள்.

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்த காலகட்டத்தில், ஹதீஸ்களை முழுமையாக தொகுக்கப்படாத அந்த காலகட்டத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக கொள்கை ரீதியாக பிளவுபட்டு பிரிந்து இருந்தார்கள். குர்ஆன் சுன்னாவை முழுமையாக பின்பற்றும் கொள்கையில் உள்ளவர்களிடம் மட்டுமே இமாம் புகாரி அவர்கள் ஹதீஸ்களை கேட்டு தொகுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 1080பேர்களிடம் ஹதீஸ்கள் கேட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னத்துவல் ஜமாத் கொள்கையில் உள்ளவர்கள் என்று இமாம் புகாரி அவர்களே கூறியுள்ளது வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளது. ஹதீஸ்களை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் கொள்கை ரீதியாக மாறுபட்டவர்களுக்கு மறுப்பு சொல்லும் விதமாக தன்னுடைய ஹதீஸ்களை வரிசைபடுத்தி தொகுத்து தந்துள்ளார்கள்.

உதாரணமாக ஷியாக்கள், முஹ்தசிலாக்கள், ஹாரிஜியாக்கள் போன்றவர்களின் வழிகேட்டுக் கொள்கைக்கு மறுப்பு சொல்லும் விதமாக ஒவ்வொரு தலைப்பிட்டு ஹதீஸ்களை தொகுத்துள்ளார்கள் என்பதை புகாரி கிரந்தத்திலிருந்து நாமும் அறிந்து கொள்ளலாம்.

இன்று திருக்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் இமாம் புகாரி அவர்கள் தொகுத்துத் தந்துள்ள புகாரி கிரந்தம் உள்ளது.

புகாரி கிரந்தத்தை தொகுத்த பின்னர், இமாம் புகாரி அவர்கள் தன்னுடைய ஆசான்களான இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரலியல்லாஹு அன்ஹு), அலி இப்னு மதீனி(ரலியல்லாஹு அன்ஹு), இஸ்ஹாக் இப்னு ராஹவியா(ரலியல்லாஹு அன்ஹு) போன்ற ஹதீஸ் துறையில் நிபுனத்துவம் வாய்ந்தவர்களிடம் புகாரி கிரந்தந்ததை காட்டி, அதில் உள்ளவைகள் அனைத்தும் சரி என்பதை உறுதிபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு ஹதிஸையும் பதிவு செய்யும்போது ஒளு செய்துவிட்டு இமாம் புகாரி அவர்கள் இரண்டு ரக்காத் தொழுத பிறகே ஒவ்வொறு ஹதீஸையும் எழுதியுள்ளார்கள்.

ஹதீதைத் தேடி இமாமவர்கள் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அதனை இமாமவர்களே கூறும்போது, இரு முறை மிஸ்றுக்கும், இரு முறை சீரியாவு (ஷாமு)க்கும், இரு முறை அல் ஜீரியாவுக்கும், நான்கு முறை பஸறாவுக்கும், ஆறு ஆண்டுகள் ஹிஜாஸ் மண்ணிலும், கூபா, பகுதாதுக்கு கணக்கற்ற முறையிலும் ஹதீஸ் தேடி பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

தாம் சேகரித்த ஹதீதுகளை தொகுத்து நூல் வடிவிலாக்கினார்கள். இந்நூலுக்கு இமாம் புகாரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சூட்டிய முழுப்பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹூல் முக்தஸர் பின் கனனி ரசூலில்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வ அய்யமிஹி ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் முறிவுறாதா. நிபந்தனைகளுக்குட்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்ற அல்லாஹ்வின் திருத் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் வாழ்க்கைச் சரிதை குணநலன்கள் அனைத்தும் அமைந்த சன்மார்க்கத்தின் சகல துறைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு என்பது இதன் பொருளாகும். இதனை ஸஹீஹூல் புகாரீ (இமாம் புகாரீ அவர்களின் ஆதாரப்பூர்வ நபிமொழித் தொகுப்பு) என்று சுருக்கமாகக்கூறுவர்.

இமாம் புகாரி அவர்கள் புகாரி கிரந்தம் மட்டும் எழுதவில்லை, மேலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். (இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய நூல் தான் தஹ்ரீஹ் என்ற புத்தகம். இதில் நிறைய ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் பதிவு செய்கிறார்கள். இந்த தஹ்ரீஹ் என்ற நூலிருந்து தான் அநேக அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறியப்படுகிறது. 16லட்சம் ஹதீஸ்களை சேகரித்துள்ளார்கள், அவைகளில் 7275ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துத் தந்துள்ளார்கள். இவைகளை மூன்று முறை சரி பார்த்துள்ளார்கள்.)

அவற்றில் சில 1.அல் அதபபுல் முஃப்ரத் 2.அத்தாரீகுல் கபீர் 3.அத்தாரீஸ் ஸஃகீர் 4.அல் முஸ்னதுல் கபீர் 5.அத்தஃப்சீரல் கபீர் 6.அல் மப்சத் 7.அல்ஹிபா 8.அல் அ`ரிபா 9.அல்வஹ்தான் 10.அல் இலல்.

அபார நினைவாற்றல்

கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் இன்றியமையாத ஒரு விடயம் நினைவாற்றலாகும். இமாமவர்களுக்கு வல்ல நாயன் குறைவில்லாமல் நிறப்பமாக இதனை வழங்கியுள்ளான். ஒரு விடுத்தம் கேட்டால் அது வாழ் நாள் பூராகவும் நினைவில் பதிவாகியிருக்கும். இமாமவர்களின் நினைவாற்றலை பரீட்சித்துப் பார்ப்பதற்கு பலர் பலமுறை சோதனைகளை மேற்கொண்டனர். முடிவில் ஏமாற்றமே விடையானது.

இஸ்மாயீல் இப்னு ஹாஷித் என்பவர் கூறுவதைக் கேளுங்கள்!

நானும் எனது நண்பர்கள் சிலரும் இமாம் புகாரியோடு ஒரே வகுப்பி்ல் படித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் ஹதீதைப் படிப்பதற்காக பஸறாவில் உள்ள முஹத்திதுகளிடம் சென்று வருவோம். நாங்கள் படித்ததை எழுதிக் கொள்வோம். இமாம் புகாரி குறிப்பெடுக்கமாட்டார். செவிமடுப்பதோடு நின்று கொள்வார்.

காலத்தை வீணடிக்காமல் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்று இமாமவர்களிடம் பலமுறை நாங்கள் வினயமாக வேண்டிக் கொள்வோம். நாங்கள் கூறும் எதையும் அவர் பொருட்படுத்துவதாக இல்லை. 16 நாட்கள் கழிந்த பின் நீங்கள் என்னை கடுமையாக ஏளனம் செய்து நச்சரிக்கின்றீர்கள். உங்களின் நச்சரிப்பும், கேலியும் எனக்குச் சலித்துப் போய்விட்டது.

இதுவரை நீங்கள் ஏட்டில் பதித்தவைகளைப் படித்துக் காட்டுங்கள் என்றார்கள். ஏறத்தாள 15,000 ஹதீதுகள் வரை அவர்கள் எழுதியிருந்தார்கள். நாங்கள் ஏடெடுத்துப் படிக்கலானோம். எங்கள் ஏட்டில் தவறு காணப்பட்டது. இமாமவர்களின் மனப் பதிவில் துளியும் தவறு காணப்படவில்லை. முடிவு! இமாமவர்களின் மனப்பதிவுப்படி எமது ஏட்டை சரி செய்தோம்.

முஹம்மது இப்னு அஸ்ஹர் என்பவர் கூறுகின்றார்,

ஒரு முறை நாங்கள் முஹம்மத் இப்னு ‘பர்யாபி‘ என்பவரின் வகுப்புக்குச் சென்றோம். எங்களோடு இமாம் புகாரியும் கூட இருந்தார்கள். இமாம் ‘பர்யாபி‘ என்பவர் ஒரு ஹதீதின் அறிவிப்பாளர் பட்டியலை ஸுப்யான், அபூ அறூபா, அபுல் கிதாப், அபூ ஹம்ஸா என்று இமாம் பர்யாபி அறிவிப்பாளர் பட்டியலை முடித்தார். ஆனால், அவர்களின் பெயரை முழுமையாக கூறவில்லை. சபையோரை விளித்து! 1. அபூ அறூபா 2. அபுல்கிதாப் 3. அபூஹம்ஸா ஆகிய மூவரின் பெயர்களைக் கூறுமாறு கேட்டார். சபையிலிருந்த எவராலும் பதில் கூற முடியவில்லை. இமாம் புகாரி அவர்கள் விடையளித்தார்கள்.

1. அறூபா என்பவர் பெயர் – முஹம்மது இப்னு றாஷித்2. அபுல் கிதாபின் பெயர் – கதாதா இப்னு திஙாமா3. அபூஹம்ஸா என்பவர் ஹளரத் அனஸ்

இமாம் புகாரி அவர்கள் இதனை தாமதியாது கூறியதும் சபை கல்லாய் சமைந்து நின்றது.

ஆதாரம் : பத்ஹுல் பாரி முன்னுரை

ஒரு முறை சமர்கந்தில் 400 முஹத்திதுகள் திரண்டு இமாம் புகாரி அவர்களை சத்திய சோதனை செய்வதற்கு முடிவு செய்தனர். ஹதீதுகளின் அறிவிப்பாளர்களையும், கருத்தையும் புரட்டி, மாற்றியமைத்து இமாமவர்களின் முன்வைத்தனர். ஏழு நாட்களாக இமாமவர்களை அனைத்து கோணத்திலும் சோதனை செய்தனர். ஒரு முறையாவது இமாமவர்களை தோல்வியுறச் செய்ய முடியவில்லை. யாவற்றையும் ஒழுங்குபடுத்தியும் செம்மையாகவும் செப்பினார்கள் செம்மல் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பகுதாத் சென்றவேளை அங்குள்ள முஹத்திதுகள் இமாமவர்களின் நினைவாற்றலின் வீச்சத்தை அளக்க ஆவலானார்கள். அதற்காக நூறு ஹதீதுகளைப் பொறுக்கி அதன் அறிவிப்பாளர்களையும் ஹதீதின் கருவையும் ஒன்றோடு ஒன்றாக மாற்றிக் குழப்பி அதனைத் துருவித் துருவிக் கேள்வி கேட்பதற்கு பத்து நிபுணர்களையும் நியமித்தனர்.

ஒவ்வொரு நிபுணருக்கும் பத்துப்பத்து ஹதீதுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. மேடைக்கு இமாமவர்கள் வருகை தந்தார்கள். அரங்கில் துறைபோகக் கற்ற முஹத்திதுகள், புகஹாக்கள், பொது மக்கள், படித்தவர்கள் என்று பல்லாயிரம் பேர் நிறைந்து காணப்பட்டனர்.

அரங்கில் மயான அமைதி நிலவியது. ஒருவர் எழுந்து ஏற்கனவே தயார் நிலையிலிருந்த பத்து ஹதீதுகளையும் ஒவ்வொன்றாக சமர்ப்பித்தார். அவர் முன் வைத்த ஒவ்வொரு ஹதீதையும் செவியேற்ற இமாமவர்கள் இந்த ஹதீதை நான் கேள்விப்படவில்லைஎன்றே கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு பத்து ஹதீஸ் துறை நிபுணர்களும் தாங்கள் ஏற்கனவே தயார் நிலையில் குழப்பி வைத்திருந்த ஹதீதுகளை எழுந்து கூறிக்கொண்டும் அதுபற்றி வினா எழுப்பிக் கொண்டுமிருந்தனர். அவையனைத்தையும் அமைதியாக உள்வாங்கியஇமாமவர்கள் நான் அதனை அறிந்திருக்கவில்லையே! என்று அடக்கத்துடன் பதில் கூறிக் கொண்டனர்.

இமாமவர்களின் பதில் சபையோரை சலிக்க வைத்துவிட்டது. இமாமவர்களின் பதிலின் நுட்பத்தை அறிஞர்கள் வியப்புடன் நோக்கினர். ஒருபக்கம் ஹதீதில் இமாமவர்கள் போதிய அறிவற்றவர் என்ற அதிருப்தி! மறுபக்கம் இமாமவர்களின் அறிவுக் கூர்மையின் வியப்பு!

பத்து ஹதீத் நிபுணர்களும் கேள்வி கேட்டு களைத்துப்போய் இருக்கையில் அமர்ந்ததும்இமாமவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

முதலாவதாக பத்து ஹதீதுகளை முன்வைத்தவரை நோக்கி, நீங்கள் முன்வைத்த பத்து ஹதீதுகளும் தவறானவை! சரியான ஹதீதுகளின் அறிவிப்பாளர் பட்டியலும் ஹதீதின் பொருளும் இப்படித்தான் உள்ளது என்று ஆரம்பித்து.

பத்தாவது நபரின் நூறாவது ஹதீதின் சரியான அறிவிப்பாளருடன் ஹதீதின் கருத்தையும் முன்வைத்தார்கள். இமாமவர்களின் அறிவுக் கூர்மையையும் அபார நினைவாற்றலையும் சபையோரும் அறிஞர்களும் வியந்து, வியந்து பாராட்டினர்.

ஆதாரம்:தபகாத்து ஷாபிஇய்யதுல் குப்றா, பாகம் -2 , பக்கம் 6

ஸலீம் இப்னு முஜாஹித் கூறுகின்றார்கள்,

ஒரு நாள் முஹம்மத் பின் ஸலாம் பேகன்தியின் ஹதீஸ் வகுப்பிற்குச் சென்றேன். சற்று முன்கூட்டி வந்திருந்தால் எழுபதினாயிரம் ஹதீதுகளை மனனம் செய்த ஆற்புத சிறுவனை தாங்களுக்குக் காட்டியிருப்பேன் என்று கூறினார். இதைக் கேட்டதும். உடன் வெளியேறி அவரைத் தேடினேன். ஒருவாறு அவரைக் கண்டுபிடித்தேன்.

தாங்களுக்கு எழுபதினாயிரம் ஹதீதுகள் மனனம் என்பது உண்மையா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். இதை விட அதிகமாக நினைவில் உள்ளன என்று இமாமவர்கள் பதில் கூறினார்கள். நான் அறிவிக்கும் ஸஹாபாக்களில் கணிசமானவர்களின் வரலாற்றை மிகத்தெளிவாக அறிந்துள்ளேன். அவர்கள் பிறந்த இடம், வபாத்தான இடம், கற்ற இடம், வாழ்ந்த இடம் அவர்கள் யார், யாரிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்புச் செய்துள்ளனர். உள்ளிட்ட அனைத்தையும் அறிந்திருப்பதுடன் நான் அறிவிக்கும் ஹதீதுகளை மூலப் பிரதிகளைப் பார்வையிட்ட பின்பே அறிவிக்கின்றேன். என்றும் கூறினார்கள். இவ்வாறு கூறும்போது இமாமவர்களின் வயது பதினாறு மட்டுமே.

ஆதாரம் : தபகாத்துஷ் ஷாபியத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 05

முஹத்திதுகள் சரியானதாகப்பட்டதில் சிலதைத் தெரிவு செய்யலானார்கள். ஆனால் இமாமவர்களின் நிலை அவ்வாறாக இருக்கவில்லை. அக்காலப் பகுதியில் எத்தனை ஸனதுகள் நடைமுறையிலிருந்ததோ அத்தனையையும் திரட்டி நினைவில் பதித்துக் கொண்டார்கள். இவற்றின் தரம், குறை, நிறை யாவற்றையும் விலாவாரியாக விளங்கியிருந்தார்கள்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள், அதிகமான நபில் தொழுவார்கள், இரவில் விழித்திருந்து அதிகமாக குர்ஆன் ஓதுவார்கள். ரமழானில் இரவு பகலாக திருக்குர்ஆனை ஓதுவார்கள். தராவீஹ் தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஒரு திருக்குர்ஆனை ஓதி முடிப்பார்கள்.

இரவின் பிந்திய பகுதியிலிருந்து ஸஹர் வரை தினமும் ஒரு குர்ஆனை முழுமைப்படுத்துவார்கள். நோன்பு திறக்கும் வேளை அதனை தமாம் செய்வார்கள். திருக்குர்ஆனை தமாம் செய்யும்போது கேட்கப்படும் துஆ கபூலாகும் என்றும் கூறுவார்கள்.

ஆதாரம் : பத்ஹுல் பாரி முன்னுரை

ஒரு தினம் இமாம் அவர்கள் ஒரு தோட்டத்திற்கு பகல் உணவுக்காகச் சென்றார்கள். அங்கு ழுஹர் தொழுகைக்குப் பின் நபில் தொழ ஆரம்பித்தார்கள். தொழுது முடிந்த பின் தனது அங்கியின் ஓரத்தை உயர்த்தி இதனுள் ஏதோ ஒன்று இருப்பது போலிருக்கின்றது.சற்றுப் பாருங்கள் என்று அருகிலுள்ளவர்களிடம் கூறினார்கள்.

அங்கியை அகற்றிப் பார்த்தபோது ஒரு தேள் அங்கிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அது 16 விடுத்தம் தீண்டியிருந்தது. தேள் முதல் முறை தீண்டியதும் தொழுகையை நிறுத்தியிருக்கலாம் என்று யாரோ ஒருவர் இமாமவர்களிடம் கேட்ட போது “நான் ஒரு சூறாவை ஓதிக் கொண்டிருந்தேன். அதனை முடிக்கு முன் தொழுகையை நிறுத்தி விட என் மனம் இடம் கொடுக்கவில்லை என்றார்கள்“.

ஆதாரம் : கஸ்தலானி, பாகம் 01, பக்கம் 21

இமாம் குதைபா பின் ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்,

“நான் புகஹா சட்ட அறிஞர்கள் ஸுஹ்ஹாத் (துறவிகள்), உப்பாத் (வணக்கவாதிகள்) உள்ளிட்டோரை சந்தித்துள்ளேன். ஆனால் இவர்களில் இமாம் புகாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மிகைத்த எவரையும் நான் கண்டதில்லை. ஸஹாபாக்கள் மத்தியில் அமீருல் முஃமினீன் ஹஸரத் உமர் பாருக் ரழியல்லாஹு அன்ஹு போன்றோர் எவ்வாறு இருந்தார்களோ அதுபோலவே நான் வாழும் காலத்தில் இமாம் புகாரி அவர்கள் விளங்கினார்கள். குறாஸான் மண்ணில் இமாம் புகாரி அவர்களைப் போன்ற யாரும் பிறக்கவில்லை என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்“.

அலி இப்னு மதின் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். “இமாம் புகாரி அவர்களை நிகர்த்த எவரும் எம்மத்தியில் காணப்படவில்லை. இமாம் புகாரி அவர்கள் ஒருவரைப் பாராட்டினால் அவர் எம் முன்னிலையில் விருப்பத்திற்குரியவராக இருப்பார்“ இத்தனைக்கும் அலி இப்னு மதீனி மிகவும் கீர்த்தி மிக்க ஒரு ஹதீஸ் கலை அறிஞராகவும் இருந்தார்கள். இவரைப்பற்றி இமாம் புகாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடும்போது.

அலி இப்னு மதீனி அவர்களின் அவையில் என்னை நான் ஒரு சிறியவனாகவே உணர்வேன் இந்த உணர்வு வேறு எந்தச் சபையிலும் எனக்கு ஏற்படுவதில்லை. ரஜாஹ் இப்னு ராஜாஹ் என்பவர் கூறுகின்றார். அறிஞர்கள் மத்தியில் இமாம் புகாரி அவர்களின் மதிப்பு, வனிதையர் மத்தியில் ஒரு ஆணின் நிலை போன்றாகும். அவர் பூமியில் நடமாடும் அல்லாஹ்வின் அத்தாட்சியில் ஒன்றாகும்.

அப்துல்லா இப்னு அப்துர் ரஹ்மான் தாரமீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். ‘நான் புனித மக்கா, மதீனா, ஈராக், ஹிஜாஸ், ஷாம் போன்ற நாடுகளிலுள்ள பல அறிஞர்களைப் பார்த்துள்ளேன். ஆனால் இமாம் புகாரி அவர்களைப் போன்ற பல்கலைக் கழகத்தை நான் கண்டதில்லை. அவர் மனிதர்களில் அதிகம் புரிந்தவராகக் காணப்பட்டார்‘

இமாம் அபூபக்கர் இப்னு இஸ்ஹாக் இப்னு குசைமா கூறுகின்றார். “வானத்திற்குக் கீழ் இமாம் புகாரியை விட அதிகம் ஹதீஸ்களை அறிந்தவர்கள் யாருமில்லை.“ இமாம் திர்மிதீ கூறுகின்றார்.“ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றிய அறிவும், அதில் உள்ள குறைகள் பற்றிய தெளிவும் இமாம் புகாரியை விட அதிகம் தெரிந்தவர் எவரும் இருக்கவில்லை“

இமாம் முஸ்லிம் அவர்கள் இமாம் புகாரி அவர்களைச் சந்தித்தால் உங்களை மிகைத்த பேரறிஞர் உலகில் எவருமில்லை. என்று கூறிவிட்டு முகத்திதுகளின் தலைவரே! ஆசான்களுக்கெல்லாம் பெரிய ஆசானே! உங்கள் பாதத்தை முத்தமிடுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கூறுவார்கள்.

இமாம் புகாரி ரழியல்லாஹு அன்ஹு பகுதாதிலிருந்து ஹிஜ்ரி 250இல் நைஸாபூர் வந்து சேர்ந்தார்கள். அன்னாரின் வருகையை அறிந்த நைஸாபூர் மக்கள் பல பாதத் தூரம் சென்று அவர்களை வரவேற்றார்கள். இமாமவர்களைவரவேற்பதில் உலமாக்கள், தலைவர்கள், கனவான்கள் என்று எல்லாத்தரப்பினரும் பங்கேற்றனர்.

இமாம் புகாரி அவர்கள் ஹதீது வகுப்புக்களை ஆரம்பித்ததும் எட்டுத்திசையிலிருந்தும் மக்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். மக்கள் வெள்ளம் அரங்கை நிரைந்து வெளியிலும் மிகத்தூரம் வரை நீண்டிருந்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களிலும் வழக்கமாக நடை பெற்றுக் கொண்டிருந்த ஹதீஸ் வகுப்புக்கள் ஆள் இல்லாமல் ஸ்தம்பித்து போய்விட்டது.

இமாமவர்கள் வாழ்ந்த காலம் முஹ்தஸிலாக்களின் வளர்ச்சி பெற்ற காலமாகும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முஃதஸிலாக்களின் வாதம் பட்டி தொட்டி எங்கும் அதிகம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. குர்ஆன் அல்லாஹ்வின் கலம் (பேச்சு) ஆகும். அல்லாஹ்வின் ஏனைய பண்புகள் போன்று அல்லாஹ்வின் பேச்சும் ஒரு பண்பாகும். அல்லாஹ்வின் எப்பண்பும் படைக்கப்பட்டவை அல்ல அவை பூர்வீகமானவையாகும் என்பது சுன்னத் வல்ஜமாஅத்தின் அசையாத நம்பிக்கையாகும்.

திருக் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாக இருப்பதினால் திருக்குர்ஆன் ஒரு படைப்பு அன்று அது அநாதியானது. இந்த வாதம் முஃதஸிலாக்களுக்கு எதிராகும். இவர்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்று வாதிக்கின்றனர்.

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுநைஸாபூரில் 2, 3 நாட்களாக எந்த சலசலப்புமின்றி ஹதீஸ் வகுப்பை நடாத்திக் கொண்டிருந்தபோது சபையில் ஒருவர் எழுந்து குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா? என்று ஒரு கேள்வி எழுப்பினார். இமாம் புகாரி அவர்கள் இவர் கேள்வியை கணக்கில் எடுக்கவில்லை. அம்மனிதர் விடவில்லை. பலமுறை கேட்டு நச்சரித்தார். ஈற்றில் வேறு வழியின்றி குர்ஆன் படைக்கப்பட்டதல்ல மனிதனின் செயல்கள்தான் படைக்கப்பட்டது. இது பற்றிய சோதனை பித்அத் என்று இமாமவர்கள் விடை பனர்ந்தனர்.

இமாமவர்களின் பதிலை இரட்டிப்புச் செய்து பெரிய ரகளையையே அம்மனிதர் உருவாக்கினார். இதனால் இமாமவர்களுக்கு பாரிய நெருக்கடி நிலை தோன்றியது. இதன் பின் மிகக் குறைவான மாணவர்களே இமாமவர்களின் ஹதீஸ் வகுப்பிற்கு வருகை தந்தனர்.

நைஸாபூரில் பலராலும் மதிக்கப்பட்ட முஹம்மத் பின் யஹ்யா தகீலி என்பவர் இமாம் புகாரி அவர்களுக்கு எதிரியாக மாறிவிட்டார். பலவழிகளிலும் இமாம் புகாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் நைஸாபூரிலிருந்து வெளியேற முடிவு செய்தனர்.

இமாம் புகாரி நைஸாபூரியை விட்டு தனது தாயகமான புகாறாவுக்குப் பயணமானார்கள். இமாமவர்கள் புகாறாவுக்கு வருகை தருவதை அறிந்து அந்த புகாறா வாசிகள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

இமாமவர்களை வரவேற்பதற்காக ஊர் மக்கள் மூன்றுமைல்களுக்கு அப்பால் வந்து கூடாரமடித்து இமாமவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். இமாமவர்கள் அங்கு வருகை தந்ததும் முத்துக்கள், பணங்கள் வழங்கி இமாமவர்களை அம்மக்கள் வரவேற்றனர்.

தாயகம் திரும்பிய இமாமவர்கள் ஹதீஸ் வகுப்புக்களை பூரண நிம்மதியுடன் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆறு ஆண்டுகள் வரை இமாமவர்களின் ஹதீஸ் வகுப்பு அமைதியாக தொடர்ந்தது. இதனைச் சகித்துக்கொள்ளாத பொறாமைக்காரர்கள் இமாமவர்களின் ஹதீஸ் வகுப்பை குழப்புவதற்கு ஏதும் வழி கிட்டாதா? என்றிருக்கும்போது அவர்கள் மூளையில் இப்படி ஒரு யோசனை பிறந்தது.

அப்பாஸியர்களின் புகாறாவுக்கான கவர்ணராக காலித் பின் அஹ்மத் தகீலி கடமை செய்து கொண்டிருந்தார். இவரை இமாமவர்களுக்கு எதிராக தூண்டி விடும் தீய எண்ணத்தில் சிலர் இவரிடம் வந்து “இமாம் புகாரி அவர்களை தங்கள் அரண் மனைக்கு அழைத்து உங்கள் பிள்ளைகளுக்கு ஹதீஸ் பாடம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யக் கூடாதா? என்று கூறினார்“. அதனை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்ட ஆளுனர் தனது பிள்ளைகளுக்கு தனது அரண்மனைக்கு வந்து தங்களின் ஜாமிஉ ஸஹி புகாரியையும் தாரிக் என்ற நூலையும் கற்றுக் கொடுக்க வருமாறு இமாமவர்களிடம் தூது அனுப்பினார். இதற்கு இமாமவர்கள்.

இது ஹதீது பற்றிய அறிவாகும். இதைக் கேவலப்படுத்த நான் விரும்பவில்லை. என்னிடம் தங்களின் பிள்ளை ஹதீஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் எனது வகுப்பிற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்கவும். ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து அவர்களும் படிக்கலாம் என்று தூதுவரிடம் பதில் கூறி அனுப்பிவைத்தார்கள்.

இமாமவர்களின் பதிலைக் கேட்ட கவர்ணர் இமாமவர்களுக்கு இவ்வாறு பதிலை அனுப்பினார்கள். எனது அரண்மனைக்கு தாங்கள் வந்து பாடம் சொல்லிக் கொடுக்க முடியாவிட்டால் எனது பிள்ளைகளை தங்களின் வகுப்பிற்கு அனுப்பி வைக்கின்றேன். ஆனால் ஒரு நிபந்தனை எனது பிள்ளைகளுக்கு தனியாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கவர்ணரின் நிபந்தனை இமாமவர்களுக்கு நல்லதாகப் படவில்லை. இது ரஸுலுல்லாஹிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் அனந்தரம் இதில் எல்லோருக்கும் சமனான பங்கும், உரிமையும் உண்டு. இதில் எவருக்கும் தனித்துவம் வழங்க முடியாது என்று இமாமவர்கள் சொல்லியனுப்பினார்கள். இமாமவர்களின் இப்பதில் கவர்ணரின் சினத்தைக் கிளப்பியது. கவர்ணர் இமாமவர்களுக்கு எதிராக பொதுமக்களை திரட்டுவதற்கு வழிதேடினார்.

அதற்காக புகாறாவில் சிலரை தேர்ந்தெடுத்தார். இவர்களுள் ஹுநைத் பின் அபுல் வறக்கா மிகப் பிரபலமானவராகும். இவர்கள் இமாமவர்களிடம் வந்து கருத்து முரண்பாடுள்ள விடயங்களுக்கு விளக்கம் வேண்டினர். இமாமவர்கள் கூறும் பதிலைத் திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவது இவர்களுக்கு இடப்பட்ட பணியாகும்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பால் குடிகாலத்தில் ஆட்டின் பாலைக் குடித்தால் பால் குடி உறவு இருவருக்குமிடையில் ஏற்படுமா? என்று ஒருவர் இமாமவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு பால் குடி உறவு உண்டாகுமென்று இமாமவர்கள் விடை பகர்ந்ததாகவும் கதை கட்டப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது இவ்வாறு இருக்கும்போது குர்ஆனில் உள்ள வார்த்தைகளும் படைக்கப்பட்டது என்று இமாம் புகாரி கூறுகின்றார் என்ற தகீலியின் கடிதம் பகுதாதிலிருந்து வந்தது. இதற்கு மத்தியில் இமாமவர்களுக்கு எதிராக ஒரு பத்திரம் தயாரானது அதில் புகாறாவில் உள்ள உலமாக்களின் ஒப்பமும் இருந்தது.

பொதுமக்களின் எதிர்ப்பு நன்கு வலுவடைந்தபோது புகாறாவை விட்டும் வெளியேற வேண்டும் என்ற உலமாக்களின் பத்திரம் இமாமவர்களிடம் கையளிக்கப்பட்டது. தாய் நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என்ற கடிதத்தைப் பார்த்ததும் இமாமவர்களுக்கு ஏற்பட்ட துக்கத்திற்கு எல்லை இல்லை.

(இமாமவர்கள் கவலையால் மனமுடைந்து காணப்பட்டார்கள். இந்நிலையில் எதிரிகளுக்கெதிராக அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! எவர் என்னை கேவலப்படுத்தினார்களோ! அவர்களையும் அவர்கள் குடும்பத்தினர்களையும் கேவலப் படுத்துவாயாக! என்று துஆச் செய்தார்கள்.

இமாமவர்களின் இப்பிரார்த்தனையை அல்லாஹுத்தஆலா உடன் ஏற்றுக் கொண்டான். ஒரு மாதம் கழியமுன் கவர்னர் காலித் குடும்பத்தில் துஆவின் பலனைக் காணக் கூடியதாக இருந்தது. காலித் கவர்ணர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் செய்த குற்றத்திற்கு அவரை கழுதையில் ஏற்றி குற்றம் செய்தவருக்கான தண்டனை இதுதான் என்று கூறி புகாறா நகர் எங்கும் சுற்ற வேண்டும் என்று எழுதப்பட்ட சுல்தானின் கடிதம் பகுதாதிலிருந்து காலிதுக்கு வந்தது.

கடிதத்தில் கூறப்பட்டவாறு காலித் தண்டிக்கப்பட்ட பின் பகுதாதுக்கு அனுப்பப்பட்டார். பகுதாத் சென்றதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே மரணித்தார். இமாமவர்களுக்கு எதிராக சதி செய்த அனைவரும் வார்த்தைகளால் கூறமுடியாத அளவுக்கு பல சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.)

இமாம் புகாரி அவர்களை நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டதும் நாட்டை விட்டும் வெளியேறினார்கள். இமாமவர்கள் புகாறாவைத் துறந்து வெளியேறும் செய்தி ஸமர்கந்த் வாசிகளுக்கும் எட்டியது. ஸமர்கந்த் மக்கள் இமாமவர்களை தாங்கள் வரவேற்று கண்ணியத்தோடு நடத்துவதாக கடிதம் எழுதினர். அவர்களின் அழைப்பை ஏற்று இமாமவர்கள் ஸமர்கந்த் நோக்கி பயணமானார்கள்.

ஸமர்கந்திற்கு அண்மையில் உள்ள “கறன்தக்“ என்ற கிராமத்தை இமாமவர்கள் சென்றடைந்ததும் ஸமர்கந்திலும் இமாமவர்களுக்கெதிரான கிளர்ச்சி வெடித்துள்ளது என்ற செய்தி அவர்களுக்கு எட்டியது. ஸமர்கந்து செல்வதைப் பிற்போட்ட இமாமவர்கள் ஸமர்கந்து மக்கள் ஒரு முடிவிற்கு வரும்வரை கறன்தக் என்ற இடத்தில் சில நாட்கள் உறவினர்கள் இல்லத்தில் தங்கினார்கள்.

ஸமர்கந்த மக்களின் இறுதிமுடிவு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. இது இமாமவர்களுக்கு உச்ச மனவேதனையைக் கொடுத்தது.

இமாமவர்கள் கவனிப்பாரில்லாமல் கைவிடப்பட்டவர்கள் ஆனார்கள். ஒரு தினம் தஹஜ்ஜுத் தொழுத பின் கவலை தோய்ந்த உள்ளத்தால் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்

யாஅல்லாஹ்! உலகம் விசாலமானதுதான் ஆனால் எனக்கு நெருக்கடியாகி விட்டது என்னை உன்பால் எடுத்து விடு என்று உருக்கமாக துஆக்கேட்டார்கள்.

ஆதாரம் : பத்ஹுல்பாரி முகத்திமா, பக்கம் – 494

சில நாட்களின் பின் இமாமவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். இப்பொழுது ஸமர்கந்திற்கு வருமாறு ஒருவர் வந்து கூறினார். இமாமவர்கள் ஸமர்கந்த் செல்வதற்கு தயாரானார்கள். எழுந்து காலுறை அணிந்தார்கள். தலைப்பாகை சூடினார்கள். வாகனத்தை நோக்கி மிகச் சிரமத்துடன் இருபது எட்டுக்கள் எடுத்து வைத்தார்கள். அவர்களால் நடக்க முடியவில்லை.

என்னை விட்டுவிடுங்கள். மிகக்கடினமான பலவீனம் என்னில் காணப்படுகின்றது என்று கூறிய இமாமவர்கள் இருகரம் ஏந்தி – சிறிது நேரம் துஆக் கேட்ட பின் சாய்ந்து படுத்தார்கள். அவர்கள் படுத்ததுமே அவர்களின் உயிர் வல்லறஹ்மான் திரு சன்னிதானத்திற்கு ஹிஜ்ரி 256 (கி.பி. 870) ஷவ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு சமர்க்கந்து நகரில் பதின்மூன்று நாட்கள் குறைவாக 62ஆம் வயதில் ஷவ்வால் முதல் நாள் ஏகியது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.மறுநாள் பெருநாள் ளுஹர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இமாமவர்களின் றூஹ் உடலை விட்டும் பிரிந்தபின் உடலிலிருந்து அதிகம் வியர்வை வெளியேறியது. கபன் அணியும் வரை வியர்வை கட்டுக் கடங்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது.

இமாமவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின் அன்னாரின் கப்றிலிருந்து கஸ்தூரி வாடை வெளியேறத் தொடங்கியது. மிகத்தூரத்திலிருந்தெல்லாம் மக்கள் திரண்டுவந்து அன்னாரை ஸியாரத் செய்ததோடு கஸ்தூரி மணம் கமழும் கப்று மண்ணையும் எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள். இமாமவர்களின் இக்கறாமத்தைப் பார்த்த பின் தொல்லை கொடுத்த அதிருப்தியாளர்களும் மக்பறாவுக்கு வந்து ஸியாறத் செய்த பின் மனம் வருந்திச் சென்றனர்.

இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுவபாத்தாகி ஓர் ஆண்டு கழிந்த பின் ஸமர்கந்தில் மழை பெய்யாததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல முறை மழைதேடித் தொழுதார்கள். துஆக் கேட்டார்கள். மழை கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு நல்லடியார் ஸமர்கந்த் காழியிடம் சென்று,

ஸமர்கந்த் மக்களை அழைத்துக் கொண்டு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுகப்றடிக்கு சென்று அங்கிருந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆக் கேழுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் துஆவை கபூல் செய்வான் என்று ஆலோசனை கூறினார்கள்.

மக்களை அழைத்துக்கொண்டு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் கப்றடிக்குச் சென்ற ஸமர்கந்த் காழி அங்கிருந்து கொண்டு மக்களோடு உருக்கமாக துஆக் கேட்டார். எமது துஆ கபூலாவதற்காக சிபாரிசு செய்யுமாறு இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹுயிடத்திலும் வேண்டுதல் விடுத்தார்.

துஆக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் மேகங்கள் திரண்டு சூழ்ந்து கொண்டன. பின் மழை கொட்டு கொட்டாகக் கொட்டியது. மக்கள் ஸமர்கந்த் செல்வதற்கு சிரமப்படும் அளவு மழை கொட்டியது.

ஆதாரம் : தபகாத்துஷ்ஷாபிஅத்துல் குப்றா, பாகம் 02, பக்கம் 15

இமாம் புகாரியின் மாணவர்கள் :  இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் அபுதாவூத் மற்றும் பலர்

Add Comment

Your email address will not be published.