இமாம் திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு

இமாம் திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

இமாம் திர்மிதி அவர்களின் இயற்பெயர் முஹம்மது. புனைப்பெயர் அபூ ஈஸா, ஜாமிஉத் திர்மிதியில் தனது பெயரைத் தவிர்த்து புனைப்பெயரையே பாவித்துள்ளார்கள்.

இவர்களின் முழுப் பெயர் முஹம்மது பின் ஸெளரா பின் மூஸா பின் லஹாக் ஸல்மி என்பதாகும். இவர்கள் பனீஸலீம் கூட்டத்தைச் சார்தவர்கள்.

ஹிஜ்ரி 209ஆம்ஆண்டு பல்கிற்கு அண்மையிலுள்ள திர்மிதி என்ற நகரின் சுற்றுப்புறமான போகி என்ற இடத்தில் பிறந்தனர்.

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சிறந்த ஆபிதாகவும், துறவியாகவும், நிகரற்ற ஹதீஸ் துறையில் ஹாபிழாகவும் விளங்கினார்கள். மிகச்சிறந்த ஆலிமான இவர்கள் அபார நினைவாற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்களின் கடினமான வணக்க வழிபாட்டினால் அவர்களின் இறுதிக் காலத்தில் கண்பார்வையை இழந்துள்ளார்கள் என்று ஹளரத் யூஸுப் பின் அஹ்மத் பக்தாதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபிமொழிகளைதிரட்ட குராஸான், இராக், ஹிஜாஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இமாம் புகாரி, இமாம் அபூதாவூத், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ஆகியோரிடம் ஹதீதுக் கலை பயின்றுள்ளனர்.

இமாம் திர்மிதி அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். ஒரு தினம் இமாம் புகாரி அவர்கள் இமாம் திர்மிதியைப் பார்த்து, என்னிடமிருந்து நீங்கள் பெற்ற பயனைவிட, உங்களிடமிருந்து யான் பெற்ற பயன் அதிகம் என்று குறிப்பிட்டார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வபாத்தான பின் குறாசான் வாசிகள் அறிவு, அமல் இரண்டிலும் இவர்களையே பின்பற்றினர் என்று இம்ரான் பின் அலான் என்பவர் கூறுகின்றார்.

ஆதாரம் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் – 01, பக்கம் – 388

இவர்களுக்கு ஹதீதை விட தப்ஸீரிலும், பிக்ஹிலும் அதிக தேர்ச்சி இருந்தது. இவர்கள் திரட்டிய ஜரிவுத் திர்மிதீi ஒரு ஹதீது நூல் மட்டும் அல்ல. பிக்ஹு நன்று கூட சொல்லலாம்.

நபிகளாரின் உருவஅமைப்பு, பண்பு, பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றிய இவர்களின் ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு ‘ஷமாயிலெ திர்மிதீ’ என்று பெயர். இவற்றைத் தவிர இவர்கள் கிதாபுல் அலல், கிதாபுத் தாரீக் என்ற இரு நூல்களும் இயற்றி உள்ளார்கள்.திர்மிதி என்ற பெயரில் மூன்று அறிஞர்கள் பிரபலமாக உள்ளனர்.

01. இமாம் அபூ ஈஸா திர்மிதி ஜாமிஉஸ்ஸஹீஹ் திர்மிதியை எழுதியவர்கள் (வபாத் ஹிஜ்ரி 279)

02. அபுல் ஹஸன் அஹ்மத் இப்னு ஹஸன் பின் ஜுனைத் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 245) இவர்கள் திர்மிதி கபீர் என்று பிரபலமாயிருந்தார்கள்.

03. அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அலி இப்னு ஹஸன் அல் ஹகீம் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 255) இவர்கள் எழுதிய நவாதிறுல் உஸுல் பிமஃரிபத்தி அக்பாரிர்ரஸுல் என்ற நூல் மிகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் 1288 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவைத்தேடி குறாஸான், ஈராக், ஹிஜாஸ் உள்ளிட்ட அநேகமான நகரங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களைத் தேடிச்சென்று அறிவைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இவர்கள் அறிவைப் பெற்ற ஆசான்களின் சிலரின் பெயர்கள் வருமாறு,

குதைமா பின் சஹீது, அபூ முஸ்அப், இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் ஹர்தி, இஸ்மாயில் இப்னு மூஸா அஸ்தி, ஸுவைத் இப்னு நஸ்று, அலி இப்னு ஹுஜ்று, முஹம்மது இப்னு அப்துல் மாலிக் இப்னு அபீஷவாரிப், அப்துல்லாஹ் இப்னு முஆவியா, முஹம்மது இப்னு இஸ்மாயில் புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜுல் குஸைரி, இமாம் அபூதாவுத்.

ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாத், பாகம் – 02, பக்கம் – 634

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை மிக அதிகமானதாகும். அன்னாரிடமிருந்து ஹதீதைக் கேட்டோரின் நீண்ட பட்டியலிலிருந்து முக்கியமானவர்களை ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூ ஹாமிது அஹ்மத் இப்னு அப்துல்லாஹ், இப்னு தாவூத் மறூஸா, ஹைதம் இப்னு குலைப் ஷாமி, முஹம்மது இப்னு மஹ்பூப், அபுல் அப்பாஸ் மஹ்ழபி மறூஸி, அஹ்மத் இப்னு யூஸுப் நஸபி, அபுல் ஹாரிது உஸ்துப்னு ஹம்தவிய்யா, தாவூத் இப்னு நஸ்றுப்னு ஸஹீல், முஹம்மத் இப்னு முன்திர் இப்னு ஈஸா ஹர்வீ, முஹம்மத் இப்னு நுமைர், இமாம் புகாரி.

இமாம் திர்மிதி அவர்கள் கற்றல், கற்பித்தலில் அதிக ஈடுபாடு காட்டியதோடு பின்வரும் நூற்களையும் எழுதினார்கள்.

ஜாமிஉத் திர்மிதி, கிதாபுல் இல்லத், கிதாபுத் தாரீக், கிதாபுஸ் ஸுஹ்து, கிதாபுல் அஸ்மாஈ வல்குனா, கிதாபு ஷமாயிலுன் நபவியா

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆக்கங்களுள் அவர்களுக்கு மங்காப் புகழை ஏற்படுத்திக் கொடுத்த நூல் ஜாமிஉத் திர்மிதி ஆகும். ஜாமிஉத் திர்மிதியின் சிறப்பைப் பற்றி ஹாபிழ் இப்னு அதிர் “உஸூல்“ என்ற நூலில் பின்வருமாறு வரைகின்றார்கள்.

சஹீஹான ஹதீதுக் கிரந்தங்களில் ஜாமிஉத் திர்மிதி மிக அழகான அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் பயன்பாடும், ஒழுங்கமைப்பும் சிறப்பாக உள்ளது. மடங்கிவரும் ஹதீதுகள் மிகக்குறைவு. மத்ஹபுகளின் கருத்திலிருந்தும் அதற்கான காரணங்களும் ஹதீதின் வகைகளும் அறிவிப்பாளர்களின் நிலைகளும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

இமாம் திர்மிதி அவர்கள் ஜாமிஉத் திர்மிதியை எழுதி முடித்தபின் ஹிஜாஸிலுள்ள அறிஞர்களின் பார்வைக்குட்படுத்தினார்கள். பார்வையிட்ட பின் இவர்கள் இதன் அழகைக்கண்டு வியந்து பாராட்டினார்கள். இதன்பின் குறாஸான் உலமாக்களிடம் காட்டினார்கள். அவர்களும் பாராட்டினார்கள். ஜாமிஉத் திர்மிதி எவர் வீட்டில் இருக்கின்றதோ அங்கு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது போன்று இருக்கும் என்று இமாம் அபூ ஈஸா திர்மிதி அவர்கள் கூறியதாக ஹாபிழ் தகபி கூறுகின்றார்.

ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பால், பாகம் – 2, பக்கம் – 634

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஜாமிஉத் திர்மிதியில் ஒரு தனித்துவமான ஒழுங்கமைப்பைக் கையாண்டுள்ளார்கள். இந்த ஒழுங்கு வேறு எந்த ஹதீது நூலிலும் காணப்படவில்லை. இதனால் ஏனைய ஹதீது நூற்களைவிட ஜாமிஉத் திர்மிதிக்கு தனித்துவமான சிறப்பு உள்ளது.

வாழ்நாள் பூராகவும் ஹதீதுத்துறை அளப்பரிய சேவை புரிந்த இமாமவர்கள் ஹிஜ்ரி 279 றஜப் 13இல் திர்மிதி என்ற இடத்தில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

Add Comment

Your email address will not be published.