அம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு

அம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 20, 2014

Print Friendly, PDF & Email

தாயார் பெயர் சுமைய்யா ரழியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு. யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார்கள். இவர்களின் புதல்வரே அம்மார் ரழியல்லாஹு அன்ஹு. இவர்களின் மற்றொரு பெயர் அபுல் யஹ்ஸான் என்பதாகும். இவர்கள் இப்னு சுமைய்யா என்று அழைக்கப்பட்டும் வந்தனர்.

இணை வைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு,சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா ஆவார்.

குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரழியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்ரழியல்லாஹு அன்ஹு ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும்படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு.

தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். விட்டு விடுகின்றனர்.

அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹு நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.

அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்..

சிறந்த போர் வீரரான அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அபூபக்கர்ரழியல்லாஹு அன்ஹு ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு, ‘முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள்’என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.

ஹிஜ்ரி 21ல் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்டிக்கவில்லை.

ஹுதைபத்துல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்ரழியல்லாஹு அன்ஹு இருப்பார் எனக் கூறினார்கள்.

ஹிஜ்ரத்திக்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)

.ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். இவர்களுக்கு அண்ணலார் ‘தையிபுல் முதையிப்’ என்று பெயரிட்டிருந்தனர். இவர்களிடமிருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் பல ஹதீதுகளைக் கேட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஹிஜ்ரி 37ல் நடைபெற்ற ஸிப்பியீன் போருக்கு முன் இவர்கள் ஈராக் மக்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். நியாயம் நம் பக்கம் உள்ளது. அலியின் படையணியில் சேர்ந்து போர் செய்தவருக்கே இவ்வுலகில் இஸ்லாத்திற்காக உயிர்நீத்த பேறும், மறுமையில் சுவனப் பெருவாழ்வும் கிடைக்கும். எனவே என்னைப் பின்பற்றுங்கள். சுவனத்து வாயில் திறந்து கிடக்கிறது என்று வீர உரை நிகழத்தினர். அப்போது இவர்கள் தாகத்தால் தண்ணீர் கேட்க, தண்ணீருககுப் பதிலாக பால் வந்தது.

அதைக் கண்ட இவர்கள், ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நோக்கி, ‘இப்னு சுமையா! உம் கடைசி உணவு பாலாக இருக்கும் என்று கூறியதை அங்கிருந்தோரிடம் எடுத்துரைத்து விட்டு,இன்று நான் அண்ணலாரையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்’ என்று கூறிப் போர்க்களத்தில் பாய்ந்து வீரப் போர் செய்து இறப்பெய்தினர்.

ஸிப்பீன் போரில் அலிரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.

இவர்களின் அடக்கவிடம் ஸிஃப்ஃபீனில் இருக்கிறது.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *