Print Friendly, PDF & Email

அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா, மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த அன்ஸாரி. அவருடைய பெற்றோர் அவ்ஸ் பின் ஃகரஷா, ஹுஸ்மா பின்த் ஹர்மலா.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபோது அவர்களுக்கும் மதீனத்து அன்ஸார்களுக்கும் இடையே நபியவர்கள் ஏற்படுத்திய சகோதர பந்தத்தில் உத்பா பின் கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அன்ஸாரித் தோழரான அபூதுஜானா சகோதரராக அமைந்தார். தலைசிறந்த இரு தோழர்களுக்கு இடையே அழகிய உறவு உருவானது.

பத்ருப் போரில் கலந்துகொள்ளும்போது அந்த அடையாளத்தைத் தமக்கு அமைத்துக்கொண்டார் அபூதுஜானா.

அதன்பின், உஹதுப் போரில் அவர் ஆற்றிய பங்கு அவரது வீரத்தின் பெரும் பெருமையை விவரித்துள்ளது.

உஹதில் போருக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டுப் படையினருக்குத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தார்கள் நபியவர்கள். அவர்களது பேச்சு தோழர்களுக்கு எக்கச்சக்க ஆர்வம் ஊட்டியது. இறைத்தூதரிடம் கூர்மையான ஒரு வாள் இருந்தது. அதை உருவி, “யார் இதை என்னிடமிருந்து பெற விழைகிறீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

தயக்கமே இன்றிக் கேட்டார் அபூதுஜானா. “அல்லாஹ்வின் தூதரே! அந்த வாளுக்குரிய கடமை என்ன?”

“இந்த வாள் வளையும்வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீர் வெட்ட வேண்டும்” என்றார்கள் நபியவர்கள்.

அதை முற்றிலுமாய் உணர்ந்துகொண்ட அபூதுஜானா, “அல்லாஹ்வின் தூதரே! இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று தம் கரத்தை நீட்ட நபியவர்களிடமிருந்த வாள் கைமாறியது.

அதைப் பெற்றுக்கொண்டதும் தம்முடைய சிவப்புத் துணியைக் கட்டிக் கொண்டார் அபூதுஜானா. அதைப் பார்த்த மதீனாவாசிகளிடம் “ஆஹா! அபூதுஜானா மரணத்தின் தலைப்பாகையை அணிந்துவிட்டார்” என்று ஒரே ஆர்ப்பரிப்பு. ஆர்ப்பரித்தார்கள்.

அதைப் பார்த்த நபியவர்கள், “இவ்வாறான நடை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய ஒன்று – போர்க்களத்தைத் தவிர” என்று அனுமதி அளித்தார்கள்.

மக்காவிலிருந்து வந்திருந்த குரைஷிப் படைகளுடன் யுத்தம் துவங்கியது. அபூதுஜானாவின் கையில் நபியவர்களின் வாள் மின்னி மினுமினுத்தது. அதை உயர்த்திப் பிடித்து, எதிரிகளின் படைக்குள் புகுந்து, தமக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் சரமாரியாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றார் அபூதுஜானா. அவர்களது அணியைப் பிளந்தவாறு முன்னேறி, தலைகளைக் கொய்யும் ஒவ்வொரு முறையும் இடமும் வலுமும் சாய்ந்து ஓர் ஆட்டம் ஆடி, சிங்கமாய் கர்ஜனை வரும், “நான்தான் அபூ துஜானா.”

நபியவர்கள் அறிவித்தபோது வாளைப் பெற்றுக்கொள்ளக் கை உயர்த்தியவர்களுள் ஸுபைர் இப்னு அவ்வாமும் ஒருவர். அந்த வாள் தமக்குக் கிடைக்காமல், வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்ததைப் பற்றி அவருக்கு நிறையக் கவலை.

‘நபியவர்களின் அத்தை ஸஃபிய்யாவின் மகன் நான். குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவன். நானும்தான் முந்திக்கொண்டு நபியவர்களிடம் அந்த வாளைப் பெற முயன்றேன். ஆனால் அந்த வாய்ப்பு அபூதுஜானாவுக்கு அமைந்து போனதே. அபூதுஜானா அப்படி என்னதான் அந்த வாளின் கடமையை நிறைவேற்றுகிறார் என்று பார்ப்போம்’ என்று தமக்குள் கூறிக்கொண்டு அபூதுஜானாவைக் கவனிக்க ஆரம்பித்தார் ஸுபைர்.

‘அபூதுஜானா தாம் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. வெட்டித் தள்ளியவாறு முன்னேறினார்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஸுபைர்.

இதனிடையே எதிரிகளுள் ஒருவன், காயமடைந்து களத்தில் குற்றுயிராக விழுந்துள்ள முஸ்லிம்களைத் தேடித் தேடிச் சென்று வீழ்த்திக்கொண்டிருப்பதைக் கவனித்தார் ஸுபைர். இதற்குள் களத்தில் முன்னேறியவாறு இருந்த அபூதுஜானா அந்த எதிரியை நெருங்கிவிட்டார்.அவரது கையிலிருந்த நபியவர்களின் வாள் அவனது வாழ்க்கையை முடித்து வைத்தது.

“நான்தான் அபூ துஜானா” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்து எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு முன்னேறினார் அபூதுஜானா.

அபூதுஜானா பலமிக்க இரும்புக் கவச ஆடை அணிந்திருந்தார். நபியவர்களை நோக்கி எய்யப்பட்ட அம்புகளையெல்லாம் அவர் தம் முதுகைக் கேடயமாக்கித் தடுக்க, தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை விலக்கியவாறு முஸ்லிம்களின் படை மலையின் கணவாய்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. நபியவர்களின் இத்திட்டத்தைக் கவனித்த எதிரிகள் அதைத் தடுக்க பலமாய்ப் போராட ஆரம்பித்தனர்.

அன்றைய போரில் அபூதுஜானா ஆற்றிய பங்கிற்கு, பின்னர் நபியவர்கள் உரைத்த வாசகம் ஒன்றே போதுமான சான்றாக அமைந்துபோனது. மதீனா வந்தடைந்த நபியவர்கள் தம் மகள் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவிடம் தமது வாளை அளித்து, “இதிலுள்ள இரத்தத்தைக் கழுவவும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இன்று எனக்கு உண்மையாக உழைத்தது” என்றார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் அதைப் போல் தமது வாளை தம் மனைவி ஃபாத்திமாவிடம் அளித்து அவ்விதமே கூற, அதற்கு அல்லாஹ்வின் தூதுர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீர் இன்று போரில் உண்மையாகக் கடமையாற்றியதைப் போலவே ஸஹ்ல் இப்னு ஹனீஃபும் அபூதுஜானாவும் உண்மையாகக் கடமையாற்றினர்” என்றார்கள்.

சில ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற ஃகைபர் போரின்போதும் அபூதுஜானாவின் பங்கு பதிவாகியுள்ளது. யூதர்கள் அபீ கோட்டைக்குள் புகுந்து கொண்டதும் முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். அப்பொழுது இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியில் வந்து, “எங்களுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டையிட யார் வருகிறீர்கள்?” என்று சவால்விட, உடனே இரண்டு முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுள் ஒருவர் அபூதுஜானா.

வழக்கம்போல் அவரது நெற்றியில் சிகப்புத் துணி. அவர் ஒரு யூதனை வெட்டி வீழ்த்த, மற்றொருவரும் அடுத்த யூதனைக் கொன்றார். அதன்பின் அபூதுஜானாவின் தலைமையில் முஸ்லிம் படைகள் அபீ கோட்டையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புக, கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. இறுதியில் ஃகைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தது தனி வரலாறு.

ஒருமுறை உடல்நலமின்றி இருந்த அபூதுஜானாவைச் சந்திக்கத் தோழர்கள் வந்திருந்தனர். உடல் மிகவும் சுகவீனமற்று இருந்தாரே தவிர, அபூதுஜானாவின் முகம் நோயின் தாக்கம் இன்றிப் பளிச்சென்று பொலிவுடன் இருந்தது. வியப்புற்ற தோழர்கள், “உம்முடைய முகம் பிரகாசமாக உள்ளதே அபூதுஜானா” என்று விசாரிக்க,

“என்னுடைய செயல்களுள் இரண்டின்மீது எனக்கு மிக நல்ல நம்பிக்கை உள்ளது. ஒன்று, எனக்குச் சம்பந்தமற்ற பேச்சை நான் பேசுவதில்லை. அடுத்தது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பற்றி என் மனத்தில் நல்ல அபிப்ராயத்திலேயே இருக்கிறேன்.”

பொய்யன் முஸைலமாவுடன் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போர் யமாமா போர். அந்தப் போரில் முஸைலமாவின் படையைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய பத்தாயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் அந்த எண்ணிக்கை இருபதாயிரம் என்கிறார்கள். அதனாலேயே அத்தோட்டத்திற்கு “மரணத் தோட்டம்” என்ற பெயர் ஏற்பட்டுப்போனது.

முஸ்லிம் வீரர்கள் ஐந்நூறிலிருந்து அறுநூறுவரை  உயிர்த் தியாகிகள் ஆகியிருந்தனர். அந்த உயிர்த் தியாகிகளுள் ஒருவர் அபூதுஜானா சிமாக் இப்னு ஃகரஷா.

Recommend to friends
  • gplus
  • pinterest

About the Author

Leave a comment