அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா

அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

அருட் நிறைத்தூதர் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முதல் வாழ்க்கைத் துணைவி குறைஷிக் குலத்தில் கண்ணியமிக்கவர்களாகத் திகழ்ந்த குவைலித் இப்னு அஸத் – பாத்திமா பின்த் ஸாயிதா ஆகியோரின் அன்பு மகளார் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.இவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள்.

பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

இவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்;லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்னையின் சிறிய தந்தையாகிய அதீக் என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டது. அதன்மூலம் அவர்களுக்கு ஹிந்த் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதீக் இறக்கவே பனூதமீம் கிளையைச் சார்ந்த அபூஹாலா என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஹாலா> ஹிந்த் என்ற இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். அபூஹாலாவும் இறந்தார். அதன்பின் எத்தனையோ செல்வந்தர்கள்> இவர்களை மணமுடிக்க விரும்பினாலும் இவர்கள் மணமுடிக்க விரும்பவில்லை.

அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த்> ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும்> அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெருமானாரின்நற்குணங்களையும், பண்புகளையும், பேரழகினையும் கவனித்த அன்னையார், அண்ணலரை மணந்திட தாமே முன்வந்தனர். அப்போது கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வயது இருபத்தைந்தாக இருந்தது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்புத் துணைவியருள் புத்திக் கூர்மையும், வாக்கு நாணயமும் மிக்கவராக அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் திகழ்ந்தார்கள். பெருமானார் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பேரன்பு பூண்டிருந்த அன்னையவர்கள் உயிரோடிருந்தவரை நபியவர்கள் வேறு மணம் எதுவும் புரியவில்லை.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெற்றபின்னர் முதன்முதலில் ஈமான் கொண்டவர்கள் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்தான்.! எண் திசைகளிலிருந்தும் அண்ணலாரை நோக்கி வந்த இன்னல்கள், இடுக்கண்கள் அனைத்தையும் தன்னந்தனியாக நின்று நபியவர்கள் சமாளித்தபோது கணிசமான அளவு பேராதரவினை அன்னையவர்கள் தந்தார்கள். எனவேதான் மற்ற துணைவியரைவிட தனிப்பெரும் சிறப்பினை பெறுகின்றார்கள் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்.

ஹிராக் குகையில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் இறைவன் குர்ஆனை இறக்கியபோது அதனால் அதிர்ச்சியும், பயமும் கொண்டவர்களாக வீடு வந்து சேர்து தம் மனைவியிடம் என்னைப்போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று சொன்னார்கள். கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் தம் அருமை மனைவியிடம் குகையில் நடந்த விபரங்களை சொன்னார்கள். பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள்.

அந்த சம்பவத்தின் உண்மையான விளக்கத்தை தம் தந்தையின் சகோதரரான இன்ஜீல் வேதத்தை முழுமையாக அறிந்திருந்த வரகா இப்னு நௌபல் என்பவரிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்), ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. மூன்று பேரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர், தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர். இவர்களில் ருகையா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள். எனினும் பாத்திமா (ரலி) அவர்கள் மாத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.

அன்னையவர்களின் சிறப்புக்களைக் கூறும் நபிமொழிகள் ஏராளம். “வையகத்து வனிதைகளில் சிறப்பும், பூரணத்துவமும் பெற்றோர் நால்வர். 01. ஹளரத் மர்யம் ரழியல்லாஹு அன்ஹா 02. பிர்அவ்னின் துணைவியார் ஹளரத் ஆஸியா ரழியல்லாஹு அன்ஹா 03. அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா 04. அன்னை பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா ஆகியோராவர்.

வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருச்சமூகம் வந்து “அண்ணலே எம்பெருமானே! இதோ அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்களிடம் ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். அன்னாருக்கு றப்புடையவும், என்னுடையவும் ஸலாம் சொல்லுங்கள். சுவனத்தில் முத்தாலான மாளிகை ஒன்று இவர்களுக்குண்டு. அங்கே, எவ்வித சப்தமோ வீண் தொல்லையோ இராது என்ற நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லுங்கள்!“ என்றனர்.

நூல் : புகாரி,பாகம் – 01, பக்கம் – 539

அன்னையவர்களின் மறைவிற்குப் பின்னர் நபியவர்கள் பல மங்கையர் மாணிக்கங்களை மணம் புரிந்தனர். என்றாலும், நபிபெருமானின் இறுதி காலம்வரை அன்னையவர்களை தினமும் நினைவு கூர்வர். வீட்டில் ஆடுகள் அறுத்தால் அதிலிருந்து ஒரு பகுதியை அன்னையவர்களின் தோழியருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொடுத்தனுப்புவர்.

நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி

ஹிஜ்ரத்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் 65வது வயதில் நுபுவ்வத்தின் 10 ஆம் ஆண்டில்இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் அன்னை கதீஜா நாயகி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்! அன்னார் புனித உடலம் மக்காவில் புகழ்மிகு ஜன்னத்துல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கப்ர் தோண்டப்பட்ட பின்னர் அருள்நிறை தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அக்கப்ரினுள் இறங்கி தமது திருக்கரங்களால் அதனை தூய்மைப்படுத்தினார்கள். அந்நேரத்தில் ஜனாஸாத் தொழுகை கடமையாக்கப்படாத காரணத்தால் இவர்களுக்கு ஜனாஸாத் தொழ வைக்கப்படவில்லை.

அன்னையாரின் மறைவி்ற்கு சில தினங்கள் முன்னரே அண்ணலாரின் பெரிய தந்தையார் அபூதாலிப் மரணமடைந்தார். இவ்விழப்பால் உளம் நொந்துபோயிருந்த அண்ணலாருக்கு கதீஜா அம்மையாரின் மரணமும் சோதனை மேல் சோதனையாகச் சேர்ந்து கொண்டது. அண்ணலாரின் அகம் கவலை மிக்க கொண்டதால் இவ்வாண்டு “ஆமுல் ஹுஸ்ன்“ – துக்க ஆண்டு எனப் பெயர் வழங்கலாயிற்று.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள், “மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராமற் தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” [அஹ்மத், 16: 118].

அன்னையவர்கள் வபாத்தான பின் ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொன்னார்கள்,

“இறைவன் மீது ஆணையாக! எனக்கு கதீஜாவைத் தவிர வேறு நல்ல துணைவி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் என்னை மறுத்தபொழுது என்னைக்கொண்டு ஈமான்கொண்டார்கள். மக்கள் என்னை பொய்யன் என்றபோது, என்னை வாய்மையாளன் என உண்மைப்படுத்தி வைத்தார்கள். மக்கள் எனக்குப் பொருளாதாரத் தடை விதித்தபோது தனது திரண்ட செல்வத்தை வாரிவழங்கி என்னை ஊக்குவித்தார்கள்.அன்னார் மூலமாகவே குழந்தைச் செல்வங்களை வல்ல நாயன் எனக்கருள்பாலித்தான்!“

ஸுர்கானி, பாகம் – 03, பக்கம் – 24

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].

Add Comment

Your email address will not be published.