தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer

தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer

By Sufi Manzil 0 Comment March 29, 2011

Print Friendly, PDF & Email

தொழுகை சட்டங்கள் (ஹனபி)

இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். தொழுகையானது இஸ்லாத்தின் தூண் ஆகும்.

தொழுகைக்கு தஹாரத் என்னும் பரிசுத்தம் மிகவும் அத்தரியாவசியம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பரிசுத்தம் மூன்று வகைப்படும். 1. உடல் சுத்தம் 2. உடை சுத்தம் 3. இடம் சுத்தம். இந்த மூன்றுவகை சுத்தம் இல்லாவிட்டால் தொழுகை நிறைவேறாது.

குளிப்பு(குஸ்லு)

ஆண், பெண் சம்போகத்தினாலோ(உடலுறவினாலோ) தூக்கத்திலோ விழிப்பிலோ இந்திரியம் என்னும் 'மனீ' வெளிப்பட்டாலும் குளிப்பு கடமையாகிறது.

பெண்கள் மாத விடாய் என்னும் 'ஹைல'; வெளிப்பட்டு நின்றதும் குளிப்பு செய்ய வேண்டியது கடமையாகும். பிள்ளை பிரசவித்து 'நிபாஸ்' என்னும் அசுத்தம் வெளிப்பட்ட பின் குளிக்க வேண்டியது கடமையாகும.; இந்த குளிப்புகள் பர்ளு ஆகும்.

குளிப்பு கடமையானவர்கள் செய்யக் கூடாதவை:

குர்ஆன் ஷரீபை தொடக்கூடாது. ஓதவும் கூடாது.
மஸ்ஜித் (பள்ளிவாசல்) உள் பிரவேசிக்க கூடாது.
நோன்பு நோற்கக் கூடாது.
மக்காவில் கஃபத்துல்லாஹ்வை சுற்றி தவாப் செய்யக் கூடாது.

மல-ஜல சுத்தம்:

உடலிலருந்து மலம்-ஜலம்-கசிவு நீர்(மதீ, வதீ) வெளிப்பட்டாலும் உடனே கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு 'தஹாரத்' என்று பெயர்.

சிறுநீர் பெய்ததும் 'டேலா' என்னும் மண் கட்டி கொண்டு நீரை உலர்த்தி, பிறகு தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். காதிதம், சுண்ணாம்புக் கட்டி முதலியன கொண்டு சுத்தம்  செய்யக் கூடாது. டேலாக் கட்டிகளை இடது கையால் உபயோகிக்க வேண்டும்.   குறைந்தது மூன்று டேலாக் கட்டிகளைக் கொண்டு சுத்தம்  செய்ய வேண்டும். ஜனங்கள் நடமாடும் இடங்களில் பகிரங்கமாக இக்காரியங்களை செய்யக் கூடாது. பெண்கள் மல, ஜலம் கழிக்கும் போது டேலாக் கட்டிகளை உபயோகிக்கத் தேவையில்லை. மலம் ஜலம் கழித்தபின் இடம் மாறி உட்கார்ந்து தண்ணீர் கொண்டு கழுகிக் கொண்டால் போதும்.

மல ஜலம் கழிக்கும்போது அடிக்கடி மர்ம ஸ்தானத்தைப் பார்க்கக் கூடாது. பாங்குக்கும், பிறர் ஸலாமுக்கும் பதில் சொல்லக் கூடாது.

'தஹ்-தர்தஹ்'- தண்ணீர் விபரம்:

ஒலுவு, குஸ்லு  செய்வதற்கான தண்ணீரின் சுத்த-அசுத்த விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பலபேரும் கைப் போட்டு எடுத்து உபயோகிப்பதற்கேற்ற தண்ணீர், ஹனபி மத்ஹபின் பிரகாரம் 10×10 முழம் அகல நீளம் உடையதாகவோ, அதை விடப் பெரியதாகவோ இருக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீரை அள்ளினால் தரை தெரியவராத ஆழமுடையதாக இருக்க வேண்டும். இதற்கு 'தஹ்-தர்ஹ்' என்று பெயர்.

இந்த அளவுள்ள தண்ணீர் ஓடும் ஜலத்திற்கு ஒப்பாகும். இதில் ஏதேனும் அசுத்தம் விழுந்து விட்டாலும் தண்ணீர் நஜீஸ் ஆக மாட்டாது. பெரிய கிணறு, நதி, ஆறு, வாய்க்கால், குளத்து நீர், மஸ்ஜிதிலுள்ள ஹவுஸ் இந்த கணக்குப்படியாகும்.

குளிப்பின் பர்ளுகள்:

1. வாய் கொப்பளித்தல்
2. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல்
3. சரீரம் பூராவும் நனையும்படி குளித்தல்.

சுன்னத்துகள்:

1. அசுத்தம் நீங்குவதற்காக குளிக்கிறேன் என்று நிய்யத்து செய்தல்.
நிய்யத்தாவது:
 

نَوَيْتُ اَنْ اَغْتَسِلَ لِرَفْعِ الْحَدَ ثْ

2. பிஸ்மில்லாஹ் சொல்லுதல்
3. இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல்
4. மர்மஸ்தானத்தை கழுவுதல்.
5. புடவையிலுள்ள, சரீரத்திலுள்ள நஜூஸை கழுவுதல்
6. ஒளு செய்தல்
7. தலையின் மீதும் வலது இடது புஜங்களின் மீதும் மும்மூன்று தடவை தண்ணீர் ஊற்றுதல்.
குளிக்கும்போது சரீரத்தில் ஒரு ரோமக்காலளவு இடம் நனையாமல் இருந்தாலும் குளிப்பு நிறைவேறாது.
குளித்து வந்த பிறகு ஒரு சிறு இடம் நனையவில்லை என்று தெரிந்து அதை மட்டும் கழுவிக் கொண்டாலும் குளிப்பு நிறைவேறி விடும்.

ஒளு:

தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும்.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -(அல்-குர்ஆன் (5:6)

ஒளுவின் பர்ளுகள்:

1. முகம் கழுவுதல்: நெற்றி ரோமத்திலிருந்து முகவாய்க்கட்டை வரை நீளத்திலும் ஒரு காது முதல் மறுகாது வரை அகலத்திலும் முகத்தை நன்கு கழுவுதல்.
2. கை கழுவுதல்: இரண்டு கரங்களின் முட்டுக் கை உள்ப டநன்றாய் நீர் சொட்ட ஊற்றிக் கழுவுதல்.
3. மஸ்ஹு செய்தல்: தலையில் நாலிலொரு பாகத்தில் தண்ணீர் நன்கு படும்படி ஈரக் கை கொண்டு துடைத்தல்.
4. கால் கழுவுதல்: இரண்டு கால்களை கரண்டைக் உட்பட நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
 

ஒளுவின் சுன்னத்துக்கள்:

1. முடியுமானால் கிப்லாவை முன்னோக்கி உட்காருதல்.
2. ஒளு செய்கிறேன் என்று நிய்யத் செய்தல்.
3.பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தல்.
4. இரு கரங்களையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.
5.பற்களைத் தேய்த்தல்(மிஸ்வாக் செய்தல்)
6. மூன்று முறை நீரால் வாய்க் கொப்பளித்தல்.
7. வாய்க் கொப்பளிக்க தண்ணீரை வாய்க்கு செலுத்தும்போதே நாசிக்கும் செலுத்தி, சிந்தியும் கொப்பளித்தும் சுத்தம் செய்தல்.
8. முகத்தை மூன்று முறை தேய்த்துக் கழுவுதல் (தாடியுடையவர் தாடி, ரோமங்களைக் கோதிக் கழுவ வேண்டும்.)
9. வலது கையை முதலிலும் இடது கையை பிறகுமாக மும்மூன்று முறை முட்டுக்கை உள்பட தேய்த்துக் கழுவுதல்.
10. சிரசில் மூன்று முறை 'மஸ்ஹு' செய்தல். அதாவது இரு கரங்களையும் நீரில் நனைத்து நெற்றியிலிருந்து பிடரி வரை இழுத்து மீண்டும் நெற்றிவரை இழுத்து துடைத்தல்.
11.மீண்டும் தண்ணீரில் கைகனை நனைத்து, சுண்டு விரல் கொண்டு காதின் முன் பாகத்தையும் பெருவிரல் கொண்டு காதின் பின் பாகத்தையும் மூன்றுமுறை துடைத்தல்.
12. கரண்டை உட்பட வலது காலை முன்னும் இடது காலை பின்னுமாக கழுவுதல்.
13. மேற்கூறியபடி உறுப்புகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல்.
14. ஓர் உறுப்பு கழுவிக் காய்வதற்கு முன் மறு ஊறப்பைத் தொடர்ச்சியாக கழுவுதல்.
இந்த முறைப்படி முன் பின்னாகாமல் ஒழுங்காகச் செய்து கழுவுவதே சுன்னத்தான முறைப்படி செய்யும் ஒழுவாகும்.

ஒளுவை முறிக்கும் காரியங்கள்:

1.  பின், முன் துவாரங்களிலிருந்து மலம், காற்று, ஜலம் வெளிப்படுதல்.
2. காயத்திலிருந்து இரத்தம், சீழ், நீர் முதலியன வெளிப்பட்டு வழிதல்.
3. உமிழ்நீரில் அதிகமாக இரத்தம் கலந்திருத்தல்.
4. வாய் நிறைய வாந்தி வெளிப்படுதல்.
5. உடல் சோர்ந்து மெய்மறந்து நித்திரை செய்தல்.
6. ஒன்றன் மீது சாய்ந்து கொண்டு பீஷ்டபாகம் பூமயில் படியத் தூங்கிவிடுதல்.
7. அறிவு மயங்கி உணர்வு அற்றுப் போதல்.
8. போதையேறி அறிவு மயங்குதல்.
9. பைத்தியம் n காண்டு புத்தி மாறுதல்.
10. தொழுகையில் சப்தமிட்டு சிரிப்பது.
11. மர்ம ஸ்தானங்களில் ஒன்றோடொன்று சந்தித்து ஸ்பரிசித்தல்.

தயம்மும்.

தண்ணீர் கிடைக்காத சமயத்தில் மண்புழுதி கொண்டு 'தஹாரத்' செய்வதற்கு தயம்மும் என்று பெயர். ஒளு செய்து செய்யும் காரியங்களை தயம்மும் செய்து செய்வது ஆகும்.

அருகில் எங்கும் தண்ணீர் கிடைக்காமல் போனாலும், தண்ணீரை உபயோகித்தால் நோய் நொடி உண்டாகிவிடும் என்று அஞ்சினாலும், இருக்கும் வியாதி கடுமையாகிவிடும் என்று பயந்தாலும், இருக்கும் தண்ணீரைக் கொண்டு உளு செய்துவிட்டால் குடிக்கத் தண்ணீர் இல்லாமல்  போய் விடும் என்று அச்சப்பட்டாலும், தண்ணீர் கொண்டு வருவதற்குள் ஜும்ஆ தொழுகையோ, ஜனாஸா தொழுகையோ தவறிவிடும் என்று பயந்தாலும் தயம்மும் செய்து தொழலாம்.

ஷர்த்துகள்:

1. ஏற்கனவே யாரும் தயம்மத்திற்கு உபயோகிக்காத புழுதியுள்ள புது மண் வேண்டும்.
2. இந்நேரத் தொழுகையை நிறைவேற்ற தயம்மும் செய்கிறேன் என்று நிய்யத் செய்ய வேண்டும்.
3. இரு கைகளையும் மண் புழுதி மீது மெல்ல அடித்து அதைக் கொண்டு முகம் முழுவதும் துடைத்துக் கொள்ள வேண்டும்.
4. அம்மண் மீது மீண்டும் ஒரு முறை கைகளை அடித்து இரு கரங்களையும் முழங்கை உட்பட துடைத்துக் கொள்ள வேண்டும்.
5. மேற்கூறிய வண்ணம் ஒழுங்காக தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஒளுவை முறிக்கும் காரியங்கள் தயம்முமை முறித்துவிடும். தண்ணீர் கிடைத்துவிட்டாலும், தங்கடம் நீங்கி விட்டாலும் தயம்மும் முறிந்துவிடும்.

பாங்கும் இகாமத்தும்:

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்னமுஹம்மதுர் ரஸூலுல்லாஹ் அஷ்ஹமு அன்னமுஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
ஹய்ய அலஸ்ஸலாஹ் ஹய்ய அலஸ்ஸலாஹ்
ஹய்ய அலல் பலாஹ் ஹய்ய அலல் பலாஹ்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ்

இதுதான் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் 'பாங்கு' என்னும் 'அதான்' ஆகும். இத்துடன் சுப்ஹிற்கு 'ஹய்ய அலல் பலாஹ் ஹய்ய அலல் பலாஹ்விற்கு பிறகு 'அஸ்ஸலாத்து ஹைரும் மினன் னவ்ம்' என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.

இகாமத்து பாங்கு சொல்வது போன்று சொல்ல வேண்டும். அத்துடன் 'ஹய்ய அலல் பலாஹ் ஹய்ய அலல் பலாஹ்' என்பதை அடுத்து 'கத்காமத்திஸ்ஸலாத்'என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.

தொழுகையின் நேரங்கள்:

(ஸுப்ஹு): அதிகாலை சந்தியா வேளையில், கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகத் தொடங்கும் வரையிலாகும்.

லுஹர்: சூரியன் நடுவானில் உச்சத்தை அடைந்து சாயத் தொடங்கிய நேரத்திலிருந்து வெய்யில் படும் ஒவ்வொரு வஸ்துவின் நிழல் நீளம்,அவ்வஸ்துவின் சரி அளவுக்கு இரண்டு பங்கு நீளம் வரும் வரையிலாகும்.

அஸர்: லுஹர் நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் அஸ்தமனமாகும் வரையிலாகும்.

மக்ரிபு:சூரியன் மறைந்து விட்ட நேரத்திலிருந்து மேற்கு வானத்தின் சிகப்பு நிறம் மறைகிறவரையிலாகும்.

இஷா: மக்ரிபு நேரம் முடிந்ததிலிருந்து இரவெல்லாம் தொழலாம். ஆனால் முன்னிரவில் தொழுவது நலம்.

ஐந்து நேரத் தொழுகையின் ரக்அத்துகள்:

பஜ்ரு
முன் சுன்னத் 2 ரக்அத்துகள்
பள்ளு 2 ரக்அத்துகள்

லுஹர்:
முன் சுன்னத் 4 ரக்அத்துகள்
பள்ளு 4 ரக்அத்துகள்
பின் சுன்னத் 2 ரக்அத்துகள்.

அஸர்:
முன் சுன்னத் 4 ரக்அத்துகள்
பள்ளு 4 ரக்அத்துகள்

மக்ரிபு:
பள்ளு 3 ரக்அத்துகள்
பின் சுன்னத்து 2 ரக்அத்துகள்

இஷா:
முன் சுன்னத்து 4 ரக்அத்துகள்
பர்ளு 4 ரக்அத்துகள்
பின் சுன்னத் 2 ரக் அத்துகள்.
பின்பு 3 ரக்அத் வாஜிபுல் வித்ரு.
ஆக மொத்தம் 40 ரக்அத்துகள்.

நபில் தொழுகை:

1. ஒளு செய்தபின் தஹிய்யத்துல் ஒளு இரண்டு ரக்அத்கள்.
2. மஸ்ஜித்திற்குள் வந்ததற்கு 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' இரண்டு ரக்அத்துகள்.
3. அஸருடைய பர்ளுக்கு முன் நான்கு ரக்அத்துகள்.
4. இஷாவுடைய பள்ளுக்கு முன் நான்கு ரக்அத்துகள்.
மேலும் தொழுவதற்கு ஆகுமான இதர நேரங்களிலும் இரவிலும் கணக்கின்றி நபில் தொழலாம்.

தொழுகையின் பர்ளுகள்:

தொழுகையில் பர்ளுகள் மொத்தம் 13. அவை ஒன்று தொழுகைக்கு வெளிப்பட்ட பர்ளுகள் மற்றொன்று தொழுகைக்கு உட்பட்ட பர்ளுகள். வெளிபர்ளுகளை 'ஷர்த்துகள்' என்றும் உள்பர்ளுகளை 'அர்க்கான்' என்றும் சொல்லப்படும். இப்பர்ளுகளில் ஏதேனும் ஒன்று விட்டுப் போனாலும் தொழுகை நிறைவேறாது.

தொழுகையின் உள் பர்ளுகள்:

1. உடல் சுத்தம்: சகலவிதமான நஜாஸத்து, குஸ்லுக்குக் காரணமான ஜனாபத்து முதலியவைகளை விட்டும் சரீரம் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. இடம் சுத்தம்: சகலவிதமான அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.
3. உடை சுத்தம்:உடுத்துக் கொண்டுள்ள துணிகள் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.
4. மானத்தை மறைத்தல்: ஆணும், பெண்ணும் தன் சரீரத்தில் ஷரீஅத்தின் பிரகாரம் எவ்வளவு மறைக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவ்வளவு மறைக்க வேண்டும்.
5. நிய்யத்து செய்தல்: தொழுகை ஆரம்பிக்கும்முன் இன்ன நேரத்து தொழுகை இத்தனை ரக்அத்து என்று நிய்யத்து செய்ய வேண்டும்.
6. நேரத்தை அறிதல்: தொழுகையின் நேரங்களை அறிந்திருக்க வேண்டும்.
7. கிப்லாத் திசையை அறிதல்: கிப்லாவின் திசை இன்னதென்று திண்ணமாக அறிந்திருக்க வேண்டும்.

தொழுகையின் வெளிபர்ளுகள்:

8. முதல் தக்பீர் என்னும் தக்பீர் தஹ்ரீமா தொடங்குதல்.
9. கியாம் என்னும் நிலை நிற்பது.
10. தொழுகையில் குர்ஆன் ஆயத் (கிராஅத்) ஓதுதல்.
11. குனிந்து ருக்கூ செய்தல்.
12. பணிந்து ஸஜ்தா செய்தல்.
13. 'கஃதா' இருப்பு அமர்தல்.

தொழுகையில் வாஜிபுகள்:

1. ஸூரத்துல் பாத்திஹா ஓதுதல்
2. அத்துடன் ஒரு சிறு ஸூரா அல்லது மூன்று ஆயத்துக்களை சேர்த்து ஓதுதல்.
3. முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் கிராஅத்தை சேர்த்து ஓதுதல்.
4. ஒவ்வொரு 'ருக்னு'(செயல்களையும் நிதானமாகச் செய்தல்.
5. முதலாவது இரண்டு ரக்அத்துக்குப் பின் (கஃதா) இருப்பு அமர்வது.
6. இரண்டு கஃதா இருப்புகளிலும் அத்தஹிய்யாத் ஓதுதல்.
7. தொழுகை முடிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தையைச் சொல்வது.
8. வித்ரு (வாஜிபு) தொழுகையில் குனூத் ஓதுவது.
9. இரண்டு ஈது தொழுகையில் அதிகமாக ஆறு தக்பீர்கள் சொல்வது.
10. சப்தமிட்டு ஓத வேண்டிய சமயங்களில் சப்தமிட்டு இரைந்து (இமாம்) ஓதுவது.
11. மெதுவாக ஓத வேண்டிய சமயங்களில் மெல்ல ஓதுவது.
12. முதலில் ருக்கூஃவும் பிறகு ஸஜ்தாவும் முறையே செய்வது.
13. ஒவ்வொரு காரியங்களையும் தர்தீபாக –ஒழுங்காக செய்வது முன்பின் ஆகாமால் நிறைவேற்றுவது).

தொழுகையின் சுன்னத்துக்கள்:

1. தக்பீர் தஹ்ரீமாவின் போது இரு கரங்களையும் இரு காதுகள் வரை உயர்த்துவது.
2. பிறகு 'ரப்உல்யதைன்'(இரு கரங்களை உயர்த்துவுது) உடன் முதல் தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று சொல்வது.
3. பிறகு 'வல்உல்யதைன்' அதாவது இரண்டு கைகளையும் ரக்கஅத்து கட்டும் போது வயிற்றில் நாபி (தொப்புள்) மீது வைப்பது.
4. அதன் பிறகு 'ஸுப்ஹானக்க அல்லாஹும்ம…' என்ற ஸனாவை ஓதுவது.
5. பிறகு 'அவூது பில்லாஹி….' என்னும் தஅவ்வுத் ஓதுவது.
6. பிறகு 'பிஸ்மில்லாஹி…' ஓதுவது.
7. ருக்கூவிலும், ஸஜ்தாக்களிலும் அதனதன் தஸ்பீஹ்களை ஓதுவது.
8. ஒரு நிலையிலிருந்து  இன்னொன்றுக்குப் நிலைக்குப் போகையில் 'அல்லாஹு அக்பர்' என்று  தக்பீர் சொல்லி போவது.
9. ருகூவிலிருந்து எழுந்து 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' சொல்வது.
10. ருகூவுக்குப் பிறகு 'கவ்மா(நிலை) என்னும் நிறு நிலையிலும் இரு ஸஜ்தாக்களுக்குpடையில் 'ஜல்ஸா' (இருப்பு)விலும் சிறிது நேரமாவது தாமதிப்பது.
11. கஃதா இருப்பில் 'தரூது இப்றாஹீம்' ஓதுவது. அதனுடன் 'துஆ மாஸூரா 'ஓதுவது.
12. அல்ஹம்து முடிவில் ஆமீன் (என்று மெதுவாக) சொல்வது.

குனூத்:


اَللّهُمَّ اِنَّأ نَسْتَعِيْنُكَ و نَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ وَنَشْكُرُكَ وَلاَنَكْفُرُكَ وَنَخْلُعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اَلّلهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعي وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشي عَذَابَكَ اِنَّ عَذَابَكَ الْجِدَّ بِالْجِدَّ بِااْكُفَّارِ مُلْحِقٌ

தொழுகை முறை:

தொழுவதற்கு முன் நேரம் அறிந்து கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும். உடல், உடை, இடம் சுத்தமாக இருப்பதோடு மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தொழுகைக்காக நின்றவுடன் பயபக்தியோடு கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.

اِنّيِ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَظَرَالسَّموَاتِ وَاْلاَرْضَ حَنِيْفًا وَّ مَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

என்று ஓதி முடித்தவுடன் எந்த நேரத்துத் தொழுகை தொழ வேண்டுமோ அதன் நிய்யத்தை ஓதி நிர்ணயம் செய்து  கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி காதுகளுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, அதன் இரண்டு பெருவிரல்களும் இரு காதுகளின் சோனை (முனை)யைத் தொடும்படி வைத்துக் கொண்டு 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி கைகளை தொப்புள் மீது, வயிற்றில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். அதாவது இடது கையின் மீது வலக்கையை வைத்து இடக்கையின் மணிக்கட்டை வலக் கையின் பெருவரலாதலும் சுண்டு விரலாலும் பிடித்து மற்ற மூன்று விரல்களையும் நீட்டி இடக்கையின் முதுகு மீது வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பெயர்தான் தக்பீர் தஹ்ரிமா என்று சொல்லப்படும்.

பிறகு உடனே ஃதனா ஓத வேண்டும். அதாவது:-

سُبْحَانَكَ اَللهُمَّ وَبِحَمْدِ كَ وَتَبَارَكَ اْسمُكَ وَتَعَالي جَدُّكَ وَلاَاِلهَ غَيْرُكَ

என்று ஓதி முடித்தவுடன் அவூது பில்லாஹி மனிஷ்ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று ஓதி அல்ஹம்து ஸூராவை ஓதிய பிறகு குர்ஆனிலிருந்து ஒரு சிறு ஸூராவை அல்லது ஒரு பெரிய ஆயத்தை அல்லது மூன்று ஆயத்துகளை நிதானமாக ஓதி முடிக்க வேண்டும். அல்ஹம்து ஸூரா முடிந்தவுடன் 'ஆமீன்' என்று மெதுவாக சொல்ல வேண்டும்.
 

தொடர்ந்து அல்லாஹு அக்பர் என்று சொல்லி குனிந்து ருக்கூ செய்ய வேண்டும்.  سُبْحَانَ رَبِّيَ اْلعَظِيْمِ        அதில் என்று மூன்று முறை ஓத வேண்டும். பிறகு

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ

என்று சொல்லிய வண்ணம், அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து என்று ஓதி முடித்து ஸஜ்தா செய்ய வேண்டும். அதில் இரு கரங்களின் உள்புறமும் தரையில் படிந்து, இரு தோள்களுக்கு நேராக பக்கத்தில் இருத்தல் வேண்டும். இரு கால்களின் விரல்கள் சற்று மேற்கு நோக்கி வளைத்திருக்க வேண்டும். முதுகு வளையாமல் ஒரே மாதிரியாகவும் தொடைகள் நேராகவும் இருக்க வேண்டும். ஸஜ்தாவில்,

سُبْحَانَ رَبِّيَ الاَعْلي

என்று மூன்று முறை ஓத வேண்டும். பின்பு அதிலிருந்து தலை உயர்த்தி சிறு இருப்பு அமர வேண்டும். பின் இரண்டாவது ஸஜ்தா செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் ஓதிய பிறகாரம் ஓதி முடித்து தலை நிமிர்ந்து, எழுந்து நின்று இரண்டாவது ரக்அத்தை நிறைவேற்ற வேண்டும். அதில் ஃதனாவும் அவூதும் தவிர மற்றவைகளை முன் ரக்அத்தில் ஓதியதைப் போல் ஓதி முடித்து நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு இரண்டு ஸுஜூது முடிந்தபின்,

கஃதா இருப்பு அமர வேண்டும். இரண்டு கரங்களையும் இரண்டு தொடைகளின் மீது, முட்டு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது கீழ் காணும் அத்தஹிய்யாத்'துஆ ஓத வேண்டும். அது:-

التحيّات المباركات الصّلوات الطيبات لله اسّلام عليك ايّها انّبي ورحمة الله وبركاته السّلام علينا وعلي عبادالله الصا لحين اشهد ان لاّاله الاّالله و اشسهد انّ محمّد رّسول الله اللهمّ صلّ علي محمّد  وعلي آل  محمّد

அதில் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லும் போது இல்ல்லாஹ்வில் கலிமா விரலை மட்டும் உயர்த்த வேண்டும். அதன் பின் எழுந்து கைகளை உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிக் கொண்டு மூன்றாவது ரக்அத்தைத் தொடர வேண்டும். மூன்றாவது, நான்காவது ரக்அத்தில் அல்ஹம்து ஸூராவை மட்டும் ஓதி ருக்கூவு செய்ய வேண்டும்.

நான்கு ரக்அத்துகளிலும் இரண்டு ஸஜ்தா முடிந்தவுடன் கஃதா இருப்பில் நன்கு அமர வேண்டும். அதாவது இடது பாதத்தை படுக்க வைத்து அதன் பக்கம் வலது பாதத்தை நிறுத்தி இடது பக்கமாக சற்று சாய்ந்து, நல்லபடி உட்கார்ந்து கொண்டு முந்தின அத்தஹிய்யாத்தையே ஓதி அத்துடன் தரூதே இப்ராஹீமை ஓத வேண்டும்.

كما صَلَّيْتَ علي ابراهيم وبارك علي محمّد وعلي آل محمّد كما باركت علي ابراهيم وعلي آل ابراهيم في العالمين انّكك
                                                                                                         حميدمّجيد                              
 

அத்துடன் துஆயே மாஸூரா ஓத வேண்டும்.
 

துஆயே மாஸூரா:

اَللهُمَّ غْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلاِسْتَاذِيْ وَلِجَمِيْعِ الْمُؤْمِنِيْنَ والْمُعْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ اَلْاَحْيَاءِ مِنْهُمْ وَالْاَمْوَاتِ اِنَّكَ مًجِيْبُ الدَّعَوَاتِ بِرَحْمَتِكَ يَااَرْجَمَ الرَّاحِمِيْنَ

என்று ஓதி முடித்தவுடன் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்' என்று ஸலாம் கொடுக்க வேண்டும்.

வாஜிபுல் வித்ரு தொழுகை:

இஷாத் தொழுகையில் பர்ளுக்கும் ஸுன்னத்துக்கும் பிறகு இறுதியாகத் தொழும் தொழுகை மூன்று ரக்அத்திற்கு வாஜிபுல் வித்ரு என்று பெயர்.

வாஜிப் என்பது பர்ளுக்கு அடுத்தபடியாக கடமையானதாகும். ஸுன்னத்துக்கும் மேலானதாகும். இதை மூன்று ரக்அத்தில் ஒரே ஸலாமில் தொழ வேண்டும். இதன் மூன்றாவது ரக்அத்தில் கியாமலி; நின்று அல்ஹம்து ஸூராவும் இன்னும் ஒரு சிறு ஸூராவும் ஓதி முடித்தவுடன் ருக்கூ.வுக்குப் போய் விடாமல் அதே நிலையில் அல்லாஹு அக்பர் என்று சொல்லி கைகளை உயர்த்தி ரக்அத் கட்டிக் கொண்டு துஆயே குனூத் ஓத வேண்டும். இவ்வாறு குனூர் ஓதி முடித்தவுடன் ருகூவு போய் பிறகு தொழுகையை வழக்கமாக தொழுது முடிக்க வேண்டும்.

ஒருவன் குனூத் ஓதுவதை மறந்து விட்டு ஸஜ்தா போய்விட்டால், அப்படியே மீதி தொழுகையை தொழுது முடித்து குனூத் ஓதத் தவறியதற்காக இறுதியில் 'ஸஜ்தா ஸஹ்வு' செய்ய வேண்டும். தொழுகையில் வாஜிபு விட்டுப் போனால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

தொழுகையை முறிக்கும் காரியங்கள்:

1. இத் தொழுகையை விட்டுப் போய் விடலாமே என்று வெறுப்படைதல்.
2. வாய்விட்டு ஏதும் பேசுதல்.
3. எதையேனும் குடிப்பது, திண்பது,(இவ்வாறே நோன்பை முறிக்கும் காரியங்களை தொழுகையில் செய்வது)
4. தொழுகைக்குச் சம்பந்தமில்லாத காரியத்தை மும்முறை செய்தல். நமைச்சல் தாங்காதிருந்து கொஞ்சம் சொறிந்து விட்டால் தொழுகை முறியாது.
5. தொழுகையில் ஒளு முறிந்து போதல். ஸ்நானத்திற்கு அவசியம் ஏற்படுதல்.
6. சப்தமிட்டு சிரித்தல்.
7.ஈமான் பறிபட்டுப் போகும்படியான காரியத்தை செய்தல் (குப்ரான செயல் புதிதல்)
8. கிப்லா திசையை விட்டும் நெஞ்சத்தை திருப்பிக் கொள்ளுதல்.
9. மறைய வேண்டிய சரீரப் பகுதியிலிருந்து ஆடை விலகிப் போய் அதை உடனே மறைத்து மூடாமல் இருந்து விடுதல்.
10. தொழுகிற இடம், உடல், உடைகளில் அசுத்தம் உண்டாயிருத்தல்.
11. ஒரு பள்ளு அல்லது ஒரு ஷர்த்து ஞாபகமிருந்தும் அதை நிறைவேற்றாமல் சும்மா இருந்து (விட்டு) விடுதல்.

தொழுகையின் மக்ரூஹ்கள்:

1. ஸஜ்தா இடமில்லாத இதர இடங்களில் கண்ணோட்டம் செலுத்துதல்.
2. தலையை அதிகம் தாழ்த்துதல் அல்லது உயர்த்துதல்.
3. கண்ணை இறு மூடிக் கொள்ளல்.
4. இருட்டில் நின்று தொழுதல்.
5. ஒற்றைக்கால் மீது பாரம் போட்டுத் தொழுதல் அல்லது மாற்றி மாற்றி பாரம் போடுதல்.
6. மலம், சிறுநீர், காற்று இவைகளைக் கடுமையாக அடக்கிக் கொண்டு தொழுதல்.
7. உணவு-தண்ணீர் தயாராய் இருந்து, பசி தாகமுமமிருந்து அதை உண்ணாமல் பருகாமல் பசி தாகத்தோடும் ஆவலோடும் தொழுதல்.
8. நடைபாதை, கடைவீதி, அமைதியில்லாத இடம், ஹராமான பணத்தில் கட்டியப ள்ளி, கக்கூஸ் பகுதி, கோயில் பிரகாரம், மாட்டுக் கொட்டகை முதலிய இடங்களில் தொழுதல்.

தொழக் கூடாத நேரங்கள்:

1. சூரியன் நன்றாய் உதயமாய் கொண்டிருக்கும்போது.
2. சூரியன் நடுஉச்சியில் இருக்கும்போது.
3. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் போது(அஸர் தொழுகையைத் தொழாதவன் மட்டும் விதிவிலக்காக தொழலாம்)
4. பிரயாணி(முஸாபிர்) லுஹருடன் அஸரையும் சேர்த்துத் தொழுது இருந்து, பிறகு நேரம் இருக்கிறதென்று அஸ்தமிக்கும்போது அஸரைத் தொழக் கூடாது.
5. வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் போது கதீபு ஸாஹிப் மிம்பர் மீது ஏறியதும், குத்பா ஓதி முடியும் வரை எதுவும் தொழக் கூடாது.

ஜமாஅத்து தொழுகை:

தனியாக தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது (கட்டாயமான) சுன்னத்தாகும்.

ஜமாஅத்து நடந்து கொண்டிருக்கும்போது ஒருவன் அதில் சேராமல் தனியே தொழுது கொள்வானாகில் அவன் 'சுன்னத்தே முஅக்கதர்வை விட்ட பாவியாவான்.

ஜமாஅத்து தொழுகையில் இமாம் இரைந்து ஓதும் ஓதல்களை முக்ததீகள் (பின்தொடர்பவர்) மௌனமாக செவிமடுத்துக் கேட்க வேண்டும். மற்ற ரக்அத்துகளில் இமாம் மெதுவாக ஓதினாலும் பின் தொடர்பவர் ஏதும் ஓதாமல் இமாமை பின்தொடர வேண்டும்.

ஷாபி இமாமுடன் தொழுகையில் ஒருவர் பின்பற்றி தொழ நேரிட்டால் ஷாபியாக்கள் குனூத் ஓதும்போது ஹனபி முக்ததீ மௌமான இருந்து பின் தொடர வேண்டும்.

ஜும்ஆ:

ஜும்ஆத் தொழுகை முஃமினானவர்களுக்கு ஈதுப் பெருநாள் தொழுகை போன்றதாகும். எக்காரணம் முன்னிட்டும் ஜும்ஆத் தொழுகையை விட்டு விடக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று குளித்து நல்ல உடை அணிந்து, வாசைன திரவியம் பூசி ஜும்ஆ பள்ளிக்குப் போய் குத்பாவுக்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுது கொள்ள வேண்டும். இரண்டு குத்பாக்களையும் காது தாழ்த்தி பக்தியுடன் கேட்க வேண்டும். ஜும்ஆவின் போது கதீப் லுஹர் தொழுகை நான்கு ரக்அத்துகளுக்கு பதிலாக இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள்.

ஜும்ஆவின் சட்டங்கள்:

ஜும்ஆ தொழ கடமைப்பட்டவர்கள் சுதந்திரமான ஆண்பிள்ளை, பிரயாணத்திலில்லாத ஊர்வாசி, தேக சுகமுள்ளவர், நடந்து போக சக்தியுள்ளவர், கண் பார்வையுடையவர், பகைவனின் பயம் இல்லாதவர் ஆகியவர்கள் மீது தான் ஜும்ஆ தொழுகை கடமையாகிறது.

ஓயா மழைக் கொட்டி சேறும் சகதியுமாய் இருந்து போவதற்கு இடைஞ்சல் உண்டானால் ஜும்ஆவுக்கு செல்வது அவசியமில்லை.

ஊரில் பாங்கு சொன்னால் கேட்கக் கூடிய வட்டாரத்திலுள்ளவர்களிடையே ஜும்ஆ நடைபெற வேண்டும்.

லுஹர் நேரம் ஆரம்பமாகி அந்நேரம் முடிவத்றகுள் ஜும்ஆ தொழுகையையும் நிறைவேற்ற வேண்டும்.

இரண்டு குத்பாக்கள் ஓதினபிறகுதான் ஜும்ஆ தொழ வேண்டும்.

ஜும்ஆ தொழுகைசயில் இமாம் ஜமாஅத்துடன் ஒரு ரக்அத்தாவது முழுதும் கிடைத்தால்தான் ஜும்ஆத் தொழுகையின் பலன் கிடைக்கும்.

ஒரு சிற்றூரில் ஒரு இடத்தில்தான் ஜும்ஆ நடைபெற வேண்டும். பெரிய ஊராக இருந்து பள்ளியில் இடம் கிடைக்காதென்றிருந்தால், வேறு மஹல்லா பள்ளியிலும் ஜும்ஆ தொழலாம்.

ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்படும். ஒன்று வழக்கமான பாங்கு. மற்றது இமாம் குத்பா ஓத மிம்பர் மீது அமரும் போது சொல்வது.

ஜும்ஆவுடைய குத்பாவுக்கு முன் நான்கு ரக்அத்தும், பர்ளுக்குப் பின் நான்கு ரக்அத்தும் ஸுன்னத் தொழுது கொள்ள வேண்டும்.

முஸாபிர்களின் தொழுகை:

ஹலாலான வழிகளில் சிரமத்துடன் பிரயாணம் செய்பவர் தமது ஊரை விட்டுக் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நாள் நடக்கக் கூடிய தூரத்திலுள்ள ஊருக்கு (சுமார் 45 அல்லது 48 மைல்) புறப்பட்டு விட்டால் அப்படிப்பட்ட முஸாபிர் மீண்டும் தமது ஊர் வந்து சேரும் வரை நான்கு ரக்அத்து பர்லான தொழுகையை, இரண்டு ரக்அத்தாக குறைத்துத் தொழலாம். இதற்குப் பெயர் கஸ்ரு தொழுகை எனப்படும்.

முஸாபிர் தொழும்போது 'கஸ்ராக தொழுகிறேன்' என்று தக்பீருடன் நிய்யத்து செய்ய வேண்டும். தம்மைப்போன்ற முஸாபிரை இமாமாகக் கொண்டு ஜமாஅத்தாக தொழலாம். பூரணமாக தொழும் இமாமைப் பின் தொடர வேண்டியதில்லை.

பிரயாணம் சென்ற ஊரில் 15 நாட்களுக்குக் குறைவாக தங்க நேரிட்டால் தான் 'கஸ்ரு' தொழ வேண்டும். காரியம் நாளைக்கு முடிந்து விடும் மறுநாள் புறப்படுவோம் என்று ஒவ்வொரு நாளாய் கடந்து வந்தால் இங்ஙனம் 15 நாள் வரை தொழுகையை கஸ்ரு செய்யலாம். அதற்கு மேல் கூடாது. அவன் முஸாபிராக கருதப்பட மாட்டான்.

முஸாபிர் தொழுகையை குறைத்து தொழலாம். இரண்டு தொழுகைகளை சேர்த்து தொழ அரபாவில் மட்டும்தான் அனுமதி உண்டு. மற்றபடி ஜம்உ என்பது கிடையாது.

ஜனாஸா தொழுகை:

இறந்து போன முஸ்லிம்களுடைய ஹக்கில் துஆ செய்வதற்காக தொழப்படும் தொழுகை 'ஜனாஸா' தொழுகை ஆகும். இதில் ருகூவு, ஷஜ்தா, கஃதா முதலியவை கிடையாது. நின்றபடி நான்கு தக்பீர்களுடன் தொழ வேண்டும்.

ஜனாஸா தொழுகை பர்ளு கிபாயாவாகும். அதாவது சிலபேர் தொழுதால் கடமை தீர்ந்து விடுகிறது.எல்லோரும் தொழுதே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

முதல் தக்பீருடன் 3 தக்பீர்களும் சேர்த்து 4 முறை தக்பீர் சொல்ல வேண்டும்.

اُصَلِّ لِلهِ تَعَالي دَاعِيًا لِلْمَيِّتِ اِقْتَدَيْتُ بِهاَذاْلاِمَامِ

என்று நிய்யத் செய்தவனாக அல்லாஹு அக்பர் என்று ரக்அத்து கட்டிக் கொள்ள வேண்டும்.

முதலாவது தக்பீருக்குப் பின்

இமாம் மற்றும் முக்ததி யாவரும் சாதாரண தொழுகையில் ஓதும் ஃதனாவை ஓத வேண்டும். பிறகு

2 வது முறை தக்பீர் சொல்லி சாதாரணமாக எல்லாத் தொழுகைகளிலும் ஓதும் தரூதே இப்றாஹீமை முழுவதும் ஓத வேண்டும். பிறகு

3 வது தக்பீர் சொல்லி துஆ ஓத வேண்டும். பெரியவர்களாக இருப்பின்,

اَللهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا. اَلّلهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلي الْاِسْلاَمُ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّيْتَهُ عَلي الْاِيْمَانْ

ஆண்குழந்தைக்குரிய ஜனாஸாவாக இருப்பின்,


اَلّلهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَاجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

பெண் குழந்தைக்குரிய ஜனாஸாவாக இருப்பின்,

اَلّلهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهَا لَنَا شَافِعًا وَمُشَفَّعَةً

4 வது தக்பீர் சொல்லி


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

என்ற துஆவை ஓதி
 

'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி' என்று இரண்டு பக்கமும் திரும்பி ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்து இதர துஆ, பாத்திஹா ஓதிக் கொள்ளலாம்.
 

ஸலாத்துல் ஈதைன்:

ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.

ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.

பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.

தொழுகை முறை:

ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.

முதலில் நிய்யத்து செய்து அல்லாஹு அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லாஹு அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹு அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.

இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லாஹு அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லாஹு சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.