ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்.

ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்.

By Sufi Manzil 0 Comment June 22, 2012

ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும், பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும்.

1.     '(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும்  அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.' – அல்குர்ஆன் 24:31

இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்

'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.

2.    'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)

3.    பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1653)

4.    'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாக ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது, பெண்கள் அதிகமாக அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அதை ஆண்கள் அணியக் கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.

5.    ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது. வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை.

6.    'அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்' எனக் கூறுகிறது அல்குர்ஆன்.

அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷூக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.

பர்தா -ஹிஜாப்

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

அல்லாஹ் கூறுகிறான்: '(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்:24:31)

''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்:33:53)

இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல்வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்றவற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.

மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,

'அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'(அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ

இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!' (அல்குர்ஆன்: 33:59)

'நாங்கள் நபி(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்' என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

மறைந்தவர்களை ஜியாரத் செய்யும் விதத்திலும் ஸஹாபிப் பெண்கள் பேணிய ஹிஜாப்பிற்கு ஆதாரமாக உள்ள ஹதீதை பாருங்கள்:

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.' (இப்னு அஸாகிர்)

'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவூத்)

இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.

பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:

'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.

ஸப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னாஆல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 4750)

'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது 'தபர்ருஜ்' என்பதில் அடங்கும்.

மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீதுகளில் அடிப்படையில் அமையப் பெற்றதே பர்தாவாகும். இதில் தற்போது கறுப்பு கலரில் பெண்கள் நடைமுறையில் பர்தா உடுத்தி வருகின்றனர். இது வஹ்ஹாபியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நாம் வஹ்ஹாபிகளுக்கு மாற்றமாக கறுப்பு கலரைத் தவிர ஏனைய கலரில் பர்தா அணிவது ஏற்றமானது. மேலும் விஞ்ஞான ரீதியாகவும் கறுப்பு கலர் வெயிலுக்கு ஏற்றதல்ல. அதே போல் துக்கத்தின் அடையாளமாகவும் கறுப்பு இருக்கிறது கவனிக்கத்தக்கது.

பயன்கள்:

பெண்கள் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீது சொன்னபடி உள்ள சரீயத் சட்டங்களை  பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்;;;.

ஆண்களின் ஆடை – சட்டதிட்டங்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடை முழங்காலுக்கும் பரண்டை (கணு)க் காலுக்கும் நடுவிலும், அவர்களுடைய சட்டைக் கை மணிக்கட்டுக்கு மேலுமாக இருந்தது.

சரீரத்தை எடுத்துக் காட்டும் (மஸ்லின் அல்லது ரவைசல்லா எனப்படும்) கவனியாலும், பளிங்கு போன்ற பொருட்களினாலும் ஆடை அணிவது கூடாது. துப்புரவான தோலாக இருப்பினும், காகிதம்  போன்றவையாக இருப்பினும் அதில் ஆடை அணிவது கூடும்.

பருத்தியும் பட்டும் சமமாக இருக்கின்ற துணியை அணிவது மக்ரூஹ் ஆகும். கொஞ்சமேனும் பருத்தி அதிகம் இருப்பின் மக்ரூஹ் அல்ல.

ஆண்கள் அழகிய ஆடை அணிந்து, தலைப்பாகை கட்டி, அதில் தொங்கல் விட்டு மேலே போர்வை அணிந்து, தலைவழியப் பச்சைப் போர்வையிட்டுத் தொழுவது சுன்னத்தாகும்.பெருமையை நாடி காலிலும், கையிலும் தொங்கும்படி உடையணிவது ஹராம் ஆகும். பெருமையை நாடவில்லையானாலும் அவ்வாறு அணிவது மக்ரூஹ் ஆகும்.

வேறு உடையில்லாத போது நஜீஸான உடையைக் கொண்டேனும், பட்டாடையைக் கொண்டேனும் (தனிமையிலிருந்தாலும்) மானத்தை மறைப்பது வாஜிபாகும். ஆண்கள் முன்,பின் துவாரத்தை மறைத்துக் கொள்வதும், பெண்கள் முழங்கால் முதல் தொப்புள் வரை மறைப்பதும் வாஜிபாகும்.

குளிக்கும்போதோ, வீடு போலுள்ளவற்றைப் பெருக்கும்போது புழுதியை விட்டு காத்துக் கொள்வதற்கோ, அல்லது புழுக்கமான நேரத்தில் குளிர்ச்சியை உண்டாக்கிக் கொள்வதற்காகவோ, தனித்திருக்கும் போது அவ்ரத்தைத் திறந்து கொள்ளலாம். எவ்வித் தேவையுமின்றி ஆண்கள் தொடையையும், பெண்கள் முதுகுப் பகுதியையும் திறந்திப்பது மக்ரூஹ் ஆகும்.

அழுக்குத் துணியும் கறுப்பு நிறமுள்ள காலணியும் வறுமையை உண்டாக்குமென கமாலுத்தீன் திம்யரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தொழுகையல்லாத நேரத்தில் ஈரமில்லா பொழுது நஜீஸ் பட்டிருக்கும் உடையை அணியலாம். பருவமடைந்த ஆண்கள் பட்டாடையை அணிவது, உபயோகிப்பது, போர்த்திக் கொள்வது, விரிப்பாக்குவது, மானத்தை மறைப்பதற்கு உபயோகிப்பது ஆகியவை ஹறாமாகும். ஆனால் பட்டுத்துணியின் மீது பருத்தித் துணியை அது மெல்லியதாக இருப்பினும் விரித்து அதில் உட்காரலாம்.

பெண்களும் பட்டுத் துணியால் திரை போடுவதும், அதனால் சுவர்களை அலங்கரிப்பதும் ஹராம் ஆகும். ஆண்கள் தங்களின் துணிகளின் ஓரங்களில் பட்டினால் ஆன துணியை நெய்து அணிந்துகொள்ளலாம்.

குங்கும நிறம் கொண்ட சந்திர காவி நிறமும், குசும்பாவெனும் வெண்மை கலந்த சிவப்பு நிறமும் ஆண்கள் அணிவது ஹராம்.

உடைகளில் மிக ஏற்றமானது பெருநாளல்லாத நாளில் வெள்ளை நிறமாகும்.வெள்ளைக்கு அடுத்தது பச்சை நிறமாகும். சொர்க்கத்தின் உடை பச்சை நிறமுள்ளதாகும். பெருநாளில் மிகவும் ஏற்றமானது விலை உயர்ந்த ஆடையாகும்.

மார்க்கத்தில் கூறப்பட்ட பலன் இல்லாமல் சொரசொரப்பான துணியை அணிவது மக்ரூஹ்.

மோதிரம் அணிவது:

ஆண்கள் வெள்ளியினால் ஒரு மோதிரம் அணிவது சுன்னத், அதை வலக்கரத்தில் அணிவது ஏற்றம். அதை சுண்டுவிரலில் அணிவது மற்றொரு சுன்னத். வலக்கரத்தின் சுண்டுவிரலில் அணிவது ஏற்றமானது. ஃபைரோஜ் கல் வைத்த மோதிரம் அணிவது நல்லது. அந்தக் கை பரக்கத்தை விட்டும் நீங்காது எ ன்றும், அகீக் கல்லினால் அதிகமான பலன்களுண்டு என்றும்  கூறப்பட்டுள்ளது. ஒரு கையில் ஒரு மோதிரத்தை விட அதிகப் படுத்தக் கூடாது. மோதிரத்தின் அளவு உலக வழக்கில் அது கடப்பானது என்று சொல்லாத அளவிற்கு இருக்க வேண்டும். இரும்பு, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களாலும் மோதிரம் அணியலாம்.ஆனால் இரும்பு மோதிரம் அணியக் கூடாது என்று ஒரு பலவீனமான ஹதீது உள்ளது.

காற்சட்டையோ, கைலியோ அணிவதில் சுன்னத்தாவது: காலின் குதிரை முகத்தில் பாதி வரை தாழ்த்திக் கட்டுவதாயிருக்கும். பரண்டை முளி வரை (கணுக்கால் வரை) கட்டுவதில் சுன்னத் விடுபட்டு விடும். சட்டைக் கையை மணிக்கட்டு வரை தாழ்த்திக் கொள்ளலாம். தலைப்பாகையின் பின்புறத் தொங்கலை முதுகின் நடுவில் தொங்க விடுவது, வலப்புறத்தில் தொங்க விடுவதை விட சிறந்ததாகும்.

ஜும்ஆ நாளில் தலைப்பாகை அணிபர்கள் மீது அல்லாஹ்வும், அவன் மலக்குகளும் சலவாத்துச் சொல்வார்கள் என்றும், தலைப்பாகை அணிந்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவது தலைப்பாகை அணியாமல் எழுபது ரக்அத் தொழுவதை விடச் சிறந்தது என்றும் ஹதீதில் வந்துள்ளது.

தஸ்பீஹ் மணிக்கு பட்டினால் குஞ்சம் போடுவது கூடாது. பணம் வைப்பதற்காக பட்டினால் வட்டுவம் செய்வது ஆகும். குர்ஆனுக்கு பட்டினால் உறை போடுவது ஆகும். பட்டுத்துணியால் மேற்கட்டி கட்டுவது ஆண், பெண் அனைவருக்கும் ஹராமாகும்.

ஆடைகளை அணியும் போது வலப்புறத்தையும், கழட்டும் போது இடப்புறத்தையும் முற்படுத்துவது சுன்னத்.

முற்றும்.