இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer

இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள்-Evidance of 20 Rakath Taraweeh Prayer

By Sufi Manzil 0 Comment June 12, 2011

Print Friendly, PDF & Email

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாக இருந்தது.

அதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது ரக்அத்துகளைக் கொண்ட தராவீஹ் எனும் தொழுகையின் எண்ணிக்கையினைக் குறைத்து தராவீஹ் எட்டே ரக்அத்துகள்தான் என்று வாதம் செய்தனர். இந்த வாதங்களை யார் முதலில் உருவாக்கினார் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது வஹ்ஹாபிய சித்தாந்தத்தை கடைப்பிடித்து தனது கோட்பாடுகளை அதன்படி வளர்த்துக் கொண்ட முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி என்பவர் நம் கண்முன் படுகிறார்.

தற்போது தமிழகத்தில் உலாவருகின்ற இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டு செயல்படுகின்ற நச்சுப் பாம்பான பி.ஜே. போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் அவரின் இந்த தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்ற கொள்கையை கடைபிடித்தும் கடைபிடிக்கும்படியும் மக்களை தூண்டி வழிகெடுக்கின்றனர். அவர்கள் அதற்காக அல்பானியின் ஆதாரங்களை கொடுக்கின்றனர். அவர் கொடுத்த ஆதாரங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானவை, தான்தோன்றித்தனமான கருத்துக்கள் கொண்டவை என்று ஆதாரப்பூர்வமாக நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் நிரூபித்து தராவீஹ் 20 ரக்அத்துகள்தான் என்று நிலைநாட்டினர். அவர்களின் ஆதாரங்கள், கட்டுரைகள், தொகுப்புகளிலிருந்து இந்த கட்டுரையைத் தொகுத்து எழுதியுள்ளேன்.

யார் இந்த அல்பானி:-

இவரின் முழுப் பெயர் முஹம்மது நஸ்ருத்தீன் பின் நூஹ் நஜாத்தி பின் ஆதம். இவரின் குன்னியத் பெயர் அபு அப்துர் ரஹ்மான் என்று இவரின் இளைய மகனின் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டது. பின் அர்னோட்டீ என்றும், அஸ்கோடெர்ரீ (பிறந்த ஊராலும்), அட்டமாஸ்கிய்யீ (டமாஸ்கஸில் வாழ்ந்ததாலும், கல்வி பயின்றதாலும்), மற்றும் அல்பானி (இவரின் பிறந்த நாட்டைக் கொண்ட பெயராலும்)என்றும் அழைக்கப்பட்டார். இது இவர் ஸிரியாவிற்கு குடிபெயர்ந்த சமயத்தில் அழைக்கப்பட்டது.

இவர் ஹிஜ்ரி 1332 (1914 கி.பி.)ல் அல்பேனியாவின் அப்போதைய தலைநகரான 'அஸ்கோடெரா'வில் பிறந்தார். 9 வருடமாக அந்த நகரத்தில் ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தார்.

இவரின் தந்தை துருக்கி இஸ்தான்புல்லில் ஷரீஅத்துடைய கல்வியைப் பயின்று அல்பேனியாவின் ஹனபி மத்ஹபின் மிகப் பெரிய காழியாக இருந்தார்கள். அல்பேனியாவின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த அஹ்மது ஜுகு மேற்கத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை துருக்கிய அரசர் கமால் நாசரைப் பின்பற்றி தமது நாட்டிலும் கொண்டுவந்தார். பாங்கை கூட அல்பேனிய மொழியில் சொல்வதற்கு ஏற்பாடு செய்தார். இந்த சமயத்தில் தமது மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்ள ஷாம் தேசத்தை நோக்கி அல்பானியின் தந்தை இடம் பெயர வேண்டியதாயிற்று.

டமாஸ்கஸில் இந்த அல்பானி ஜாஹிரிய்யா வாசகசாலையில் நிறைய புத்தகங்களைப் படித்தார்.

குர்ஆனில் இவர் தேர்ச்சி பெற்றது ரியாதில் உள்ள இமாம் சவூது பல்கலைகழகத்தில்தான். இவர்  அப்துல் அஜீல் பின் அப்துல்லா பின் பாஸ் அவர்களின் நேரடியான மாணவராக இருந்தார். மேலும் வஹ்ஹாபிய ஆசியரியர்களிடம் சுமார் 10 வருடங்கள் கல்வி பயின்றார்.

இவர் மக்களை குர்ஆன், சுன்னா அடிப்படையில் சலபு சாலிஹீன்களை பின்பற்றி அழைப்பதாக கட்டுரைகள் மூலமாகவும், ரேடியோவில் பிரச்சாரம் மூலமாகவும் தொலைபேசி முலமாகவும் பள்ளியில் பாடங்களை நடத்துவதன் மூலமாகவும் மக்களை அழைத்தார். இவர் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் எல்லாவிதமான பாகங்களிலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இந்த அல்பானியின் நாசகார கொள்கையைத் தான் ஆதாரமாக வைத்து தற்போதைய தவ்ஹீது(?) ஜமாஅத்தினர்கள் வாதிடுகின்றனர். அதில் அவர் தராவீஹ் பற்றி கூறியிருப்பதற்கு நமது சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கொடுத்துள்ள விளக்கத்தின் தொகுப்புதான் இது.

தராவீஹ்:

ரமலான் – நோன்பும் (மாதத்தில்) இரவில் நின்று வணங்கும் (தராவீஹ் தொழுகை) தொழுகையும் ஹிஜ்ரி 2ம் ஆண்டு கடமையாக்கப்பட்டன.

'தராவீஹ்' என்பது பன்மைச் சொல். இதன் ஒருமை 'தர்வீஹ்' என்பதாகும். 'தர்வீஹ்' என்றால் ஓய்வு எடுத்தல் என்பது பொருள். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நான்கு ரகஅத்துகளுக்கிடையிலும் நான்கு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை ஓய்வாக-றாஹத்தாக சஹாபாக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் இத் தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் வைக்கப்பட்டது.

மொழிவள அடிப்படையில் தராவீஹின் எண்ணிக்கை:

அரபி மொழிக்கென்று தனிச் சிறப்பு என்னவென்றால் இதில் ஏனைய  மொழிகளைப் போன்று ஒருமை, பன்மை என்றிராமல் ஒருமை, இருமை, பன்மை என்று இருப்பதாகும். இந்தவகையில் தாவீஹ் என்ற பன்மைச் சொல் எட்டு ரக்அத் கொண்ட தராவீஹ் தொழுகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாது.

இதற்கு 'தராவீஹதைன்' என்ற இருமைச் சொல்லே பொருத்தமாகுமே தவிர, பன்மைச் சொல்லான தராவீஹ் என்ற சொல் பொருத்தமாகாது என்பது புத்திமான்களுக்கு விளங்கும்.

எனவேதான் இருபது ரக்அத்துகளைக்கொண்ட தொழுகை ஐந்து ஓய்வுகளைக் கொண்டிருப்பதால் தராவீஹ் என்ற பெயர் பொருத்தமாக இருக்கின்றது.

தராவீஹும் தஹஜ்ஜுத்தும்:

தராவீஹ் தொழுகையும், தஹஜ்ஜத் தொழுகையும் வேறு வேறானவை. இரண்டுக்கும் நேரங்களும் வேறானவை. இரவில் மஃரிபுக்குப்(ஹனபியில் இஷாவிற்குப்)பின் தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன்னர் தொழுகின்ற தொழுகைக்குப் பெயர் தஹஜ்ஜுத் தொழுகை ஆகும்.

தஹஜ்ஜுத் ஹிஜ்ரத்திற்கு முன்பே கடமையாகிவிட்டது. பின்னர் இத்தொழுகை சுன்னத்தாக மாற்றப்பட்டது. தராவீஹ் தொழுகை ஹிஜ்ரத்திற்கு பின் கடமையாக்கப்பட்டது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஹஜ்ஜுத் தொழுகை எவ்வாறு அமைந்திருந்தது எனக் கேட்டேன்.
'இரவின் முன்பகுதியில் துயில் கொண்டு இறுதிப் பகுதியில் விழித்தெழுந்து தொழுவார்கள். பின் தனது படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் அதான் கூறியதும் உடன் எழுந்து தேவைப்படின் குளிப்பார்கள். இல்லையாயின் உளுச் செய்து கொண்டு பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்' என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்வது ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி ஷரீப் விரிவுரை ஐனி பாகம் 7 பக்கம் 201

கதிர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹஜ்ஜாஜ் இப்னு அம்று ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீதை தப்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது முஸ்னத் கபீரிலும், அவ்ஸத்திலும் பதிவு செய்துள்ளார்கள். அவர் கூறுகின்றார்:

'உங்களில் ஒருவர் பொழுது புலரும்வரை இரவு முழுவதும் தொழுது வணங்குவாராயின் அவருக்கு தஹஜ்ஜுத்தும் நிறைவேறிவிடும் என கருதுகின்றீர்களா?(எனக் கேட்டுவிட்டு அவரே பதில் கூறுகின்றார். நிறைவேறாது. (ஏனெனில்) தஹஜ்ஜுத் என்பது தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும்.(இவ்வாறு மூன்று விடுத்தம் கூறிவிட்டு முடிவாகக் கூறுகின்றார்) இவ்வாறுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை அமைந்திருந்தது.

நூல்: ஐனி பாகம் 7 பக்கம் 203.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு தூக்கம் அவசியம் என்றும், தஹஜ்ஜுத் தொழுகையை இரவின் இறுதிப் பகுதியிலேயே தொழுதுள்ளார்கள் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

இரவின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பின்னர்தான் தஹஜ்ஜுத்தின் நேரம் ஏற்படும். இரவில் துயில் கொண்டு விழித்த பின்னர் தொழுபவரையே தஹஜ்ஜுத் தொழுபவர் என ஷரீஅத்தில் கூறப்படும் என அல்லாமா பக்ருத்தீழுன் ராஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். நூல்: தப்ஸீர் கபீர் பாகம் 5 பக்கம் 623.

'தஹஜ்ஜுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தொழுவதைக் குறிக்கும். எனவே தூங்கி எழ முன்னர் இரவுத் தொழுகையுடன் இணைத்து தஹஜ்ஜுத்தைக் கூற முடியாது எனப்துதான் அறிஞர் பெருமக்களின் கருத்தாகும்.' –நூல்: பைளுல் பாரி பாகம் 2 பக்ம் 207.

தராவீஹ் தொழுகையின் நேரம்:

அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:

'நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நோன்பு நோற்றோம். றமலான் மாதம் முடிய 7 நாட்கள் மீதி இருக்கும் வரை எங்களுடன் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவில்லை. பின் 23வது இரவு இரவின் மூன்றில் ஒரு பாகம் கழியும் வரை எங்களுடன் சேர்ந்து தொழுதார்கள். பின் ஆறாவது (24வது இரவு) எங்களுடன் தொழவில்லை. 25வது இரவு இரவின் சரிபாதி கடக்கும் வரை தொழுதார்கள். இதன்பின் யாரஸூலல்லாஹ் இந்த இரவில் நின்று வணங்குவதை இன்னும் அதிகமாக்கியிருக்க வேண்டும் என்றேன். அதற்கு ஒருவர் இமாமுடன் சேர்ந்து கடைசிவரை தொழுவாராயின் அவருக்கு இரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள். பின் 26வது இரவு எங்களுடன் சேர்ந்து தொழவில்லை. 27வது இரவு அண்ணலாரின் துணைவியர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் திரட்டித் தொழுவித்தார்கள்.

'பலாஹ்' தவறிவிடுமோ என அஞ்சும் வரை தொழுகை நீண்டது. 'பலாஹ்' என்றால் யாது என வினவப்பட்டபோது 'சஹர்' செய்தல் என பதிலிறுத்தனர். எஞ்சிய நாட்களில் எங்களுடன் சேர்ந்து தொழவில்லை'

நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா:பாடம் இரவில் நின்று வணங்குதல்.

மேற்கண்ட ஹதீதிலிருந்து

1. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தராவீஹை இரவின் முதற்பகுதியிலேயே ஆரம்பித்துள்ளார்கள்.

2. முதல் இரவு இரவின் மூன்றில் இரண்டு பகுதிவரை தொழுவித்துள்ளார்கள்.

3.இரண்டாவது இரவு இரவில் அரைப்பகுதி வரை தொழுவித்துள்ளார்கள்.

4. மூன்றாவது இரவு பூராவும் தொழுவித்தார்கள்.

தராவீஹை இரவின் ஆரம்பத்திலேயே தொழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

ஆனால் தஹஜ்ஜுத் தொழுகை தொடர்பான நடைமுறை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருப்பதையே காண முடிகிறது.

1. இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழவில்லை.
2.தஹஜ்ஜுத்துக்காக இரவு பூராவும் விழித்திருக்கவில்லை.
3. இரவின் முதற்பகுதியில் உறங்கி, இறுதிப் பகுதியில் தஹஜ்ஜுத் தொழுவார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கம் ஒரு ஹதீது: 'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே இரவில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தததாகவோ, சுப்ஹு வரை தொடர்ச்சியாக தொழுது கொண்டே இருந்ததாகவோ ரமலான் அல்லாத காலங்களில் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்' –நூல்: ஸஹீஹ் முஸ்லிம் பாடம் வித்று.

(இங்கு குறிப்பிடப்படும் தொழுகை தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் ஒரு இரவு முழுவதும் தராவீஹ் தொழுதது பற்றிய ஹதீது முன்னே காட்டப்பட்டுள்ளது)

இதிலிருந்து தஹஜ்ஜுத்தும், தராவீஹும் வேறுவேறானவை என்று தெளிவாகிவிட்டது.

ஆரம்பத்தில் சுருக்கமாக தராவீஹ் என்றால் என்ன? தஹஜ்ஜுத் என்றால் என்ன? அதன் நேரங்கள்
எப்பொழுது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தராவீஹை எட்டு ரக்அத்துகள் என்று கூறுபவர்களின் அறியாமை விளங்க வரும். அதற்காகவே மேற்கண்ட ஆதாரங்கள் விரிவஞ்சி சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்று கூறப்படுவதற்கு காட்டப்படும் ஆதாரம் தராவீஹை பற்றியது அல்ல:
இமாம்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறுவோர் தராவீஹ் எட்டே ரக்அத்துதான் என்று நிரூபிக்க எடுத்து வைக்கிற ஆதாரங்களில் மிகப் பெரிய ஆதாரமாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீதை ஆராய்வோம்:

'கான ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லாயஸீதுஃபீ ரமலான வலா ஃபீ ஙைரிஹி அலா இஹ்தா அஷ்ரதரக அதன்'-ரமலானிலம் ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினொன்று ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை'.

நூல்: புகாரி, முஸ்லிம்.

இந்த 11 ரக்அத்தில் 3 வித்று, 8 ரக்அத்துகள் ரமலானில் ஜமாஅத்தாக தொழப்படும் தராவீஹ் தொழுகை. ரமலான் அல்லாத காலங்களில் தஹஜ்ஜுத்து தொழுகையே அதுவாகும் என்று வாதிடுகின்றனர்.
ஆனால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் தராவீஹை இரவின் ஆரம்பத்திலேயேதான் தொழுதுள்ளார்கள். சில சமயம் இரவின் நடுப்பகுதியிலும், சில சமயம் இரவின் இறுதியிலும் தொழுகையை முடித்துள்ளார்கள். எப்போது தொழுகை ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டியது. தொழுகை முடிந்த நேரத்தை அல்ல.

அதேபோல் தஹஜ்ஜத்தை ஒருபோதும் இரவின் ஆரம்பத்தில் தொழவில்லை. இரவின் இறுதிப் பகுதியில்தான் தொழுதுள்ளார்கள். ஆகவே ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது தராவீஹ் பற்றியது அல்ல. தஹஜ்ஜுத் பற்றியதுதான் என்பது தெளிவு.

மேலும் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 11 ரக்அத்துகளைவிட அதிகமாக தொழுததில்லை என்று அன்னை ஆயிஷா நாயகி அறிவிக்கும் ஹதீதை இந்த பிதற்றல்வாதிகள் ஆதாரமாக காட்ட முன்வருகின்றனர்.

ஆனால் இந்த ஹதீதின் இறுதிப் பகுதியில், 'யாரஸூலல்லாஹ்! வித்று தொழுமுன் தூங்கிவிடுகிறீர்கள்! என்று அன்னையவர்கள் வினவ, 'ஆயிஷா! என் விழிகள் தூங்கும். ஆயின் உள்ளம் உறங்காது' என்று பதில் கூறுகின்றனர்.

எனவே இந்த 11 ரக்அத் தொழுகை தராவீஹ் அல்ல! தஹஜ்ஜுத்தும் வித்றும் தான் என்று ஊர்ஜிதமாகிறது. துயில் களைந்தபின்னர் தொழுவது தஹஜ்ஜுத்துதான். தராவீஹ் அல்ல. ஹதீஸின் இறுதிப் பகுதி இதைத் தெளிவாக விளக்குகிறது.

ஷெய்குனா ஷாஹ் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது பதாவா அஸீஸிய்யாவில் 'ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 11 ரகஅத் ஹதீஸ் தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் தஹஜ்ஜுத் தொழுகை ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் தொழுவதாகும். இதன் எண்ணிக்கை வித்றோடு பெரும்பாலும் பதினொன்றை எட்டி விடும்!' என்று கூறுகின்றனர்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானீ, இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இந்த 11 ரக்அத்துகளை தஹஜ்ஜுத் என்றே சொல்கின்றனர்.

மேற்படி ஹதீஸ் தொடரில்…. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்அத்துகளை விட அதிகம் தொழுததில்லை. 4 ரக்அத்துகள் தொழுதார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! (அதாவது நீண்ட நேரம் கிராஅத் ஓதி, அமைதியாக தொழுதனர்) என்றும் காணப்படுகிறது.இதற்கு நவவி இமாம் அவர்கள் , 'ருக்கூவையும், சுஜூதையும் அதிகப்படுத்துவதை விட கிராஅத்தையும் நிலையையும் நீளமாக்குவது மேல்' என்ற இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மத்ஹபுக்கு இந்த ஹதீஸில் ஆதாரமிருக்கிறது ஒரு பிரிவினர் ருக்கூவையும், சஜூதையும் அதிகமாக்குவதே மேல் எனவும் வேறொரு பிரிவினர் இரவில் நிலையை நீட்டுவதும், பகலில் சுஜூதையும், ருக்கூவையும் நீட்டுவதும் சிறப்பு என்றும் கூறுகின்றனர். இது குறித்து விரிவான விளக்கத்தை விரிவான விளக்கத்தை ஆதாரங்களோடு ஸிபத்துஸ் ஸலாத் (தொழுகை பற்றிய) பாடத்தில் கூறியுள்ளேன்' என்று கூறியுள்ளார்கள். – ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 254.

தராவீஹ் பற்றி மத்ஹப் இமாம்கள்:

1. அபு யூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தராவீஹ்வைப் பற்றிக் கேட்டகின்றார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததைக் குறித்தும் வினவுகின்றார்கள். அதற்கு இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'தராவீஹ் சுன்னத் முஅக்கதா. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புறத்திலிருந்து தன் சுய விருப்பத்தின் படி (ஜமாஅத்தாக) ஆக்கவில்லை. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து பெற்ற ஆதாரங்களின் படி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜமாஅத்தை) சுன்னத்தாக்கினார்கள். உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஜமாஅத்தாக தொழச் செய்தார்கள். அநடத ஜமாஅத்தில் உதுமான், அலி, இப்னு மஸ்வூது, தல்ஹா, அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஸுபைர், முஆது, உபை மற்றும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் எவரும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை எதிர்க்கவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டார்கள். அதனையே அவர்கள் ஏவினார்கள்.'

-பதாவா ஸுபுக்கி பாகம் 1 பக்கம் 166

இஃலா உஸ்ஸுனன் பாகம் 7 பக்கம் 70.

இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கைப் பற்றி இங்கு குறிப்பிடப்பவில்லை. ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 20 ரக்அத் தராவீஹ் தொழுகை தொழ ஏவியது மற்றைய ஹதீதுகளிலிருந்து தெரியவருகிறது. எனவே அபூஹனீபா அவர்களின் மத்ஹப் பிரகாரமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 ரக்அத்துகள்தான் என்று தெளிவாகிறது.

2. இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிலுள்ளவர்கள் 39 ரக்அத்துகள் தொழுவதைப் பார்த்தேன். எனக்கு 20 ரக்அத்துகள் மிக விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அவ்வாறுதான் ரிவாயத்து கிடைத்திருக்கிறது. அவ்வாறே மக்காவிலுள்ளவர்களும் 20 ரக்அத்துகள் தொழுகின்றனர். 3 ரக்அத் வித்ரும் தொழுகின்றனர் என்று கூறுகின்றனர். – கிதாபுல் உம்மு

பாகம் 1, பக்கம் 142.

ரமலான் மாத தராவீஹின் அடிப்படை:

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமலான் மாதத்தில்) ஒரு நாளிரவு தங்கள் இல்லத்திலிருந்து வெளியாகி மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். அப்போது சில சஹாபாக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மறுநாள் காலையில் இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். (இரண்டாம் நாளிரவு) இன்னும் அதிகமான மக்கள் கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து கெதொழுதனர். மறுநாள் காலையிலும் மக்கள் இதுபற்றி பேசிக் கொண்டனர். மூன்றாம் நாளிரவு இன்னும் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அன்றும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அன்னாரைப் பின்பற்றி ஸஹாபாக்கள் தொழுதார்கள்.

நான்காம் நாளிரவு மஸ்ஜித் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூடிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமள் அவர்கள் மஸ்ஜிதிற்கு வரவில்லை. சுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். பஜ்ரு தொழுது முடிந்தவுடன் சஹாபாக்களை நோக்கி உட்கார்ந்து, அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தபின்'உங்களுடைய நிலை எனக்கு மறைந்ததாக இல்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதனை நீங்கள் நிறைவேற்ற முடியாமல் ஆகிவிடுவீர்களோ என்றுதான் நான் பயந்தேன்' என்று கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 269.

ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தொழும் விஷயத்தில் (மக்களுக்கு) ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனை (பர்ளைப் போன்று) கட்டாயமாகத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. மேலும், எவரேனும் ஒருவர் ஈமான் கொண்டவராக, நன்மையைக் கருதியவராக ரமலான் மாதத்தில் தொழுவாரானால் அவருடைய முந்திய சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்;டுவிடும்' என்றும் கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் அன்னார் இவ்வுலகை விட்டும் பிரிந்து  சென்று விட்டார்கள். பிறகு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப ஆட்சி காலத்திலும் இந்நிலை நீடித்து வந்தது.

நூல்: (முஸ்லிம்) மிஷ்காத் 114.

மேற்கூறிய ஹதீதுகளிலிருந்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் இரவு காலங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டியதும், ஜமாஅத்துடன் தொழுததும் தெரியவருகிறது. இதனை அடிப்படையாக வைத்துதான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழும்படி ஆக்கினார்கள்.

தராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதற்கான ஆதாரங்கள்:

1. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். –அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
இந்த ஹதீதை இப்னு ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துப்னு ஹுமைத் தங்களுடைய முஸ்னதிலும், தப்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கபீரிலும், பைஹகீ அவர்கள் தங்களுடைய ஸுனனிலும், பகவீ அவர்கள் தங்களுடைய முஃஜமிலும் பதிவு செய்துள்ளனர்.

2.நாங்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் 20 ரக்அத்துகள் தொழுவோம். மேலும் வித்ரும் தொழுவோம். அறிவிப்பவர் லாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மஃரிபாவில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். – ஷரஹுன்னிகாயா பாகம் 1, பக்கம் 102.
3. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: யஸீத் இப்னு ரூமான்.

-முஅத்தா இமாம் மாலிக், ஷரஹுன் னிகாயா பாகம் 1 பக்கம் 104, ஸுனன் பைஹகீ பாகம் 1 பக்கம் 496-தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் முஅத்தாலில் மாலிக் பாகம் 1 ப்பம் 138.

4. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஸாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

– பத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 157-ஐனி பாகம் 11 பக்கம் 127 ஜாமிஉர் ரிழ்வி பாகம் 3 பக்கம் 598.

5. உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமலான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டுவிட்டுச் சொன்னார்கள், 'மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை.நீங்கள் (உபை இப்னு கஃபு) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.' இது கேட்ட உபை இப்னு கஃபு சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே!' ஆம்! அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே!' என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக இப்னு கஃபு தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: உபை இப்னு கஃபு நூல்: கன்ஸுல் உம்மால் பாகம் 4, பக்கம் 284 ஹதீது எண்: 5787.

6. ரமலானில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை  மக்களுக்கு 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை வைக்கும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ அப்துற் றஹ்மான் ஸலமீ. நூல்: ஸுனன் பைஹகீ.

7. அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 5 தர்வீஹ்களில் தொழுகை நடத்தும்படி ஒரு மனிதரைப் பணித்தார்கள். – அறிவிப்பவர்: அபுல் ஹஸனாஸ். நூல்: பைஹகீ பாகம்-2 பக்கம் 497, கன்ஸுல் உம்மால்
பாகம் 7 பக்கம் 284 ஹதீது எண் 5790.

விதண்டாவதத்திற்கு விளக்கம்:

தராவீஹ் 20 ரக்அத்துகள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீது 'மர்பூஃ' என இப்னு அபீஷைபா முஸன்னிபில் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இப்றாஹீம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர். ஆனால் ஒரேடியாக ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு இவர் பலவீனமானவர் அல்ல. ஒரு பலவீனமான ஹதீஸ் ஆதாராப்பூர்வமான மற்றொரு ஹதீதுக்கு எதிராக வரும்போது பலவீனமான ஹதீது விழுந்து(ஸாகித்) விடும் என்பது உண்மையே! ஆனால் இப்னு அபீ ஷைபா அறிவிக்கும் இந்த ஹதீது எந்தவொரு ஸஹீஹான ஹதீதிற்கும் எதிரானது அல்ல. இந்த ஹதீது வேறு எதாவது ஸஹீஹான ஹதீதிற்கு முரணாக அமைந்திருப்பின் நிச்சயமாக விழுந்து விடும். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீதுக்கு எதிராக உள்ளது என எண்ணுவது வெறும் ஊகமே தவிர வேறில்லை. எதாhத்தத்தில் முரணானது அல்ல.

மர்பூஃ ஆன பலவீனமான ஒரு ஹதீது நபிமணித் தோழர்களின் செயல்கள் மூலம் உறுதி செய்யப்படும் போது அந்த பலவீனமான ஹதீது ஆதாரமாக எடுக்கத் தகுதிபெற்று விடுகிறது. பைஹகீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமான ஸனதுடன் ஸஹாபாக்கள் தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழுதனர் என்று பதிவு செய்துள்ளார்கள்.  அநேக நபிமணித் தோழர்கபள் மூலம் இவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன. நாற்பெரும் இமாம்களும் மேற்படி ஸஹாபாக்களின் கருத்தையே பின்பற்றுகின்றனர் என்று ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது பதாவா அஸீஸிய்யாவில் பாகம் 1 பக்கம் 111, 119 ல் கூறுகிறார்கள்.

2. இருபது ரக்அத்துகள் குறித்து அறிவிக்கப்படும் ஹதீதுகள் 11 ரக்அத்துகள் குறித்து வரும் ஹதீதுக்கு முரணாக அமைகின்றது என்ற வாதம் அற்பத்தனமானது.

அபூஸல்மா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம், உம்முல் முஃமினீன் அவர்களே! ரமலானில் அண்ணலாரின் (தஹஜ்ஜுத் அல்லது வித்று) தொழுகை எவ்வாறிருந்தது.? அதாவது ரமலானில் ரமலான் அல்லாத நாட்களை விட அதிகமாக தொழுவார்களா? அல்லது இரண்டு காலங்களிலும் சமமாகத் தொழுவார்களா?

இதற்கு 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்தை விட அதிகமாகத் தொழுவதில்லை' என விடையிறுத்தனர்.

இந்த விடையிலேயே அது தஹஜ்ஜுத் அல்லது வித்ரு தொழுகை பற்றியது என்பது தெளிவாகிறது. ஏனெனில் 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும்' என்று விடை கிடைத்திருப்பது ரமலான் அல்லாத காலங்களில் தொழப்படாத தராவீஹ் தொழுகையைப் பற்றி குறிப்பிடுவதாக இருக்காது. இருக்கவும் முடியாது.
மேலும் அன்னையவர்கள் அறிவிக்கும் அதே ஹதீதின் இறுதிப்பகுதியில், 'வித்ரு தொழுவதற்கு முன்னர் தூங்கி விடுவார்களா?' நாயகமே! என வரும் வினா தூங்கிய பின் தொழப்படும் தொழுகை(தஹஜ்ஜுத்தைப்) யைப் பற்றிதானே தவிர தராவீஹைப் பற்றியல்ல என்று உறுதிப்படுத்துகிறது.

மேலும் இந்த ஹதீஸ் ரமலான் பற்றிய தலைப்புடைய பாடத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், இது தராவீஹ் தொழுகையைத்தான் குறிக்கும் என்று குறிப்பிடுகின்றனர் நவீனவாதிகள். கேள்வி ரமலானைப் பற்றி இருப்பதால் இதை ரமலான் பற்றிய பாடத்தில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதே புகாரியில் கியாமுல் லைல் (இரவுத் தொழுகை) பாடத்திலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.முஅத்தா மாலிக், இப்னுமாஜா, நஸாயீ போன்ற ஏனைய ஹதீது கிரந்தங்களிலும் இரவுத் தொழுகை பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. மேலும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு 4+3, 61+3, 8+3,10+3 தொழுவர். 13 ரக்அத்தைவிட அதிகமாகத் தொழவில்லை. 7 ரக்அத்தை விட குறைவாகத் தொழவில்லை. நான் கண்டவைகளில் மிகவும் ஸஹீஹானது இதுதான் என்று அன்னைய ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பு (நூல்: பத்ஹுல் பாரி பாகம் 3, பக்கம் 16) நமக்கு 11 ரக்அத் அறிவிப்பு தராவீஹ் அல்ல என்று உறுதியாக எடுத்துக் காட்டுகிறது.

ஸஹாபாக்களை பின்பற்றுவதின் அவசியம்:

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (ஈமான் கொள்வதில்) முதன்மையாக முந்திக் கொண்டவர்கள், இன்னும் நற்செயல்களைக் கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைப் பற்றி அல்லாஹ் திருப்தி கொண்டுவிட்டான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி கொண்டு விட்டனர். இவர்களுக்காக கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை தயார் செய்து வைத்துள்ளான். அதில் அவர்க் நிரந்தமாக இருப்பார்கள். அது மகத்தான வெற்றியாகும். –சூரத்துத் தவ்பா 9:100

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள். அவருடன் இருப்பவர்கள் காபிர்களின் மீது கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் பாசமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ருகூவு செய்பவர்களாகவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்கள்.(அதன் மூலம்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் கருணையையும் தேடுகின்றனர். அவர்களுடைய அடையாளம் சுஜூது செய்வதினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும். இது தவ்ராத் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுடைய தன்மைகளாகும். இன்ஜீல் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுக்குரிய உதாரணமாகிறது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் நாற்றை வெளியாக்கி, பின் அது உறுதியாகி தடிப்பாகிறது. விவசாயிகள் வியப்படையும் விதத்தில் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு காபிர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணம் கூறுகிறான்) அவர்களிலிருந்து ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

– (ஸூரத்துல் பத்ஹ்) 48:29.

இதேமாதிரி ஸஹாபாக்களின் சிறப்புக்களைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள ஹதீதுகள் எண்ணற்ற இருக்கின்றன. அவர்களில் சில:

அப்துல்லாஹ் இப்னு முஙப்ஃல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது,' என்னுடைய ஸஹாபாக்களின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். எனக்குப் பின் அவர்களை நீங்கள் குறை கூறும் பொருட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எவர் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிப்பதின் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். எவர் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுப்பதின் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். இன்னும், எவர் அவர்களுக்குத் துன்பம் தருகிறாரோ அவர் எனக்குத் துன்பம் தந்து விட்டார். எவர் எனக்குத் துன்பம் தந்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு துன்பம் தந்து விட்டார். அல்லாஹ்வுக்குத் துன்பம் தந்தவரை அவன் விரைவில் தண்டனையைக் கொண்டு பிடித்திடுவான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி-மிஷ்காத் 554.

என்னுடைய ஸஹாபாக்களை திட்டுபவர்களை நீஞ்கள் கண்டால், 'உங்களுடைய தீமைக்காக உங்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று கூறுங்கள்' என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி-மிஷ்காத் 554.

நான் உங்களுக்கு மத்தியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்குத் தெரியாது.ஆகையால் எனக்குப் பின் அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உமர் ரலியல்லாஹு அன்ஹு இருவரையும் பின்பற்றுங்கள் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் 560.

உர்வத்துல் கிந்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அபூ நுய்;ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, எனக்குப் பின்னால் பல புதிய விஷயங்கள் தோற்றுவிக்கப்படும். அவற்றில் எனக்கு மிகவும் விருப்பமானது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்படுத்துகின்ற விஷயத்தை நீங்கள் பற்றி பிடிப்பதாகும்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – நூல்: அல்ஜஸுல்
மஸாலிக் பாகம் 1, பக்கம் 397.

அல்லாஹுத்தஆலா சத்தியத்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவின் மீதும் அன்னாரின் இதயத்திலும் அமைத்து வைத்துள்ளான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் பக்கம் 557.

இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த ஸஹாபாக்களை மதித்து கண்ணியப்படுத்துவதும் அவர்களைப் பின்பற்றுவதும் நமது கட்டாயக் கடமையாகிறது. அவர்களை வெறுப்பவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெறுத்தவராவார்.

கண்ணியமிக்க ஸஹாபாக்களில் சிறப்பு வாய்ந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி அமைத்து தந்த ரமலான் மாதத்தின் 'தராவீஹ்' எனும் தொழுகையை ஜமாஅத்துடன் 20 ரக்அத்துகள் தொழுது மேலதிகப் பலன்களை பெறுவோமாக! அதற்கு அல்லாஹ் துணைபுரிவானாக! ஆமீன்.

முற்றும்.