ஸுஜூது பற்றிய பத்வா-Sujud Fatwa
By Sufi Manzil
கண்ணியமும் மேன்மையும் தங்கிய மத்ரஸா முப்தி சாகிப் அவர்களுடைய உயர் சமூகத்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
கீழ் கையெழுத்திட்டுள்ள எங்களது ஐயங்களுக்கு தயை கூர்ந்து தெளிவான மார்க்கத் தீர்ப்பு (பத்வா) தரும்படி மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். ஸுஜூது என்றால் என்ன? ஸுஜூது எத்தனை வகைப்படும்'? உயிருள்ள மனிதர் (ஷெய்குமார்கள், பெற்றோர், உஸ்தாதுமார்கள்) மேலும் அவ்லியாக்களின் கப்ருகளுக்கு ஒரு மனிதன் ஸுஜூது செய்தால் அந்த மனிதனுடைய நிலை என்ன? சூரியன், சந்திரன் விக்கிரகங்கள் முதலியவற்றிற்கு ஸுஜூது செய்தால் அந்த மனிதனுடைய நிலை என்ன? அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியைத் தந்தருள்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
இங்ஙனம்,
ஏ.கே. பக்கீர் முஹம்மது,
எம்.ஏ. கரீமுல் ஜீலி,
அ. நசீர் அஹமது,
எம். அப்துஸ் ஸமத்,
எம்.ஐ.எம். ஜஃபர் சாதிக்,
அ.கா.மு. மீராசாகிபு,
பி.எம். செய்தகமது அலி.
விடை:-
நெற்றியை தரையில் வைப்பதற்கு ஸுஜூது என்று சொல்லப்படும். ஸுஜூது இரண்டு வகை. 1. வணக்கத்திற்காக 2. மரியாதை செய்வதற்காக. 2வது வகை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அமரர்களை அல்லாஹ் ஸஜ்தாச் செய்யச் சொன்னது போல (பின்னர் இம்முறை ஹராமாக்கப்பட்டு விட்டது)
1வது வகை அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவருக்கு ஸஜ்தாச் செய்வது. அல்லாஹ்வுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவருக்கு வணக்கம் செய்யும் முறையில் ஸஜ்தா செய்வது குப்ராகும்.
அல்லாஹ்வையன்றி மரியாதையாக மற்றவருக்கு சஜ்தா செய்வது ஹராமாகும். (உதாரணமாக ஷைகு, தாய், தந்தை, உஸ்தாது ஆகியோருக்கும், கப்ருகளு;ககும் சஜ்தா செய்வது ஹராமாகும்)
எனவே மனிதன் மனிதனுக்கு மரியாதைச் செய்யும் வகையில் ஸஜ்தாச் செய்தவன் பாவியாவான். ஏனெனில் இவன் பெரும் பாவத்தைச் செய்தவனாவான். எனவே அவன் தௌபாச் செய்வது அவன் மீது கடமையாகும்.
வணங்கும் முறையில் இறைவனுக்கு இணை வைக்கும் முறையில் மனிதருக்கோ சூரியன், சந்திரனுக்கோ, விக்கிரகங்களுக்கோ அல்லது மற்றவைகளுக்கோ சஜ்தாச் செய்பவன் காபிராவான். எனவே இன்னொரு தடவை புதிதாகக் கலிமா சொல்லி ஈமான் கொள்வதும், தௌபாச் செய்வதும் கட்டாயம் இருக்கிறது. அல்லாஹ் அஃலம்.
ஒப்பம்
அப்துல் வஹ்ஹாப் முப்தி அபல்லாஹு அன்ஹு
மத்ரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்.
நன்றி: 1976 மார்ச் ஹுஜ்ஜத் மாத இதழ்.