எளிமையான வாழ்க்கை!-Simple Life

எளிமையான வாழ்க்கை!-Simple Life

By Sufi Manzil 0 Comment June 7, 2011

Print Friendly, PDF & Email

நமது ஷெய்கு நாயகம் அவர்கள் மிகவும் எளிமையாக காட்சியளிப்பார்கள். துருக்கி தொப்பி, வேஷ்டி, ஜிப்பா அணிந்து பெரும்பாலும் காணப்படுவார்கள். தனது படுக்கையை பாயிலே கழித்தார்கள். ஆடம்பரமான வாழ்க்கையோ, பகட்டான வாழ்க்கையோ அவர்கள் தேர்ந்தெடுக்க வில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்ந்தெடுத்த எளிமையான வாழ்க்கையையே இவர்களும் வாழ்ந்தார்கள்.  தன்னைக் காண வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களை நன்கு உபசரிப்பார்கள். அவர்களுக்கு தேவையான மார்க்க விளக்கங்களை பொறுமையாக அளிப்பார்கள். யாரிடமும் கோபப்பட்டதே இல்லை. தன்னைப் பற்றி விமர்சனம் செய்யும்போதும் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்;. ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவாக, ஏளனமாக பேசினாலோ அல்லது அதை ஆதரித்தாலோ அவர்களுக்கு மிகக் கோபமேற்பட்டு முகங்கள் கோபத்தால் மாறிவிடும். அதற்கு தகுந்த பதிலைக் கொடுத்து அவர்களின் வாயை அடைத்து விடுவார்கள்.

யாரையும் ஏளனமாக பேசியதும், எண்ணியதும் இல்லை. எந்த விழாவிற்காக அழைத்தாலும் அவர்கள் ஏழை, பணக்காரன் என்று பாகுபாடில்லாமல் கலந்து கொள்வார்கள். வீடுகளுக்கு அழைத்தால் மௌலிது ஓத செல்வார்கள். ஓதிப் பார்க்கவும் அழைத்தால் அங்கும் செல்வார்கள். அதற்காக கூலி என்று எதையும் கேட்டு வாங்குவதில்லை.

வெயியூர்களில் தங்களது பிள்ளைகளை (முரீதீன்களை) சந்திக்கச் சென்று அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு விளக்கம் சொல்லி விளங்க வைப்பார்கள். வாகனங்கள் இன்று கூட செல்வதற்கு சிரமமாக இருக்கும் ஊர்களுக்கும் சென்று தமது முரீதீன்களை அன்றே சந்திக்க சென்றிருக்கிறார்கள். இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் பூலாங்கால் என்ற ஊரில் தமது முரீதீன்களை சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். அங்கு இன்று கூட சரிவர பேருந்து வசதிகள் ஒழுங்காக செய்யப்படவில்லை. இதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது. ஷெய்குனா அவர்களின் தன்னலமற்ற சேவை பிரமிக்க வைக்கிறது.

காயல்பட்டணம் ஊருக்கு வருகை தந்தால், தமது முரீதும் நண்பருமான ஏ.கே.மீரா சாஹிப் ரஹிமஹுல்லாஹு அவர்களையே எங்கும் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்களிடமே தங்கள் தனிப்பட்ட விசயங்களை அலவலாவுவார்கள். ஊரில் திக்ரு மஜ்லிஸ் வைத்தால் ஆங்காங்கே மக்கள் ஜதுபு வந்து உருளுவார்கள். எனவே அவர்கள் திக்ரு மஜ்லிஸுகளை திறந்த மைதானங்களில் வைத்தார்கள். பின்பு ஸூபி மன்ஸில் அமைந்த பிறகு அங்கு நடத்தப்பட்டது. ஷெய்குனா அவர்கள் ஹைதராபாத் ஸூபி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கிலாபத் வாங்கி வந்தபிறகு மஹ்லறாவில் நடைபெற்ற திக்ரு மஜ்லிஸில் கலந்து கொண்டார்கள். அந்த மஜ்லிஸில் கொமஞ்சான் தீ சட்டியை மஜ்லிஸ் நடுவில் வைப்பதுதான் வழக்கமாக இருந்தது. இவர்கள் திக்ரு செய்யும்போது ஜதுபு வந்து உருண்டார்கள். அச்சமயம் அந்த சட்டி அவர்கள் உடையின் மேல் பட்டு தீ பற்றிக் கொண்டது. இருப்பவர்கள் அதை அணைத்தார்கள். அன்றுமுதல் அந்த தீ சட்டி மஜ்லிஸ் நடுவே வைக்கப்படுவதில்லை. ஒரு வீட்டில் திக்ரு செய்து கொண்டிருக்கும்போது ஷெய்குனா அவர்கள் ஜதுபில் சுவரினுள் சென்றுக் கொண்டிருந்தார்கள். இதைப் பக்கத்தில் இருந்து பார்த்து பயந்த ஒரு ஆலிம் அவர்களை கையைப் பிடித்து இழுத்து விட்;டார்.

மஹ்லறாவிற்கு நிலம் வக்பு செய்ய முன்னிலையில் இருந்தவர்கள் ஷெய்குனா அவர்களின் தந்தையார் அவர்களே! மஹ்லறாவை அவர்களே நிர்வகித்தும் வந்தார்கள். நிர்வாகம் செய்வதினால் ஆன்மீக விஷயங்கள் தடைபட்டுக் கொண்டிருந்தன. எனவே அதை கைவிட்டு ஒரு குழுவிடம் ஒப்படைத்தார்கள். மஹ்லறாவில் புதிதாக கட்டிடம் கட்டி திறப்பு விழா நடத்தப்படும் சமயம் ஷெய்குனா அவர்கள் இலங்கையில் இருந்தார்கள். அதுசமயம் மஹ்லறா நிர்வாக குழுவிலிருந்த வாவு சாகுல்ஹமீது ஹாஜி அவர்கள் இந்த கட்டிடத் திறப்புவிழா ஷெய்குனா அவர்களைக் கொண்டே  நடத்தப்பட வேண்டும்.  அவர்கள் ஊர்வரும் வரை பொறுத்திருந்து விழாவை தள்ளிப்போட வைத்தார்கள்.  அவர்கள் வந்ததன் பிறகே திறப்பு விழா நடைபெற்றது.

ஷெய்குனா அவர்கள் இந்தியா ஒரிசா மாநிலத்தில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த தர்பா அப்பா என்றழைக்கப்படும் மகான் அல்குத்பு ஸெய்யிது அப்துஷ்ஷகூர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து அளவளாவியிருக்கிறார்கள். அவர்களும் இவர்களைப் பற்றி மிகவும் சிலேகித்துக் கூறியிருக்கிறார்கள்.
காயல்பட்டணம் வருகை தந்த அல்லாமா அஃலா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவின் கலீபாவகிய முஜாஹிதே மில்லத் ஹபீபுர் ரஹ்மான்  ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்தித்து அளவளாவியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் பல்வேறு மகான்களையும் தரிசித்திருக்கிறார்கள்.

ஷெய்குனா அவர்களுடன் அன்னாரது கலீபா பூக்கோயா தங்கள் ஒரு சமயம் வெளியூர் சென்றிருந்தார்கள். அச்சமயம் ஒரு பள்ளியில் தொழ சென்றார்கள். தொழுது முடிந்ததும் ஒருவர் எழுந்து தப்லீக் இயக்கம் பற்றி மிகவும் பெருமையாகவும், நல்லதாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட ஷெய்குனா அவர்கள் எழுந்து அவரை இடைமறித்து, 'தப்லீக் இயக்கம் மிகவும் வழிகெட்டது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ள அவர்களை மிகவும் தரக்குறைவாக அதன் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே மக்கள் அதில் சேரக்கூடாது' என்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக யாருக்கும் பயப்படாமல் எடுத்துச் சொன்னார்கள். அங்கு சலசலப்பு ஏற்பட்டு பலர் ஷெய்குனா அவர்களிடம் விளக்கம் கேட்டு திருந்தினர்.

தமது சொந்த செலவிலேயே புத்தகங்கள் அடித்து விநியோகித்தார்கள். புத்தகங்களுக்குத் தேவையான பிளாக்குகள் (அரபி, உருது) செய்வதற்காக அக்காலத்தில் பம்பாய் சென்று அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து இருக்கிறார்கள்.

ஊரில் ஜும்ஆ பிரச்சனை ஏற்பட்டபோது, தைக்கா ஸாஹிபு அப்பா அவர்கள் கந்தூhயில் இவர்கள் கத்தம் ஓதுவதற்கு செல்வார்கள். மற்றவர்கள் தடுத்தும் இவர்கள் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுவார்கள்.

ஒருமுறை பயானில் 'நரகம் அழிந்து போகும்' என்று மிஷ்காத் மற்றும் இன்சானுல் காமில் ஆகிய நூல்களில் வரும் ஹதீதைக் கொண்டு பயான் பண்ணினார்கள். அச்சமயம் தாவூத்ஷா என்ற காதியானி தன் கொள்கையை பிரபலப்படுத்திக் கொண்டிருந்த நேரம். அவரும் அதே மாதிரி சொல்லியிருந்தார். எனவே ஷெய்குனா அவர்கள் காதியானி ஆகிவிட்டார்கள் (நவூதுபில்லாஹ்) என்று எதிர்ப்பாளர்கள் கூறத் துவங்கினார்கள். ஒரு சமயம் ஜாவியா மத்ரஸாவிற்கு தனியே அவர்கள் சென்று, நரகம் அழிந்து விடும் என்று தான் சொன்னதற்கு ஆதாரத்தை அந்த மத்ரஸாவின் நூலகத்திலிருந்தே புத்தகத்தை எடுத்துவரச் செய்து அதை விளக்கி காண்பித்து அவர்களின் வாயை அடைத்தார்கள். 

இலங்கை வந்த ஷெய்குனா அவர்கள் கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெரு சம்மான்கோட்டு பள்ளியில் இமாமத் வேலை பார்த்து வந்தார்கள். அப்பள்ளியில் அச்சமயம் ஜும்ஆ நடைபெறுவதில்லை. அங்கு மக்களுக்கு 'கீமியாயே சஆதத்' என்ற கஸ்ஸாலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய நூலை வாசித்து விளக்கம் சொல்லிவந்தார்கள். இதில் மக்கள் ஜதுபு வந்து ஆன்மீக படித்தரம் பெற்றார்கள். அந்த இமாமத் வேலையும் தமது ஆன்மீக, இஸ்லாமிய பணிக்கு இடைஞ்சலாக இருக்கவே அதைவிட்டு விட்டார்கள். ஊர் ஊராக சென்று சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்ட மிகவும் பாடுபட்டார்கள். அத்துடன் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி மக்களை உயர்படித்தரம் பெற வழிவகுத்தார்கள்.

தனியொரு ஆளாக தப்லீகு சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்துச் சென்று மக்களுக்கு அறபோதம் செய்வார்கள். அவர்கள் காலி வீதி வழியே புத்தகக் கட்டை எடுத்துக் கொண்டு நடந்தே செல்வார்கள். எதிர்படும் மக்களிடம் வஹ்ஹாபிகளின் விஷத்தைப் பற்றி விளக்கி சொல்வார்கள். இலங்கையில் விசேசங்களுக்கும், விழாக்களுக்கும் அழைக்க வருபவர்களை வரவேற்று உபசரிப்பார்கள். கார் அனுப்புகிறேன் என்று சொன்னால் நமக்கு கார் இருக்கிறது. (அதாவது பஸ் இருக்கிறது) அதிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்வார்கள். மிகப் பெரும்பான்மையாக அவர்கள் தாம் செல்லும் இடங்களுக்கு பஸ்களிலேயும், நடந்துமே சென்றிருக்கிறார்கள். ஏறாவூர் போன்ற கிழக்கு மாகாணங்களுக்கு ரயிலில் பயணம் செய்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் கந்தூரி, விழாக்களுக்கு திக்ரை இவர்கள் நடத்துவார்கள். பயானை அங்கிருக்கும் ஆலிம்களை பண்ண சொல்வார்கள்.
கொழும்பில் தமது ஊரைச் சார்ந்த ஒரு நிறுவனத்தில்தான் தங்கியிருந்தார்கள். ஊரில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, தாமாகவே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதன்பிறகு டூட்டி செய்யிது முஹம்மது ஹாஜி அவர்கள் வீட்டிலும் பின்பு சலீம் ஹாஜி (வெள்ளவத்தை) வீட்டிலும் தங்கினார்கள். சலீம் ஹாஜி வீட்டில் தோட்டத்தில் ஒரு அறையில்தான் தங்கியிருப்பார்கள்.

மூன்றாம் குறுக்குத் தெரு மேமன் பள்ளியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி வைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் சிலர் இதுபற்றி பிரச்சனை எழுப்பினார்கள். அச்சமயத்தில் திருமுடியைப் பற்றி சரியான ஆதாரங்கள், ஹதீதுகளோடு ஒரு கட்டுரை (தினகரன் நாளிதழில் வெளிவந்தது) எழுதி எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வாயை அடைத்தார்கள்.

அவர்களின் வபாத்திற்குப் பிறகு, அவர்களை அடக்கம் செய்த குப்பியாவத்தை மையவாடியில் அவர்களின் கப்றுஷரீபை (அல்லாஹ் அவர்களின் கப்ருஷரீபை மிகப்பிரகாசமான ஒளிமயமாக்குவானாக!) சுற்றி சுவர் கட்டும்போது, ஒருவரின் கனவில் வந்து, இந்த சுவர் கட்டும் இடத்தில் இன்ன பெண் இறைநேசர் அடங்கியிருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் கப்றின் மேல் சுவர் கட்டுகிறீர்கள். எனவே அந்த சுவரை தள்ளி கட்டுங்கள் என்று சொல்லி சென்றார்கள். அடுத்தநாள் அதைப் பார்க்கும்போது அவர்கள் சொன்னபிறகாரம் இருந்தது.