ஜும்ஆ நாளின் சிறப்புகள்

ஜும்ஆ நாளின் சிறப்புகள்

By Sufi Manzil 0 Comment August 26, 2011

சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி

'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்'

ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்'(ஆதாரம்: அஹ்மத்)
மற்றொரு அறிவிப்பில் ஜும்ஆ அரஃபா நாளைவிடவும், இரு பெருநாட்களை விடவும் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ 

ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

 

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

ஜும்ஆ என்ற சொல்லுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவதினால் இத் தொழுகைக்கு ஜும்ஆ தொழுகை என்றும், இதே நாளில் ஆதி நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்கள் துணைவியார் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அரஃபா பெருவெளியில் ஒன்று சேர்ந்ததினால் இந்நாளுக்கு ஜும்ஆ நாள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. இந்நாளில் அதிகமாக ரஹ்மத்தின் வாயில்கள் திறந்து விடப்படுவதாலும், இந்நாளில் அல்லாஹ்வின் மட்டில்லா அருட்கடாட்சங்கள் வழிந்தோடுவதாலும் இந்நாளை யவ்முல் மஜீது (அதிகம் நற்கூலி பெறும் நாள்) என வானவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே உரிய வணக்கமாகும்.

மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட இத் தொழுகை பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முன்பாக மதீனாவின் அருகிலுள்ள நகீவுல் கல்மாத் என்னும் சிற்றூரில் அஸ்அத் இப்னு ஜியாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாமாக நின்று ஜும்ஆ நடத்தினார்கள். ஜும்ஆ என்று முதன் முதலில் பெயர் சொல்லியது கஅபு இப்னு லுஅய் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்

'உங்களில் எவரும் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரீ

எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மௌனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்' (ஆதாரம்: அஹ்மத்)

கிழக்கு வெளுத்ததிலிருந்து ஜும்ஆவுக்குப் போகுமவரை எந்த நேரத்திலாவது குளிக்கலாம். அது சுன்னத்து முஅக்கதாவாகும். ஆனால் ஜும்ஆவுக்கு நெருக்கமான நேரத்தில் குளிப்பது ஏற்றமாகும். ஜும்ஆவுடைய குளிப்பு தவறிவிட்டால் அந்த நிய்யத்தைக் கொண்டு மறுபடி களா செய்வது சுன்னத்தாகும். தண்ணீரை உபயோகிக்க முடியாவிட்டால் மண்ணைக்கொண்டு தயம்மும் செய்வது சுன்னத்து.

ஹன்பலீ மத்ஹபில் ஜும்ஆவின் குளிப்பு வாஜிபாகும். அதில் தேய்த்துக் குளிப்பதை விட்டாலும் அதனைக் களாச் செய்வது அந்த மத்ஹபில் அவசியமாகும்.

'ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ

'ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

ஹாஷியா இக்னாஃ என்ற நூலில் எழுதப் பட்டுள்ள மிகப் பொருத்தமான நேரமாகிறது, கதீப் மிம்பரில் ஏறிய நேரத்திலிருந்து தொழு முடிக்கும் நேரம் வரையிலாகும். ஆகையால் கதீப் குத்பாவில் ஓதுகின்ற துஆவுக்கு உள்ளச்சத்துடன் மெதுவாக கைகளை உயர்த்தாமல் ஆமீன் கூறிக் கொள்ள வேண்டும்.

'ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்ததிலிருந்து மதியம் வரையிலுள்ள நேரத்தை ஆறு பகுதிகளாக பிரித்து அதன் முதல் பகுதியிலிருந்து இறுதி பகுதிவரைக்கும் ஜும்ஆவிற்கு வரும் நபர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

'ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

'மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.

இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.

ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்,

مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

 

'நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு,நூல்: அபூதாவூத்

ஜும்ஆவிற்கு செல்கிறவன் அழகிய உடையணிந்தும், நோன்பில்லாதவன் கண்ணுக்கு தோற்றாத மணம் பூசுவதும், தாடியை ஒதுக்கி முகவேலை செய்து மூக்கு, அக்குள் ஆகியவற்றின் முடிகளைக் களைந்து, நகம் வெட்டிக் கொள்வதும் சுன்னத்தாகும்.

தாடியை சரிபடுத்தி சீப்பைக் கொண்டு சீவுவதும், ஒற்றைப்படையாகக் கண்களுக்கு சுருமாக்ககோலால் சுருமா இடுவதும், தனக்குத் தகுதியான தலைப்பாகைக' கட்டுவதும், அதைப் பின் பக்கத்தில் தொங்கவிடுவதும் சுன்னத்தாகும்.

கதீபுக்கு அருகிலிருப்பதும், அவரைப் பார்ப்பதும் சுன்னத்து. ஒருவர் தான் உட்கார்ந்த இடத்தில் வேறொருவரை மாற்றி வைத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு மாறிச் செல்வது மக்ரூஹ். மனிதர்களை மிதித்துக் கொண்டு செல்வது ஹராம். தான் உட்காருவதற்காக மற்றொருவரை அவ்விடத்திலிருந்து எழுப்புவது ஹராம்.

ஜும்ஆவிற்கு போகும்போது தூரம் கூடுதலான வழியில் கண்ணியமான முறையில் காலால் நடந்து போய், பிறகு தூரம் குறைவான வழியில் திரும்பி வருவது சுன்னத்தாகும். ஆனால் நேரம் நெருக்கடியாக இருப்பின் சுன்னத்தல்ல.

ஜும்ஆவின் பலனை இழக்கும் செயல்கள்:

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

'அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

கதீபு மிம்பரில் உட்கார்ந்த பிறகு எந்தத் தொழுகையைத் தொழுவதும் மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஒருவர் தொழ ஆரம்பித்த பின் குத்பா துவக்கப்பட்டு விட்டால் விரைவாக  தொழுது முடிப்பது வாஜிபாகும்.

ஷாபிஈ மத்ஹபில் குத்பா ஓதும் போது ஒருவர் வந்தால் தஹிய்யத்துல் மஸ்ஜித் மட்டும் தொழுவது சுன்னத். அதை விரைவாக முடிப்பது வாஜிப்.

ஜும்ஆ நாளில் ஓத வேண்டியவைகள்:

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலியல்லாஹு அன்ஹு), நூல் : ஹாகிம்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்

ஜும்ஆ தொழுகை முடிந்து காலை மடக்கும் முன்பாக அல்லது யாரிடமும் பேசும் முன்பாக ஸூரத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஸூராக்கள் ஆகியவற்றை ஏழு முறை ஓதுவதும் அத்துடன் ஸலவாத்தை ஓதுவதும் சுன்னத்.

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 

அத்துடன் ஆயத்துல் குர்ஸி, குர்ஆனிலுள்ள அத்தியாயம் 3 வசனம் 18 யை ஓதுவது சுன்னத்தாகும்.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

 

அத்துடன் ஸூரத்துல் பகராவின் கடைசி ஆயத்துக்களை (2:285) கடைசி வரையிலும், ஸூரத்துல் காபிரூன் ஸூராவையும் ஓதுவது ஸுன்னத்.

ஈமான் பாதுகாப்பிற்காக ஜும்ஆ தொழுதபின் பின்வரும் இரண்டு பாடல்களையும் ஐந்து தடவை மனநெகிழ்வுடன் படிப்பது நல்லதென்று அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக பாஜூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

اِلٰهِيْ لَسْتُ لِلْفِرْدَوْسِ اَهْلًا ،

وَلَآ اَقْوٰى عَلٰى نَارِ الْجَحِيْمِ ،

فَهَبْلِيْ تَوْبَةً وَّاغْفِرْ ذُنُوْبِيْ ،

فَاِنَّكَ غَافِرْ الذَّنْبِ الْعَظِيْمِ

பொருள்: என்னுடைய இரட்சகனே! நான் பிர்'தவ்ஸ் என்னும் சொர்க்கத்திற்குத் தகுதியானவன் அல்லன், நரக நெருப்பின் மீது நான் சக்தி பெறவும் மாட்டேன்.

எனவே எனக்கு தவ்பா செய்யும் தன்மையை வழங்கி என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக! நிச்சயமாக நீ மிகப்பெரும் பாவத்தையும் மன்னிக்கிறவனாய் இருக்கிறாய்.

குத்பாவுடைய பாங்குக்குப் பின் ஜும்ஆ தொழுமுடியும் வரை வியாபாரம், தொழில் ஆகியவை செய்வது ஹராமாகும். அன்று ஜவால் ஆனபின் குத்பாவுடைய பாங்குக்கு முன் வியாபாரம் தொழில் செய்வது மக்ரூஹ்.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்தபின் ஆகுமான பிரயாணம் செய்வது ஹராம். ஆனால் இடைவழியில் ஜும்ஆ கிடைக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அல்லது வழித்தோழர்கள் அவனை விட்டுச் சென்று அதனால் சிரமம் ஏற்பட்டுவிடுமென்றிருந்தால் செல்வது ஹராமல்ல. வெள்ளிக்கிழமை இரவில் பிரயாணம் செய்வது மக்ரூஹ்.