உள்பள்ளியில் தூங்கலாமா?

உள்பள்ளியில் தூங்கலாமா?

By Sufi Manzil 0 Comment March 1, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: எங்கள் பள்ளியில் (குன்றத்தூர்) தப்லீக் ஜமாஅத்தினர்கள் உள் பள்ளியில் படுத்து உறங்குகிறார்கள். நஜீஸ் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கேட்டால், நாங்கள் இஃதிகாப் நிய்யத்தில் வருகிறோம். ஆகையால் உள்பள்ளியில்தான் தூங்க வேண்டும் என்கிறார்கள்.

வயதுக்கு வந்தவர்கள் உள் பள்ளியில் தூங்கலாமா? பத்வா ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்.

shahul hameed greentronix4@gmail.com

shaikmohamed
73b,lakshminagar,
kundrathur- chi 69

பதில்: ஒரு செயலை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த, சொன்ன, அங்கீகரித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஆய்வு செய்து நமது இமாம்கள் நமக்கு அதை பர்ளு, சுன்னத், மக்ரூஹ், முபாஹ், ஜாயிஸ் போன்றவைகளாக பகுத்து தந்திருக்கிறார்கள். அதனைப் பின்பற்றி நாம் அமல்கள் செய்து வருகிறோம்.

அந்த அடிப்படையில் பள்ளியில் படுத்து உறங்குவதும், இஃதிகாஃப் இருப்பதும் பற்றி நமது புகஹாக்கள் தெளிவுபட விவரித்திருக்கிறார்கள்.

முதலில் பள்ளிவாசல் என்பது எது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்குரிய சட்டதிட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி பார்ப்பதற்கு:http://sufimanzil.org/articles/shariya-law/masjid-laws

அடுத்து, பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்குரிய சட்டதிட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு பள்ளியில் படுத்து உறங்கலாமா? கூடாதா? உள் பள்ளியில் தொழுகைக்கு இடைஞ்சலாக பயான் பண்ணுவது கூடுமா? கூடாதா? என்பது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு தீர்ந்து தெளிவு பிறக்கும்.

இஃதிகாஃப்பின் சட்டதிட்டங்கள்:

இஃதிகாஃப்:

ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றப்படுகின்ற பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்குவதுதான் இஃதிகாஃப் எனப்படும்.

வகைகள்:

வாஜிபு: நேர்ச்சை செய்யப்பட்ட இஃதிகாப். கண்டிப்பான சுன்னத்து: ரமலான் மாத கடைசி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருப்பது.

சுன்னத்து: மேற்கூறப்பட்ட இரண்டு வகைகளையும் தவிர உள்ள இஃதிகாஃப். சிறிது நேரம் பள்ளியில் அதற்குரிய நிய்யத்துடன் தங்கினாலும் இஃதிகாஃப் ஏற்படும்.

பெண்கள் தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட அறையில் இஃதிகாப் இருப்பார்கள். நேர்ச்சை இஃதிகாப்பிற்கு மட்டும் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஃதிகாப்பை வீணாக்கும் காரியங்கள்:

1. காரணமின்றி பள்ளியை விட்டு வெளியாகுவது.
2. மாதவிடாய், பேறுகாலத் தொடக்கு ஏற்படுவது.
3. உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, இச்சையுடன் தொடுவது.

பள்ளியை விட்டும் வெளியேறுவதற்குரிய காரணங்கள்:

1. மலம் ஜலம், குளிப்பு போன்ற இயற்கையான காரணங்கள்(தேவையான நேரத்திற்கு மட்டும் தான் வெளியில் தங்க வேண்டும்.)
2.ஜும்ஆ போன்ற மார்க்க ரீதியான காரணங்கள்.
3. அந்த பள்ளியில் தங்கினால் தன்மீது அல்லது தன் பொருளின் மீது பயம் ஏற்படுவது.
பள்ளி இடிந்தாலும் உடனடியாக வேறு பள்ளிக்கு போகின்ற நிபந்தனையின் பேரில் வெளியாகலாம்.

இஃதிகாபின் மக்ரூஹ்கள்:

1. வியாபாரத்திற்காக பள்ளியில் வியாபார உடன்படிக்கை செய்வது.
2. வியாபாரப் பொருட்களை பள்ளியில் கொண்டு வருவது.
3. வாய்மூடி இருப்பது.

இஃதிகாபின் சுன்னத்துக்கள்:

1. நல்ல விசயத்தை பேசுவது.
2. இஃதிகாபிற்கு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது(மக்காவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதில் ஹராம், மதினாவில் தங்குபவர்களுக்கு மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் முகத்தஸில் அக்ஸா பள்ளி மற்றவர்களுக்கு ஜும்ஆ பள்ளி)
3. குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, பெருமானார் மீது ஸலவாத்து ஓதுவது. மார்க்கப் புத்தகங்களை படிப்பது.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் (அதுவும் இறுதியில்) தான் பர்ளான இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள்.

அதை விடுத்து தோணும் போதெல்லாம் நாங்கள் இஃதிகாஃப் நிய்யத் வைத்து வந்திருக்கிறோம். அதனால் பள்ளியில் படுத்துக் கொள்வோம், தூங்குவோம், ஸ்கலிதமானாலும் பரவாயில்லை, காற்றுப் பிரிந்தாலும் பரவாயில்லை என்று அடம்பிடிப்பது இஸ்லாமிய மார்க்கம் ஆகாது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு உகந்ததும் ஆகாது. அதே நேரம் பள்ளியின் ஒழுக்கங்களையும், சட்டத்திட்டங்களையும் மீறிய செயலும் ஆகும்.

அதேபோல் பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் போது மற்றவர்களின் தொழுகைக்கு இடையூறாக பயான் பண்ணுவதும், புத்தகங்கள் (தஃலீம்) சப்தமிட்டு வாசிப்பதும் ஹறாம் என்றும் ஷரீஅத் தெளிவாகக் கூறுகிறது. ஏனெனில் பள்ளிவாசல் என்பது தொழுகைக்கு உரியதுதான்.

இதனால்தான் நமது முன்னோர்களான பெரியோர்கள், பள்ளியைக் கட்டும் போது உள் பள்ளி, வெளிப் பள்ளி ( உள்பள்ளியை ஒட்டிய தாழ்வாரங்கள்) என்று பிரித்து வகைப்படுத்தினார்கள். இதனால் பள்ளிவாசல் கண்ணியமும், சட்டமும் காக்கப்பட்டது.

அதேபோல் பள்ளியில் தங்கிக் கொண்டு தேவையில்லாமல் மின்விசிறிஇ மின்சார விளக்கு போன்றவற்றை தங்கள் இஷ்டம் போல் எரியவிட்டு பள்ளிக்கு செலவு வைக்கிறார்கள். இது மார்க்கத்தில் கூடாத ஒன்றாகும்.

மேலும் உளு இல்லாமல் பள்ளிக்குள் நுழைந்தால் 'சுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹில் அலிய்யில் அழீம்' என்று நான்கு விடுத்தம்  ஓதுவது சுன்னத் என்றிருக்கும் போது, உள் பள்ளியில் தூங்குவதினால் ஒளு முறிவு ஏற்படுவதும், ஸ்கதலிதம் ஆவது ஏற்படுவதும் தெரியாமலிருக்கும் போது  உள் பள்ளியில் தூங்குவது கூடாது. விடிய விடிய உள்பள்ளியில் விழித்திருப்பாராயின் தங்கிக் கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் ஷரீஅத் சட்டதிட்டங்கள்படி உள்பள்ளியில் ரமலான் காலம் தவிர மற்ற காலங்களில் இஃதிகாஃப் நிய்யத் வைத்து தங்கி தூங்குவது கூடாது. அவர்களுக்கு பள்ளியின் ஹுக்முகளையும், கண்ணியத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்க வேண்டியது பள்ளியின் நிர்வாகிகளுக்கு கடமை. இந்த கடமையை செய்யத் தவறினால் அல்லாஹ்விடம் மறுமையில் பொறுப்புதாரியாக ஆக வேண்டி வரும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்களாக!. அல்லாஹ் மிக அறிந்தவன்.