Sah Ismail Sufi-ஷாஹ் இஸ்மாயில் ஸூபி
By Sufi Manzil
ஸெய்யிது இஸ்மாயில் ஸூபி மஜ்தூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு.
ஹிஜ்ரி 14ம் நூற்றாண்டில் ஹைதாரபாத்தில் வாழ்ந்த மஜ்தூபுகளுக்கெல்லாம் ஸுல்தானாக விளங்கிய முன்ஷி ஹஜ்ரத் ஸெய்யிது இஸ்மாயில் ஸூபி அவர்களின் தகப்பனார் அவர்கள் ஸிக்கந்தராபாத்தில் ஆங்கிலேயர்களுடைய பட்டாளங்கள் இருந்து வந்த சமயம் அந்த பட்டாளங்களின் கர்னலாக இருந்து வந்தார்கள். இவர்களின் பெயர் மௌலானா ஸெய்யிது இமாம் என்பதாகும்.
தங்களின் பிள்ளை மேலான நற்பாக்கியங்கள் அடைய வேண்டும் என்று நினைத்து, சிறு வயதிலேயே மெலானா ஷெய்குல் காமில் ஷாஹ் அப்துல் காதிர் ஸூபி ஸிக்கந்தராபாதி ரலியல்லாஹு அன்ஹு ( இவர்களின் கப்ரு ஷரீஃப் ஹைதராபாத்திலிருந்து ஏழாவது மைலில் உள்ள ஸிக்கந்தராபாத்தில் உள்ளது) அவர்களின் மடியில் வைத்து ஒப்படைத்து அவர்கள் பாதுகாப்பிலேயே விட்டுவிட்டார்கள். முன்ஷி ஹஜ்ரத் அவர்கள் தங்கள் ஷெய்கு அவர்கள் பராமரிப்பிலேயே வளர்ந்து சகலவிதமான வெளிரங்க, அகமியக் கல்விகளை கற்று சகல தரீகாக்களுடைய ஸில்ஸிலாவையும், கிலாபத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
மேலும், பெரிய மகானும் மஜ்தூபுமான ஹஜ்ரத் அப்துல்லாஹ் ஷாஹ் காமிட்டி ஷரீஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஜத்புடைய ஸில்ஸிலாவையும், பைஅத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
இவர்கள் இரவு முழுவதும் விழித்து இபாதத்து செய்பவர்களாக இருந்தார்கள். ஆரிபுல் ஹக்காகவும், ஞானப் பிரகாசமுடைய ஸூபியாகவும், கராமத்துடையவர்களாகவும், தங்களுடைய நாவால் எதைச் சொன்னாலும் அது உடனே பலித்துவிடும் தன்மையுடையவர்களாகவும், அகப்பார்வையுடையவர்களாகவும், ஒரே இடத்திலிருந்து அதே நேரத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவரக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.
ஹைதராபாத் நிஜாம் மன்னர், பிரதம மந்திரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்ஷி ஹஜ்ரத் அவர்களிடம் சென்று துஆ பெற்றுச் செல்பவர்களாயிருந்தனர். இவர்கள் மாதத்தில் 15 நாட்கள் ஜத்பியத்திலும், 15 நாட்கள் ஸுலூக்குடைய நிலையிலும் இருப்பார்கள்.
இவர்கள் 'ஆஸிப் ஜாஹ் ஸாதிஸ்' என்ற இடத்தில் இருந்தார்கள். பின்பு 'கோஷா மஹல் சாக்னாவாடி' என்ற இடத்திற்கு மாறி அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார்கள். அதன்பின் 'மஹல்லா லிங்கம் பள்ளி'யில் வீடு கட்டி குடியேறி கடைசி காலம்வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். எண்ணற்ற மக்களுக்கு பைஅத்தும், தங்களுக்குப் பின் தரீகாவுடைய தொடர்ச்சி இருந்து வர கலீபாக்களை நியமித்தும் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ஹஜ்ரத் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.
தங்களது 103 வது வயதில் சாதாரண வியாதி ஏற்பட்டு, முஹர்ரம் பிறை 13 வெள்ளிக்கிழமை இரவு ஸுப்ஹிற்குப் முன் மறைந்தர்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்று ஜும்ஆ தொழுகைக்கு முன் மக்கா மஸ்ஜிதில் ஜனாஸா தொழவைக்கப்பட்டு லிங்கம் பள்ளியில் உள்ள தர்ஹாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாதாமாதம் பிறை 13 அன்று தாஹா ஷரீஃபில் கந்தூரி நடைபெற்று வருகிறது. முஹர்ரம் மாதம் பிறை 13 அன்று பெரிய கந்தூரி நடைபெற்று வருகிறது. இவர்களின் அருகில் தூலன் பீஸாஹிபா என்ற ஹஜ்ரத் கதீஜா பேகம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் முன்ஷி ஹஜ்ரத் அவர்களிடம் பைஅத்து பெற்று பெரிய படித்தரங்களை பெற்று, ஹஜ்ரத் அவர்களின் ஊழியத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.