Sah Abdurraheem Sufi-ஷாஹ் அப்துர் ரஹீம் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு

Sah Abdurraheem Sufi-ஷாஹ் அப்துர் ரஹீம் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 11, 2010

ஷாஹ் அப்துர் ரஹீம் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு.

   நக்ஷபந்தி முஜத்திதி தரீகாவில் 27வது குருமகானாகவும், காதிரிய்யா ஆலிய்யா தரீகாவில் 34வது குருமகானாகவும், குருமகானாகவும் இவர்கள் வருகிறார்கள்.
 

     ஸெய்யிதினா ஹஜ்ரத் உமர் ரலியல்லா ஹு  அன்ஹு அவர்கள் வமிசவழியில் தோன்றிய ஷெய்கு ஷம்சுத்தீன் முஃப்தி அவர்கள் ருஹ்தாக் எனும் ஊரில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் உத்திரப் பிரதேசத்தில் 'புல்த்' எனும் ஊரில் குடியேறினர். இவர்களின் வமிசத்தில் உதித்த ஷெய்கு வஜ்{ஹத்தீன் சிறந்த சூஃபியாக விளங்கினார்கள். இவர்கள் இஸ்லாமிய படையில் சேர்ந்து வீரமரணம் எய்தினர். இவர்களின் மகனார் ஷெய்கு அப்துர் ரஹீம்  என்பவர்கள் சிறந்த மார்க்க அறிஞராகவும், மகானாகவும் விளங்கினார்கள்.
 
    ஓரிரவு இவர்கள் முஹம்மது ஹாதி ஹர்வீயின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு திரும்பும்போது, ஷைகு ஸஅதி ரலியல்லாஹுஅன்ஹுஅவர்கள் எழுதிய பாடல்களைப் படித்துக் கொண்டு வந்தார்கள். அதில் இறுதிக் கண்ணி மறந்துவிடவே, அவர்களின் வலப்புறத்தில் ஒருவர் திடீரெனத் தோன்றி அந்த பாடல்வரிகளை எடுத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது அவர்கள் அம்மனிதருக்கு தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களின் பெயரை அவர்கள் கேட்டபோது ஸஅதி என்று கூறிவிட்டு மறைந்தனர் அதைக் கேட்ட அவர்கள் உடல் சிலிர்த்தது.

    இதே போன்று ஷைகு நஸீருத்தீன் சிராஹ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு. அவர்களையும் கண்டுள்ளனர். மற்றொருதடவை காஜா குத்புத்தீன் பக்தியார் காகி ரலியல்லாஹு அன்ஹு. அவர்களின் அடக்க இடத்திற்குச் சென்றபோது, தம்        போன்றவர்களுக்கு உள் செல்ல தகுதியில்லை என்றெண்ணி வெளியே உள்ள மேட்டில் உட்கார்ந்துவிட்டார்கள். அதன்பின் றொருதடவை காஜா குத்புத்தீன் பக்தியார் காகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.

    இவர்களுக்கு 60 வயதானபோது ஒரு திருமகன் தோன்ற போகும் செய்தியை இறைவன் அவர்களுக்கு உள்ளுணர்வின் மூலம் தெரிவித்தான். அவர்கள் மனைவி மகப்பேறு பெறும் காலக்கட்டத்தை கடந்துவிட்டபோதும இது எவ்வாறு சாத்தியம்? என்று எண்ணினர். அடுத்தகணம் அவர்கள் உள்ளத்தில் இரண்டாவது திருமணம் பற்றிய எண்ணம் துளிர்த்தது. இதை தம் நண்பர்களிடம் கூற அது ஊர் முழுவதும் பரவிவிட்டது. 

    இதை கேட்ட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் வந்த ஷெய்கு முஹம்மது என்ற நல்லார் தம் மகளை மணம் முடித்துக் கொடுக்க முன் வந்தார். அதன்படி திருமணமும் இனிதே நடைபெற்றது. இவர்களின் மணிவயிற்றில்தான் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் பிறந்தார்கள். 

   ஷெய்கு அப்துர் ரஹீம் அவர்கள் கடுமையான நோய்வாய்பட்டிருக்கும் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்  அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி, 'கவலற்க! நலம் பெற்று விடுவீர்.' என்று நன்மாராயம் பொழிந்து தங்களின் தாடி ரோமங்கள் இரண்டை அவர்களின் கையில் கொடுத்துவிட்டு மறைந்தனர். திடுக்குற்று விழித்தெழுந்தபோது, அந்த ரோமங்கள் இரண்டும் அவர்கள் கையில் இருந்தன. 

         தங்களின் தள்ளாத வயதில் மகனுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். தங்கள் முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த இவர்கள் தங்கள் மகன் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுக்கு 'பைஅத்' கொடுத்து பின்பு கிலாபத்தும் கொடுத்து, 'வலியுல்லாஹ்வுடைய கை என்னுடைய கை போன்றதாகும்' என்று திரும்பத் திரும்ப கூறினார்கள். தங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடமிருந்து கனவின் மூலம் கிடைத்த இரு ரோமங்களில் ஒன்றை வழங்கி வாழ்த்தினார்கள். இவர்களின் பெயர் ஆலமுல் மலக்கூத்தில் 'அபுல் பையாள்' என்பதாகும்.