Sah Abdul Azeez Dihlawi-ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்கள் டில்லியில் ஹிஜ்ரி 1159, (கி.பி.1746) ல் ஷாஹ் வலியுல்லாஹ்வின் மூத்த மகனாய்ப் பிறந்தார்கள். தந்தையிடமே கல்வி பயின்றார்கள். தந்தை மறைந்ததும் அவர்கள் நடத்தி வந்த மத்ரஸா ரஹீமிய்யாவின் ஆசிரியரானார்கள்.
அரபி, பார்ஸியில் பல நூல்கள், கவிதைகய் எழுதியுள்ளார்கள். திருக்குர்ஆனின் முதல் இரு ஸூராக்களுக்கும், 29,30 ம் பகுதிகளுக்கும் ஃபார்ஸியில் 'பத்ஹுல் அஜீஸ்' என்ற பெயருடன் விளக்கவுரை எழுதியுள்ளார்கள். திருக்குர்ஆனின் 30 பாகங்களுக்கும் உர்தூவில் விளக்கவுரை எழுதியுள்ளார்கள். இவர்களின் மார்க்கத்தீர்ப்புக்கள் 'பதாவா' என்னும் பெயருடன் இரு பகுதிகளாக வெளிவந்துள்ளன. புஸ்தானுல் முஹத்திதீன், 'மீஜானுல் அகாயித், ஸிர்ருல் ஷஹாதத்தைன';(அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர்களின் உயித் தியாகத்தைக் குறிப்பிடும் நூல்) ஆகிய நூல்கள் எழுதியுள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும் அவலநிலையிலிருப்பதையும், குறிப்பாக வங்காள முஸ்லிம்கள் பெரிதும் பிற்போக்கான நிலையிலிருப்பதையும் அவர்களுக்கு விகிதாச்சாரப்படி கூட உத்தியோகம் கொடுக்கப்படாததையும் கண்டு மனம் வெதும்பினர். எனவே முஸ்லிம்களுக்கு பொருளாதார நீதி வழங்கப் பெற வேண்டுமாயின், அவர்கள் மாபெரும் அரசியல் சக்தியாக விளங்க வேண்டும் என்றும் கருதினார்கள். பிரிட்டீஷ் அரசு முஸ்லிம்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்னல் இழைத்து வருவதைக் கண்டு இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனப்படுத்தினார். இது இந்திய விடுதலைக்கு வித்திட்டது.
வாக்குவாதத்தில் சிறந்து விளங்கிய இவர்கள், டில்லி மகாசபை கூடி அதில் வைத்து இவருக்கும், ஒரு கிறத்துவ பாதிரியாருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. 'முஹம்மது அல்லாஹ்வின் தோழர், திருத் தூதர் என்று கூறுகிறீர்களே! கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் கொல்லப்படும் முன் அவர் அல்லாஹ்விடம் அவருக்காக பரிந்துரைத்து தடுத்திருக்கலாமே!' என்று இடக்காக கேட்டார்.
அதற்கு இவர்கள், 'அல்லாஹ்விடம் எங்கள் நபி தம் பேரனுக்காகப் பரிந்துரைக்கத்தான் செய்தார். அப்போது அல்லாஹ், 'நான் என்ன செய்வேன்? என் மகனை யூதர்கள் கொலை செய்தபோது அவர் என் உதவியை வேண்டி அலறினார். அவரின் உயிர் காக்கவே என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே! உம்முடைய பேரனுக்கு எவ்வாறு உதவி செய்வேன்' என்று கையை விரித்து விட்டான்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது. பாதிரியாரும் ஓடிவிட்டார்.
இவர்கள் கி.பி. 1823 ஜுலை 17 வியாழக் கிழமை டில்லியில் காலமாகி அங்கேயே அடங்கப்பட்டுள்ளார்கள்.