தப்லீக் இயக்கம் பற்றி காயிதே மில்லத்!
By Sufi Manzil
தப்லீக் இயக்கம் பற்றி காயிதே மில்லத் அவர்கள்.
ஒரு விஷயம் கேள்விப்படுகிறேன். தொழச் சொல்வதில் முனைந்திருக்கும் கூட்டத்தார் அரசியல் வேண்டாம் . அதை அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று பிரஸ்தாபிப்பதாகத் தெரிகிறது. அரசியலைவிட வேண்டியது என்று சொல்வதும் உண்மையானால், எதை எதை விட வேண்டும் என்று சொல்ல வேண்டும். எது அரசியல், எது மார்க்கம் என்று பிரித்துச் சொல்வார்களா? ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்க்கையில் அரசியல் புகாது இருக்கின்றதா? அரசியல் வேண்டாம் என்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களல்லவா அரசியலை விட்டிருக்க வேண்டும். அரசியலை நடத்திக் காட்டியிருக்கும் போது நம்மைப் பார்த்து அரசியலை விட்டுவிடுங்கள் என்றால் அதன் அர்த்தம் புரியவில்லை.
அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆம்! உண்மைதான். அல்லாஹ் நினைத்தால் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆனால் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சும்மா இருங்கள்' என ஆண்டவன் எங்காவது சொல்லியிருக்கிறானா? நீங்கள் சாப்பிடாதமல் பிழைப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல் கொஞ்சம் சும்மா இருங்களேன் பார்க்கலாம்! அல்லாஹ் ரசூலுல்லாஹ் அவர்களுக்கல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லவில்லையே! ரசூலுல்லாஹ் அவர்கள் அடிபட்டார்களே, பல் உடைக்கப்பட்டதே, நடையாக அலைந்து திரிந்தார்களே, கூட்டங்கள் கூட்டி மக்களைவ ருத்தி அழைத்து மார்க்கத்தை போதித்தார்களே! இவை எல்லாம் ஏன் செய்தார்கள்? யுத்தங்களும் செய்தார்களே! 'இவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று இருப்பது நபி பெருமானார் காட்டிய வழியல்லவே!
(ஆதாரம்: காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் இனிய பேச்சுக்கள் என்ற நூலிலிருந்து பக்கம் 26-27)