நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா?
By Sufi Manzil
கேள்வி: நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடுமா?
பதில்: தற்போது பள்ளிவாயில்களில் தொழுவதெற்கென்றே நாற்காலிகள் போடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் மிகவும் முடியாதவர்கள் அமர்ந்து தொழுவதையும் நீங்கள் பார்த்துதான் இருப்பீர்கள். நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், குனிந்த நிலையிலும், படுத்த நிலையிலும் இறைவனை நினைவுகூறும் படி ஏவப்பட்டுள்ள குர்ஆன் ஆயத்திற்கு இமாம்கள் தந்த விளக்கப்படி இந்த தொழுகை அமைந்துள்ளதையும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் நாற்காலியில் தொழுவது என்பது கூடாது என்று மறைந்த வஹ்ஹாபி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ, மற்றும் தேவ்பந்திய உலமாக்கள் மற்றும் தன்னை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் வஹ்ஹாபிய தரீகா நூரிஷாஹ்வை ஆதரிக்கும் ஒரு ஜமாலி மௌலவி(ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது மூன் டிவியில் நாற்காலி தொழுகை கூடாது என்று பதிலளித்துள்ளார்) போன்றோர் உரக்க கத்துவதும், இயலாத, முடியாத, வேறு வழியில்லாதவர்களின் தொழுகையை இதனால் பாழாக்க முனைவதும் இதற்கு சிலர் வக்காலத்து வாங்குவதும் வழமையாகி விட்டது. தேவ்பந்தியிஸம் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நமது தமிழ்நாட்டில் நுழைந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அதற்கு நாம் என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் இஸ்லாமிய நடைமுறைச் சட்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வருவதும், அதற்காகவே நமது இமாம்கள், இறைநேசச் செல்வர்கள் பாடுபட்டிருப்பதையும் நாம் அறிவோம். காலங்கள் செல்ல செல்ல நவீனங்களும், நாகரீகங்களும் புதிது புதிதான தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. அதற்கெல்லாம் அமையவே நமது சட்டங்கள் வகுத்து தரப்பட்டுள்ளன. மாறி வரும் இந்த பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்டதிட்டங்களுங்கு மாறுபடாமல் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றி நடப்பதுதான் ஒரு உண்மையான இஸ்லாமியனின் கடமையாக இருக்க வேண்டும். அதற்குரிய வழிவகைகளைத்தான் உலமாக்கள் நவீனங்களுக்கு ஏற்ப, இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சொல்ல வேண்டுமே தவிர, மக்களுக்கு கஷ்டத்தைத் தரக் கூடிய, இறைவனை மறக்கடிக்கக் கூடிய வழிவகைகளை சொல்லி மக்களைக் குழப்பக் கூடாது. இந்த வகையில்தான் நாற்காலியில் தொழுவதும்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அவர்களும், ஏனைய சஹாபாக்களும் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்கள். இதற்கு ஹதீதுகளில் ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அச்சமயத்தில் உட்கார்ந்து தொழுவது என்பது கீழே உட்கார்ந்து தொழுவதுதான் என்பது வெள்ளிடைமலை. ஏனெனில் அக்காலத்தை எண்ணிப் பாருங்கள். எங்கே நாற்காலிகள் இருந்தன? அவ்வாறு பார்க்கும் போது, அக்காலத்தில் மின்சாரம், செல்போன், கம்பியூட்டர், ஏ.டி.எம்., விமானம் போன்ற நவீன வசதிகள் அக்காலத்தில் இல்லை என்பதால் அதை இக்காலத்தில் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்!
தற்போதைய நிலையை எண்ணிப் பாருங்கள். நாகரீக உலகம். நவீனங்கள் பெருகிவிட்ட காலம். விருந்தினர்கள் வந்தாலும், வியாபாரப் பெருமக்கள் வந்தாலும் யாரையும் கீழே உட்காரச் சொல்வதில்லை. உடனே நாற்காலியைப் போட்டுத்தான் உட்காரச் சொல்கிறோம். அந்தளவிற்கு நவீனமாக – நாற்காலிகள் வந்து விட்டன. வந்தவர்களை அதில் அமரச் சொல்கிறோம். நாற்கலியில் அமர்வது என்பது உட்காருவதுதான். இதில் சந்தேகமில்லை.
அதேபோல் தற்போது ஹார்ட் ஆபரேஷன் போன்ற மேஜர் ஆபரேஷன் பண்ணுபவர்கள் கீழே குனியக் கூடாது அதனால் உயிருக்கு கூட பாதிப்புகள் உருவாகும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் பண்ணுவதும், சிக்கன்குனியா போன்ற காய்ச்சலால் கால்வலி எடுத்து கீழே உட்கார முடியாதபடி துன்பப்படுபவர்களும், இன்னும் இதுபோன்று கீழே குனிய, அமர முடியாதவர்களும் பெருகிவிட்டார்கள். இவர்கள் எப்படி இறைவனைத் தொழ வேண்டும்? இதற்கு உலமாக்கள் தரும் தீர்ப்பு என்ன? என்று பார்ப்போமானால், நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த கூற்றுப்படி இந்த மாதிரி சூழ்நிலைகளில் உட்கார்ந்து தொழ-நாற்காலியில் அமர்ந்து தொழ வேண்டும். அது ஆகுமானதே! எக்காலத்திலும் தொழுகையை விடக் கூடாது என்பதையே தீர்க்கமான முடிவாக தெரிவித்துள்ளார்கள். அதன்படிதான் பள்ளிவாயில்களில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
எளிமையான பின்பற்றத்தக்க மார்க்கம் இஸ்லாம் என்னும் போது நாற்காலியில் தொழுவதுதான் -அதாவது அக்காலத்தில் வாகனத்தில் இருந்து தொழுதது போல,; முடியாதவர்கள் அமர்ந்து தொழுதது போல் தொழுவதுதான் இதற்கு சரியானத் தீர்வாக அமையும். இறைவனையும் விடாமல் வணங்க முடியும். ஆக நாற்காலி மூலம் தொழக் கூடாது என்று சொல்லும் – ஆகுமான ஒன்றை ஆகாது என்று சொல்லும் தேவ்பந்திய வஹ்ஹாபிகளும், சுன்னத் ஜமாஅத் போர்வையில் இருக்கும் வஹ்ஹாபிய ஆதரவாளர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இவர்களின் வஹ்ஹாபிய வேஷத்தை அறிந்து இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும். இவர்களின் கூற்றுக்களைப் புறந்தள்ள வேண்டும்.
அதே சமயம் இந்த நாற்காலிகள் போடப்பட்டுள்ளது மிகவும் இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பதை நமது மக்கள் புரிந்து, சின்னஞ்சிறு விஷயத்திற்காகவும், இலேசான முடியாமைக்காகவும் நாற்காலிகளை நாடுவதை தவிர்க்க வேண்டும். வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் ரஹ்மத்தும், ஆஃபியத்தும் செய்தருள்வானாக! ஆமீன்.