முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

By Sufi Manzil 0 Comment October 23, 2011

எங்கள் ஷெய்கு நாயகம் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்  அவர்களின் ஆசிரியப் பெருந்தகை பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யு அரபிக் கல்லூரியின் தலைமைப் பேராசிரியா காமில் வலி மௌலவி அல் ஹாபிழ் அப்துல் கரீம் ஹஜ்ரத் ராணிப் பேட்டையில் ஹிஜ்ரி 1300 ரபீயுல் அவ்வல் பிறை 27 திங்கள் கிழமை மாலையில் அல்ஹாஜ் அல்ஹாபிழ் செய்யிது முஹம்மது சாஹிபு அவாகளின் மகனாகப் பிறந்தார்கள்.

பத்தாவது வயதில் தமது தந்தையாரிடம் திருக்குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள். அன்னாரின் தகப்பனார் திருக்குர்ஆனை மனனம் செய்துவிக்கும் ஆசானாக அங்கு திகழ்ந்தார்கள். அவர்கள் சொல்கிறார்கள், எனது மகன் திருக்குர்ஆனை எவ்வளவு எளிதாக மனனம் செய்தானோ அதைப் போல் வேறு யாரையும் நான் காணவில்லை' என்று. 13 வது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்கு சென்னை பெரம்பூரிலுள்ள ஜமாலிய்யா அரபிக் கல்லூhயிpல் சேர்ந்து சுமார் இரண்டு வருடம் பயின்றார்கள். பின்னர் வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூhயிpல் சேர்ந்து அதன் தலைமை ஆசிரியராகவும் ஸ்தாபகராகவும் இருந்த மௌலானா மௌலவி அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் அவர்களிடம் சுமார் 6 வருடம் கல்வி பயின்று அவர்களின் உண்மை சிஷ்யராக இருந்து பலவிதக் கலைகளைப் பெற்று மௌலவி பட்டம் பெற்றுக் கொண்டார்கள். அரபி, பார்ஸி, உருது பாஷைகளில் வித்வானாகவும், ஹகாயிகுடைய இல்மில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவும் தேர்ந்து சொந்த ஊரான இராணிப்பேட்டை திரும்பினார்கள்.

இரண்டு வருடம் கழித்து நெல்லிக்குப்பம் மத்ரஸாவில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது இரண்டு வருடத்தில் புனித ஹஜ் யாத்திரை செய்தார்கள். மஃரிபா ஞானத்தை தேடி பல்வேறு இடங்களிலுள்ள அறிஞர்களிடம் செல்பவர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில் மெய்ஞ்ஞான சொரூபி ஆஷிகுர் ரஸூல், குத்புஜ்ஜமான் ஷெய்கு பத்ருத்தீன் ஹஜ்ரத் என்ற படேஷா ஹஜ்ரத் அவர்களை சந்திக்க மஞ்சக்குப்பம் சென்று அவர்களின் சிஷ்யரானார்கள். இச்சமயத்தில் பொதக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்நூருல் முஹம்மதிய்யு மத்ரஸா(ஆரம்பிக்கப்பட்ட வருடம் ஹிஜ்ரி 1333)வின் தலைமையாசிரியராக பணியாற்றினார்கள். ஹிஜ்ரி 1340 வது ஆண்டில் இரண்டாம் முறையாக புனித ஹஜ் யாத்திரை சென்றார்கள்.

பெரும் ஈகைத் தன்மையுடையவராக இருந்தார்கள். மக்கா சென்ற சமயம் அவ்விடமுள்ள பதவிகளால் (ஸஹி மௌலானா)-கொடையளிக்கும் மௌலானா என்றழைக்கப்பட்டார்கள்.

உலகப்பற்றற்றவர்களாகவும், பொருளாசை இல்லாதவர்களாகவும் திகழ்ந்தார்கள். ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள், 'நான் நெல்லிக்குப்பம் மத்ரஸாவில் ஓதிக் கொடுத்துக் கொண்டு இருக்கும்போது நாகூர்  சென்றிருந்தேன். தர்காவின் வடபுறத்திலுள்ள நவாப் பள்ளிவாசலில் ஜிப்பாவும் தலைப்பாகையும் இல்லாதவனாக நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சில பக்கீர்மார்களுடன் என்னை நோக்கி வந்தார்கள். நான் எழுந்து முலாகத்து செய்து பல விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி கூறியதாவது, தாங்கள் ஏன் சுன்னத் ரஸூலாகிய தலைப்பாகை, ஜுப்பா போடுவதை விட்டுவிட்டு வந்தீர்கள்.?நீங்கள் மனிதர்களில் சிறப்பு வாய்ந்தவர்களாக இருப்பதால் அவற்றை விட்டுவிட வேண்டாம் என்றார்கள். அன்றிலிருந்து அவ்விரண்டையும் விடாமல் அணிவதுடன், மற்றவர்களையும் ஏவுகின்றவர்களாகவும் இருக்கின்றேன்.'

மேலும் நான் நெல்லிக்குப்பத்தில் இருக்கும் சமயம் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள் என்றார்கள்.

இவர்கள் மதீனா சென்றபோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்
கு ஸலாம் உரைத்தபோது உள்ளிருந்து பதில் கிடைத்தது.

நெல்லிக்குப்பத்தில் இரவு காலங்களில் வெளியில் உலா வரும்போது குப்பாரான ஜின்கள் என்னை தொந்தரவு செய்தன. அக்காலத்தில் இரண்டு ஜின்கள் மஹ்பூபு சுபுஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினார்கள்.

மத்ரஸா அன்நூருல் முஹம்மதிய்யாவில் வருடாவருடம் ரபீயுல் அவ்வல் பிறை 6 அன்று மௌலிது மஜ்லிஸ் நடைபெறுவது வழக்கம். ஹிஜ்ரி 1345 ல் நடைபெற்ற மௌலிது ஷரீபிற்கு புதிதாக இருவர்கள் பிரவேசித்தார்கள். அவர்கள் யாருடனும் பேசாமல் அதபுடன் மஜ்லிஸில் அமர்ந்து விட்டார்கள். மவுலிது முடி ந்தவுடன் இருவரும் ஹஜ்ரத் அவர்கள் அறைக்குச் சென்றார்கள். அதன்பிறகு கதவுகள் மூடப்பட்டன. சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் ஊர்க்காரர்களில் சிலர் ஹஜ்ரத் அவர்கள் அறைக்குச் சென்று பார்க்கும்போது அங்கு ஹஜ்ரத் அவர்களைத் தவிர யாரும் இல்லை. அந்த அறைக்கு செல்வதற்கு ஒரே வழிதான் உண்டு. அந்த வழியாக அவர்கள் வெளிவரவும் இல்லை. இதுபற்றி ஹஜ்ரத் அவர்களிடம் கேட்டபோது, வந்தவர்கள் அக்தாபுகளில் உள்ளவர்கள். இச்சிறப்புத் தங்கிய மாதத்தில் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிபவர்கள். இவ்விடம் வந்தபோது மஜ்லிஸின் சிறப்பு கண்டு இங்கு விஜயம் செய்தனா என்றார்கள்.

ஹஜ்ரத் அவர்களிடம் முலாகத்துக்குச் செல்பவர்கள் இன்ன விசயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிப் போனால், ஹஜ்ரத் அவர்கள் அதைப் பற்றியே பேசுவார்கள்.

தங்களின் மறைவிற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே தங்களின் மறைவைப் பற்றி இஷாராவாக கூறிக் கொண்டே வந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட நாளில் மறைந்தார்கள்.

ஹஜ்ரத் அவர்களின் வபாத்திற்குப் பிறகு அவர்களை கனவில் கண்ட ஒருவர், தாங்கள் இவ்வுலகத்தை விட்டு சென்றபின் எவ்விடத்தில் இருந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, 'இன்னல் முத்தகீன பீஜன்னாத்திந் வநஹர் பீமக் அதிசித்கின் இன்த மலீகின் முக்ததிர்( தவ்பாச் செய்பவர்கள் ஒதுங்கும் தலமானது சுவனலோகமும் அதிலுள்ள நீர்ச்சுனைகளும் அல்லாஹ்தஆ லாவின் மெய்யான தானமுமாகும்.) என்ற குர்ஆனின் ஆயத்தை ஓதிக் காண்பித்தார்களாம். அவர்களின் ரவ்ளாவில் இவ்வாயத்தே பொறிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய 45வது வயதில் ஜுரத்தின் காரணமாக மன்னார்குடியிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஈசவி 1927 ஜூன் 5 ஹிஜ்ரி 1345 துல்ஹஜ் 4 ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு மறைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் பொன்னுடல் பொதக்குடி மத்ரஸாவின் காம்பவுண்டில் அடக்கப்பட்டது.

உருவ இலட்சணம்: சுமார் ஐந்தரை அடி உயரமும் பார்வைக்கு இலட்சணமான மாநிறமும் உடையவர்கள். உயரத்திற்கு ஏற்றவாறு பருமனும் பரந்த முகத்தையும், மிகுந்த அடர்த்தியில்லாததும், போதிய நீளமுள்ளதுமான தாடியையுடையவர்கள். எப்போதும் டாக்காவால் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். விசாலமானதும் கெரண்டைக்கால்வரை நீளமுள்ளதுமான ஜுப்பாவை அணிந்திருப்பார்கள். எக்காலமும் செருப்பணிந்திருப்பவர்களாக இருப்பார்கள்.

                          -ஆதாரம்: காமில் வலியின் காரண காட்சி.