அல்லாஹ்வினால் இவ்வுலகிற்கு இறுதியாக வைக்கப்பட்ட நபியாக, ரஸூலாக அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கி.பி.571 ஏப்ரல் 20,(ரபியுல் அவ்வல் பிறை 12) திங்கட்கிழமை காலை 5.30 மணியளவில் மக்காவில் பனூ ஹாஷிம் கிளையில் ஹஜ்ரத் அப்துல்லாஹ்- ஹஜ்ரத் அமீனா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்கள்.இவர்கள் பிறந்த வேளையில் உலகின் உருவத் தொழும்பர்களின் சிலைகள் கவிழ்ந்தன. நெருப்பு வணங்கிகளின் அணையா நெருப்பு அணைந்தது. மாபெரும் அற்புதங்கள் நிகழ்ந்தன. இவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே இவர்கள் தந்தையார் மறைந்து விட்டார்க மதீனாவில் அடங்கட்டார்கள். ஆறு வயதில் அன்னையும் மறைந்து விட்டார்கள். பாட்டனார் அப்துல் முத்தலிபால் வளர்க்கப்பட்டார்கள்.
நாணயமும், நம்பிக்கையும், உண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர்களாயிருந்ததினால் மக்கா குறைஷிகள் இவர்களிடம் தங்கள் பொருட்களை அமானிதமாக ஒப்படைத்தார்கள். இவர்களை அல்-அமீன(நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக்(உண்மையாளர்) என்ற பெயர்களால் அழைத்தனர். இவர்களின் நன்னடத்தை,புகழ் கண்டு அன்னை கதீஜா நாயகி அவர்கள் தம் வணிகத்திற்காக இவர்களை வெளிநாடு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களையே திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் ஹிஸ்புல் ஃபுஸூல் என்னும் பொதுநல இயக்கத்தில் இவர்கள் பங்கெடுத்து கொண்டனர். வணிகத்தில் இவர்கள் நாட்டம் குறைந்து அல்லாஹ்வைப் பற்றி சிந்திக்கலாயினர். இது பற்றி மக்காவின் வடகிழக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள ஹிரா குகையில் தனித்திருந்து தவம் செய்தனர். ரமலான் பிறை 27(கி.பி.610 ஆகஸ்ட்22ஃ23) திங்களிரவு வானவர் ஜிப்ரீல் வந்து ஓதுக! என்று தொடங்கும் இறைவசனத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்து இவரிடம் சேர்ப்பித்தார்.
இதைப் பற்றி கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூற, அவர்கள் ஆறுதல் கூறினார்கள். பின்னர் தம் சொந்த உறவினர் வேதங்களை கற்று அறிந்திருந்த வரகா இப்னு நௌபல் அவர்களிடம் சொல்ல, அவர்கள், 'இவர் வேதங்கள் கூறும் இறுதி நபிதான்' என்றுரைத்தார்.
இதன்பின் இஸ்லாத்தில் மக்களை அழைக்க அல்லாஹ்விடமிருந்து உத்திரவு பெற்ற இவர்களின் அழைப்பிற்கிணங்கி கதீஜா நாயகி, அலி நாயகம், அபூபக்கர் நாயகம், ஜைது ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இஸ்லாத்தை தழுவினார்கள். இதன்பின் மக்களிடம் இறைச் செய்தியை எடுத்துரைத்த போது, மக்கள் இவர்களுக்கு சொல்லொண்ணாத் துயரங்களையும், கடும் வார்த்தைகளால் துன்புறுத்தியும் வற்தனர். இதற்கு தலைநாயகமாக அபூஜஹ்ல் இருந்தான்.
இவர்களின் பெரிய தந்தை அபூதாலிபிடம் சொல்லி இஸ்லாமிய பிரச்சாரத்தை தடுக்க முயன்றனர். முடியவில்லை. நாளுக்குநாள் குறைஷிக் காபிர்களின் கொடுமை அதிகரிக்கவே முஸ்லிம்களில் சிலரை அபினீஸியா நகருக்கு அனுப்பி வைத்தனர். குறைஷிகள் இவர்களையும், இவர்கள் குடும்பத்தாரையும் பகிஷ்கரித்தனர். இது மூன்று ஆண்டுகுள் நீடித்தது. இதன் பின் இவர்களுக்கு ஆதரவாயிருந்த அபூதாலிபும், கதீஜா நாயகியும் வபாத்தானது இவர்களுக்கு பேரிழப்பாக அமைந்தது.
மக்காவை விட்டும் வெளியில் சென்று இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய நாட்டம் கொண்டு, தாஃயிப் சென்றனர். அங்கு மக்கள் கல்லால் அடித்து விரட்டினார்கள். அச்சமயத்திலும், இவர்களில்லாவிடினும் இவர்கள் சந்ததியர் இஸ்லாத்தை தழுவார்கள் என்று கருதி அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்ய மறுத்துவிட்டார்கள். பின்வரும் நாட்களில் ஹஜ்ஜு செய்ய வந்த மதீனா வாசிகள் 6 பேர், அவர்களின் பிரச்சாரத்தினால் இஸ்லாத்தை தழுவினர். அடுத்த வருடம் மேலும் அறுவரை அழைத்து வந்து இஸ்லாத்தை ஏற்க வைத்து, தங்கள் பகுதிக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய ஒரு ஆளை அனுப்புமாறு வேண்டினர். முஸ்அப் இப்னு உமைரை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். அடுத்த வருடம் 75 பேர் வந்து அகபா பள்ளத்தாக்கில் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்று, நபி அவர்களை தங்கள் நகருக்கு வருமாறும், தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி கூறி சென்றனர். அதன்பிரகாரம் கி.பி.622 செப்டம்பர் 9/10 வெள்ளிக்கிழமை தங்கள் தோழர் அபூபக்கர் அவர்களுடன் மக்காவை விட்டும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். செல்லும் வழியில் தவ்ர் குகையில் தங்கி, குறைஷிகளின் தேடுதல் முடிந்ததும் யத்ரிப் நோக்கி புறப்பட்டனர். யத்ரிபில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அன்றிலிருந்து மதீனாவாசிகளை பண்படுத்தும் முகமாக சில அமைப்புகளை செய்தனர்.
மக்கா குறைஷிகளின் கடும் தொல்லையால் 1000 பேர் கொண்ட குறைஷிகள் முஸ்லிம்களை தாக்க முற்பட்டபோது தற்காப்புக்காக 313 முஸ்லிம் போர்வீரர்களுடன் பத்ர் என்ற இடத்தில் சண்டை செய்து வெற்றியீட்டினர். இது திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஓராண்டிற்குப் பின் உஹத் என்னுமிடத்தில் சண்டை நடந்தது.
இதற்கு இரு ஆண்டுகளுக்குப் பின்மீண்டும் பெரும் படையுடன் குறைஷிகள் மதீனா மீது படையெடுத்து வந்தனர். தோழர் சல்மான் ஃபார்ஸி அவர்களின் ஆலோசனையுடன் நகரைச் சுற்றி அகழ் தோன்றி போர் செய்து வெற்றியீட்டினர்.
இதற்கடுத்தாண்டு உம்ரா செய்ய சென்ற இவர்கள் மக்கா நுழையக் கூடாது என்றும் அடுத்தாண்டு உம்ரா செய்துவிட்டு உடனே சென்றுவிட வேண்ம் என்றும்ஒரு ஒப்பந்தம் ஹுதைபிய்யாவில் செய்து கொண்டனர். இதற்கிடையே மூத்தா என்ற இடத்தில் ரோமானியப் பேரரசை எதிர்த்து படை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கு இரு ஆண்டுகளுக்குப் பின் குறைஷிகள் தங்கள் ஒப்பந்தத்திற்கு மாறாhக முஸ்லிமகளின் நேசக் கூட்டத்தினரான குஸா அவர்களைத் தாக்கிய போது பதினாயிரம் வீரர்களோடு சென்று மக்காவை இரத்தமின்றி வெற்றிக் கொண்டனர்.
இதன்பின் ஹவாஸின்களின் தாக்குதலை முறியடிக்க ஹுனைன் என்ற இடத்திலும், பைசாந்தியப் பேரரசை தாக்க தபூக்கிலும் படை நடத்தினார்கள். தபூக்கில் போர் நடைபெறவில்லை.
ஹிஜ்ரி 10 ல் (கி.பி.632 மார்ச் 6 வெள்ளிக்கிழமை) இவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். இறுதிப் பேருரையை அடுத்த நாள் மினாவில் நிகழ்த்தினார்கள். பின்னர் மதீனா மீண்ட இவர்கள் ஹிஜ்ரி 11 ரபீயுல் அவ்வல் பிறை 12 (கி.பி.632 ஜூன் திங்கட்கிழமை பகல் 11.30 மணிக்கு மறைந்தார்கள்.
இவர்கள் மறையும் போது இவர்களிடமிருந்தவை: ஒரு சீப்பு, சுருமாக் கூடு, 2 தொழுகைப் பாய், திரிகை, ஒரு சோடி செருப்பு, போர்வை, தஸ்பீஹ், ஊன்று போல், கேத்தல், கீழ் ஆடை, குர்ஆனில் சில தொகுப்புகள், பல் துலக்கும் குச்சி, ஜுப்பாஈ மூன்று பாய்கள், இரண்டு சுர்மாக் கோல் ஆகியவையே!