பள்ளிவாசலின்(மஸ்ஜிதின்) ஒழுக்கங்களும் சட்டங்களும்

பள்ளிவாசலின்(மஸ்ஜிதின்) ஒழுக்கங்களும் சட்டங்களும்

By Sufi Manzil 0 Comment March 1, 2012

اِنَّماَ يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مِنْ اٰمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وًَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةََ وَلَمْ يَخْشَ اِلَّا اللهَ فَعَسىٰ اُولٰئِكَ اَنْ يَّكُوْنُوْ نُوْامِنَ الْمُهْتَدِيْن.   

'எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள்.'

பள்ளியோடு அதிக ஈடுபாடு கொள்பவர்களைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்கண்டவாறு புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

فَقَدْ عَدَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَلْبَهُ مٌتَعَلِّقٌ بِالْمَسْجِدِ مِنْ سَبْعَةٍ يُّظِلُّهُمُ اللهُ بِظِلِّ الْعَرْشِ يَوْمَ لَاظِلَّ اِلَّا ظِلُّهُ .

'பள்ளியில் தனது மனமார –லயித்துப் போயிருப்பவர், இறைவனின் நிழலே அன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் (தனது) அர்ஷின் நிழலைக் கொண்டு நிழல் அளிக்கப்படும் ஏழுவகை மனிதர்களில் நின்றுமுள்ளவராவார்'.

பள்ளியில் யாராவது ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது மற்றொருவர் குர்ஆனை இரைந்து ஓதுவதும், ஹதீஸ் வஃலு – உபதேசம் சொல்வதும் விலக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பள்ளி என்பது தொழுவதற்கு மட்டும் வக்ஃபு செய்யப்பட்ட இடமாகும்.

பள்ளி என்பது அல்லாஹ்வை தொழுவதற்காக ஒரு தலத்தை வரம்பு குறித்து வக்ஃபாகக் கட்டப்பட்டதாயிருக்கும். அது முகடில்லாத்ததாகவும், சுவர்கள் இல்லாத்ததாகவும் இருந்தாலும் சரிதான். அந்த வரம்பை (வக்ஃபாக்கின எல்லையைத்) தவிர மற்றவைகளுக்கு பள்ளி என்ற ஹுக்மு உண்டாகாது.

பள்ளியில் 'இஃதிகாப்' (அல்லாஹ்வுக்காக பள்ளியில் தரித்தல்) என்ற வணக்கம் உண்டாகிறது. ஆனதால் ஜுனூபாளிகள் (முழுக்கு கடமையுள்ளவர்கள்) பெண்களில் 'ஹைளு'(மாதவிடாய்) நிஃபாஸ்(பிள்ளைபேறு தொடக்கு) உள்ளவர்கள் தரிப்பது கூடாது.

மூட்டைப் பூச்சி, கொசு ஆகியவற்றின் இரத்தமாயிருந்தாலும் சரி பள்ளியில் நஜீஸைத் தடவுவது ஹராமாகும். அதனுடைய மண், கல்லை எடுத்துப் போவதும், விரிப்பு, விளக்கு போன்றவற்றைக் கொண்டு போவதும், அல்லது இரவலாக எடுத்துப் போவதும் கூடாது. அவ்வாறே மஸ்ஜிதின் விரிப்புகளை வேறொரு காரியத்திற்கு உபயோகிப்பதும் கூடாது.

மஸ்ஜிதிலுள்ள ஒரு பொருள் பழுதாகி விட்டால் அதை விற்று விட்டால்தான் நல்லது என்றிருப்பின் அதை விற்பது கூடும். வக்ஃபு செய்யப்பட்ட கிதாபுகள் போன்றவற்றை எந்த நிலையிலும் விற்கக் கூடாது. ஒரு (பள்ளித்) தலம் போன்றது பாழாகிப் போயிருந்தாலும் விற்கக் கூடாது. ஒரு பள்ளி உடைந்து அதைச் செம்மைப் படுத்துவதற்கு முடியாததாகி விட்டாலும் அதன் பூமியில் தொழுவதற்கும் இஃதிகாபு இருப்பதற்கும் இடம்பாடு உண்டாகியிருப்பதோடு அதில் ஜுனூபாளிகள் செல்வதற்கும் ஹறாம் என்றிருப்பதால் அத்தலத்தை விற்கக் கூடாது.

பள்ளியில் உள்ள பாய், குவளை போன்றவற்றை வேறு இடங்களிலுள்ள விசேசங்களுக்கு எடுத்துப் போய் புழங்குதல் மிகவும் கெட்ட காரியமாகும். கண்டவர்கள் அதை விலக்குவது விதியாகும்.

பள்ளியை உடைவு போன்ற (ஆபத்தான) வைகளைக் கண்டு பயப்பட்டாலொழிய எந்த நிலையிலும் உடைக்கக் கூடாது.

(ஒரு பள்ளி அந்த மாதிரி நிலை ஏற்பட்டு) மராமத்துச் செய்வதினால் சீர்படுத்த முடியாதிருந்தது. உடைக்கப்படும் சமயம் அதன் சாமான்களால், மறு பள்ளியை பரிபாலனம் செய்வதை நல்லதாகக் காணுவதாகில் அப்படிச் செய்யலாம். அது அதற்கடுத்தப் பள்ளியாக இருப்பது ஏற்றம். ஆனால் அந்தச் சாமான்களைக் கொண்டு பள்ளியல்லாத தைக்காப் போன்றவற்றை பரிபாலிப்பது ஜாயிஸ் இல்லை.

மஸ்ஜிதில் படும்படி எச்சில் துப்புவதும், சளி சிந்துவதும், ஈரமான நஜீஸ் இருக்கின்ற காலணிகளை உள்ளே கொண்டு செல்வதும், சிறு குழந்தைகளை, பயித்தியக்காரர்களை உள்ளே அனுமதிப்பதும் மக்ரூஹ் ஆகும். இவர்கள் பள்ளியை நஜீஸாக்கி விடுவார்கள் என்பதாகவோ, அல்லது தொழுபவருக்கு அறுவறுப்பு உண்டாக்கி விடுவார்கள் என்பதாகவோ இருப்பின் இவர்களை அனுமதிப்பின் ஹராமாகும்.

மஸ்ஜிதில் உறங்குவது மக்ரூஹ். அங்கு காற்று விடுவது கொடிய மக்ரூஹ். பள்ளியிலிருந்து கொடுக்கல் வாங்கல் செய்வதும், வழக்குகளை பேசுவதும், முடி நகம் களைவதும், கொட்டாவி விடுவதும் மக்ரூஹ் ஆகும்.

ஒரு ருகூவு, சுஜூதுடைய நேர அளவு பள்ளியில் தங்கினாலும் இஃதிகாஃப் என்பது உண்டாகி விடும். இஃதிகாஃபுக்கு நிய்யத் அவசியமாக இருக்கும்.எனவே பள்ளியில் நுழையும் போது,

اَللهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ فَاغْفِرْلِيْ ذُنُوْبِيْ
 

'இறைவா! உனது அருளின் வாயில்களை எனக்குத் திறந்து விட்டு எனது பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!' என்ற துஆவை ஓதிவிட்டு அத்துடன் இஃதிகாஃப் நிய்யத்து வைப்பவர்கள் கீழ்கண்ட விதமாக நிய்யத்து வைப்பதுடன் கீழ்கண்ட துஆவையும் சேர்த்து ஓத வேண்டும்.

اَللّهُمَّ اِنِّيْ نُوَيْتُ الْاِعْتِكَافَ مَادُمْتُ فِيْ هٰذَا الْمَسْجِدِ فَاغْفِرْلِيْ وَارْحَمْنِيْ بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ الرَّاحِمِيْنَ .

'இறைவா! நான் இப்பள்ளியில் தரிப்பட்டிருக்கும் காலமெல்லாம் இஃதிகாஃப் என்னும் வணக்கத்தைச் செய்வதற்கு நிய்யத்துச் செய்கிறேன். எனவே அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! எனது பாவங்களை மன்னித்து உனது அருட்கொடையைக் கொண்டு எனக்கு அருள்பாலிப்பாயாக!' என்று ஓதவும்.

பள்ளியை விட்டு வெளியேறும் போது இடது காலை முன் வைத்து,

اَللّهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ فَضْلِكَ فَاغْفِرْلِيْ وَارْحَمْنِيْ بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ الرَّاحِمِيْنَ .

'இறைவா! உனது அருளின் வாசல்களை எனக்குத் திறந்து விட்டு எனது பாவங்களையும் மன்னித்து உனது பேரருளைக் கொண்டு எனக்கு அருள் பாலிப்பாயாக. அருளாளர்களுக்கெல்லாம் அருளாளா'

பள்ளிவாசலை சுற்றிலும் தாழ்வாரங்கள் வைத்துக் கட்டி அத்தாழ்வாரங்களில் மனிதர்கள் படுப்பதற்கும், ஜுனுபாளிகள் தங்குவதற்கும், மௌலிது, ராத்திபு முதலியவை நடப்பதற்கும் வசதி  செய்து தருவது நம்முடைய நாட்டிலுள்ள பழக்கமாக இருப்பதால் உலமாக்கள் அதனை ஆதரித்துள்ளார்கள்.

பள்ளிவாசலை பரிபாலனம் செய்வதிலும், அதை சுத்தம் செய்து விளக்கேற்றி வைப்பதிலும் மிகுந்த நன்மைகள் உள்ளன என்று ஹதீதுகளில் காணக் கிடக்கின்றன.

பிறருடைய நிலத்தில் அவருடைய பொருத்தமின்றி தொழுவது ஹராமாகும். எனினும் அவ்வாறு தொழுதால் தொழுகை கூடி விடும். அவர் பொருந்திக் கொள்வாரா? இல்லையா? என்பதில் சந்தேகமிருந்தால் தொழுவது மக்ரூஹ். பொருந்திக் கொள்வார் என்று உறுதியாக தெரிந்தால் மக்ரூஹ் இல்லை.

தொழுது முடித்தவுடன் மறு தொழுகையை நாடினால் அவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறிட வேண்டும். ஸலாம் கொடுத்த பின் இமாமானவர் மஃமூம்கள் பக்கம் வலது பக்கத்தை திருப்பிக் கொள்ள வேண்டும்.

ஒட்டகை மந்தை, மாட்டு மந்தைகளில் தொழுவது மக்ரூஹ். ஆனால் ஆடுகள் ஒட்டகங்களைப் போன்றும் மாடுகளைப் போன்றும் மிரண்டு தொழுபவரின் கவனத்தை திருப்பும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதால் ஆட்டு மந்தையில் தொழுவது மக்ரூஹ் இல்லை.

பள்ளிவாசல் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதால் அங்கு முதலில் வருகிறவரை பின்னால் வருகிறவர் தடுப்பதும் இடம் மாற்றம் செய்வதும் கூடாது.

பள்ளியில் கூடு வைத்திருக்கின்ற பறவைகளைத் துரத்துல் வாஜிபில்லை. எனினும் அதில் விட்டு வைப்பது ஆகும். ஆனால் அவைகளின் எச்சம் பள்ளிக்குள் விழுந்து அசுத்தமாகி விடும் என்றிருந்தால் துரத்தப்படும்.

பள்ளிக்கு வகஃப் செய்யப்பட்ட சாமான்களை ஒருவர் எடுத்துப் புழங்கினால் அவர் பள்ளிக்கு கூலி கொடுப்பது வாஜிபு.  இதைப் பள்ளிக்குத் தேவையான மராமத்துப் போன்ற காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டும். அங்கு வரும் ஃபுகஹா, மிஸ்கீன்களுக்கு செலவு செய்யக் கூடாது.

பள்ளிகளில் சிறுபிள்ளைகளை வைத்து ஓதிக் கொடுக்கக் கூடாது என்று கஃப்ஃபால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளியில் உள்ள எண்ணெய், மெழுகுவர்த்தி, கல், மண் இவைகளை எடுப்பது ஹறாம். பள்ளித் தலத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களில் காய்க்கும் (காய்) கனிகள் பள்ளிக்கு உடையதாக இருக்கும். பள்ளிக்காகவே நடப்பட்டிருப்பதால் உண்பது ஆகாது. அவை எதற்கு நடப்பட்டதென்று தெரியாமல் உண்பது ஆகும்.