திருடுவற்குரிய தண்டனைகள் பற்றிய சட்டங்கள்

திருடுவற்குரிய தண்டனைகள் பற்றிய சட்டங்கள்

By Sufi Manzil 0 Comment June 22, 2012

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيم
 

திருடிய ஆணையும்,பெண்ணையும் அவ்விருவரும் செய்த (தீய) செயலுக்குக் கூலியாக அல்லாஹ்விலிருந்து உள்ள தண்டனையாக அவ்விருவருடைய கைகளையும் துண்டியுங்கள்' (5:38) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

பாதுகாக்கப்பட்ட ஓரிடத்திலிருநு;து ஒரு பொருளை ஒருவன் திருடினால் அவன் பருவ வயதை அடைந்தவனாகவும், சுயபுத்தியுள்ளவனாகவுமிருந்தால், திருடியது ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் வலது கையில் மணிக்கட்டு வரை நீதிபதி, அல்லது அவருடைய பிரதிநிதி துண்டிப்பது வாஜிபாகும். ஆனால், அந்தப் பொருளுக்குரியவன் அதனைத் தேடி, திருடியது சாட்சியினால் அல்லது திருடியவனின் விண்ணப்பத்தினால் நிரூபிக்கப்பட்டால் தான் கை துண்டிக்கப்படும்.

அவன் மறுபடியும் திருடினால் இடது காலை பரண்டை (கணை)க்கால் முளிவரை துண்டிக்க வேண்டும். மூன்றாவது தடவையாகத் திருடினால் இடது கையை மணிக்கட்டுவரை துண்டிக்க வேண்டும். நான்காவது தடவை திருடினால் வலது காலை முளிவரைத் துண்டிக்க வேண்டும். பிறகும் திருடினால், அவனைக் கண்டிக்க வேண்டுமே தவிர கொல்லக் கூடாது.

வக்ஃபுடைய சொத்துக்கள், பள்ளிவாசலுடைய உத்திரம், நிலை, கதவு போன்றவற்றையும், அலங்காரத்திற்காக தொங்க விடப்பட்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றையும் திருடினாலும் கை துண்டிக்கப்படும்.

பள்ளிவாசலிலுள்ள பாயை, நிரந்தரமாக எரிக்கப்படும் விளக்கைத் திருடினாலும், அவன் ஜகாத்து வாங்கத் தகுதியானவனாக இருக்கின்ற நிலையில் ஒருவனுடைய ஜகாத்து பொருளிலிருந்தோ, அல்லது பைத்துல் மால் என்னும் பொது நிதியிலிருந்தோ திருடினாலும், சூதானமில்லாத (பாதுகாப்பில்லாத) இடத்திலிருந்து திருடினாலும், திருடிய பொருளிலிருந்து திருடியவனுக்குச் சேர வேண்டிய  பங்கிருந்தாலும், திருடிய பொருள் பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக இருந்தாலும், அபகரிக்கப்பட்ட இடத்திலேயே திருடினாலும், தன்னுடைய பெற்றோர், பாட்டன், பாட்டி, தன்னுடைய பிள்ளைகள், பிள்ளையுடைய பிள்ளைகள் ஆகியோரின் பொருளைத்திருடினாலும் கையைத் துண்டிப்பது கூடாது.

கணவன் மனைவி இருவரிலொருவர் மற்றவருடைய பொருளைத் திருடுவதால் பலமான சொற்படி கை துண்டிக்கப்படும்.

இரண்டு நபர்கள் சேர்ந்து கால் தங்க நாணயத்தை களவெடுத்தால் இருவரில் யாருடைய கையையும் துண்டிக்கக் கூடாது.

திருட்டுத்தனம் என்பது மேற்சொன்ன முறையில் மறைவாக எவருக்கும் தெரியாமல் எடுப்பதாகும். எனவே ஒருவனிடமிருந்து பொருளைப் பறித்துச் சென்றாலும், கொள்ளையடித்தாலும் கையைத் துண்டிக்கக் கூடாது. ஆனால் அதனை விடக் கடினமான தண்டனையை அரசாங்கத்தின் மூலம் அவனுக்கு கொடுக்க வேண்டும்  என்பது மார்க்கத்தின் சட்டமாகும்.