கப்ருஸ்தானில் பள்ளிவாசல் கட்டுவதும் அதன்மீது விரிவாக்கம் செய்வதும் கூடுமா?

கப்ருஸ்தானில் பள்ளிவாசல் கட்டுவதும் அதன்மீது விரிவாக்கம் செய்வதும் கூடுமா?

By Sufi Manzil 0 Comment January 6, 2014

Print Friendly, PDF & Email

அன்டையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

தற்காலத்தில் அனேக ஊர்களில் பழமையான பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டு அவை பெரிய பள்ளிவாசல்களாக கட்டப்பட்டு வருகின்றன.

இது பெரும்பாலும் இட நெருக்கடி இருப்பதாகச் சொல்லி இடித்து கட்டப்பட்டாலும் உண்மை நிலை அறிந்தவன் அல்லாஹ்தஆலா மட்டுமே.

பல ஊர்களில் பள்ளிவாசல்ளை சுற்றியே மையவாடிகள் அமைந்துள்ளன. பள்ளிவாசலை விரிவுப்படுத்தும் பொழுது அதைச்சுற்றியுள்ள மையவாடியின் சிலபகுதி பள்ளிவாசலோடு இணைத்தும் இன்னும் சிலபகுதி பள்ளியின் கழிவறை, பாத்ரூம் போன்ற பகுதிகளோடு இணைத்தும் கட்டப்பட்டு வருகின்றன.

சில ஊர்களில் பள்ளிவாசலை மையவாடிப்பகுதியில் விரிவுபடுத்துகின்ற வேளையில் அப்பகுதியில் அடக்கப்பட்ட மையத்துகள் தோண்டி எடுக்கப்பட்டு அவை வேறு இடத்தில் அடக்கப்படுகின்றன.

கப்ரின் மீது தொழுவது, நடப்பது, அமர்வது, அதை அவமதிப்பது, மலம் ஜலம் கழிப்பது, மக்கிய எலும்பை உடைப்பது கூடாது என எச்சரிக்கை தரும் நபிமொழிகள்:

ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு கப்ரை நோக்கி தொழுவதற்காக நின்ற பொழுது என்னை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்து விட்டு உமக்கு முன்னால் கப்ரு இருக்கிறது என்று என்னை (தொழ விடாமல்) தடுத்து விட்டார்கள். (கிதாப்: உம்மதத்துல் காரி)

ஹழரத் அபூமர்ஸத் அல் ஙனவி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: கப்ருகளின் மீது அமராதீர்கள். அதை முன்னோக்கித் தொழாதீர்கள். (கிதாப்: முஸ்லிம் ஷரீப்)

ஹழ்ரத் அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: பூமி முழுவதும் மஸ்ஜிதாகும் மையவாடி, குளியலறையைத் தவிர. (கிதாப்: திர்மிதி ஷரீப்)

உங்களில் ஒருவர் ஒரு முஸ்லிமுடைய கப்ரின் மீது உட்கார்வதை விட எரிகொள்ளியின் மீது அமர்ந்து அது அவரின் ஆடையை எரித்து தோலை கரிப்பது அவருக்கு மிக்க நல்லதாகும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;. (கிதாப்: முஸ்லிம் ஷரீப்)

ஹழ்ரத் உமாரதுப்னு ஹஜ்மி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு தடைவ நான் கப்ரின் மீது உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைப் பார்த்து விட்டு கப்ரின் மீது அமர்ந்திருப்பவரே கீழே இறங்கி வாரும். கப்ராளியை நீர் துன்புறுத்தாதீர் அவர் உன்னை (மறுமையில்) துன்புறுத்த வேண்டாம் எனக் கூறினார்கள். (கிதாப்: மிஷ்காத் ஷரீப்)

ஹழ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு இடத்தில் ஜனாஸாவிற்காக சென்றிருந்தோம். அப்பொழுது நபியவர்கள் ஓர் இடத்தில் அமர்ந்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம். கப்ரு தோண்டுபவர்கள் கப்ரைத் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுது (முன்னால் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மய்யித்தின்) காலை (எலும்பை)யும் மற்றொரு உறுப்பையும் எடுத்து அதை உடைத்து விட முற்பட்டார்கள். உடனே நபியவர்கள் அதை உடைத்து விடாதீர்கள். ஏனெனில் மய்யித்தின் எலும்பை உடைப்பது அது உயிரோடு இருக்கும்போது அதன் எலும்பை உடைத்தது போலாகும் என்றார்கள். (கிதாப்: ஹாஷியா இப்னு மாஜா)

கப்ரை காலால் மிதிப்பது அது (கப்ராளிக்கு) அவமரியாதையான செயல் என்பதால் அது மக்ரூஹ் ஆகும். (கிதாப்: மராகில் ஃபலாஹ்)
மய்யித் மக்கிப் போனாலும் அதன் மரியாதை மக்கிடவில்லை என்பதால் ஒரு மய்யித்திற்குரிய கப்ரில் வேறொரு மய்யித்தை அடக்கம் செய்வது மக்ரூஹ் ஆகும். (கிதாப்: மதாலிபுல் முஃமினீன்)

வக்பு மற்றும் மையவாடி சட்டம்

ஒரு பள்ளிவாசலை கட்டித் தருபவர் அதற்குரிய இடத்தை வக்பு செய்யும் பொழுதே பள்ளிவாசலைச் சுற்றியுள்ள இடங்களையும் சேர்த்தே பல நன்மையான நோக்கங்களுக்காகவும் வக்பு செய்து விடுவார்.

1.    மையவாடி அமைப்பது
2.    மத்ரஸா கட்டுவது
3.    முஸாபிருக்கான விடுதி கட்டுவது.

மக்பரா மவ்கூபா

வக்பு செய்தவரின் நோக்கத்திற்கு ஏற்றார் போல பள்ளிவாசலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏதேனும் ஒரு பகுதியில் மையவாடி அமையும். பின்னர் அதில் மையத்துகள் அடக்கப்பட்ட உடன் அது அவர்களுக்குப் பாத்தியப்பட்ட இடமாக மாறிவிடும். இது மார்க்க வழக்கில் கப்ராளிகளுக்கு வக்பு செய்யப்பட்ட மையவாடி (மவ்கூபா) என அழைக்கப்படுகிறது.

இதில் அடக்கம்செய்யப்பட்ட மய்யித்துகள் மக்கி இத்து அடக்கம் செய்யப்பட்டதற்கான  எந்த அடையாளமும் இல்லாவிட்டாலும் அல்லது பலநூறு ஆண்டுகள் கடந்து விட்டது என்றாலும் அதில் பள்ளிவாசல் கட்டுவதோ அல்லது பள்ளி விரிவாக்கம் செய்வதோ வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டுவதோ ஹராமானதாகும்.

மக்பரா முஸப்பலா

ஓர் ஊர்க்காரர்கள் தொன்றுதொட்டு ஓர் இடத்தில் மய்யித்தை அடக்கம் செய்து வருகிறார்கள். அந்த இடத்ததை இன்ன நபர்தான் வக்பு செய்தவர் அல்லது இன்ன நபருக்கு உரிமையான இடமாக இருந்தது போன்ற விபரங்கள் எல்லாம் தெரிந்ததாகவோ தெரியாததாகவோ இருக்கும். இதை மார்க்கம் மக்கள் காலங்காலமாக மய்யித்துகள அடக்கி வரும் மையவாடிகள் (மக்பரா முஸப்பலா) என அழைக்கிறது.

மேற்கண்ட இரு மையவாடிகளிலும் மய்யித்துக்களைத் தவிர பள்ளி கட்டுவதோ பள்ளி விரிவாக்கம் செய்வதோ மதரஸா கட்டுவதோ கூடாது.  மார்க்கத்தில்  தடை செய்யப்பட்ட காரியமாகும்.

மக்பரா மம்லூகா

தனி நபருக்கு சொந்தமான ஓர் இடத்தில் மையவாடி இருந்தால் அதை தனிநபருக்கு பாத்தியப்பட்ட மையவாடி (மக்பரத மம்லூகா) என மார்க்கம் சொல்கிறது.

இதில் அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துகள் இத்து மக்கி அதன் அடையாளமே காணமுடியாதவாறு ஆகிவிட்டாலும் மையவாடி உரிமையாளன் அதில் எவ்வித தேவையுமில்லாமல் பள்ளிவாசல் கட்டுவதோ,வீடு கட்டுவதோ மக்ரூஹ் என்றே தீர்ப்பளித்துள்ளது.

ஹனபி-ஷாபிஈ இமாம்களின் தீர்ப்பு

ஒரு ஊரில் பள்ளிவாசல் இருக்கிறது. ஆனால் அப்பள்ளிக்கு மஹல்லாவாசிகள் என்று யாரும் இல்லை. வேறுயாரம் அப்பள்ளியை தேவையுள்ளதாக கருதவில்லை. எனவே அப்பள்ளயை மையவாடியாக அமைத்துக் கொள்ளலாமா? என ஹனபி இமாம் காஜி சம்சுல் அயிம்மா மஹ்மூத் அல் அவ்ஸ்ஜன்தி ரஹிமஹுல்லாஹு என்பவர்களிடம் பத்வா கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூடாது என்றார்கள். அவர்களிடமே மீண்டும் ஒரு பத்வாகேட்கப்பட்டது. ஒரு ஊரில் மையவாடி உள்ளது. அதில் மய்யித் அடக்கம் செய்யப்பட்டதற்கான சில எலும்புத் துண்டுகள் கூட காணமுடியாதபடி மக்கிவிட்டது. அதில் வேளாண்மையோ வேறு வகையில் அதை பயன்படுத்துவதோ கூடுமா? அதற்கு அவர்கள் (மய்யித்துகள் இத்துமக்கி அழிந்து விட்டாலும் அதை எதற்கும் பயன்படுத்துவது கூடாது) அந்த இடம் மையவாடியின் சட்டத்தில் சேர்ந்தது என்றார்கள். (கிதாப்: பதாவா ஹின்தியா)

அல்லாமா முல்லா அலிகாரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:

ஒருவன் தன் சொந்ந நிலத்தில் அடக்கம் செய்த மய்யித் மக்கிவிட்டால் அதில் கட்டிடம் கட்டுவது மக்ரூஹ் ஆகும். ஆனால் அதுவே மக்பரா முஸப்பலா – பொது மையவாடியாக இருந்தால் அதில் கட்டிடம் கட்டுவது ஹராமாகும். அது பள்ளிவாசலாக இருந்தாலும் அதை இடித்து விட வேண்டும். (கிதாப்: மிர்காத் ஷரஹு மிஷகாத்)

அல்லாமா இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:

மக்பரா முஸப்பலா – பொது கப்ருஸ்தானில் கட்டிடம் கட்டப்பட்டால் அது இடிக்கப்பட வேண்டும். (கிதாப்: மின்ஹாஜ்)

வக்பு செய்யப்பட்ட மையவாடிகள் முஸப்பலாவான (பொது) மையவாடிகளின் மீது குப்பா வீடு பள்ளிவாசல் போன்றவைகளை கட்டுவது ஹராமாகும்.மீறி கட்டப்பட்டிருந்தால் அதை இடிப்பது வாஜிபாகும். (கிதாப்: பத்ஹுல் முஈன் இஆனா)

நபிமார்கள் ஷுஹதாக்கள் சாலிஹீன்கள் போன்ற நல்லோர்களின் கப்ருகள் மீது ஜியாரத்தை நாடி குப்பாக்கள் கட்டுவது கூடும். அது பொது கப்ருஸ்தா(மக்பரா முஸப்பலா) னாக இருப்பினும் ஆகுமானதே. (கிதாப்: இஆனத்துத் தாலிபீன்)

மேற்கண்ட புகஹாக்களின் தீர்ப்பின் அடிப்படையில் எந்த வகை மையவாடியாக இருந்தாலும் அதில் பள்ளிவாசல் கட்டுவதோ பள்ளி விரிவாக்கம் செய்வதோ வேறு வகையில் பயன்படுத்துவதோ கூடாது என்பது தெளிவு. மேலும் இது தொடர்பாக விளக்கங்கள் பெற கீழே சிலமுக்கிய கிதாபுகளை தருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் பார்ப்பார்களாக.

1.    ஃபதாவா ஆலம்கீரிய்யா
2.    மின்ஹாஜுத் தாலிபீன்
3.    ஃபைளுல் இலாஹில் மாலிக்
4.    ஃபத்ஹுல் முஈன்
5.    புஜைரமி
6.    இக்னாஃ
7.    துஹ்பதுல் முஹ்தாஜ்
8.    ஹாஷியதுல் பாஜுரி – இப்னு காசிம்
9.    1935 ல் சென்னை காஜி மௌலானா முஃப்தி முஹம்மத் தமீம் ஆலிம் சாஹிப் அவர்கள் வெளியிட்ட பத்வா
10.    04-09-2002 ல் தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அவர்கள் வெளியிட்ட பத்வா
11.    ஃபதாவா பாக்கியாத்
12.    ஜவாஹிருல் மஸாயில் -அறபுத் தமிழ்
13.    மஙானி

தவறான சில ஃபத்வாக்கள்

ஃபிக்ஹு கிதாபுகளில் மய்யித் மக்கி அழிந்து விட்டால் அதில் கட்டிடங்கள் கட்டுவதும் வேளாண்மை செய்வதும் கூடும் என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது.

இது தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் வழங்கப்பட்ட அனுமதி என்ற காலத்தால் பின்வந்த புகஹாக்கள் விளக்ம் அளித்துள்ளார்கள்.

இதைச் சரிவர புரிந்து கொள்ளாத சிலர் இதை பொது அனுமதியாக எடுத்துக் கொண்டு எல்லா இடங்களிலும் கூடும் என்று பத்வாவை வழங்கி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக தேவ்பந்திய வஹ்ஹாபிகளே இதுமாதிரியான ஃபத்வாக்களை தருகிறார்கள். இவர்கள் எப்பவுமே தங்கள் கொள்கைக்கு சாதகம் பாதகம் பார்த்தே ஃபத்வா தருவார்கள்.

.மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் நடைபெறுகின்ற சில சுன்னத்தான (வஸீலா தேடுவது, பாத்திஹா, மவ்லூது, ஈசால் தவாப் உருஸ், மீலாது)  போன்ற காரியங்களைக் கூட கூடாது பித்அத், ஷிர்க் என்று கூறுகிறவர்கள்.

மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட (பொது கப்ருஸ்தானில் பள்ளி கட்டுவது, பள்ளி விரிவாக்கம் செய்வது) போன்ற காரியங்களைப் பற்றி சரியான புரிதல் இன்மையினாலும் தங்களை அதிமேதாவிகள் என்ற நினைப்பினாலும் கூடும் என்றும் ஆகும்  என்றும் ஃபத்வா வழங்கி வருகிறார்கள்.

இவர்களின் இந்த வழிகெட்ட கொள்கைகளையும் உண்மை நிலைமையையும் அறியாத பாமர ஆலிம்களும் புகழ் விரும்பிகளான சில தனவந்தர்களும் இவர்களின் தவறான ஃபத்வாவை பெற்று பொது கப்ருகளின் மீது பள்ளிவாசல்களையோ பள்ளி விரிவாக்கமோ செய்து விடுகிறார்கள்.

மார்க்கம் அனுமதி வழங்கிய காரியத்தை தடை செய்யவோ தடை செய்யப்பட்ட காரியங்களை அனுமதிக்கவோ யாருக்கும் எவ்வித அனுமதியும் இல்லை.

இந்நிலையில் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய ஆலிம்கள் பாமரராய் இருப்பதும் அல்லது பணம் பார்த்து மார்க்கம் சொல்வதும் பெரும் குற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் ஏற்படும் பாவங்கள்

1.    கப்ருகளின் மீது நடப்பது கூடாது என்று வரக்கூடிய ஹதீதுகளுக்கு மாறு செய்யும் நிலை.
2.    தனிநபர் நடப்பதே கூடாது என்னும்போது ஐங்காலத் தொழுகைக்கு வரக்கூடியவர்கள் ஜும்ஆ பள்ளியாக இருந்தால் பெரும் திரளாக வரக்கூடிய மக்கள் யாவரும் அந்த கப்ருகள் உள்ள இடத்தில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மிகப் பெரிய பாவமாகும்.
3.    பள்ளிவாசலின் ஹுக்மில் இல்லாத முஸப்பலா வான இடத்தில் இஃதிகாப் இருப்பதும் கூடாது. அதில் தனித்தோ ஜமாஅத்தாகவோ தொழுதாலும் பள்ளியில் தொழுத நன்மைகள் கிடைக்காது.
4.    (ஹக்குல் மக்பூர்) அங்கு அடக்கப்பட்ட மய்யித்துகளுக்குரிய உரிமை மீறப்படுகிறது. மய்யித்துகளின் பிள்ளைகள் சொந்தங்கள் அவர்களின் கப்ருகளை ஜியாரத் செய்து அவர்களுக்காக பாவமன்னிப்பும் தேடுவார்கள். அவர்களின் கப்ரை சுவனப்பூங்காவாக ஆக்கி வைப்பாயாக என்று துஆவும் செய்வார்கள். இந்த வாய்ப்பையும் கப்ராளிகள் இழந்து விடுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் இல்லாமல் ஆகிவிடுகிறது.

ஆகவே, முஸ்லிம் சகோதரர்களே!

மார்க்க ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக கப்ருஸ்தானில் பள்ளிவாசல் கட்டுவது போன்ற பாவச் செயல்களைச் செய்யாமல் மார்க்கத்தைப் பேணி நடக்க அல்லாஹ் தஆலா தஃவ்பீக் செய்வானாக. ஆமீன்.

1300 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க மத்ஹப் சட்டங்கள்

இஸ்லாமிய பாரம்பரியம் மிக்க மத்ஹப் சட்டங்களைப் பின்பற்றி ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் புதுப்புது பெயர்களில் சில குழப்பவாதிகள் வந்தார்கள். நாங்கள் குர்ஆன் ஹதீத் மட்டும் சொல்வோம் என்றார்கள். அவர்கள் குர்ஆன் ஹதீத் சொன்னதால் ஏற்பட்ட பின்விளைவுகள் சில:
மார்க்க மேதைகளான இமாம்களை பின்பற்றாமை.
எவ்வித தகுதியுமின்றி குர்ஆன் ஹதீதை ஆய்வு செய்யலாம் என்னும் தவறான எண்ணம்.
பாதிஹா கூடாது கூட்டுத் துவாவில் சேர்வது கூடாது.
குடும்ப உறவுகள் பிரிந்தது.
முஸ்லிம்களின் ஒற்றுமை சீர்குலைந்தது
தங்கள் கொள்கைகளைச் சேரா முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக ஆக்கியது
இன்னும் ஏராளம் உள்ளன.
குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் ஸஹாபாக்கள் கொடுத்த முழு விளக்கங்களை வைத்து மார்க்க சட்டங்களை விளக்கமாக வகுத்தும் தொகுத்தும் கொடுத்தவர்கள் நாற்பெரும் இமாம் பெருமக்கள். இம்மேதைகள் தொகுத்து வழங்கிய மத்ஹப் சட்டங்களை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை ஒருவன் புறக்கணித்தால் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்து முடிவில் இறைமறுப்பில் வீழும் அபாயம் உண்டு என அல்லாமா ஸாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பெரும்பெரும் முஹத்திதீன்களும் சூபிகளும் மத்ஹப்களைப் பின்பற்றியே நடந்துள்ளார்கள்.

1.    இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
2.    இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
3.    இமாம் திர்மிதீ ரஹிமஹுல்லாஹஹ் ஷாபியீ மத்ஹப்
4.    இமாம் அபூதாவூப் ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
5.    இமாம் இப்னு மாஜா ரஹிமஹுல்லாஹ் ஹன்பலி மத்ஹப்
6.    இமாம் நஸாயீ ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
7.    இமாம் இப்னுஹுஸைமா ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
8.    இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
9.    இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
10.   இமாம் இஸ்ஸுத்தீன் ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
11.   இமாம் ராஃபிஇ ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
12.   இமாம் சுபுகி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
13.   இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
14.   இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
15.   இமாம் முஹம்மதுத ரமலி ரஹிமஹுல்லாஹ் ஷாபியீ மத்ஹப்
16.   குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு ஷாபியீ மத்ஹப்

-மஜ்லிஸு அஹ்லிஸ்ஸுன்னத்தி வல்ஜமாஆ

உடன்குடி, தூத்துக்குடி மாவட்டம்.