அஷ்ரப் அலி தானவி இறைநேசரா? – ஓர் ஆய்வு

அஷ்ரப் அலி தானவி இறைநேசரா? – ஓர் ஆய்வு

By Sufi Manzil 0 Comment September 9, 2012

இஸ்லாமிய உலகில் துருக்கிய கிலாபத் எவ்வாறு முடிவுக்கு வந்தது? அதற்கு மூலகாரண கர்த்தாக்கள் யார் என்பது நமது முந்தைய வெளியீடான 'ஹம்ப்ரேயின் இரகசிய டைரிக் குறிப்புகளி'லிருந்து (வஹ்ஹாபியத் தோற்றம்1) https://sufimanzil.org/books/othertamilbooks/wahabisam-creation  https://sufimanzil.org/books/othertamilbooks/wahhaisam-creation-continue என்பதிலிருந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினர்தான் உலகை தாங்கள் ஆள வேண்டும், இஸ்லாம் ஒரேகுடையின் கீழ் கட்டுப்பட்டுக் கிடக்கக் கூடாது, அப்படிக் கிடப்பதனால் இஸ்லாமியப் பேரரசு இன்னும் விரிந்து உலகமெங்கும் இஸ்லாம் பரவிவிடும் என்று எண்ணம் கொண்டு, இஸ்லாமியர்கள் போல் வேடம்தரித்து முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபுக்கு புதிய மதத்தைப் படித்துக் கொடுத்து இஸ்லாத்தில் பிரிவினை விதையை உண்டு பண்ணினர் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம்.

அதே அடிப்படையில்தான் இந்தியாவிலும் பிரிட்டிஷார் தங்கள் மோச, நாச வலையை விரித்தனர். இதில் அகப்பட்டுக் கொண்ட மௌல்விமார்கள், ஞானாசிரியர்கள்(?) ஏராளம். இவர்கள் அனைவரும் பிரிட்டிஷாருக்காக தூய இஸ்லாத்தை கூறு போட்டு விற்கத் துணிந்தனர். அதற்காக பிரிட்டிஷாரிடம் கூலியையும் பெற்றுக் கொண்டனர். இதற்காக ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்கள் மத்தியில் ஈமானின் அடிப்படையில் அதாவது நமது உயிரினும் மேலான நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் கண்ணியத்தையும், மதிப்பு, மரியாதை, நேசத்தையும் குறைத்து எழுதியும், பேசியும் வந்தனர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு சுதந்திர வேட்கையை ஊட்டிவந்த முஸ்லிம்கள் பின்தங்கினர். இதை சாக்காக வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர்.

இதன் பின்னணியில் இஸ்லாத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? அதற்காகத் துணை போனவர்கள் யார்? என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் நூல்கள் எழுதி வைத்துள்ளனர். அந்த நூல்களின் சாராம்சத்திலும்,

இந்நிலையில் இஸ்லாத்தின் சர்ச்சைக்குரிய ஒரு மனிதரைப் பற்றி முழு விபரமாக அறிய வேண்டியும் இந்த கட்டுரைப் படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையானது முழுக்க முழுக்க ஆதாரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டதேயன்றி வேறில்லை.

அந்த சர்ச்சைக்குரிய நபர் ஹகீமுல் உம்மத் என்று போற்றப்படும் மௌலானா அஷ்ரப் அலி தானவி தான். இவர் ஏன் சர்ச்சைக்குரியவரானார்? இவரின் கொள்கை, கோட்பாடுகள் என்ன? இவர்களை பின்பற்றும் கூட்டத்தார் கூறும் கூற்றுக்கள் இவருக்கு வலு சேர்க்கிறதா? இவர் கொண்ட கொள்கையினால் இவரை மகான் – வலி என்று சொல்லலாமா? போற்றலாமா? என்பது பற்றி இவர் எழுதிய நூற்களிலிருந்தும், இன்ன பிற பத்வாக்களிலிருந்தும், ஏனையோர் எழுதிய நூற்களிலிருந்தும் ஆதாரப்பூர்வமாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நடுநிலையாளர்களே! இக்கட்டுரையை முழுக்க படித்து விட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் வடபகுதியில் இஸ்லாத்தில் சர்ச்சைக்குரியவர்களாக முஸ்லிம்களால் சித்தரிக்கப்பட்ட மௌல்விகள், போதனாசிரியர்களில் மௌலவி காஸிம் நானூத்தவி, கலீல் அஹ்மது அம்பேட்டவி, மௌல்வி இஸ்மாயில் தெஹ்லவி, மௌல்வி ரஷீத் அஹ்மது கங்கோஹி, மௌல்வி அஷ்ரப் அலி தானவி, குலாம் அஹ்மது காதியானி, மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்;. இஸ்லாமிய கருத்துக்களுக்கு மாற்றமாக எழுதியதால், பேசியதால், நடந்ததால் இவர்களின் ஈமானே சர்ச்சைக்குள்ளானது. இவர்களில் நாம் இப்போது பார்க்கப் போவது அஷ்ரப் அலி தானவி என்ற நபரைத்தான்.

யார் இந்த அஷ்ரப் அலி தானவி?

அஷ்ரப் அலி தானவி பற்றி மௌலவி ஹாபிஸ் எம்.எஸ் அப்துல்காதிர் பாக்கவி என்ற ஐனி ஷாஹ் (நூரி ஷாஹ்வுடைய கலீபா பைஜி ஷாஹ்வின் கலீபா) என்பவர் தம்முடைய 'தப்லீக்கும் அதன் தலைவர்களும்' என்ற நூலில் பக்கம் 10ல் மௌலவி அஷ்ரப் அலி தானவி மௌல்வி இல்யாஸின்(தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்) மூன்றாவது குரு என்று கூறுகிறார். அதன் பிறகு அவரது கொள்கை பற்றி விமர்சிக்கிறார். அதைப் பார்க்க:https://sufimanzil.org/books/othertamilbooks/thableegh-and-its-leaders

நூரி ஷாஹ்வின் பிரதான முரீதாகிய முஸ்லிம் குரல் ஆசிரியர் கனி சிஷ்தி தம்முடைய முஸ்லிம் குரல் நூலில் மௌலவி அஷ்ரப் அலி தானவியை தப்லீக் ஜமாஅத்தின் மூன்றாவது ஷெய்குமார்களில் ஒருவராக எழுதியுள்ளார். முஸ்லிம் குரலில் (பிப்ரவரி 1988) 'தேவ்பந்தீ (குழப்பவாதி)கள் முகத்திரை கிழிகிறது!' என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதேபோல் தப்லீக் ஜமாஅத் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி(லஃனத்துல்லாஹ்) அவர்கள் அஷ்ரப் அலி தானவி தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்களுள் ஒருவர் என்றும் தப்லீக் ஜமாஅத் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் குருமார்களில் ஒருவர் என்றும் குறிப்பிடுகிறார்.

தப்லீக் ஜமாஅத்தினர்களாலும், தேவ்பந்திகளாலும், நூரிய்யா தரீகாகாரர்களாலும் அஷ்ரப் அலி தானவி தேவ்பந்திய தலைவர்களுள் ஒருவராகவும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு அப்பாற்பட்டவராகவும் கணிக்கபட்டிருக்கிறார். ஆனால் பின்னால் வந்த சிலர் அஷ்ரப் அலி தானவியை மகானாக போற்றிக் கொண்டாடத் தலைப்பட்டனர். இதன் காரணம் என்ன? அஷ்ரப் அலி தானவியின் உண்மை சொரூபம்தான் என்ன? அதைப் பற்றி அலசி ஆராய்ந்து பார்ப்போமா! வாருங்கள்!! அஷ்ரப் அலி தானவியின் உண்மை நிலையைப் பாருங்கள்.

பிறப்பு:-

தந்தை வழி பாட்டனார் வீட்டில் இவருக்கு இட்ட பெயர் அப்துல் கனி. தாய் வழிப் பாட்டனார் வீட்டின் சார்பில் இட்ட பெயர் அஷ்ரப் அலி. இவருடைய தம்பியின் பெயர் அக்பர் அலி. ஹிஜ்ரி 1280 ரபீயுல் ஆகிர் பிறை 5ல் பிறந்தார்.

சிறு வயதில் மிகவும் செல்வ நிலையில் வளர்ந்தார். இவருடைய தந்தையார் இவரை அரபிக் கல்வி கற்கவும், இவரது தம்பியை உலகக் கல்வி கற்கவும் அனுப்பினார்கள். சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். அரபிக் கிதாபுகளை தம் சொந்த ஊரிலேயே ஓதிய பின் ஹிஜ்ரி 1295ல் மேற்படிப்பிற்காக தேவ்பந்த் சென்றார்.

ஹிஜ்ரி 1301ல் பட்டம் பெற்றார். இவரின் உஸ்தாது மௌலானா முஹம்மது யஃகூப், மௌலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி ஆகியோர். இவருக்கு தலைப்பாகை அணிந்து பட்டம் வழங்கியவர் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி ஆவார்.
பைஅத்:
முதலில் இவருக்கு ஹஜ்ரத் ரஷீத் அஹ்மது கங்கோஹியிடமே பைஅத் பெற நாட்டமிருந்தது. தாம் மத்ரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் போது அவரிடம் சென்று பைஅத் கேட்க அவர் கொடுக்க மறுத்து விட்டார். தம் தந்தையாருடன் ஹஜ்ஜு சென்ற போது ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் அவர்களிடமே பைஅத் பெற்றுக் கொண்டார். ஹாஜிசாகிப் இவரை தம்முடன் ஆறுமாதம் தங்கும்படி சொன்னார்கள். ஆனால் இவர் தங்காமல் தம் தந்தையுடன் ஊர் திரும்பி விட்டார். அதன்பின்தான் இவர் கான்பூர் மத்ரஸாவில் பணியாற்றினார். பின்னர் மக்காவிற்கு சென்று கிலாபத்தும் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியப் பணி:

பட்டம் பெற்ற பின் கான்பூர் சென்ற இவர் அங்கே 'பைஜெ ஆம்' என்னும் மத்ரஸாவில் ஓதிக் கொடுத்தார். அங்கு இவரின் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்ட போக்கினால் மத்ரஸாவை விட்டு நீக்கினார்கள். அதன்பின் ஜாமிஉல் உலூம் என்னும் மத்ரஸாவை இவரின் ஆதரவாளர்கள் நிறுவி அங்கு பதினான்கு வருடம் வேலை செய்தார்.
மக்கள் இவரின் போலி வேஷத்தைத் தெரிந்த பின் ஹிஜ்ரி 1315 ல் கான்பூரை விட்டு சொந்த ஊரான தானாபவன் வந்தார்.

ஒருமுறை இவர் கங்கோஹ்விற்கு சென்ற போது ரஷீத் அஹ்மது கங்கோஹி கட்டிலை விட்டு இறங்கி இவருக்கு சமமாக கீழே வந்து அமர்ந்து கொண்டார். அந்தளவிற்கு இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

இவர் தானாபவனில் கான்காஹ் இம்தாதிய்யா அஷ்ரபிய்யாவை நடத்தினார்.

இவர் சிறிய, பெரிய நூற்கள் சுமார் 666 எழுதியிருக்கிறார்கள். அதில்தான் தம்முடைய கொள்கைகளை வெளிப்படையாகக் காண்பித்திருக்கிறார்.

தேவ்பந்த்தின் கொள்கைகளை பரப்புவதற்கு மிகவும் பாடுபட்டார். ஸூபியிசத்தை – வஹ்தத்துல் வுஜூது கொள்கையை திருத்துவதாகக் கூறிக் கொண்டு அதற்கு மாற்றமாக பல்வேறு சித்தாந்தங்களை கொண்டு வந்து அதை வஹ்தத்துல் வுஜூது என்று பரப்பினார். இக் கொள்கை ஸூபியாக்களின் நடைமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது.

தம்முடைய முரீதுகளுக்கும் தேட்டமுடையவர்களுக்கும் கடிதங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் தங்கள் கொள்கைகளை பரப்பினார். அதன் அடிப்படையில் இவரது கடிதங்கள் 'அல் இம்தாது' என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிஹிஸ்திஜேவர், கஸ்துஸ் ஸபீல், தஃலிமுத்தீன், ஆதாபுல் முஆஷாத் போன்ற எண்ணற்ற நூற்களில் தாம் போற்றும் தேவ்பந்திய கொள்கைகளை எழுதி பரப்பினார்;.

மௌலிது, ஸலவாத்து மஜ்லிஸுகளில் இவர் கலந்து கொள்ள மாட்டார். தெரியாத நிலையில் ஒரு சபையில் கலந்து கொண்டால் சாக்கு போக்கு சொல்லிவிட்டு அதிலிருந்து வெளியேறி விடுவார்.
அஷ்ரப் அலி தானவியின் துரோகங்களும் கொள்கைகளும்:

கான்பூரில் இவர் செய்த வேலை சுன்னத் வல் ஜமாஅத்தினர் போல் நடித்து மக்களுக்கு வஹ்ஹாபியிஸத்தைப் போதித்ததுதான். அவர் கூறுவதைப் பாருங்கள்:

 'அங்கு கான்பூரில் மீலாத் கூட்டங்களில் கலந்து கொண்டால் ஒழிய தங்குவது இயலாத ஒன்றெனக் கண்டேன். இனி மீலாது கூட்டங்களில் கலந்து கொள்ள சிறிது மறுத்துவிட்டோமானாலும் கூட 'வஹ்ஹாபி' என்று குறிப்பிடுவார்கள். அவ்வளவுதான்! மிகுந்த இழிவுக்கும் அவமரியாதைக்கும் நாம்(அஷ்ரப் அலி தானவி) ஆளாகிவிடுவோம்.

(மேலும் சொல்கிறார்) எவ்வகையிலும் 'மீலாத்' விழாக்களில் கலந்து கொண்டாலொழிய அங்கு (கான்பூரில்) தங்குவதென்பது நடவாத ஒன்றென்பதைக் கண்டேன். இனி அங்கு தங்குவது ஏற்றமாக தெரிந்தது. ஏனெனில், அதில் லாபமும் இருந்தது. மத்ரஸாவிலிருந்து சம்பளமும் கிடைத்துக் கொண்டிருந்து.'

(ஆதாரம்: ஸைபே யமானி பக்கம் 23, 24. தொகுப்பு: மௌல்வி மன்ஸூர் ஸம்பலி தேவ்பந்தி)

மீலாது ஷிர்க், பித்அத், ஹராம் என்றும் தமது நூற்களில் வரிசைப்படுத்தி எழுதிவிட்டு, தமது சுயநலத்திற்காகவும், தமக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் விலக்கிய கருமத்திலிருந்து தம்மை காத்துக் கொள்ள இயலாமல் அதிலே விழுந்து விட்டார்.

தம்மை – தம் கொள்கைகளை மூடி மறைத்துக் கொண்டு தம் நோக்கம் நிறைவேறுவதற்காக எவ்வித வேஷமும் போடலாம், எவ்வித இழிசெயலும் செய்யலாம் என்ற நயவஞ்சகத் தன, நரித்தன புதிய யுக்தியை இந்திய முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு வந்ததற்காகத்தான் அவருக்கு 'ஹகீமுல் உம்மத்' என்று அவர் ஆதரவாளர்கள் பட்டம் சூட்டினர் போலும்.

இதனால்தான் இவரின் இந்த அருமையான சித்தாந்தத்தை தப்லீக் ஜமாஅத்தை உருவாக்கிய மௌல்வி இல்யாஸ் ஏற்றுக் கொண்டு சொல்கிறார் பாருங்கள்:

ஒருமுறை மௌல்வி இல்யாஸ் கூறலானார்:- ;ஹழ்ரத் அஷ்ரப் அலி தானவி மிகப் பெரிய வேலை செய்திருக்கிறார்கள். எனது மனம் விரும்புகிறது கல்வி ஞான போதனை முறை அவர்களுடையதாகவும், அதனைப் போதிக்கும் தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்க வேண்டும். ஆக இவ்வாறு அவருடைய போதனைகள் விரிவாகி விடும்.

நூல்: மல்பூஜாத்தே மௌல்வி இல்யாஸ் பக்கம் 47.

தஸவ்வுப்:

வஹ்தத்துல் வுஜூது கொள்கையை போதித்து வந்த மகான்கள் அதன்படி செயல்படும் போது அது இஸ்லாத்திற்கு முரணானது, கேடானது என்று கூறி ஏன் தம்முடைய ஷெய்குடைய (ஹாஜி சாகிப் அவர்கள் வஹ்தத்துல் வுஜூது கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) தஸவ்வுப்பும் இஸ்லாத்திற்கு முரணானதுதான் என்று கூறி, தம் கொள்கைக்கு ஒத்துவரக் கூடிய அளவில் புதிய பரிணாமத்துடன் தஸவ்வுப்பை(?) உருவாக்கினார். தேவ்பந்தின் தலைவரான மௌலவி அஷ்ரப் அலி தானவி உருவாக்கிய தஸவ்வுபை தேவ்பந்த் உலமாக்கள் தங்கள் தஸவ்வுப்பாக ஏற்றுக் கொண்டனர். அதாவது வுஜூது ஒன்று என்றும், தாத்து இரண்டு என்றும் புதிதாக எந்த ஆரிபீன்களும் கூறாத ஒன்றை வஹ்தத்துல் வுஜூது என்று கூறிக் கொண்டார்.

வஹ்தத்துல் வுஜீது சித்தாந்தத்தை பின்பற்றுவோரை காபிர் என்றும் துணிந்து கூறினார். இதைத்தான் இன்றைய இவரின் அடிவருடிகளான நூரிஷாஹ் தரீகத்தினர் பற்றிப் பிடித்துக் கொண்டனர். இதனாலேயே தமக்கு ஞானம் போதித்த தேவ்பந்த் தலைவரான அஷ்ரப் அலி தானவியை மகானாக ஒப்புக் கொண்டுள்ளனர். தேவ்பந்த் தலைவர்களில் அஷ்ரப் அலி தானவியை மட்டும் குறிப்பிட்டு சொன்னால் இவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏன் மற்ற தலைவர்களை குறை சொல்லும் போது கோபம் வருவதில்லை என்று பார்த்தால், அதிலும் இவர்கள் அஷ்ரப் அலி தானவியின் முறையைத் தான் பின்பற்றுகின்றனர். அதாவது தங்கள் கொள்கைகளை மறைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்றும் தரீகாவாதியினர் தான் என்றும் சொல்லிக் கொண்டு உள்ளத்தில் கடும் விஷமான தேவ்பந்திய கொள்கைகளை மறைத்து மக்கள் மத்தியில் விஷத்தை தூவுகின்றனர்.

பாருங்கள்! அஷ்ரப் அலி தானவியின் தஸவ்வுப் எப்படிப்பட்டது என்று அவரே விளக்குகிறார்: 'தானவியிடம் இதுவரை பைஅத் செய்து கொள்ளாத ஒருவர், (பைஅத் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்துள்ளார்) அவர் கனவு காண்கிறார், அஷ்ரப் அலி தானவியின் பெயரை கலிமாவில் ஓதுவதாக. அவர் தனது கடிதத்தில் தானவிக்கு எழுதுகிறார்:

'இப்படி ஓதுவது சரியல்ல என்பது எனக்குக் கனவிலும் புரிகிறது. ஆனால் நான் விரும்பாமலேயே எனது நாவு இதையே இரண்டு, மூன்று முறை கூறுகிறது… அப்போது தங்களை என் முன் காணுகிறேன்….இதனிடையே நான் விழித்துக் கொண்டேன். கனவிலே நடந்த தவறு பற்றி நினைவு வந்தவுடன், நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன், இந்த நினைவை மனதை விட்டுப் போக்க வேண்டுமென்று. பிறகு திரும்பிப் படுத்து நாயகத்தின் மீது 'ஸலவாத்' ஓதி, தவற்றுக்குப் பரிகாரம் காண முயலுகிறேன். ஆனால், அப்போதும் 'அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வ மவ்லானா அஷ்ரப் அலி' என்றே என் நாவில் வருகிறது. நான் தூங்கி விடவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஆனால் நான் சுய இஷ்டத்தோடு இல்லை. கட்டுண்டவனாக இருக்கிறேன். நாவும் எனது இஷ்டத்தில் இல்லை!'

இக்கடிதத்திற்கு தானவி பதலி எழுதினார்கள் 'இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் யாரின்பால் செல்ல நாடுகிறீர்களோ அவர் சுன்னத்தைப் பின்பற்றியவரேயாவார்' என்று.

-அல் இம்தாது மாசிகை ஹிஜ்ரி 1326 ஸபர் மாதம் பக்கம் 35.

-தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களும் தக்க பதில்களும் பக் 153, 154.

இந்த சம்பவத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள்! கனவில் மட்டும் அஷ்ரப் அலியின் பெயரை கலிமாவில் ஓதவில்லை. நினைவிலும் ஓதுகிறார். அதில் தான் சுய நினைவில் இல்லை என்கிறார். சுய நினைவற்ற யாராவது ஒருவர் தான் சுய நினைவில் இல்லை என்று சொன்னதுண்டா? ஒருவர் சுயநினைவற்ற நிலையில் செய்த செயலை அவர் நினைவிற்கு வந்ததும் செய்யும் போது பார்த்தவர் சொன்னால், அப்படியா? நான் அப்படிச் செய்தேனா? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். ஆனால் இங்கு தமக்கு சுய நினைவு இல்லை என்பதை சுய நினைவில்லாத போதே கண்டு கொண்டதாகவும் ஒருவர் கூறுகிறார் என்றால் இந்த மோசடித்தனத்தை, அதாவது தான் (அஷ்ரப் அலி) நபித்துவத்தை தாவாப் பண்ணுவதை யாராவது கண்டு கொண்டால் தப்பிப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்திக்  கொண்டார். ஆனால் கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத்தான் என்பது போல் மாட்டிக் கொண்டார்.

சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த எந்த ஒரு ஷெய்காவது சுய நினைவுடன் தன்னை நபி என்று அழைக்கச் சொன்னார்களா? அவ்வாறு அழைக்குமாறு ஊக்கப்படுத்தினார்களா? இதுதான் குப்று என்னும் சகதியில்; அஷ்ரப் அலி மாட்டிக் கொண்ட கதை! இதற்காகத்தான் மீரட் மௌலானா அவர்கள் இவரை காபிர் என்று பத்வா கொடுத்தார்கள்.

இதனால்தான் அஷ்ரப் அலி வஹ்தத்துல் வுஜூது ஞான சித்தாந்தத்தை போதிக்கும் உண்மை ஸூபியாக்களை சாடினார் போலும்! இந்த அடிப்படையில்தான் நூரிய்யா தரீகாவினர் அஷ்ரப் அலியின் ஞானத்தை ஏற்றுக் கொண்டனர் போலும்.

துரோகங்கள்;:

1. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை போதித்த, வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றுக் கொண்டு அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருந்து குருத் துரோகம் செய்துவிட்டார்.

2. இஸ்லாமியர்கள் அனைவரும் நாட்டுக்காக ஜிஹாத் செய்ய வேண்டும் என்று உலமாக்கள் கட்டளையிட்ட போது, அதை ஏற்றுக் கொள்ளாது நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டது. அவர்களிடமிருந்து அதற்காக மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டது. கீழ்காணும் ஆதாரத்தைப் பாருங்கள்!
மௌலானா மர்ஹும் தானவி (காலம் சென்ற மௌலானா அஷ்ரப் அலி தானவி) யின் சகோதரர் சி.ஐ.டி.யாக குற்றப் புலனாய்வுத் துறையில் பெரிய அதிகாரியாக இறுதிவரை இருந்தார். அவர் பெயர் மஜ்ஹர் அலி என்பதாகும்.

(நூல்: மக்தூபாத்தே ஷைகு இரண்டாம் பாகம், பக்கம் 297-299. ஆசிரியர்: ஹுசைன் அஹ்மத் மதனி

மௌலவி ஹிப்ஜுர் ரஹ்மான் சாகிபுக்கு பதில் தரும் வகையில் கல்கத்தா ஜம்இய்யத்துல் இஸ்லாம் சபைத் தலைவர் மௌல்வி ஷப்பீர் அஹ்மத் சாகிப் தேவ்பந்தி கூறியதாவது:

இதோ பாருங்கள்! எங்களைச் சேர்ந்தவர்களாலும் உங்களைச் சேர்ந்தவர்களாலும் பெரும் சான்றோரெனவும், தலைவரென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டவர் மௌலானா அஷ்ரப் அலி தானவி. அவருக்கு அரசாங்கத்திடமிருந்து மாதந் தோறும் அறுநூறு ரூபாய் தரப்பட்டு வந்ததென்று அவரைப் பற்றி சிலர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.

நூல்: மகாலிமத்துஸ் ஸத்ரைன் (தலைவர்களின் பேச்சு) பக்கம் 10, 11.

தேவ்பந்திலுள்ள நத்வத்துல் உலமா நிறுவனத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி அவர்களின் பத்திரிகையான அன்னத்வா இவ்வாறு கூறுகிறது.

'ஆலிம்களின் முக்கியக் கடமை ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையை வளர்ப்பதேயாகும். (அன்னத்வா, பக்கம் 5 ஜூலை 1908)
முழு இஸ்லாமிய உலகத்திற்கும் விரோதமாக, நாட்டிற்கு விரோதமாக ஆங்கில அரசின் கைக்கூலியாக செயல்பட்ட அஷ்ரப் அலி மகானா? சொல்லுங்கள்.

3. இறுதி நபியான முஹம்மத் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என்று ஏற்றுக் கொண்டு விட்டு, இல்லை இல்லை நானும் ஒரு ரஸூல்தான் என்று ஒப்புக் கொண்டு பிரகடனப்படுத்தியது.

4. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை, ரஸூலின் முஹப்பத்தைப் பற்றி பேச, படித்துக் கொடுக்க என்று சம்பளம் பெற்றுக் கொண்டு அங்கு தேவ்பந்திய வஹ்ஹாபிய விஷக் கொள்கையை கான்பூர் மற்றும் ஏனைய மக்களுக்கு மத்தியில் பரப்பியது.

இது போன்ற எண்ணற்ற நம்பிக்கைத் துரோகங்கள் அஷ்ரப் அலி தானவியால் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டுள்ளன.

கொள்கைகள்:

1. ஜைது கூறுவதைப் போன்று பெருமானாரின் பரிசுத்தக் குணாதிசியங்களில் அவர்களுக்கு இல்முல் ஙைப் (மறைவான விஷயத்தைப் பற்றிய ஞானம்) உண்டு எனத் திட்டப்படுத்தப்படுவது உண்மையான ஒன்றாயிருக்குமேயானால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் யாதெனில், இங்கு ஙைப் (மறைவானவற்றை பெருமானார் அறிவார்கள் என்னும் விஷயத்தில்) கொஞ்சத்தை மட்டும் அறிகின்றார்களா? அல்லது சகல மறைவான விஷயங்களையும் (பெருமானார்) அறிகிறார்களா? என்பதைப் பார்க்க வேண்டும். இனி கொஞ்சத்தை மட்டும்தான் அறிகிறார்கள் எனில், இதில் பெருமானாருக்கு என்ன தனிப்பட்ட விசேஷமிருக்கிறது? இத்தகைய மறைவான ஞானம்தான் ஜைது, உமர் போன்ற ஏன்? ஒவ்வொரு மதளைக் குழந்தைக்கும், பைத்தியக்காரர்களுக்கும், பின்னும் சகல பிராணிகளுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் கூடத்தான் இருக்கின்றது.

ஆதாரம்: ஹிப்ளுல் ஈமான் பக்கம் 7, 8. தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களும் தக்க பதில்களும் பக் 156, 157.

அதே ஹிப்ளுல் ஈமானில் மூன்றாவதாக ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, 'ஜைது என்பவர் சொல்கிறார்: இல்முல் ஙைப் (மறைவான விஷய அறிவு) இரு வகைப்படும். ஒன்று பித்தாத்து (பிறரால் கொடுக்கப்படாமல் தனக்குத் தானே உள்ள அறிவு) இந்தக் கருத்துப்படி அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் ஆலிமுல் கைபாக (மறைவான விசயத்தை அறிந்தவராக) ஆக முடியாது. மற்றது பில் வாஸித்தா (பிறரால் அறிவித்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் அறிவது). இந்தக் கருத்துப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  ஆலிமுல் ஙைப் – மறைவான சங்கதிகளை அறிந்தவர்களாய் ஆவார்கள்.  ஜெயிது இப்படிச் சொல்வதும், இம்மாதிரி நம்பிக்கை வைப்பதும் எப்படி? (சரியா, இல்லையா?) விளக்கிக் கூறுங்கள். நற்கூலி கொடுக்கப்படுவீர்கள்' என்ற கேள்விக்கு அஷ்ரப் அலி தானவி விடை எழுதியதில் இறுதியாக 'மேலே கூறப்பட்டவைகளினால் ஜைதின் கொள்கையும், அவரின் வார்த்தையும் ஆதிமுதல் அந்தம் வரையும் தவறானது. மார்க்க ஆதாரங்களுக்கு முரணானது என்பதும் தெளிவாகிவிட்டது. யாரும் அதை நம்புவதும் கூடாது. ஜைது தவ்பாச் செய்து சுன்னத்தை (மார்க்கத்தை)ப் பின்பற்றுவது அவசியமாகும்'.

இதிலிருந்து அஷ்ரப் அலி தானவி அல்லாஹுத்தஆலாவிற்கு தாத்திய்யான இல்முமில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அதாயிய்யான இல்முமில்லை என்றும் பதிலளித்திருக்கிறார். இது குப்ரான வார்த்தை இல்லையா? இந்த மாதிரியான குப்ரான வார்த்தைக்காக வேண்டித்தான் மக்கா, மதீனா உலமாக்கள் அவர் மீது ஹுஸாமுல் ஹரமைன் ஷரீபைன் என்ற தலைப்பில் குப்ரு பத்வா வெளியிட்டனர். எந்த ஒரு முஸ்லிமும், முஸ்லிமல்லாதோரும் இத்தகைய வாசகத்தை தமது தலைவர் மீது எடுத்தெழுத மாட்டார். இத்தகைய கீழ்த்தரமான கொள்கையைக் கொண்டவர்தான் இந்த அஷ்ரப் அலி தானவி.

2. சுவர்க்க நகைகள் (பிஹிஷ்திஜேவர்) என்ற நூலில் குப்பர் -ஷிர்க் சம்பந்தமான விளக்கம் என்ற தலைப்பில் கீழ்காண்பவற்றை குப்ர், ஷிர்க் என்கிறார்.

ஒரு பெரிய மனிதர் அல்லது ஒரு பீரைப் பற்றி அவர்கள் நம்முடைய எல்லா நிலைமைகளையும், எல்லா நேரத்திலும் அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விசுவாசம் கொள்வது, தூரமான இடத்திலிருந்து யாரையும் அழைப்பதும் அவ்வாறு அழைப்பது அவருக்குத் தெரியுமென்று எண்ணுவதும், (அல்லாஹ்வைத் தவிர வேறு) யாரிடமாவது தமது கோரிக்கைகளை வேண்டுவது, யாருக்கேனும் 'ஸஜ்தா' செய்வது, யார் பெயரிலாவது நேர்ச்சை செய்து மிருகங்களை வளர்த்து வருவது- அல்லது அவர் பேரால் பலி கொடுப்பது, (அல்லாஹ் அல்லாமல் ) வேறு யாருக்காவது நேர்ச்சை நேர்வது, கப்ரையோ அல்லது வேறு ஸ்தலத்தையோ வலம் சுற்றி வருவது, பிறரின் முன்னால் தலை தாழ்த்துவது-குனிவது, சிலைபோல் ஆடாமல் அசையாமல் நிற்பது, எவரது பெயரிலாவது நேர்ச்சை செய்து குழந்தைகளின் காது, மூக்கை குத்துவது, காதில் வாளி அல்லது மூக்குத்தி போட்டு வைப்பது, எவரது பெயரிலாவது நேர்ச்சை செய்து புஜத்தில் காசை கட்டி வைப்பது அல்லது கழுத்தில் கயிறு போடுவது, பூமாலையிடுவது, பூவால் பின்னப்பட்ட (பூ முக்காடு) 'ஸிஹ்ரா' முகத்திலே கட்டுவது, அலீ பக்ஷ் -ஹுஸைன் பக்ஷ் அப்துந் நபி போன்ற பெயர்களை வைப்பது, எந்தப் பெரியாரின் பெயரையும் (வஜீபாவாக) தினம் வழமையாக ஜெபித்து வருவது, அல்லாஹ்வும் ரஸூலும் நாடினால் இன்ன காரியம் ஆகிவிடும் எனக் கூறுவது, உருவப்படம் வைப்பது,எந்தப் பெரியாரின் படத்தையும் 'பரக்கத்' என்று கருதி வைப்பதும் அதற்கு மரியாதை செய்வவது போன்றவை குப்ர், ஷிர்க் என்று கூறுகிறார்.

-சுவர்க்க நகைகள் பக்கம் 74-77

இதே கருத்தைத்தான் தஃலிமுத்தீன் (தமிழ்) பாகம் 1 பக்கம் 33-38 வரையில் ஷிர்க், பித்அத் என்று கூறுகிறார்.

இதற்குரிய சுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் விளக்கத்தைக் காண: https://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/04/suvarkam.pdf

3. பித்அத் -கெடுதலான சடங்குகள்-செயல்கள் சம்பந்தமான விளக்கம் என்ற தலைப்பில் கப்ருகளின் மீது ஆடம்பரமாக விழா நடத்துவது, விளக்கு எரிப்பது, பெண்கள் அங்கு போவது, போர்வை போர்த்துவது, கப்ருகளின் மீது கெட்டியான கட்டிடம் கட்டுவது, கப்ருகளை முத்தமிடுவது,கூடு-கொடி கட்டுதல், எந்த ஒரு பொருளையாவது தீண்டத்தாகது என நினைப்பது, முஹர்ரம் மாதத்தில் வெற்றிலை போடாதிருப்பது, மறுதோன்றி இலை பூசாமலிருப்பது, இறந்தவர்களுக்காக 3வது, 10வது, 30வது 40 வது நாள் பாத்திஹாவை மிகவும் அவசியம் என நினைத்து செய்வது போன்றவைகளை குறிப்பிடுகிறார். -சுவர்க்க நகைகள் பக்கம் 78.

4. குறிப்பிட்ட நாளில்தான் ஈஸால் தவாப் செய்ய வேண்டும் என்பனப் போன்றவை, மீலாத் விழாக்கள் போன்றவை பித்அத்துகளே.  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் மகிழ்ச்சி உலகியல் மகிழ்ச்சியல்ல. மார்க்க இயல் மகிழ்ச்சி ஆகும். இது மிக ஒழுக்கக் குறைவான செயலாகும்.

பெரியோர்களுக்காக உரூஸ் கொண்டாடுகிறார்கள். இதுவும் வீணும் எல்லை மீறிய செயலும் ஆகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு ஜியாரத்திற்காக சென்றால் பரவாயில்லை. பரக்கத் என்ற நோக்கத்தில் செல்வது கூடாது.

எங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மவ்லுதும், பயானும் நடக்கிறதோ அங்கே பித்அத்தானவைகளும் நடப்பதால் அதை கண்டிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு தோழுகைக்குப் பின்  அல்லது பஜர், அஸருக்குப் பின் சப்தமிட்டு திக்ருச் செய்வது பித்அத்தாகும்.

மற்ற நபிமார்களின் புகழை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வதால் அந்த நபிமார்களுக்கு குறைவு ஏற்படுகிறது. (என்னே! அறியாமை! நபியைப் புகழ்வது இவருக்கு அந்தளவிற்கு எரிச்சல்) என்றும் ஆச்சரியமான கேள்விகளுக்கு அற்புதமான பதில்கள் என்ற நூலின் 36 முதல் 73 வரையிலுள்ள பக்கங்களில் காணக் கிடைக்கின்றன.

அஷ்ரப் அலியின் ஷெய்கு ஹாஜி சாகிப் அவர்கள் 'ஹப்த் மஸாலா' என்ற பெயரில் நூல் எழுதி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை விளக்கினர். இவரின் கூற்றுப் படி அஷ்ரப் அலியின் ஷெய்கும் ஷிர்க்கு செய்த காபிராகிறார். நவூதுபில்லாஹி…

4. புதிய புதிய கனவுகளைக் கண்டதாகவும் அதற்கு பலன் கூறுவதாகவும் கூறி அதன் மூலம் தமது தீய வஹ்ஹாபியக் கருத்துக்களை பலப்படுத்துவது இவர் போன்ற தேவ்பந்திகளின் சிறப்பு. சுவர்க்க நகைகள் பக்கம் 89 ல் ஹாபிஸ் முன்ஸி, ஷராபதுல்லாஹ் (சீப் ரீடர்-பென்ஷனர்) அக்டோபர் 1901ல் அலீகரிலிருந்து தாம் எழுதிய ஒரு கடிதத்தில் தாம் கண்ட நீண்ட கனவைப் பற்றி குறிப்பிட்டுக் கடைசியில்,
'
ஒரு பெருங்கூட்டம், ஹஜ்ரத் மௌலானா அவர்கள் முன் நின்று பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. ஹழ்;ரத் நபிகள் நாயகம (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆர்ப்பாட்டம் புரியும் கூட்டத்தினரைக் கண்டு கூறுகிறார்கள்: 'அஷ்ரப் அலீ எழுதியது முற்றிலும் உண்மை!', பிறகு என்பக்கந் திரும்பி அவர்கள் கூறுகிறார்கள்: 'அஷ்ரப் அலியிடம் கூறி விடவும் அவர் எழுதியவை முற்றிலும் உண்மை! ஆனால் இந்தச் சந்தர்ப்பம் அதற்கு சரியில்லையென்று…'

அஞ்சா நெஞ்சர் உண்மையை எவ்வித பயமும், ஒளிவு மறைவுமின்றி உரைத்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு பேசுவர் என்று இதன் மூலம் கூறுகிறார். தம்முடைய புகழை உயர்த்துவதற்காக நாயகம் அவர்களை எவ்வளவு தரம் தாழ்த்த வேண்டுமோ அந்தளவிற்கு தரம் தாழ்த்துவதுதான் தேவ்பந்திகளின்; கொள்கை! அதை அஷ்ரப் அலியும் செய்திருக்கிறார்.

ஹுஸாமுல் ஹரமைன் பத்வா:

குப்ரியத்தை மறைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் போதிக்கிறேன் என்ற பெயரில் வந்த அஷ்ரப் அலி தானவியை  அவரின் சொல், செயல்களை வைத்து  மக்கா, மதீனாவிலுள்ள உலமாக்கள் 34 பேரின் கையொப்பங்களோடு ஹுஸாமுல் ஹரமைன் என்ற பெயருடன் ஒரு பத்வா ஹிஜ்ரி 1328ல் வெளியானது.

இந்தியாவிலிருந்து பஞ்சாப், பெங்கால், மதராஸ், பலுசிஸ்தான், எல்லைப் புறம், குஜராத், சத்தியவார் முதலிய பகுதிகளிலும் பர்மாவிலுமுள்ள 268 உலமாக்கள் கையொப்பத்துடன் அஷ்ரப் அலி தானவி உட்பட்டோரை காபிர் என்று அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா என்ற பெயருடன் ஒரு பத்வா கிதாபு ஹிஜ்ரி 1345ல் வெளியானது.

நேரடி விசாரணையும் குப்ர் பத்வாவும்:

இது தவிர அஷ்ரப் அலி தானவி தம்மை ரஸூல் என்று சொல்வதை சரி கண்டதை  அப்போது மீரட் மாநகருக்கு வருகை தந்திருந்த அஷ்றபு அலி தானவிக்கு விளங்கும்படியாக ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் அவ்வல் 3 மீரட்டு மாநகரின் ஜும்ஆ பள்ளியில் அஷ்ரப் அலி தானவி தான் ஒப்புக் கொண்ட ரஸூலுத்துவ தாவாவிற்கு ஆதாரமிருப்பின் கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை விடப்பட்டது. முப்பது மணி நேரமும் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இறுதியில் நன்னம்பிக்கையுடையவர்களில் சிலர் அஷ்ரப் அலி தானவி தாம் சொன்னதற்கு வலிந்துரையாவது செய்யட்டும் என்ற நோக்கில் ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் அவ்வல் பிறை 5 ஞாயிற்றுக் கிழமை ஸுப்ஹில் மெயின் பஜார், ஜும்ஆ பள்ளியில் வைத்து வஃளு உபதேசம் செய்யும் போது மேற்படி மௌலவி சாகிபை நிர்பந்தப்படுத்தினார்கள். அதற்கு அந்த தானவி அந்த ரஸூலுத்துவ தாவா சரியில்லை என்று சொல்லவுமில்லை, அந்த குப்ரியத்தை விட்டு மீளவுமில்லை.

உபதேசம் முடிந்த பிறகு பகிரங்கக் கடிதம் மூலம் அவருடைய சமூகத்தில் மீலாதுந் நபி கூட்டம் சம்பந்தமாகவும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான சங்கதிகளைப் பற்றிய அறிவு சம்பந்தமாகவும் இன்னும் வேறு பல அவரது பொய் கற்பனை மஸ்அலாக்கள் விசயமாகவும், குறிப்பாக ரஸூலுத்துவ தாவா சம்பந்தமாகவும் உண்மையை விளக்கிக் கூறும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு சமூகமளித்த சகோதரர்கள் அறிவிக்கிறார்கள்: மேற்படி பொதுச் சபையில் இந்த பகிரங்கக் கடிதத்தைப் பார்த்ததும் தானவி றஸூல் கோபம் கொண்டு, நான் உங்கள் தகப்பனாரின் வேலைக்காரனல்ல என்று சொல்லிக் கொண்டு அவரும் அவருடைய சகாக்களும் அவசரமாகக் கிளம்பி விட்டார்கள்.

அதன்பின்னர் தகுதி வாய்ந்த மூன்று பெரியோர்கள் அவரின் இருப்பிடம் சென்று அவர்களுக்கு ஐந்து மணி நேரம் கழித்து அனுமதி கிடைத்து உள்ளே சென்ற போது, தானவி இந்த ரஸூலுத்துவ தாவாவை மறுக்கவோ அது விஷயமாக பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவோ மறுத்துவிட்டார்.

இதனால் தனாவியை காபிர் என்று மீரட் மௌலானா முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி ரஹிமஹுல்லாஹு அவர்கள் 'பர்ரத் மின் கஸ்வரா' என்ற பெயரில் பத்வா ஒன்றை ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 10 அன்று வெளியிட்டார்கள்.

அஷ்ரப் அலி தானவியின் குப்ரியத்தான வாசகங்களை வைத்து அவரை காபிர் என்று பத்வா வெளியிட்ட மக்கா, மதீனா உலமாக்களின் ஹுஸாமுல் ஹரமைன் பத்வா போக, தானவியிடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரின் குப்ரை அறிந்த பிறகு பத்வா வெளிவந்ததே!

அதன் பிறகும் அவரை மகான் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள். கேட்டால் அவர் தவ்பா செய்து விட்டாராம்! அதற்கு ஆதாரம் இருக்கிறதாம்! என்று சொன்னார்கள். அதற்கு, சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினர் ஆதாரம் இருப்பின் கொண்டு வாருங்கள் என்று மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தும் கொண்டு வரவில்லை. மூன்று மாதம் கழித்து  மார்ச் 1996 அஹ்லெ சுன்னத் பத்திரிகையில் பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அஷ்ரப் அலி தானவி தௌபா செய்து விட்டார் என்பதற்கு ஆதாரம் கொண்டு வரட்டும். அந்த ஆதாரத்திற்கு ரூபாய் பத்தாயிரம் அன்பளிப்பும் தருவதாக வாக்களித்து. ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. இன்றுவரை அதற்குரிய ஆதாரம் தரவில்லை. இருந்தால் தானே! தருவதற்கு!

ஆக மொத்தத்தில் அஷ்ரப் அலி தானவி ஒரு கடைந்தெடுத்த வஹ்ஹாபி மட்டுமல்ல: அவரின் குப்ரால் காபிராகிப் போனவர். அவர் எப்படி மகானாக, ஷெய்காக பரிணமிக்க முடியும்? அவரை ஷெய்காக ஏற்றுக் கொண்டவர்கள் கதியும், அவரை மகானாக போற்றுவோர் கதியும் அல்லாஹ்வுடைய வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஹதீதுகளின் அடிப்படையில் அதோ கதிதான். அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.

தானவி ஒத்துக் கொண்ட ஆஷிகே ரஸூல் அஃலா ஹழ்ரத்:

அஷ்ரப் அலி தானவியைப் பற்றி அவரைப் போற்றும் இணையதளத்தில் வந்திருக்கும் ஒரு செய்தி கட்டுரையில்:…
'
மௌலானா அஹ்மத் ரஜா கான் ஃபாஸில் பரேல்வி (1856 – 1921) அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வந்ததை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைப்பதில் புகழ்பெற்றவர் அவர்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஒருநாள் அஸருக்குப் பிறகு தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த வேளையில்தான் மரணம் பற்றிய தகவல் கிடைக்கின்றது. 'அல்லாமா! அஹ்மத் ரஜா கான் இறந்து விட்டாராம்..!' என்று அந்தத் தகவலைச் சொன்னார் ஒரு சீடர்.

அல்லாமாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மௌலானா என்றோ ஜனாப் என்றோ மரியாதை கொடுத்துச் சொல்லாமல் நான்கு வயதுப் பையனைக் குறித்துச் சொல்வதைப் போல அந்த மிகப் பெரும் மார்க்க அறிஞரின் பெயர் குறிப்பிடப்படுவது அல்லாமாவுக்குப் பிடிக்கவில்லை.

'யாரு? மௌலானா அஹ்மத் ரஜா கான் பரேல்வி அவர்களா?'

'ஆமாம். அல்லாமா!'

'இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்' எனச் சொன்ன அல்லாமா, 'வாருங்கள். அவருக்காகப் பிரார்த்திப்போம்' எனச் சொல்லியவாறு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கு இருந்தவர்களும் கைகளை ஏந்தி பிரார்த்தித்தனர்.

ஆனால் இது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அல்லாமா பிரார்த்தனையை முடித்ததும் வாய் திறந்து கேட்டு விட்டார்கள். 'அல்லாமா! ஒரு பித்அத்தியை (இறைத்தூதரின் வழிமுறைக்கு அப்பாற்பட்ட புதுமையானவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றவர்) மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதா?' என்றனர்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி சொன்னார்: 'அவர் பித்அத்தி அல்லர்; முஹப்பதி (மிகையான அன்பு கொண்டவர்). ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் கொண்டிருக்கும் போது மிகையான பற்றுடன் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்…'

அல்லாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக இன்னொருவர் சொன்னார்: 'அவர் உங்களை காஃபிர் – இறைமறுப்பாளர்  என அறிவித்தவராயிற்றே..! அப்படியிருந்தும் அவருக்காக நீங்கள் பிரார்த்தித்தது ஏனோ?'

அல்லாமா மிகவும் நிதானமாக, மென்மையாக பதிலளித்தார்: 'மகனே! நான் ஒரு இறை மறுப்பாளன் என்று அவர் என்னைப் பற்றி உறுதியான தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்தார். நான் எடுத்துரைத்த கருத்துகளில் ஏதோவொன்று அவருடைய பார்வையில் இறை நம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் அந்தத் தீர்மானத்திற்கு வந்து விட்டிருக்க வேண்டும். என்னுடைய பேச்சையோ, செயலையோ பார்த்து இறைவனையே மறுக்கின்றவர் இவர் என்கிற தீர்மானத்திற்கு வந்து விட்ட பிறகு அவர் என்னைக் குறித்து 'காஃபிர்' என அறிவிக்காமல் இருந்திருப்பாரேயானால் அவர் 'காஃபிர்' ஆகிவிட்டிருப்பார். ஃபிக்ஹு சட்டத்தின் உறுதியான விதி இது'.
'உங்களில் எவரும் தனது தந்தையை விட, தனது பிள்ளையை விட உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் விட என்னை அதிகம் நேசிக்கும்வரை மூஃமினாக முடியாது' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

என்ற ஹதீதின் பிரகாரம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அளவுகடந்த நேசம் வைத்து தன்னை முஃமினாக நிலைநிறுத்தி மக்கள் மனதில் அன்புக்கு உரித்தான அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் பாழில் பரேலவி அவர்களை அவரது எதிரியான அஷ்ரப் அலி தானவியே முஃமின் என்று சொல்லி விட்டார். ஆனால் அஷ்ரப் அலியின் நிலையை மேற் கூறிய அவரின் கொள்கை, கோட்பாடுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

முடிவுரை:

நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

'மூன்று விஷயங்கள் ஒருவரிடத்தில் இருப்பின் அவன் ஈமானின் சுவையை கண்டு கொள்வான்.

1) ஏனைய அனைத்தையும் விட, அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனிடத்தில் உவப்பிற்குரியவர்களாக இருக்க வேண்டும்.
2) ஒரு மனிதரை நேசிப்பதாயின், அவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்க வேண்டும்.
3) நரக நெருப்பில் போடப்படுவதை ஒருவன் எந்தளவு வெறுப்பானோ, அந்தளவு மீண்டும் இறைநிராகரிப்புக்கு திரும்புவதை வெறுக்க வேண்டும்.' (புகாரி, முஸ்லிம்).

இறைநேசர்களும் அவர்களின் அடையாளங்களும்:

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

'நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்' (3:31)

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் இறைவனை நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக் கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். '.(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'  என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: ஹழ்ரத் உமர்(ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்.

இதன் அடிப்படையிலேயே இமாம்கள் இறைநேசரை அறிவதற்குரிய நியதியை வகுத்து தந்துள்ளனர்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், 'வலி என்பவர்,
 
1.அல் ஆலிமு பில்லாஹ்-இறைவனைப் பற்றி அறிந்தவராக இருப்பார்
.2.அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டளைகளை சரியாகக்
  கடை பிடிப்பவராக இருப்பார்.
3.அல்முக்லிஸ் ஃபீ இபாததிஹி – அவனை வணங்கி வழிபடுவதில்  பரிசுத்தமானவராக இருப்பார்' என விளக்கமளிக்கிறார்கள்.
 
இமாம் ஷவ்கானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்,

 இறை வேதத்தை முற்றிலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்று   பவராக இருப்பவரே  இறைநேசராக இருக்கமுடியும்' எனக் கூறுகிறார்கள்.      

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல் :திர்மிதி

இந்த ஹதீதுகளின் அடிப்படையில் அஷ்ரப் அலி தானவி கொண்ட கொள்கை, செய்த செயல்கள் குப்ரியத்தை ஏற்படுத்தி அவரை நரகிற்கு கொண்டு சென்றதா? அல்லது முஃமின்களிடையே அன்பை ஏற்படுத்தி அவரை இறை நேசராக்கியதா? நீங்களே சிந்தித்து, முடிவுக்கு வாருங்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்த போதுமானவன். அல்லாஹு அக்பர்.!

மரணம்:

தாம் வாழ்ந்த இறுதி காலம் வரை (82 வருடம் 3 மாதம் 11 நாட்கள்) தாம் கொண்ட வஹ்ஹாபிய தேவ்பந்திய கொள்கையிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 1362 ரஜப் 16 (19-6-1943) அன்று மரணமடைந்தார்.

முற்றும்.