ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
ஒவ்வொரு நபிக்கும் சுவனத்தில் ஒரு துணைவர் இருப்பார். அத்தகைய என் துணைவர் உதுமான்’ எனப் போற்றிய பெருந்தகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஸாஹிபுல் ஹிஜ்ரத்தைன் (பிறந்த மண்ணை) இருமுறை துறந்து சென்ற தோழர், துன்னூரைன் – இரண்டு ஒளிகளைப் பெற்றவர் என்று சரித்திரம் புகழும் ஸையிதினா உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரை,
உதுமான் இப்னு அப்பான் இப்னு அபுல் ஆஸ் இப்னு உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்துல் மனாஃப் என்று தந்தை வழியிலும்,
உதுமான் இப்னு உர்வா பின்த்து குறைஷ் இப்னு ரபீஃஆ இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் என்று தாய் வழியிலும்
ஆறாவது தலைமுறையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேருகிறது.
இவர்களின் தாயைப் பெற்ற அன்னையார் உம்முல் ஹக்கீம்-அல்பைழா அவர்களும் நபி பெருமானாரின் தந்தையார் அப்துல்லாஹ் அவர்களும் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பிறந்த ஒரே தாய்வயிற்று மக்களாவர்.
‘காமிலுல் ஹயா இ வல் ஈமானம் – நாணமும் (இறை) நம்பிக்கையும் நிரம்பப் பெற்றவர்’ என விண்ணகமும், மண்ணவரும் போற்றும் அம் மானமிகு மாண்பாளர் நபிகளார் அவர்கள் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து ‘தாயிஃப்’ நகரில் பிறந்தார்கள்.
நபிகளார் பிறந்த ஹாஷிம் கோத்திரத்தைப் போன்றே, உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த உமையா கோத்திரமும் மக்கமா நகரில் மிகுந்த செல்வாக்கும், கண்ணியமும் பெற்று விளங்கிய ஒரு கோத்திரமாகும்.
இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்திலும் இவர்கள் விபச்சாரத்தையும், மதுவின் வாடையையும் நுகர்ந்தவர்கள் அல்லர். பொறாமை, வஞ்சக சூது, புழுக்கத்தை விட்டும் விடுபட்டிருந்த ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த சிந்தனையில் நபிகளாருக்கு ஒரு கண்ணிய இடமிருந்தது. இருப்பினும் அதிகமான பழக்க உறவு ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடனேயே இருந்தது. இருவருக்குமிடையே இருந்த வாணிப உறவு இதற்கு காரணமாயிருக்கலாம்.
பெருமானாரின் நபித்துவத்தை ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் ஏற்ற அன்று உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் இருக்கவில்லை. வாணிப நிமித்தமாக ஸிரியா சென்றிருந்தனர். திரும்பியதும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றனர். அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கு வந்துற்றார்கள். அவர்களின் சொற்களில் இருந்த உண்மையைக் கண்டு உதுமான் நாயகம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.உமையாக்களில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் உதுமான் நாயகம் அவர்களாக இருந்தார்கள். பல்வேறு தொல்லைகளை அவரது சிறிய தந்தை கொடுத்தபோதும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கவே இல்லை.
‘நானும் உதுமானும் எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சாயலாக இருக்கிறோம் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த பொன்மொழியும், ‘குணத்திலும் உதுமான் என்னையே ஒத்திருக்கிறார்’ என ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த மற்றொரு பொன்மொழியும் உதுமான் நாயகத்தைப் பற்றி நமக்கு முழுமையாக எடுத்துரைக்கிறது.
பெருமானாரின் மகளான ருக்கையா, உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் அபூலஹபின் இரு மக்களான உத்பா, உத்தைபா என்ற இருவருக்கும் மணமுடிக்கப் பெற்றிருந்தனர். (மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தனர் என்று மற்றொரு கருத்தும் உள்ளது) அபூலஹபையும் அவள் மனைவி உம்முஜமீலையும் சபித்து அல்லாஹ்விடமிருந்து வேதவசனங்கள் இறங்கின. பெருமானர் அவர்கள் அவற்றை ஓதிக்காட்ட கேட்ட அபூலஹபும், உம்முஜமீலும் தங்கள் மக்களாhன உத்பா, உத்தைபா இருவரையும் பலவந்தப்படுத்தி ருகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் விவாகபந்தங்களிலிருந்து விலக்கிடச் செய்தனர்.
பெருமானார் இதனால் துயரப்பட வேண்டும் என்ற நோக்கினாலேயே அவர்கள் இவ்வாறு செய்தனர். செல்வச் செழிப்போடு விளங்கிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாயகியை திருமணம் முடித்ததால் பெருமானாரின் உள்ளம் பெருமகிழ்வு கொண்டது.
நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்த போது, ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாச்சியாரோடு முதல் அணியிலேயே ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார்கள்.
அபிசீனிய வாழ்க்கையிலேயே அத்தம்பதிகள் தங்கள் தலை மகனைப் பெற்றெடுத்து அவருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரும் சூட்டினர். இதனாலேயே அவர்களுக்கு அபூஅப்துல்லாஹ் என்றும் அழைக்கப் பெற்றார்கள். ஆயினும் அம்மகனார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழவில்லை.
அபிசீனியாவிலிருந்து திரும்பி மக்காநகர் வந்த உதுமான் நாயகம் அவர்கள், மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் துவங்கிய போது ஹழ்ரத் உதுமான் நாயகமும் தம் மனைவி ருகையா நாயகியோடு மதீனா சென்று விட்டார்கள்.
மதீனாவில் நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த ஹழ்ரத் அவ்ஸ் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விருந்தினராகத் தங்கியிருந்தார்கள்.
பத்ருபோர் நடந்தபோது உதுமான் நாயகம் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவரது மனைவியார் சுகமில்லாமல் இருந்தனர். அவர்களை கவனித்துக் கொள்ள மதீனாவிலேயே அன்னாரை தங்கச் சொன்னது நபிகளாரே. அந்த நோயின் கடுமையிலேயே துணைவியாரை அவர்கள் இழக்க நேரிட்டது.
பத்ருபோரில் வெற்றிபெற்றவுடன் கிடைத்த ஙனீமத்துப் பொருளில் உதுமான் நாயகத்திற்கும் ஒரு பங்கை கொடுத்தார்கள். போரில் கலந்துகொண்டதற்கான மறுமைப் பலனும் அவர்களுக்கு உண்டு என நன்மாராயமும் கூறினார்கள்.
அதன்பிறகு தம்முடைய அடுத்த மகளார் உம்முகுல்தூமையும் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்து வைத்தார்கள்.
அடுத்து நடந்த உஹதுப் போரில் உதுமான் நாயகமும் கலந்து கொண்டார்கள்.
ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு 1400தோழர்களுடன் ஹுதைபியாவை வந்தடைந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசியிடம் தூது செல்ல ஹழ்ரத் உதுமான் அவர்களையே அனுப்பி வைத்தார்கள். பெருமானார் போர்புரியவரவில்லை. இறைவின் திருவீட்டை தரிசிக்கவே வந்துள்ளனர் என்று குறைஷிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்களில் எவரையும் மக்காவினுள் அனுமதிக்க மறுத்து நின்றனர்.
‘உதுமானே! எங்களிடையே உமது கண்ணியம் என்றும் மதிக்கத்தக்கதாகவே உள்ளது. நீர் வேண்டுமானால் கஅபாவைச் சுற்றிவர நாங்கள் அனுமதிப்போம்’ என குறைஷிகள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே தனிச் சலுகை காட்டினர்.
‘ஆண்டவனின் தூதரை பிரிந்து ஒருக்காலும் அவ்வாறு நான் செய்யமாட்டேன்’ என ஏற்க மறுத்துவிட்டார்கள்.
தர்க்கத்தால் உதுமான் நாயகத்தை திரும்பிச் செல்லவிடாது தாமதிக்கச் செய்தான் குறைஷிகள். அந்த தாமதத்தால் அவர்கள் கொல்லபட்டே போனார்களோ என்ற ஐயம் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த தோழர்களிடையே எழுந்தது.
அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பழிதீர்க்க ஹுதைபியாவின் ஸஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானார் அவர்களின் கரம் பிடித்துப் பிரமாணம் செய்தார்கள்.
‘நிச்சயமாக உதுமான் அல்லாஹ்வுடையவும் அவனின் தூதருடையவும் நாட்டஙக்ளின் பேரிலேயே சென்றிருக்கிறார்’ என அறிவித்த பெருமானார் அவர்கள் தங்கள் இடக்கரத்தை நீட்டி வலக்கரத்தால் அதனைப் பற்றியவர்களாக, ‘இறைவா! இதோ ஒன்று உதுமானின் கரம். மற்றொன்று என் கரம். உதுமானுக்குப் பகரமாக நான் பிரமாணம் செய்கிறேன்’ என்றார்கள்.
பின்னர் உதுமான் நாயகம் திரும்பி வந்தபோது அவர்களை பெருமகிழ்வோடு வரவேற்ற தோழர்களிடம், இன்னும் ஓராண்டு காலம் மக்காவிலிருந்தாலும் சரியே, அண்ணலார் வந்துசேராத வரை நான் ஒருபோதும் கஅபாவைச் சுற்றியிருக்கவே மாட்டேன்’ என ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தி அவர்களின் இதயத் தூய்மையை காட்டியது.
‘பீரே ரூமா’ என்ற நல்ல நீர் கிடைக்கும் கிணறு மதீனாவில் இருந்தது. அதுவும் அது யூதனிடம் இருந்தது. அதிலிருந்து நீர் எடுக்க முஸ்லிம்களை தடுத்து நின்றான். குடிப்பதற்கு நல்லநீர் கிடைக்காமல் தங்கள் தோழர்கள் படும் துயர் கண்டு தாஹா நபி அவர்களும் துயருற்றார்கள்.
‘பீரேரூமா’வை விலைபேசிப் பெற்று முஸ்லிம்களுக்கு உடமையாக்குபவர் உங்களில் எவரோ –நான் அவருக்கு சுவனத்தைப் பற்றி உறுதி கூறுகிறேன்’ என்று நாயகம் அவர்கள் அறிவித்தார்கள்.
உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை யூதனிடமிருந்து விலைபேசி வாங்கி முஸ்லிம்களுக்கு உடமையாக்கி வைத்தார்கள்.
மதீனாவின் பள்ளியில் தொழுவதற்கு இடம் போதாமை ஏற்பட்டபோது, பள்ளியைச் சூழ உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி மதீனாவின் பள்ளியை விரிவுபடுத்த அர்ப்பணித்தார்கள்.
ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் பெருமானார் அவர்கள் தபூக் போருக்கு ஆயத்தமானபோது, முப்பதினாயிரம் வீரர்களையும் பதினாயிரம் புரவிக்காரர்களையும் கொண்ட அப்படையில் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதினாயிரம் பேர்களுக்கான முழுச் செலவையும் ஏற்றார்கள்.
தபூக்போரிலிருந்து திரும்பிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மனைவி உம்முகுல்தூம் அவர்களின் மரணச் செய்தியே வரவேற்றது. தம் மருமகரை அணைத்து ஆறுதல் வழங்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ உதுமானே! என்னிடம் இன்னும் நாற்பது பெண்மக்கள் இருப்பினும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக உமக்கு மணமுடித்து அளிப்பேன்’ என்று கூறினார்கள்.
மதீனாவை விட்டும் போருக்காக வெளிச் செல்ல நேர்ந்த இரு சந்தர்ப்பங்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவில் தம் கலீபாவாகவும் நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.
அவ்வப்போது இறைவனிடமிருந்து இறங்கிக் கொண்டிருந்த இறைவசனங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஹழ்ரத் உதுமான் ரலில்லாஹு அன்ஹு அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
முந்திய இரு கலீபாக்களான ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக இறுதிவரை நின்றார்கள். ஹிஜ்ரி 24ஆம் வருடத்தில் ஹழ்ரத் உமர் நாயகம் அவர்கள் ஷஹீதான பின்பு மூன்று நாட்கள் கழித்து நான்காம் நாள் காலை பள்ளியில் கூடியிருந்த மக்கள் முன்னே ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் உதுமான் நாயகத்தை கலீபாவாக அறிவித்து, தாமே முதலாவதாக அவர்களின் கரம் பற்றி பிரமாணம் செய்தனர். அதன்பின் மற்றவர்கள் பிரமாணம் செய்து முடித்தனர்.
பரந்துவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் ஏற்பட்ட கலகங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதி நிலவச் செய்தார்கள்.
ஸிரியாவில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் ரோமர்கள் ஆர்மீனியாவிலும் பதுங்கிக் கொண்டனர். அங்கும் கலகக்கொடி ஏந்தவே தமது ஆளுநர்களை அனுப்பி அதை அடக்கினர்.
ஸிரியாவின் ஆளுநராக திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது எல்லைக்கு அருகிலுள்ள ரோமர்களிடம் மிகவும் உஷாராகவே இருந்தார்கள். அவ்வப்போது ரோமர்களின் துள்ளல்களையும் அடக்கியே வந்தனர். இருப்பினும் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றாதவரை ரோமர்கள் அடங்கமாட்டார்கள் என்று எண்ணினார்கள். ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் அவர்களிடம் சொல்லப்பட்டபோது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். ஆனால் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஹழ்ரத் முஆவியா நாயகம் அவர்கள் கடற்படையை அமைத்தனர்.
ஹிஜ்ரி 27அல்லது 28ல் முதன் முதலாக புறப்பட்ட அப்படை ஸைப்ரஸை கைப்பற்ற முயன்றனர். அங்கு நிலைகொண்டிருந்த ரோமப்படைகளை முஸ்லிம்கள் வென்றனர்.
கலீஃபா அவாக்ள் ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ரோமானியக் கடற்படை வீரர்கள் எவரையும் கொல்வதை விட அவர்களை கைதிகளாகவே பிடித்து அவர்களிடம் கடற்போரின் நுணுக்கங்களை முஸ்லிம்களுக்கு கற்பிக்கும்படியாகவும் எழுதினார்கள். ஹழ்ரத் முஆவியா அவர்களும் அவ்விதமே செயல்பட்டார்கள்.
வடக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்ததைப் போன்று கிழக்கிலும் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வென்றார்கள்.
ஹிஜ்ரி 31ஆம் ஆண்டில் சில ஆயிரம்படைகளுடன் பலக்ஃகின் பக்கம் வந்த யஸ்தஜிர்த் சிறு வெற்றிகளைக் கண்டாலும் தொடர்ந்து முன்னேற அவனால் முடியவில்லை. அவன் முஸ்லிம் படைகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திருகை அரைப்பவன் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தான். அவன் அவனுக்கு உணவு, உடை அளித்து அவன் உறங்கும்போது அவனை கொலை செய்து விட்டான். சுமார் 400வருடம் பாரம்பரியத்தைக் கொண்ட ஈரானிய மன்னன் தன் அரசபோகங்களை நான்கே ஆண்டுகள் அனுபவித்து இறந்து விட்டான்.
ஹிஜ்ரி 32ல் ஒரு பலமான கடற்போர் நடைபெற்றது.ஐரோப்பாவின் அந்தலூஸை வெற்றி கொள்ள முஸ்லிம்படைகள் சென்றபோது கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையைத் திரட்;டி மத்தியதரைக் கடலுகக்கு சென்று போரிட்டு முஸ்லிம்களிடம் தோற்றுப் Nபுhனான்.
கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே உயர்ந்த முறையில் சித்தப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாமிய இராணுவம் கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திறம்பட்ட நடவடிக்கையால் மேலும் உரம்பெற்றது.
மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்வாகத்தை விரிவுபடுத்தினார்கள். அவைகளை பொறுப்புடன் நடத்த பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன. மதீனாவுக்கு வந்து சேரும் பாதைகள் விரிவுப்படுத்தப்பட்டன. பாலங்கள் அமைத்தார்கள். பள்ளிவாசல்கள் ஆங்காங்கே நிர்ணமானிக்கப்பட்டன.கடைவீதிகள், காவல்நிலையங்கள், உணவு மாடங்கள், நீர்க் கிணறுகள் அமைக்க்பட்டன.
ஹிஜ்ரி 29ஆம் ஆண்டு பள்ளியை சுற்றி குடியிருந்த மக்கள் பள்ளியை விரிவுபடுத்துவதற்காக கலீபாஅவர்களின் வேண்டுகேளை ஏற்று அதை விட்டுக் கொடுத்தனர். அதை விரிவுபடுத்தினர்.
ஆளுநர்களையும், அதிகாரிகளையும் நியமித்த கலீபா அவர்கள் அவர்களை கண்காணிக்கவும் தவறவில்லை.
போர்களில் சிறையாகி கைதியாக வருபவர்களுக்கு தீன் மார்க்கத்தின் நெறிமுறைகளை போதிப்பார்கள். அவர்களின் அருளுரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இஸ்லாத்தில்இணைந்து விடுவார்கள். இதில் எந்த நிர்ப்பந்தத்தையும் சுமத்தமாட்டார்கள்.
ஒருமுறை வெள்ளிக்கிழமை மதீனாவின் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் திரள் பெரிதாக கூடியிருக்க அவர்களில் பலரின் செவிகளிலும் பாங்கின் ஓசை கேட்காமலே போய்விட்டது. அதனை அறிந்த கலீபா அவர்கள் மறு வெள்ளிக்கிழமை முதலே, வழமையாகக் கூறும் பாங்குக்கு சற்று முன்னதாகவே பள்ளிக்கு வெளியில் அதிகப்படியாக ஒருமுறை பாங்கொலிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டளைப் படியே இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஒன்று சேர்த்து ஒரு நூலுருவிலாக்கப்பட்டு அப்பிரதி முதலில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பாதுகாப்பாக இருந்தது. மக்களிடையே புழக்கத்தில் இல்லை.
அஜர்பைஜான், ஆர்மீனியா பகுதிகளில் கலகங்களை அடக்கச் சென்ற நபித்தோழர் ஹழரத் ஹுதைபத்துல் யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் பலவாறாக ஓதக் கேட்டு அதை கலீபா அவர்களிடம் எடுத்துரைத்தார். கலீபா அவர்கள் ஹப்ஸா நாயகியிடமிருந்த குர்ஆனை வாங்கி சஹாபாக்கள் குழுக்களை ஏற்பாடு செய்து அவர்களை ஓதச் செய்து குர்ஆன் 7பிரதிகள் எடுக்கப்பட்டன.
அதில் ஒன்றை மதீனாவில் கலீபா அவர்கள் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள். மற்றவைகளை மக்கா, ஸிரியா, யமன், பஹ்ரைன், கூஃபா, பஸ்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைத்து அதன்படியே திருமறை ஓதப்படவேண்டுமென கட்டளையிட்டார்கள்.
ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு பிறை 18அல்லது 24ஆம் நாள், இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா, தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தாரின் கரங்களாலேயே, ‘எவ்விதக் குற்றமுமற்றவர் கலீஃபா’ என முடிவு காணப்பட்ட நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
எகிப்தில் இப்னு ஸபா கலீஃபா அவர்கள் மீது பகைமையை உண்டாக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கலீபா அவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக தீர்ப்பு செய்ததால் அதனால் கோபமடைந்த அவர்கள் எகிப்து சென்று வாழ்ந்து வந்தனர். அவர்களுகம் கலீபா அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இதேபோல் ஹழ்ரத் முஹம்மது இப்னு அபீ ஹுதைஃதஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களை ஆளுநராக கலீபா அவர்கள் நியமிக்காததால் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இவர்களும் எகிப்தில்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களின் பிரச்சாரங்களாலும் கலீபா அவர்களின் ஆட்சிக்கு எதிராக குழப்பங்களும், கலகங்களும் உண்டாக ஆரம்பித்தன.
கலீபாவின் மீது இந்தக் கலகக் காரர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு கலீபா அவர்கள் தக்க பதில் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கலீபாவை அவர்கள் சுமத்திய அபாண்ட குற்றச்சாட்டுகளுக்காக கொல்லத் துணிந்தனர்.
ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் சஹாபாக்கள் சிலர் கலகக்காரர்களோடு சமாதானம் பேசி அவர்கள் விரும்பியபடி முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எகிப்திற்கு கலகத்தை அனுப்ப அனுமதியை கலீபா அவர்களிடம் பெற்றுத் தந்தனர்.
ஆனால் 5ஆம் நாள் காலையில் புரட்சி ஓய்ந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சஹாபாக்கள் பெருத்த ஆரவாரத்தினை கேட்டார்கள். அதில் கலீபாவை கொல்வோம், வஞ்சகத்தை வெல்வோம், பழிக்குப் பழி தீர்ப்போம் என்ற குரல்கள் கேட்டு திடுக்கிட்டார்கள். எகிப்தியர்களை கண்டு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது? என்று.
பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் மூன்றாம் நாள் ஒரு அடிமை எங்களை முந்திச் சென்றுக் கொண்டிருந்தான். அவனின் வேகத்தில் எங்களுக்கு ஐயம் பிறந்தது. அவனை விசாரித்ததில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் கலீபாவின் முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. அதில் முஹம்மது இப்னு அபூபக்கரையும்,மஹ்ஹ முஹாஜிர்களையும், அன்சார்களையும் கொலை செய்துவிட்டு அபூஸர்ராஹ்வையே பதவியில் நீடிக்கும்படி எழுதப்பட்டிருந்தது. அதனால் கலீபா எங்களுக்கு வாக்குறுதிக்கு மாறு செய்துவிட்டார். வஞ்சித்துவிட்டார் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் சூளுரைத்தனர்.
கலீபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கேட்டார்கள். அந்த கடிதம் நான் எழுதவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொன்னார்கள். கடிதத்தின் வாசகங்களும் இது வஞ்சகர்களால் எழுதப்பட்டது என்பதையே காட்டி நின்றது.
அந்த அடிமையை என்னிடம் ஒப்படையுங்கள். அவனை விசாரித்து இது எப்படி நடந்தது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்கள். அதற்கு நாங்கள் அவனை விசாரித்து விட்டோம். உங்கள் முத்திரையை வைத்திருக்கும் மர்வானின் சதியே இது. எனவே மர்வானை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றார்கள். கலீபா அவர்கள் மறுத்து விட்டார்கள்.
நாங்கள் உங்களை சந்தேகிக்கவில்லை. தங்கள் அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிடுங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று நீதியுடன் நடக்கும் அதிகாரிகளை நியமியுங்கள் என்று கலகக்காரர்கள் தெரிவித்தனர்.
கலீபா அவர்கள் நீங்கள் கூறுகிறவர்களை நியமனம் செய்யவேண்டும். குற்றவாளிகளை நீங்களே விசாரணை செய்ய வேண்டும்; என்றால் கிலாபத் என்னுடையதாக எப்படி ஆகும்? என்று கேட்டார்கள்.
நிச்சயமாக அப்படித்தான் ஆக வேண்டும். இல்லையானால் நீங்கள் பதவி விலகுங்கள் என்றனர் எகிப்தியர்கள்.
கிலாஃபத் என்பது அல்லாஹ் எனக்கருளிய மேலாடை. ஒருக்காலும் அதனை நான் என் கரத்தால் கழற்றி வீசமாட்டேன் என உறுதியுடன் கூறினார்கள்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி கலகக்காரர்கள் கலீபா அவர்களின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை ஏறத்தாழ நாற்பது நாட்கள் வரை நீடித்தது.
இதற்கிடையில் துணைக்கு வெளிமாகாணங்களிலிருந்து படைகளை கலீபா அவர்கள் வரவழைத்தார்கள். அதுவந்து சேரும்வரை அங்குள்ள அதிகாரிகள் நிதானம் காட்டியிருப்பார்களேயானால் கலீபா அவர்களுக்கு துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
வெளிமாகாண படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கலகக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் கலீபா அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் கலகக்காரர்களால் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு வீட்டுக்குள் செல்வதும் நிறுத்தப்பட்டது.
கலிபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் நிலைமையை சொன்னபோது, அன்னார் கலீபா அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துதவினார்கள்.
ஹஜ்ஜுடைய காலமும் முடிந்து விட்டது. இனி முற்றுகையை நீடிக்கச் செய்தால் பேராபத்துகள் விளையும் என்று கலகக்காரர்கள் சிந்திக்கலாயினர். அன்சார்களும், முஹாஜிர்களும் கலீபா அவர்களுக்காக இரத்தம் சிந்தி போராட தயாராக இருந்தனர். ஆனால் அதற்கு கலீபா அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபா அவர்களின் வாசல்வழியாக கலகக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க காவல் காத்திட ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.
ஆனால் கலகக்காரர்கள் பின்வழியாகச் சென்று வீட்டினுள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நால்வர் நுழைந்தனர். மற்றர்களை வெளியே நிறுத்திவிட்டு முஹம்மது இப்னு அபூபக்கர் அவர்கள் மட்டும் உள்ளே சென்று, குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஹழ்ரத் உதுமான் இப்னு அப்பான் அவர்களின் தாடியை பிடித்து, கேலியாக சில வார்த்தைகளைக் கேட்டனர்.
அதற்கு கலீபா அவர்கள் ‘என் சகோதரர் மகனே! உம்முடைய தகப்பனார் இருந்திருப்பின் என் முதுமையை மிகக் கண்ணியப்படுத்துவார். உம்மின் இச்செயலைக் கண்டு நிச்சயம் நாணமுறுவார் என்று சொன்ன சொல் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குத்தீட்டிபோல் தாக்கியது. உடனே உடல் முழுவதும் வியர்த்தொழுக கலீபா அவர்களை விட்டும் ஓடிவிட்டார்.
அதனைக் கண்ட வெளியில் நின்றவர்களில் ஒருவன் வாளுடன் உள்ளே நுழைந்தான். மற்றொருவன் கலீபா அவர்களை நோக்கி வாளை வீசினான் தடுத்த கலீபா அவர்களின் மனைவி நாயிலா அம்மையாரின் கைவிரல்கள் நான்கு துண்டித்து விழுந்தன. அவ்வாள் கலீபாவின் சிரசிலும் பட்டு அதனால் வெளியான இரத்தம் அவர்கள் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனின்
فَسَيَكْفِيْكَهُمُ اللهُ
உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் (2:137) என்ற வசனத்தின் மேல் பட்டது. கலீபா அவர்களின் உயிர் பிரிந்தது.
அன்னாரின் ஜனாஸா மூன்று நாட்களுக்குப் பிறகு கலீஃபா அவர்களின் உடல் பதினேழு சஹாபாக்கள் சுமந்து செல்ல ஜன்னத்துல் பகீயின் அருகிலுள்ள மையவாடியில் (தற்போது இவ்விடம் ஜன்னத்துல் பகீஃயுடன் சேர்ந்துள்ளது) அடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரை கொலை செய்த கூட்டத்தார் இறுதியில் மிகவும் கேவலத்திற்குள்ளாகி ஈமானிழந்து செத்து மடிந்தனர் என்று வரலாறு கூறுகிறது