ஷெய்குனா அவர்களின் ஹஜ் யாத்திரை-Hajj on Shaik Sufi Hazrath Kahiri
By Sufi Manzil
ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புனித ஹஜ் யாத்திரை செல்லும் சமயம் முரீதீன்களும், அபிமானிகளும் அவர்களுடன் செல்வதற்குத் தயாராகினர். அவர்களுக்கு ஷெய்குனா அவர்கள் இட்ட கட்டளை என்னவென்றால், ஹஜ் செல்லும் போது தேவையற்ற பொருட்களை எடுத்து வரக் கூடாது என்பதுதான். காயல் நகரில் ஒரு செல்வந்தரின் மகனும் அவ்வருடம் ஹஜ் யாத்திரை செல்வதற்கு தயாரானார். அவரின் தகப்பனார் அவரை 'நீ ஸூபி ஹஜ்ரத் அவர்களுடன் ஹஜ்ஜிற்கு செல். உனக்கு பறக்கத் கிடைக்கும்' என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் ஷெய்குனா தம்முடன் ஹஜ் செய்ய வரும் நபர்களுக்கு இட்ட கட்டளையைப் பற்றி கேள்விபட்ட அவர் இவருடன் சென்றால் முஸாபராகத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணி அவர்களுடன் ஹஜ் செல்லும் எண்ணத்தை கைவிட்டது மட்டுமில்லாமல் கிடைத்த அரிய பாக்கியத்தையே இழந்தார்.
இந்நிலையில் கஃபத்துல்லாவில் வைத்து ஒரு பெரிய ஆளிடம் பைஅத்து வாங்குவதாக ஒருவர் கனவு காணுகிறார். அவர் மக்காவில் தங்கியிருக்க அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த ஒருவர். ஈ.வே.ரா. பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டு அந்த இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட அவர் (பெரியார் அவர்களின் கார் டிரைவர் திரு.சுப்பிரமணி)இறைவனின் நாட்டப்படி முஸ்லிமாக மாறி சவூதி அரசாங்கத்தால் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றார். அவர் கண்ட கனவு பற்றியும் அந்த nஷய்கு பற்றியும் அங்க அடையாளத்துடன் விபரித்து அச்சமயத்தில் மிகப் பிரபலமாக நடைபெற்றுவந்த இஸ்லாமிய மாதப்பத்திரிகையான நற்சிந்தனை ஆசிரியர் மூ.ஹஸன் காதிரி அவர்களிடம் கடிதம் மூலம் விளக்கம் கேட்டு எழுதுகிறார். அவர் சொன்ன அடையாளங்கள், நமது nஷய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்களை அப்படியே ஒத்து இருந்தது.
உடனே அவர் கனவு கண்ட அந்த நபருக்கு கடிதம் எதினார், 'நீங்கள் கண்ட கனவு உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. தற்போது எங்கள் ஊரிலிருந்து ஒரு பெரியவர் வருகிறார்கள். அவர்கள் மிகவும் விசேசமானவர்கள். நீங்கள் சொன்ன அங்க அடையாளங்கள் அவர்களையே ஒத்து இருக்கின்றது என்று எழுதி ஷெய்குனா அவர்கள் ஹஜ் செய்ய புறப்படும் தேதி, கப்பல் போன்ற விபரங்களை விபரமாக எழுதி தெரிவித்து விட்டார்.
ஷெய்குனா அவர்கள் அங்கு சென்றதும் புதிதாக இஸ்லாமான அந்த நபர் அவர்களை வரவேற்று மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்று உரிய கவனிப்புகள் கவனித்தார். அவர் கனவு கண்ட அந்த பெரியார் நமது ஷெய்குனா அவர்களாகவே இருக்கக் கண்டு மகிழ்ச்சியும் எல்லையில்லா ஆனந்தமும் அடைந்தார். தாம் கண்ட கனவுபடி கஃபத்துல்லாவில் வைத்தே அன்னாரிடம் பைஅத்தும் பெற்றுக் கொண்டார்.
ஷெய்குனா அவர்கள் புனித ஹஜ் யாத்திரையை சிறப்பாக முடித்து தாயகம் திரும்பினர். காயல்பட்டணத்தில் புனித ஹஜ் யாத்திரை சென்று வரும் ஹாஜிகளை வரவேற்று பைத்து சொல்லி அழைத்துச் செல்வது வழக்கம். ஷெய்குனா அவர்கள் ஊர் வந்ததும் இந்த நடைமுறைப்படி அவர்களுக்கு பைத்து சொல்லி அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால், அவர்களுடன் புனித ஹஜ் செல்ல மறுத்த அந்த செல்வந்தர் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடைபெற்று இருந்ததால் அவருக்கு பைத்து சொல்லி அழைத்து செல்லப்பட முடியாமலே போய் விட்டது.
ஷெய்குனா அவர்கள் ஹஜ் சென்றிருந்த சமயம் மௌலானா அப்துல் ஹலீம் சித்தீகி(மீரட் மௌலானா) அவர்களின் மகனார் அஹ்மது நூரானீ மௌலானா அவர்களும் புனித ஹஜ் சென்றிருந்தார்கள். இருவரும் சந்தித்துக் கொண்டனர். சவூதி வஹ்ஹாபி இமாம்களின் பின் நின்று தொழாமல் ஒரு சமயம் இவர்கள் இமாமத் செய்ய ஷெய்குனா அவர்கள் பின் நின்று தொழுதார்கள். சில சமயம் ஷெய்குனா அவர்கள் இமாமத் செய்ய இவர்கள் பின்னின்று தொழுதார்கள்.