மத்ஹபிற்குரிய நான்கு இமாம்கள் சரித்திர சுருக்கம்.

மத்ஹபிற்குரிய நான்கு இமாம்கள் சரித்திர சுருக்கம்.

By Sufi Manzil 0 Comment August 6, 2012

Print Friendly, PDF & Email

பிக்ஹின் ஆரம்பம்:

ஹதீதுகளின் அடிப்படையில் தனி மனிதனுடையவும், சமுதாயத்துடையவும் நெறிமறைக்கான மார்க்கத்தின் ஏவல்,விலக்கல்களையும் அவற்றின் தன்மைகளையும் விளக்கித் தீர்ப்புகள் நல்கியவர்கள் ஃபகீஹுகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

நபிபெருமானார் காலத்தில் ஷரீஅத்தின் ஏவல் விலக்கல்களுக்கு ஃபர்ளு, வாஜிபு, சுன்னத்து என்ற பலவகையான பெயர்கள் வைக்கப்படவில்லை. நபிபெருமானார் ஒளுச் செய்ததைப் பார்த்து ஸஹாபாக்களும் ஒளுச் செய்து கொண்டனர். தொழுகையிலும் இவ்வாறுதான் நடந்தது.

எப்பொழுதாவது ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தால் மட்டும் அது சம்பந்தமாக ஸஹாபாக்கள் நபி பெருமானாரிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளனர். வேறு சில சமயங்களில் மக்களே ஏதேனும் ஒரு காரியத்தை செய்யும்போது அது சரியாயின் நபிகளார் அதை ஆமோதித்தும், அவசியமில்லாததாயின் அதிருப்தியை வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் கூட்டமாக இருந்த இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலமானபின் இஸ்லாத்துக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டி வந்ததால் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குள்ளான நிலப்பரப்பும் அதிகமாகி விட்டது. இந்நிலையில் புதிது புதிதான பல நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவற்றைப் பற்றித் தீர்ப்பளிக்க இஜ்திஹாத்‘ (திருக்குர்ஆன், ஹதீதிலிருந்து மஸ்அலாக்களைக் பிரித்தெடுத்தல்) தேவைப்பட்டது.

அத்துடன் மறைமுகமாக கூறப்பட்டுள்ள ஏவல், விலக்கல்களுக்கு விளக்கம் காண வேண்டியிருந்தது.

இந்நிலையில் எத்தனையோ விஷயங்களில் சஹாபாக்களின் ஒருமுக முடிவு என்று எதுவுமில்லாமல் இருந்தது. தீர்ப்புகளில் பல அபிப்பிராயங்கள் வெளியாயின. சிற்சில விசயங்களில்தான் ஒருமுகமான முடிவு உண்டாயிருந்தது.

நபிபெருமானாரின் காலத்தில் உண்டாயிராத பின்னர் உண்டான நிகழ்ச்சிகள் பலவற்றை எடைபோட திருக்குர்ஆன், ஹதீது அடிப்படையில் சுயமுடிவும், அனுமானமும் தேவைப்பட்டன.இதனால் மஸ்அலாக்களையும், அஹ்காம் என்னும் மார்க்க சட்டங்களையும் உருவாக்குவதற்கான தனி வழிமுறைகள் ஸஹாபாக்களின் காலத்திலேயே ஏற்பட்டு விட்டன.

திருக்குர்ஆன், ஹதீது மூலங்களிலிருந்து இஜ்திஹாத் nசய்யக்கூடிய திறமையும் பண்பும் பெற்றிருந்த சிறந்த மகான்களான ஸஹாபாக்களில் பிரசித்துப் பெற்று விளங்கியவர்கள் நால்வர்தாம். அவர்கள் ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரிய முறையோடு ஹதீதையும் பிக்ஹையும் போதித்துக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் அக்கால பிரபலங்கள் பலர் பாடம் கேட்டனர்.அவர்களுள் அஸ்வத், உபைதா, ஹாரித், அல்கமா ஆகியோர் முக்கியமானவர்கள். ஹஜ்ரத் உமர். உதுமான், அலீ, ஆயிஷா, ஸஅத், ஹுதைபா, காலித் பின் வலீத், கப்பாப் போன்ற மாபெரும் ஸஹாபாக்களிடமிருந்து ஹதீதுகளைக் கேட்டவர்கள் அல்கமா அவர்கள். இவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் நெருங்கி பழகி அவர்களை அடியொற்றி நடந்தவர்கள். எனக்குத் தெரிந்ததையெல்லாம் அல்கமாவுக்கு நான்  போதித்து விட்டேன்என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறியுள்ளார்கள். அல்கமாவுக்கு சமமாக விளங்கியவர்கள் அஸ்வத் ஒருவர்தாம்.

அல்கமா, அஸ்வத் ஆகிய இரு மேதைகளும் காலமானபின் மாமேதை இப்றாஹிம் நக்கயி அவர்கள் கலாபீடத்தில் அமர்ந்து பிக்ஹை வளர்த்து வந்தார்கள். இந்த மாமேதை காலமானபின், இமாம் ஷுஅபியவர்கள,; ‘தமக்கு நிகராக யாரையும் ஏற்படுத்தாமல் போய்விட்டார்களே இப்றாஹிம்என்றார்கள். அப்போது அருகிலிருந்த ஒருவர் ஏன் ஹஸன் பஸரி, இப்னு ஸிரீன் போன்ற பெரியார்கள் இல்லையா? என்று கேட்டதற்கு, ஆம். ஹஸன் பஸரி, இப்னு ஸிரீன் என்ன பஸரா, கூபா, ஸிரியா, ஹிஜாஜ் ஆகிய இடங்களில் எங்கே தேடினாலும் இப்றாஹீமுக்கு நிகர் இப்றாஹீமாகவே இருந்தார்கள்என்று ஷுஅபி பதிலளித்தார்கள்.

இப்றாஹிம் நக்கயின் உதவியால் ஹதீதுகளையும், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு , அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது போன்ற பெரியார்களின் தீர்ப்புகளையும் ஆதாரமாக வைத்து பிக்ஹு மஸ்அலாக்களின் தொகுப்பு ஒன்று உருவாயிற்று. ஆனால் அது நூல் வடிவில் எழுதப்படாது இப்றாஹிம் நக்கயி அவர்களின் மாணவர்களின் இதயங்களிலேயே பதிக்கப்பட்டிருந்தது.

நக்கயின் பிரதான மாணவரும் இமாம் அபூஹனீபாவின் குருநாதருமான ஹம்மாது அவர்களே அதன் பெரும்பகுதியை மனனம் செய்திருந்தார்கள். இதனாலேயே இப்றாஹிம் நக்கயி காலமானபின்  மக்கள் அவர்கள் ஸ்தானத்தில் அமர்ந்து பிக்ஹை போதிக்கும் பொறுப்பை ஹம்மாதின் மீது சுமத்தினர்.

ஹிஜ்ரி 120 ல் அவர்கள் காலமானபோது அந்தப் பொறுப்பு அவர்களிடமிருந்து இமாம் அபூஹனீபா அவர்களிடம் வந்து விட்டது.

அதுவரை இந்த பிக்ஹு ஒரு சிலர் மட்டும் அறிந்த விசயமாக இருந்தது. இமாம் அபூஹனீபா அதை உலக முஸ்லிம்கள் யாவரும் அறிந்து கொள்ளும் வகையைச் செய்தார்கள்.

1.            இமாம் அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு:

மார்க்கச் சட்டமான பிக்ஹின் அடிப்படையினையே முதன் முதலாக விதிப்படி முறைப்படுத்தி உலகுக்கு வழங்கிய மாமேதையான இவர்களின் பெயர் நுஃமான் இப்னு தாபித் என்பதாகும். 

வமிசவழி:

பாரசீகக் குடும்பமொன்றை சேர்ந்தவர்களான இவர்கள் கூபா நகரில் பிறந்தார்கள். நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் யஹ்யா பின் ஜைத் பின் அஸத் பின் ராஷிதுல் அன்ஸாரி என்றும், அவர்களுடைய பாட்டனார் ஜௌத்தி ஆப்கானிஸ்தானிலுள்ள காபூலில் சிறைக் கைதியாக பிடிக்கப்பட்டு அரபு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டவர் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுடைய சரியான வமிசவழியானது நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் மாஹ் என்பதாகும். ஜௌத்தி  அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தினை ஏற்று நுஃமான் என்ற பெயரை அடைந்து கொண்டார்.  இமாம் அவர்களின் தந்தையான தாபித் பிறந்தபோதும் அவர்களைத் தந்தை நுஃமான் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்திற்கு கொண்டு சென்று அவர்களின் நல்லாசியைப் பெற்றுச் சென்றுள்ளார்.

தோற்றப் பொலிவு:

இமாம் அவர்கள் ஒல்லியான உடலும், நடுத்தரமான உயரமும் உடையவர்கள். தலை நிமிர்ந்த நடையுடையவர்கள், பாரசீகப் பரம்பரைக்கேற்ற எடுப்பான நாசியும், கவர்ச்சிகரமான முக வசீகரமும் பெற்றிருந்ததோடு அறிவின் விசாலத்தைக் காட்டும் அகன்ற நெற்றியையும் அதில் தகத்தக அற்புதமான ஒளியையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.

அவர்களோடு உரையாடுபவர்கள் அவர்களை விட்டுப் பிரிந்து போகவே விரும்பாதபடி இனிமையாகப் பேசுவார்கள்.

இமாம் அவர்கள் சதாவும் உயர்தரமான உடையே அணிவார்கள். சில நேரங்களில் ஓரங்களில் அருமையான பூ வேலைப்பாட்டுடன் கூடிய மெல்லிய துணியிலான சட்டையும் அணிவார்கள். தாங்கள் நல்லவிதமாக உடுத்துவதுடன் வசதி படைத்தவர்களை நல்லபடியாக உடைகள் வாங்கி உடுத்துமாறு அவர்கள் ஏவியிருக்கிறார்கள்.

குணாதிசயங்கள்:

இமாம் அவர்களின் சீடரான இமாம் அபூயூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் அவர்கள் மிகவும் பேணுதலுடையவர்களாகவும், ஆகாத கருமங்களை விட்டும் அப்பால் விலகிக் கொள்பவர்களாகவும், பெரும்பாலும்  மௌனமாகவும் இருப்பார்கள். ஆனால் சதாவும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். யாரேனும் ஒரு பிரச்சனைக்குப் பதில் கேட்டு வந்தால் மட்டும் பதிலளிப்பார்கள். ஒப்பற்ற கொடை வள்ளல். யாரிடமும்  எதையும் வேண்டாதவர்கள். ஆட்சியாளர்களின் பதவி பட்டங்களை துச்சமாக மதித்தவர்கள். யாரைப் பற்றியும் புறம் பேசியே அறியாதவர்கள். தங்கள் திரண்ட செல்வத்தை எல்லாம் தேவைப்பட்டோருக்கு வாரி வழங்கியது போல மாபெரும் பொக்கிஷமான தமதுஅறிவுச் செல்வத்தையும் கேட்டோர்க்கெல்லாம் வாரி வழங்கினர்என்று கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களிடம் கூற அது கேட்ட கலீபா அவர்கள், ‘இவையே உத்தம சீலர்(ஸாலிஹீன்)களின் நற்பண்புகளாகும்என்று கூறினார்.

கல்வி:

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார்கள். தந்தையின் ஜவுளி வியாபாரத்தை இளமையிலேயே பார்த்து வந்தனர். முஸ்லிம்களுக்கு கற்பிக்கப்படும் சாதாரண கல்வியையே அவர்கள் பயின்றார்கள். அன்னையின் சொல் தவறாது நடப்பவராக இருந்தார்கள்.

தங்களுடைய பதினாறாம் வயது வரை மேல்படிப்பு படிக்க வாய்ப்பின்றி வர்த்தகத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள்.  ஒரு சமயம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவசரமாகக் கடைவீதிக்குப் போய் கொண்டிருந்தார்கள். வழியில் அக்காலத்திய அறிஞர்களுள் ஒருவரான இமாம் ஷுஅபி அவர்கள் அபூஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) வை நோக்கி உங்கள் முகத்தில் கல்விக் கலை தெரிகிறது. எனவே நல்ல ஆசானைத் தேடிக் கல்வி பெறுமாறு கூறினார்கள். அதன்பிறகு இமாம் அவர்கள் கல்வி கற்க ஆயத்தமானார்கள்.

இமாம் அவர்கள் அடிப்படைக் கல்வியை ஓராண்டில் கற்று விட்டு தத்துவ சாஸ்திரத்தை (இல்முல் கலாமை) கற்பதில் விசேச கவனம் செலுத்தினார்கள். ஆனால் பிற்காலத்தில் பிக்ஹில் கூபாவில் இமாமாக விளங்கிய பிக்ஹு ஆரியப் பெருந்தகை ஹம்மாது அவர்களிடம் பிக்ஹு கல்வி பயின்றார்கள். இந்த ஹம்மாது அவர்கள் சஹாபிப் பெருந்தகையான ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து பல ஹதீதுகளைக் கேட்டுள்ளார்கள். தாபியீன்கள் பலரிடமும் அமர்ந்து பல்வேறு பாடங்களை கற்றிருந்தார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வெளிப்பட்ட பிக்ஹு பாடத்தை அதே அடிப்படையிலேயே இமாம் ஹம்மாதும் போதித்து வந்தார்கள். இவ்வளவு திறமையும், புகழும் வாய்ந்த பெரியாரிடம் இரண்டாண்டுகள் இமாம் அவர்கள் பிக்ஹு கற்று தேர்ந்தார்கள்.

ஹம்மாது ஆசிரியர் அவர்களையன்றி பல்வேறு பிக்ஹு ஆசான்களிடமும் பிக்ஹு பாடம் கேட்டுள்ளார்கள். அத்துடன் ஹதீதுகளைப் பற்றிய பாடங்களையும் விரிவாக படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஹஜ்ஜுக்கு சென்றிருந்த சமயம் ஹஜ்ரத் அத்தாரிப்னு அபீ ரிபாஹ் என்ற பெரியாரிடம் ஹதீதுகளைக் கற்றுக் கொண்டனர். பின்பு மதீனா சென்று அங்குள்ள ஆசான்களிடமும் ஹதீதுகளைக் கற்றனர். இமாம் அவர்கள் மக்கா செல்லும்போதெல்லாம் ஹஜ்ரத் அத்தார் அவர்களைப் போய்ப் பார்ப்பதும், அவர்களோடு அளவளாவுவதுமாக இருந்தார்கள். இதே போன்று மக்கா, மதீனா செல்லும்போது அங்குள்ள பெரியார்களிடம் சென்று தங்களுக்கு வேண்டிய விளக்கங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இமாம் மாலிக் அவர்கள் இமாம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹுவை விடப் பதிமூன்று வயது சிறியவர்களாயினும் அவர்கள் நடத்திய வகுப்பிலும் சென்றமர்ந்து இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு பாடம் கேட்டுள்ளார்கள். மக்காவின் பிரபல ஹதீது விரிவுரையாளரான அம்ருப்னு தீனாரிடமும் பாடங்கள் பயின்றிருக்கிறார்கள்.

இவ்விதமாக இமாம் அவர்கள் ஹதீது கலை பயின்ற பலருள் இமாம் ஷுஅபி, சல்மா பின் குயைல், மஹாரிப், அபூ இஸ்ஹாக் ஸப்யி, ஒளன், சம்மாக், உமர் பின் மர்ரா, மன்தருல் அம்ரு, அஃமஷ், இப்றாஹீம் பின் முஹம்மது, அதீ, அத்தாரிப்னு ஸாயிப், மூஸா, அல்கமா, ஹிஷாம், சுலைமான், கதாதா, அத்தாரிப்னு அபீ ரிபாஹ், இக்ரிமா, மக்ஹுல் ஆகியோர் முக்கியமானவர்கள்.

நுஃமான் அபூஹனீபாவானது:

பிக்ஹு சட்டத்தில் மகா நிபுணராகித் தீர்ப்பு வழங்கத் தொடங்கிய சமயம் நுஃமான் என்ற இயற்பெயருடன் சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டதுதான் அபூஹனீபா என்ற பெயராகும் என்று தெரியவருகிறது. திருக்குர்ஆனில் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்திலுள்ள பத்தாம் வசனத்தில் வத்தபவூ மில்லத்த இப்றாஹீம் ஹனீபா‘ (மிகத் தூய்மையான -ஹனீப் ஆன இப்றாஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றி நடங்கள்) என்று கூறப்பட்டுள்ளதில் வரும் ஹனீப்என்ற பதத்திலிருந்துதான் இவ்விதம் இமாம் அவர்கள் பெயர் சூட்டிக் கொண்டனர் என்று ஆதாரப்பூர்வமான நூல்கள் தெரிவிக்கின்றன.

நாற்பது வயதுவரை தங்கள் கல்வி ஞானத்தைப் பலப்படுத்துவதிலேயே இருந்த இமாம் அவர்கள், தங்களது குருநாதர் ஹம்மாது உயிரோடு இருக்கும் வரை தனியாக பிக்ஹு போதனை நடத்த தயாராக இல்லை. ஹிஜ்ரி 120 ஹம்மாது அவர்கள் காலமாகிவிடவே, அதன்பிறகு கொஞ்சகாலம் மூஸா இப்னு கதீர் என்ற பெரியாருக்குப் பின் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் பிக்ஹு பாடம் நடத்த துவங்கினர்.

உலக அளவில் இமாம் அவர்களின் போதனா கூடம் மிகவும் பிரபல்யமடைந்தது. எண்ணற்றோர் இங்கு வந்து பாடம் கேட்கலாயினர்.  அவர்கள் எங்கு சென்றாலும் இராக்கின் பக்கீஹ்என்று போற்றப்பட்டார்கள்.

 இமாம் அவர்களின் அறிவும் நுட்பமும், திறமையும் எண்ணற்றவர்களை இன்புறச் செய்தது போல் பொறாமைக்காரர்கள் சிலரைப் புழுங்கவும் வைத்தது. அவர்கள் மார்க்கத்தை விட்டு விட்டு மனம்போன போக்கில் தீர்ப்புகள் வழங்குவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதேபோல்தான் நபிகளாரின் பேரரான இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் இவர்களைப் பற்றி தவறாக எடுத்துக் கூறப்பட்டது. ஹஜ்ஜு சென்ற சமயம் இமாம் அவர்கள் மதீனா சென்று இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை சந்தித்தனர். அவர்களிடம் தாங்கள் கேள்விபட்டதை இமாம் அவர்கள் கேட்டதும், இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு இமாமிடம், ‘விந்து, மூத்திரம் இவற்றில் எது அதிக அசுத்தமானது? என்று கேட்டார்கள். அதற்கு இமாம் அவர்கள் மூத்திரம்என்று பதிலளித்தார்கள். ஆனால் மார்க்கச் சட்டப்படி மூத்திரம் வெளிப்பட்டால் அந்த தலத்தை மட்டும் கழுவினால் சுத்தமாகிக் கொண்டால் போதும் என்றும், விந்து வெளிப்பட்டால் அந்தத் தலத்துடன் மட்டும் நில்லாது உடல் முழுவதையுமே கழுவ வேண்டும் என்றல்லவா இருக்கிறது. நான் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதானால் அதிக அசுத்தமானதன் விஷயத்தையல்லவா அதிகம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருப்பேன். நான் அவ்வாறு செய்யாமல் மார்க்கச் சட்டப்படியல்லவா தீர்ப்பு அளித்துள்ளேன் என்று சொன்னார்கள்.

அடுத்து அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆண், பெண்களில் அதிகப் பலவீனமானவர்கள் யார்? என்று கேட்டார்கள்.

‘பெண்கள்தாம்’ என்று இமாம் பதிலளித்தார்கள்.

பாகப் பிரிவினையில் யாருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது?

ஆண்களுக்குத்தான்.‘-இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நான் மட்டும் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதாயின் பெண்கள் பலவீனமானவர்களாதலால் அவர்களுக்கு இரண்டு பங்கும், ஆண்களுக்கு ஒரு பங்கும் சொத்து பாகம் பிரிக்கப்பட வேண்டும் என்றல்லவா தீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் மார்க்கச் சட்டப்படியல்லவா தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

கடைசியாக இமாம் அபூஹனீபா அவர்கள் கேட்டார்கள்: தொழுகை, நோன்பு ஆகிய இரண்டிலும் அதிகம் ஏற்றமானது எது? என்று.

தொழுகைதான்என்று இமாம் ஜஃபருஸ்ஸாதிக் அவர்கள் சொன்னார்கள்.

அப்படியானால் மாதவிலக்கான பெண் நோன்பை களா செய்யாமல் தொழுகையை அல்லவா களா செய்ய வேண்டும். நானோ அப்படிக் கூறாமல் மார்க்கச் சட்டப்படி நோன்பை களா செய்ய வேண்டும் என்றே தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா இமாம் அவர்கள்.

இமாம் அவர்களின் நேர்மையை உணர்ந்த இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார்கள். இமாம் அபூஹனீபா இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்தும் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த கலீபாக்கள் ஆட்சி நபிகளாரின் குடும்பத்தாரை கொலை செய்தும், அவர்களை அவமரியாதை செய்தும்கொண்டிருந்ததை இமாம் அவர்கள் சகிக்கவில்லை. இதனால் பனூஉமையா ஆட்சியாளர்கள் இமாம் அவர்கள் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கலாயினர். இமாம் அவர்கள் அரசியலோடு பிண்ணி பிணைந்து விடக் கூடிய பேச்சுக்களைக் கூடியவரை தவிர்த்து வந்தனர்.

இதில் கூபாவின் நிர்வாகிய இருந்த யஜீத் இப்னு உமர் என்பவர் அபூஹனீபா அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி கொடுத்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இமாம் அவர்கள் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் நான் வேலை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். இதனால் யஜீதுக்கு ஆத்திரம் பொங்கி, இமாம் அவர்களை கைது செய்து தினமும் பத்து கசையடிகள் கொடுக்கச் செய்தார். ஆனால் இமாம் அவர்களின் உறுதி இதனால் தளர்ந்து விடவில்லை. சில நாட்கள் கழித்து யஜீது இமாம் அவர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டார். உடனே இமாம் அவர்கள் மக்கா புறப்பட்டு ஹிஜ்ரி 136 வரை அங்கேயே தங்கி விட்டார்கள்.

அடுத்து வந்த அப்பாஸிய கலீபாக்களும் நபிபெருமானாரின் வாரிசுகளையும், குடிமக்களையும் கொடுமைப் படுத்தினர். இமாம் அவர்கள் நபிபெருமானாரின் வாரிசுகளான முஹம்மதையும், அவரது சகோதரர் முஹம்மதையும் ஆதரித்ததால் கலீபா மன்சூர் அவர்களைத் தண்டிக்க நாடினார்.

இமாமின் மறைவு:

இமாம் அவர்கள் ஏற்கனவே தலைமை நீதிபதி பதவியை ஏற்க மறுத்ததும், அதற்காக நூறு கசையடிகள் தண்டனை பெற்றதும் கலீபா அவர்களுக்குத் தெரியுமாதலால் அந்தப்படியே நடக்க முடிவு செய்து இமாம் அவர்களை அரசவைக்கு வரச் செய்து தலைமை நீதிபதியாக இருக்க வேண்டுகோள் விடுக்க, இமாம் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் இமாம் அவர்களை சிறையிலடைக்க கலீபா ஹிஜ்ரி 146 ல் உத்திவிட்டார். இப்போது  இமாம் அவர்களுக்கு வயது அறுபத்தாறு. சிறையில் இமாம் அவர்கள் பாடபோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து இமாம் அவர்களை கண்காணிக்க முடியாமல் இமாம் அவர்களின் உணவில் விஷம் கலந்து விட்டார். உணவை உட்கொண்டதும் விஷம் தங்கள் உடலில் வேலை செய்வதை இமாம் அவர்கள் உணர்ந்தார்கள். தங்கள் சிரசை சஜ்தாவில் வைத்தார்கள். இந்நிலையிலேயே அவர்களின் ஆன்மா பிரிந்தது. அவர்கள் காலமானது ஹிஜ்ரி 150 ஷஃபான் மாதம் பிறை 2 (கி.பி. 766) ஆகும்.

இமாம் அவர்கள் காலமாகிவிட்ட செய்தி வெகு துரிதமாகப் பக்தாத் நகர் முழுவதும் பரவி விட்டது. அவர்களுடைய பூத உடலை பக்தாத் நகரத் தலைமை நீதிபதியான ஹஸன் பின் அம்மார் என்ற பெரியார் முன்னின்று குளிப்பாட்டினார்கள். இமாம் அவர்களின் உடல் ஜும்ஆ மஸ்ஜிற்கு கொண்டு செல்லப்பட்டதும் முதல் தடவை நடத்தப்பட்ட ஜனாஸாத் தொழுகையில் ஐம்பதாயிரம் பேர்கள் கலந்து கொண்டனர். பக்கத்து ஊர்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் வரவே பல தடவை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.

அதன்பின் அன்னாரின் உடல் பக்தாதில் ஆக்கிரமிக்கப்படாத இடம் என்று பெயர் பெற்ற கீஜ்ரான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வந்த கலீபா அலப் அர்ஸலான் ஹிஜ்ரி 459 ல் இமாம் அவர்களின் அடக்கதலத்தின் மீது குப்பா ஒன்றைக் கட்டினார். அத்துடன் கலாசாலை ஒன்றையும் நிர்மாணித்தார்.  பக்தாதில் நிறுவப்பட்ட முதல் கலாசாலையான இது மஷ்ஹத் ஹனீபாஎன்ற பெயருடன் விளங்கியது.

சந்ததிகள்:

இமாம் அவர்களுக்கு ஹம்மாது என்ற ஒரு புதல்வர் மட்டும் இருந்தார். வேறு புதல்வரோ, புத்திரியோ இல்லை. தம் மகனுக்கு தம் ஆசிரியரின் பெயரை சூட்டியிருந்தார்கள். ஹம்மாது  அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார். தம் தந்தையாரின் மறைவிற்குப் பின் அவர்களிடமிருந்த பலராலும் ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று பக்தாது பிரதம காஜியான ஹஸன் பின் அம்மாரிடம் ஒப்படைத்து விட்டார். ஆட்சியாளர்களோடு எவ்வித தொடர்பும் அற்றவராக வாழ்ந்திருந்து ஹிஜ்ரி 176 ல் காலமானார்.

ஹம்மாது அவர்களுக்கு நான்கு புதல்வர்கள். உமர், இஸ்மாயில், அபூ ஹய்யான், உதுமான் ஆகியோரில் இஸ்மாயில் மிகவும் பிரபலமாயிருந்து கலீபா மாமூனுர் ரஷீதின் ஆட்சியில் பிரதான காஜியாகவும் வேலை பார்த்திருக்கிறார்.

ஆத்மஞானம்:

இமாம் அவர்கள் ஆரம்பத்திலேயே ஆத்மஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். கல்வி கற்றபின் துறவறம் பூண்டு காடு சென்று தவம் செய்ய நாடியதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி அவர்கள் நாட்டிலிருந்து சன்மார்க்க சேவை செய்ய வேண்டும் என்றும், அல்லாஹ் தங்களை படைத்ததே சன்மார்க்கத்தை உயிருள்ளதாக ஆக்குவதற்காகத்தான் என்றும் சொன்னதால் நாட்டிலிருந்தே சன்மார்க்க சேவை செய்தார்கள்.

இவர்களின் வழியாக ஆத்ம ஞான தரீகா உண்டாகியுள்ளது. அந்த சங்கிலித் தொடரில் இமாம் அபூஹனீபாவின் பெயரை அடுத்து மஃரூபுல் கர்கி-ஸர்ரிய்யு ஸிக்திய்யி-ஷைக் ஷிப்லி- அபுல்காஸிம் போன்ற பெரியார்களின் பெயர்களும் காணப்படுகின்றன. தரீகாவிலும் இவர்கள் ஒரு ஷெய்காக இருக்கிறார்கள்.

இப்றாஹிம் இப்னு அத்ஹம் அவர்களுக்கு நப்ஸை அடக்கி அவர்களின் ஆத்ம வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்தவர்களும், சூபி மகானான தாவூத் தாயி அவர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகள் கல்வி போதித்து அதன்பிறகு நப்ஸை அடக்கி அமலில் ஈடுபடு என்று அறிவுரை பகர்ந்ததும் அதன்படியே தாவூத் தாயீ செய்து வெற்றி கண்டார்கள் என்றும் வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

தின அலுவல்கள்:

இமாம் அவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து சுப்ஹுத் தொழுகைக்கு மஸ்ஜிதுக்குப் போய்விடுவார்கள். சுப்ஹு தொழுகை முடிந்ததும் அங்கேயே அமர்ந்து பல்வேறு பாடங்களையும் நடத்துவார்கள். பின்னர் வெளியூரிலிருந்து வரும் பிக்ஹு மஸ்அலா தொகுக்கும் வேலை நடைபெறும். பிறகு லுஹர் தொழுகை முடித்து வீடு போய் விடுவார்கள். வெயிற்காலமாயின் இச்சமயம் சற்று தூங்கி விடுவதுண்டு. அதுமுதல் அசர் தொழுகை வரை வியாபார விஷயங்களை கவனிப்பார்கள். அசர் தொழுகைக்குப் பின் நண்பர்களைக் காணவோ, நோயாளிகளைப் பார்க்கவோ போகவேண்டியிருப்பின் போவார்கள். மிஃரிபுக்குப் பின் இஷா வரை பாட போதனை நடைபெறும். இஷாவிற்குப் பின் நீண்ட நேரம் விழித்திருந்து வணங்குவார்கள்.

இமாம் அவர்கள் ஆயிரம் தடவை தங்கள் கனவில் இறைவனைக் கண்டதாகவும், அப்பொதெல்லாம் அவர்கள் அவனிடம் தாங்கள் ஈமான் சலாமத்துடன் மரணிப்பதற்கான ஒரு அமலை சொல்லித் தரும்படி கேட்டதாகவும், அதன் பயனாய் அல்லாஹும்ம அஹ்யினீ அலல் கிதாபி வஸ்ஸுன்னத்தி வத வஃப்பனீ அலல் ஈமானி வத்தௌபத்தி. அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸல்லிம் வப்அல்பினா தாலிக்க வபி ஜமீஇல் முஸ்லிமீன்(அல்லாஹ்வே, திருக்குர்ஆனின் போதனைக்கேற்பவும், நபி பெருமானின் முன் மாதிரியின்படியும் நான் வாழ்ந்திருக்க அருள்புரி! பாவமன்னிப்புடனும், மெய்விசுவாசத்துடனும் நான் மரணிக்க கிருபை செய்! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் வம்சத்தார் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வாயாக! நாங்களும் மற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை அமல் நடத்தி வர அருள்புரிவாயாக!) என்ற துஆவை ஓதி வரும்படி உத்தரவாயிற்று என்றும், அதைத் தாங்கள் நியமமாக ஓதி வந்ததாகவும் அவர்கள் கூறியதாக காணப்படுகிறது.

பிக்ஹுல் அக்பர்:

மார்க்க சட்டத்தையும், மார்க்கத் தீர்ப்பையும் ஒழுங்காக அமல்படுத்த இமாம் அவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவில் மொத்தம் நாற்பது பேர்கள் இருந்தார்கள். யாவருமே திருக்குர்ஆனிலும், ஹதீதிலும் திறமையான ஆராய்ச்சியுள்ளவர்கள். இவர்களில் இமாம் அவர்களுடன் சதாவும் இருந்து பல்வேறு பாடங்களில் விசேஷ தேர்ச்சி பெற்றிருந்த  யஹ்யா பின் ஜாயிதா, ஹப்ஸு பின் கியாஸ், காழி அபூ யூசுப், தாவூத் தாயீ, ஹபான், மற்றும் மந்தல், இமாம் ஜாபர், இமாம் முஹம்மது காஸிம், அஸது, யூசுப் பின் காலித், ஆபியா அஜ்தி, அபூ அலீ மஹ்ரி ஆகியோர் முக்கியமானவர்கள். சபையின் முடிவை எழுதும் பணியை எஹ்யா என்பவர் செய்தததாக சொல்லப்படுகிறது. இந்தக்குழு ஹிஜ்ரி 121 லிருந்து ஹிஜ்ரி 150 வரை சுமார் முப்பது ஆண்டுகள் (இமாம் அவர்கள் மன்சூரால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும் கூட) சட்டங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது.

மஸ்ஜிதின் ஒரு பகுதியில் இமாம் அவர்கள் பாடம் நடத்தும் இடத்திலேயே இந்தக் குழு அமர்ந்து வேலை செய்தது. இமாம் அவர்கள் தலைமையில் இரண்டு வரிசையில் இந்த நிபுணர்கள் யாவரும் அமர்ந்திருப்பர். முதலில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை ஒருவர் படிப்பார். அனைவரும் அதற்கான தீர்வுகளைக் கூற வேண்டும். யாவருடைய முடிவும் ஒன்றுபட்டிருந்தால் உடனே அது எழுதப்படும்.அங்கத்தினர்கள் அங்கே சர்வ சுதந்திரத்தோடு விவாதிக்கலாம். யாவருக்கும் முழு வாய்ப்புமளிக்கப்பட்டிருந்தது. அனைத்து அங்கத்தினர்களும் வந்தால்தான் இந்த அவையில் பிரச்சனை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும். மிக எச்சரிக்கையோடு, கவனமாக இருந்து பிக்ஹு சட்டத்தை ஒரு சரியான அமைப்பில் கொண்டு வந்தார்கள்.

இந்தத் தொகுப்பில் முதல் அத்தியாயத்தில் பாபுத் தஹாரத்தும்( ஒளு, குஸுல், தயம்மும் போன்ற உடல் சுத்தி செய்தல் சம்பந்தமான விசயங்கள்) இரண்டாம் அத்தியாயத்தில் தொழுகை, நோன்பு, மற்றுமுள்ள வணக்கங்களை விளக்கும் விஷயங்கள் அடங்கியிருந்தன. மூன்றாம் அத்தியாயம் முஆமலாத் (வர்த்தகம், பொருளாதாரம்) பற்றிது, பத்தாவது அத்தியாம் (கடைசி) மீராஸ் (பாகப் பிரிவினை) பற்றியது. இமாம் அவர்கள் காலத்திலேயே இந்நூல் அக்கால அறிஞர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்டது. சுப்யானுத் தவ்ரீ அவர்கள் கிதாபுர் ரிஹன்‘(அடமானம், ஒத்திவைப்பு) என்ற பகுதியை பெற்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நூலில் மொத்தம் 12,90,000 மஸ்அலாக்கள் இருந்திருக்கின்றன. இந்த அற்புதமான தொகுப்புக்கு பிக்ஹுல் அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது. முஸ்லிம்களின் துரதிஷ்டம் இது காணாமல்போய் விட்டது. தற்போது பிக்ஹுல் அக்பர் என்று அழைக்கப்படும் நூல் இதுவல்ல.

இமாமவர்கள் மறைந்த பின் அவர்களுடைய தலையாய மாணவர்களான இமாம் முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானிய்யியும், இமாம் அபூ யூசுபும் ஹனபி மத்ஹபின் நடைமுறைகளை இமாம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஒழுங்குப் படுத்தி பூரணமாக்கினர். இமாம் அவர்களால் ஆதாரங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஹதீதுகளை தொகுத்து முஸ்னது இமாம் அபூஹனீபாஎன்ற நூல் பல பாகங்களாக வெளி வந்தது.

இமாம் அவர்களாலும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டு, இமாம் முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானிய்யாலும், இமாம் யூசுபாலும் முறைப்படுத்தப்பட்டு உருவான ஹனபி மத்ஹப் உலகம் முழுவதும் பரவலாகி மக்கள் பின்பற்றும் பிரபல மத்ஹபாகியது.

2. இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.

அண்மையில் ஒரு காலம் வரும். அப்போது மக்கள் கலாஞான வேட்கையால் உந்தப்பட்டுத் தங்கள் ஒட்டகங்களை(ப்பல திசைகளிலும்) ஓட்டுவார்கள். எனவே, (அப்போது அவர்களுக்கு) மதீனாவின் ஒரு கலாஞானியை விட வேறு யாரும் பெரிய மேதையாக கிடைக்க மாட்டார்கள் என்று எம்பெருமானார் அருளியுள்ளதாக ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஹதீதில் குறிப்பிட்டபடி மதீனாவின் கலாஞானி இமாம் மாலிக் அவர்களே என்பது உலமாக்களின் கருத்தாகும்.

இமாம் அவர்களின் குடும்பம் யமன் பகுதியில் வாழ்ந்தவர்கள். இஸ்லாம் தோன்றிய பின்னர் மதீனாவில் வந்து குடியேறினர். முழுக்க முழுக்க அரபி மரபைச் சார்ந்தவர்கள்.

தோற்றப் பொலிவு:

உயரமான உருவமும், சிகப்பும் வெண்மையும் கலந்த நிறமும், அகன்ற நெற்றியும், பெரிய கண்களும், எடுப்பான மூக்கும் உடையவர்கள். அவர்களுடைய தாடி நீண்டிருந்தது. அளவோடு வளர்த்த மீசையிருந்தது. தலைமுடி குறைவாகவே இருந்தது.

விலையுயர்ந்த ஆடைகளையே அணிவார்கள். உயர்தரமான அத்தர்களையும் அதிகமாக பூசிக் கொள்வார்கள். அவர்கள் நீண்ட குஞ்சம் விட்டு தலைப்பாகை கட்டுவார்கள். அந்த குஞ்சத்தை வலப்பக்கம் அல்லது இடப்பக்கத் தோள் மீது தூக்கிப் போட்டுக் கொள்வார்கள். தைலஸான் என்ற விலை உயர்ந்த சால்வையையும் அவர்கள் மேலே போர்த்துக் கொள்வதுண்டு.அவர்களின் விரலில் இருந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்லில் வநிஃமல் வகீல்என்ற எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன.

வமிசவழி:

ஹிஜ்ரி 93 ல் தமாஸ்கஸில் உமைய்யா கலீபா வலீத் பின் அப்துல் மலிக் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது இமாம் அவர்கள் மதீனாவில் பிறந்தார்கள்.

மாலிக் பின் அனஸ் பின் மாலிக் அபீ ஆமீர் பின் அம்ரு பின் ஹாரிஸ் பின் சீமான் பின் குதைல் பின் அம்ரு பின் அல் ஹாரிதுல் அஸ்பாஹி.

இமாம் அவர்களின் தந்தையின் பாட்டனாரான அபூ ஆமீர் ஹிஜ்ரி இரண்டில் இஸ்லாத்தை தழுவியவராவார்கள். ஹிம்யர்என்ற உயர் வகுப்பை சார்ந்தவர்கள். பிரபல சஹாபியான ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் வீட்டையே விலைக்கு வாங்கி, அதில் வாழும் பாக்கியத்தை பெற்றார்கள்.

கல்வி:

அக்காலத்தில் கல்வியின் கலைஞான பீடமாகத் திகழ்ந்த மதீனாவில் இமாம் அவர்களின் கல்வி திறம்பட பெற்று இமாம் தாருல் ஹிஜ்ரத்என்ற பட்டப் பெயரையும் பெற்றார்கள்.

தங்களது பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகிய அனைவருமே ஒப்பற்ற முஹத்திஸாக இருந்ததால் தொடக்கத்தில் அவர்களிடமே கல்வி கற்றார்கள். திருக்குர்ஆனை காரீ அபூ ரதீம் நாபிய்யிய்யி அவர்களிடமும், ஹதீதுகளை ஷிஹாபுத்தீன் ஜஹ்ரி, ஜஃபருஸ் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மது பின் யஹ்யா, அபூ ஹாஜிம், யஹ்யா பின் சயீத் போன்ற பெரியார்களிடமும் பாடம் கேட்டார்கள். பிக்ஹு பாடங்களை ராபிஅத்துர் ரை அவர்களிடமும் கற்றுள்ளார்கள்.

தீர்ப்புகள் வழங்க சுமார் 66 பெரியார்களிடம்  அனுமதி பத்திரம் பெற்றுள்ளதாக அவர்களே தெரிவிக்கிறார்கள். மிகவும் இளம் வயதிலேயே (30-35) கலாஞான போதனை செய்யவும், மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் தொடங்கி விட்டார்கள்.

இமாம் அவர்கள் ஹதீது, பிக்ஹு பாட போதனையளிப்பதற்கென்றே ஒரு மன்றத்தை நிறுவிக் கொண்டார்கள். உலகப் புகழ் பெற்றுவிட்ட இந்த மன்றத்திற்கு பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் வரலாயினர்.ஹஜ்ஜு காலங்களில் கணக்கற்றவர்கள் அவர்களுடைய ஹதீது வகுப்புகளில் வந்து அமர்ந்து பாடம் கேட்பர்.

இந்த கலைஞான மன்றம் எப்போதும் பரிசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதில் உயர்தர விரிப்புகள் விரிக்கப்பட்டு இருக்கும். மன்றத்தின் நடுவே இமாம் அவர்கள் அமர்வதற்கான ஆசனம் அமைக்கப்பட்டிருக்கும். சுற்றிலும் மாணவர்களும், பிரமுகர்களும் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டு, விசிறிகள் கூட வைக்கப்பட்டிருக்கும். வாசனைப்புகை மணக்கும். பாடம் ஆரம்பமாகும் முன் மாணவர்கள் ஒலுவுடன் வந்து அமர்வர்.பாடம் நடத்த வரும் இமாம் அவர்கள் குளித்துவிட்டு தூய ஆடை உடுத்தி தலையையும், தாடியையும் சீப்பினால் வாரிக் கொண்டு தலைப்பாகை அணிந்துமு அத்தர் போன்ற வாசனையை அதிகமாக பூசிக் கொண்டு தங்கள் ஆசனத்தில் அமர்வார்கள்.இமாம் அவர்கள் ஆசனத்தில் அமரும் போது யாவரும் பணிவுடன் தங்கள் தலையை தொங்கப் போட்டுக் கொள்வார்கள். நபிபெருமானாரைப் பற்றி பேசும் போது அவர்களின் நிறம் மாறி, உடல் ஒடுங்கும்.

ஹதீது பாடம் நடத்தும் போது சபையில் யாரேனும் இரைந்து பேசினால் கூட அவர்களால் தாங்க முடியாது. உடனே அவர்களை நோக்கி விசுவாசிகளே! உங்கள் சப்தத்தை உங்கள் நபியுடைய சப்தத்துக்கும் மேலாக உயர்த்தாதீர்கள்என்ற கருத்துள்ள ஆயத்தை ஓதிக் காட்டுவார்கள். அதாவது நபி பெருமானாரின் திருமொழிகளைப் பற்றிய விளக்கம் கொடுக்கும் போது, தன் சப்தத்தை உயர்த்துபவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் தன் சப்தத்தை உயர்த்தியவனாவான் என்பது அதன் விளக்கமாகும் என்று கூறுவார்கள்.

அரசாங்கமும் இமாமும்:

இமாம் மாலிக் அவர்கள் பல கலீபாக்களின் ஆட்சியைக் கண்டவர்கள். உமைய்யாக்கள், அப்பாஸியாக்கள் என்ற இரண்டு பரம்பரையினரின் ஆட்சியாளர்களிலும் பலர் ஆளுவதை அவர்கள் கண்டார்கள்.

ஹிஜ்ரி 136 ல் அபூ ஜஃபருல் மன்சூர் கலீபாவாகியதும் சாதாத்துக்கள் ஒன்றுகூடி இமாம் ஹஸனின் வமிசவழியைச் சார்ந்த முஹம்மது (நப்ஸுல் ஜக்கிய்யா)வை கலீபாவாக பிரகடனம் செய்தபோது, இவரும் பிரசன்னமாயிருந்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்தார். பின்னர் தன்னுடைய தமையனார் கிலாபத்தை கைப்பற்றவே தான் கொடுத்த விசுவாசப் பிரமாணத்தை மறந்து விட்டார். நப்ஸுல் ஜக்கிய்யா இவருக்கு எதிராக மக்காவில் கலகக் கொடி உயர்த்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். இவரை அடக்க மன்சூர் மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது.

அச்சமயம் மன்சூர் நப்ஸுல் ஜக்கிய்யாவையும், அவரது சகோதரர் இப்றாஹீமையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி இமாம் மாலிக் கடிதம் எழுதினார். இமாம் அவர்கள் மன்சூர் முன்பு செய்த வாக்குறுதிக்கு மாற்றமாக செயல்படுவதால் அதற்கு இணங்க மறுத்து விட்டார்கள். கிலாபத் உண்மையில் நப்ஸுல் ஜக்கிய்யாவிற்கே உரித்தானது. எனவே அவரிடம் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுக்கலாம் என்று  தங்கள் அபிப்பிராயத்தையும் பிரகடனப்படுத்தினர்.

இதுகேட்ட மதீனாவாசிகள் ஒன்றுதிரண்டு இமாம் அவர்களிடம் வந்து, ‘நாங்கள் மன்சூரிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து விட்டோமே, இப்போது என்ன செய்வது? என்று வினவினர். அதற்கு இமாம் அவர்கள் மன்சூர் உங்களிடம் பலவந்தமாகப் பிரமாணம் வாங்கியிருக்கிறார். இவ்வாறு கட்டாயப்படுத்தி வாங்கப்படும் பிரமாணம் செல்லாது என்று கூறி அதற்கு ஆதாரமாக வற்புறுத்தி வாங்கப்படும் தலாக் செல்லாதுஎன்ற ஹதீதையும் சுட்டிக் காட்டினார்கள். எனவே மதீனாவாசிகள் முழுமனதுடன் நப்ஸுல் ஜக்கிய்யாவை ஆதரித்து நின்றனர். ஆனால் கலீபா மன்சூர் அனுப்பிய பெரும்படை நப்ஸுல் ஜக்கிய்யாவையும், அவரது சகோதரரையும் கொன்று விட்டது.

இதன்பின் மன்சூர் ஜஃபர் என்பவரை மதீனாவில் தன் பிரதிநிதியாக நியமித்து, இமாம் மாலிக் போன்றோரை கண்காணித்து வரும்படி சொல்லியிருந்தார். மாலிக் இமாமை கண்டு, வற்புறுத்தி வாங்கப்படும் தலாக் செல்லாது என்ற உங்கள் தீர்ப்பை மாற்றிஅ து செல்லும் என்று தீர்ப்பு கொடுங்கள்என்று வற்புறுத்தினார். இமாம் அவர்கள் அதற்கு இணங்க மறுத்துவிட்டார்கள். ஹதீதுக்கு மாற்றமாக தீர்ப்பளிக்க முடியாது என்றும் கூறி விட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஜஃபர் இமாமுக்கு எழுபது கசையடிகள் கொடுக்க உத்திரவிட்டு நிறைவேற்றப்பட்டது. இது ஹிஜ்ரி 147ல் நடைபெற்றது.

முஸ்லிம்களின் மார்க்க வழிகாட்டியாக விளங்கக் கூடிய ஹதீது-பிக்ஹு நூல் ஒன்றை ஆக்கித் தரும்படி கலீபா மன்சூர் இமாம் அவர்களிடம் கேட்டதற்கிணங்க, இமாம் அவர்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு எழுதிய நூல்தான் உலகப் புகழ் பெற்ற கிதாபுல் முஅத்தாஆகும். இமாம் அவர்கள் கலைஞ  hன போதமளித்த தளமாக விளங்கியது ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வசித்த இல்லமாகும்.

கலீபா மன்சூரின் மறைவிற்குப் பின் அவரது மகன் மஹ்தி கலீபாவானதும் ஹஜ்ஜுக்கு வருகை தந்தபோது, மதீனா எல்லையில் இமாம் அவர்கள் அவரை வரவேற்றனர். அச்சமயம் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. இதை கலீபா அவர்களுக்கு அவர்கள் உணர்த்தி அதற்குரிய உதவியை பெற்றுத் தந்தனர். பின்னர் கலீபா பக்தாத் வருமாறு கோரிய அழைப்பை நிராகரித்து, ‘அவர்கள் மட்டும் மெய்யாகவே தெரிந்து கொண்டிருப்பார்களேயானால் மதீனாவே அவர்களுக்கு சிறந்த புண்ணிய பூமியாகும்என்ற ஹதீதை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேள்வியுற்ற கலீபா அவர்கள் தமது சபைக்கு அழைத்து வர உயர் ஜாதிக் குதிரை ஒன்றையும் அனுப்பினார். நான் மதீனாவில் எங்கும் வாகனத்தில் ஏறிப் போக மாட்டேன். ஏனெனில் இதே தெருக்களில்தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால்நடையாக நடந்து சென்றுள்ளார்கள்என்று பதிலளித்து மறுத்துவிட்டார்கள். பின்னர் கலீபா மஹ்தி இவர்களின் கலைஞான வகுப்பில் வந்து அமர்ந்து பாடம் கேட்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.

ஹிஜ்ரி 170 ல் கலீபாவாக ஹாரூன் ரஷீத் பதவியேற்றதும் இமாம் அவர்களை பூர்த்தி செய்யப்பட்ட முஅத்தா கிதாபை தமது சபையில் விளக்கமளிக்க வேண்டுகோள் விடுத்தார். அது கேட்ட இமாம் அவர்கள் மனிதர்கள்தான் கல்வி ஞானத்தை தேடி வரவேண்டுமே தவிர கல்வி ஞானம் மனிதர்களைத் தேடி போகாதுஎன்று கூறிவிட்டார்கள். அப்படியாயின் தம் சபைக்கு வந்தாவது ஆக வேண்டும் என்ற வேண்டுகோளின்படி இமாம் அவர்கள் அவருடைய சபைக்குப் போனார்கள்.

இமாம் அவர்களின் கலாஞான சபைக்கு சென்று கலீபா பாடம் கேட்க விரும்பி அதன்படி சென்றார். மேலும் ஹஜ்ஜு காலங்களில் வருகை தந்திருந்த உலமாக்களுக்கும் முஅத்தா கிதாபை பாடம் எடுக்கச் செய்தார். உலமாக்கள் எவ்வித மறுப்புமின்றி இமாம் அவர்களின் பாடபோதனையை கேட்பதைக் கண்டு, முஅத்தாவின் பெருமையை கண்ட ஹாரூன் ரஷீது அதையே சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களும் பின்பற்றும் ஷரீஅத் சட்ட நூலாக ஆக்க விரும்பினார். ஆனால் இமாம் அவர்கள் அதை விரும்பவில்லை.

மறைவு:

இமாம் அவர்கள் தங்கள் எண்பத்தி ஆறாம் வயதில் ஹிஜ்ரி 179 ரபீயுல் அவ்வல் மாதம் பதினான்காம் நாள் அதிகாலை வேளையில் இவ்வுலகை விட்டு மறைந்து இறைவனை சந்திக்க சென்றார்கள். சுமார் 56 ஆண்டுகள் இமாம் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை செய்தார்கள். இமாம் அவர்களின் கடைசிகாலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்களின் நெருங்கிய மாணவரான மஈன் பின் ஈஸா என்பவராவார்.  இமாம் அவர்களின் பூத உடல் ஜன்னத்துல் பகீஃ எனும் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபட்டது.

அன்றாட அலுவல்கள்:

காலையில் சுப்ஹுத் தொழுதபின் சூரியோதயம் வரை பல வழீபாக்களையும், ஒளராதுகளையும் ஓதிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெளியில் வந்ததும் அவர்களை பலர் காண வருவார்கள். சிறிது நேரம் அவர்களுடைய சுக நலன்களை விசாரித்து அளவளாவுவார்கள். பின்னர் கலாஞான வகுப்பு நடத்த விரைவார்கள். இமாம் அவர்கள் கூறும் ஹதீதுகளை எழுதி வைக்கும்  பணியை இப்னு ஹபீப் செய்து வந்தார். சபையில் எழுந்து நின்று படிக்கும் பணியை பெரும்பாலும் மஅன் பின் ஈஸா, யஹ்யா பின் ஸலாம் ஆகிய இருவரும் செய்து வந்தனர். இரவில் பெரும்பகுதியை இமாம் அவர்கள் வணக்கத்திலேயே கழிப்பார்கள். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இபாதத்திலேயே மூழ்கிவிடுவார்கள்.

விருந்தினர்கள் வந்தால் விருந்தினருக்கு விசேசமான உணவு வகைகளை தயாரித்து வைத்து தங்கள் கையாலேயே பரிமாறி உபசரிப்பார்கள். இமாம் அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி இமாம் ஷாபிஈ அவர்கள் மிகவும் பெரிதும் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.

மிகவும் கொடை வள்ளலாகவும் திகழ்ந்துள்ளார்கள். ஹஜ்ஜுக்கு வரும் ஆட்சியாளர்கள், பிரபுக்கள் இமாம் அவர்களுக்கு பெருந்தொகை அன்பளிப்பாக கொடுப்பதுண்டு. அவைகளை உடனே உலமாக்களுக்கும், ஏழைகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஒருசமயம் அவர்களுடைய லாயத்தில் நின்ற குதிரையொன்றின் சிறப்பைப் பற்றி இமாம் ஷாபி, இமாம் அவர்களிடம் புகழ்ந்து பேசியபோது அக்குதிரையை அன்னவர்களுக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். தங்களுடைய மாணவர்கள் பலருக்குக் கூட அவர்கள் ஆண்டு தோறும் உதவித் தொகை அனுப்பி வந்துள்ளார்கள்.

தம்மை கசையடி அடிக்க உத்தரவிட்டு, ஒட்டகத்தின் மீது ஏற்றி ஊர் சுற்ற வைத்த ஜஃபரையே இமாம் அவர்கள் மன்னித்து விட்டார்கள்.

கற்றோரையும், சான்றோரையும் மதித்தார்கள். இமாம் அபூ ஹனீபா அவர்கள் இமாம் அவர்களின் சபைக்கு வந்த போது, தாங்கள் மேலே போர்த்தியிருந்த தைலஸாஎன்ற விலை உயர்ந்த போர்வையை எடுத்து கீழே விரித்து அதன் மீது அவர்களை அமரச் செய்து மரியாதை காட்டினார்கள்.இது போன்றே இமாம் சுப்யானுத் தௌரீ அவர்களுக்கும் செய்தார்கள்.

தம்மிடம் வரும் பிரச்சனைகளுக்கு இலகுவில் தீர்ப்பளித்து விடாமல், ‘இது அவ்வளவாக எனக்குத் தெரியாதே!; என்றும் தங்களை விட பெரியவர் யாராவது தீர்ப்பளிக்கட்டும் என்றும் மிகப் பணிவுடன் நடந்து கொள்வார்கள்.

நூல்கள்:

இமாம் அவர்கள் முஅத்தா தவிர ரிஸாலா மாலிகி, இலர் ரஷீது, அஹ்காமுல் குர்ஆன், அல் முதவ்வனா, கிதாபுல் மனாஸிக், தப்ஸீர் கரீபுல் குர்ஆன், கிதாபுல் மஸாயில் போன்ற நூற்களையும் எழுதியுள்ளார்கள்.

மதீனாவிலுள்ள மார்க்க நடைமுறைப் படியும், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லலம் அவர்களின் ஹதீது ஆதாரத்தின் மீதும் முஸ்லிம்களின் ஷரீஅத் நடை முறைகளைத் தொகுத்து எழுதிய இமாம் அவர்கள் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த  போது, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாம் அவர்கள் கனவில் தோன்றி, ‘இதை மனிதர்களுக்கு மிருதுவான பாதையாக ஆக்கும்என்று கூறினார்களாம். எனவே இந்த நூலுக்கு திருக்குர்ஆன், ஹதீதோடு இணைந்த (ஒற்றுமையான) நூல் என்ற பொருளில் முஅத்தாஎன்று பெயர் வைக்கப்பட்டது.இது ஒரே சமயத்தில் ஹதீது கிரந்தமாகவும், பிக்ஹு கிரந்தமாகவும் விளங்கும் சிறப்பை பெற்றிருக்கிறது.

நபிபெருமானாரிடம் அன்பு:

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இமாம் மாலிக் மிகுந்த பயபக்தியுடையவர்களாக இருந்தார்கள். பெருமானாரின் பெயரை உச்சரிக்கும் போது கூட  அவர்கள் குரல் கம்மும். மஸ்ஜித் நபவியில் ரௌலா அன்வர்என்ற அறையுண்டு.அதில் அமர்ந்து கொண்டு யாரும் இரைந்து பேசுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் பெருமானாரையே அவமதிப்பதாகும் என்று சொல்வதுண்டு.

அவர்களிடம் எண்ணற்ற குதிரைகளும், கோவேறு கழுதைகளும் இருந்தும் பெருமானாரின் திருப்பாதம் பட்ட அந்தப் புனித நகருக்குள் எந்த வாகனத்தின் மீதும் அவர்கள் சவாரி செய்து போனதே கிடையாது. நபி பெருமானாரின் ஹதீதுகளை தகாத இடங்களிலோ, அவசர அவசரமாகவோ, இரைச்சல் போட்டோ, நடந்து கொண்டோ பாடம் நடத்த மாட்டார்கள். நபி பெருமானாரை அடிக்கடி தங்கள் கனவில் கண்டு வந்துள்ளார்கள்.

இதுபோன்றே ஹஜ்ஜைத் தவிர மதீனாவை விட்டு எங்கும் போனதே இல்லை.

அன்னவர்களின் பெயரால் இலங்கும் மாலிக் மத்ஹப் உலகின் நாலா பக்கத்திலும் பரவி தீன் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

3. இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு

இமாம் அவர்களின் இயற் பெயர் முஹம்மது. இடுகுறிப் பெயர் அபூ அப்துல்லாஹ். பட்டப் பெயர் நாஸிருல் ஹதீது. எனினும் அவர்களுடைய பாட்டனாரின் பாட்டனார் பெயரான ஷாபியீ என்பதே அவர்களுடைய உலகம் போற்றும் பெயராக நிலைத்து விட்டது.

நபிபெருமானாரின் முன்னறிவிப்பு:

குறைஷி குலத்தைச் சேர்ந்த ஆலிம் ஒருவர் பூமியின் பல பாகங்களிலும் அறிவை-மார்க்க ஞானத்தை நிரப்புவார்என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். இது இமாம் ஷாபியீதான் என்பது அஹ்மது இப்னு ஹன்பல் போன்ற பல இமாம்களுடைய கருத்தாகும்.

வமிசவழி:

அரேபியாவிலுள்ள உயரிய குலமான குறைஷி குலத்தை சார்ந்தவர்கள். முஹம்மது பின் இத்ரீஸ் பின் அப்பாஸ் பின் உதுமான் பின் ஷாபியீ பின் ஸாயிப் பின் உபைதா பின் அப்து பின் ஹாஷிம் பின் அப்துல் முத்தலிப் பின் அப்த மனாப் ஹாஷிமி.

இந்த வகையில் இவர்களுடைய பரம்பரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களுடைய குடும்பத்தோடு போய் சேருகிறது. இந்த வரிசையிலுள்ள ஸாயிப் என்பவர் பத்ரு போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டு முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிமாகி நபிபெருமானாரின் தோழர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய புதல்வர் ஷாபியியும் நபி பெருமானாரோடு நன்கு பழகியவராவார்.

இமாம் அவர்களுடைய தாயாரும் எமன் நாட்டிலுள்ள பிரபலமான அஜ்து என்ற கூட்டத்தைச் சேர்ந்த உயர்குல பெண்மணியாவார்கள்.இமாம் அவர்கள் சிறு வயது பாலகராக இருக்கும் போதே தந்தை அவர்கள் காலமாகி விட்டார்கள்.

அன்னையார் அவர்கள் தம் பாலகரை அழைத்துக் கொண்டு எமன் நாட்டிலுள்ள தம் சகோதரர் இல்லத்துக்கு போய் சேர்ந்தார். இமாம் அவர்கள் எட்டு வயது வரை அங்கேயே வளர்ந்து திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாக ஆகிவிட்டார்கள்.

தோற்றப் பொலிவு:

இமாம் அவர்கள் சிவந்த நிறத்தினர். நடுத்தரமான உயரம் உடையவர்கள். கைகள் நீண்டும், நெற்றி அகன்று பெரியதாகவும், வதனம் புன்னகை தவழுவதாகவும் விளங்கியது. பார்வை கம்பீரமானதாக இருந்தது.முத்துப் போன்ற வரிசையான பற்கள் இருந்தன. அடர்ந்த நடுத்தர அளவோடு கூடிய தாடியும் வைத்திருந்தார்கள். அம்மை வடுக்கள் போன்ற சில தழும்புகளுடன் கூடிய நீண்ட மூக்கு அவர்களுடையது.

மிருதுவான உடையையும், கித்தான் உடையையும் உடுப்பார்கள். பருத்திப் போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். நடுத்தரமான தொப்பியும், தலைப்பாகையும், காலுக்கு மேஜோடும் விரும்பி அணிவார்கள்.

குடும்பம்:

மக்காவில் ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சந்ததியரான குறைஷி மாதான ஹம்தா என்பவரை மணந்திருந்தார்கள். அவர்கள் நன்றாக கவி பாடக் கூடியவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் பிறந்திருந்தனர். ஆண்களில் இருவர் சிறு வயதிலேயே காலமாகி விட்டார்கள். அபூ உதுமான் முஹம்மது என்ற ஒரு புதல்வர் மட்டும் இருந்தார்கள். பெண் குழந்தைகளின் பெயர் பாத்திமா, ஜைனப் என்பனவாகும்.

இமாம் அவர்களின் புதல்வர் அபூ உதுமான் அவர்கள் இமாம்  ஹன்பலி அவர்களிடமே கல்வி பயின்றார்கள். இவர்கள் ஹலபு, ஜஸாயிர் ஆகிய நகர்களில் காஜியாகப் பதவி வகித்துப் பின் ஹிஜ்ரி 240ல் காலமானார்கள்.

நற்குணங்கள்:

இமாம் அவர்கள் கொடை கொடுக்கும் வள்ளலாக இருந்துள்ளார்கள். சிறுவயதிலேயே கஷ்டத்தை அனுபவத்திருந்ததால் வறியவர்களின் துயர் அறிந்து வாரி வழங்குவார்கள். இமாம் அவர்களுக்கு கலீபாவும், மந்திரிகளும், பிரபுக்களும் கொடுக்கும் காணிக்கைகளை கால் பகுதியை மட்டும் தங்களுக்கு வைத்து விட்டு முக்கால் பகுதியை மறுநாள் வரும்முன்பே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.

விருந்துபசாரத்தில் சிறந்து விளங்கினார்கள். தங்களுடைய மாணவர்களுக்கும், தங்களோடு

பழகியவர்களுக்கும் அடிக்கடி விருந்து அளிப்பார்கள். விருந்தில் ஹல்வா, பலூதா போன்ற இனிப்புப் பதார்த்தங்கள் இருக்கும்.

தாங்கள் சிறந்த அறிவாளியாக இருப்பினும் மற்றவர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள்.

இமாம் அவர்களிடம் கற்ற சுமார் நூற்றி அறுபது பேரைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில் இமாம் புகாரியின் குருநாதரான இமாம் ஹுமைதி, அபூ முஹம்மது, ஹர்மலா, அபூ இப்றாஹீம், இஸ்மாயில் பின் யஹ்யா, அபூ தௌர், ரபிஉ சுலைமான், அபூ யஃகூப், இமாம் பைஹகி, இப்னு ஹஜர் ஆகியோர் இஸ்லாமிய உலகில் புகழ் பெற்றுள்ளனர்.

இமாம் அவர்களுக்கு யாரேனும் சிறிய உதவி புரிந்தாலும் அதற்காக இரண்டுமடங்கு சன்மானத்தைக் கொடுப்பார்கள்.

அன்றாட அலுவல்கள்:

இமாம் அவர்கள் தினமும் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சூரியோதயம் வரை ஃபிக்ஹு வகுப்பு நடத்துவார்கள். பின்னர் ஹதீது வகுப்புகள் தொடங்கும். அதற்குப் பின்னர் மார்க்க விளக்கங்கள் நடைபெறும். அதன்பின் பல்வேறு மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படும். லுஹர் தொழுகைக்குப் பின் இலக்கியம், கவிதை, யாப்பிலக்கணம், சொல்லிலக்கணம் குறித்து பாடங்கள் நடைபெறும். அஸரு தொழுதபின் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மக்ரிபு வரை திக்ரு இலாஹி நடத்துவார்கள். இஷா தொழுதபின் படுக்கப் போய் விடுவார்கள்.

இமாம் அவர்கள் இரவை மூன்று பகுதிகளாக பிரித்து, முற்பகுதியில் தூங்கி விட்டு, இரண்டாம் பகுதியில் எழுந்து ஹதீது, பிக்ஹுகளை எழுதிவிட்டு மூன்றாம் பகுதியில் சுப்ஹு வரை திருக்குர்ஆன் ஓதுதல், நபில் தொழுகை தொழுதல் போன்ற நல் வணக்கங்களை செய்வார்கள்.

தினமும் ஒருமுறை திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து விடுவார்கள்.

கல்வி:

இளமையில் அவர்கள் காட்டிய திறமையும், புத்தி சாதுர்யமும், எதையும் இலகுவாக மனனம் செய்யும் இயல்பை கவனித்த அவரது தாயார் தம் மகனை கல்வி கற்க வைக்க ஆவல் கொண்டார். ஆனால் அதற்கு அவர்களிடம் போதிய வசதி இல்லை. எனவே இமாம்  அவர்களுடைய பத்தாம் வயதில் மக்காவிற்கு அவர்களுடைய சிறிய தந்தையிடம் அனுப்பி வைத்தார்கள். சிறிய தந்தையும் கஷ்ட ஜீவனம் நடத்தி வருபவர். எனவே அவர்களை பொருள் கொடுத்து படிக்க வைக்க முடியாதிருந்தது.

இதற்கிடையில் பற்பல பரம்பரையினர் பற்றிய பாடத்தை (இல்முல் அன்ஸாபை)இமாம் அவர்கள் நன்கு கற்றுக் கொண்டார்கள். சிறிய தந்தையுடன் மக்காவின் சுற்றுப் புறங்களில் வேலைக்காக செல்லும் போது ஆங்காங்குள்ள வழக்கு மொழிகளையும், பாடல்களையும் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

முறைப்படி படிப்பதற்கு வாய்ப்பற்ற இமாம் அவர்கள் பல்வேறு இடங்களிலும் நடக்கும் ஹதீது விளக்கங்களையும், மார்;க்;;;;;;;;;;;;;;;;க சொற்பொழிவுகளையும் ஆவலோடு சென்று கேட்பார்கள். கடைசியில் மதரஸா ஒன்றில் ஏழை மாணவராகப் போய் ஒதுங்கிய அவர்களால் ஆசிரியருக்கு எதுவும் கொடுக்க இயலாதிருப்பினும் அவரும் அவர்களிடம் பாடம் கேளாமலும், அவர்களைக் கவனியாமலும் புறக்கணித்து விட்டார். ஆனால் கல்வி அவர்களை புறக்கணிக்க வில்லை. வகுப்பில் தாங்கள் கேட்டதை வீடு சென்றதும் எழுதி மனப்பாடம் செய்து கொள்வார்கள். தாம் கற்ற பாடங்களை மற்ற மாணவர்களுக்குப் போதிக்கும் அளவுக்கு திறமையுடையவர்களாக ஆனார்கள். இதனால் ஆசிரியர் இமாம் அவர்களை முன்வரிசையில் அமர்த்திக் கொண்டார்கள். எனினும் இமாம் அவர்கள் இலவசமாக கல்வி பெறுவதை விரும்பாமல் ஈத்தம் ஓலைகளையும், மட்டைகளையும் பொறுக்கிக் கட்டி எடுத்துக் கொண்டு போய் தமது ஆசிரியர் வீட்டில் போட்டு தமது கல்வி கட்டணத்திற்காக செய்து வரலானார்கள்.

மக்காவில் பிரபல ஹதீது பாட போதனை நிபுணராக திகழ்ந்த பெரியார் முஸ்லிம் பின் காலித் அவர்களிடம் ஹதீது, பிக்ஹ் பாடங்களை சுமார் மூன்று ஆண்டுகள் படித்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரண்டு முறை கனவில் கண்டு அவர்களின் உமிழ்நீரை தங்கள் வாயில் வாங்கி கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

இமாம் அவர்கள் கவிதை எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி புகழ்ந்து கவிதை எழுதினார்கள். இதைக் கண்ட ஷியாக்கள் அவர்களை காரிஜி என்று தூற்றிய போதும் அதைப் பற்றி கவலைப் படாமல் நபிகளாரை புகழ்ந்து கவிதை எழுதிக்  கொண்டே இருந்தார்கள்.

வசன நடை, அரபு மொழி அகராதி பயிற்சி, அரபி இலக்கியம் போன்றவற்றில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் ஹுஜைல் இனத்தாரின் பத்தாயிரம் பாடல்களையும், சொல் வழக்கற்றுப் போன அகராதியின் பதங்களையும் மனப்பாடமாக்கி இருந்தார்கள்.

அதேபோல் வரலாற்றுப் பாடங்களிலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இமாம் ஷாபியீ வரலாற்றுப் பாடத்தில் தன்னகரில்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள்என்று மிர்அதுல் ஜினான்என்ற வரலாற்று நூலாசிரியர் கூறுகிறார்.

வானநூல், ஜோதிடம் முதலியவற்றிலும் இமாம்  அவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

இமாம் அவர்கள் கைதேர்ந்த வைத்தியராக விளங்கினார்கள். உடல்கூறு நுட்பங்களையும், மருந்துகளின் தன்மையையும் அறிவதற்காக அவர்கள் கிரேக்க வைத்திய நிபுணர்களான கேலன், அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலியவர்களின் நூற்களை விரிவாக கற்றுள்ளார்கள்.

மனிதனுடைய முகச் சாயல், அங்க அமைப்பு ஆகியவற்றை வைத்து மனிதனுடைய இயல்பைக் கூறும் ஆரூடத்தில் (இல்மு பிராஸத்) இமாம்  அவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.இதை யமனிலிருக்கும் போது கற்றதாக சொல்கிறார்கள்.

இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி:

இமாம் அவர்கள் இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்க முடிகட்டித் தங்கள் ஆசான் முஸ்லிமிடம் தமது ஆசையைத் தெரிவித்தார்கள். அந்தப் பெரியார் அதற்காக தங்கள் ஆசியை நல்கியதுடன், இமாம் மாலிக் அவர்களுக்கு சிபாரிசு கடிதம் ஒன்றும் கொடுத்தார்கள்.

மதீனா சென்று இமாம் மாலிக் அவர்களை சந்தித்து அவர்களின் பாட போதனை வகுப்பில் சேர்ந்து திறம்பட கல்வி கற்றார்கள். ஸஹாபாக்கள், தாபியீன்கள் வரலாறு, மார்க்கத் தீர்ப்புகள், பிக்ஹு போன்ற பாடங்களில் திறமான கல்வியடைந்தார்கள்.

இச்சமயத்தில் புறா விற்பவன் ஒருவன் இமாம் மாலிக்கிடம் வந்தான். சபையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியாகி விட்டனர். இமாம் ஷாபியி மட்டும் அங்கு இருந்தனர். அச்சமயம் மாலிக்கிடம் வந்த மனிதன் நான் புறாவை கூவ வைத்து விற்கும் வியாபாரம் செய்து வருகிறேன். ஒருவரிடம் விற்ற புறா கூவவில்லை என்று ஒருவன் என்னிடம் தகராறு செய்தான். நான் அந்த புறா கூவவில்லையெனில் என் மனைவியை த் தலாச்குச் செய்தவனாகிறேன் என்று சபதம் செய்து விட்டேன். பின் என் ஆத்திரம் தணிந்து யோசித்துப் பார்த்த போது இது தவறென்று தெரிந்தது. ஒருவேளை அந்தப் புறா கூவாவிட்டால் என் மனைவியை நான் தலாக்கு செய்ய வேண்டியதுதானா? இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? என்று கேட்டான்.

இதற்கு மாற்றில்லை. சபதப்படி நடக்க வேண்டியதுதான் என்று மாலிக் இமாம் கூறிவிட்டார்கள். உடனே அவன் வேதனையோடு வெளியேறினான். அவனைப் பின்தொடர்ந்த இமாம் அவர்கள் அவனை அணுகி, அந்தப் புறா கூவுவது அதிகமா? கூவாதது அதிகமா? என்று கேட்க, சற்றே திகைத்த அந்த மனிதன் கூவுவதுதான் அதிகம்என்று பதிலளித்தார்கள்.

உடனே அவனை இமாம் மாலிக்கிடம் அழைத்துச் சென்று, ‘இவன் மனைவி தலாக் ஆக மாட்டாள் என்று கருதுகிறேன் என்று சொன்னார்கள். மாலிக் இமாம் அவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டார்கள். ஷாபியி இமாம் அவர்கள் ஒரு நாள் தாங்கள் சொன்ன ஹதீதுதான் இதற்கு ஆதாரம். அதாவது பாத்திமா பின்த் கைஸ் என்ற பெண்மணி நபி பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் நற்தோழர்களில் இருவரான அபூஜஃமின் என்பவரும்,முஆவியா என்பவரும் என்னை மணக்க விரும்பி பெண் கேட்கிறார்கள். அவர்கள் இருவரில் நான் யாருக்கு வாழ்க்கை பட வேண்டும்? என்று கேட்டாள். அப்போது நபி பெருமானார் முஆவியா தன் கவசத்தைக் கீழே வைக்க மாட்டாதவர் என்பதைத் தெரிந்து கொள்என்று கூறினார்கள். அவர் தூங்கும் போதும், உணவு உண்ணும் போதும் தமது கவசத்தை அப்புறப்படுத்தத்தான் செய்வார் என்பதை நபி பெருமானார் அறிந்திருந்தும், இப்படிக் கூறியதன் கருத்து யாதெனில், பெரும்பாலாக அவர் அப்படியிருப்பதைத் தானல்லவா! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் குறைந்ததைப் புறக்கணிக்கத்தானே நேரும். எனவே, இவனுடைய புறாவும் கூவுவதுதான் அதிகம் என்றதும் நான் அந்த அடிப்படையில் அந்த மிகுதமான அம்சத்தைத்தான் கவனிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்…என்றார்கள். இமாம் மாலிக் அவர்கள்இதன் உண்மையை விளங்கி தீர்ப்பை மாற்றி எழுதினார்கள். இமாம் மாலிக் அவர்களுக்கு இதனால் இமாம் ஷாபியீ அவர்கள் மீது இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாகியது.

என்னிடம் பாடம் கேட்ட அனைவரிலுமே ஷாபியைப் போன்ற மதிநுட்பமுடைய வேறு எவரையும் நான் காணவில்லை என்று இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள். இமாம் அவர்களிடம் அத்தாட்சி பத்திரம் பெற்ற பின் பல்வேறு பெரியார்களிடம் கற்பதற்காகவும், தாம் பெற்ற கல்வியை பூரணமாக்கிக் கொள்வதற்காகவும் தங்கள் ஆசிரியரிடம் விடை கேட்டார்கள். இமாம் அவர்கள் ஆசிர்வதித்து அனுப்பினார்கள். இமாம் மாலிக் அவர்கள் இமாம் ஷாபி அவர்களின் இருத்தி ஒன்பதாம் வயதில் காலமானார்கள். அதுவரை இமாம் ஷாபி அவர்கள் அவர்களின் மாணவராக இருந்தார்கள் என்று சில வரலாற்று நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் அவர்கள் சுமார் 80 ஆசிரியர்களிடம் பாடம் கேட்டுள்ளனர். அவர்களுள் மஸ்லிம், இமாம் மாலிக் தவிர புலைல் இப்னு இயால், சுப்யான் பின் ஐனா, வகீஉ, யஹ்யா பின் சயீத், முஹம்மது பின் இஸ்மாயில், முஹம்மது ஹஸன், அப்துல்லா இப்னு முபாரக், இப்றாஹிம் பின் சஅத், அப்துல்லாஹ் பின் நாபிஃ போன்ற நாதாக்களும், இமாம்களும் முக்கியமானவர்கள். இமாம் மாலிக் அவர்களிடமிருந்து சுமார் பத்தாயிரம் ஹதீதுகளையும், மார்க்கத் தீர்ப்புகளையும் பயின்று மனனம் செய்துள்ளார்கள்.

இதன்பின் இமாம்அவர்கள் மக்கா சென்று, அங்கே தங்கள் உறவினர்களைப் பார்த்தார்கள். அங்கு பிரபலமான ஹதீது போதகரான இமாம் சுப்யான் இப்னு ஐனாவை அணுகி சில மாதங்கள் ஹதீது விளக்கங்களை கேட்டார்கள். தங்களுடைய முப்பது வயது அடைந்த நிலையில், தம்முடைய பிரதான ஆசான் மாலிக் இமாம் காலமானதன் நிலையிலும் தாங்களே சுயமாக மார்க்கத் தீர்ப்பு வழங்க நாடினார்கள். இதற்காக இமாம் சுப்யான் இப்னு ஐனாவை அணுகி அனுமதி வேண்டி நின்றார்கள்.

இமாம் அவர்களுக்கு ஐனா அவர்கள் பல கேள்விகளை கேட்டு திருப்தி பட்டுக் கொண்டபின் ஷாபி இமாமுக்கு பத்வா கொடுக்க அருகதை உள்ளது என்று அத்தாட்சி வழங்கி துஆவும் செய்து ஆசிர்வதித்தார்கள்.

அரசுப் பதவி:

பக்தாதிலிருந்து கலீபா ஹாரூன் ரஷீது அவர்களின் தலைமை அதிகாரியொருவர் மக்கா வந்தார். அவர் ஷாபி இமாமை எமன் தேசத்துக்கு அரசு அதிகாரியாக நியமனம் செய்து விட்டார். முப்பதாவது வயதில் தங்கள் தாயாரின் இடமான எமன் சென்று இப்பதவியை ஏற்றுக் கொண்டு பின்பு பதவியுயர்வு பெற்று அந்த வட்டார நிர்வாகியாகவும் ஆகி விட்டார்கள்.

இந்த பதவியில் இருந்து கொண்டே தங்கள் கல்வியை விருத்தி செய்து கொண்டார்கள். எமனில் பிரசித்திப் பெற்ற ஹுஜைல் கிளையாரோடு நெருங்கி பழகி அரபு அகராதி, சரிதை, சொல்லிலக்கணம், யாப்பிலக்கணம் ஆகியவற்றில் திறமை பெற்றார்கள்.

இச்சமயத்தில் குறிபார்த்து அம்பெய்வதில் தனியாக தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

எமனில் கலீபாக்களின் பிரதிநிதியாக அதிகாரம் வகித்த இமாம்  ஷாபி அவர்கள் தங்கள் நேரிய நடத்தையாலும், உயரிய ஒழுக்கத்தாலும், இனிய சுபாவத்தாலும் ஏழைகளுக்கு இரங்கும் இயல்பாலும் பொதுமக்களுடைய அன்பை பெற்று விட்டார்கள். இது சிலருக்கு பொறாமையை தூண்டி விட்டது. கலீபாவுக்கு இமாம் அவர்களைப் பற்றி அவதூறு பரப்பி விட்டனர்.

கலீபா இமாம் அவர்களை கைது செய்து வரும்படியும் அத்துடன் அப்பகுதியிலுள்ள சாதாத்துமார்களையும் கைது செய்து வரும்படியும் அப்பகுதி ராணுவ அதிகாரி ஹம்மாத் பர்பரி என்பவருக்கு உத்தரவு இட்டார். அதன்படி அவர் செயல்படுத்தியும், ஒருநாள் கலீபாவின் அவைக்கு இவர்கள் கொண்டு வரப்பட்டு இமாம் அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு இமாம் அவர்களின் அறிவாற்றலையும், திறமையையும் உணர்ந்து அவர்களை விடுதலை செய்தார்.

அதன்பின் மீண்டும் எமனில் பழைய வேலையை ஏற்க கலீபா வற்புறுத்தியும் அவர்கள் விரும்பவில்லை. பின்னர் மக்கா திரும்பிய இமாம் அவர்கள் மக்காவின் முப்தியாக நியமனக் கடிதம் கலீபாவிடமிருந்து கிடைக்கப் பெற்றனர். இதை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக பயன்படுத்தினர் இமாம் அவர்கள். தாங்களே ஒரு மத்ரஸாவைத் தொடங்கிஹதீது, பிக்ஹு பாட போதனை அளிக்க வேண்டும், மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று கொண்டிருந்த  ஆர்வம் இப்போது நிறைவேறிற்று. நெடுகிலிருந்தும் இமாம் அவர்களின் மத்ரஸாவைத் தேடி மக்கள் வரலாயினர்.

ஹிஜ்ரி 195 (தங்களுடைய நாற்பத்தைந்தாவது வயது வரை) வரை இமாம் அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்து மகத்தான மார்க்கச் சேவை செய்தார்கள். இமாம் அவர்களை ஹாரூன் ரஷீத் பக்தாது அழைத்தார். பக்தாத் சென்ற இமாம் அவர்களுக்கு மகத்தான வரவேற்பை கலீபா கொடுத்தார். அங்கு இமாம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கண்டு அனைவரும் இப்படி சிறப்பான சொற்பொழிவைக் கண்டதில்லை என்று வியந்தனர்.

கலீபாவுக்கு இமாம் அவர்கள் மீது இருந்த மதிப்பு மிகவும் அதிகமானது. அவர்கள் விரும்பும் எந்தப்பகுதிக்கும் நீதிபதியாக நியமிப்பதாகத் தெரிவித்தார். அதை இமாம் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பக்தாத்தில் இரண்டாண்டுகள் தங்கி மார்க்கத் தீர்ப்புகள் வழங்கவும், மார்க்க உபன்னியாசங்கள் புரியவுமாக அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். எண்ணற்றவர்கள் இமாம் அவர்களால் பயனடைந்தார்கள்.   

பாக்தாதிலும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பல்வேறு நகரங்களிலும் இமாம் அபூஹனீபா வகுத்துத்தந்த பிக்ஹு மஸ்அலாக்களை ஒட்டியே அப்போது தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

ஆனாலும் கலீபாவின் அவையில் இமாம் ஷாபி அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு வந்தது. ஹிஜ்ரி 193ல் கலீபா ஹாரூன் ரஷீத் காலமானதுடன் ஹாரூனின் மூத்த மகன் அமீன் ஆட்சியேறினார். இவர் கேளிக்கை பிரியராக இருந்ததால் இமாம் அவர்கள் அரசவைத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டனர். ஹிஜ்ரி 197ல் அமீன் ஆட்சியில் குழப்பம் மிஞ்சியதும் அங்கிருந்து புறப்பட்டு மக்காவுக்கு ஹஜ்ஜு செய்வதற்காக புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஹிஜ்ரி 198ல் மாமூன் கலீபாவானார். இவரின் காலத்தில் முஃதஜிலாக்கள் கை ஓங்கி இருந்தது. இதுகண்டு மனவெறுப்படைந்த இமாம் அவர்கள் பக்தாதை விட்டுக் கிளம்பி எகிப்து சென்று விட முடிவு செய்து ஹிஜ்ரி 198ல் அங்கே போய் விட்டார்கள்.

இமாம் மாலிக் அவர்களின் மத்ஹபை; பின்பற்றியவர்கள் அதிகம் எகிப்தில் இருந்தனர். இமாம் மாலிக் அவர்களின் தலையாய மாணவர் ஷாபியை அவர்கள் வரவேற்க ஆவல் கொண்டிருந்தனர். ஆதரவும் நல்கினர். ஆனால் வெகு விரைவில் அன்னவர்களால் இமாம் அவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டனர். ஏனெனில் இமாம் அவர்களின் சுய அபிப்பிராயம் மாலிக் இமாம் அவர்களின் அபிப்பிராயத்திற்கு மாறு பட்டிருந்ததே காரணம்.

இமாம் அவர்களின் தாய் வழியைச் சேர்ந்த அஜ்து இனத்தார் சிலர் கெய்ரோவில் இருந்தனர். இமாம் அவர்கள் அவர்களோடுதான் தங்கியிருந்தார்கள். கெய்ரோவில் மத்ரஸா ஏற்படுத்தி ஹதீது, பிக்ஹு வகுப்புகளை நடத்தலானார்கள். மார்க்க சம்பந்தமான தீர்ப்புகளை வழங்கலானார்கள். இச்சமயத்தில் பல அருமையான நூல்களை எழுதவும் செய்தனர். சுமார் ஆறு ஆண்டுகள் இமாம் அவர்கள் அங்கு தங்கி மார்க்கச்சேவை செய்தனர்.

மறைவு:

இச்சமயம் அவர்களுக்கு மூல வியாதி வந்து விட்டது. அதனால் ஆசனவாயிலிருந்து இரத்தம் விழலாயிற்று. இதற்கிடையிலும் அவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகவே செய்து கொண்டு வந்தனர். இரண்டு மூன்று ஆண்டுகளாக வேதனைப்படுத்திய மூல வியாதி அதிகமாகி அவர்கள் வாகனத்தில் அமர்ந்தால் இரத்தம் பீறிட்டு வாகனத்தில் போடப்பட்டிருக்கும் துணியையெல்லாம் நனைத்து விடும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

இந்நிலையில் மாலிக்கி மத்ஹபைச் சேர்ந்த வக்கிர மனம் படைத்தவர்கள் சிலர் இமாம்  அவர்களிடம் கடுமையான துவேஷம் கொண்டு அவர்கள் மாண்டு போனால் மிகவும் நல்லதாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர்.இச்சமயத்தில் இமாம் அவர்கள் அளித்த மார்க்கத் தீர்ப்பு மாலிக்கி மத்ஹபினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அப்போது கெய்ரோவில் மாலிக் மத்ஹபின் தலைவர்களுள் ஒருவரான இருந்த பீத்தான் பின் அபிஸ் ஸம்உ என்பவன் வெறி தலைக்கேறியவனாக இமாம் அவர்கள் முன் நின்று அவர்களை திட்டலானான். இதனால் அவன் காவலதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டான். ஆகவே ஆத்திரம் மேலும் அதிகமாக இமாம் அவர்களை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். இமாம் அவர்கள் ஒருநாள் இரவு இருளில் தனியாக போய்க் கொண்டிருக்கும் போது சம்மட்டியால் அவர்களின் தலையில் பீத்தான் அடித்து விட்டான். இரத்தம் பீறிட்டு பாய இமாம் அவர்கள் கீழே சாய்ந்தார்கள். கட்டுடன் படுத்த படுக்கையில் இருந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

இஷாத் தொழுகை நேரம் நெருங்கியதும் அந்த நேரத் தொழுகையை தொழுதார்கள். அதேநிலையில் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு அவர்களுடைய புனித ஆன்மா அவர்களின் உடலை விட்டுப் பிரிந்தது.  ஹிஜ்ரி 204 ரஜப் மாதம் பிறை 30 (கி.பி. 720 ஜனவரி 20) வெள்ளிக்கிழமை இரவில் காலமானார்கள். அப்போது அவர்களுடைய வயது 55.

இமாம் முஜ்னி அவர்கள் இமாம் அவர்களின் சடலத்தை குளிப்பாட்டினார்கள். ஜும்ஆத் தொழுகை முடிந்ததும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் கெய்ரோவில் மக்தம் மலையடிவாரத்தில் புஸ்தாத்என்ற இடத்திலுள்ள கராபத்துஸ் ஸுக்ராஎன்ற அடக்க ஸ்தலத்தில் அசர் தொழுகைக்கு முன்பே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த அடக்கஸ்தலத்தையொட்டி சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்கள் மத்ரஸா ஒன்றை நிர்மாணித்தார். இன்று இமாம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீது காணப்படும் குப்பா ஐபூபி அரசர்  மலிக்குல் காமில் என்பவரால் கட்டப்பட்டதாகும்.

இமாம் எழுதிய நூற்கள்:

இவர்கள் மொத்தம் நூற்றி பதிமூன்று நூற்கள் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களின் மூலங்களாக விளங்கும் மகத்தான நூற்கள் மட்டும் பதினான்கு ஆகும்.

உஸூலுல் பிக்ஹு என்ற பிக்ஹின் சட்டமுறையை வகுத்துத் தந்தவர்கள் இவர்கள்தான்.

இமாம் அவர்கள் கெய்ரோவிலும், பக்தாதிலும் இருக்கும்போதுதான் பெரும்பாலான நூற்களை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பக்தாதிலிருந்த போது ஆக்கிய நூற்களை அவர்களுடைய மாணவர்களான இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், ஜபரானி, அபூ தௌர், கராபீஸீ ஆகியோர் தொகுத்ததாகவும், கெய்ரோவிலிருந்த சமயம் எழுதிய நூற்களை முஜ்னீ, ரபீஉ பின் ஸுலைமானுல் ஜீஸி, ராபிஉ பின் சுலைமானுல் முராதீ, புவைதி, ஹர்மலா, யூனூஸ் பின் அப்துல் அஃலா ஆகிய ஆறு பேரும் தொகுத்ததாக தெரிகிறது.

இமாம் அவர்களின் நூற்களில் மிகவும் பெரியது கிதாபுல் உம்முஎன்பதாகும். இது சுமார் நாலாயிரம் பக்கங்கள் கொண்டதாகும்.

ஜிமாஉல் உலூம், கிதாப் இப்தாலுல் இஸ்திஹ்ஸான், கிதாப் இக்திலாபுல் மாலிக்கி வஷ் ஷாபியீ, கிதாப் இக்திலாபுல் இராகீன், கிதாப் இக்திலாப் மஅ முஹம்மது பின் ஹஸன், கிதாப் இக்திலாப் அலீ வ அப்துல்லாஹ் ஹிப்னு மஸ்வூது ஆகியவை இவற்றின் உட்பகுதி என்று சொல்லப்படுகிறது.

ரிஸாலா கதீம், ரிஸாலா ஜதீத் (பிற்காலத் தீர்ப்பு), இக்திலாபுல் ஹதீது , பலாயிலு குறைஷ், கிதாபுல் ஸுனன், மப்ஸூத், இம்லா ஸகீர் முதலிய நூற்கள் முக்கியமானவையாகும்.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு ஹதீதிலிருந்தே ஆதாரங்கள் தருவதுன் கூடிய உரையை கொண்ட கிதாபுர் ரிஸாலத் என்ற நூலை இமாம் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கிதாபுல் மப்ஸூத் பில் பிக்ஹ்என்பது இமாம் அவர்கள் பிக்ஹ் சட்டம் பற்றி எழுதிய பெரிய நூலாகும்.

அஹ்காமுல் குர்ஆன், வஸீயத்துஷ் ஷாபீ, பிக்ஹுல் அக்பர் போன்ற பெயரிலும் நூற்கள் எழுதியுள்ளனர்.

இமாம் ஷாபியீ அவர்கள் போதித்த செயல் முறையை அவர்களுடைய சீடர்க்ள், மாணவர்கள் உலகெங்கும் பிரச்சாரம் செய்தனர். உலகில் மிகவும் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் மத்ஹபுகளில் ஷாபிஈ மத்ஹபு முக்கியமானதாகும்.

4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு.

ஹஜ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வமிசத்தைச் சார்ந்த இமாமுல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அவர் தந்தை ஹன்பல் அவர் தந்தை பிலால் அவர் தந்தை அஸத் அவர் தந்தை இத்ரீஸ்.

இவர்களுடைய தந்தை முஹம்மது அரசுப் படையில் ஒரு சாதாரணப் போர்வீராக வேலை செய்தார். இமாம் அவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவர்களுடைய தாயாரும், தகப்பனாரும் மர்வ் என்ற ஊரிலிருந்து பக்தாதில் குடியேறினார்கள். அங்கே ஹிஜ்ரி 164 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 (கி.பி. 780 நவம்பர்) ல் இமாம் அவர்கள் பிறந்தார்கள். இவர்களின் இரண்டு வயதில் தந்தையாரை இழந்தார்கள். அன்னையார் மிகவும் கஷ்டப்பட்டு இவர்களை வளர்த்தார்கள். பக்தாதிலேயே கல்வி பயிலவும் இயன்றவரை ஏற்பாடு செய்தார்கள்.

குடும்பம்:

இமாம் அவர்களுக்கு பல புத்திரர்கள் இருந்துள்ளனர். இமாம் அவர்கள் காலம் ஆகும் போது இரண்டு வயதிலும், ஐம்பது நாளிலும் கூட பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாரிடமே கல்வி கற்று மேதைகளான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவரான முஹம்மது சாலிஹ் இஸ்பஹானில் நீதிபதியாக பதவி வகித்தார். இளைய புதல்வாரன அப்துல்லாஹ் மாபெரும் கலைஞானியாகத் தமது தந்தையின் நூல்களைச் சீர்படுத்தி வெளியிடும் பணியை செய்தார்.

கல்வி:

 தங்கள் பதினைந்தாம் வயதில் (ஹிஜ்ரி 179 ல்) ஹதீது பாட போதனையைப் பயிலத் தொடங்கினார்கள். இமாம் அபூ ஹனீபாவின் தலையாய மாணவர்களில் ஒருவரான இமாம் அபூ யூஸுப் அவர்களின் போதனை வகுப்புகளில் அமர்ந்து பாடம் கேட்பார்கள். அத்துடன் பக்தாதில் பல பெரியார்கள் நடத்திய கலாஞான வகுப்புகளுக்கும் சென்று பாடங்களை கேட்டனர்.

தங்களது 23ம் வயதி;ல் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள். அதன்பின் பல பெரியார்கள் சபையில் அமர்ந்து பாடம் கேட்டார்கள். பின்னர் இரண்டாவது முறையாக ஹிஜ்ரி 191ல் ஹஜ்ஜு சென்றார்கள். அப்போதுதான் இமாம் ஷாபியீயைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களோடு பழக முடிந்தது.

இமாம் அவர்கள் மீண்டும் ஹிஜ்ரி 196ல் ஹஜ்ஜுக்குப் போய் மூன்றாண்டுகள் அங்கேயே தங்கியிருந்து மூன்று ஹஜ்ஜுகளை முடித்துக் கொண்டார்கள். அத்துடன் மக்காவில் நடத்த பல்வேறு ஹதீது வகுப்புகளில் கலந்து கொண்டு ஏராளமான ஹதீதுகளையும், அவற்றுக்கான விளக்கங்களையும் சேகரித்துக் கொண்டார்கள். மூன்று தடவை நடந்தே ஹஜ்ஜு சென்றதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஹிஜ்ரி 199ல் ஹிஜாஸை விட்டு எமன் சென்றார்கள். அங்கு புகழ் பெற்றிருந்த பெரியார் முஹத்திஸ் அப்துர் ரஜ்ஜாக் அவர்களிடம் ஹதீது பாட போதனை பெற்றார்கள்.

இறுதியில் தங்கள் சொந்த ஊரான பக்தாதுக்கே திரும்பினார்கள். அப்போது அங்கு இமாம் ஷாபியீன் பிக்ஹு, ஹதீது பாடபோதனைகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றில் அமர்ந்து இமாம் ஷாபியீயின் தலையாய சீடராக ஆகிக் கொண்டார்கள்.

நான் இமாம் ஷாபியீ அவர்களிடம் பயிற்சி பெறும்வரை ஹதீதுகளில் நாஸிக், மன்ஸூக், ஃகாஸ், ஆம், முஜ்மல், முபஸ்ஸல் ஆகியவற்றைப் பற்றி எதுவும் தெரியாதவனாக இருந்தேன். இமாம் ஷாபியிதான் எனக்கு இவற்றை சரியாக விளக்கினார்கள்என்கிறார்கள் இமாம் ஹன்பல் அவர்கள். மூன்று ஆண்டுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் அவர்கள் இமாம் அவர்களிடம் பாட போதனை கேட்டு பயனடைந்து கொண்டார்கள்.

பின்னர், இமாம் ஷாபியீ மக்கா சென்று, மீண்டும் பக்தாத் திரும்பி எகிப்துக்குச் சென்ற சமயம் இமாம் ஹன்பலையும் தங்களோடு அழைத்தேக முயன்றும் இமாம் ஹன்பலினால் வறுமையின் காரணமாக தங்கள் ஆசானோடு செல்ல முடியவில்லை. இமாம் ஷாபியீ அவர்கள் பக்தாதை விட்டு புறப்படும் போது, இமாம் ஹன்பலைக் குறிப்பிட்டு , ‘நிகரற்ற பகீஹும், ஒப்பற்ற முஹத்திஸுமான ஒரு கலைக்குன்றை பக்தாதில் விட்டுப் போகிறேன்என்று கூறியுள்ளார்கள்.

பஷர், இஸ்மாயீல், சுப்யான் பின் ஐனா, ஜரீர், யஹ்யா, அபூ தாவூத் தாயீ, அப்துல்லாஹ், அப்துர் ரஜ்ஜாக், அலீ பின் ஐயாஷ், ஷாபியீ கந்தர், முஸ்தமிர், வகீவு ஆகிய பெரியார்களிடமும் இமாம் ஹன்பல் கல்வி கற்றிருக்கிறார்கள்.

தங்களது முப்பத்தி ஐந்தாம் வயதில் இமாம் ஷாபிஈ அவர்கள் எகிப்து சென்ற நிலையில் பக்தாதில் இமாம் ஹன்பல் அவர்கள் பக்தாதில் பாடபோதனையைத் துவக்கினார்கள். அவர்கள் பாடம் நடத்திய பாங்கும், அவர்களின் எளிமையும் அன்னாரின் புகழை நெடுகிலும் பரப்பி விட்டது. பல நாடுகளிலிருந்தும் மாணவர்களும், அறிஞர்களும்  இமாம்அவர்களின் பாடபோதனையில் வந்தமர்ந்து கல்வி கற்றனர். ஹதீது போதனையே நடத்தப்பட்டாலும் பிக்ஹு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டியதிருந்தது.

சோதனை:

கலீபா ஹாரூன் காலமாகி அதன்பின் அவர் சகோதரர் அமீன் பதவியிலமர்ந்தார். இவர் வீண் கேளிக்கையில் ஈடுபட்டதால், ஹாரூன் ரஷீதின் மகன் மாமூன் ஹிஜ்ரி 198 ல் கலீபா பட்டமேற்றார். கிரேக்க மொழியிலிருந்த இலக்கிய, தத்துவ நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்து, அவற்றைக் கற்றதால் எதையும் அந்த அடிப்படையிலேயே ஆராயத் தொடங்கியதால், முஃதஜிலாக்கள் விரித்த வலையில் வெகு விரைவிலேயே விழுந்துவிட்டார். பகுத்தறிவு அடிப்படையில் நமது கொள்கைகளை வகுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் முஃதஜிலாக்கள்திருக்குர்ஆன் படைக்கப்ட்டதுதான்என்று கூறத் துவங்கினர்.

இதுவே தற்போதைய கலீபாவின் கொள்கையாகவும் ஆகி விட்டது. அரசாங்க அவையில் அதிகச் செல்வாக்குடன் முஃதஜிலாக்கள் திகழ்ந்தனர். தங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை வெட்டிக் கொன்று விட வேண்டும் என்ற முடிவை கலீபா அவர்களும் ஏற்றுக் கொள்ள செய்தனர்.

பக்தாதில் அச்சமயம் நீதிபதியாக இருந்த அஹ்மது இப்னு அபீ துவாத் கடுமையான வெறிபிடித்த முஃதஜிலியாவார். இவர் யோசனையை ஏற்று, கலீபா மாமூன் ஒரு அறிக்கை தயாரித்தார். அதில் திருக்குர்ஆன் அனாதியானது அல்ல. படைக்கப்பட்டதுதான். இதை மறுப்பவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும். அவர்களின் சாட்சியங்களை ஏற்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இவ்விதம் தாம் எழுதிய உத்திரவை கிரேக்க நாட்டு எல்லையிலிருந்த கலீபா மாமூன், அச்சமயம் பக்தாதிலிருந்த தன் பிரதிநிதி இஸ்ஹாக் இப்னு இப்ராஹீமுல் கஜாயி என்பவருக்கு அனுப்பி, அத்துடன் பக்தாதிலுமு;, அதன் சுற்றுப் புறத்திலும் உள்ள மார்க்க ஞானியர்கள் அனைவரையும் இதன் மீது விசுவாசப் பிரமாணம் செய்யுமாறு செய்ய வேண்டும். இந்தப் பிரகடன்னத்தில் கண்ட விசயங்களை ஒப்புக் கொள்ளமறுப்பவர்களை மார்க்கத் தீர்ப்பளிக்கவோ, உபன்னியாசம் நிகழ்த்தவோ, திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தவோ அனுமதிக்கவும் கூடாது. அவர்களை எம் சமூகத்திற்கு அனுப்ப வேண்டும். நாம் அவர்களை விசாரித்து தக்க முறையில் தண்டனை அளிப்போம்என்ற உத்திரவையும் சேர்த்திருந்தார்.

இதன்படி பக்தாதிலுள்ள உலமாக்கள் அனைவரையும் அரண்மனை மண்டபம் வந்து கூடுமாறு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம் சுற்றறிக்கை அனுப்பினார். அங்கு கூடியவர்கள் முன்னிலையில் கலீபாவின் பிரகடனத்தை படித்துக் காட்டினார். அவர்களில் பெரும்பாலோர் கலீபாவின் வாளுக்குப் பயந்தும், அவரிடம் பெற்று வரும் உபகாரச் சம்பளம், மானியத்திற்காகவும் பிரகடனத்தை ஒப்புக் கொண்டு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தனர். கடைசியில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பலும், முஹம்மதிப்னு நூஹு என்பவரும் தான் இதில் விட்டுக் கொடுக்காமல், ‘திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டதல்ல. அனாதியானது. அது இறைவனின் திருவசனம்என்று கூறினார்கள். உடனே அந்த அதிகாரி அந்த இருவரின் கால்களுக்கும் விலங்கிட்டு கிரேக்க எல்லையில் தியானா எ ன்ற இடத்தில் முகாமிட்டு இருந்த கலீபா மாமூனிடம் அனுப்பி வைத்தார். போகும் வழியில் இமாமவர்களுடன் கைதியாகச் சென்ற முஹம்மதிப்னு நூஹு காலமாகி விட்டார்.

அவர்கள் தியானா சென்றடைந்த சமயம் கலீபா மாமூன் காலமாகி விட்டார் என்ற செய்தியைத் தான் கேட்க முடிந்தது. அவர் இறந்ததும் அவரோடிருந்த அவர் சகோதரர் அபூ இஸ்ஹாக் முஹம்மது என்பவர் மாமூனின் மரண சாசனப்படி ஹிஜ்ரி 218ல் தியானாவிலேயே முஃதஸிம்பில்லாஹ் என்ற பட்டத்துடன் கலீபாவானார். அவர் உடனடியாக கவனிக்க வேண்டிய அவசர காரியங்கள் இருந்ததால் இமாம் அவர்களை பின்னர் கவனிக்கலாம் என்றும் அதுவரை அவர்களை பக்தாதிலேயே கொண்டு போய் சிறை வைக்க உத்தரவிட்டார்.

பிரதம மந்திரியாக இருந்த அபூதாவூது என்ற முஃதஜிலாக்களில் ஒருவர் மீண்டும் உலமாக்களை விசாரணை செய்து அவர்களின் விசுவாசத்தை அறியும் வேலையை துவக்கினார். இமாம் அவர்கள் விசாரணைக்காக கொண்டு வருவதற்குள் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள். சிறையில் இருந்த காலம் பதினெட்டு மாதங்கள் என்றும், இருபத்தெட்டு மாதங்கள் என்றும் இரண்டு வகையாக சொல்லப்படுகிறது.

கால்களில் விலங்குகளுடன் கொண்டு வரப்பட்ட இமாம் அவர்களிடம் அவரின் சிறிய தகப்பனார் மகன் ஜமீல் என்பவர், அஹ்மதே மற்ற உலமாக்கள் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கலீபாவிடம் கூறி தப்பி விட்டனர். அதுபோல் நீரும் கூறி தப்பிப்பது தான் சிறந்தது என்று கூறினார். உடனே இமாம் அவர்கள் திருக்குர்ஆனையும், ஹதீதையும் என் நன்மைக்காக திரித்துக் கூறச் சொல்கிறாயா? ஒருக்காலும் நான் அதை செய்ய மாட்டேன். சத்தியம் இறந்து நான் உயிரோடு இருப்பதை விட நான் இறந்து சத்தியம் உயிரோடு இருப்பது உயர்ந்ததல்லவா! என்று கூறி விட்டு மேலே நடந்தார்கள்.

கலீபா முஃதஸிமின் அவையில் முஃதஜிலாக்களான ஆலிம்கள் பலர் கூடியிருந்தனர். முஃதஜிலா அதிகாரிகளும் நிறைந்திருந்தனர். அங்கே அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அங்கு கலீபா மற்றும் முஃதஜிலா ஆலிம்கள், அதிகாரிகளுக்கும் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களுக்கும் கேள்வி பதில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இமாம் அவர்கள் கேட்ட அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு முஃதஜிலாக்களால் பதில் சொல்ல முடியாமல் திரும்பத் திரும்ப குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும்படி இமாம் அவர்களை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடந்தது.

இறுதியில் இமாம் அவர்கள் கலீபாவைச் சுட்டிக் காட்டி படைப்புத்தான்என்று சொன்னார்கள். உடனே அங்கிருந்தவர்கள் இமாம் அவர்கள் அமீருல் முஃமின் இமாம் அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டார் என்றார்கள். அவரை விடுதலை செய்யலாம் என்றனர். ஆனால் கலீபாவின் பிரதம மந்திரியான இப்னு அபூதாவூது குறுக்கிட்டு இவரைப் போன்ற பிரபலமான ஓர் அறிஞர் அதை மக்களிடையே சொன்னால்தான் நல்லது என்றார். உடனே கலீபா அரண்மனை முற்றத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

பொதுக் கூட்ட மேடையில் கலீபா, அதிகாரிகள், தளபதி மற்றும் உலமாக்களும் சுற்றி அமர்ந்திருந்தனர். முதுமையில் இமாம் அவர்கள் சிறைவாசத்தால் மெலிந்து, நலிந்து முதல் முறையாக கால்விலங்கு அகற்றப்பட்டவர்களாக அங்கே வந்திருந்தார்கள். அவர்கள் மேடை மீது ஏறி நின்று கம்பீரமான குரலில் பேசினார்கள்.

அப்போது குர்ஆன் படைக்கப்படவில்லை என்பதை உறுதியாக குர்ஆன், ஹதீது ஆதாரங்களோடு எடுத்துரைத்தனர். கலீபாவும், மற்றவர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பொதுமக்கள் இவை அனைத்தையும் கேட்டு குறித்துக் கொண்டனர். கலீபா அவர்கள் இவரை இவர் போக்கில் விட்டு விடலாம் என்று எண்ணியவராக தமது மந்திரியிடம் யோசனை கலந்தார். இவருக்கு இலகுவான தண்டனை அளியுங்கள் என்று சொல்லிவிட்டு கலீபா அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் இமாம் அவர்களுக்கு நூறு கசையடிகள் கொடுப்பது என்று மந்திரியும் அவர் கூட்டாளிகளும் முடிவு செய்து விட்டனர்.

மறுநாள் முற்பகலில் பொதுவான் ஓரிடத்தில் இமாம்அவர்கள் கொண்டு வரப்பட்டு இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் வளையங்களால் கட்டப்பட்டு அவர்களின் சட்டையும் அகற்றப்பட்டிருந்தது. அவர்கள் வெறும் பைஜாமாவோடு நிறுத்தப்பட்டிருந்தார்கள். சவுக்கடி கொடுப்பவன் வந்தான். முதல் அடி கொடுக்கும்  போது, இமாம் அவர்கள் பிஸ்மில்லாஹிஎன்றும், இரண்டாம் அடி விழுந்ததும் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி‘(தடுக்கும் சக்தியோ, ஏற்கும் சக்தியோ அல்லாஹ்விடமிருந்தன்றி வேறில்லை) என்றும்  சொன்னார்கள். மூன்றாவது அடி விழுந்ததும் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் என்றும், நான்காவது அடி விழுந்ததும் இறைவன் எங்களுக்;கு விதிக்காதது எங்களைத் தொடாது என்று கூறுவீராக! என்ற திருவசனத்தை ஓதினார்கள்.

எட்டாவது அடி விழுந்ததும் பைஜாமாவின் கயிறு அறுந்து போய்விட்டது. பைஜாமா இடுப்பை விட்டு கீழே விழுந்து விடலாம் என்ற நிலையை அடைந்து விட்டது. கைகள் கட்டப்பட்டிருந்தன. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இமாம் அவர்களின் கண்களில் உருக்கம் தோன்ற முகத்தை வானை நோக்கித் தூக்கி உதட்டை உசுப்பினார்கள். அவ்வளவுதான். அவர்களுடைய பைஜாமாக் கயிறு இறுக்கிக் கட்டப்பட்டது போல, தன் பழைய இடத்தை விட்டு இறங்காமல் நின்று விட்டது. கூடியிருந்த அத்தனை பேரும் இந்த அதிசயத்தைக் கண்டனர்.

இவ்விசயம் கலீபாவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இமாம் அவர்களை விடுதலை செய்யச் சொன்னார். அதற்குள் இமாம் அவர்களுக்கு இருபத்தி ஐந்து அடிகள் கொடுக்கப்பட்டு விட்டன. இமாம் அவர்கள் மயங்கி கீழே விழுந்து விட்டார்கள். கை கட்டுகள் அவிழக்கப்பட்டன. இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 221 ரமலான் மாதம் பிறை 25 அன்று நடைபெற்றது.

இவ்வாறு கஷ்டப்பட்டும், கசையடி வாங்கியும் நோன்பை விடவில்லை. இரத்தம் உடலிலிருந்து வழிந்து கொண்டிருக்கும்போதே அஸர் தொழுகை தொழுதார்கள். இதுபற்றி கேட்கப்பட்டபோது, ஆம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தபோது தொழுதிருக்கிறார்களே! என்று பதிலுரைத்தனர்.

இந்த கண்டத்திலிருந்து இமாம் அவர்கள் சிரமப்பட்டு உயிர் தப்பினார்கள். ஆனாலும் இமாம் அவர்களின் கை, கால், உதடு முதலியவற்றில் குளிமை தங்கி அவர்களுடைய மரணம் வரை அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.

இந்த சத்தியசோதனையில் இமாம் அவர்கள் காட்டிய உறுதியையும், நிதானத்தையும் போற்றாத பெரியார்கள் இல்லை எனலாம். இச்சம்பவத்திற்குப் பிறகு இமாம்அவர்கள் வெளியே செல்வதே இல்லை. ஜும்ஆ, ஜமாஅத் எதற்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே தொழுது கொள்வார்கள். ஹதீது விளக்க வகுப்புகளை நிறுத்திவிட்டார்கள். இமாம் அவர்கள் கலீபா முஃதஸிமை மன்னித்து விட்டார்கள். அதேபோன்று தங்களுக்க கொடுமை செய்த முஃதஜிலாக்களையும் மன்னித்து விட்டார்கள்.

கலீபா முஃதஸிம்பில்லாஹ் இறந்ததும் அவர் மகன் அபூ ஜஃபர் ஹாரூன் கலீபாவானார்.இவரும் முஃதஜிலா கொள்கையை பின்பற்றினார். இவர் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவருக்குப் பின் இவரது சகோதரர் அபு பழ்லு ஜஃபர் ஆட்சி செய்தார். இவர் பதவி ஏற்றதும் முதல் வேலையாக திருக்குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல. அனாதியானதுதான் என்று பிரகடனம் செய்தார். அத்துடன் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. முஃதஜிலா அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இமாம் அவர்களுக்கு கலீபா தம் தந்தை செய்த கொடுமைக்கு மாற்றாக மரியாதை  கொடுக்க நாடி இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வருமாறு தமது பக்தாத் பிரதிநிதியான இஸ்ஹாக் அவர்களுக்கு கலீபா ஆணை பிறப்பித்திருந்தார். ஆனால் இதற்கு இமாம் அவர்கள் மறுத்து விட்டார்கள்.

அதே சமயம், இமாம் அவர்கள் சாதாத் மார்களுடன் சேர்ந்து சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதாக ஒருவர் கலீபாவுக்கு கடிதம் எழுதினார். அதை நம்பிய கலீபா இமாம் அவர்களின் வீட்டை சோதனை செய்ய உத்தரவிட்டார். அச்சோதனையில் ஒன்றும் வித்தியாசமான பொருட்கள் ஏதும் இல்லை.

கலீபா இச்செய்தி கேட்டு வருத்தப்பட்டு இமாம் அவர்களுக்கு பத்தாயிரம் திர்ஹம் அன்பளிப்பாக அனுப்பினார். இதை இமாம் அவர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் கொண்டு சென்றவர் நீங்கள் ஏற்க மறுத்தால், கலீபா இன்னும் சந்தேகம்  கொள்வார் என்ற சொன்னதால் அதை வாங்கிக் கொண்டார்கள். அவர் போனதும் அதை பக்தாதை சுற்றியுள்ள ஏழை முஹத்திஸுகள், பகீஹுகள் ஆகியோரிடையே விநியோகித்து விட சொன்னார்கள். அவ்வாறே விநியோகம் செய்யப்பட்டது.

கலீபா ஒருசமயம் இவர்களுக்கு பெரும் தொகை ஒன்றை அன்பளிப்பாக அனுப்பினார். அதை அவர்கள் பிடிவாதமாக ஏற்க மறுத்து விட்டார்கள். அதைக் கொணர்ந்தவர் அதை ரகசியமாக இமாம் அவர்களின் புத்திரர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டார். இதை அறிந்த கலீபா இமாம் அவர்களின் புத்திரர்களுக்கு நாலாயிரம் திர்ஹங்களை மானியமாக ஏற்படுத்தினார். இதுபற்றி இமாம் அவர்கள் கேள்விபட்ட போது மிகவும் வேதனைப் பட்டார்கள். புதல்வர்களை அழைத்து, நான் இன்னும் சில நாட்களே உயிரோடிருப்பேன். அதற்குள்ளேயே நீங்கள் கலீபாவிடம் மானியங்களை ஏற்றுக் கொண்டு விட்டீர்களே! இதனால் அல்லாஹ்வின் சமூகத்தில் எனது நிலை என்னாகுமோ? என மிகவும் அஞ்சுகிறேன் என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

கலீபாவிடமிருந்து மட்டுமல்ல, வேறு எந்த செல்வந்தரிடமிருந்தும் இமாம் அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டதில்லை.

எங்கள் உறவினர்களில் பலர் ஏதாவதொரு வகையில் உபகாரச் சம்பளம் பெற்று வந்தனர். எனவே அவர்களுடைய வீடுகளில் நாங்கள் வெறும் தண்;ணீர் கூட குடிக்கக் கூடாது என்று தந்தையார் அவர்கள் எங்களை தடுத்திருந்தார்கள்என்று இமாம் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் சொன்னார்கள்.

கலீபா அவர்களின் ஒரேயொரு வேண்டு கோளை மட்டும் இமாம் அவர்கள் நிறைவேற்றினார்கள். அது திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டதல்லளூ அனாதியானது என்பதைப் பற்றி விளக்கமான நூல் ஒன்றை எழுதினார்கள்.

மறைவு:

ஹிஜ்ரி 241 ரபீயுல் அவ்வல் தொடக்கத்திலேயே இமாம் அவர்கள் மரணப்படுக்கையில் விழுந்து விட்டார்கள். இமாம் அவர்கள் காலமாவதற்கு ஐம்பது நாட்;களுக்கு முன்னர் கூட அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு முன் பிறந்த குழந்தை நடக்கும் பருவத்தை அடைந்திருந்தது. இவ்விரு குழந்தைகளை வரவழைத்து பரிவுடன் தடவிக் கொடுத்து, துஆச் செய்தார்கள்.

தங்களுக்கு ஒளுச் செய்து வைக்கும்படி சொன்னார்கள். அவ்வாறே ஒளு செய்து வைக்கப்பட்டது. நன்றாக தேய்த்துக் கழுவும்படி சொன்னார்கள். அவ்வாறு கழுகும்போது திக்று செய்து கொண்டே இருந்தார்கள். குளிப்பாட்டி முடித்ததும் அவர்களின் பரிசுத்த ஆன்மா இறைவன் திருவடியை நாடிச் சென்று விட்டது.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஹிஜ்ரி 241 ரபீயுல் அவ்வல் பிறை 12 வெள்ளிக் கிழமை பகல் (கி.பி. 855 ஜூலை 31) இமாம் அவர்கள் காலமானார்கள்.

இமாம் அவர்களின் மரணம் கேட்டு பக்தாத் நகரமே திரண்டு வந்தது.தலைநகரிலிருந்து இமாம் அவர்களை குளிப்பாட்டுவதற்கென்றே 72 பனூஹாஷிம்கள் வந்திருந்து அந்தப் பணியைச் செய்தனர். ஜும்ஆத் தொழுகைக்கு முன்னர் புறப்பட்ட மைய்யித் அஸர் தொழுகைக்கே அடக்குமிடத்தை அடைய முடிந்தது. பலதடவை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பல இலட்சம் பேர் கலந்து கொண்டனர். பக்தாதிலுள்ள வீரத் தியாகிகளின் அடக்கஸ்தலத்தில் -மகா பிருஷ் ஷுஹதா இமாம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் திகிரிஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இமாம் அவர்களின் அடக்கஸ்தலம் அழிக்கப்பட்டு போனதாக சொல்லப்படுகிறது.

நூல்கள்:

மிகப்பிரபலமான நூலான முஸ்னதுஎன்ற ஹதீதுகளின் தொகுப்பு நூலை எழுதினார்கள். இன்றும்  அது மதித்துப் போற்றப்படுகிறது. சுமார் இருபத்தி எட்டாயிரம் ஹதீதுகளைக் கொண்ட இந்தக் கிரந்தத்தை தொகுத்து வெளியாக்கியவர் இமாம் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் ஆவார்.

இதுவன்றி கிதாபுஸ் ஸலாத் , கிதாபுல் அமல், கிதாபுத் தப்ஸீர், ரத்து அலல் ஜனாதிகா (திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டது என்பதற்கு மறுப்புகள் அடங்கியது), கிதாபுஜ் ஜுஹ்து, கிதாபுல் மனாஸிக், கிதாபுல் ஈமான், கிதாபுல் மனாகிபு அலீ, கிதாபுத் தாரீக் ஆகியவை இமாம் அவர்களின் முக்கிய நூல்களாகும்.

இமாம் அவர்கள் பிக்ஹு சம்பந்தமாக தனியாக நூற்கள் எதும் எழுதவில்லை. தங்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்களும், அவர்கள் கொடுத்த மார்க்கத் தீர்ப்புகளும்தான் தொகுக்கப்பட்டு ஹன்பலி மதஹபின் பிக்ஹுவாக ஆக்கப்பட்டன. இவற்றுல் மஸாயிலு ஸாலிஹ் என்பது அவர்களுடைய மூத்தபுதல்வர் ஸாலிஹ் பிக்ஹு சம்பந்தமாகக் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்கள் அடங்கியதாகும். இதுபோன்று இமாம் அவர்கள் கொடுத்த தீர்ப்புகுள் மட்டும் இருபது நூல்களில் தொகுக்கப்பட்டன. இவை யாவும் அவர்களுடைய மாணவர்களாலேயே தொகுக்கப்பட்டன.

இவையே ஹன்பலி மத்ஹப் ஆயிற்று. இந்தமத்ஹபில் சுயமான அபிப்பிராயத்திற்கு அதிகமான இடம் தரப்படவில்லை. சகல விஷயங்களையும் ஹதீது அடிப்படையில் அமைத்திருக்கிறார்கள்.

சுமார் நூற்றி இருபது மாணவர்கள் இந்த மத்ஹபின் மூலச் சட்டங்களை உருவாக்கி அதை நெடுகிலும் பரப்பினர். இமாம் அவர்களிடம் கல்வி கற்ற அவர்களுடைய இரண்டு புதல்வர்களையன்றி அஸ்வத், ஷாதான், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, வகீவு, யஹ்யா பின் ஆதம், யஜீத் பிக் ஹாரூன் அபூ பக்ருல் அஸ்ரம், ஹர்பு, பகீ, ஹன்பல் பின் இஸ்ஹாக், ஷாபீன், மைமூனி, அபுல் காஸிம் ஆகியோர் முக்கியமான மாணவர்கள். ஹதீது தொகுப்பாளர்களான இமாம் புகாரி, அபூதாவூது, முஸ்லிம் ஆகியோர்களும் இமாம் அவர்களிடம் பாடம் கேட்டுள்ளனர்.

மிகக் குறைந்த அளவினர் பின்பற்றும் மத்ஹபாக இந்த மத்ஹப் இருக்கிறது.

சுப்யானுத் தௌரியின் மரணத்தால் பயபக்தியே மறைந்து விட்டதுளூ இமாம் ஷாபியீயின் மறைவால் புனித சுன்னத்தே மறைந்து விட்டதுளூ இமாம் அஹ்மது இப்னு ஹன்பலின் மறைவால் சன்மார்க்கத்தின் அடிப்படையே ஆட்டங் கண்டு, புதுமையான காரியங்கள் மிகைத்து விடுமோ என்று அஞ்சுகிறேன்என்று இமாம்  புகாரியின் ஆசானும் அஹ்மது இப்னு ஹன்பலின் மாணவருமான ஹுதபா அவர்கள் கூறியுள்ளார்கள்.

முடிவுரை:

மறுமையில் ஈடேற்றம்  பெறுபவர்களான சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மத்ஹபுகள் ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி ஆகியவைகளாகும். இதில் ஒரு மத்ஹபை முழுமையாகப் பின்பற்றியே தீர  வேண்டும். அதேசமயம் மற்ற மத்ஹபுகளையோ, மற்ற இமாம்களையோ குறைகூறவோ, விமர்சிக்கவோ கூடாது.

இந்த நான்கு மத்ஹபும் திருக்குர்ஆன், ஹதீதுகள் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நேர்வழி இந்த மத்ஹபில்தான் இருக்கிறது. இதில் ஒன்றைப் பின்பற்றாதவன் வழிதவறியவன் ஆவான்.

இதற்காக இதை உருவாக்கியவர்கள் கடும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த இமாம்களின் சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக! அவர்களுக்கு சுவனத்தில் நிலையான இடத்தை தந்தருள்வானாக! அவர்களின் அடியொற்றி நடக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நஸீபாக்கி வைப்பானாக! ஆமீன்.

ஆதாரம்: நான்கு இமாம்கள் சரிதை

ஆசிரியர்: R.P.M. கனி B.A.B.L.