பிசாசும் ஜின்னும்.

Print Friendly, PDF & Email

கேள்வி: பிசாசு உண்டா இல்லையா?

பதில்: பிசாசு என்ற சொல்லை ஹிந்துக்கள் ஒரு பொருளில் பயன்படுத்துகிறார்கள். நாம் வேறு ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம். அவர்கள் கொள்கைப்படி இறந்தவர்களில் பாவிகளாவர்களின் ஆவிகள்தாம் பிசாசுகளாக பாவிக்கப்படுகின்றன.

மனிதர்களை ஹிந்து, பௌத்த ஞானிகள்  சடதத்துவ உடல், சூக்கும உடல், பிராணம், காமம், மனம், புத்தி, ஆத்மா ஆகிய ஏழு ஸ்தானங்களாக குறிப்பிடுகிறார்கள். நமது ஞானப்படி சடத்துவ உடலை 'ஜிஸம்' என்றும், சூக்கும உடலை மிதால் என்றும், பிராணனை ரூஹுல் ஹையவானி என்றும், காமத்தை நப்ஸ் அம்மாரா என்றும், மனத்தை நப்ஸ் நாத்திகா என்றும், புத்தியை அக்லு என்றும், ஆத்மாவை ரூஹு என்றும் சொல்லலாம். எனினும் இவற்றிடையே சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு. நமது ஞானத்தைப் போலவே அவர்களுடையதிலும் சடத்துவ உடல், சூக்கும உடல், பிராணன், காமம் ஆகிய நான்கும் இறந்து அழிந்துபடுபவை என்றும், மனம், புத்தி, ஆத்மாஆகியவை அழியாதவை என்றும் சொல்லப்பட்டுள்ளது. சற்குணனான மனிதன் இறந்து சடதத்துவம் பிரிந்ததும் சூக்குமம், பிராணன், காமம், மனம் ஆகிய நான்கும் சூக்கும உலகில் சிலகாலம் தரிபட்டிருக்கும். பின்னர் மனம் வேறாகி புத்தியுடனும், ஆத்மாவுடனும் சேர்ந்து தெய்வலோகம் சேர்ந்து கனவின் தன்மையதாய்க் குன்றாத இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். மற்ற நான்கும் அழிந்துபோகும். உலகில் துஷ்டனாகவும், உலக இச்சைகளில் மூழ்கியவனாகவும் வாழ்ந்தவனுடைய மனம் வேறானதும் சூக்குமம், பிராணன், காமம் ஆகிய மூன்றும் ஓர் உருவெடுக்கும். அதற்கு காம ரூபம் என்று பெயர். மரணத்தருவாயில் உலக ஆசைகளில் மனம் லயித்து இன்ன காரியங்களைச் செய்து கொண்டோமில்லையே, எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தேடிய இத்தனை பொருளையும் விட்டும் பிரிய வேண்டியதாயிற்றே. மனைவி மக்களை இழக்கலாயிற்றே என்று ஆவல் கொண்டவனாக இருந்தவனுடைய ஆவல் அந்தக் காம ரூபத்தை இழுத்துக் கொண்டு அவன் வீட்டைச் சுற்றி சுற்றித் தன் எண்ணங்களை நிறைவேற்ற இயலாமல் ஏங்கித் தவித்து வேதனைப்படும். இதைத்தான் அவர்கள் பிசாசு என்கிறார்கள். இவற்றில் பெரும்பாலனவை மனிதர்களுக்கு தீங்கு செய்ய சக்தியற்றவை. எனினும், ஒரு சில தீங்கு செய்வதுண்டு. மண்ணுலக விளையாட்டுக்களில் மூழ்கிக் கிடந்தவர்களின் காமரூபம் மனிதர்களின் வீடுகளின் மீது கல் எறிவதும், கதவுகளைத் தட்டுவதும், சப்தமுண்டாக்குவதும், வீட்டிலுள்ள சாமான்களைத் தாறுமாறாக அள்ளி வீசுவதுமாகச் சங்கடமுண்டாக்குவதும் உண்டு. திடீரென கொல்லப்பட்டவர்களுடையயும், தூக்கிலிடப்பட்டவர்களுடையவும், தற்கொலை செய்து கொண்டவர்களுடையவுமான காம ரூபங்கள் மிகவும் கொடியவையாய் இருப்பதுமுண்டு. அந்தப் பிசாசுகளின் தன்மைக்கேற்ற பெயர்களால் மனிதர்கள் அவற்றை அழைப்பதுண்டு.

நாம் இவற்றை ஜின்கள் என்று அழைக்கிறோம். இந்த இரண்டு கூற்றுக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகத் தோன்றினாலும் யதார்த்தத்தில் இரண்டும் ஒன்றுதான். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஒரு ஜின்னும் பிறக்கும்' என்று அருளியுள்ளார்கள். மேலும் நம்மோடு ஒரு ஷைத்தானும் இரண்டு அமரர்களும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அருளியுள்ளார்கள்.  'ஷைத்தான் என்பது கீழான மனத்தின் குணம் அல்லது தத்துவம்' என்று இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியுள்ளார்கள்.  நாம் ஒரு நன்மையான காரியத்தை செய்யும்படி நம்மைத் தூண்டுவது அமரர்களின் தத்துவம். அதைத் தடுத்து திருப்புவது ஷைத்தானின் தத்துவம். இந்த அடிப்படையில் பார்த்தால் பிசாசு என்பதும், ஜின் என்பதும், ஷைத்தான் என்பதும் ஒன்றுதான் என்று எண்ணக் கூடியதாய் இருக்கிறது. ஆனால், ஹிந்துக்கள் சொல்லுவது போல் இது மனிதர்தான் என்பது தவறாகும். அவர்கள் சொல்படி மனம் என்பதுதான் மனிதனுடைய உள்ளமையாகும். நாமும் நப்ஸு நாத்திகா தான் மனிதனின் உள்ளமை என்று சொல்லுகிறோம். அந்த மனம் அல்லது நப்ஸுந் நாத்திகா நீங்கி ஹிந்துக்கள் சொல்படி நன்மை செய்தவனாயின் தெய்வ லோகத்துக்கும், பாவஞ் செய்தவனாயின் நரக லோகத்துக்கும் போகும். நமது கொள்கைப் படி திரையுலகில் (ஆலம் பர்ஸகில்) ஆகும்.

ஆதாரம்: மெய்ஞ்ஞானப் பேரமுதம் பக்கம் 55-60