ஹிந்து ஞானமும் இஸ்லாமிய ஞானமும்

ஹிந்து ஞானமும் இஸ்லாமிய ஞானமும்

By Sufi Manzil 0 Comment July 27, 2012

Print Friendly, PDF & Email

இஸ்லாமிய ஞானத்திற்கும் ஹிந்து மத ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் – நாம் நமது ஜீவன் படைக்கப்பட்டது என்றும், புதிதானது என்றும் சொல்கின்றோம். ஹிந்து ஞானிகளோ நமது ஜீவன் – அதாவது ஆத்மா படைக்கப்பட்டதல்ல. அது அனாதியானது என்கின்றனர். மேலும் நம் ஜீவன் அனாதியானபடியால், நாம்தான் தெய்வம் என்பார்கள். இதற்கதிகம் அவர்களுக்குப் படித்தரங்கள் இல்லை. நாம்அல்லாஹுத்தஆலாவை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளோம். ஒன்று அகம் (பாத்தின்) மற்றது புறம் (ளாகிர்) ஆத்ம உலகம் (ஆலம் அர்வாஹ்), சூக்கும உலகம் (ஆலம் மிதால்), ஜட உலகம் (ஆலம் அஜ்ஸாம்) ஆகியவற்றைப் புறம் என்றும், அஹதிய்யுத், வஹ்தத், வாஹிதிய்யத் ஆகியவைகளை அகம் என்றும் பிரித்துப் பேசியுள்ளோம்.

ஹிந்து ஞானிகள் சடதத்துவம், சூக்குமம், பிராணம், காமம், மனம், புத்தி, ஆத்மா என்ற படித்தரங்களை பிரித்து உள்ளார்கள். ஆத்மாவுக்கு மேல் அவர்களுக்கு படித்தரம் இல்லை.

நமது ஞானம் எத்தகையது என்பதை நன்கு உணர 'தன்ஸீஹ்', 'தஷ்பீஹ்' பற்றி நன்கு அநிய வேண்டும்.

தன்ஸீஹ் என்றால்; அல்லாஹுத்தஆலாவை ஒப்புவமைகளை விட்டும் தூய்மையாக்குவதாகும். தஷ்பீஹ் என்பது ஒப்புவமைகள் மூலம் அவனை அறிவதாகும்.

தன்ஸீஹ் இரண்டு வகைப்படும். சம்பூரணமான தன்ஸீஹ் (தன்ஸீஹுல் கதீம்)- அவன் உள்ளமையைப் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என்ற ஞானம் உண்டாவதாம். 'இறைவன் தன்னுடன் ஒரு பொருளும் இல்லாதிருந்தான். இப்போதும் அப்போது இருந்தபடியே இருக்கிறான் என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளபடி அவனை யாவையும் விட்டு நீக்கிப் பரிசுத்தம் ஆக்குவதாம்.  இந்தத் தன்ஸீஹ் இன்னபடியானது என்று யாரும் அறியக் கூடாதது.

இரண்டாவது வகை:  அவனை ஒப்புவமைகளை விட்டும் நீக்குவதாகும். உதாணம்: அவன் யாரையும் பெறவுமில்லை. அவனை யாரும் பெறவுமில்லை' என்பதில் ஒரு மனிதன் வேறொருவரிலிருந்து வெளியானது நமது மனத்துள் காட்சியாகி அதை விட்டும் இறைவனை விலக்கிப் பரிசுத்தமாக்குவதாம்.

தஷ்பீஹ் என்பது அல்லாஹுத்தஆலா வெளிப்படை(ளாஹிர்) ஆனவன் என்பதால், அவனை ஒப்புவமை கொண்டு அறிவதாம்.

இறைவன் தன் திருமறையில் 'அவனைப் போல் ஒரு பொருளுமில்லை' என்று தன்ஸீஹாக்கியும், 'அவன் கேட்பவனும்- பார்ப்பவனுமாய் இருக்கிறான் என்று தஷ்பீஹாக்கியும் பேசியுள்ளான். அவனை தஷ்பீஹ் இல்லாமல் தன்ஸீஹாக்கினால், அவனை தன்ஸீஹைக் கொண்டு மட்டுப்படுத்தியதாக ஆகிவிடும். அவனைத் தன்ஸீஹில்லாமல் தஷ்பீஹாக்கினால், அவனைத் தஷ்பீஹைக் கொண்டு மட்டுப்படுத்தியதாக விடும். இப்னு அரபி ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகமில்'…

நீ தன்ஸீஹாக்கிப் பேசினால் கட்டுப்படுத்தி விட்டாய்: கஷ்பீஹாக்கிப் பேசினால் மட்டுப்படுத்திவிட்டாய், இரண்டாகவும் பேசினால் நீ நேர்வழியிலானவனாவாய், அறிவுடையோர்க்கு வழிகாட்டும் தலைவனாவாய் என்கின்றனர்.