Ali Moosar Raza-அலி மூஸர்ரிழா ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
அலி மூஸர்ரிழா ரலியல்லாஹு அன்ஹு.
ஹிஜ்ரி 148 அல்லது 153 ல் மதீனாவில் பிறந்தார்கள். தந்தை மூஸல் காளிம் அவர்கள். தாயார் பெயர் ஷஹ்த் என்றும் நதியிய்யா என்றும் சுபைனா என்றும் கூறப்படுகிறது. அப்பாஸிக் கலீபா மாமூனை விட 22 வயது மூத்தவரான இவர்கள் அரசியலில் தலையிடாது மதீனாவில் அறவாழ்வு வாழ்ந்து வந்தனர். கலீபா மெர்வ் வந்தபோது இவர்களை அழைத்து வரச் செய்து இவர்களையே தமக்குப்பின் கலீபா பதவிக்கு வாசிசாக ஆக்கியதுடன் 'ரிழா மினல் முஹம்மது'(ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் குடும்பத்திலேயே மிகவும் விரும்பப்பட்டவர்கள்) என்ற பட்ட பெயரையும் சூட்டினார்.
ஒரு நாள் மாமூன், அலி அர்ரிழாவை நோக்கி, ' எங்களுடைய பாட்டானார் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி உங்களுடைய சகோதரர்கள் என்ன கூறுகிறார்கள்? என்று வினவ, ' மாண்பாளராகிய அவர்களைப் பற்றி கூற என்ன இருக்கிறது? தன்னுடைய திருத்தூதருக்கு வழிப்படுமாறு தன்னுடைய படைப்பினங்களுக்கு அருட்கட்டளை பிறப்பித்த இறைவன், தன்னுடைய இறைத்தூதரை நோக்கி, அவர்களுக்கு மரியாதை செய்யுமாறு நிர்ணயித்துள்ளானே!' என்று கூறினர். இது கேட்டு மகிழ்ந்த மாமூன் அவர்களுக்கு 10 இலட்சம் திர்ஹங்களை பரிசளித்தார்.
பச்சை உடுப்பணிந்த இவர்களிடம் மாமூனின் மகன் அப்பாஸின் தலைமையில் அப்பாஸியாக்களும், அலவீகளும் வந்து பைஅத் செய்தனர். மாமூன் தம் மகள் உம்மு ஹபீபாவையும் மணம் முடித்து வைத்தார். நாணயங்களில் இவருடைய பெயரையும் பொறிக்கச செய்தார். காரணம் இவர்களுடைய கல்வி, மதபக்தியை கவுரவிப்பதற்காகும். அகனால் பகுதாது மக்கள் புரட்சி செய்து இப்றாகிம் அல்மஹ்தீயை கலீபாவாக ஏற்படுத்தினர்.
மாமூன் மெர்வை விட்டும் நீங்கி, தூஸிலுள்ள தம் தந்தை ஹாரூன் அல் ரஷீதின் அடக்கவிடத்தில் சில நாட்கள் கழிப்பதற்காக தூஸ் நகர் சென்றார்.அப்பொழுதுதான் அந்நகரின் ஒரு பகுதியான நூகான் என்ற இடத்தில் ஹிஜ்ரி 203 ஸபர் மாதம் அலி அர்ரிழா அவர்கள் மறைந்தார்கள். அப்போது அவர்களுக்கு வயது 44 என்றும், 49 என்றும், 53 என்றும் கூறப்படுகிறது. திராட்சைப் பழங்களை அதிமாக உண்டதன் காரணமாக மறைந்தார்கள் என்றும், நஞ்சூட்டப்பட்ட மாதுளம் ரசத்தைக் குடித்ததினால் இறந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் மறைவு செய்தி கேட்டு மாமூன் பெரிதும் வருந்தினார்.ஜனாஸா தொழுகையையும் அவரே நடத்தினார். ஹாரூன் அல் ரஷீது அடக்கவிடத்திற்கு அருகில் இவர்கள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவ்வூர் தூஸ் என்னும் பெயர் மறைந்து 'மஷ்ஹத்' எனும் பெயருடன் அழைக்கப்படுகிறது.
அவரின் அடக்கவிடத்தின் மீது பெரும் கட்டிடம் எழுப்பியுள்ளார் மாமூன். பின்னர் 20 ஆண்டு காலம் கவனிப்பாரற்று கிடந்தது. சுல்தான் மஹ்மூது கஜ்னவியின் கனவில் இவர்கள் இதுபற்றிக் கூற, கஜ்னவி நீஷாப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதி பழுதுபார்த்து, சுற்றிவர மதிலும் எழுப்பினார்.
இவர்கள் பல அற்புதங்கள் நிறுத்தினார்கள். பிரயாணத் தொல்லை, அபாயங்களிலிருந்து பாதுகாவல் பெற மக்கள் இவர்கள் அடக்கவிடத்திற்கு வந்து பிரார்த்திட்டு செல்கின்றனர்.