குர்ஆனில் விண்ணியல்

குர்ஆனில் விண்ணியல்

By Sufi Manzil 0 Comment June 25, 2015

முன்னுரை:

ஏக இறையோனின் திருநாமம் போற்றி ஏந்தல் நபிகளார் மீது ஸலவாத் ஓதி ஆரம்பம் செய்கிறேன். ‘வானம்’- எப்போது பார்த்தாலும் அதன் பிரமாண்டமான தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கும். பகல் பொழுதில் நீல நிறத்திலும் ஆங்காங்கே மேகக் கூட்டங்களும், பூமியின் மீது கவிழ்த்தி வைக்கப்பட்ட அரைக்கோளமாக தெரிகிற வானம், இரவு நேரத்தில் ஒளிர்விடும் விண்மீன்களுக்கும், இவைகளுக்கு நடுவே உலாவரும் தண்மதியும், பார்க்க பரவசமூட்டும். குர்ஆனில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை எனலாம். விண்ணியலைப் பற்றியும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கோள், விதி:

பல்லாயிரம், பல்லாயிரம் கோடி, கோடி அண்டங்கள், கோளங்கள், விண்மீன்கள் வானத்தில் சஞ்சரிக்கின்றன. இவற்றுக்கு தனித்தனி பாதைகளுண்டு. இப்பாதைக்கு கோள்விதி (ORBIT) என்று வானவியல் ஆய்வாளர் கூறுகின்றனர். அரபியில் இதற்கு ‘ஃபலக்’எனப்படும். இந்தக் கோள்விதியைத்தான் குர்ஆன் ‘சூரியன் சந்திரனை எட்டிவிட முடியாது. இன்னும் இரவு பகலை முந்தி விட முடியாது. இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும் தத்தம் வட்ட வரைக்குள் நீந்திச் செல்கின்றன’என்று 36 வது அத்தியாயம் 40 வது வசனத்தில் கூறியுள்ளது. குர்ஆன் அன்று சொன்னதைத்தான் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி> வானத்தில் கிரகங்கள் எவ்வித பிடிமானமுமின்றி ஒன்றையொன்று ஈர்ப்பு விசையுடன் வலம் வருகின்றன. இதுவே சார்பு கொள்கை என்று குறிப்பிடுகிறார்.

சூரியன், சந்திரன்:

அவனே சூரியனை ஒளியாகவும், பிரகாசமாகவும் சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாக ஆக்கி வருடங்களின் எண்ணிக்கையையும் மாதங்களின் எண்ணிக்கையையும்  நீங்கள் அறிந்து கொள்ளும்படி சந்திரனாகிய அதற்கு (மாறி மாறி) வரக்கூடிய பட்சங்களையும் கற்பனை செய்தான் என்று 10:5 கூறுகிறது.

சூரியனுடைய ஒளிதான் சந்திரனில் பட்டு பிரதிபலித்து சந்திரன் ஒளிர்கிறது. தவிர சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. சூரிய ஒளியை ‘லியாவு’என்றும் சந்திரன் ஒளியை ‘நூர்’ என்றும் அல்லாஹ் வர்ணிக்கிறான்.

லியாவு என்பது கடுமையான ஒளி என்றும், இது பகலில் நாம் நம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவை என்றும் நூர்’இதமான ஒளியென்றும் அறிவியலார் பொருள் கொள்வர்.

மேகம்:

அல்லர் வானிலிருந்து நீரை இறக்கி வைத்து அதன் மூலம் புவியை –அது வறண்டு போன பிறகு வளமாக்கி அதில் அனைத்து உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், பல (திக்குகளில்) காற்றை திரப்பி விடுவதிலும் வானுக்கும் புவிக்குமிடையே கட்டுண்டு கிடக்கின்ற மேகத்திலும் சிந்திக்கின்ற மக்களுக்குச் சான்றுகள் பல உள்ளன என்றும், குர்ஆன் 2:126 ல் கூறப்பட்டுள்ளது.

மேகத்தை உற்பத்தி செய்து அதனை ஆகாயத்தில் மிதக்கவிட்டுள்ள இறைவனின் பேராற்றலை என்னவென்பது? மேகம் பனிக்கட்டியாக மாறி அப்படியே கீழே விழுந்தால் பெருத்த சேதம் விளையும். அவ்வாறு நேர்ந்து விடாமல், குளிர்ந்த காற்றைக் கொண்டு அதை மழை நீராக மாற்றி பூமியில் பொழியச் செய்கிறான்.

இரவு பகல்:

இறைவன் இதே ஆயத்தில் ‘நிச்சயமாக வானங்கள், புவி ஆகியவற்றைப் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்கு சான்றுகள் பல உள்ளன’என்று குறிப்பிடுகிறான். புவியில் நாம் வாழ்வதற்கு தேவையான வெப்பம் சூரியனிலிருந்து கிடைக்கிறது. சூரிய வெளிச்சம் இல்லையேல் பூமி குளிர்ந்து பனிமண்டலமாக மாறிவிடும், புவியில் மனிதன் உயிர்வாழ முடியாது. இதேபோல் தாவரங்கள் வளர்வதற்கும், சூரிய ஒளி தேவைப்படுகிறது.

திருப்பி அனுப்பும் வானம்:

திரும்ப அனுப்பும் ஆற்றலுடைய வானங்கள் மீது சத்தியமாக’என்று குர்ஆனின் 86:11 கூறுகிறது. கடல், ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலுள்ள நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களை அடைத்து பின் பூமிக்கு மழையாக திருப்பி அனுப்பப்படுகின்றன. நாம் பல ஊடகங்களின் மூலம் பயன் பெறுகின்றோம். ஒலி அலைகள், ரேடியோ அலைகள் மேலே விண் வெளிக்கு செல்லும்போது தடுக்கப்பட்டு மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதனால்தான் நாம் வானொலி கேட்க முடிகிறது. பிராணவாயு அணுக்கள் கொண்டதுதான் ‘ஓஸோன் படலம்’.

இந்த ஓஸோன் வாயுதான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஊதாக் கதிர்களை தடுத்து திருப்பி மேலே அனுப்பி பூமியிலுள்ள அத்தனை ஜீவன்களுக்கும் பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. என்ன ஒரு அற்புதம். பார்த்தீர்களா?

அகப்புற கதிர்வீச்சு மண்டலங்கள் இரண்டையும் ஜேம்ஸ்வான் ஆலன்  என்பவர் கண்டுபிடித்தார். இவர் பெயரிலேயே வான் ஆலன் மண்டலங்கள் எனப்படுகின்றன. இந்த இரு மண்டலங்களும் உலகுக்கு பயன்படும் ஜடப்பொருள்களையும் ஆற்றல்களையும் பூமிக்கு திருப்பி அனுப்புகின்றன. தீங்கு தரும் அம்சம் அனைத்தையும் வெளியிலுள்ள அண்ட வெளிக்கு அனுப்பி விடுகின்றன என்றும்  இவர் கண்டுபிடித்துள்ளார்.

சூரியன் ஒளி மங்குதல்:

மறுமைநாள் வரும்போது சந்திரன் ஒளி மங்கி சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் என்று 75:7,8,9 வசனங்கள் கூறுகின்றன. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி மங்கி வருவதையும் சூரியனும் சந்திரனும் ஒன்றையொன்று நெருங்கி வருவதையும் இன்றைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர்.

சந்திரனில் பிளவு:

மறுமை வந்து விட்டது. அதற்கு அறிகுறியாக சந்திரனும் பிளந்துவிட்டது என்று 54:1ல் கூறப்பட்டுள்ளது. விண்வெளி வல்லுனர்கள் சந்திரனில் பள்ளத்தாக்குகளும், பிளவுகளும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ‘பூமிக்கு அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்கள் கொண்டு திட்டமாக அலங்கரித்தோம்’என்று 67:5 ல் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இருக்கும் முதல் வானத்தில் தான் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன.

 ஆனால் அந்த வானமும் இலட்சக்கணக்கான மைல்களுக்கப்பால்தான் இருக்கிறது. மனிதன் ஏற்றும் விளக்கு சிறிது தூரத்திற்கு தெரியும். அதைவிட பலமான மின்விளக்கு இன்னும் சிறிது தூரம் தெரியலாம். கலங்கரை பல மைல்களுக்கு அப்பால் தெரியலாம். ஆனால் அல்லாஹ் பதித்திருக்கும் விண் விளக்குகளான நட்சத்திரங்களோ இலட்சக்கணக்கான மைல்களைக் கொண்ட இடைவெளியையும் தாண்டி நம் கண்களில் பளிச்சிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் தரையிலும் கடலிலும் செல்லும் பிரயாணிகளுக்கும் அவை வழிகாட்டிகளாக விளங்குகின்றன.

கிரகங்கள்:

வானம் தலைக்கு மேல் இருக்கும் கட்டியான ஒரு முகடு என்பதுதான் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் அறிவாக இருந்தது. ஆனால் விஞ்ஞான ரீதியில் அண்ட கோளங்கள் பற்றி பல்வேறு இடங்களில் குர்ஆன் கூறுவது மட்டுமின்றி இவற்றின் பேரில் அத்தியாயங்களும் உள்ளன.

53 அந்நஜ்மு –நட்சத்திரம், 54 அல்கமரு –சந்திரன், 85 அல் புரூஜ்- கிரகங்கள், அத்தாரிகு –விடிவெள்ளி> (91) அஷ்ஷம்ஸு – சூரியன் இவை அனைத்தையும் அல்லாஹ்வே படைத்தான் என குர்ஆன் கூறுகிறது.

விண்ணேற்றத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு:

தரையில் இருக்கும்போது தாராளமாக மூச்சு விடும்படியான காற்று இருக்கிறது. அக்காற்றில் அவன் மூச்சுவிட, உயிர்வாழ தேவையான பிராணவாயு (Oxygen) இருக்கிறது. ஆனால் பூமியிலிருந்து மனிதன் உயர, உயரப் போகும்போது காற்று குறைகிறது. பிராணவாயும் குறைகிறது. அந்நிலையில் அவனது நுரையீரல்கள், இருதயம் சுருங்கி மூச்சு விட முடியாதபடி திணறுகிறான். அதனால்தான் உயரமான மலைகளில் ஏறுவோர் விண்பயணம் மேற்கொள்பவர்கள் கையோடு பிராணவாயுவைத் திரவமாக்கி (Liquid Oxygen) எடுத்துச் செல்வர். இந்த உண்மையை குர்ஆனில் 6:126ல் ‘எவரை அல்லாஹ் வழி தவறச் செய்ய வேண்டுமென்று நாடுகின்றானோ,அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போல் சிரமத்துடன் கூடிய நெருக்கமானதாக ஆக்கி விடுகிறான்’  என்று இறைவன் கூறுகிறான்.

முடிவுரை:

எனவே குர்ஆன் கூறும் விண்ணியலை ஆராய்ந்து இறைவனின் சக்தியையும் ஆற்றலையும் புரிந்து கொள்வோமாக. குர்ஆன் அன்றும், இன்றும் என்றும் எல்லாக் காலத்திற்கும் ஒத்துப்போவதை அறிந்துஅதன் வழி வாழ்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

Add Comment

Your email address will not be published.