ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 1 Comment March 10, 2015

அல்-கிள்ரு (அரபு மொழி: الخضر ‘பசுமையானவர்’ என்று பொருள்படும், ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்றவாறும் அழைப்பர்.  அவர்களின் இயற்பெயர் பல்யா இப்னு மல்கான் ஆகும். அபுல் அப்பாஸ் என்பது குடும்பப் பெயராகும்.  கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு வெள்ளைத் தோலில் அமர்ந்தார்கள். அது பசுமையாகிவிட்டது என்று இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆபெஹயாத் (உயிர் தண்ணீர் என்பது பொருளாகும். இதனை மாவுல் ஹயாத் என்றும் கூறுவர்) என்ற சுனை நீரை அருந்திய போது, ‘நீர் கிள்ர் (பசுமை) ஆக இருப்பீர். உம்முடைய பாதம் படும் இடமெங்கும் பசுமையாகிவிடும்’ என்று அசரீரி முழங்கியது என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆண் மக்களில் ஒருவர் என்றும், இவர்கள் இப்னு அமாயில் இப்னு நூர் இப்னு அல்ஈஸ் இப்னு இஸ்ஹாக் என்றும், இவர்கள் பாரசீகத் தந்தைக்கும், கிரேக்க அன்னைக்கும் பிறந்தவர்கள் என்றும், இவர்கள் குகையில் பிறந்து காட்டு விலங்குகளால் பாலூட்டி வளர்க்கப்பெற்று பின்னர் அரசவையை அடைந்து பெரும் பதவி வகித்தார்கள் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது.

காலம்:

இவர்கள் இப்றாஹீம் நபி அவர்களின் சமகாலத்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இப்றாஹீம் நபி அவர்கள் பாபல் நகரை விட்டு நீங்கிச் சென்றபோது கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடன் சென்றார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் வரலாற்றாசிரியர்களோ அவர்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம்வரை வாழ்ந்தார்கள் என்றும், சிக்கந்தர் துல்கர்ணைனின் சமகாலத்தவர் என்றும் கூறுகின்றனர். இதுவே பெரும்பாலோர் கருத்தாக இருக்கிறது.

அல்-கிள்ரு அவர்களை சிலர் நபி என்றும், நபிமார்களுக்கு கல்வி பயிற்றுவிப்பாளர் என்றும் கூறுகிறார்கள். கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முர்ஸல் அல்லாத நபி என்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. எனினும் ஸூபியாக்கள் அவர்களை வலி என்றே குறிப்பிடுகின்றனர்.

கிள்று அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் ஒரு நபிதான். அதுவே சரியானதாகும்’

-நூல்: உம்தத்துல் காரி பாகம் 13, பக்கம் 37

அதேபோல் இமாம் குர்துபி அவர்களும், ‘பெரும்பான்மையோர் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபி என்றே ஏற்றுக் கொண்டுள்ளனர். குர்ஆனின் வசனம் அதற்கு சாட்சியாக உள்ளது. ஏனெனில் ஒரு நபி தம்மைக்காட்டிலும் தகுதியில் குறைந்த ஒரு வலீயிடம் அறிவு கற்க முடியாது.

-ஆதாரம்: பத்ஹுல் பாரி பாகம் 6> பக்கம் 434

இவர் மூசாஅலைஹிஸ்ஸலாம்  அவர்களுடனும் வேறு சில நபிகளுடனும் வெவ்வேறு கால கட்டங்களில் இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புஹாரி போன்ற ஹதீஸ் நூல்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இமாம் ஸுஹைலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ‘கிதாபுத் தஃரீப் வல் இஃலாம்’ என்னும் நூலில் ஹழ்ரத் கிளுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு ஒரு அதிசயம்தான். பேரரசரான பைலபூஸும் குறுநில மன்னராக மல்கானும் பூர்வீகத்தில் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவர்கள். இவ்விருவரும் இரு சகோதரிகளை மணமுடித்து மணமுள்ள அரச வாழ்வு வாழ்ந்தனர்.

மூத்தவளான கிலாயா என்பவளை பைலபூஸும் இளையவர் அல்காவை மல்கானும் மணந்து இல்லறத்;தை தழைக்கச் செய்து வந்தனர். மன்னர் பைலபூஸ் மன்னர் மட்டுமின்றி வானவியல் அறிஞராகவும் இருந்தார். வானவியலில் வல்லுனரான பைலபூஸ், வானசாஸ்திரப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நாளிகையில் தரிக்கும் குழந்தை அல்லாஹ்வின் நல்லருளுக்குரிய அடியாராகவும், உலகம் உள்ளளவும் உயிர் வாழும் நற்பேறு பெற்றவராகவும் விளங்குவார் என்பதை தெரிந்து கொண்டு, அதை தம் மனைவியிடம் சொன்னார். இதைக் கேள்விபட்ட அல்கா தம் கணவரிடம் சொல்லி அன்றிரவு தம் கணவருடன் தாம்பத்திய உறவு கொண்டார்.

அதன் அடிப்படையில் அவர்களின் திருவயிற்றில் ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உருவானார்கள்.

பைலபூஸுக்கு அந்தக் குறிப்பிட்ட நேரம் தவறிவிட்டது. ஆனாலும் அல்லாஹ்விடம் ‘ எனக்கு உலகம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆளும் நற்பேறு பெற்ற குழந்தை கருக்கொள்ளும் இரவாகவும் இது இருப்பதால் அந்த நற்பேற்றையாவது எனக்குத் தந்தருள் என்று வேண்டினார்கள்.

அன்றிரவு அவர்கள் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டதில் சிக்கந்தர் துல்கர்னைன் கருவாக உருவானார்கள்.

மல்கானின் மனைவி அல்கா கருவுற்ற நாள் முதல் இனிமையான கனவுகளை கண்டு வந்தார்கள். அக்கனவில் வானவர்கள் கருவில் உள்ள சிசுவின் மாண்பை எடுத்துச் சொன்னார்கள்.

பிரவச வேதனை ஏற்பட்டவுடன் அல்லாஹ்வின்  ஆணைப்படி அல்கா ஓர் இருண்ட குகையினுள் சென்று பிரசவித்து விட்டு வந்தாள்.

குழந்தையைப் பற்றி மனைவி தம் கணவரிடம் சொன்னாள். அதைக் கேட்ட கணவர் அங்கு சென்று பார்க்கும்போது குழந்தை காணக்கிடைக்கவில்லை. இதற்கிடையில் அந்தக் குகையிலுள்ள குழந்தைக்கு பக்கத்து கிராமத்திலிருந்த ஒரு ஆடு வந்து பால் கொடுத்து விட்டு சென்றது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆடு மேய்க்கும் மனிதர்  அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கலானார். அந்த இடையரின் ஊர் வறட்சியும்> புற்பூண்டு முளையாத பெருவெளியாகவும் இருந்தது.

பல்யா இப்னு மல்கான் அவர்கள் அவ்வூருக்குள் நுழைந்ததும் பசுமையாய் இலங்கியது. எங்கு நோக்கினும் புற்பூண்டுகளும், செடிகொடிகளும் பச்சைப் பசேலென்று தென்பட்டது. அதுகண்டு அவ்வூர் மக்கள் அடைந்த வியப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

பல்யா இப்னு மல்கான் முறைப்படி யாரிடமும் கல்வி கற்கவில்லை.  அவரின் செயல்கள் மற்ற சிறுவர்களின் செயல்களை விட வித்தியாசமாக இருந்தது. தனிமையில் இருப்பதை பல்யா விரும்பினார். பிறவியிலேயே கல்விஞானம் பெற்றிருந்த பல்யாவின் வாயிலிருந்து முன்னோர்களின் வேதங்கள் வெளியாயின.

நபி நூஹ், நபி இப்றாஹீம், நபி ஷீது அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோர்களின் சுஹ்புகள் எனப்படும் வேதக் கட்டளைகள் பல்யா இப்னு மல்கானுக்கு மனனமாயிருந்தன. அதனால் அவர்களின் சிறப்பு நாலா திசைகளிலும் பரவியது.

சுமார் 15 ஆண்டுகள் சென்று விட்டன. ஒருநாள் மல்கான் தம் அமைச்சர்களிடம் நபி நூஹ், நபி இத்ரீஸ், நபி இப்றாஹீம் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோர்களின் சுஹ்ஃபுகளைத் தொகுத்து நூல் வடிவில் உருவாக்க வேண்டும் என்ற தம்முடைய எண்ணத்தை வெளியிட்டார்.

சக அமைச்சர்கள் நன்கு வேதம் தெரிந்த பல்யா என்ற சிறுவரை சிபாரிசு செய்தனர். சிறுவரும் அரசவைக்கு வரவழைக்கப்பட்டார். அவர்களிடம் வேதங்களைப் பற்றி வினா தொடுக்க அதற்கு தகுந்த பதிலுரைத்தார் பல்யா அவர்கள். இதைக் கண்ட அரசர் இவர் இடையனின் மகனாக இருக்க முடியாது என்று உறுதி கொண்டு, பல்யாவை வளர்த்த தந்தையிடம் உரிய முறையில் விசாரித்ததில் குழந்தையை தாம் எடுத்து  வளர்த்த விசயத்தை அரசரிடம் அவர் சொன்னார்.

வந்திருந்த பல்யா தமது மகன் என்பதை அரசன் கண்டுகொண்டு அவையோர் முன்னிலையில் அவரைத் தம் வாரிசு என்றும், இளவரசர் என்றும் அறிமுகப்படுத்தினார். நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டது. சிறுவருக்கு பல்யா இப்னு மல்கான் என்ற பெயர் மாறி அபுல் அப்பாஸ் என்ற குடும்பப் பெயர் ஏற்பட்டது.

தமக்குப் பின் அரசபாரத்தை ஏற்க தம் மகனை வற்புறுத்தினார். ஆனால் அபுல் அப்பாஸின் போக்கு மன்னர் மல்கானின் எண்ணத்திற்கு எதிர்மறையாய் காணப்பட்டது. தனிமையும், இறைசிந்தனையும், இறைவணக்கம், திக்ரும், ஃபிக்ரும் அபுல் அப்பாஸின் இயல்புகளாய் அமைந்திருந்தன.

ஆனால் மன்னர் உலகக் கல்வியையும், அரசியல் முறைமைகளையும் கற்க இளவரசரை ஆசானிடம் அனுப்பி வைத்தார். ஒருநாள் தம் ஆசானிடம் கல்வி கற்று திரும்பி வரும்போது, ஒரு இறைநேசர் அவரிடம் ‘உமக்குப் பயன்தராத கல்வியை கற்கவா சென்றீர்?’ என்று கேட்டார்.

என் மனம் விரும்பாமலே இதைக் கற்கச் செல்கிறேன் என்று அபுல்அப்பாஸ் சொன்னார்.

அதற்கு ‘நீர் தற்போது கற்கும் இக்கல்வி உம்முடைய ஆன்மீக வேட்கையை தணித்து விடாது. உமக்குத் தேவையான மெய்ஞ்ஞான அமுதம் இங்கே இருக்கிறது’ என்று கூறினார். அன்னாரின் தொடர்பு ஏற்பட்டதால் அவரின் அகக் கண்கள் ஒளி பெற்றன.

உலகக் கல்வியை கற்கச் சென்ற கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனம் ஆன்மீக கல்வியிலேயே நாட்டம் கொண்டது. அதனால் இவரை வழிக்கு கொண்டு வர திருமணம் முடித்து தர எண்ணினர் அவரது பெற்றோர்கள்.

கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விரும்பாத நிலையிலேயே அவர்களின் திருமணம் நடைபெற்றது. முதலிரவின் வேளையில் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓர் மூலையில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்கள். தம் மனைவியிடம் பேசி தம் வணக்கங்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். மனைவியும் வணக்கத்திலேயே காலம் கழித்தார்.

இவ்வாறு ஓர் ஆண்டு சென்றது. இதனால் அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. மன்னர்க்கு இது ஏமாற்றமாய் இருந்தது. இதனால் மனைவியை சரியில்லை என்று சொல்லி விவாகரத்து செய்யச் சொன்னார்கள். அதுபடி அவர்கள் விவாகரத்து செய்தார்கள். அதன்பின் ஒரு விதவையை மணம் முடித்து வைத்தார்கள்.

இரண்டாம் மனைவி கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பல்வேறு ஆசைகள் காட்டியும் அவர்கள் அதற்கு மயங்கவில்லை. இவ்விசயம் மன்னருக்கு தெரியவந்தது. ஒரு பெண்ணுக்கேற்ற ஆண்மகனாக இருந்து இல்லறவாழ்வு நடத்த வாக்குறுதி அளிக்குமாறு அவர் கிழ்ரு நபி அவர்களை வேண்டினார்.

அதற்கு அவர்கள் இணங்காததால் அவர்களை ஓர் அறையில்  அடைத்து வைத்து கடுமையான காவல் ஏற்படுத்தினார். தம் தந்தையின் பிடிவாதப் போக்கு கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மன வேதனையைத் தந்தது.

மூன்றாம் நாளில் அடைத்;து வைக்கப்பட்ட அறையின் உள்ளிருந்து மாயமாய் மறைந்து போயினர் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இது கண்டு காவலர்கள் திடுக்குற்றனர்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பிடித்து வாருங்கள் என்று மன்னர் ஆணைபிறப்பத்ததுதான் தாமதம்  ஆட்கள் சிட்டாய் பறந்தனர். தேடிச் சென்ற காவலர்கள் கப்பல்ஒன்றை ஏற்பாடு செய்து பயணத்தை தொடர்ந்தனர்.

கடலில் புயல் ஏற்பட்டு கப்பலில் இருந்த அனைவரும் கடலில்   மூழ்கினர் இருவரைத் தவிர அவர்களிருவரும் உடைந்த மரக்கலத்தை பற்றிப்பிடித்து ஒரு தீவின் பக்கம் ஒதுங்கினர். அங்கு கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டனர். அவர்களிருவரையும் தம்முடன் இருக்க வேண்டினர். ஆனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினர்.

அதற்கு தாம் உதவி செய்வதாகவும்> தம் இருப்பிடம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லியும் வாக்குறுதி வாங்கி உங்களில் எவர் வாக்குறுதி மீறுகிறாரோ அவர் துன்பத்திற்கும் சொல்லொண்ணா துயரத்திற்கும் ஆளாவார் என்றும் கூறினார்கள்.

பிறகு அக்காவலர்கள் தங்கள் ஊர் போக உதவினார்கள்;.

அவர்கள் ஊர் போய் சேர்ந்ததும் பணத்திற்கு ஆசைப்பட்ட அவர்களில் ஒருவன் மன்னரிடம் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டான். தமக்கு சாட்சியாக கூட இருந்தவரை கேட்கச் சொன்னான். ஆனால் அவரோ தாம் கொடுத்த வாக்குறுதிபடி தமக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார். உடனே மன்னர் அவரை சிறையிலிட்டான்.

அதன்பின் மன்னர் முதல் மனிதன் கூறிய தீவிற்கு சென்று கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடிட ஆளனுப்பினார். அங்கு அவர்களைக் காணவில்லை. அதுகண்டு வெகுண்ட மன்னர் முதல் மனிதன் சொன்ன செய்தி உண்மையானதல்ல என்று எண்ணி அவனை கொன்றான்.

அதேபோல் தம் ஆருயிர் மகன் நாட்டைத் துறந்து செல்ல காரணமாயிருந்த கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாம் மனைவியையும் கொன்றான்.

அவர்களின் இரகசியத்தைக் காப்பாற்றிய கிள்று நபியின் முதல் மனைவியும், இரண்டாம் மனிதனும் தீங்கிலிருந்து தப்பினர். அதன்பின் கிள்று நபியின் முதல் மனைவி அந்நாட்டைவிட்டே வெளியேறிவிட்டாள்.

அதன்பின் அந்நாட்டில் அக்கிரமங்கள் பெருகிற்று. அதன் விளைவாக அந்நாடு அழிவுற்றது. அங்கு வாழ்ந்த மக்கள் அழிந்தார்கள்.

ஆபெ ஹயாத் நீரை அருந்திய கிலுறு அலைஹிஸ்ஸலாம்:

மேற்குக் கரையில் என்றென்றும் உயிர்வாழச் செய்யும் நீரையுடைய ஓர் ஊற்று இருப்பதாக துல்கர்னைனிடம் கூறப்பட்டது. அந்நீரைப் பருகுபவர் உலலக முடிவுநாள் வரை மரிக்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்நீருற்றைத் தேடி துல்கர்னைனும், ஹழ்ரத் கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சென்றனர்.

இதில் இருண்ட குகையொன்றில் ஆபெஹயாத் என்னும் நீர் சுனையை ஹழ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டறிந்து அதனை பருகவும் செய்து, அதில் குளிக்கவும் செய்தனர். அதில் உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழுதனர். அந்நீரை பருகியதால் நீண்டநாள் வாழும் பேற்றினைப் பெற்றனர்.

தமக்கு முன் சென்ற ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்நீரைக் குடித்துவிட்டதால் நிராசையாகி சிக்கந்தர் துல்கர்ணைன் திரும்பிவிட்டார். மற்றொரு அறிவிப்பின்படி, ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது சகோதரர் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சிக்கந்தர் துல்கர்ணைன் அவர்களின் ஊழியத்தில் இருந்தனர் என்றும் அவருடன் சென்ற அவ்விருவரும் தனித்தனியே பிரிந்து ஜீவநீரைத் தேடிச் சென்று அதனைப் பருகினர் என்றும்> அதன்பின்னர் அச்செய்தியை துல்கர்னைனிடம் வந்து கூறினர் என்றும் அறியக் கிடைக்கிறது.

ஜாமிஉல் பயான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் என்னும் திருக்குர்ஆன் விளக்கவுரை எழுதிய முஃபஸ்ஸிரீன் தபரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆபெ ஹயாத் நீர்ச்சுனையில் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூழ்கினர் என்று கூறுகின்றார்கள்.

ஜீவ நீர்ச்சுனையில் ஹழ்ரத் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தபோது நீர் ஹிள்று(பசுமையாக) ஆக இருப்பீர் என்றும், உம்முடைய பாதம்படும் இடமெங்கும் பசுமையாகிவிடும் என்றும் அசரீரி முழங்கியது என்று உமாரா கூறுகிறார்.

ஸூபியாக்களின் பார்வையில்:

சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் மத்தியில் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ஸூபியாக்கள் மத்தியில் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்ற கருத்து ஒருமித்த கருத்தாக உள்ளது.

ஸூபியாக்கள் மத்தியில் ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நேரடியாக ஞானவழி முறைகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  ஸூபி வழியை தொடரச் செய்யக் கூடிய வழிமுறைகளை தொடர வைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அப்துல்கரீம் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைவான ஞானத்தை உடையவர்களின் தலைவர்’ என்று கூறுகிறார்கள். சில ஸூபிய்யாக்கள் இவர்கள் அப்தால்களில் ஒருவராக குறிப்பிடுகிறார்கள்.

இலங்கை பாபா முஹ்யித்தீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: அல்லாஹ் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு> ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிகாட்டியாக அனுப்பி வைத்தான். அவர்கள் மனித ரூபத்தில் வந்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிலுறு நபி படித்து கொடுத்தமாதிரி படித்துக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து பல்வேறு ஞான ரகசியங்களை கற்றார்கள். ஒரு சமயத்தில் அவர்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இனம் கண்டு கொள்கிறார்கள். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹிலுறு நபிக்கு ஹயாத்துன் நபி என்ற பட்டப்பெயரைக் கொடுக்கிறார்கள்.

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குரிய வேலை என்னவென்றால் அவர்கள் ஒவ்வொரு ஆட்களுக்காக வழிமுறைகளை காட்டிக் கொடுப்பதுதான் அவர்களின் வேலை. நமக்குள் இருக்கும் நான் யார் என்பதின் அகமியத்தை காட்டிக் கொடுப்பதுதான் இவர்களின் தலையாய பணியாக இருக்கிறது.

புஹாரி ஷரீஃபில் இன்றைய நாளையில் பூமிக்கு மேல் இருக்கக் கூடிய எவரும் இன்னும் 100 வருடத்திற்கு மேல் இருக்கமாட்டார்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக வந்திருக்கிறது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போரின் போது துஆ செய்தார்கள். இங்கு 313 பேர் இருக்கிறோம். இப்போரில் நாங்கள் வெற்றிக் கொள்ளவில்லையானால் உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். எங்களுக்கு வெற்றியைத் தந்தருள் என்று இறைவனிடம் வேண்டினார்கள்.

இந்த இரண்டு ஹதீதுகளை வைத்துக் கொண்டு இப்னு தைமிய்யா போன்றோர் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இல்லை என்கிறார்கள்.

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்போது ஹயாத்துடன் இருந்திருந்தால் அந்தப் போரில் கலந்து கொண்டிருப்பார்கள். அப்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த துஆவில் 314 என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். எனவே கிலுறு நபி உயிரோடு இல்லை என்று தெளிவாகிறது என்று இப்னு தைமிய்யா கூறுகிறார்.

விளக்கம்:

பத்ரு போர் நடந்து கொண்டிருக்கும்போது மதீனாவிலும், அபினீஷியாவிலும், மற்ற இடங்களிலும் நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர்களும்தான் இப்போரில் கலந்து கொள்ளவில்லை. எனவே இந்த ஹதீதிற்குரிய விளக்கம் வெற்றியுடன் இறைவனை வணங்கக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக கருத்து வைக்க வேண்டும் என்று நாதாக்கள் கூறியுள்ளார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும் போது இந்த பூமியின் மீது அவர்கள் இல்லாமலிருந்திருக்கலாம். எப்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பூமியில் இல்லையோ அதுமாதிரி என்று.

அதேபோன்று கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்போரில் மனித ரூபத்திலில்லாமல் வேறு வகையில்  இதில் கலந்து கொண்டிருக்கலாம். இந்த பத்ருபோரில் எண்ணற்ற மலாயிகத்துமார்கள் கலந்து கொண்டார்கள். அவர்களின் எண்ணிக்கையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் துஆவில் சேர்க்கவில்லை. கண்ணுக்குத் தெரிந்த தமது தோழர்களை மட்டும் இந்த துஆவில் சேர்த்துக் கொண்டார்கள்.

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இல்லை என்பதற்கு சஹீஹான அல்லது லயீபான ஒரு ஹதீது கூட இல்லை. பத்ரு போரில் கலந்து கொண்டவர்கள் 313 பேர்கள் மட்டுமில்லை.

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு பலவகையான ஹதீதுகள் இருக்கிறது.

பல்வேறு ஞான இரகசியங்களை பொதிந்திருக்கும் தலைவராக உள்ள கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றி எங்கள் ஷெய்கு நாயகம் கிலுரிய்யா பைத்தில் கூறியுள்ளார்கள்:

بسم الله الرحمن الرحيم

لاَ اِلٰهَ اِلَّا اللهُ لَااِلٰهَ اِلَّا اللهُ

لَا اِلٰهَ اِلَّا الله مُحَمَّدٌ رَّسُوْلُ الله

اَحْمَدُ اللهَ الْعَلِيْمَ الْاَبْعَدِ وَالْاَقْرَبِ

اٰتٰى عُلُوْمًا مِنْ لَدُنْهُ لِعَبْدِهٖ خِضْرِ النَّبِيْ

بَاهَى الْكَلِيْمَ بِهِ فَقَالَ اِنَّنِيْ سَاُخْبِرُ

بِالَّذِيْ لَمْ تَسْتَطِعْهُ سَيِّدِيْ خِضْرَ النَّبِيْ

தூரமாகியதும், சமீபமாகியதுமான சர்வ வஸ்துகளையும் அறியும்படியாகிய அல்லாஹுத்தஆலாவை புகழ்கிறேன். அவன் தன்னுடைய அடிமை நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தன்னிடத்திலிருந்து கொஞ்சம் இல்மை கொடுத்தான். அதுகொண்டு அவர்கள் கலீமுல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில், நீங்கள் விளங்கிக் கொள்ளாததால் பொறுமை செய்ய இயலாது போன சம்பவங்களின் கருத்தை, நான் உங்களுக்கு சொல்லி காண்பிக்கிறேன் என பெருமை பேசினார்கள்.

تَاهَتِ الْعُقُوْلُ عَنْ اِدْرَاكِ عِلْمِهِ كَمَا

تَاهَ فِيْ بَاقِيْ صِفَاتِهِ وَلَوْ خِضْرُ النَّبِيْ

அவனுடைய ஏனைய சிபாத்துகளை எட்டிக் கொள்வதை விட்டும் எல்லோர்களுடைய புத்திகளும் தட்டழிந்தது போல் அவனுடைய அறிவு எனும் சிபத்தை எட்டிக் கொள்வதிலும் தட்டழிந்து போய் விட்டது. கிழ்ரு நபி அவர்களாலும் சரியே.

ثُمَّ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى النَّبِيِّ اَوَّلَا

ثَانِيًا عَلَى الصِّحَابِ اٰلِهِ خِضْرِ النَّبِيْ

பின்பு சலவாத்தும் சலாமும் துவக்கமாக நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிலும், இரண்டாவதாக அவர்கள் தோழர்கள், கிளையார்கள் பேரிலும் கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரிலும் உண்டாவதாக.

جْوْدُا لْجَوَادِ وَالنَّدٰى لِاِ هْتِدٰى سُبْلَ الهُدٰى

جُلُّ الْخَلَائِقِ مِنْ رَدٰى اِحْيَاءُهُ خِضْرَ النَّبِيْ

கொடை வள்ளலாகிய அல்லாஹுத்தஆலாவின் பெருங்கொடையில் நின்றுமுள்ளதாயிருக்கும் ஜனங்கள் எல்லாம் வழிகேட்டை விட்டும் நேரான பாதையில் நேர்வழி பெறுவதற்காக அவன் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஹயாத்தோடு வைத்திருப்பது.

حَانَ بُشْرى مَنْ نَحى بِنَحْوِ مَوْلٰى بِالْهَوَا

خِيْفَةً مِنْهُ نَهٰى لِنَفْسِهِ عَنِ الْهَوَى

خَابَ مَنْ دَسَّا لَهَا يَا غَوْثَنَا خِضْرَ النَّبِيْ

எவன் தனனுடைய எஜமானாகிய அல்லாஹுத்தஆலா பேரில் ஆசை கொண்டு அவனுடைய பாதையில் நடந்தானோ, இன்னும் அவனை பயந்து தன் நப்ஸை அதன் இச்சையை விட்டும் விலக்கினானோ அவனுக்கு நல்மாராயமுண்டாகும். அவனுடைய பாவங்களெல்லாம் நமது இரட்சகர் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் அழிந்து போகும். ஆனால் எவன் நப்ஸை அழுக்காக்கினானோ அவன் பேர் கெட்டான்.

دَلَّتْ عَلَى الْاٰدَابِ بَيْنَ الشَيْخِ وَالَّذِيْ يُرِيْ

دُ اِلَى اللهِ الْعَلِيِّ قِصَّةُ الْخِضْرُ النَّبِيْ

நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சரிதையாகிறது:- ஷெய்குக்கும், முரீதுக்குமிடையிலுண்டான (ஆதாபு) ஒழுக்கங்களைப் பற்றி அறிவிக்கிறது.

ذَالَا يَفِرُّ عَنْهُمْ اِذْ اَسْبَرُوْهُ مِثْلَمَا

الذُّبَابُ فَلْيَقُلْ كَمُوْسَى قَالَ لِلْخِصْرِ النَّبِيْ

அதாவது: இவனை (முரீதை) ஷெய்கு சோதிப்பாரேயானால் அவரை விட்டும் ஓட மாட்டான். எங்கிலும் ஈயை போல் விரட்ட விரட்ட திரும்ப வருவான். வந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவாக்ள் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் மன்னிப்பு தேடி சொன்னதுபோல் சொல்லிக் கொள்வான்.

رِدْءً مُوَافِقًا لَهُمْ لَا يَبْرَحَنْ فَاِنَّهُمْ

رُفَقَا اِلَى اللهِ لَهُ كَغَوْثِنَا خِضْرِ النَّبِيْ

மேலும் அவர்களுக்கு உதவியானவனாகவும், இணங்கினவனாகவும் நீங்காமலிருக்கவும். ஏனென்றால் அவர்கள்தான் நமது கௌது ஹிழ்ரு நபி அவர்களைப் போல் அவனுக்கு அல்லாஹுத்தஆலா அளவில் வழித்தோழர்களாகயிருக்கும்.

زِيَّ التَّوَاضُعِ يَرْتَدِيْ كَالْاَعْجَمِيْ لَايَهْتَدِيْ

زَاوَي الْعُلُوْمَ كَالنَّبِيْ مَع َ غَوْثِنَا خِضْرِ النَّبِيْ

இன்னும் தழுமையென்னும் உடுப்பை உடுத்திக் கொள்வான். ஒன்றும் தெரியாத அஜமியைப் போலிருப்பான். தன்னுடைய கல்விகளை எல்லாம் சுருட்டி வைத்து விடுவான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹிழ்ரு நபி அவர்களுடன் நடந்தது போல்.

سَيْرًا بِحُوْتِ قَلْبِهِ مُمَلَّحًا بِاشَّهْوَةِ

سُبْحَانَ مَنْ اَحْيَيْ بِجَمَّعٍ لَدَى خِضْرِ النَّبِيْ

சரீர இச்சையைக் கொண்டு உப்பிடப்பட்ட இறந்துபோன கல்பெனும் மீனை சுமந்துக் கொண்டு நடப்பான். மஜ்மவுல் பஹ்குரைனில் – இரு கடலும் சந்திக்குமிடத்தில் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் போனதும் அந்த மீனை உயிராக்கிய நாயன் மகாத் தூய்யவன். அவன் இச்சையால் பீடிக்கப்பட்ட அந்த முரீதின் இறந்துபோன கல்பெனும் மீனை அவனுடைய ஷெய்கின் விலாயத்தென்னும் கடல் நுபுவ்வத்தின் கடலோடு சந்திக்கும் மஜ்மஃ – சங்கம் சந்திப்பிடத்திலுள்ள தண்ணீரை கொண்டு அதன் வின்னங்களை போக்கி உயிராக்கி வைத்தான். உயிர் பெற்றெழும்பிய கல்புக்கே சோபனம்.

شَنَارَهُ مُحَيَّ بِمَاءِ مَجْمَعِ وِلَايَةِ

شُيُوْخِهِ طُوْبٰى لَهُ كَسَيِّدِيْ خَضْرِ النَّبِيْ

ஷெய்குடன் சகவாசம் செய்வதாகிறது சீதேவித்தனமாயிருக்கும். “கூனூ மஃஸ்ஸாதிகீன்” – நீங்கள் உண்மையாளர்களுடைய சகவாசத்திலிருங்கள் – என்று குர்ஆன் ஆயத்தில் என் ஆண்டகை கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ரப்பாகிய அல்லாஹுத்தஆலாவின் ஏவல் வந்திருக்கிறது.

صُحْبَةُ الشَّيْخِ سَعَادَةٌ وَفِيْ كُوْنُوْا مَعَ

الصَّادِقِيْنَ اَمْرُرَبِّ سَيِّدِيْ خِضْرِ النَّبِيْ

ஆகையினால் ஷெய்கு இல்லாது தன்னாலேயே ஜெயம் பெற்று விடலாமென்று எண்ணுபவனின் எண்ணம் தவறு. அவன் வாழ்நாள் வீணாக போகும். ஆண்டவா! (எங்களை வீணாக போகாது) கிழ்ரு நபி அவர்களின் பொருட்டால் இரட்சித்து அருள்வாயாக.

ضَلَّ مَنْ ظنَّ لَعَلَّهُ يَفُوزُ بِنَفْسِهِ

ضَاعَ عُمْرُهُ اَغِثْ يَارَبِّ بِالْخِضْرِ النَّبِيْ

மல்கானுடைய மகன் கிழ்ரு நபி அவர்களுடைய வஸீயத்தை (உபதேசங்களை) சொல்ல வேண்டுமென்று ஆசிக்கிறேன். (அவையாகிறது) 1. தாலிபே நீ யாருக்கும் உபகாரியாகவே இரு. நீ பல்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் ஜெயம் பெறுவாய்.

طَتبَ لِ ذِكْرُ وَصَايَااِنْنِ مَلْكَانٍ خَضِرْ

طَالِبًا كُنْ نَافِعًا تَفُزْ بِلْبَاءِ النَّبِيْ

ظُنَّ حَسْنًا لَا نُعَيِّرْ مُذْنِبًا اِذَانِدِمْ

ظَعْنَكَ لِغَيْرِ وَطَرٍ دَعْوَرُمْ خِضْرُ النَّبِيْ

  1. எவரையும் பற்றி நல்லெண்ணம் வை. 3. பாவம் செய்து பின் அல்லாஹ் இடத்தில் சலித்து தவ்பா செய்தவனை பழிக்காதே. 4. தேவைக்கல்லாது ஓரிடத்திற்கும் பிரயாணம் செய்யாதே. நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்வதை நாடி கவனி.

عَابْسًا وَغَاضِبًا ثُمَّ ضَرِيْرًا لَاتَكُنْ

عَنْ ذُنُوْبِكَ ابْكِ تُرْحَمْ الصَّفِيْ خِضْرِ النِّبِيْ

  1. கடுகடுத்தவனாகவும், கோபிக்கிறவனாகவும், தீங்கு செய்கிறவனாகவும் இருக்காதே. 6. உன்னுடைய பாவங்களை பற்றி எப்போதும் அழுது கொண்டு இரு. பரிசுத்த நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் உனக்கு கிருபை செய்யப்படும்.

غُنْيَةَ الْيَوْمِ  فَلَا تُأَخِّرَنْ اِلَى الغَدِ

غُضَّ عَمَّا لضايُعَانِيْ جُّحْزَ بِالْخِضْرِ النَّبِيْ

  1. இன்று கிடைத்த வாய்பபை ஒரு பெரும் வாழ்வென்று எண்ணி அதில் நல்ல அமல்களை செய்து கொள். நாளைக்’கு செய்வோம் என்று பிற்படுத்தாதே. 8. தேவை அல்லாததில் தலையிடுவதை விட்டும் உன்னை காத்துக் கொள். நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் உனக்கு நற்கூலி கொடுக்கப்படும்.

فَاهَ مُوْسٰى اِلَّا فِى اللهِ فضاِيَّاكَ الْغَضْبِ

فَاتْرُكَنْ حُبَّ الدُّنَا يَا سَيِّدِيْ خِضْرَالنَّبِيْ

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்:- 1. அல்லாஹ்வின் விஷயத்திலே அல்லாது கோபிப்பதை பற்றி எச்சரிக்கை செய்கிறேன். 2. துன்யாவின் ஆசையை விட்டு விடுங்கள். என் நாயகமே! கிழ்ரு நபியே!

قُلْتَ رَبِّيْ اَخِلَنَّا مُدْخَلَ صِدْقٍ وَقَدْ

قَوْمَنَا عَنْ مُحْرِجِ صِدْقٍ لَدَى خِضْرِ النَّبِيْ

நான் சொல்கிறேன்:- ஆண்டவனே! எங்களை உண்மையான புகுதும் தலத்திலே புகுதுவதை எங்கள் ஜனங்களை உண்மையான புறப்படும் தலத்தின் வழியாக கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் இழுத்துக் கொண்டு போ.

كُلَّ خَيْرٍ عَاجِلًا وَّاٰجِلًا مَانَعْلَمُ

كُلَّ مَالَمْ تَعْلَمُ نَدْعُوْكَ بِالْخِضْرِ النَّبِيْ

ஆண்டவனே! நீ,  எங்களுக்கு துன்யாவிலும் ஆகிரத்திலும் நாங்கள் அறிந்தும் அறியாததுமாகிய எல்லா நன்மைகளையும் தரவேண்டுமென்று நாங்கள் கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டைக் கொண்டு உன்னிடத்தில் துஆ கேட்கிறோம்.

لِلرِّضَاءِ طَالِبِيْنَ لِلْبَلَايَا صَابِرِيْنْ

لِلْعَطَايَاشَاكِرِيْنْ بِحُرْمَةِ الْخِضْرِ النَّبِيْ

உன்னுடைய பொருத்தத்தை தேடினவர்களாகவும் உன்னுடைய பலாய்களின்  பேரில் சப்று செய்தவர்களாகவும்,  நீ செய்த நிஃமத்துகளின் பேரில் உனக்கு நன்றி செய்தவர்களாகவும் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சங்கையைக் கொண்டு கேட்கிறோம்.

مَشَاءَ اللهُ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ لاْعَظِيْمْ

مَاشَاءَ اللهُ فَاصْرِفَنَّ السُوْ ءَ بِالْخِضْرِ النَّبِيْ

மாஷா அல்லாஹ் – அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் கனம்தங்கிய அல்லாஹ்வைக் கொண்டே அல்லாது ஒரு வகையான வலிமையும் கிடையாது. மாஷாஅல்லாஹ் – அல்லாஹ்தஆலாவின் நாட்டப்படியே நடக்கும். ஆண்டவனே! கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொருட்டால் எங்களை விட்டும் தீங்கை அகற்றி விடுவாயாக!

نَقِّ قَلْبَنَا عَنِ الْاَغّْيَارِ وَامْلَأَنَّهُ

نُوْرًا وَعِرْفَانًا بِجَاهِ سَيِّدِيْ خِضْرِ النَّبِيْ

ஆண்டவனே! எங்கள் நாயகம் கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகிமையின் பொருட்டால் எங்கள் ஹிருதயத்தை வேற்றுமைகளை விட்டும் பரிசுத்தமாக்கி வைத்து அதிலே பிரகாசத்தையும் நஜாத்தையும் கொண்டு நிரப்புவாயாக!

وَسِّعَنْ اَرْزَاقَنَا وَاَصْلِحَنْ اَحْوَالَنَا

وَحَسِّنَنْ حِتَامَنَا بِحُرْمَةِ الْخِضْرِ النَّبِيْ

ஆண்டவனே! நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவாக்ளின் சங்கையைக் கொண்டு எங்களுடைய இரணத்தை விஸ்தீரமாக்கு! எங்கள் நிலைமைகளை இணக்கமாக ஆக்கிவை. எங்கள் ஒடுக்கத்தை நல்முத்திராங்கத்துடனே (கலிமா ஷஹாதத்துடனே) ஆக்கி வை.

هَاعَبِيْدُكَ سَأَلَنَاكَ فَلَا تَلرُدَّنَا

هَبْلَنَا فَوْقَ الْمُنَا بِحُرْمَةِ الْخِضْرِ النَّبِيْ

இதோ உனது அடியார்கள் உன்னிடத்தில் கேட்கிறோம். எங்களை விரட்டிவிடாதே! எங்களுக்கு கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சங்கையை கொண்டு எங்கள் எண்ணத்துக்கு மேல் கொடு.

لَالَنَا سِوَاكَ مَوْلَا لَانَفِرُّ مِنْكَ اَصْلًا

لَامَلَاذَ اِلَّا اَنْتَ فَاحْمِ بِالْخِضْرِ النَّبِيْ

ஆண்டவா! எங்களுக்கு உன்னல்லாது நாயனில்லை. நாங்கள் ஒருபோதும் உன்னைவிட்டு அகலமாட்டோம். நீயே அல்லாது வேறு தஞ்சமில்லை. ஆகையினால் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக எங்களை காத்தருள்வாயாக!

يَااِلٰهِيْ صَلِّ سَلِّمْ مَعْ تَحِيَّاتٍ عَلَى

يٰٓسٓ سِرِّ الذَّاتِ اٰلٍ صَحْبِهٖ خِضْرِ النَّبِيْ

ஆண்டவனே! உனது தாத்தின் இரகசியமாகிய யாஸீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிலும், அவர்களுடைய கிளைஞர்கள்,தோழர்கள் பேரிலும் நபி கிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரிலும் காணிக்கையோடு சலவாத்தும், சலாமும் சொல்வாயாக! ஆமீன்.

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன்:

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகச் சிறந்த அறிவாளராக விளங்கினர். தாம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் கொண்டு அவர்கள் மக்களுக்கு நல்லுபதேசம் புரிந்து வந்தனர்.அவற்றை செவியுறும் இஸ்ரவேலர்கள் மிகவும் வியப்புற்றனர்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தங்களுக்கு அல்லாஹ் அளவற்ற அறிவை வழங்கியுள்ளான் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு நாள் அதிகம் அறிந்தவர் யார்? என்று ஒருவர் கேள்வி கேட்கும்போது, நான் மிகவும் அறிந்தவன் என்று கூறினார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு பாடம் புகட்ட, ‘மூஸாவே இரண்டு கடல்கள் சந்திக்கும் ஓரிடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட மிகவும் அறிந்தவர்’ என்று கூறினான்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘ நான் உன் திருநபியல்லவா? இக்காலத்தில் வாழும் அனைவரினும் என்னை நீ மேலாக்கி வைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.

உண்மைதான். ஆனால் உமக்கு அறிவிக்காத பல இரகசியங்களை நாம் அவருக்கு அறிவித்துத் தந்தோம் என்று கூறினார்கள். அதுகேட்டு வியப்புற்ற மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களைக் காண துடியாய் துடித்தார்கள். அவர்களைக் காணும் முறையை அல்லாஹ் அவர்களுக்கு காட்டித் தந்தான்.

அதற்கவர்கள் ‘என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?’என்று கேட்டார்கள். ‘கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்’ என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவன் கூறியபடி அவனைக் காண புறப்பட்டார்கள். தங்களுக்குத் துணையாக நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்றனர். யூஷஃ அவர்கள் யூசுப் நபி அவர்களின் மகனார் அப்ராயீமின் மைந்தர் ஆவார். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் மகன். மூஸா நபிக்குப் பிறகு இஸ்ரவேலர்களுக்கு நபியாக இருந்து தீன் சேவையாற்றினர். அவர்கள்; 126 வயது வரை வாழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

‘இரு கடல்கள் சந்திக்குமிடம்’-மஜ்மஅல் பஹ்ரைனி என்று இறைவன் திருமறை 18:60 ல் கூறுகிறான்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், நபி யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களும் நீண்டதொரு பயணம் மேற்கொண்டு இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தனர். அவ்விடத்தில் பாறை ஒன்றிருந்தது. களைப்பு மிகுதியால் (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். மூஸா நபி அவர்;கள் அதில் அமர்ந்து பாiறயின் அடியில் ஒலித்தோடிய சுனை நீரில் ஒளு செய்தார்கள்.

அவர்கள் உளுச் செய்தபோது தெறித்த சுனை நீரின் ஓர் துளி அவர்கள் கொண்டு வந்திருந்த உப்பிட்ட மீனின் மீதுபட்டு உயிர் பெற்று கூடையிலிருந்து துள்ளி குதித்து கடலில் வீழ்ந்தது. மீனானது நீந்திச் செல்லும்போது நீரானது வழிவிட்டது. அதன் மீது தண்ணீர் படவேயில்லை. இதை யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்டார்கள். ஆனால் மூஸா நபியவர்கள் ஒளுச் செய்து கொண்டிருந்ததால் அதைப் பார்க்கவில்லை. அவர்களின் ஒளு முடிந்ததும் யூஷஃவை அழைத்துக் கொண்டு தம் பயணத்தை தொடர்ந்தார்கள். ஆனால் யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உப்பிலிட்ட மீன் உயிர்பெற்று ஓடியதை மூஸா நபியிடம் சொல்ல மறந்து விட்டார்கள். இதை அல்லாஹ் தன் திருமறையில் 18:61 ல் கூறுகிறான்.

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا

அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.

தாங்கள் அடையவேண்டிய இடத்தை கடந்ததும் அல்லாஹ் அவர்களுக்கு களைப்பையும் பசியையும் கொடுத்தான். அதனால் அவர்கள் தம் உணவை உண்பதற்கு கூடையில் கைவிட்டபோது ரொட்டி இருந்தது. மீனைக் காணவில்லை.

இதைப்பற்றி திருமறையில் அல்லாஹ், 18:63 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ ۚ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا

அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.

திரும்ப மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அந்தப் பாறையை நோக்கி சென்றனர். அங்கு ஒருவர் பச்சைத் தலைப்பாகை அணிந்து இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்.

இதை அல்குர்ஆன் 18:65 கூறுகிறது.

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا

 (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுகையை முடித்தபின் இருவரும் சலாம் உரைத்த பின் விசாரித்துக் கொண்டார்கள்.

மூஸா நபி அவர்கள் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நான் அறிவு பெறுவதற்காக உங்களிடம் வந்துள்ளேன். அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான் என்று சொன்னார்கள்.இதன்பின்னர் யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு தம் இருப்பிடம் திரும்பினார்கள்.

மூஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்கள் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டதை அல்லாஹ் தன் திருமறையில் 18:66 ல் கூறுகிறான்:

قَالَ لَهُ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا

 “உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு> உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.

قَالَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا

 (அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.

وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا

 “(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)

கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக திருமறை 18:67,68 இயம்புகிறது.

قَالَ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا

 (அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.  18:69.

அதுகேட்ட கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீர் என்னபை; பின்பற்றுவதாயின் எந்த ஒரு விஷயத்தையும் அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி) கேட்கக் கூடாது. (18:70) என்று நிபந்தனை விதித்தனர்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இணங்கி அவர்களுடன் பயணம் செய்தனர். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள். ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது.

அப்போது கிள்று அவர்கள், ‘மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்து விடும்’ என்று கூறினார்கள்.

கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது அதிலிருந்து இரு பலகைகளை பெயர்த்து கப்பலை ஓட்டையாக்கினர் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அதுகண்டு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வியப்பும், ஆத்திரமும் அடைந்தனர். அவர்களால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி> மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக அல்குர்ஆன் 18:71 ல்

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا رَكِبَا فِي السَّفِينَةِ خَرَقَهَا ۖ قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا

பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.

இவ்வாறு கூறிய அவர்கள் விரைந்து சென்று அத்துவாரத்தை ஓர் துணியால் அடைக்க முற்பட்டனர்.

அப்பொழுது ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓர் பாத்திரத்தை எடுத்து அவ்வோட்டையை அடைத்தனர்.

அதன்பின் மூஸா அலைஹஸ்ஸலாம் அவர்களை நோக்கி, கப்பலில் துளையிட்டுவிட்ட காரணத்தால்  கப்பல் நீரில் மூழ்கிவிடுவதில்லை. கப்பலின்றி வெற்றுப்பேழையில் உம்மை உம் அன்னை வைத்து அலைவீசும் ஆழியில் அனுப்பியபோது நீர் ஆழியில் மூழ்காமல் காக்கப்பெறவில்லையா?’ என்று இடித்துரைத்தனர்.

قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا

 (அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.

அதற்கு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا

 “நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று கூறினார்.

கப்பல் கரையை அடைந்ததும் இருவரும் அய்லத் என்னும் சிற்றூரை நோக்கி நடந்து சென்றனர்.

அப்பொழுது வழியில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவன் மீது பாய்ந்து தங்களின் காலால் மிதித்து அவனைக் கொன்றொழித்தனர். அவனைக் கொன்றமுறையில் பல்வேறு கருத்துக்கள் உள்ளது. அது கண்டு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திடுக்குற்றனர்.

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا لَقِيَا غُلَامًا فَقَتَلَهُ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْئًا نُّكْرًا

பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.

அதனைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீர் ஒரு தகாத செயலை செய்து விட்டீர் என்று அலறினார்கள். அப்பொழுது கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனின் தலையின் ஒரு புறத் தோலை உரித்துக் காட்டினர். அதில் அவன் காபிர். ஒருபோதும் இறைநம்பிக்கை கொள்ளமாட்டான் என்று காணப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ‘குற்றமற்ற ஒரு கிப்தியை நீர் ஒரேகுத்தாக குத்திக் கொன்றொழிக்கவில்’லையா? என்று கேட்டனர். பின்னர் அவர்கள்,

قَالَ أَلَمْ أَقُل لَّكَ إِنَّكَ لَن تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا

 (அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.இவ்வாறுஅவர்கள் கேட்டது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாணமுறச் செய்து விட்டது. தாம் பொறுமையுடன் இல்லாததற்கு வருந்தினர்.

எனவே அவர்கள் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி

قَالَ إِن سَأَلْتُكَ عَن شَيْءٍ بَعْدَهَا فَلَا تُصَاحِبْنِي ۖ قَدْ بَلَغْتَ مِن لَّدُنِّي عُذْرًا

இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் – நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.

(அல்குர்ஆன்18:76)

இதைப் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகையில்> என் சகோதரர் மூஸாவுக்கு இறைவன் அருள்பாலிப்பானாக! அவர் நாணமுற்றுவிட்டார். எனவேதான் அவர் அவ்வாறு கூறினார். அவர் தம் தோழருடன் இருந்திருப்பின் மிகவும் வியப்பிற்குரியவற்றையெல்லாம் கண்டிருப்பார் என்று கூறினர்.

அதன்பின்னர் அவ்விருவரும் அவ்வூரிலிருந்து கர்யத் என்ற ஊரை அந்திப் பொழுதில் சென்றடைந்தனர். அதுவே அந்தாகியா என்று அழைக்கப்படுகிறது.

பசியும்,களைப்பும் மேலிட்டதால் அவர்கள் அவ்வூர் மக்களிடம் சென்று தங்களுக்கு உணவளிக்கும்படி வேண்டினார்கள். ஆனால் அவர்களோ அவர்களுக்கு உணவளிக்க மறுத்து விட்டனர்.பெண்களில் பெர்பெரிய்யா என்ற ஒரேயொரு பெண்மணி மட்டும் அவர்களுக்கு உணவு வழங்கினாள்.

மறுநாள் அவ்விருவரு;ம் ஊருக்குள் சென்றனர். அப்பொழுது 100 அடி உயரமுள்ள நெடுஞ்சுவர் சாய்ந்து விழும் நிலையிலிருப்பதைக் கண்டார்கள். கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் கரத்தாலேயே அதனை ஒழுங்குபடுத்தினர்.

இச்செயல் கண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சினமுற்றனர். நீர் விரும்பியிருப்பின் இதற்குரிய கூலியை இவ்வூராரிடமே வாங்கியிருக்கலாமே! (18:77) என்று கூறினர்.

அதற்கு கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி நீர் ஏன் கூலி பெற்றுக்கொள்ளாமல் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெண் மக்களுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்தீர்?’ என்னு இடித்துரைத்தனர்.

فَانطَلَقَا حَتَّىٰ إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُ ۖ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا

பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்;. ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்;. அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர். ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) ‘நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே’ என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன்  18:77

قَالَ هَٰذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ ۚ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِع عَّلَيْهِ صَبْرًا

 “இது தான் எனக்கும்> உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார். –  (18:78)

‘(இச்சம்பவத்தை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (சொல்லிவிட்டு) ‘மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள்’.

-புஹாரி : 122 உபை இப்னு கஹ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு).

கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினார்கள்.

முதலில் நான் கப்பலில் துளையை ஏற்படுத்தினேன். அதற்குரிய காரணம்:

அக்கப்பல் செல்லும் வழியில் கொடியவன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். (அவனின் பெயர் ஜலீல் இப்னு கர்கர் என்னும் ஹுதத் இப்னு புதத் என்று இருவிதமாக சொல்லப்படுகிறது.)

கப்பல்களில் சிறந்தவற்றை அவன் வன்முறையின் மூலம் அபகரித்துக் கொள்ளும் வழக்கமுடையவனாக இருந்தான். நாம் பயணம் செய்த கப்பலோ கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைகளுக்குரியதாகும்.(அது பத்து சகோதரர்களுக்கு சொந்தமானது என்றும், அவர்களில் ஐவர் அதில் பணியாற்றினர் என்றும் எஞ்சிய ஐவர் உடல் ஊனமுற்றவர்கள் என்றும் கூறுப்படுகிறது)

அக்கொடுங்கோலன் அக்கப்பலை அபகரித்துக் கொண்டால்  அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். அக்கப்பல் ஓட்டையாயிருப்பின் அவன் அதனை விட்டு விடுவான் என்று எண்ணியே அதை ஓட்டையாக்கினேன் என்றார்கள்.

أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي الْبَحْرِ فَأَرَدتُّ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُم مَّلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا

 ‘அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.  – 18:79.

இரண்டாவதாக ஒரு சிறுவனை நான் கொன்றேன். அதற்குக் காரணம் அவனின் பெற்றோர் இருவரும் முஃமின்களாய் இருக்கின்றனர். ஆனால் அவனோ காஃபிர் ஆவான்.(அச்சிறுவன் பெயர் ஷம்வூன் என்றும், ஐயூர் என்றும், ஐயூன் என்றும் மூன்றுவிதமாகக் கூறப்படுகிறது)

அவன் வாலிபனாகியபின் அக்கிரமக்காரனாகி, தம் பெற்றோர் இருவரையும் காபிர்களாகவும், அக்கிரமக்காரர்களாகவும் ஆக்கிவிடுவானோ என்று அஞ்சியே நாம் அவனை கொன்றோம்.

وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا

 ‘(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.   – 18:80.

فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا

 ‘இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.  – 18:81.

அப்பையன் இறந்தபிறகு இறைவன் அப்பெற்றோருக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்தான். அப்பெண்ணை ஒரு நபி மணந்து கொள்ள அவனின் சந்ததியில் 70 நபிமார்கள் தோன்றினர் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

அப்பெண்ணை மணந்து கொண்ட நபி ஷம்வீல் என்றும் ஷம்வூன் என்றும் இருவிதமாகக் கூறப்படுகிறது.

மூன்றாவதாக> கீழே விழும் நிலையிலுள்ள சுவரை நிலைநிறுத்;தியதற்கு காரணம்..

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ۚ ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَّلَيْهِ صَبْرًا

‘இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்;. எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்’ என்று கூறினார். -18:82.

இம்மூன்றில் எதனையும் என் விருப்பத்திற்கேற்ப செய்யவில்லை. உம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத என் செயல்களின் உட்பொருட்கள் இவைதாம் என்று கூறினர்.

தம் தவற்றுக்கு வருந்தி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கண்ணீர் உகுத்தார்கள். அதன்பின் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி உங்களுக்கு அல்லாஹுத்தஆலா எக்காரணத்திற்காக மறைவானவற்றை அறியும் ஆற்றல் வழங்கினான் என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்காக பாவங்கள் செய்யாது தவிர்ந்து கொண்டேன் என்பதற்காக என்று விடையளித்தார்கள்.

தமக்கு அறிவுரை கூறுமாறு வேண்டிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியவை:

பிறரிடம் தர்க்கம் செய்வதற்காக கல்வி கற்க வேண்டாம். கற்றபடி செயலாற்றுவதற்காக கல்வி கற்கவும். கற்றபடி செயலாற்றாவிடின் எவ்வித பயனும் ஏற்படாது. பிறருக்குத்தான் அது பயன்படும்.

பிறருக்கு நன்மை செய்வீராக! பிறருக்கு ஒருபோதும் தீங்கிழைக்க வேண்டாம்.

முகத்தை மலர்ச்சியுடன் வைத்திருப்பீராக!

அழிவு வேலையில் இறங்க வேண்டாம்.

தாம் செய்த தவற்றினை எண்ணி மனம் வருந்தி ஒருவர் மன்னிப்பு கோரிய பின்னர், நீர் மீண்டும் அவரிடம் அத்தவற்றை எடுத்துரைத்து அவரை இழிவுபடுத்த வேண்டாம்.

வாழ்நாளெல்லாம் உம் பாவங்களை எண்ணி அழுது கொண்டிருப்பீராக!

மறுமைக்கான தேட்டத்திலேயே உம்முடைய முயற்சிகள் அமைந்திருக்கட்டும்.

வியப்புக்குரியவை நிகழ்ந்தாலன்றி வேறு காரணங்களுக்காக சிரிக்க வேண்டாம்.

உமக்கு தேவையற்ற அலுவல்களில் நீர் தலையிட வேண்டாம்;.

இன்றைய அலுவலை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட வேண்டாம்.

அதன்பின்னர் ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்கு அறிவுரை பகருமாறு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வேண்டினார்கள்.

அல்லாஹ்விற்காக அன்றி வேறெவருக்காகவும் எவர்மீதும் சினமுற வேண்டாம்.

உலகத்தின் மீது பற்று கொள்ள வேண்டாம். பற்று கொண்டால் அது இறைநம்பிக்கையை உள்ளத்திலிருந்து போக்கடித்து இறைவனுக்கு மாறு செய்யும் தன்மையை உள்ளத்தில் புகுத்தி விடும்.

சுமார் பதினெட்டு நாட்களுக்குப் பின்னர் இருவரும் தத்தம் வழியே பிரிந்து சென்றனர்;.

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹுவுடன்:

கானகமொன்றில் புரூஜுல் அஜமி என்னும் பழங்கால கோட்டையில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடும் தவம் செய்து கொண்டிருந்தவேளை, தமக்கு இனி எவரேனும் உணவு கொண்டுவந்து ஊட்டினாலேயன்றி தாம் உணவு உண்பதில்லை என்று தீர்மானித்தவர்களாய் இருந்த நேரம்.

தம் மனதுடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஷைகு அபூ ஸயீது முகர்ரமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

அவ்விடத்திற்கு போகலாமா வேண்டாமா? என்று திணறிக் கொண்டிருந்த வேளையில் ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வந்து, அப்துல் காதிரே! அழைப்பை ஏற்று அங்குச் செல்வீராக! என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

பிற்காலத்தில் ஹழ்ரத் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பக்தாதில் தங்கியிருந்து மக்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தனர். அப்போது அவர்களின் பேச்சைக் கேட்க ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருவது நீங்காத வழக்கமாக இருந்தது.

கிள்று அலைஹிஸ்ஸலாம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

ஒருநாள் பனீஇஸ்ரவேலர்களின் கடைத்தெரு வழியே கிள்று அலைஹிஸ்ஸலாம் அ வர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ஒரு  மனிதன் வந்து யாசகம் கேட்டான். அதற்கு கிள்று நபி, ‘உமக்கு கொடுக்க என்னிடம் ஏதுமில்லை. என்னை விற்று காசாக்கி கொள் என்றார்கள்.

அவ்வாறே அம்மனிதனும் அவரின் கையைப் பிடித்துக் கொண்டுபோய் கடையில் 400 திர்ஹத்திற்கு விற்று பணத்தை வாங்கிக் கொண்டான்.

பின்னர் கிள்று அலைஹிஸ்லஸாம் அவர்கள் தம்மை விலை கொடுத்து வாங்கியவனிடம் எனக்குரிய வேலையைக் கூறும்படியாக வேண்டினாhர்கள்.

அதற்கு அவன் மிகப்பெரும் பாறையை சுட்டிக் காட்டி மற்றொரு இடத்தில் போடவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ஆறுபேர் நாள் முழுவதும் முயன்றாலும் அகற்ற முடியாததை ஒரு சாஅத் நேரத்தில் தூக்கி போட்டு விட்டார்கள்.

அதன்பிறகு தான்  வெளியூர் செல்வதாகவும் தமக்குப் பகரமாக வீட்டில் இருந்து வரும்படியும் சொன்னான். மேலும் சில வேலைகளையும் கொடுத்து விட்டு சென்றான். அவன் திரும்பி வரும்போது அவை அனைத்தையும் செய்து முடித்து இருந்தார்கள். வந்தவன் இதைக் கண்டு நீங்கள் யார்? என்று விசாரித்தான்.

அவர்கள் நான் அடிமைத்தனத்திலுள்ள கிள்று ஆவேன் என்று சொன்னார்கள். அதன்பின் தம்மிடம் யாசகம் கேட்டவர்க்கு தான் கொடுத்த விசயத்தை சொன்னார்.

அதுகேட்ட அம்மனிதன் கிள்று நபி அவர்களிடம் மன்னிப்பு வேண்டி அவர்கள் கரம் பற்றி இஸ்லாமானதும் மட்டுமில்லாமல் அவர்களை விடுதலை செய்து 400 தீனாரும் கொடுத்தனுப்பினான்.

அல்லாஹுத்தஆலா கிலுறு நபிக்கு வஹீ அறிவித்தான்.

அடிமைத்தனத்திலிருந்து உம்மை விடுவித்தோம். உம்முடைய கரம் ப்றறி காபிரனவனை முஸ்லிமாக்கினோம். நானூறு திர்ஹத்திற்;குப் பதிலாக 400 தீனார் உமக்கு கொடுத்தோம். அல்லாஹ்வின் மீது தவக்கல் வைப்பவன் இழப்பை அடைய மாட்டான் என்று.

இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக அபீ அமாமத்துல் பாகிலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹழ்ரத் இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன்:

பல்கு நாட்டு ஆத்மஞானி இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் அரசவையில் இருக்கும்நேரம், ஒருவர் உள்ளே நுழைந்து அங்குமிங்கும் உலா வந்து கொண்டிருந்தார். மன்னருக்கு உhயி மரியாதை கொடுக்கவில்லை. அவரை நோக்கி இப்றாஹீம் இப்னு அத்ஹம், நீர் யார்? எங்கே வந்தாய்? என்று அதட்டினார்கள்.

அப்போது அவர் இந்த சத்திரத்தில் ஒருநாள் தங்கிவிட்டு செல்லலாம் என்று வந்தேன் என்று சொன்னார். இது சத்திரமா? இது அரண்மனையல்லவா! என்று கூறினார்கள்.

அப்படியா? இது சத்திரமில்லையாயின் உமக்கு முன் இங்கு யார் வாழ்ந்தார்? என்றார்கள். மன்னர் எனது தந்தை என்றதும், அதற்கு முன், எனது தந்தையின் தந்தை, அதற்குமுன், தந்தையின் தந்தையின் தந்தை என்று சொன்னதும் அப்போ இது சத்திரம்தானே! என்று வந்தவர் சொன்னார்.

மன்னரின் சிந்தனையைத் தூண்டி உலக மாயையை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே தூண்டுதலாக அமைந்தது.

இறுதியாக ஓரிடத்தில் அவர்களைக் கண்டு> நீங்கள் யார்? என்று கேட்டார்கள். நான் கிள்று என்று அவர் விடையளித்தார்.

மற்றொரு தடவை மன்னர் பட்டுமெத்தையில் படுத்துறங்குகையில், மாடியில் ஒருவர் உலாவும் சப்தம் கேட்டு அது யார் என்று கேட்டார் மன்னர்.

அங்கிருந்து உங்களுக்கு தெரிந்தவர்தான் என்று சொன்னார்.

அறிமுகமானவரோ, அறிமுகமில்லாதவரோ உமக்கு மாடியில் என்ன வேலை என்ன என்று கேட்டார்கள். எனது ஒட்டகையை காணவில்லை. அதான் தேடிக் கொண்டு வந்தேன் என்றார்கள்.

அதுகேட்ட மன்னர், ஒட்டகம்  என் அரண்மனையின் முகட்டிலா மேயவந்தது? என்று கேட்டார்கள்.

பஞ்சுமெத்தையில் படுத்துக் கொண்டு நீர் இறைவனைத் தேடும் போது நான் காணாமற் போன ஒட்டகத்தை இங்கு வந்து தேடக் கூடாதா? என்று சொன்னார்.

இந்தபதில் இப்றாஹீம் இப்னு அத்ஹமை திக்குமுக்காடச் செய்தது. பேச நாஎழவில்லை. அதன்பின் அவர்கள் அனைத்தையும் துறந்து காடு செல்ல ஆரம்பித்தனர். அப்போது வழியில் ஒருவர் தென்பட்டு> இஸ்முல் அஃலத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து பசி எடுப்பின் இதை ஓதி இறைவனிடம் இறைஞ்சினால் உம்முடைய பசி தீரும் என்று சொன்னார்கள்.

இஸ்முல் அஃலத்தை உச்சரித்தவண்ணம் அனல்பறக்கும் பாலைவனப்பகுதியில் நடந்து சென்றார்கள். வழியில் மற்றொரு மனிதரைக் கண்டார்கள்.

அவர் அவர்களை நோக்கி ‘இப்றாஹீமே! உம்மை வழியில்  சந்தித்து உமக்கு இஸ்முல் அஃலத்தை போதித்தவர் எவர் என்பதை நீர் அறிவீரா?’ என்று வினவினார். அதற்கவர் தெரியாது என்று பதிலுறுத்தார்கள்.

அவர்தாம் என்னுடைய சகோதரர் இல்யாஸ்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்றார்கள்.

அவ்விதமாயின்; தாங்கள் யார்? என்று வினவினார்கள் இப்றாஹீம் இப்னு அத்ஹம் அவர்கள்.

அதற்கவர் ‘நான் கிள்று ஆவேன்’ என்று கூறினார்.

கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களிடம் நான் தங்களிடம் இருந்து உறவாட வந்தேன்’ என்று கூறினார்.

அதுகேட்ட இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் அல்லாஹ்வுடனே அன்றி வேறு எவரிடமும் நட்புறவாட விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைஅத் வழங்கினார்கள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது.

கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் எனவும் தஜ்ஜால் வரும்போது அவனைப் பொய்ப்பிக்கும் வரை இவர்களின் வயது அதிகப்பட்டிருக்கிறது என்பதாகவும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹழ்ரத் ஹக்கீமுத் திர்மிதீ ரலியல்லாஹு அன்ஹு அவாக்ள், தம்முடைய நூலான நவாதிர் என்னும் நூலில் ஹழ்ரத் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடனுள்ளார்கள் என்பது பற்றி தெளிவு படுத்துகின்றார்கள்.

தப்ஸீர் பகவியிலோ நபிமார்களில் நால்வர் உலகமுடிவு நாள்வரை உயிருடன் இருப்பர். அவர்களுள் கிள்று, இல்யாஸ் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோர் இப்புவியில் வாழ்கின்றனர். கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலிலும், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கரையிலும் இருக்கின்றனர். இவர்களின் உணவு காளானும், கீரையும் ஆகும். இத்ரீஸ், ஈஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகிய இரு நபிமார்கள் விண்ணகத்தில் இருக்கின்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

ஹழ்ரத் அல்ஹர்வீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பலமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்ததாக கூறியுள்ளார்கள்.

கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழராக இருந்தார்களென்று பல ஹதீதுகள் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளன என பஸ்லுல் கிதாபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தஃரீபு வல்இஃலாம் என்னும் நூலில் இமாம் ஸுன்ஹலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

‘ஹழ்ரத் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் திருக்குர்ஆன் அதன் ஏட்டை விட்டு அகற்றப்படும் காலம்வரை உயிர் வாழ்ந்து மரணிப்பார்கள்.

கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்தவர். ஹழ்ரத் இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்பனா இஸ்ராயீல் கோத்திரத்தைச் சார்ந்தவர்.

இவ்விருவரும் ஆண்டிற்கு ஒருமுறை சந்தித்து,

மாஷா அல்லாஹ்

லா யஸூகுல் கைர இல்லல்லாஹ்

மாஷா அல்லாஹ்

லா யஸ்ரியுஸ் ஸூஅ இல்லல்லாஹ்

மாஷா அல்லாஹ்

மா கான மின் நிஃமத்தின் மினல்லாஹி

மாஷா அல்லாஹ்

லா ஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹி

என்று கூறிப் பிரிகின்றனர்.

இதனை நாள்தோறும் காலையிலும், மாலையிலும் மூன்று முறை ஓதுபவர்கள் நீரில் மூழ்கி இறத்தல், களவு கொடுத்தல், ஷைத்தானின் தீங்கு, பாம்பு கடித்தல், தேள் கொட்டுதல் ஆகிய தீங்குகளை விட்டும் தவிர்ந்திருப்பர் என்று கூறப்பட்டுள்ளது.

இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹுவுடன்:

ஹழ்ரத் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களை பலமுறை சந்தித்ததாக இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஹி;ஜ்ரீ560-638)தெரிவிக்கிறார்கள்.

  1. நான் ஆத்மீகத் துறையில் அடியெடுத்து வைத்த புதிதில் செவில்லிக்கு அபூ ஜஃபர் அல்யூர்யானீ என்ற இறைநேசச் செல்வர் வந்தார்கள்.

அவர்களுடன் எனக்கு ஒருவரின் ஆன்மீக நிலையை பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவருடன் வாதித்து விட்டு நான் வெளியே வந்தபோது ஹிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷைகுல் உர்யானீ கூறியதே சரியென்றும் நான் கூறியது தவறு என்றும் அவர்கள் என்னிடம் எடுத்துரைத்தார்கள்.

  1. தூனிஸ் நகரில் கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இரண்டாவது சந்திப்பு ஏற்பட்டது. தூனிஸ் நகரத்திலுள்ள ஒரு கப்பலின் ஓரத்தில் நான் கடலைப் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலின் மீது நடந்து வந்தார்கள். தங்கள் காலை கப்பலில் வைத்தார்கள். அவர்களின் கால்கள் நனைந்திருக்கவில்லை. என்னிடம் சற்று நேரம் உரையாடிவிட்டு சென்று விட்டனர்.

அங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் கலங்கரை விளக்கமொன்று இருந்தது. அதனை அவர் இரண்டு அல்லது மூன்று எட்டில் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் இறைவனைத் துதி செய்து கொண்டிருந்த ஒலி என் செவிகளிற் கேட்டது.

  1. இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனிமையைப் பெரிதும் விரும்பினர். அச்சயமத்தில் அவர்கள் முன் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து அவர்களுக்கு பைஅத்தும், கிர்க்காவும் வழங்கிச் சென்றனர். அதன்பின் அவர்களுக்கு இஸ்முல் அஃலம் தெரியலாயிற்று.

அதன்பின் இவ்விருவர்களுக்கும் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்ந்தன.

இச்செய்தியை தம்முடைய புத்துஹாத்துல் மக்கிய்யா என்ற தமது நூலில் தெரிவிக்கின்றனர்.

அல்தனஸ்ஸுலாத்தும் மௌஸிய்யா என்ற நூலிலும் தமக்கு கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹுவுடன்:

ஷாதுலிய்யா தரீகாவின் மூலவரான இமாம் அபுல் ஹஸன் ஷாதலி அவர்களைக் காண்பதற்காக கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி வருபவர்களாக இருந்தார்கள். அவர்களின் வலப்புறத்தில் அமரும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஷாதலி நாயகம் எழுந்திருப்பின் கிளுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் எழுந்திருப்பார்கள். அவர்கள்  தம் தியான அறைக்குச் சென்றால் அதன் வாயில்வரை கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களும் செல்வார்கள்.

ஒருநாள் ஒருவர் ஷாதலி நாயகத்திடம் வந்து கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்று வினவினார்.

அதற்கு நாயகமவர்கள் ‘நீர் ஃபகீஹ் நாஸிருத்தீன் அம்பாரியிடம் செல்லும். அவர் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிரோடுள்ளார் என்றும், அவர் நபிமார்களில் ஒருவர் என்றும் ஃபத்வா வழங்குவார் என்றும்,

ஐதாபுக் காட்டில் நான் அவர்களை எத்தனையோ தடைவ எனது இந்தக் கை கொண்டு முஸாபஹா செய்துள்ளேன். அப்போது அவர் என்னை நோக்கி, ‘அபுல் ஹஸனே! இறைவன் உமக்கு அருள் பாலிப்பானாக! காட்டிலும், மேட்டிலும், மலையிலும், கரையிலும் உமக்குத் துணை நிற்பானாக! என்று கூறி துஆச் செய்தார்கள். அவரின் கலிமா விரலும் நடுவிரலும் ஒரே நீளமுடையதாக இருக்க நான் கண்டேன்’ என்று கூறியுள்ளார்கள்.

ஷஅதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன்:

ஷஅதி அவர்கள் ஹிஜ்ரி571-691(கி.பி1184-1304) ல் வாழ்ந்த மாபெரும் இறைநேசர் ஆவார்கள். இவர்கள் மக்காவில் புனிதப் பயணிகளுக்கு நீர் இறைத்துக் கொடுக்கும் பணியை செய்து வந்தனர். அப்பொழுது அவர்கள் ஒருநாள் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தனர்.

அவர்கள் ஷைகு ஷஅதியின் வாயில் ஜீவநீரை ஊற்றினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருவர் நம்பவில்லை. இந்நிலையில் அவர் கனவொன்று கண்டார். அதில், சுவனத்தின் வாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. அவை எவருக்காகத் திறக்கப்பட்டுள்ளன? என்று அவர் வினவ, அவை ஸஅதிக்காக என்று ஒரு வானவர் பதில் அளித்தார்.

உலகப் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமீர் குஸ்ரு, ஜீவநீரைத் தமக்கும் தருமாறு வேண்டினர்.

அப்பொழுது ஷஅதி அதனை நான் ஹாஃபிஸுக்குக் கொடுத்து விட்டேன் என்று கூறினார்கள்.

இந்நிகழ்ச்சி பாரசீகக் கவிஞர் ஜாமி எழுதிய அமீர் குஸ்ருவின் வரலாற்றில் குறிப்பிடுகிறார். இந்த ஹாஃபிஸ் என்ற ஜாமி அவர்கள் இறைக்காதலைக் குறிப்பிட்டு 569 செய்யுட்களில் அவர் எழுதிய தீவான் என்னும் நூல் பிரசித்திப் பெற்றதாகும்.

1 Comment found

User

seyathu aashikkullasha refai

மாஷா அல்லாஹ் படித்த அறிந்தேன், கிலுறு நபி வரலாறு, மிகவும் அற்புதம்
தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமீன்

Reply

Add Comment

Your email address will not be published.