ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம்
By Sufi Manzil
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர்கள் ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவர்களுக்கு மனித வர்க்கத்தின் மீதும், ஜின் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆற்றலைக் கொடுத்து அவர்களுக்கு நபித்துவத்தைக் கொடுத்தான்.
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஷரீஅத்தையே பின்பற்றி மக்களுக்கு உபதேசித்து வந்த இவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது கட்டளைகள் கொண்ட 50 பலகைகள் இறங்கின. அதில் புவியில், கணிதம், சங்கீதம், மருத்துவம் போன்றவற்றின் ஞானம் விளக்கப்பட்டிருந்தது.
இவர்கள் பெரும்பாலும் சிரியா நாட்டிலேயே வாழ்ந்து வந்தார்கள். ஹாபீலைக் கொன்ற காபீலை கொல்லுமாறு அல்லாஹ் ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உத்திரவிட்டதாகவும், அந்த உத்திரவுபடி ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்று காபீலுடன் போர் புரிந்து காபீலின் ஆட்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். காபீல் கைது செய்யப்பட்டு ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனான். அவனை வானவர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.
இவர்கள் ஜின் வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை மணம் முடித்ததாக வரலாறு கூறுகிறது. இந்தப் பெண் கர்ப்பமுற்றதும் நூரே முஹம்மதீ உங்களிடம் வந்து விட்டது என பல திக்கிலிருந்தும் குரல்கள் ஒலித்தன. அதன்மூலம் அனோஷ் என்ற குழந்தை பிறந்தது. அனோஷ் என்றால் உண்மையாளர் என்று பொருள். அனோஷ் அவர்கள்தான் முதன்முதலில் பேரீத்தம் மரத்தை நட்டு வளர்த்ததாக கூறப்படுகிறது.
அனோஷ் பருவ வயதை அடைந்ததும் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நூரே முஹம்மதீ பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்கள். அனோஷ் அவர்களுக்கு 90 ஆம் வயதில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கீனான் என்று பெயர் சூட்டப்பட்டது. கீனான் என்றால் வெற்றியாளர் என்று பொருள். அனோஷ் அவர்கள் தங்களது 950 ஆவது வயதில் காலமானார். கீனானுக்கு 70 வயதாகும்போது மஹ்லாயீல் என்ற குழந்தை பிறந்தது.
இவர்களின் காலத்தில் மக்கள் பல்கிப் பெருகினர். அவர்கள் அனைவர்களும் மலைக் குகைகளிலும், வானந்திரங்களிலும் வசித்து வந்தார்கள். ஈராக் நாட்டில் பாபுல் இருக்குமிடத்தில், ஷபூஸ் என்ற பெயருடன் ஒரு நகரை நிர்மாணித்து அதில் மக்களை குடியேறச் செய்தார் இவர். 80 வது வயதில் பயாஜா என்ற மகன் பிறந்தார். அவருக்கு 162 வயது ஆகும்போது அக்னூக் என்ற குழந்தை பிறந்தது. இந்த குழந்தைதான் பின்னர் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் என்று அழைக்கப்பட்டார்கள்.
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் 70 ஆம் வயதில் காலமாகி யு.பி. மாநிலத்திலுள்ள அயோத்தியா மாவட்டத்திலுள்ள பைஜாபாத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்தச் சமாதி இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.