நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்

நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 2 Comments December 21, 2014

ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நீண்ட காலம் வரை யாரும் நபியாக வரவில்லை. இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்னும் கொடியோன் பனீ இஸ்ரவேலர்களை மிகக் கொடுமைப் படுத்தியும், கொன்றும், அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தும் அநியாயம் செய்து கொண்டிருந்தான். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் தத்தம் வீடு, வாசல்களை விட்டுப் பல திக்குகளிலும் ஓடி ஒளிந்தனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நபி தோன்றினார்கள். அவர்களது பெயர் அஸ்மவீல் என்பதாகும். பனீ இஸ்ரவேலர்கள் இந்த நபியிடம் சென்று தங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி ஓர் அரசனை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், அந்த அரசனின் ஆதரவோடு அந்த கொடியவன் ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும் என்றும் விடுத்த வேண்டுகோளை அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏற்று அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.

அதன்காரணமாக, அல்லாஹ் ஒரு கழியையும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யையும் அனுப்பி, பனீ இஸ்ரவேலர்களில் அரசனுக்குத் தகுதியானவர்கள் அந்தக் கழியின் உயரமிருப்பர் என்றும், அத்தகையவர் அங்கு வந்ததும் பாத்திரத்திலுள்ள எண்ணெய் கொப்பளிக்கும் என்றும் அத்தகையவரே பனீ இஸ்ரவேலர்களுக்குரிய அரச பதவிக்குத் தகுதியானவர் என்றும் அறிவித்தான்.

இத்தகவலை தம் மக்களுக்கு நபி அவர்கள் அறிவித்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அன்னாரின் வீட்டில் குழுமினர். ஒருவருக்கும் அந்த அடையாளம் பொருந்தவில்லை. இறுதியாக தாலூத் என்பார் தம்முடைய காணாமல் போன கழுதையைத் தேடி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு வந்தான். அவன் வந்ததும் அந்த எண்ணெய் கொப்பளிக்க ஆரம்பித்தது. கழியை வைத்து அளந்து பார்த்ததில் சரியான அளவாகவே இருந்தது.

தாலூத் பனீ இஸ்ரவேலர்களின் அரசன் என்று அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவித்ததும்> தாலூத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் புன்யாமீன் வழி வந்தவராயிருந்தார். மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். அதனால் பனீ இஸ்ராயீல்கள் தங்கள் அரசனாக அவனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. தங்கள் யஹூதா வமிசாவழியில் வந்தவர்களையே அரசராக ஏற்றுக் கொள்வோம் என்றும் பிடிவாதம் பிடித்தனர். இது அல்லாஹ்வின் ஏற்பாடு. இதை மறுப்பது அவனை கோபத்திற்குள்ளாக்கிவிடும் என்று அச்சமூட்டி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.

தாலூத்துடைய புத்தி தீட்சண்யத்தையும், ஆளும் திறனையும் பார்த்து நாளடைவில் மக்கள் அவனை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக அல்லாஹ் ஒரு பெட்டியை கொடுத்திருந்தான். அப்பெட்டி நபிமார்களின் குடும்பத்தினர்களிடம் கைமாறிக் கொண்டே வந்தது. ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கைக்கு அது வந்தபோது அதில் தவ்ராத் வேதத்தையும், சில பொருட்களையும் அதில் வைத்திருந்தார்கள். இந்தப் பெட்டி யார் கையில் இருக்கிறதோ அவருக்கு வெற்றி நிச்சயம் என்று இஸ்ரவேலர்கள் நம்பி வந்தனர்.

இப்பெட்டி அமாலிகா என்ற பெயர் கொண்ட கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காமல் அசுத்தமான இடங்களில் வைத்திருந்தனர்.அதனால் அவர்களுக்கு அது பெரும் துன்பமாக மாறிவிட்டது. எனவே அதை ஒரு குப்பை மேட்டில் வைத்து புதைத்து விட்டனர்.

அல்லாஹ் அந்தபெட்டியை வானவர்கள் மூலம் அரசர் தாலூத்திடம் சேர்த்து விட்டான். உடனே ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘பனீ இஸ்ரவேலர்களிடம் சென்று நாம் அனைவரும் அரசர் தாலூத் தலைமையில் திரண்டு அமாலிகா கூட்டத்தினர்களிடம் சிறைப்பட்டு கிடக்கும் பனீ இஸ்ரவேலர்களை மீட்டு வருவோம்’ என்று கூறினர்.

அவர்களது கூற்றிக்கிணங்க அரசர் தாலூத் 70000பேர் கொண்ட படையினைத் திரட்டினார். அப்படையினரை நோக்கி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ஓ மக்களே! நீங்கள் அமாலிகா கூட்டத்தினரை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை தென்படும். அச்சமயம் எனது சொற்படி நடந்தால்தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும்போது தண்ணீர் தாகமெடுத்து நாவரண்டு விடும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீh மிக சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகியவராவீர்;கள் என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடி வந்தது. அந்த தண்ணீரை 313பேர் தவிர ஏனையோர் வயிறு முட்ட குடித்தனர். அதனால் எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாதபடி ஆகிவிட்டனர். அவர்களது முகங்களும் கறுத்தும், சிறுத்தும் போய்விட்டன.

313பேரைக் கொண்டு தாலூத் ஜாலூத்தை வெல்ல படைநடத்தி சென்றான். அவனுடைய ஆஜானுபாவமான தோற்றத்தைக் கண்டு பனீஇஸ்ரவேலர்கள் நடுநடுங்கிவிட்டனர். ஜாலுத்தும், என்னிடம் நீங்கள் போரிடவா போகிறீர்கள்? என்ன வேடிக்கை. முதலில் என்னிடம் தனியாக மோத உங்கள் அரசனையோ, அல்லது வேறு ஆளையோ வரச் சொல்லுங்கள். அதன்பிறகு என்னுடைய படையினருடன் மோதலாம் என்று அறைகூவல் விடுத்தான். அவனது அறைகூவலைக் கண்டு அனைவரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் அரசர் தாலூத் மட்டும் அவனோடு போரிடுவதற்கு மும்முரமாயிருந்தார்.

பனீ இஸ்ரவேலர்களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் என்றும், எனது ராஜ்ஜியத்திலும்சரிபாதியைத் தருவதாகவும் பறை அறிவிப்பு செய்தனர். ஆனாலும் யாரும் முன்வரவில்லை.

பனீ இஸ்ரவேலர்களிடையே ஆய்ஷா என்ற பெயருடன் ஒருவர் இருந்தார். இவர் ஹழ்ரத் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரரான யஹூதாவின் வழியில் வந்தவர். இவருக்கு 12மக்கள் இருந்தனர். கடைசி மகனின் பெயர்தான் தாவூது. இவர்கள் குள்ளமாக இருந்தார்கள். இவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 569ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள். யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 9ஆவது தலைமுறையில் வந்தவர்கள்.

அல்லாஹ் வஹி மூலம் ஜாலூத்தை கொல்பவர் ஆய்ஷாவின் மகன் தாவூதுதான் என்று ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்திருந்தான். அவர்களது அடையாளங்களையும் தெரிவித்திருந்தான்.

ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அய்ஷாவின் வீட்டைக் கண்டுபிடித்து, காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹழ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டுபிடித்து அல்லாஹ்வின் ஆணைப்படி ஜாலூத்தை கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதற்கு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்;த்து நீங்கள் அல்லாஹ்வுடைய நபியா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும்> நான் எனது பெற்றோர்களையும், சகோதரர்களையும் கலந்து கொண்டபிறகு தாலூத்தை சந்திக்கிறேன் என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களை சந்தித்து தாம் ஜாலூத்தைக் கொல்லப் போவதாக சொல்ல அவர்கள் கேலி செய்து சிரித்தார்கள்.

தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்மிடம் ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் எதிரிகளை கொல்ல பயன்படுத்திய கல்லும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட உபயோகப்படுத்திய கல்லும், இன்னும் ஜாலூத்தைக் கொல்வதற்காகவே வந்த கல்லும் ஆகிய மூன்று கல்கள் என்னிடம் இருக்கின்றன. அதுபோதும் அவனை;க கொல்வதற்கு என்று சொன்னார்கள்.

சகோதரர்கள் சிரித்தார்கள். அப்போது தந்தை ஆய்ஷா வந்து இந்த நீ சொல்வதையெல்லாம் கேட்டேன். ஆனால் அதை எப்படி நம்புவது? என்று கேட்டார்கள்.

தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். நான் கூறியது அனைத்தும் உண்மை. இந்த கற்களே தங்களைப் பற்றி பேசி என்னிடம் அறிமுகம் செய்து கொண்டன. அதனால்தான் நான் ஜாலூத்தைக் கொல்ல முன்வந்தேன் என்றார்கள்.

தந்தைக்கு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை ஏற்பட்டது. துஆ செய்து தம் மகனை அனுப்பி வைத்தார்கள்.

தாவூது நபி அவர்கள் மன்னர் தாலூத்தை சந்தித்து தான் ஜாலூத்தை கொல்ல போவதாக சொன்னதும்> அவர் ஆச்சரியப்பட்டு நீ தனியாளாக எவ்வாறு அவனைக் கொல்வாய்.? நான் சிறு படையை உனக்குத் துணையாக அனுப்பி வைக்கட்டுமா? என்று கேட்டான்.

தாவூது நபி அவர்கள் தம்மிடமிருந்த கற்களைப் பற்றி சொல்லி எனக்கு அல்லாஹ்வின் துணை ஒன்றே போதும். மற்றவர்களின் துணை தேவையில்லை என்று சொன்னார்கள்.

மன்னர் வெகு வேகமாக ஓடும் குதிரை ஒன்றைக் கொடுத்து அல்லாஹ் உனக்கு உதவி செய்வானாக என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஜாலூத் தன்னை கொல்ல பனீ இஸ்ரவேலர்களிலிருந்து ஒருவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பக்கத்துணையாக ஒரு பெரும் படையைத் தயார் செய்தான்.

ஜாலூத் தம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் குதிரையைப் பார்த்தான். அதில் ஒரு சிறு மனித உருவம் உட்கார்ந்திருந்தது. குதிரை ஜாலூத்தின் ரதம் இருந்த இடம் வந்ததும் நின்றது. அதிலிருந்து தாவூத் அலைஹிஸ்ஸலாம் இறங்கி ஏ ஜாலூத்தே உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அவன் எள்ளி நகையாடினான்.

தம் கையிலிருந்த மூன்று கற்களையும், கயிறையும் எடுத்துக் காட்டி கயிற்றில் முதல் கல்லை வைத்து கவண் கல்லாக ஜாலூத்தின் தலையை நோக்கி எறிந்தார்கள். அவன் தலையை அது சுக்குநூறாக்கியது. அடுத்த கல்லை அவன் உடலை நோக்கி எறிந்தார்கள். அது பட்டு அவன் உடல் நெடுஞ்சாண்கிடையாக சாய்ந்தது. அடுத்த கல்லை படைகளை நோக்கி எறிந்தார்கள். படைகள் அனைத்தும் சிதறி ஓடின. இதில் காலாட்படைகள் மிதிபட்டே அழிந்தது.

அல்லாஹ்வின் உதவியால் ஜாலூத்தை கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு அத்தாட்சியாக அவனது மோதிரத்தை எடுத்துக் கொண்டு தம் இடம் நோக்கி விரைந்தார்கள். இந்த வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில்…

-அல்-குர்ஆன் 2 : 250>251

மன்னர் தாலூத் ஜாலூத்தைக் கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தாம் சொன்னபடி தம் அழகிய மகளை திருமணம் செய்து வைத்தார். அதேபோல் தமது இராஜ்ஜியத்திலும் சரிபாதியை கொடுத்தார். இதன்பின் இரண்டுஆண்டுகள் வாழ்ந்தார். தமது இறுதிகாலம் நெருங்கி விpட்டதை அறிந்த மன்னர் தம்முடைய மறுபாதி இராஜ்ஜியத்தையும் தாவூது நபி அவர்களிடமே ஒப்படைத்து அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி தம் மந்திரிகளைக் கேட்டுக் கொண்டார். மன்னர் தாலூத்தின் மறைவிற்குப் பின்னர் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முழு இராஜ்ஜியத்திற்கும் அதிபதியாகி, இஸ்ரவேலர்களின் தலைவரானார்கள்.

இந்த சமயத்தில்தான் அல்லாஹ் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது நபியாக பிரகடனப்படுத்தினான். பனீ இஸ்ரவேலர்களில் ஒரே சமயத்தில் யாரும் அரசராகவும், நபியாகவும் இருந்ததில்லை. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரசராகி 40வருடங்களுக்குப் பின் தான் நபிப்பட்டம் கிடைத்தது என்றும், இது கி.மு.990ஆம் ஆண்டில் நிகழ்ந்தது என்றும் குறிப்பில் காணப்படுகிறது.

அன்னாருக்கு ஜபூர் என்ற வேதத்தையும் கொடுத்தான். இதில் 150அத்தியாயங்கள் இருந்தன. அவற்றில் 50அத்தியாயங்களில் புக்துநஸர் பற்றியும், பாபில் நகர மக்களைப் பற்றியும், 50அத்தியாயங்களில் ரூம், ஈரான் நாட்டு மக்களைப் பற்றியும், மீதமுள்ள 50அத்தியாங்களில் பொதுவான அறிவுரைகள் பற்றியும் கூறப்பட்டிருந்தன. ஹலால் ஹராம் பற்றி குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலான வசனங்கள் தியானத்தைப் பற்றியும், அவனது புகழைப் பற்றியும் இருந்தன. இந்த வேதத்தை 72வகையான இராகத்தில் ஓத அல்லாஹ் தாவூது நபிக்கு கற்றுக் கொடுத்திருந்தான். அவர்கள் தங்கள் இனிமையான குரலைக் கொண்டு ஓதினால் அதனைக் கேட்கும் மனித இனம்,பறவை இனம் எல்லோரும் மெய்மறந்து விடுவர். அந்த இனிய குரல் நெடுந்தூரம் வரை கேட்கும் சக்தியை அல்லாஹ் அளித்திருந்தான்.

இதனைக் கண்டு பொறாமை கொண்ட இப்லீஸ் இசைக்கருவிகளை தயாரித்து அதன்மூலம் எழும் சப்தத்தால் மக்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்தான்.

ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; எப்போதும் இறைதியாத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். ஒருநாள்விட்டு ஒருநாள் நோன்பு பிடிக்கக் கூடியவர்களாகவும்> இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருந்து வணங்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு மக்களின் குறையறிய நகர்வலம் வருவார்கள். ஏதேனும் குறை கண்டால் உடனே அதனை நிவர்த்தி செய்து வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு இரும்பை மெழுகுபோல் ஆக்கும் சக்தியைக் கொடுத்திருந்தான். படைவீரர்கள் அணியும் கவசங்களை செய்து அதனை விற்று அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு தங்கள் குடும்பச் செலவை பார்த்துக் கொண்டார்கள். அரச கஜானாவிலிருந்து எதையும் அவர்கள் தமது சொந்தத்திற்காக செலவு செய்யவில்லை.

ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸாம் அவர்களுக்கு ஒரு அற்புதமான சங்கிலியை அல்லாஹ் வழங்கியிருந்தான். இதன் ஒரு முனை வானத்தை நோக்கியும் மறுமுனை தாவூது நபி அவர்களின் அரண்மனைக்குள்ளும் தொங்கிக் கொண்டிருந்தது. நோயுற்றவர்கள் இதனைத் தொட்டால் அவர்கள் நோய் நிவர்த்தியாகிவிடும். சில சதிகாரர்கள் செய்த சதியின் காரணமாக அல்லாஹ் அந்தச் சங்கிலியை மறையச் செய்து விட்டான்.

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த ஊரியா என்பவரின் பத்தஷாயஃ அழகெல்லாம் திரண்ட பெரும் அழகி. இவரின் பெயர் நஸாயிஹ் என்றும் இவரின் தந்தையின் பெயர் ஷாபாஹ் என்றும் கூறப்படுகிறது.

ஒருநாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனை நோக்கி நீ என்ன காரணத்திற்காக எனக்கு முன்புள்ள நபிமார்களுக்கு உன் அருட்பேற்றினை வழங்கினாய்? என்று வினா, ‘ நான் அவர்களைப் பற்பல சோதனைகளால் சோதித்தேன். அவற்றையெல்லாம் அவர்கள் வென்று நின்றார்கள். அதன்காரணமாகத்தான் நான் அவர்கள் மீது என் அருள்மாரியைச் சொரிந்தேன். என்று பதிலிறுத்தான். அதுகேட்டதும் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தமக்கும் அத்தகு சோதனைகளை இறக்கி வைக்குமாறும் தாம் அவற்றைப் பொறுமையுடன் ஏற்று இறைவனின் பேரருளுக்கு பாத்திரமானவனாக விரும்புவதாகவும் கூறினர்.

அதற்கு இறைவன் ‘மகிழ்ச்சிக்குப் பதிலாக சோதனையையா விரும்புகிறீர்கள். நல்லது. நீர் எச்சரிக்கையுடன் இரும். இன்ன நாளில் உமக்குச் சோதனை வந்து சேரும் என்று கூறினான்.

ரஜப் மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை அன்று தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமறையை ஓதிக் கொண்டிருக்கும்போது பொன்னிறத்துப் பறவை ஒன்று உள்ளே நுழைந்தது. அதனுடைய அழகைப் பார்த்து வியந்த அவர்கள்> தம்முடைய சின்னஞ்சிறு மகனுக்கு விளையாட கொடுக்க எண்ணி அதனை பிடிக்க முயன்றபோது அது பறந்து சென்றது. அது எங்கே செல்கிறது என்பதை அறிய உப்பரிகை மீது ஏறி நின்ற அவர்கள் சற்று தொலைவில் உள்ள வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஓர் பெண்ணின் மீது அவர்கள் பார்வை விழுந்தது. கீழே இறங்கி வந்த அவர்கள் அந்தப்புரத்தை அணுகி வேலையாட்களை அனுப்பி அவளைப் பற்றி விசாரித்து வரச் சொன்னார்கள். அவள் ஊரியா என்பவரின் மனைவி என்று தெரியவந்தது.

உடனே தாவூது நபி ஊரியாவை அழைத்து அவர் தம் மனைவியை மணவிடுதலை செய்து விடுமாறும், தாம் அவளை மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னார்கள். அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அதனை பத்தஷாயஃ அறிந்ததும் தாவூது அலைஹிஸ்ஸலாம் மூலம் தமக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரியணை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்கி அவரை அவர்கள் மணம் முடித்துக் கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஹழரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

ஊரியாவின் அடக்கவிடம் ஜோர்டானில் உள்ள அம்மானில் இருக்கிறது.

அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அதை;திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி – 38:22

தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள் கூறினார்கள் ‘பயப்படாதீர்! நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!’ 38:23

(அவர்களில் ஒருவர் கூறினார்) ‘நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லிஇ வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்.’ 38:24

(அதற்கு தாவூது) ‘உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே’ என்று கூறினார் இதற்குள் ‘நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்’ என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். 38:25

ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

தப்ஸீர் மதாரிக்கில் காணப்படுகிறது: ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் பனீ இஸ்ரவேலர்களுக்கு வெள்ளிக்கிழமையை வணங்கக் கூடிய தினமாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால். பனீ இஸ்ரவேலர்கள் வெள்ளிக்கிழமையை விட்டு விட்டு> சனிக்கிழமையைத் தங்கள் வணக்கத்தினமாக மாற்றிக் கொண்டனர். சனிக்கிழமைகளில் மீன் பிடிப்பதையும், உலக சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவதையும் அல்லாஹ் அவர்களுக்கு தடுத்திருந்தான். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஈலா நகரத்தில் வாழ்ந்த பனீ இஸ்ரவேலர்களை அல்லாஹ் அவர்களை சோதிக்க விரும்பி மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட சனிக்கிழமையன்று கடலில் அதிக மீன்களைத் தண்ணீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கி வரச் செய்தான். இதனைக் கண்ட பனீ இஸ்ரவேலர்கள் பேராசைபட்டு கடற்கரையையொட்டி ஒரு தண்ணீர் தடாகத்தைக் கட்டி சனிக்கிழமையன்று அந்தமீன்களையெல்லாம் அந்த தடாகத்தில் விழச் செய்து ஞாயிற்றுக் கிழமை காலையில் அந்த மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தனர்.

பனீ இஸ்ரவேலர்களில் அல்லாஹ்விற்கு மாறு செய்வதில் கொஞ்சம்கூட பயப்படாதவர்களான ஒரு வகையினரும்> இத்தகைய குற்றங்களை கண்டிக்கக் கூடியவர்களும்> அல்லாஹ்வின் தண்டனையை எச்சரிக்கை செய்யக் கூடியவர்களானவர்களும்> எதிலும் சம்பந்தப்படாமல் தான் உண்டு தன்வேலையுண்டு என்று இருந்தவர்களுமான மூன்று வகையினர் இருந்தனர்.

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மீன் பிடிக்க முதலாம் வகையை சார்ந்தவர்கள் வராது போகவே> அவர்களை பார்க்க சென்ற மற்றப் பிரிவினர் அவர்களில் வயதானவர்களை பன்றிகளாகவும்> வாலிபர்களை குரங்குகளாகவும் மாறியிருக்க கண்டனர். இவ்வாறு இவர்கள் மூன்று தினங்கள் இருந்து இறந்தனர். இது சுமார் 70>000பேர்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் பைத்துல் முகத்தஸ் நகரை நிர்மாணித்து> அங்கு இறைவனைத் தொழும் பள்ளியின் நிர்மாண வேலைகளையும் துவக்கியவர்கள் ஆவார்கள். பள்ளிக் கட்டக் கட்ட அது நான்கு முறை கீழே வீழ்ந்தது. அப்பொழுது இறைவன்> ‘நீர் இரத்தம் சிந்தினீர். எனவே இரத்தம் சிந்தாத உம் வழித் தோன்றலால் அதனை நான் எழுப்புவேன்’ என்றான். அப்பேறு அன்னாரின் மகனார் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்தது.

தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பல மக்கள் இருந்தனர். ஆனால் பத்தஷாயஃவிற்குப் பிறந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்> சிறு வயது முதல் கல்வி>கேள்விகளில் அபாரத் திறமை கொண்டிருந்தார்கள். அரண்மனையிலேயே அவர்கள் ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாக இருந்தார்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில:

இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள். அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள். விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள். வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே பார்க்கலாம்! தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)

நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.

ஹதீஸ் ஆதார நூல்கள் : சுனன் நசையி 5307, 5308, 5309முஸ்னத் அஹ்மத் 7931, 8124புகாரி எண்: 3427

ஒரு சமயம் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களது நீதி மன்றத்தில் ஒரு நூதனமான வழக்கு வந்தது. ஒருவர் இன்னொருவரிடமிருந்து நிலம் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலத்திலிருந்து ஏர் உழச் செய்தார். அப்போது அந்த நிலத்தில் ஒரு புதையல் தட்டுப்பட்டது. அந்தப் புதையல் தமக்குச் சொந்தமானது அல்ல என்று நிலத்தை விற்றவரிடம் நிலத்தை வாங்கியவர் கொடுக்க முன்வந்தார். ஆனால் நிலத்தை விற்றவரோ நிலத்தை விற்ற அன்றே நிலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமாகி விட்டது. எனவே புதையலை அவருக்கே கொடுக்க வேண்டும் என்று நிலத்தை விற்றவர் வாதிட்டார்.

தாவூது நபியிடம் அனுமதிபெற்று ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாதி>பிரதிவாதி இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் சம்பந்திகளாகி விடுங்கள். அந்தப் புதையல் உங்கள் இருவருக்குமே சொந்தமாகி விடும் என்று தீர்ப்பளித்தனர்.

ஒருவரின் நிலத்தில் விளைந்த பயிரை இன்னொருவரின் ஆடு தின்று விட்டது. தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து நீதி கேட்டனர். நிலத்தில் மேய்ந்தபயிருக்குப் பதிலாக அந்த ஆட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்i. உடனே அங்கிருந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு தீர்ப்பு வழங்கினர்:’பயிரிழந்தவர் அந்தப் பயிர் பழைய நிலைக்கு வளரும்வரை அந்த ஆட்டை அவரே வைத்துக் கொண்டு> அந்த ஆட்டிலிருந்து பால் கநற்து, தாமே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் அது ஈன்றெடுக்கும் குட்டிகள் கூட நிலத்துக்காரருக்கே சொந்தமாகும். பயிர் பழைய நிலைக்கு வந்ததும் ஆட்டை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியதை அல்லாஹ் தனது திருமறையில்: இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள் இரவில் இறங்கி மேய்ந்த போதுஇ அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, வர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம். 21:79அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும்இ அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

இத்தீர்ப்பு வழங்கும்போது சுலைமான் நபிக்கு வயது 11.

ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாளுக்கு நாள் பலஹீனமாகிக் கொண்டிருந்தார்கள். தமது அரசப் பதவியை 19ஆண்மக்களில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சங்கடப்பட்டார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்கு 11கேள்விகளை அறிவித்து> இதற்கு யார் சரியான பதில் சொல்கிறார்களோ அவர்களுக்கு அரச பட்டம் சூட்டி விடுங்கள் என்று யோசனை கூறினான். அந்த 11கேள்விகள் வருமாறு:

  1. உலகில் அதிக கசப்பானது எது?
  2. மறு உலகில் மிகவும் இனிப்பானது எது?
  3. தீமைகளில் மிகப்பெரிய தீமை எது?
  4. வானம், பூமி ஆகியவற்றi விட மிகப் பெரியது எது?
  5. உலகில் உயர்ந்த செல்வம் கொண்டு வாழ்பவன் யார்?
  6. கருங்கல்லை விட மிகக் கடினமான பொருள் எது?
  7. நெருப்பை விட மிகச் சூடானது எது?
  8. உலகில் மக்கள் அதிக உள்ள இடம் அதிகமா? குறைவாக உள்ள இடம் அதிகமா?
  9. இறப்பை விட மிகப் பயங்கரமானது எது?
  10. ஆதமின் மக்களை வெற்றி கொண்டது எது?
  11. உலகில் வாழ்ந்து வருபவர்களில் பெண்கள் அதிகமா?ஆண்கள் அதிகமா?

இக்கேள்விகளை தம் மக்கள் முன் கேட்டதும் அனைவரும் தயங்கி நின்றனர். நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் கீழ்வருமாறு பதில் கூறினார்கள்:

  1. உலகில் அதிகம் கசப்பானது வறுமையாகும்
  2. மறு உலகில் அதிக இனிப்பானது சுவர்க்க வாழ்வாகும்.
  3. தீமைகளில் பெரிய தீமை பிறரின் மனதை நோக வைப்பதாகும்.
  4. வானம், பூமியை விட மிகப் பெரியது நீதி தவறாமையும், உண்மை உரைப்பதுமாகும்.
  5. உலகில் உயர்ந்த செல்வம் கொண்டு வாழ்பவன் பிறரிடம் அடக்கமாக நடந்து கொள்பவனே.
  6. கருங்கல்லை விட மிகக் கடினமானது இறை மறுப்பாளனின் இதயம் ஆகும்.
  7. நெருப்பை விட மிகச் சூடானது நிராசை கொள்வதாகும்.
  8. உலகில் மக்கள் குறைவாக உள்ள இடம்தான் அதிகம். காரணம், மக்கள் மரித்து மரித்து தாங்கள் வாழ்ந்து வரும் இடத்தை காலி செய்து விடுகிறார்கள்.
  9. இறப்பை விட மிகப் பயங்கரமானது பொய் கூறுவதாகும்.
  10. ஆதமின் மக்களை வெற்றி கொண்டது அவர்களது வயிறுதான்
  11. உலகில் வாழ்ந்து வருபவர்களில் எப்பொழுதும் பெண்கள்தான் அதிகம் இருப்பார்கள்.

இப்பதிலைக் கேட்டு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்து அரசப் பட்டம் அவர்களுக்கே சூட்டினார்கள்.

ஹழ்ரத் தாவூது அலைஹிஸ்ஸாம் அவர்கள் 170 ஆம் வயதில் இவ்வுலகை நீத்ததாக வரலாறு கூறுகிறது. பைத்துல் முகத்தஸில் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

2 Comments found

User

Ershad

இது போன்ற உரையாடல்கள் மூலம் பல முஸ்லிம்கள் வரலாற்றை அறிய உதவிய உங்கள் கூற்றுக்கு மறுமை அல்லாஹ்வின் நற்கூலி வழங்குவானாக..

Reply
User

Ismath ulavi

உங்கள் தளத்தில் வரும் அனைத்தும் மிக விளக்கமாக நல்ல கருத்து உள்ளதாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது

Reply

Add Comment

Your email address will not be published.