ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
அப்துல் முத்தலிபின் மகனான ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும் வைபா எனும் செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த நண்பரும் கூட. வாலிபப் பருவத்தில் சிறந்த உடல்வாகும் வளப்பு மிகு தோற்றமும் கொண்டு விளங்கிய ஹம்ஸாரழியல்லாஹு அன்ஹுசிறந்த வாக்குச் காதுரியமும்,நேர்மையும் நிறைந்த பண்பாளராகத் திகழ்ந்தார். அண்ணலாரின் அழகிய நற்பண்புகள் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
ஹம்ஸாவின் மனைவி ஸல்மா. ஸல்மாவுக்கு மைமூனா,உம்மு ஃபதல் லுபாபா அல்-குப்ரா,அஸ்மா பின்த் உமைஸ் எனும் மூன்று சகோதரிகள். இந்தச் சகோதரிகள் நால்வரும் நபியவர்களின் குடும்பத்துடன் மண உறவின் மூலம் ஐக்கியமாகி இருந்தனர். உம்மு ஃபதல் நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸைத் திருமணம் புரிந்திருந்தார். பிற்காலத்தில் மைமூனா நபியவர்களுக்கு மனைவியாக அமைந்தார். அஸ்மா பின்த் உமைஸ்,ஜஅஃபர் பின் அபீதாலிபை மணந்திருந்தார். ஹம்ஸா-ஸல்மா தம்பதியருக்கு உமாரா என்றொரு மகள்.
கஅபாவுக்கு அண்மையில் உள்ள ஸபா குன்று அருகே நபியவர்கள் தனியாக இருப்பதை அபூஜஹ்லு கண்டான். நபியவர்களை நெருங்கி அவர்களையும்,இஸ்லாத்தையும்,நபியவர்களின் பிரச்சாரத்தையும் கன்னாபின்னாவென்று ஏக வசனத்தில் திட்டித்தீர்க்க ஆரம்பித்தான். வகை தொகையில்லாத ஏசல். அதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஆத்திரப்படாமல் அமைதியாக நின்றிருந்தார்கள் நபியவர்கள். ‘இப்படியெல்லாம் ஏசினால்,திட்டினால்கூட அடங்கமாட்டார் இந்த முஹம்மது’ என்று நினைத்தவன் நபியவர்கள்மீது ‘கை வைத்தான்’. கல் ஒன்றை எடுத்து நபியவர்களின் தலைமீது தாக்க பெருமானார் முகத்தில் உதிரம் வழிந்தது.
இந்த அக்கிரமம் அனைத்தையும் ஒரு ஜோடிக் கண்கள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன.
சில நாள் கழித்துத் தம் வேட்டைப் பயணம் முடித்து மக்கா திரும்பினார் ஹம்ஸா. நகருக்குள் வந்துகொண்டிருந்த அவரை ஒரு பெண் இடைமறித்தார்.
ஒரு வீட்டின் பணிப்பெண் அவர். நபியவர்களுக்கு அபூஜஹ்லு புரிந்த அட்டூழியம் முழுவதையும் அன்று சன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவர் அவர். ஹம்ஸாவிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்; கண்ணால் கண்டதைச் சாட்சி பகர்ந்தார்.
அவ்வளவுதான். பிறந்தது தீப்பொறி!
விறுவிறுவென்று கஅபாவை நோக்கிச் சென்றார். அங்கு அபூஜஹ்லு தன் ‘ஜமா’வுடன் அமர்ந்திருந்தான். நேரே அவனை நோக்கிச் சென்றவர்,ஆத்திரம் அனைத்தையும் திரட்டி தம் கையில் இருந்த அம்பால் அவன் தலையில் ஒரே போடு. அவனது முன்நெற்றியில் பெரும்கோடு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. மக்களின் பேச்சரவம் நின்றுபோய் அனைவரும் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தார்கள்.
சுதாரித்துக்கொண்ட அபூஜஹ்லின் சகாக்கள் விரைந்து எழுந்திருக்க,அவன் தடுத்தான். ‘அபூஉமாராவை ஒன்றும் செய்யாதீர்கள். நான்தான் அவருடைய அண்ணன் மகனைக் கேவலமாய்ப் பேசினேன்; தாக்கினேன்.’
‘அவர் அறிவித்த மார்க்கத்தை நான் பின்பற்றுபவனாய் இருக்க நீ அவரை ஏசுவாயா? அவர் சொல்வதையே நானும் சொல்கிறேன். உன்னால் முடிந்ததைச் செய்துகொள்.’
அன்றுவரை,அந்த நொடிவரை ஹம்ஸாவின் மனத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை. அபூஜஹ்லை அடித்துவிட்டு,ஓர் ஆத்திரத்தில்தான் அதைச் சொன்னாரே தவிர,ஹம்ஸாவுக்கோ,தம் அண்ணன் மகனை,ஹாஷிம் குலத்தவரைத் தாக்கியவரைத் திருப்பித் தாக்கி பழிதீர்ப்பது மட்டுமே நோக்கம். ஆனால் நிகழ்வின் முடிவோ வேறு.
வீட்டிற்கு வந்து கை கால் கழுவி ஆசுவாசமடைந்ததும் ஆத்திரத்தில்,அவசரத்தில் தாம் உச்சரித்துவிட்டதை நினைத்துப் பார்த்தார் ஹம்ஸா. நிதானமடைந்து சமநிலைக்கு வந்திருந்த மனம் நிறைய யோசித்தது. ‘முஹம்மது என்னதான் சொல்கிறார்? எதற்காக இப்படிக் கச்சைக்கட்டி இவர்கள் எதிர்க்கிறார்கள்? யார் பக்கம் உண்மை?’ அம்பு,வில் அனைத்தையும் எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஹம்ஸா. ‘என்னதான் உங்கள் செய்தி? விபரமாகச் சொல்லுங்கள்.’ கேட்கக் கேட்க மனம் உண்மை உணர்ந்தது. தெளிவு பிறந்தது. இவ்விஷயத்தில் ‘ஆத்திரத்தில் புத்தி மட்டுப்படவில்லை’; உச்சரித்தது எதுவும் தவறாகிவிடவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் அருகிலேயே இருந்த இந்த உண்மையை,முழுக்க அறியாமல் போனதுதான் கைச்சேதம் என்று புலப்பட்டது. உளச்சுத்தியுடன் ஏகத்துவ சத்தியத்தை உரத்து உரைத்து எழுந்து நின்றார் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு.
ஹம்ஸாவும் பின்னர் உமரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் முஸ்லிம்களுக்குப் பெரும் பலம் கிடைத்ததைப் போலாகிவிட்டது. ஏனெனில் இருவரின் வீரமும் தீரமும் மக்கத்து மக்கள் நன்கு அறிந்திருந்தவை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு அந்த இருவர் மீதும் மதிப்பும்,மரியாதையும் மட்டுமில்லாது மறைமுகமான பயமும்கூட இருந்து வந்தது. எனவே இந்த இருவரும் இஸ்லாத்திற்குள் நுழைந்தது இஸ்லாமிய வரலாற்றின் மக்கா அத்தியாயங்களில் முக்கியமான திருப்புமுனை நிகழ்வுகளாக அமைந்தது,
நபிகளாரின் பக்கபலமாகயிருந்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைப்பதில் வரும் இடர்களை துச்சமென மதித்து துயரேதுமின்றி துணிந்து செயல்பட்ட தீரர்களில் ஹம்ஸா(ரழி)அவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அஸதுல்லா-அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெயருக்கும் சொந்தக்காரர் இவர் காலம் மாறியது. காட்சிகள் மாறின. இறுதியில் முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
அதற்கு அடுத்த ஆண்டு நபியவர்கள் தாமே தலைமையேற்று 70 முஹாஜிர்களுடன் குரைஷிகளின் கூட்டம் ஒன்றை இடைமறிக்கச் சென்றார்கள். இப்போரிலும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு பங்கேற்றிருந்தார். படை அணிக்கு வெள்ளைக் கொடி நிர்ணயிக்கப்பட்டு அதை ஏந்தும் பொறுப்பு ஹம்ஸாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பிலும் போர் நிகழவில்லை. இவ்வாறான சிறுசிறு வழிமறிப்புகளைத் தொடர்ந்து அமைந்ததுதான் பத்ருப் போர்.
நபிகளார் மதீனத்துக்கு ஹிஜ்ரத் செய்தபின் நிகழ்ந்த பத்ருப் போரில் பங்கேற்று (ஹஜ்ரி 2ம் ஆண்டு) முஸ்லீம்களின் வெற்றிக்காக முனைந்து பேரிட்டு வெற்றிக் கனியைச் சுவைப்பதில் ஹம்ஸாரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஆற்றிய பங்கு நினைவு கூறதக்கது. அன்றைய அராபியர்களின் போர் வழக்கப்படி முதலில் தனித் தனியாக போராடும் முறையில் அண்ணல் நபிகளால் நியமிக்கப்பட்ட மூவர் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலி(ரழியல்லாஹு அன்ஹு), அபூஉபைதா ரழியல்லாஹு அன்ஹுஆகியோராவர். உத்பா,ஸைபா,வலீத் ஆகியோர் நிராகரிப்போரால் நிறுத்தப் பட்டவர்கள் இத்தனிப் போரில் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு. அவர்கள் உத்பாவை வீழ்த்தி வெற்றியின் ஆரம்ப நிலையை இஸ்லாத்துக்கு துவக்கி வைத்தார்கள்.
உஹதுப் போரின் ஆரம்ப நிலை இஸ்லாமியர்களின் பக்கம் சாதகமாகத்தான் இருந்தது. குறைஷியர்கள் விட்டு விட்டு ஓடிய போரின் கனீமத் -போர்ப் பொருட்களை கண்ணுற்ற முஸ்லீம் வீரர்கள் அண்ணலாரின் கட்டளையை மீறி அங்கிருந்து இடம் பெயர்ந்து அப்பொருட்களை வாரி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நிராகரிப்பாளர்கள் தருணம் பார்த்து பின்புறமாக தாக்குதல் நடத்தி பெருஞ் சேதத்தை விளைவித்தனர். ஆக ஆரம்பத்தில் வெற்றியடைந்த முஸ்லிம்கள் நபிகளாரின் கட்டளையை சிலர் புறக்கணித்ததால் இறுதியில் பெரும்பாதிப்பைச் சந்திக்கின்றனர். சிலர் செய்த தவறின் விளைவால் 70 நபித்தோழர்கள் ஷஹீதாக்கப்படுவதுடன் நபி அவர்களும் காயப்படுத்தப்படுகிறார்கள்.
போர்களத்தில் ஹின்தா ஹம்ஸா(ரழி)யைக் கொல்வதற்கு உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹம்ஸாரழியல்லாஹு அன்ஹுவேறு ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் போது வஹ்ஷீ வீசிய ஈட்டி ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் இடுப்பில் நுழைந்து கால்கள் வழியாக வெளியேறியது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்த நிலையில் எதிரிகளால் தாக்கப்பட்டுத் தம் இன்னுயிரை நீத்தார் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு.
அவர்களின் உடலை சின்னாபின்னப் படுத்தி உடலை கூறு போடுகின்றனர் நிராகரிப்பாளர்கள். அவரின் ஈரக்குலையை பல்லினால் கடித்து துப்புகிறாள் ஹிந்தா. போர் முடிந்து ஷஹீதான சகாபாக்களின் உடல்களை சேகரித்து கபனிட்டு அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணலாருக்கு ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு)யின் சிதைக்கப்பட்ட உடலைக் கண்டதும் நான் இது போன்ற வேதனை இதுவரையில் அனுபவிக்கவில்லை என சோகத்தினால் கண்ணீர் வடிக்கிறார்.
மக்கா வெற்றிக்குப் பின் ஹிந்தாவும் வஹ்ஸியும் இஸ்லாத்தை தழுவி விடுகின்றனர். இருப்பினும் நீங்கள் என் கண்முன் தோன்ற வேண்டாம் என அவர்களை மன்னித்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். நபிகளார்.