இமாம் அபூதாவூத் ரழியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு உண்மையான ஹதீதுத் தொகுப்புகளில் ஒன்றான ஸுனனெ அபூதாவூத் என்னும் ஹதீஸ்களைத் தொகுத்து மார்க்கத்திற்குப் பெரும் தொண்டாற்றிய இவர்களின் இயற்பெயர் சுலைமான் பின் அஷ்அஸ். குறிப்புப் பெயர் அபூதாவூத் . பஸராவைச் சார்ந்த ஒரு இடமான சஜஸ்தான் என்ற ஊரிலே ஹிஜ்ரீ 202வது வருடத்தில் பிறந்தார்கள். ஆகயால் தான் மக்கள் மத்தியில் ‘அபூதாவூத் சஜஸ்தானீ’ என்று பிரபலமாகியுள்ளார்கள்.
இமாம் அபூதாவூத் வாழ்ந்த காலம் அறிஞர்கள் நிறைந்த காலம். இத்துடன் அவர்கள் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார்கள். இக்காலச் சூழ்நிலை அபூதாவூத் கல்வி கற்க மிக ஏதுவாக இருந்தமையால் சிறு வயதிலேயே ஹதீஸ் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அரும்பெரும் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்கள்.
தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார்கள். ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், ஜஸீரா,ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள்.
இமாம் திர்மிதி, நஸயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா,இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர் இவர்களின் மாணவர்களாவர்.
இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன்,முஹம்மத் பின் பஷ்ஷார், சுலைமான் பின் ஹர்ப் மற்றும் பலரிடம் கல்வி கற்றிருக்கிறார்கள்.
சுமார் 5 இலட்சம் ஹதீதுகளைத் திரட்டி அவற்றிலிருந்து 4,800 ஹதீதுகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கி அதற்கு ‘ஸுனனெ அபூதாவூத்’ எனப் பெயரிட்டார்கள்.
ஒரு மனிதன் நேரிய இஸ்லாமிய வாழ்வை வாழ்வதற்கு பின்வரும் 4 நபிமொழிகளே போதுமானவை என்று இவர்கள் கூறினர்.
அவை 1. செயல்களெல்லாம் எண்ணத்தைப் பொறுத்து அமைந்துள்ளன. 2. ஒரு நல்ல முஸ்லிமுக்கு அடையாளம் அவன் சம்பந்தப்படாதவற்றில் தலையிடாமல் இருப்பதாகும். 3. இறைநம்பிக்கையான் தனக்கு விரும்புவதைத் தன் சகோதரனுக்கும் விரும்பபாதவரை அவன் உண்மையான இறை நம்பிக்கையாளன் ஆகமாட்டான். 4. அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததும் தெளிவாகவே உள்ளன. அவற்றில் ஐயத்திற்கு உள்ளவற்றை தவிர்த்து கொள்பவன் தன் கௌரவத்தையும், மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொண்டான்’ என்பவைகளாகும்.
இவர்கள் ஹதீதுத்தொகுப்பைத் தவிர்த்து பின்வரும் நூல்களையும் இயற்றியுள்ளார்கள். அவை: 1. மராஸீல் 2. அர்ரத்து அலல் கத்ரிய்யா 3. அன்னாஸிக் வல் மன்ஸூக் 4. மாதபர்ரத பிஹி அஹ்லுல் அம்ஸார் 5. ஃபளாயிலுல் அம்ஸார் 6. முஸ்னது மாலிக் 7. அல் மஸாயில் 8. மஃரிபத்துல் அவ்காத் 9. கிதாப் பத்ஹுல் வஹ்யி
சிறிதளவு உணவையே உண்டு, அல்லாஹ்வுக்கு அதிகம் பயந்தவர்களாகவும், ஆடம்பரத்தை வெறுத்தவர்களாகவும் நபிகளாரின் சுன்னத்தை பின்பற்றுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.
இவர்கள் ஹதீதுகலையில் மட்டுமின்றி ஃபிக்ஹிலும் சிறந்து விளங்கினர். தம்முடைய ஹதீது தொகுப்பின் அத்தியாயங்களை பிக்ஹுக்கு ஏற்றவண்ணம் அமைத்தனர். ஸஹீஹுஸ் ஸித்தாவில் இவர்களது தொகுப்பே பிக்ஹு சட்டங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
‘இமாம் அபூதாவூதின் ஹதீதுத் தொகுப்பே நான்கு இமாம்களின் பிக்ஹுகளுக்கெல்லாம் ஆதாரமான கருவூலம்’ என்று இமாம் கத்தாபி அவர்கள் புகழ்கிறார்கள்.
இவர்கள் ஷாபி மத்ஹபை பின்பற்றினார்கள் என்று சிலரும், ஹன்பலி மத்ஹபை பின்பற்றினார்கள் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள். இவர்கள் ‘முஜ்தஹித்’ என்று ஷாவலியுல்லாஹ் கூறுகிறார்கள்.
இவர்களது மகன் அபூபக்கரும் ஒரு முஹத்திஸாகவும் ஒரு இலட்சம் ஹதீதுகளை மனனம் செய்த ஹாபிளாகவும் விளங்கினார்.
தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை பக்தாதில் கழித்த இவர்கள் இறுதி நான்கு ஆண்டுகளை பஸராவில் கழித்து எழுபத்து மூன்று வயது நிறைவுற்றவராக ஹிஜ்ரீ 275 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 16 – ம் நாள் வெள்ளிக்கிழமையன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.