அஸ்மா பின்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா
By Sufi Manzil
மதீனாவில்அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்தஅப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன்.முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை மகள் இவர்.
இக்குலத்தின்பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு. ஸஅதின்தாயார் பெயர் கப்ஷா பின்த் ரஃபீஉ. இந்த இரண்டு பெண்மணிகளும் முக்கியமானஇரு தோழர்களுக்கு நெருங்கிய உறவு என்பதை அறிந்து கொள்ளவே இந்த உறவுமுறைவிளக்கம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம்சத்தியப் பிரமாணம் அளி்த்த முதல் இரு அன்ஸாரிப் பெண்கள் இவர்கள்.ரலியல்லாஹு அன்ஹுமா.
இவர்களின் பட்டப் பெயர் உம்மு சல்மா என்பதாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தவுடன் இவர்கள் பெண்கள் குழுவுடன் வந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இல்லறம் நடத்த அவர்களின் இல்லத்திற்கு முதன்முதலாக வந்தபோது அவருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
பெருமானாரிடம் உறுதிப் பிரமாணம் செய்யக் கையை நீட்டுமாறு வேண்ட, ‘நான் எனக்குரியவர் அல்லாத அன்னியப் பெண்ணின் கரத்தை தொடமாட்டேன்’ என்று பெருமானார் அவர்கள் சொன்னார்கள். இதன்பின் ஒரு சட்டியில் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதில் தம் கரங்களை முக்கி எடுத்து பெண்களையும் அவ்விதமே செய்யுமாறு கூறி, இது தம் கரம்பற்றி உறுதிப்பிரமாணம் செய்தது போலாகும் என்று அண்ணலார் கூறினார்கள்.
அஸ்மாவிடம் சிறப்பொன்று அமைந்திருந்தது.தெளிவாகவும் அருமையாகவும் பேசும் நாவன்மை. அதற்கான சான்றிதழ்நபியவர்களிடமிருந்தே கிடைத்தது அவருக்கு.
ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத்.
“அல்லாஹ்வின்தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும்அவர்களது கருத்தே என் கருத்தும்கூட. ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாக அல்லாஹ் தங்களை அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்களிடம்நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு தாம்பத்யசுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள்ஜிஹாதுக்குச் சென்றுவிடும்போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப்பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.
ஆண்களுக்கோகூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும்ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா?”
தெளிவான, அழகான, நேர்மையான, சுருக்கமான உரை அது.வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா?”
“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.”
“அஸ்மா!உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும்அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீவிவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.”
இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா.
ஏறத்தாழ நபியவர்களின் 81 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
“நபியவர்களின்ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்தபொழுதுஅவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவுஇருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளுஏற்பட்டுப்போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா.
நபியவர்களுடன்பலமுறை போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அவர். மக்காவிற்கு நபியவர்கள்உம்ரா சென்றபோது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர்.
ஹுதைபியாஉடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரலியல்லாஹு அன்ஹுகொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக்கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்துகொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவர் அஸ்மா.
இப்படி அவரதுஇயல்பிலும் உதிரத்திலும் வீரம் கலந்திருந்ததால் யர்மூக் போரின்போதுகளத்திற்குச் சென்றிருந்தார் அஸ்மா. இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோமவீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்கநாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் கொன்றுவிட்டுத்தான் ஓய்ந்தார். சிலிர்க்கவைக்கும் வீரம் அவருடையது.
இந்தப்போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயேதங்கிவிட்டார் அஸ்மா. பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத்தருவதுஅவரது தலையாய பணியாகிப்போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயதுவரைவாழ்ந்திருந்தார்.
ஹிஜ்ரீ 69ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது.டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ‘பாபுஸ்ஸகீர்’ என்னும் அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அஸ்மா பின்த் யஸீத்.