ஜியாரத்து, கொட்டு போன்ற வாத்தியக் கருவிகள் பற்றி உலமாக்களின் தீர்ப்பு
By Sufi Manzil
கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்கமேதையும் பிரபலமான பல உலமாக்களின் ஆசிரியப் பெருமகனாரும், காயல்பட்டினத்தின் முக்கியமான ஓர் ஆலிமுக்கு கல்வி போதித்தவர்களும், காயல்பட்டண ஆலிம்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுமான மௌலானா அஹ்மது கோயா ஷாலியாத்தீ அவர்களால் வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பு:
மேன்மைமிக்க உலமாக்களே! உங்களுடைய அறிவு சுடர் கொண்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹுத்தஆலா நற்பயனளித்து உங்களது மகிமையை என்றும் நிலைபாடாக்குவானாக.
கீழ்க்கண்ட விசயங்களை விபரமாக விளக்கிக் கூறுவீர்களாக. சிறப்புமிக்க அல்லாஹுத்தஆலா இதற்காக தங்களுக்கு நற்கூலியைப் பெருமிதமாகத் தந்தருள்வானாக.
வினாக்கள்:
1. ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒளலியாக்களுடைய கப்ருகளை ஜியாரத்துச் செய்யும் விசயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன?
மேலும் இத்தகைய குற்றங்கள் உண்டாயிருக்கும் நிலைமையில் அந்த ஜியாரத்தைத் தடை செய்யலாம் என்பது பற்றி அல்லாமா ஷைகு இப்னு ஹஜர் அவர்களுடைய பத்வாக்களில் காணப்படுகிறதா?
2. ஷைகுமார்கள் ஒளலியாக்கள் முதலானோரின் உரூஸ்களை நடத்துவதற்கு ஷரஉவில் கவனிக்கப்படக்கூடிய மூலாதாரம் இருக்கிறதா?
3. கொட்டு வகையறாக்கள் அடிப்பதும், வாத்தியக் கருவிகள் வாசிப்பதும் ஆகுமா?
4. மேலே குறிப்பிட்ட மகான்களின் ஜியாரத் ஸ்தலங்களில் பிரஸ்தாபப்படுத்துவதற்காக கொடிகள் நாட்டலாமா?
இப்படிக்கு,
N.அஹ்மது ஹாஜி
விடைகள்:
ஜியாரத்:
கப்ருகளை ஜியாரத் செய்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தாகும். குற்றமான கருமங்களும், விலக்கலான விஷயங்களும் நடைபெறுகின்றன என்பதற்காக ஜியாரத் விடப்படமாட்டாது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய ஹுக்மு உண்டு.
கருமங்கள் அவற்றின் நாட்டமென்ற இலட்சியங்களைக் கொண்டதாயிருக்கின்றன. ஆகவே நாடுகிற நாட்டத்தின் அசல் சரியாயிருந்தால் எத்தகைய இடையூறும் தீங்கிழைக்க இயலாது. அல்லாமா இப்னு ஹஜர் ஹைத்தமி அவர்களுடைய பத்வாவில் கண்ட விடையின் விளக்கம் வருமாறு:-
குறிப்பிட்ட அத்தினம் விலக்கலான காரியங்களை விட்டும் நீங்கினதாய் அந்நாள் முழுதுமிருக்கலாம். இது ஒரு சூரத்து –வகை. இந்நிலைமையில் ஜியாரத்துடைய சட்டத்தை விளக்கி கூறுவது தேவையில்லை. தெளிவாக இருக்கிறது.
அத்தினம் முழுவதும் விலக்கலான கருமங்களைக் கொண்டதாகயிருக்கலாம். இது இரண்;டாவது சூரத்து- இந்நிலையில் ஜியாரத்துடைய ஹுகும் ஆகிறது.
ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து நிற்பதை விட்டும் அகல்வதும் அந்த ஆகாத கருமங்களை வெறுப்பதும் தனக்கு சாத்தியமானமட்டில் அவற்றை நீக்கித் தனது அமலைச் செய்வதுமாகும்.
அத்தினம் சிலவேளை விலக்கலான கருமங்களை விட்டும் தீங்கானதாயும் சிலவேளை விலக்கலான கருமங்களை கொண்டதாயும் இருக்கலாம். இது மூன்றாவது சூரத்து – இந்நிலைமையில் ஜியாரத்துடைய ஹுகும் இருவிதமாகும்.
விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கின வேளையில் ஜியாரத்து செய்வது மேலாகும். விலக்கலான கருமங்களைக் கொண்டதாயுள்ள வேளையில் ஜியாரத்துச் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.
இவ்விருவிதத்துள் முந்தியது மேலே கூறப்பட்ட மூன்றுவகை கூ10ரத்துகளில் முதலாவது சூரத்தை சேர்ந்து பிந்தியது இரண்டாவது சூரத்தைச் சேர்ந்தது.
ஆகையால் ஜியாரத்துச் செய்பவன் ஆண், பெண் கலந்து நிற்பதை விட்டு விலகுவதிலும் ஆகாத கருமங்களை வெறுத்து தன்னாலியன்ற மட்டில் அவற்றை விலக்கி நீக்குவதிலும் பேணுதலோடு நடந்துகொள்வான். சட்டப்படி அனுமதிக்கப்பட்டதேயன்றி விலக்கப்படவில்லை. ஏனெனில் விலக்கப்பட்ட கருமங்களை விட்டும் நீங்கி இருக்கும்வேளையில் ஜியாரத்துச் செய்வது மிகவும் சிறந்த(அவ்லிய்யத்)தாகும் என இப்னு ஹஜருடைய வாசகம் தெளிவாக்குகிறது. இத்தகைய பிரிவுகளை உற்றுணராமல் ஒரேடியாய் பொதுவாக ஜியாரத்துச் செய்வது கூடாது என்று யாராகிலும் விலக்குவானேயானால் அவனுடைய சொல்லுக்கு ஒருவிதத்திலும் மதிப்புக் கிடையாது. இப்னு ஹஜர் ஹைத்தமி பத்வாவிலுள்ள விசயத்தின் கருத்து முடிந்தது.
அதுபற்றி ரத்துல் முஹ்தார் கிரந்தத்தில் அல்லாமா ஷைகு இப்னு ஆபிதீன் என்று பிரக்யாதி பெற்ற முஹம்மது அமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தின் சுருக்கம் கீழ்வருமாறு:
இப்னு ஹஜர் தனது பத்வாக்களில் கூறுகிறதாவது ஜியாரத்து செய்யப்போகும் இடத்தில் விலக்கப்பட்ட கருமங்கள் இருப்பினும் ஆணும், பெண்ணும் கலந்து நிற்பது போன்ற குற்றங்கள் நிகழ்கிறதாயிருப்பினும் நீ ஜியாரத்தை விட்டுவிட வேண்டாம். இவை போன்ற காரணங்களுக்காகப் புண்ணியமான கருமங்கள் விடப்பட மாட்டாது. ஜியாரத்துச் செய்ய வேண்டியது மானிடன் மீது பொறுப்பாகும். பித்அத்தானவற்றை வெறுக்க வேண்டும். ஆனால் இயலுமாயின் பித்அத்துக்களை நீக்க வேண்டும்.
ஆகவே இமாம் இப்னு ஹஜர் அவர்களுடைய பத்வாக்களிலிருக்கும் விசயம்யாதெனில் ஜியாரத்துச் செய்கிற ஸ்தலங்களில் விலக்கப்பட்ட கருமங்கள் நிகழக்கூடிய நேரத்தில் ஜியாரத்துச் செய்யும் விதத்தை விவரிப்பதேயன்றி அதை விலக்குவதன்று என்பதே.
உரூஸ்:
ஹாபிழ் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அவர்களது துர்ரு மன்தூர் எனும் தப்ஸீரில் ஸூரத் ரஅது 24ஆவது ஆயத்தின் அதன் பொருள்: நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகுக. (உங்களுடைய) கடைசி வீடு மிக்க நல்லதாயிற்று( என்று சொர்க்கவாதிகளை நோக்கி மலக்குகள் கூறுவார்கள் – 13:24 கீழ் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொண்டு இப்னு முன்திரும், இப்னு மர்தியாவும் ரிவாயத்துச் செய்கிறதாய் வரையப்பட்டிருப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹது மலைக்கு வந்து அங்குள்ள ஷுஹதாக்களுக்கு ஸலாம் கூறி நீங்கள் மேற்கொண்ட மேலான பொறுமையின் பொருட்டால் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) நீங்கள் பெற்ற சொர்க்க வீடே நல்ல வீடு என்றுரைப்பார்கள்.
இன்னும் மேலே கண்ட விஷயத்தையும் வரைந்து இவ்வாறே அபூபக்கர், உமர், உதுமான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியவர்களும் செய்துவந்தார்கள் என்பதாய் முஹம்மது இப்னு இபுறாஹீமைக் கொண்டு இப்னு ஜரீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ரிவாயத்துச் செய்துள்ளார்கள்.
மேலும் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அப்துல் முத்தலிப் உடைய குமாரர் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கப்ருக்கு ஒவ்வொருவருடமும் வந்து ஜியாரத்துச் செய்தார்கள் என்றும் அதைத் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தார்கள் என்றும் ரிவாயத்துச் செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோன்றே இமாம் பக்ருத்தீன் ராஜி, அபூஸுவூது, இப்னு கதீர் ஆகியவர்களுடைய தப்ஸீர்களிலும் காணப்படுகின்றன. இன்னும் பற்பல வகைகளிலும் இவற்றுக்குச் சான்றான ஹதீதுகளும் அனேகமுண்டு.
அவற்றைக் கொண்டே இமாம்கள் எல்லோரும் ஆதாரம் தேடியுள்ளார்கள். அவர்களில் நின்றுமுள்ளவர்கள்தான் அல்லாமா ஹைத்தமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹுஸ்னுத் தவஸ்ஸுல் என்ற நூலில் குறிப்பிடுவதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹதிலுள்ள ஷுஹதாக்களை ஜியாரத்துச் செய்ய வரும்போது என்ன சொல்லி பிரார்த்தித்தார்களோ அதையே அங்கு ஜியாரத்துக்கு வருபவர்களும் சொல்லி பிரார்த்திப்பார்கள்.
அல்லாமா இப்னு ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ரத்துல் முஹ்தார் கிரந்தத்தில் மனாஸிக் ஷரஹு லுபாபிலிருந்து எழுத்துக் குறிப்பிடுவதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷுஹதாக்களின் ஜியாரத்துக்காக ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத் தினத்தன்று வந்து அஸ்ஸலாமு அலைக்கும். கப்றுடையோரே உங்கள் மீது இறைவனது ஸலாம் உண்டாவதாக என்று கூறுவார்கள் என்று இப்னு அபீஷைபா ரிவாயத்துச் செய்திருப்பதின் மூலம் உஹது மலையிலுள்ள ஷுஹதாக்களை ஜியாரத்து செய்வதிருப்பதன் மூலம் உஹது மலையிலுள்ள ஷுஹதாக்களை ஜியாரத்துச் செய்வது முஸ்தஹப்பான சுன்னத்தாகிவிட்டது என்று.
அல்லாமா ஷைகு அஹ்மதுப்னு முஹம்மதுல் பாரூக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது தவ்லீகுல் ஹுதாவில் கூறப்பட்டுள்ளதாய் பத்ஹுல் ஹக்கில் காணப்படுகிறதாவது:- அல்லாஹ்வுடைய உகப்புக்குச் சொந்தமான நல்லடியார்கள், உலமாக்கள், ஷெய்குமார்கள் ஆகியோர்களுடைய கப்ருகளில் கூட்டமாகக் கூடி இருக்க நாம் கண்டிருக்கிறோம்.
அவ்வாறு அவர்கள் அங்கு கூடியிருக்கவும் காரணம் குர்ஆன் ஓதவும், பாத்திஹா ஓதவும், துஆக்கள் கேட்கவும், தீனிய்யாத்துசு; சம்பந்தமான தங்களின் கோரிக்கைகள் நிறைவேற அந்தக் கப்ராளிகளின் ரூஹுகளைக் கொண்டு உதவி தேடுவதற்கு இவ்வழிகளில் அவர்கள் பன்முறை பெரிதும் ஜெயம் பெற்று அனுபவவாயிலாய் உணர்ந்துள்ளனர்.
இக்காரணம் பற்றியே அவர்கள் அந்த கப்ராளிகளுடைய ரூஹு பிரிந்த வபாத் தினத்தன்று அங்கு திரள்திரளாகத் தீவிர அபிலாஷைக் கொண்டு ஹிம்மத்தோடு வந்து கூடிஓதுகின்றார்கள். பாத்திஹா முதலியன ஓதி உபதேசம் செய்கிறார்கள்.
சாமான்ய ஜனங்களும் தங்களுடைய தீனிய்யத்தான கோரிக்கைகளோ, துன்யாவித்தான நாட்டதேட்டங்களோ நிறைவேற அந்த கப்ராளிகளைக் கொண்டு உதவி தேடுகின்றார்கள் என்பதே மேற்கண்ட சான்றுகள் மூலம் தீனுல் இஸ்லாமில் உரூஸ் நடத்த பலமான அத்தாட்சிகள் உள்ளன என்பது தௌ;ளத் தெளிவாகிவிட்டது.
கொட்டு வகைகளும் வாத்தியங்களும்:
கொட்டு:
கூபா என்னும் உடுக்கு போன்றதைத் தவிர்த்து மற்ற கொட்டு அடிப்பது ஹலால் ஆகும் என்பதாய் இமாம் றாபிஈ இமாம் நவவி ஆகிய இரு பெரியார்களும் ஏகோபித்துக் கூறியிருக்கிறார்கள். இவ்விபரம் மின்ஹாஜ் எனும் மூல கிரந்தத்திற்கு செய்திருக்கும் விரிவுரை ஹாஷியாவில் கூறப்பட்டுள்ளது.
இமாம் ரமலி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பதாவா எனும் கிரந்தத்தில் ஷஹாதத் என்ற பகுதியில் பின்வருமாறு (வினா-விடை) சொல்லப்பட்டுள்ளது. சில பெரியார்களது, ஷெய்குமார்களது கப்ருகளில் கொட்டு வகையராக்கள் அடிக்கப்படுகின்றனவே இவ்வாறு செய்வது அனுமதிக்கப்பட்டதா? அல்லது விலக்கப்பட்டதா? அல்லது மக்ரூஹா? அவ்வாறு தடை பெறுவதை விலக்குவது கடமையா? இல்லையா? என்று வினா விடுக்கப்பட்டது.
கூபா என்னும் உடுக்கு போன்ற கொட்டைத் தவிர்த்து மற்ற கொட்டு வகையறாக்கள் யாவும் ஆகுமானவையே. கூபா என்னும் கொட்டு நீண்டிருக்கும் நடுவில் இடை சுருங்கி ஒட்டிப்போய் இருக்கும். அந்த கூபா என்னும் கொட்டு ஹறாமாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உடுக்குத் தவிர மற்ற கொட்டுகள் விலக்கல்ல. மேலே குறிப்பிட்ட கூபா என்னும் உடுக்கை விலக்குவது கடமையாகும் என்று விடையளிக்கப்பட்டுள்ளது.
வாத்தியம்:
வாத்தியக் கருவிகள் விசயத்தில் உலமாக்களிடையே பெருத்த அபிப்பிராய வேறுபாடுகள் உள்ளன. ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹு அவர்களது அபிப்பிராயத்தைப் பின்பற்றி இமாம் றாபிஃ ரஹிமஹுல்லாஹு அவர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். இந்த அபிப்பிராயத்தின் பக்கம் இமாம் புல்கீனி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் மற்றவர்களும் சார்ந்திருக்கின்றார்கள். அவ்விஷயம் கீழ்வருமாறு:-
யறாஃ எனும் ஓசைக் கருவி அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு ஷப்பாபா என்று பெயர் கூறப்படும். வாத்தியங்கள் வாசிப்பது ஹறாம் என்னும் விசயம் பற்றி சரியான ஆதாரம் காணப்படவில்லை என்று முஃனி ஷறஹுமன் ஹஜ் இத்திஹாபுஸ் ஸஆதத்தில் முத்தகீன் முதலிய கிரந்தங்களில் காணப்படுகின்றன.
யறாஃ எனும் ஓசைக்கருவி ஹராமாக்கப்பட மாட்டாது. பிற்காலத்து இமாம்களுல் இப்னுல் பர்காஹ் இஜ்ஜீப்னு அப்துஸ்ஸலாம் இப்னுதகீகில் ஈது, பத்ருப்னு ஜமாஆ ஆகியோரெல்லாம் அது ஆகும். ஜாயிஸ் எனக் கூறியுள்ளார்கள் என்பதாய் இமாம் ஜாஜிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
யராஃ என்பது துவாரமிடப்பட்ட ஓர் இசைக் கருவி. அதன் கீழ்ப்பக்கம் குழாய் ஒன்றிருக்கும். அதற்கு 'ஸயிர்' என்றும் 'பஹ்ல்' என்றும் சொல்லப்படும். மேலும்கீழுமாக இரு குழாய்களைக் கொண்டதாயிருக்கும்.
மவ்ஸூல் என்பது ஒருவகை. மின்ஹாறா என்பது மற்றொரு வகை. இக்கருவிகளைக் கொண்டு ஆடு, மாடு, ஒட்டகை மேய்ப்பவர்ககள் இசைநாதம் விளைவிப்பார்கள் என்பதாய் மேலே கூறப்பட்டுதைத் தொடர்ந்து இயம்பப்பட்டுள்ளது. ஷப்பாபா கருவிக்கு பூக் கிடையாது. அதைச் சேர்ந்ததுதான் ஸபாறா முதலிய கருவிகளும் என்று ஜலால் கிரந்தத்தின் ஹாஷியாவில் இமாம் கல்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே.
அல்லாமா இமாம் முஹம்மது கலீலி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பதாவா எனும் கிரந்தத்தில் பின்வருமாறு (வினா-விடை) கூறப்பட்டிருக்கிறது. நபிமார்கள், ஒலிமார்களை ஜியாரத்துச் செய்வதற்காகப் போகும்போது கொடிகளேந்திக் கொண்டும் தபல்பாத் எனும் கொட்டடித்துக் கொண்டும் மிஸ்ஹர் என்னும் வாத்தியம் வாசித்துக் கொண்டும் சில கூட்டத்தினர் செல்கின்றனரே இவை ஹராமா?இல்லையா? என்று வினவப்பட்டபோது அந்தவிசயம் எதுவும் விலக்கப்பட்ட கருமமல்ல என்று விடையளித்தார்கள்.
மேற்கண்ட விசயம் விரிவஞ்சி மிகச்சுருக்கமான முறையில்தான் கூறப்பட்டிருக்கிறது. முற்றுமறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. அவனுடைய அறிவே சம்பூரணமானது.
இங்ஙனம்,
அல் பகீர் லிமவ்லாஹுல் கதீர்
ஷிஹாபுத்தீன் அஹ்மது ஷாலியாத் (மலபார்)
ஹிஜ்ரி 17-8-1371
நன்றி: ஜமாத்துல் அவ்வல் 1398 (ஈஸவி மே, 1978) ஹுஜ்ஜத் மாதஇதழ்.