ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன?

ரூஹு, ஆன்மா, நப்சு, கல்பு என்றால் என்ன?

By Sufi Manzil 0 Comment July 26, 2012

اَعْدٰى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ

உன்னுடைய விரோதிகளில் மிகப் பெரிய விரோதி உன் இரு விலாக்களுக்கு இடையில் உள்ள நஃப்ஸாகும்' என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது.

تَوَقَّ نَفْسَكَ لَاتَأَمَنْ غَوَآئِلَهَا     فَالنَّفْسُ اَخْبَثُ مِنْ سَبْعِيْنَ شَيْطَانًا

இமாமுனா கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள், உன்னுடைய நஃப்ஸை நீ கவனித்துக் கொண்டே இரு. அதன் மோசடிகளை விட்டும் அச்சமற்று இருந்து விடாதே. ஏனெனில், நஃப்ஸாகிறது எழுபது ஷைத்தான்களை விட மிக கெட்டதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒரு தடவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போருக்கு போய் விட்டு திரும்பி வந்த போது,

رَجَعْنَا مِنَ الْجِهَادِالْاَصْغرِ اِلَى الْجِهَادِ الْاَكْبَرِ

'நாம் சிறிய போரிலிருந்து பெரிய போருக்கு திரும்பியுள்ளோம்' என்று கூறினார்கள். மனிதன் எப்போதும் தன் நஃப்ஸுடன் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் பால் நெருங்குகின்ற பாதையில் நடப்பதற்கு 'ஸுலூக்' என்று கூறப்படும். அல்லாஹுதஆலா மனிதனை நஃப்ஸெ குல்லு என்பதிலிருந்து படைத்ததால் மனிதனுடைய ஏழு தன்மைகளுடைய அளவுக்கு அவனுக்கு ஏழு நஃப்ஸுகள் உள்ளன.

இந்த நஃப்ஸுகளை அறிவதற்கு முதலில் அல்லாஹ் நம்மை படைத்த விதத்தை அறிவது அவசியமாகிறது.

மனிதன் படைக்கப்பட்ட விதம்:

அல்லாஹ் மனிதனை படைத்து அதன் உடலை சமமாக்கிய போது தாத்தின் தேட்டத்தை அனுசரித்து அதனுள் ரூஹை ஊதினான்.  ரூஹுக்கும,; உடலுக்கும் உஜூதுடன் ஒரே தொடர்புதான் உண்டு. இவை இரண்டும் (ரூஹு, காலபு) உஜூதின் ஐனே ஆகும். உஜூது இவை இரண்டினதும் ஐன் ஆகும். அல்லாஹுத்தஆலா சொல்லுகிறான்

انما امرنا لشيئي اذاردناه ان تقول له كن فيكون(நாங்கள் ஒரு வஸ்த்துவுக்கு எங்களுடைய ஏவல் என்பது  நாம் அதை குன் என்ற சொல்லை நாடுவோமேயானால் அது உண்டாகிவிடும்.)

அதாவது ஏவல் – அம்று என்னும் அல்லாஹ்வின் நாட்டத்தின் குணபாட்டினால் உருவானதுதான் றூஹு மற்றும் காலபு என்னும் உடல். ஹக்கான ஒருவனான வாஹிதான உஜூது உடலை சமப்படுத்தி அதில் வெளியான பின் உடலின் உள்ளிருந்து றூஹு எனும் கோலத்தில் வெளியானது. அந்த றூஹை இன்சானின் மறைவான பகுதி என்று அதை ஆக்கினான். ஆகவே இன்சான் என்பவன் இரண்டு கோலங்களால் சேர்க்கப்பட்டவன் ஆகும்.

1.பாதினான றூஹிய்யான கோலம்.
2.காலபிய்யான வெளிரங்கமான கோலம்.

இவ்விரண்டு கோலங்களைக் கொண்டும் சேர்க்கப்பட்டவனே இன்சான் ஆகும். காலபிய்யா-உடல் எனும் கோலம் ஆகிறது அது பேதகமாகவும் செய்யும், மாறுபடவும் செய்யும், அழியவும் செய்யும், பனாவாகவும் செய்யும். றூஹிய்யா என்னும் கோலமாகிறது அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது பேதகமாவதை விட்டும,; மாறுவதை விட்டும் அழிவதை விட்டும், நீங்குவதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அது நீடூடி காலம் நிற்கின்றதுமாகும். ஆனால் அஸல்லியத்து அல்லாத்ததது ஆகும். அது காலபை படைத்ததன் பிறகு படைக்கப்பட்டது ஆகும். சூக்குமம் என்பது இதுதான் என்று ஞானிகள் கூறுகின்றனர்.

முதல் உண்டாகுதல் ஆகிறது அது அழிவது கொண்டு ஹுக்மு செய்தோம் என்றாலும் அதற்கு ஹகீகத்தில் அழிவில்லை என்றாலும் அதனுடைய தாத்தில் மறைந்திருக்கும் மர்த்தபா எனும் அஸ்லுக்கு திரும்பி விடும். திரும்புதலாகிறது இணைப்புகள் உருக்குலைந்ததன்; பின்னர் அதன் பாகங்களிலுள்ள ஒவ்வொரு கோலமும் அதன் உள்ளமைக்கு திரும்பி விடுதல் ஆகும். அந்த உள்ளமையாகிறது ஹக்கான ஒருவனான தாத்தாகும்.

உதாரணமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஹிய்யத்தின் கோலத்திலும் அவர் அல்லாத்தவர் கோலத்திலும் கோலமெடுத்து வந்த பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்களின் றூஹானிய்யத்தான கோலம் அசலுக்கு திரும்பியது போல.

அவனுடைய மற்ற உண்டாகுதல் என்னும் பாகமாகிறது அது பாக்கியானதாகவும், நிரந்தரமானதாகவும் ஆகிவிட்டது. ஒருக்காலமும் அது அழியாது.

இந்த றூஹு எனும் கோலமாகிறது உன்னுடைய காலபுக்கு ஒப்பானதாகும். அதன் பேரில் ஒவ்வொரு அணுஅணுவாக அச்சாக்கப்பட்டதாகும். காலபானது – அதனுடைய எல்லா பகுதிகளைக் கொண்டும,; றூஹானது – அதனுடைய எல்லா ஆதாறுகள், அஹ்காமுகளைக் கொண்டும் ஹக்கான ஒருவனான உஜூதுக்கு வேறானதல்ல. (லாயிலாஹ இல்லல்லாஹு)

இந்த உஜூது றூஹு எனும் கோலத்தின் பேரில் தோற்றமளித்ததன்-தஜல்லியானதன் பிறகு அதனுடைய அஹ்காமுகள், ஆதாறுகள் எனும் கோலத்தில் வெளியாயிற்று.

நீ இந்த றூஹுதான் உடலை இயக்குகிறது என்று எண்ணிவிடாதே. உசும்புதல், உசுப்பப் படுதல் எல்லாம் சுயமான றூஹைக் கொண்டுதான் என்று எண்ணி விடாதே. ஆனால் இவை அனைத்தும் உஜூதின் தஜல்லியாத்துக்கள் – வெளிப்பாடுகள்; ஆகும்.

இவை அனைத்தும் றூஹின் குணபாடு என்று பெயர் சொல்லப்படும். உசும்புதல் எனும் கோலத்தின் பேரில் தஜல்லியான பிறகு ஹக்குடைய உஜூது வெளிப் புலன்கள் எனும் கோலத்தில் வெளியாயிற்று. றூஹாகிறது ஒரு வெளிப்பாட்டிற்கு கண்ணாடியாகும்.

இரண்டு வகையான றூஹுகள்:

றூஹாகிறது இந்த வர்ணிப்புகளைக் கொண்டு வர்ணிப்புப் பெறுவதைக் கொண்டும் அது சரீரத்தில் அதிகாரம் செய்வது கொண்டும் அதற்கு ஹயவானியத்தான றூஹு என்றும் சொல்லப்படும். இதற்கு நப்சு என்றும் பெயர் சொல்லப்படும். இந்த ரூஹு நமது சரீரத்தை அடுத்திருக்கும் வரைக்கும் நப்ஸு என்றும், நப்ஸுன் நாத்திகா என்றும் சொல்லப்படும். அந்த நப்ஸுதான் 'நீ'.

நப்ஸு இன்ஸானிய்யா என்ற கல்புக்கு மிகுந்த மாட்சிமைகளுண்டு. அது துவக்கத்திலான ஒளியாக இருக்கும். அல்லாஹுதஆலாவை காணுவதற்கு இன்ஸான் அளவில் இறக்கி வைத்த சிர்ராகும். அதேபோல் ஷைத்தானுடைய ரூஹாகிறது நெருப்பாகும். ஆடு, மாடு, ஒட்டகம், பறவை முதலானவைகளின் ரூஹு காற்றாயிருக்கும்.

அல்லாஹு ஆதமைப் படைத்து சொன்னான்:
பனபக்து பீஹி மின்ரூஹி

'ஆதமுடைய' உடலில் என்னுடைய பரிசுத்த ஆவியை ஊதி விட்டேன் என்று சொன்ன ரூஹாயிருக்கும் என்றும், இன்னும் அந்த கல்பாகிறது, அல்லாஹுதஆலாவுடைய அர்ஷாகுமென்றும் இன்னும் அல்லாஹு தஆலா அதில் பிரசன்னமாயிருக்கிறான் என்றும், அந்த கல்பாகிறது உஜூதுடைய உள்ளமையைப் பார்க்கின்ற கண்ணாடி போலென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்கூறப்பட்ட ஆயத்தால் ஊதப்பட்ட ரூஹு ஒன்றும், ஊதப்படாத ரூஹு ஒன்றும் இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஊதப்படாத ரூஹாகிறது நுட்பமான ஆவி என்னும் ரூஹுல் ஹைவானியாயிருக்கும். இந்த ரூஹாகிறது எல்லா உயிர் பிராணிகளுக்கும் பொதுவாயுள்ளது. ஊதப்பட்ட ரூஹாகிறது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.

இந்த ரூஹு இன்ஸானுக்கே சொந்தம். இந்த ரூஹு பாகத்தை ஏற்காது. ஆதலால் கண்டிப்பில்லை. அல்லாஹ்வுடைய மஃரிபா இதில் இலங்குகிறது. எந்த ஒன்று பாகத்தை ஏற்காததாய் இருக்கிறதோ அதில்தான் மஃரிபா உண்டா
கும். ஆகவே நீ என்பதற்குப் பொருள் கையுமல்ல, காலுமல்ல, வயிறுமல்ல, மனம், புத்தி, சித்தம், அகங்காரமுமல்ல, உன் ஜீவாத்மாவுமல்ல. நீ என்பது நுட்பமான பரிசுத்த ஆவியென்னும் ரூஹுல் இன்ஸானியாயிருக்கும்.

ரூஹு ஹையவானி:

கீழுலகத்தைச் சேர்ந்த இந்த ரூஹானாது அக்லாத் எனும் (வாதம், பித்தம், சிலேத்துமம், கரும்பித்தம் ஆகியவை) ஒரு நுட்பமான ஆவியால் உண்டானது. இந்த நான்குக்கும் நீர், நெருப்பு, நிலம், காற்று இவைகளே மூலமாகும். ரூஹு ஹையவானியின் சுபாவம் பேதப்படுவதும் சரியாயிருப்பதும் உஷ்ணம், சீதம், கொழுமை, வறளை இவைகளின் கூடுதல் குறைவால் ஏற்படுவதாகும். இதை சரிப்படுத்துவதற்கே வைத்திய முறைகள் தோன்றியது.

ரூஹு இன்சானியாகிறது சரீரத்தில் ஆட்சி செய்வதெல்லாம் ரூஹு ஹையவானியின் உதவி கொண்டுதான். ரூஹு ஹையவானி என்பது கல்பு ஜிஸ்மானியான இருதய கமலத்தின் உஷ்ணத்தினால் பக்குவத்தை அடைவதும் துடி நரம்புகளின் வழியால் எல்லா உறுப்புகளிலும் பரவி சரீரத்திற்கு ஹயாத்தைக் கொடுப்பதுமான நுண்ணிய ஒரு ஆவியாக இருக்கும். ரூஹு ஹயவானி என்பது சரீரத்துக்குள் நடப்பதும், அதற்கு ஹயாத்தைக் கொடுப்பதும் எதைப்போல் என்றால், எரிகிற விளக்கை வீட்டின் பல பக்கங்களிலும், காட்டினால் அப்போது அவ்வீட்டின் பல பக்கங்களிலும் வெளிச்சம் பரவுகின்றதைப் போன்றதாகும். ஆகவே ரூஹு ஹயவானியாகிறது விளக்கின் சுடர் போலவும் ஹயாத்து அச்சுடரின் வெளிச்சம் போலுமாகும்.

இந்த சக்திகள் திரும்பி விடுமேயானால், றூஹுக்கு சிபத்தான, குணபாடான உடம்பிலுள்ள உசும்புதலுக்கு காரணமான ஹயாத்து எனும் சக்தி வெளியிலிருந்து உள்ளபக்கம் திரும்பிவிடுமேயானால் (அதாவது செயலிலிருந்து அதன் தன்மைக்கு திரும்புதல் எனும் தஜல்லியைக் கொண்டு திரும்பி விடுமேயானால்) ஹயாத்து எனும் சக்தி திரும்பிவிடுவது கொண்டு அந்த சரீரம் மைய்யித்தாக ஆகிவிடும்.

இந்த ரூஹுன் நாதிகா என்னும் ரூஹுல் இன்ஸானை ரூஹுல் அஃளமென்றும், இதுபேர் உலகமென்ற ஆலமுல் கபீரில் 'அக்லுல் அவ்வல்' என்றும், கலமுல் அஃலாவென்றும், லவ்ஹுல் மஹ்பூலென்றும், ரூஹுல் முஹம்மதிய்யா என்றும், ஹகீகத்துல் முகம்மதிய்யா என்றும், நூரென்றும், நப்ஸு குல்லியென்றும், கபீ என்றும் சிர்ரென்றும், சிர்ருல் சிர்ரென்றும், ரூஹென்றும், கல்பென்றும், நப்ஸு நாத்திகா என்றும், லத்தீபத்துல் இன்சானிய்யா என்றும் கலீபத்துல் அக்பரென்றும், சிர்ருல் அஃலமென்றும், கலிமாவென்றும், புஆதென்றும், ஸதர் என்றும், அக்லென்றும், நப்ஸென்றும் கூறப்படுகிறது என்று இஹ்யா உலூமுத்தீன் என்ற கிதாபில் கூறப்படுகிறது. நப்ஸு என்பதும் கல்பு என்பதும் ரூஹு என்பதும் ஒன்றுதான்!

கல்பு எனும் பதத்திற்கு இரண்டு பொருள்கள் உண்டு. 1. நெஞ்சுக்குள் இடது பக்கத்தில் இருக்கும் மாங்காய் வடிவிலான மாமிசத் துண்டமாகிய இருதயம். 2. ஜோதி மயமாகிய ஓர் ஆத்மீக தத்துவ நுட்பம். இந்த இரண்டுக்கும் ஒருவித காந்த சம்பந்தமுண்டு. ஆத்மீக கல்பாகிய இரண்டாவது கல்பையே அகம்-உள்ளம் என்றழைக்கிறோம். இந்த அகம்தான் பகுத்தறிவுள்ள மனிதனின் உண்மை ரகசிய நுட்பமாய் இருக்கிறது. திருக்குர்ஆனில் கல்பு என்று சொல்லப்பட்டிருப்பதெல்லாம் இந்த அகம் என்ற ஹகீகதே இன்சானாகிய நுட்பத்தைக் குறிப்பதே. இந்த அகம்தான் மனிதனில் பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும், வஸ்துக்களின் உண்மையை விளக்கி அறிவதுமாகும். இதனை ஆலமே மலகூத் என்றும், மிதால் என்றும், மும்கினுல் உஜூத் என்றும் அழைக்கலாம். இது சூக்குமமாகும். வலம்-இடம்-கீழ்-மேல்-முன்-பின்-அருகாமை-தூரம் என்ற திக்குத் திசையொன்றும் இதற்கு கிடையாது.

நன்மை, தீமை, கேள்வி, கணக்கு, இன்பம், துன்பம், வேதனை யாவும் அதன் மீதிலேயாகும். இந்த சூக்கும சரீரம் உலகமனைத்தையும் அடைய வளைந்ததாக இருக்கிறது. அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அகவிளக்கமும், அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன. இதுவே மனித ஆத்மாவின் அசலாகும். தனக்கு வேண்டிய எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்ள இச்சரீரத்துக்குச் சக்தியுண்டு. இது சடலத்தை விட்டும் நீங்கி விட்டால் அதற்கு மரணம் என்று சொல்லப்படும். சூக்கும சரீரத்தின் நிலை கிட்டுபவருடைய நிலை 'பகா' எனும் நித்தியானந்த நிலையாக இருக்கும். இரண்டே இலட்சணங்களைக் கொண்டு அகம் வர்ணிக்கப்படுகிறது. அதாவது பார்ப்பது, உணர்வது ஆகியவையே அந்த இலட்சணங்கள்.

'தானென்றது ரூஹு அதிலே நின்றும்
தனியோன் ஸிபாத்துகள் வெளியானதால்
பானியானவ ரதுகளைத்தான்
படைத்தோன் அளவிலே சேர்ப்பார்களே'
                                         -கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லாஹ்.

கல்பென்றதற்கு அர்த்தம் பிரளுகிறதாகும். எந்த கல்பானது ஹல்காயிருந்து ஹக்காக பிரண்டு விட்டதோ அதுவே கல்பாகும். அதுவே அர்ஷாகும். அடிக்கடி பிரளுகிறதனால் அதற்கு கல்பு என்றும், கெடுதியை ஏவுகிறதனால் நப்ஸென்றும், ஜடலம் உயிர் பெற்றிருப்பதனால் ரூஹென்றும், ஆலோசிக்கிற புறத்தினால் அக்லென்றும் சொல்லப்படுகிறது.

இந்த றூஹுல் ஹயவானாகிறது தூக்கத்தினிடத்தில் அது மரணிப்பதில்லை. சரீரத்தை விட்டும் வெளியேறுவதும் இல்லை.

தூங்குமிடத்தில் சரீரத்தை விட்டு வெளியானதும், முழிக்கும் போது சரீரத்தில் உட்புகுவதுமான அந்த றூஹாகிறது அது பிரித்தறியும் றூஹாகும். அதுவும் உஜூதுடைய தஜல்லியிலிருந்து ஒரு தஜல்லிதான்.

இன்னும் பிரித்தறியும் றூஹாகிறது அது மரணிக்காது. ஆனாலும் அது சரீரம் மரணித்ததன் பிறகு, அது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் உள்ள ஒரு நிலையில் ஆகிவிடும்.

றூஹு பிரிந்த பின் உள்ள நிலை:

ஆத்மா –றூஹு உடலை விட்டுப் பிரிந்த உடன் அதற்கு வேறோர் உருவம் உண்டாகும். இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவாகள் தமது புத்தூஹாத்துல் மக்கிய்யா என்ற நூலில் எழுதுவதாவது: மரணித்ததும் ஆத்மாவுக்கு ஓர் உருவம் உண்டாகும். அது எண்ணத்தால் உண்டாவது. அப்போது அது திரையுலகில் (ஆலம் பர்ஜகில்) இருக்கும். இந்த உருவம் இருப்பதால் அதற்கு உணர்வும், அறிவும் இருக்கும். இந்த உருவம் இந்த உடலை விட்டும் வேறானதாக இருக்கும். இந்தத் திரையுலகில் இருக்கும் போது இது பல பல பிறப்பாகப் பல உருவங்களெடுக்கும்.

மேலும் இப்னு அரபி அவர்கள் மேற்காணும் நூலில், 'அல்லாஹுத்தஆலா மனிதனின் ஆத்மாவை இம்மையிலும், திரையுலகிலும், மறு உலகிலும் எங்கிருப்பினும் உணர்வும், அறிவும் உடைய படிவங்களை எடுத்துக் கொள்ளும் வகையிலேயே படைத்தான். முதலில் மீதாக் என்ற வாக்குறுதி எடுக்கப்பட்ட நாளில் அதற்கு ஒர் உருவமுண்டாயிற்று. பின் தாயின் வயிற்றில் நான்காம் மாதம் புகுந்தது முதல் மரணம் ஏற்படும் வரை சடதத்துவ உடலில் சிறை இருந்தவரை வேறோர் உருவை அடைந்திருந்தது. அதன்பின், மரணமான பின் புதைகுழியில் கேள்வி கணக்குக் கேட்கப்படும் வரை ஓர் உருவைப் பெற்றிருந்தது' என்கிறார்கள்.

அகச் சுத்தியுடைய முஃமீன்களின் கல்பு அழிவதில்லை. அவர்களின் ஞான ஜோதி சிறிதும் குன்றாமல் மரணத்திற்குப் பின்னும் அவர்களுடன் நிலைத்திருக்கும். இதுவே நித்திய வாழ்வு என்று சொல்லப்படுகிறது. இறைவனை முடுகுதல், அவனை அறிதல், அவன் கோட்பாடுகளின்படி செயலாற்றுதல் முதலிய அனுஷ்டானங்கள் யாவும் அகத்தின் செயல்கள்தாம். மற்ற உறுப்புகள் அதற்கு கீழ்படிந்து செயல்படும் தொண்டர்களே. ஏவல், விலக்கல் என்னும் கட்டளைகளைக் கொண்டு ஏவப்பட்டதானது இந்த அகம்- உள்ளம் தான்.  அல்லாஹ் அல்லாத்ததை விட்டும் காக்கப்பட்ட அகமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அல்லாஹ் அல்லாத்ததின் பக்கம் கொழுகுதல் உள்ள அகத்துக்கு இறைவனை விட்டும் திரை போடப்படும். இந்த திரை போடப்பட்ட அகத்துக்கே (மறுமையில்) கேள்வி கணக்குகள் உண்டு.

அகத்தின் உள்ளமை சூக்கும உலகத்தையும், அதன் சாய்கை (நிழல்) பூத உலகத்தையும் சார்ந்தவை. அறிவு, நப்ஸ் இவைகளின் தத்துவங்களின் சேர்க்கையினால் சூக்கும உலகில் உள்ள கோலங்கள் சிருஷ்டிகளின் ரூபத்தில் வெளியாகிப் புலன்களின் வாயிலாக அறியப்படுகின்றன.

பூத உலகச் சிருஷ்டிகள் தரிபட்டிருப்பதற்காக நப்ஸ் தாயின் ஸ்தானத்திலும், அறிவு தகப்பன் ஸ்தானத்திலும் இருக்கின்றன. வஸ்துக்களின் பேரில் ஆசைக் கொள்வதே நப்ஸின் குணம். ஆகவே உலக ஆசாபாசங்களை விருத்தி செய்யவே நப்ஸ் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. இதில் வெற்றியடைந்தால் அகத்தையும் தன் வசப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையே துக்கத்திற்கும், துன்பங்களுக்கும் காரணமாகும். அறிவு வஸ்துக்களை மட்டும் கொண்டு திருப்தி அடைவதில்லை. உணர்தல், விளக்கம், தீர்க்க திருஷ்டி இவைகள் அறிவின் குணங்களாகும். ஆதலால் அது ஆராய்ச்சியையே தன் இலட்சியமாகக் கொண்டு அகத்துக்கும் இன்பமளிக்கிறது. இது சுகத்திற்குக் காரணமாகஉள்ள நிலையாகும். ஆனால் சுகம், துக்கம் இவ்விரண்டு நிலைமைகளும் அகத்தின் இலட்சியத்திற்குப் புறம்பானவை.

றூஹின் பெயர்கள்:

இதற்குப் பின், றூஹுக்கு உஜூதுடைய வெளிப்பாட்டிலிருந்து கிடைத்திருக்கும் வசபுகளை(الاوصاف) (தன்மைகளை) அனுசரித்து பல பெயர்கள் உண்டு.

றூஹு எனும் கண்ணாடியிலிருந்து உஜூது பொதுவான அறிவு எனும் கோலத்தில் வெளியானால் அதற்கு றூஹு என்று பெயர் வைக்கப்படும். தனித்த சமட்டிகளின் அறிவைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு அக்லு என்று சொல்லப்படும்.

சமட்டி, வியட்டிகளைக் கொண்டு அந்த இல்மின் கொழுகுதல் இருக்குமானால் அதற்கு கல்பு என்று சொல்லப்படும். அது தனித்த வியட்டியைக் கொண்டு கொழுகுமானால் அதற்கு நப்சு என்று சொல்லப்படும். இந்த சொல்லப்பட்ட கொழுகுதல்கள் எல்லாம் உஜூதுடைய வெளிப்பாடுகளிலிருந்து உள்ள கோலங்களாகும்.

றூஹானது காலபை விட ரொம்ப மிருதுவானதாகும். காலபு ஆகிறது றூஹுடைய மிருதுவைக் கவனிப்பது கொண்டு அது ரொம்ப தடிப்பமானது ஆகும். றூஹின் மிருதுவுக்கும் காலபின் தடிப்பத்துக்குமிடையில் ஒரு தொடர்பும் இருந்தது இல்லை. ஆனால் றூஹு என்னும் கண்ணாடியில் கல்பு எனும் கோலத்தில் ஹக்கு தஜல்லியானான்.

அந்த கல்பை இரண்டு முகம் உள்ளதாக ஆக்கினான்.

1.மிருதுவான பாகம் அது றூஹுடன் இணைகிறது.
2.திண்ணமான பாகம் அது காலபோடு இணைகிறது.

எனவே கல்பை காலபுக்கும் றூஹுக்கும் இடையே சேகரித்த பர்ஸக் ஆக ஆக்கினான்.

றூஹு கல்பின் மிருதுவான பாகத்துடனும் காலபு கல்பின் திண்ணமான பாகத்துடனும் இணைந்தது. ஆகையால் றூஹுக்கும் காலபுக்கும் இடையே கல்பின் மத்தியஸ்தத்தைக் கொண்டு சேருதல் உண்டாகிவிட்டது.

காலபாகிறது றூஹின் ஒளியிலிருந்து கல்பின் தொடர்பைக் கொண்டு ஒளி பெற்றதாக ஆகிவிட்டது. அதாவது இலங்கிவிட்டதுواشرقت الا رض بنور ربها(றப்புடைய ஒளியைக் கொண்டு பூமி ஒளி பெற்றதாக ஆகிவிட்டது) எப்படிப்பட்டி றூஹு எனில் அது காலபை வளர்க்கிறது. அதை நிலைக்கச் செய்கிறது. றூஹுடைய ஒளி சங்கிலித் தொடராக பிரகாசிப்பதிலிருந்து அந்த காலபுடைய இருள் நீங்குமானால் காலபின் திண்ணம் எனும் இருள் நீங்கியதன் பின் அது கல்பாக ஆகிவிடும்.

அதுபோலதான் அந்த கல்பாகிறது றூஹுடைய ஒளியைக் கொண்டு பிரகாசித்தால் அது றூஹாக ஆகிவிடும். இன்னும் றூஹாகிறது காலபில் அது ஆட்சி பண்ணுவதிலிருந்து பராக்கானதன் பின் அதாவது காலபை கல்பாக ஆக்கினதன் பின் அது றூஹுக்கு றூஹாக ஆகிறது. அல்லாஹ்வின் ரகசியத்தில் நின்றும் ஒரு ரகசியமாகவும் ஒளிகளிலிருந்து ஒரு ஒளியாகவும் ஆகிவிடுகின்றது.

நப்ஸின் வகைகள்:

றூஹாகிறது காலபின் பண்புகளை எடுக்குமானால் அது நப்சு என்று கூறப்படும். அந்த நப்சு( இந்த காலபை உண்டாக்கிற மண், தண்ணீர், காற்று, நெருப்பு என்பவற்றிலிருந்து) நெருப்பின் குணத்தை எடுக்குமானால் நப்சுல் அம்மாரா (انفس الامارة)என்று சொல்லப்படும். அந்த அம்மாறாவின் குணங்களாகிறது, பெருமையடித்தல், அகப் பெருமை, முகஸ்துதி, கெட்ட குணங்களில் மூழ்குதல், அனானியத்து போன்ற கெட்ட குணங்களும், இவை அல்லாத்தவைகளும் ஆகும். இந்த குணங்களை உடைய நப்சு ஷைத்தானுடைய ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகி விடும்.

இனி அந்த நப்சு காற்றின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் லவ்வாமா (انفس اللوامة) என்று கூறப்படும். இந்த நப்சாகிறது அதிலிருந்து கெட்டவைகள் உண்டானதன் பின் அதன் நப்ஸை பழிக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடவும் செய்யும். இந்த நப்சுல் லவ்வாமா ஆகிறது நப்சானியத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகும்.

இனி அந்த நப்சு தண்ணீரின் குணத்தை எடுக்குமானால் அதற்கு நப்சுல் முல்ஹிமா (انفس الملهمة) என்று சொல்லப்படும். அப்போது அந்த நப்சு நன்மைகள் அடங்கலும் உண்டாகும் இடமாக ஆகிவிடும். அவனுக்கு அல்லாஹ்வின் திக்று (الذكر), பிக்று, (الفكر) தஸ்பிஹ் (التسبيح) , உலகை வெறுத்தல் (الزهد), பேணுதல்(الورع) , பொறுமை, (الصبر)பரஞ்சாட்டுதல் (التسليم) , பொருத்தம் (الرضي)இவை போன்ற நல்ல விசயங்களில் ஆசை அதிகமாகும். அப்போது இந்த நப்சு மலக்குகளின் ஊசாட்டங்களுக்கு இடமாக ஆகிவிடும்.

இனி அந்த நப்சு இம் மண்ணின் குணங்களை ஏற்றுக் கொள்ளுமானால் அந்த நப்சு கீழ் குறிப்பிடும் குணங்களை கொண்டதாக ஆகிவிடும். பணிதல், மனம் உடைதல், இரங்குதல், கண்ணியம், வணக்கம் எனும் பாரங்களை சுமத்துதல், எக்காலமும் தான் அழிந்தவன் றப்பு பாக்கியானவன் எனும் பார்வையுடையவனாகவும் ஆகுதல் ஆகும். அப்போது இந்த நப்சு றஹ்மானிய்யத்தான ஊசாட்டங்களுக்கு இடமாகிவிடும். இந்த நப்சுக்கு நப்சுல் முத்மயின்னா (انفس المطمئنة)  என்று கூறப்படும்.

சில கிதாபுகளில் இன்னும் மூன்று வகை நப்சுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
கல்பின் ஏழு சுற்றுகள்:

நிச்சயமாக கல்பாகிறது அதற்கு 7 சுற்றுகள் உண்டு. உண்மையில் அந்த சுற்றுகளாகிறது கல்பு எனும் கோலத்திலும் அதன் ஆதாறுகள், அஹ்காமுகள், பண்புகள் என்னும் கோலத்திலும் வெளியான வெளிப்பாட்டைத் தொடர்ந்த 7 வெளிப்பாடுகள் ஆகும்.

1.கல்பின் சுற்றுகளில் இருந்து முதலாவதாகிறது:

நெஞ்சைக் கொண்டு கொழுகினதாகும். அதாவது கல்பின் தோலாகும். அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாசுக்கு இடமாகும். கெட்டவைகள் இதை அடக்கி ஆளுமானால் அவனுக்கு காபிர் என்று ஹுக்மு செய்யப்படும். இனி அவன் அவனுடைய கெட்டவைகளெல்லாம் நன்மைகளைக் கொண்டு மாற்றுவானானால் கடுமையான தெண்டிப்பு கொண்டு தீமைகளை நன்மைகளாக மாற்றுவானானால் அப்போது அவன் இஸ்லாத்தின்பேரில் நெஞ்சு விசாலமாக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் ஆகிவிடுவான். அவன் றப்புடைய அத்தாட்சியின் பேரில் இருக்கிறான். இந்த சுற்று சட உலகோடு கொழுகினதாகும். இந்த சட உலகமாகிறது வெளிப்புலன்களைக் கொண்டு அறியப்படக் கூடியதாகும்.

2.கல்பின் சுற்றுகளில் இருந்தும் இரண்டாவதாகிறது:

கல்பின் உள்பார்வை ஆகும். இந்த உள்பார்வை  அல்லாஹ் அல்லாத்ததைக் கொண்டு கொழுகுமானால் அவன் ஒரு கூட்டத்தில் ஆகிவிடுவான். அவனது ஹக்கில் குர்ஆனில் வந்திருக்கிறது ولكن تعمي القلوب التي في الصدور(என்றாலும் அவர்களின் நெஞ்சுகளில் உள்ள கல்பு குருடானவர்கள்) அந்தக் கூட்டத்தில் ஆகி விடுவான். இனி அவனது உட்பார்வை அல்லாஹ்வைக் கொண்டு கொழுகுமானால் அது ஈமானுடைய இடமாகும்.اولئك كتب في قلوبهم الايمان அவர்களுடைய இருதயத்தில், அல்லாஹ் ஈமானை எழுதினானே! அந்தக் கூட்டத்தினர்) இந்த சுற்றாகிறது நப்சானிய்யா என்னும் ஊசாட்டம் என்பது கொண்டு சொல்லப்படக் கூடிய நப்சானிய்யத்தான உலகைக் கொண்டு கொழுகினதாகும்.

3.கல்பின் சுற்றுகளில் மூன்றாவதாகிறது:

மஹப்பத்தின் சுற்றாகும். அதற்கு வெளிரங்கமும் உள்ரங்கமும் உண்டு. அதன் வெளிரங்கமானது சுவர்க்கத்தின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். அதன் உள்ரங்கமாகிறது சுவர்க்கத்தின் றப்பின் மஹப்பத்தைக் கொண்டு கொழுகினதாகும். இந்தச் சுற்றின் கொழுகுதல் ஆகிறது கல்பின் உலகமாகும். (عالم القلب)கல்புடைய ஊசாட்டம் என்பது கல்புடைய ஆலத்தைக் கொண்டு கொழுகினதாகும். ஏனெனில் மஹப்பத்தை உண்டாக்குவது கல்பு என்றதினாலாகும்.

4.கல்பின் சுற்றுகளில் இருந்து நாலாவதாகிறது:

தாத்தையும் ஜமாலிய்யத்து ஜலாலிய்யத்து எனும் சிபத்துக்களையும் அதன் குணபாடுகளையும் காட்சியாக காணும் இடமாகும். அதன் கொழுகுதல் ஆகிறது ஆலமுர் றூஹானிய்யா ஆகும். ஆலமுல் றூஹானிய்யா ஆகிறது அது தெண்டிப்பு, சிந்தனை, கஷ்டம் போன்றவைகள் இல்லாமல் மஃரிபாவை பெற்றுக் கொண்டதற்காக ஆலமுல் றூஹானிய்யா என்று சொல்லப்படும். எதுவரையில் பெற்றுக் கொண்டான் என்றால் மஃரிபா எனும் ஒளி அவனது உள்ளும் வெளியும் சூழ்ந்து கொள்ளும் வரை. ஆகவே அவன் ஹக்கின் தாத்தையும் சிபாத்தையும் அல்லாது காணமாட்டான்.

5.கல்பின் சுற்றுகளில் இருந்தும் ஐந்தாவதாகிறது:

இரகசிய உலகோடு கொழுவினதாகும். இரகசிய உலகம் என்பது வெளியாகிறவனையும், வெளியாகிறதையும் மேலான ஒருவனான தாத்தை அன்றி வேறொன்றையும் காண மாட்டானே அந்த உலகமாகும். அவன் எல்லாவற்றையும் விட்டும் மறைந்து விடுகிறான். அவனுடைய நப்ஸை விட்டும் முற்றிலும் மறைந்து விடுகிறான். அவன் கூறப்பட்ட ஒரு வஸ்த்துவாக ஆகவில்லை என்று ஆகும் வரையில் முற்றிலும் மறைந்து விடுகிறான். இதுதான் ஹல்லாஜின் (ரஹிமஹுல்லாஹ்) மகாமாகும். இவர் அவரின் மஸ்த்தில் 'அனல் ஹக்கு' என்று சொன்னார். இந்த பனாவை அல்லாஹ்வின் சிர்ரை கொண்டே ஒழிய முற்றிலும் அனுபவிக்க மாட்டார்கள்.

6.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஆறாவதாகிறது:

இலாஹிய்யத்தான நாமங்களை அறிவதாகும். இதுவாகிறது அல்லாஹ்வுடைய குணங்களைக் கொண்டு குணம் பெறுதல் எனும் மர்த்தபாவாகும். அதாவது என்னைக் கொண்டே பார்ப்பான், என்னைக் கொண்டே கேட்பான் என்ற மர்த்தபாவாகும். அதனுடைய கொழுகுதல் ஆலமுன்னூர் ஆகும். புதுமை நீங்கி பழமை என்னும் சிபாத்து அழியும் ஆலமாகும். இந்த மர்த்தபாவில் இருந்துதான் சொல்லுகிறவர் சொல்லுவார்‚ (قم بادني)என் உத்தரவைக் கொண்டு எழும்பு' என்று சொல்லுவார். எவனந் ஒருவன் அல்லாஹ்வுடைய சிபத்துக்களைக் கொண்டு பரிசு பெறுவானேயானால் அவன் தனித்த ஒளியைத் தவிர வேறில்லை.

7.கல்பின் சுற்றுகளில் நின்றும் ஏழாவதாகிறது:

பக்று ஆகும். அவன் தாத்தின் தஜல்லியை சுமந்தவனாவான். பக்ரு பரிபூரணமானால் அல்லாஹ் அல்லாத்தது ஒன்றும் பாக்கியில்லை என்றாகும். இந்த சுற்றின் கொழுகாகிறது தாத்தாகும். அவனுடைய எல்லா இறக்கங்கள் எனும் மர்த்தபாக்களுடனான தாத்தாகும். இந்த வண்ணமான மர்த்தபாவின் பேரில் ஸாலிக் ஜெயம் பெற்றால் ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் இணைந்து விடுகிறான். இந்த ஹகீகத்துல் இன்ஸானிய்யாவுடன் சேர்ப்பது கொண்டு உஜூபு இம்கான் என்பவை இரண்டும் சரிசமமாக ஆகியிருந்தது. இது போன்று இந்த மர்த்தபாவுடையவனிடத்தில் ஹக்கும் ஹல்கும் சரிசமமானதாகும். அதாவது ஹக்கை காட்சி காண்பவனுக்கு கல்கை காட்சி காண்பது திரையாக ஆகாது. கல்கை காட்சி காண்பது ஹக்கை காட்சி காண்பதற்கு திரையாக மாட்டாது. ஹகீகத்துல் இன்சானிய்யாவாகிறது, அது ஹகீகத்துல் முஹம்மதிய்யா வெளியாகும் இடமாகும்.

அப்போது கல்புக்கு ஐந்து ஹளராத்துக்களின் எதிர் முகத்தில் ஐந்து முகங்கள் உள்ளன.

அந்த முகங்களில் நின்றும் ஒருமுகம் ஆகிறது ஆலமுல் மிதாலுக்கு எதிர் முகமாகும். மிதாலுடைய உலகத்தின் உதவியைக் கொண்டு அந்த கல்புடைய முகம் ‚பைளுகள்' எடுக்கிறது. சில இஸ்முகளில் இருந்து அதாவது சடத்துக்கு தொடர்புபட்ட தரிபாடான அஸ்மாக்களில் இருந்து பைளுகள் எடுக்கிறது.

அதிலிருந்து ஒரு முகமாகிறது ஆலமுஷ் ஷஹாதத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் காலபில் அதிகாரம் நடத்துவதற்கும் பைளுகளைச் சேர்ப்பதற்கும் அதனுடைய ஏற்புத் தன்மையின் நிலையை அனுசரித்து இவ்வாறான பைளுகளை சேர்க்கிறது.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது அர்வாஹுடைய ஆலத்தை எதிர்நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு அது இலாஹிய்யான அஸ்மாக்களில் இருந்து பைளுகளை எடுக்கிறது.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது தெய்வீகத் தன்மை எனும் ஹழறத்தை எதிர் நோக்குகிறது. ஏனெனில் ரூஹுடைய உதவியைக் கொண்டு தெய்வீகத் தன்மையின் பைளை எடுப்பதற்காக.

அதில் நின்றும் ஒரு முகமாகிறது தாத்தின் வஹ்தத்தை முன்நோக்குகிறது. ஏனெனில் அதில் வெளியாவதும், உள்ளாவதும் சரிசமமான வஹ்தத்து தாத்தை முன்னோக்குகிறது.

கவனிக்க: நிச்சயமாக அல்லாஹ் ஆகிறவன் உன்னுடைய இரண்டு உண்டாக்குதலையும் உண்டாக்கின பிறகு (அதாவது காலபையும், ரூஹையும்) அவை இரண்டுக்கும் இடையில் உதவி கொண்டு சேர்த்து வைத்த போது அவை இரண்டுக்குமிடையில் கல்யாணம் உண்டாகி விட்டது. அப்போது அவை இரண்டில் நின்றும்‚'நீ' பிறந்துண்டானாய். அப்போது ‚ 'நீ' என்பது அந்த அன்னியத்தில் இருந்து, 'நான்' என்று உணரக் கூடிய எட்டுதலேயன்றி வேறில்லை.

உன் நப்ஸைத் தொட்டும் நீ 'அன' (நான்) என்று சொல்வதெல்லாம் அது இவை இரண்டும் இணைந்த தன்மையில் இருந்து உண்டானதினாலாகும். அப்போ 'நீ' என்பது  வெறும் அறிந்துக் கொள்ளுதலேயன்றி வேறில்லை. துன்யாவில் நிலைத்திருக்கும் போதெல்லாம் அந்த இரண்டு உண்டாகுதலின் இணைப்பின் கைபிய்யத்தே‚ 'நீ' என்பதாகும். உன்னுடைய இரண்டு உண்டாகுதலும் பிரிந்து விட்டால் –  குறிக்கப்பட்ட உன்னுடைய தவணை முடிந்த பின் பிரிந்து விட்டால் – உன்னுடைய முதல் உண்டாகுதல் (காலபு) அதை ஒருங்கிணைந்த இணைப்பு உருக்குலைந்ததன் பிறகு அந்த காலபாகிறது அதன் அசலுக்குத் திரும்பி விடும்.

அதன் மற்ற உண்டாகுதல் (ரூஹு) ஆகிறது அது எக்காலமும் அழியாது. அது எப்போதும் நிலைத்திருக்கும். அப்போது நீ உன்னை அறிந்து கொள்வது முதல் உண்டாகுதல் (உடல்)அழிந்ததன் பிறகு, தனித்ததாக மற்ற ரூஹிய்யான உண்டாகுதலைக் கொண்டு கொழுகினதாகும். உன்னுடைய நான் என்பது அல்லாஹ்வின் அன்னியத்தில் அழியாமல் இருந்தால்தான் இந்த ரூஹோடு மட்டும் தொடர்புபட்டதாக இருக்கும்.

நீ பனாவை எட்டியவனாக இருந்தால் இந்த இரண்டு உண்டாகுதலும் உண்டாவதற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே இருப்பாய்.

இன்சான் என்பவன் உலூஹிய்யத்தின் கோலத்தில் கடைசியாக வெளியானான். கெனுளடைய பகுதிகளில் இருந்து ஒவ்வொரு பகுதிகளின் பேரிலும் வெளியானதன் பிறகு, தெய்வீகத்தின் கமாலாத்துகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட ஒரு ஷஃனைக் கொண்டு இந்த இன்ஸான் வெளியானான். அது தெய்வீகத் தன்மை என்னும் கோலமாகும்.

ஆதார நூல்கள்:

1.    நூருல் இர்பான்-ஞானப்பிரகாசம்
2.    அஸ்ராருல் ஆலம்-மெய்ஞானப் பேரமுதம்
3.    கீமியாயே ஸஆதத்து
4.    அல் ஹகீகா
5.    பைஜுல் ஹபீப்.
6.    மஙானீ.