விபச்சாரம் (ஜினா) – தண்டனைகள்

விபச்சாரம் (ஜினா) – தண்டனைகள்

By Sufi Manzil 0 Comment June 22, 2012

وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ

விபச்சாரத்திற்கு நீங்கள் நெருங்க வேண்டாம். (அல்குர்ஆன் 17:32)

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ

'விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)

'ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)

'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

1.முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2.வருமானத்தை அறுத்துவிடும்
3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

மனிதனை நாசமாக்கும் செயல்கள் ஏழு என்பதாக ஹதீதில் கூறப்பட்டுள்ளது. 1. பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாகும். 2. கொலை செய்தல் 3. விபச்சாரம் புரிதல். 4. பெற்றோரை நோவினை செய்தல். 5. பொய்ச் சத்தியம் செய்தல். 6. அநாதைகளின் பொருட்களை அநியாயமாகச் சாப்பிடுதல். 7. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல் ஆகியவையாகும். மற்றோர் அறிவிப்பில் விபச்சாரம் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ

விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)

விபச்சாரத்திற்குரிய சட்டங்கள்:

பருவமடைந்த ஒரு  சுதந்திரமான ஒருவன் தன் ஆண் குறியை கத்னாவுடைய அளவுவரை எவரேனும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் துவாரத்திலோ அல்லது பின் துவாரத்திலோ – அது ஹராமென்று அறிந்து –நுழைய வைத்தால் நாட்டின் தலைவர் அல்லது அவரின் பிரதிநிதியான நீதிபதியானவர் அவனுடைய மேனியில் படும்படியாக நூறு கசையடி கொடுத்து, ஓராண்டு வரை இரண்டு நாள் தூரத்திலுள்ள வேறோர் ஊருக்கு நாடு கடத்தி விடுவார். இச்சட்டம் திருமணம் ஆகி உடலுறவே கொள்ளாத விபச்சாரம் புரிந்த ஆணுக்கும், அது போன்ற ஒரு பெண்ணுக்கும்உரியதாகும்.

மிருகங்களின் மர்மஸ்தனத்திலும், மய்யித்துடைய மர்மஸ்தானத்திலும் தன் மர்மஸ்தானத்தை நுழைய வைப்பதால் ஹத்து இல்லை. புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்த ஒருவன் அல்லது ஹராமென்பதை அறிவதற்குரிய வாய்ப்பு ஏற்படாதவன் அதனை ஹலாலென்று விளங்கியதாக வாதாடினால், அதுவும் சாத்தியமாக இருப்பின் அவனுக்கும் ஹத்து இல்லை. இவ்வாறே சந்தேகமான நிகாஹினால் உடலுறவு நடந்திருந்தால் – அதனை ஹலாலெனச் சொன்ன இமாமைத் தொடராவிட்டாலும் ஹத்து இல்லை.

ஸஹீஹான நிகாஹின் மூலம் உடலுறவு கொண்ட சுதந்திரவான் அல்லது உடலுறவு கொள்ளப்பட்ட சுதந்திரமான பெண் விபச்சாரம் செய்தால் இமாமானவர் அல்லது அவருடைய பிரதிநிதி அவ்விருவரையும் நிற்க வைத்து கல்லால் எறிந்து கொல்லும்படி ஜனங்களை ஏவுவார்.  கற்பமாயிருப்பவளையும், குழந்தைக்குப் பால் கொடுப்பவளையும் அந்த செயல்களைவ pட்டும் அவள் நீங்கும் நாள்வரை பிற்படுத்தி வைக்கப்படும். நோய் இருப்பதற்காகப் பிற்படுத்தக் கூடாது. நோய், கடும் குளிர், உஷ்ணம் ஆகிய காரணத்தினால் பிற்படுத்தக் கூடாது. ஆனால் ஹத்திற்கு பிற்படுத்தலாம்.

ஹத்து என்பது பச்சை மட்டை, செருப்பு ஆகியவற்றினால் அடிக்கலாம். ஐம்பது சிறு குச்சிகளுள்ள ஒரு கட்டினால் இரண்டு தடவை அடித்தாலும் நூறு அடிகள் நிறைவேறி விடும். ஆனால் அதிலுள்ள ஒவ்வொரு குச்சியும் அவனுடைய மேனியில் பட வேண்டும்.

விபச்சாரம் செய்தது உறுதியாவது, அவனே ஒப்புக் கொள்வது கொண்டோ அல்லது நான்கு ஆண்களின் சாட்சிகளைக்கொண்டோ தரிபடும். அதாவது நான்கு ஆண்கள், அவ்விருவரும் விபச்சாரம் செய்து கொண்டிருந்ததையும், அவன் அவளுடைய மர்மஸ்தானத்தில் எவ்வாறு நுழைய வைத்தான் என்ற விபரத்தையும், அந்த இடத்தையும், நேரத்தையும் தாங்கள் நான்கு பேர்களும் கண்ணால் கண்டதாய் சாட்சி கூற வேண்டும். அப்பொழுதுதான் அது உறுதியாகும்.

மாயிஜ் என்ற சஹாபியும், ஙாமிதிய்யா என்ற ஸஹாபி பெண்மணியும் தாங்களிருவரும் விபச்சாரம் செய்து விட்டதாக விண்ணப்பித் போது அந்தச் சொல்லிலிருந்து மீண்டு கொள்ளும்படியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைக்கினை செய்ததால் அப்படி மீண்டு கொள்வது சுன்னத்தாகும்.

ஆனால் தான் விபச்சாரம் செய்ததாக சொன்ன ஒருவன், தான் அப்படிச் சொல்லவில்லையென்று மறுத்தால் அவன் ஏற்கனவே விபச்சாரம் செய்ததாகச் சொல்லும் போது இரண்டு சாட்சிகள் இருந்திருப்பார்களாயின் அந்த மறுப்பை ஒப்புக் கொள்ளக் கூடாது. இரண்டு சாட்சிகள் இல்லாதிருப்பின் அவனின் மறுப்பை ஒப்புக் கொள்ளலாம். இந்த நிலையில் அவன் மீது ஹத்து விதியாகாது.

ஒருவனின் தொடையை மற்றொருவனின் தொடையுடன் சேர்ப்பதின் மூலமாகவோ ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் சேருவதின் மூலமாகவோ, தன் கரத்தினால், அல்லது தன் மனைவி அல்லாதவரின் கரத்தினால் விந்தை வெளியாக்குவதின் மூலமாகவோ இன்பம் அனுபவித்தால் ஹத்து இல்லை. எனினும் அவர்களை  கண்டிக்க வேண்டும்.