திருத்தப்பட வேண்டிய சிந்தனைகள்
By Sufi Manzil
டாக்டர். அஸ்ஸெய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மக்கா ஷரீஃப்.
டாக்டர். செய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் உலகப் புகழ் பெற்ற 'மஃபாஹீம் எஜிப் அன் துஸஹ்ஹஹ்' என்ற நூலின் மரணத்திற்குப் பின் கராமத்துக்கள்' என்ற 36வது அத்தியாயத்தின் மொழியாக்கம் இது.
காலப் போக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் நுழைக்கப்பட்ட இஸ்லாமிய விரோதக் கொள்கைகளைத் தகர்த்தெறிவதில் இந்நூல் பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூல் பத்திற்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, சிரியா அரசுகள் இலட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு இலவசமாக வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யஸீத் இப்னு மஹ்தி சொல்கிறார்கள்: உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நான் விடைபெற்றுச் செல்லும்போது சொன்னார்கள், 'உங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது.' 'அமீருல் முஃமினீன் அவர்களே! என்ன தேவை அது?' என்று கேட்டேன். 'நீங்கள் மதீனாவிற்கு சென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்றை ஜியாரத் செய்வீர்கள் அல்லவா! அப்போது எனது ஸலாமை திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சொல்லுங்கள்' என்றார்கள்.
ஹாதிம் இப்னு வர்தான் சொல்கிறார்கள்: சிரியாவிலிருந்து பிரத்யேக தூதர்களை நபி ஸல்லல்லாஹ { அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சலாம் சொல்வதற்காக கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிற்கு அனுப்பி வைப்பார்கள்.' காழி இயாழ் அவர்கள் தமது அஷ்ஷிஃபா என்ற நூலில் (2:83) இச்செய்தியை பதிவு செய்துள்;ளார்கள்.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்புதல் ஸஹாபாக்கள், தாபிஈன்களின் வழக்கம். இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோருக்கும் சலாம் சொல்லி அனுப்புவார்கள் என அல்லாமா கஃபாஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொலைவிலிருந்து உரைக்கும் சலாமுக்கு பயனுண்டு. எனினும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சன்னிதானத்தில் நின்று சலாம் கூறுதல் தனிச் சிறப்பு. (நஸீமுர் ரியாழ் கஃபாஜி 3:56)
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலான தாரிமியில், இமாம் அபூ முஹம்மத் அப்துல்லாஹ் தாரிமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்:
'ஹர்ரா யுத்த வேளையில் மூன்று தினங்கள் தொடர்ந்து மதீனா பள்ளியில் பாங்கு ஒலிக்கவில்லை. அப்போது ஸஈத் இப்னு முஸைய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியில் தங்கி இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்து கேட்ட சப்தத்தை வைத்து தொழுகையின் நேரங்களை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.' (தாரிமி 1:44) முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது அஹ்காமு தமன்னில் மவ்த்திலும், மற்றும் ஃபைரூஸாபாதி தமது அஸ்ஸிலாத்து வல் பிஷ்ரிலும் இந்நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
இப்றாஹீம் இப்னு ஷைபான் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: ஹஜ்ஜை முடித்துக் கொண்டு, மதீனா சென்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கருகில் நின்று சலாம் சொன்ன போது, கப்ரிலிருந்து 'வஅலைக்குமுஸ்ஸலாம்' என பதில் வந்ததை செவியுற்றேன்.
இப்னு தைமிய்யா தனது நூலில் 'கப்ருகளை பள்ளியாக்காதீர்' என்ற ஹதீதுக்கு விளக்கம் எழுதுகிறபோது, மேற்சொன்ன நிகழ்வுகளைத் தெரிவிக்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கப்ரிலிருந்தோ, ஸாலிஹானவர்களின் கப்ருகளிலிருந்தோ ஸலாமுக்கு சிலர் பதில் கேட்டதாக அறிவிக்கப்படுவதும், ஸஈத் இப்னு முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் ரவ்லா ஷரீபிலிருந்து பாங்கு கேட்டதும் மறுக்கப்பட வேண்டியவை அல்ல.' (இக்திளாஉ ஸிராத்துல் முஸ்தகீம் பக்கம் 373)
இப்னு தைமிய்யா மேலும் எழுதுகிறார்: 'நபிமார்கள், ஸாலிஹானவர்களின் கப்ருகளுக்கருகில் பிரகாசம் ஏற்படுதல், மலக்குகள் வருகை தருதல், ஷெய்த்தான்கள் அவற்றுக்கருகில் செல்ல முடியாமை, தீ விபத்து மற்றும் ஆபத்துக்களிலிருந்து கப்ரும், சுற்றுப்புறங்களும் பாதுகாப்புப் பெறுதல், தங்களுக்கருகே அடக்கம் செய்யப்படுவர்களுக்காக அவர்கள் சிபாரிசு செய்தல், கப்ருகளுக்கு வருபவர்களுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைத்தல், கப்ருகளை திட்டுபவர்களுக்கு ஆபத்துக்களும், தண்டனைகளும் ஏற்படுத் முதலிய கராமத்துகளும், அசாதாரண நிகழ்ச்சிகளும் உண்மைகளே! நான் அவற்றை எதிர்க்கவில்லை. நபிமார்கள், நல்லவர்களின் கப்ருகளில் நிகழும் அசாதாரண சம்பவங்களும், ரஹ்மத்தும் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் மதிப்புகள் நம் சிந்தனைக்கு எட்டாதவை.
(இக்திளாஉ பக்கம் 374)
ஸஹாபாக்கள், தாபிஈன்கள் பலரின் மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற வெளிப்படையான கராமத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நேரடியாகக் கண்ட சம்பவங்களை நம்பகமான அறிவிப்புத் தொடர் வழியாகவும் அறிவிக்கின்றனர்.
சவூதியிலுள்ள முஹம்மத் இப்னு ஸுஊத் பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் தொகுப்பின் 'அஹ்காமு தமன்னில் மவ்த்' என்ற அத்தியாயத்தில் நூலாசிரியர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பதிவு செய்துள்ள சில நிகழ்வுகளைக் காண்போம்.
ஹம்மாத் இப்னு தாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து அஃபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! நீ யாருக்காவது கப்ரில் தொழுவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் அந்த வாய்ப்பை எனக்குத் தந்தருள்வாயாக! என ஹம்மாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்.
ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தாபிதுல் பன்னான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை கப்ரில் வைத்தேன். என்னுடன் ஹுமைது தவீலாவும் உடனிருந்தார். நாங்கள் அடக்கம் செய்துவிட்டு திரும்பும் போது கப்ரின் பலகை இடிந்து விழுந்தது. அதனைச் சரி செய்வதற்காக நான் சென்ற போது தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ருக்குள்ளிருந்து தொழுவதைப் பார்க்க முடிந்தது. அறிவிப்பாளர்: அபூ நுஐம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி.
அபூநுஐம் மற்றும் இப்னு கரீத் ஆகியோர் இப்றாஹீம் அல்முஹல்லப் அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். 'நள்ளிரவில் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது கப்ரு வழியாக சுண்ணாம்பு கொண்டு சென்றவர்கள் கப்ரிலிருந்து குர்ஆன் ஓதுவதைக் கேட்டதாக என்னிடம் தெரிவித்தனர்.'
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஹாபி ஒருவர் கப்ரு என்று அறியாமல் தனது மேலங்கியைக் கழற்றி அதன் மீது வைத்தார்கள். அப்போது கப்ருக்குள்ளிருந்து ஸுரத்துல் முல்க் முழுவதும் ஓதப்படுவதை செவியேற்றார். இதனைத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்த போது சொன்னார்கள்: 'ஸுரத்துல் முல்க் எல்லாத் தீங்குகளையும் தடுக்கும். கப்ர் தண்டனையிலிருந்து காப்பாற்றும்.' இந்த ஹதீதை திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹஸன் என்கிறார்கள்.
நஸஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஹாகிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆகியோர் அறிவிக்கின்றனர்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் சுவனத்தில் இருப்பதாக கனவு கண்டேன். அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'யார் இவர்?' என வினவினேன். சுவனவாசிகள், அவர் ஹாரிஸ் இப்னு நுஃமான்' என்றனர். அதுதான் நற்செயலின் பயன். ஹாரிஸ் தனது தாயாருக்காக அதிக பணிவிடைகள் செய்திருந்தார்கள்.' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இப்னு அபீதுன்யா அறிவிக்கிறார்கள்: 'திருக்குர்ஆன் மனனமில்லாத நல்லவர் ஒருவர் மவ்த்தாகிவிட்டால் அவருக்குக் குர்ஆனை கற்பிக்க மலக்குகளிடம் ஏவப்படும். கியாமத் நாள் வரை அவர் குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.' யஸீத் தகாஷியிடமிருந்தும் இதேபோல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடமிருந்து அப்னு அபீ ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், மய்யித்திற்கு நல்ல கஃபன் துணி அணிவிக்க வேண்டுமென விரும்புவார்கள். இறந்தவர்கள் தங்கள் கஃபன் ஆடைகளைக் குறித்து தங்களுக்குள் பேசிக் கொள்வர் எனவும் இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்வார்கள்'. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நேரடியாக (மர்ஃபூஉ) இப்னு உஸாமா அவர்கள் தமது முஸ்னதில் பதிவு செய்துள்ளார்கள்.
'உங்களில் யாராவது மய்யித்தின் காரியங்களை நடத்துபவராக இருந்தால் நல்ல கஃபன் ஆடையை அணிவியுங்கள்' இந்த நபிமொழியை இமாம் முஸ்லிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
திர்மிதி, இப்னு மாஜா, முஹம்மத் பின் யஹ்யல் ஹமதானி ஆகியோர் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீது இப்படி வருகிறது: 'நீங்கள் மய்யித்தின் காரியங்களை நடத்துபவராக இருந்தால் நல்ல கஃபன் அணிவியுங்கள். ஏனெனில் இறந்தவர்கள் கஃபன்களைப் பற்றி கப்ருகளில் கருத்துச் சொல்வார்கள்.'
ராஷித் இப்னு ஸஈதிடமிருந்து இப்னு அயீதுன்யா அறிவிக்கிறார்கள்: 'ஒரு ஸஹாபியின் மனைவி மவ்த்தானார்கள். பின்னர் அவர் சில பெண்களை கனவு கண்டார்கள். அக்கூட்டத்தில் அவரது மனைவியைக் காணவில்லை. மனைவியைக் குறித்து அப்பெண்களிடம் கேட்க, நீங்கள் அவருடைய கஃபன் ஆடையை மோசமாக்கியதால் எங்களுடன் வர வெட்கப்பட்டார்கள் என்றனர்.
ஸஹாபி அவர்கள் இதனை நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்ல, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தார்கள்: 'அந்த வழியாகச் செல்லும் நம்பிக்கைக்குரிய நபரைப் பற்றி விசாரியுங்கள்.'
மரணத்தறுவாயில் இருக்கும் ஒரு நபித் தோழரின் வீட்டிற்கு அந்த ஸஹாபி சென்ற போது, அன்ஸாரியான நபித் தோழர் 'இறந்தவர்களுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப விரும்புவோர் என்னிடம் ஒப்படையுங்கள்' எனச்' சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்கிறார். அத்தோழர் மவ்த்தான போது அவரது கஃபன் ஆடையுடன் இன்னொரு கபனும் வைத்து அடக்கம் செய்தோம். பின்னர் அந்த கஃபன் ஆடையை அணிந்தவராக தனது மனைவியை பெண்களுக்கிடையில் அந்த ஸஹாபி கண்டார்கள்.
தனது கஃபன் ஆடையைப் பற்றி கனவில் குறை சொன்ன ஒரு பெண்ணின் சம்பவத்தை முஹம்மத் இப்னு யூசுஃபில் பிர்யாபி அவர்களிடமிருந்து இப்னு ஜவ்ஸியும் அறிவிக்கிறார்கள்.
சிரியாவில் மரணத்தறுவாயிலிருந்த வாலிபர் ஒருவர் 'என்னை என் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் விருப்பப்படி செய்தால் எப்படி இருக்கும்' எனக் கேட்டபோது, அவரது சாச்சா சொன்னார், 'உன்னை உனது தாயார் சுவனத்திற்கு அனுப்பி வைப்பார்'. வாலிபர் கூறினார், 'எனது தாயரை விட கருணை மிக்கவன் அல்லாஹ்' என்று.
இப்னு அபீ துன்யா அபூ காலிபிடமிருந்து அறிவிக்கிறார்கள்: அந்த இளைஞரை கப்ரில் அடக்கிய போது நானும் கப்ரில் இறங்கினேன். அடக்கம் முடிந்த போது கப்ர் மீதிருந்த பலகை கீழே விழுந்து விட்டது. அதனை மீண்டும் சரி செய்வதற்காக மீண்டும் கப்ரில் இறங்கிய சாச்சா பயந்து போய் வெளியேறினார். கப்ரு ஒளியால் நிறைந்திருந்தது. பார்வை எட்டா தொலைவுவரை அவ்வொளி பரவியிருந்தது.
'நஜ்ஜாஷி அரசர் மவ்த்தான போது அன்னாரது கப்ரில் ஒளி சூழும் எனச் சொல்லியிருந்தோம்' என்று அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னதாக அபூதாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'நான் அஹ்னஃப் இப்னு கைஸ் அவர்களின் கப்ர் அடக்கத்தில் பங்கெடுத்தேன். கப்ருக்குள் இறங்கியவர்களுள் நானும் ஒருவன். அடக்கம் முடிந்த பின்னர் கப்ர் மிக விசாலமாக இருப்பதைக் கண்டேன். இச்செய்தியை மக்களிடம் தெரிவித்த போது அவர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அறிவிப்பவர்: அப்துற் றஹ்மான் இப்னு உமாரா
நூல்: இப்னு அஸாகிரின் தாரீக்.
ரியாத் நகரில் மக்தபா அஸ்ஸுதியில் பாதுகாக்கப்பட்டுள்ள 'அஹ்காமு தமன்னில் மவ்த்' பார்க்கவும். ஷெய்கு அப்துர் ரஹ்மான் ஜத்ஹான், ஷெய்கு அப்துல்லாஹ் அல்ஜப்ரீன் ஆகியோர் இதனை சோதித்து உறுதி செய்துள்ளனர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்தான் இதன் ஆசிரியர் எனவும், இதிலுள்ளவை அனைத்தும் உண்மை எனவும் நூல் தொகுப்பிற்கு வழங்கிய முன்னுரையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றும்.
நன்றி: அல்-மின்ஹாஜ் 05
அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி,
திருவிதாங்கோடு, குமரி மாவட்டம்.