அகீகா, உளுஹிய்யாவின் சட்டதிட்டங்கள்- Law of Qurbani and Akeekah

அகீகா, உளுஹிய்யாவின் சட்டதிட்டங்கள்- Law of Qurbani and Akeekah

By Sufi Manzil 0 Comment August 27, 2011

குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். – 22:34

(நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக!-108:3

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹவிற்குப் பிரியமான வேறு எந்த செயலும் இல்லை. (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமை நாளில் அவைகளின் கொம்புகளுடனும், கால் குழம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – நூல்: திர்மிதி.

உளுஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மையை நாங்கள் பெறுவோம்? என்று ஸஹாபாக்கள் வினவியபோது, அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மையுண்டு’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள். -நூல்: இப்னுமாஜா.

ஷாபிஈ மத்ஹபின் சட்டங்கள் இங்கு விபரிக்கப்படுகிறது.

ஆகவே ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் துல்ஹஜ் 11,12,13 ஆகிய நாட்களில் தனக்கும் தன்னிடமிருந்து ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் தேவையான செலவு போக, பணம் மீதியிருந்தால் மட்டும் குர்பானி கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும். இவர்கள் அனைவருக்குமாகவும் ஒரேயொரு குர்பானி போதுமாகும். ஹஜ்ஜுப் பொருநாளன்று செய்யப்படும் தருமங்களிலேயே குர்பானி கொடுப்பதுதான் சிறந்தது. வசதி வாய்ப்பு இருந்தும் குர்பானி கொடுக்காமலிருப்பது மக்ரூஹ் ஆகும்.

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து துல்ஹஜ் பதிமூன்றாம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்வுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதற்கு குர்பானி என்று பெயர். இதே பொருளில்தான் உள்ஹிய்யா என்று வார்த்தை உள்ளது.

குர்பானிக்குரிய பிராணிகள்:

உண்பதற்கு ஆகுமான பிராணிகளிலிருந்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத் தான் குர்பானியாக கொடுக்க முடியும். ஐந்து வயது நிறைந்த ஒட்டகமும், இரண்டு வயது நிறைந்த மாடு, வெள்ளாடும், ஒரு வயது நிறைந்த அல்லது முன்பற்கள் விழுந்த செம்மறி ஆடும் குர்பானி கொடுப்பதற்குத் தகுதியானவை ஆகும். இதற்குக் குறைந்த வயதுள்ள பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடாது. ஏழு நபர்களுக்காக ஓர் ஒட்டகத்தையோ அல்லது ஓர் மாட்டையோ குர்பானி கொடுக்கலாம். ஆனால் ஓர் ஆட்டை  ஒரு நபருக்காக மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ அல்லது மாட்டையோ குர்பானி கொடுப்பதை விட தனிநபருக்காக ஒரு ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு கொடுப்பது சிறந்தது.

தகுதியில்லாத பிராணிகள்:

எலும்பினுள் உள்ள ஊண் உருகிய மிக மெலிந்த அல்லது வாலோ, செவியோ அறுக்கப்பட்ட அல்லது கண்ணே இல்லாத அல்லது பார்வை இழந்த அல்லது நொண்டியான அல்லது வெளிப்படையாக சதைப் பிடிப்பைத் தடுக்கும் நோயுள்ள அல்லது கர்ப்பமான பிராணிகள் குர்பானி கொடுப்பதற்கு தகுதியில்லாதவையாகும்.

கொம்பில்லாத அல்லது கொம்பு முறிந்த அல்லது பற்கள் இல்லாத அல்லது காய் அடிக்கப்பட்ட பிராணிகளைக் குர்பானி கொடுப்பது கூடும்.

குர்பானி கொடுக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கொடுத்தால் அதாவது நேரம் தவறி கொடுத்தால் அல்லது குர்பானிக்கு தகுதியில்லாத பிராணிகளைக்  குர்பானி கொடுத்தால் அது குர்பானி ஆகாது. குர்பானி கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் துல்ஹஜ் பிறை 13வது நாள் சூரியன் மறைந்த பின்பும் அதை ‘களா’ என்ற அமைப்பில் குர்பானி கொடுப்பது கடமையாகும்.

ஏதாவது ஒரு செயல் நிறைவேறினால் குர்பானி கொடுப்பேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்தச் செயல் நிறைவேறிய பின் குர்பானி கொடுப்பது கடமையாகும். சுன்னத்தான உளுஹிய்யா கொடுக்க நாடியிருக்கிறேன் என்று சொல்வதற்குப் பதிலாக உளுஹிய்யா கொடுக்க நாடியிருக்கிறேன் என்று கூறினால் அல்லது இந்த வருடம் உளுஹிய்யா கொடுக்கப் போகிறீர்களா? என்று ஒருவர் கேட்க அதற்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால், அந்த உளுஹிய்யாவை கொடுப்பது கடமையாகிவிடும்.

கடமையான இந்த உளுஹிய்யாவின் இறைச்சியினை சிறிதும் உண்பதும் ஹராமாகும். எனவே அவை முழுமையும் தர்மம் செய்து விடுவது அவசியமாகும். ஆகவே வாயால் கூறும் போது சுன்னத்தான உளுஹிய்யா என்று கூறுவது அவசியமாகும். இவ்வாறு சுன்னத்தான உளுஹிய்யா என்று கூறும்போது மட்டும் அதன் இறைச்சியிலிருந்து மூன்றில் ஒரு பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு.

சுன்னத்தான உளுஹிய்யா கொடுக்கும்போது அதன் இறைச்சியை சமமான மூன்று பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு அறமாகவும், இன்னொரு பங்கை சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும், மூன்றாவது பங்கை தங்களது சொந்த பயனுக்காகவும் எடுப்பது சுன்னத்தாகும். ஆனால் குர்பானி பிராணியின் ஈரலை மட்டும் உண்பதற்காக வைத்துக் கொண்டு இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு தர்மமாகவும், சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதே சிறப்பானதாகும்.

குர்பானி இறைச்சியை காபிர்களுக்கு கொடுப்பது கூடாது. குர்பானிக் கறியை பல ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுப்பது கடமையில்லை. ஒருவருக்கே கொடுத்தாலும் கூடும். அதைப் பெற்றுக் கொண்டவர்கள் அதை விற்றுவிட்டாலும் கூடும். குர்பானித் தோலை தர்மம் செய்து விட வேண்டும். அல்லது அதை தனது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தோலை தமது தேவைக்காக விற்பதற்கோ அல்லது அறுப்பதற்கும் உரிப்பதற்கும் கூலியாக கொடுப்பதோ கூடாது.

ஒருவர் உளுஹிய்யா கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து அவர் தனது உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். மற்றும் நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். – நூல்: முஸ்லிம்.

ஆகவே துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை உடல் ரோமங்களைக் களையாமலிருப்பதும், நகம் வெட்டாமலிருப்பதும் சுன்னத்தாகும். இதற்கு மாற்றம் செய்வது மக்ரூஹ் ஆகும்.

நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தங்கள் புனிதக் கரங்களால் அறுத்திருக்கிறார்கள். ஆகவே அறுப்பதற்கு வலுவுள்ள ஆண்கள் தாமாகவே குர்பானி பிராணிகளை அறுப்பது சுன்னத்தாகும்.

பகல் நேரத்தில் அறுப்பதும், பெருநாள் தொழுது முடித்த பின்பு அறுப்பதும், குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்தும் மற்றும் அறுப்பவர் பிராணியை முன்னோக்கி நின்றவாறு அறுப்பதும்,

அறுக்கும்போது…

بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ سَلَّمْ . اَللّٰهُمَّ هٰذَا مِنْكَ وَاِلَيْكَ فَتَقَبَّلْ مِنِّىْ .

என்று ஓதிக் கொள்வதும், கொழுத்த பிராணியைக் குர்பானியாக அறுப்பதும் சுன்னத்துகளாகும்.

அகீகா:

குழந்தை பிறந்ததும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நிஃமத்தை எடுத்தும் காட்டும் வகையில் ஆடோ, மாடோ, ஒட்டகமோ அறுத்துப் பலியிடுவதற்கு அகீகா என்று பெயர்.

‘ஆண் குழந்தை பிறந்ததற்காக (குர்பானிக்கு) தரமான இரண்டு ஆடுகளையும், பெண் குழந்தை பிறந்ததற்காக ஓர் ஆட்டையும் அறுத்து கொடுக்க வேண்டும்’ என அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்ததாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.  – நூல்: திர்மிதி.

பிறந்த குழந்தை அதற்குரிய அகீகாவைக் கொண்டு ஈடு வைக்கப்பட்டிருக்கிறது’ என்றால் அகீகாவை செலுத்தும் வரை மறுமை நாளில் பெற்றோருக்காக பிள்ளைகள் மன்றாட மாட்டார்கள் (ஷபாஃஅத் செய்ய மாட்டார்கள்) என்பது பொருளாகும்’ என்று அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் தருகிறார்கள். ஆகவே பிள்ளைகளுக்காக அகீகா கொடுப்பது பெற்றோர்களுக்கு சுன்னத்தாகும். பிள்ளை பிறந்து பருவ வயதை அடையும் வரை இந்த அகீகாவை செலுத்துவது பெற்றோர் மீது சுன்னத்து. பெற்றோர்களினால் அகீகா செலுத்தப்படாத போது பருவம் அடைந்த பின்பு தனக்குரிய அகீகாவை தானே செலுத்துவது சுன்னத்தாகும்.

குர்பானி கொடுப்பதற்கு தகுதியான பிராணிகளே அகீகா கொடுப்பதற்கும் தகுதியானவை ஆகும். அகீகா இறைச்சியை குர்பானி இறைச்சியைப்போல் மூன்று பங்குகளாக பிரித்து ஏழைகளுக்கு அறமாகவும், சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும், தமது சொந்த தேவைக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். அகீகாவை நேர்ச்சை செய்தாலோ அல்லது சுன்னத்தான அகீகா என்று கூறாமல், ‘அகீகா கொடுப்பேன்’ என்று கூறினாலோ, ‘இந்த அகீகாவாக ஆக்கினேன்’ என்று கூறினாலோ அல்லது கேட்பவருக்கு, பதிலில் ‘அகீகா கொடுக்கப் போகிறேன்’ என்று கூறினாலோ ஆக இந்த நான்கு அமைப்புகளிலும் அகீகா கொடுப்பது ஃபர்ளாகும்.  அந்த இறைச்சியை சாப்பிடுவது ஹராமாகும். முழுவதும் தர்மம் செய்து விட வேண்டும்.

அகீகாவின் பெரும்பாலான சட்டவிதிகள் குர்பானியின் சட்ட விதிகளைப் போன்றதாகும். எனினும் அகீகா பிராணியை அறுத்த பின்பு அதன் எலும்புகளை முறிக்காமல் முழுமையாகவும், அதன் இறைச்சியை சமைத்தும் கொடுத்து அனுப்புவது சிறப்பானதாகும். அகீகாவிற்கு காலவரையறை இல்லை. இதன் முழுப் பகுதியையும் சுற்றத்தார்களுக்கு கொடுத்தாலும் அகீகா கூடுமாகிவிடும். ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பது அவசியமில்லை.

குழந்தை பிறந்ததும் ஏழாவது நாள் அகீகாவை செலுத்துங்கள். குழந்தையின் தலைமுடியை களையுங்கள். அவர்களுக்கு (நற்) பெயர் சூட்டுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.-நூல்: திர்மிதி.

குழந்தை பிறந்து இறந்து விட்டாலும், அகீகா கொடுப்பதும் அதற்குப் பெயர் வைப்பதும், விழுகட்டிகளுக்கும் கூட பெயர் வைப்பதும் சுன்னத்தாகும்.