மீசை முழுவதும் செரைக்கலாமா? & தாடி கத்தரிக்கலாமா?
By Sufi Manzil
கேள்வி: மீசை முழுவதும் செரைக்காலமா & தாடி கத்திரிக்காலமா ஆண்கள் மொட்டை போடலாமா?
misbah rahman misbahrahman.s@gmail.com Sat, Aug 20, 2011 at 10:07 AM
பதில்:
தாடி, மீசை, தலைமுடி வளர்த்தல், மொட்டை அடித்தல் பற்றிய விளக்கம்:
தாடி, மீசை:
நமது மார்க்கத்தில் புற அலங்காரம் என்னும் தன்னை அழகுபடுத்துதல் பற்றி நிறை ஹதீதுகள் காணக் கிடைக்கின்றன. அதில் தாடி, மீசை, மொட்டை அடித்தல் பற்றிய விபரங்களை இதில் தருகிறோம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
'மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!'
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
'அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்' மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்' என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, 'நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத்
'இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்' அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : புகாரி (5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்:
'மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்' அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம் ( 435 )
தாடியை வளர்த்துக் கொள்ள சொல்லியிருக்கும் நபிகளார் தாடியை சிரைப்பதை இதனால் தடுத்திருக்கிறார்கள். அவர்கள் தாடியை அழகுபடுத்தவும் சொல்லியிருக்கிறார்கள். அதை அழகாக கத்தரித்துக் கொண்டிருக்கும்; வழிமுறையைப் பாருங்கள்:
'இப்னு உமர்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்' அறிவிப்பவர் : நாபிவு(ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : புகாரி, முஅத்தா
'இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்' என்று மர்வான்( ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)
ஸாலிம் இப்னு அப்துல்லா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், இஹ்ராம் கட்டுவதற்கு முன், தனது தாடியில் சிறிது குறைத்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் மாலிக்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது முஅத்தாவில் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் ஒரு ஸஹாபி தாடி இல்லாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்தில் ஆஜரானபோது, நபிகள் நாதர் தங்கள் முகத்தை திருப்பிக் கொண்ட ஹதீதும் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவர்களின் கருணை முகம், கடைக்கண் பார்வை நம் மீது பட்டுவிடாதா என்று ஏங்கித தவித்துக் கொண்டிருக்கிறோமோ அவர்களின் முகம் நம்மைக் கண்டு வெறுப்புற வைக்கலாமா? எனவே தாடியை வளர்ப்பது அவசியமானதாகிறது.
தலைமுடி:
நபிகளார் கிர்தா என்று சொல்லும் அமைப்பில் தலைமுடி வளர்த்திருக்கிறார்கள். அதை அழகுப் படுத்தியும் இருக்கிறார்கள். ஆகவே கிர்தா வளர்ப்பது சுன்னத்தாகும்.
'நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடி தோள்புஜத்தில் படும் அளவுக்கு இருந்தது' அறிவிப்பவர்: அனஸ்( ரழியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்
'நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடி இரண்டு காதுகளின் பாதி அளவு வரை இருந்தது.' அறிவிப்பவர்: அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: முஸ்லிம்
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தலையைப் படிய வாரி இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு உமர்( ரழியல்லாஹு அன்ஹு) நூல் : புகாரி.
'நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தலைக்கு அதிக அளவில் எண்ணெய் தேய்ப்பவர்களாக இருந்தனர்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) நூல் : ஷரஹுஸ்ஸுன்னா
'யாருக்கு முடி இருக்கின்றதோ அதற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும்' என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூது
'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அடர்ந்த முடி உள்ளது. அதை நான் சீவிப் கொள்ளலாமா?' என்று அபூகதாதா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்! அதற்கு மதிப்பளித்துக் கொள்!' என்று கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்படிச் சொல்லிவிட்ட காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட அவர் எண்ணெய்த் தேய்ப்பார். அறிவிப்பவர்: அபூகதாதா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்: முஅத்தா
'ஒரு மனிதன், விட்டு விட்டே தவிர (தொடர்ந்து) சீவிக் கொண்டிருப்பதை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்துள்ளனர்' என்று அப்துல்லாஹ் இப்னு முகப்பல்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதீ, அபுதாவூது, நஸயீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தலையில் ஒரு பகுதியைச் சிரைத்து விட்டு இன்னொரு பகுதியை சிரைக்காமல் விடுவதை தடுத்துள்ளனர்'.
அறிவிப்பவர்: இப்னு உமர்( ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
'பெண்கள் தலைமுடியை சிரைப்பதை (மொட்டை அடிப்பதை) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்தனர்'.
அறிவிப்பவர்: அலீ(ரழியல்லாஹு அன்ஹு) நூல்: நஸயீ.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பள்ளியில் இருக்கும் போது, தாடியும், தலை முடியும் பரட்டையாக ஒருவர் வந்தார். அவரது தலை முடியையும், தாடியையும் சீர் செய்யும்படி அவருக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உணர்த்தினார்கள். அவர் அவ்வாறு செய்து கொண்டு பின்னர் திரும்பி வந்தார். அப்போது (அவரைப் பார்த்து) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஷைத்தானைப் போல் பரட்டைத் தலையராக வருவதை விட இது சிறப்பாக இல்லையா?' என்று கேட்டனர்.
அறிவிப்பவர்: முஅத்தா இப்னு யஸார் நூல் : முஅத்தா
மொட்டை அடித்தல்:
தலைமுடி வளர்க்கச் சொன்ன நபிகளார் அவர்கள் மொட்டை அடிப்பதை விரும்பவில்லை. அவர்கள் தமது வாழ்க்கையில் நான்கு முறை முடிகளை களைந்துள்ளார்கள்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ம் அவர்கள் அருகில் இருந்தேன். அவர்களின் திருமுடிகளை நாவிதர் களைந்து கொண்டிருக்கையில் ஸஹாபாக்கள் அவர்களைச் சுற்றி வந்து ஒரு முடி கூட கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக கைகளை ஏந்திக் கொண்டு இருந்தார்கள். அத்திருமுடிகளை பெறுவதில் போட்டி போட்டுக் கொண்டார்கள். இவ்வொருவரும் தனக்கு கிடைத்த முடிகளை பாதுகாத்து பரக்கத் பெற்று வந்தார்கள். -முஸ்லிம் பாகம் 15 பக்கம் 82.
மேலும் மொட்டை அடித்து வலம் வரும் கூட்டத்தை வழிகெட்ட கூட்டத்தின் அடையாளமாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஷரீக் இப்னு வஹ்ஹாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நபிகளார் தம் தோழர்களை நோக்கி,….
இறுதி காலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும். இவனும் அக்கூட்டத்தைச் சார்ந்தவனே. அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது. இலக்கை நோக்கிச் செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியாகி விடுவார்கள். அவர்களின் முக்கியமான அடையாளம் மொட்டையடிப்பதாகும். அவர்கள்; தொடர் கூட்டமாக கிளம்புவார்கள். அப்படியே அவர்களின் கடைசிக் கூட்டம் தஜ்ஜாலுடன் சென்று இணையும். நீங்கள் அவர்களை சந்தித்தால் உங்களை விட கீழ்த்தரமான நடத்தையுள்ளோராக அவர்கள் இருப்பார்கள் என்று கூறினர்.
(ஆதாரம்: மிஷ்காத் பக்கம் 309)
ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரி ரலியல்லாஹு அன்{ஹ அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லா{ஹ அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது உம்மத்தில் பிரிவினையும், வேற்றுமையும் எழுதப்பட்ட ஒன்றாகும். அதன்படி ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களின் வெளித்தோற்றம் மற்றவர்களை கவரும். ஆற்றல் நிறைந்த அவர்களது பேச்சுக்கள் கேட்போருக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் அவர்களின் நடத்தை கெட்டவைகளாகயிருக்கும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. வில்லை விட்டுப் பாய்ந்து செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விட்டு வெளியேறிவிடுவார்கள். எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லுக்குத் திரும்பாதோ, அவ்வாறே தீனின் பால் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமாகாது. குணத்திலும், செய்கையிலும் மிக மோசமானவர்களாயிருப்பார்கள்.அவர்கள் ஜனங்களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் தீனுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. யார் அவர்களுடன் போர் புரிவார்களோ, அவர்கள் இறைவனுடன் மிக நெருங்கியவர்களாகயிருப்பார்கள் என்று நபிகளார் சொல்ல அதற்கு தோழர்கள்,….. நாயகமே! அவர்களின் முக்கிய அடையாளமென்ன? என்று வினவிட,…. அதற்கு நபிகளார் அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும் என்று நவின்றனர்.
(ஆதாரம்: மிஷ்காத், பக்கம் 308)
அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டை அடித்தல் என்னும் நபிகளாரது வாக்கு நஜ்து தேசத்திற்கே முற்றிலும் பொருந்தும். ஏனெனில் அவர்கள் தம்மை பின்பற்றுவோரை மொட்டையடிக்கும்படி கூறுகின்றனர். நபிகளாரின் இவ்வடையாளக் குறிப்பு காரிஜிய்யாக்களிடமோ, வேறு எந்த கீழ்மட்டத்தாரிடமும் காணப்படவில்லை. இப்பழக்கம் வஹ்ஹாபிய நஜ்திகளிடம் மட்டுமே குறிக்கோளாக காணப்படுகிறது.
(ஆதாரம்: அல்புதுஹாதுல் இஸ்லாமிய்யா, பாகம் 2, பக்கம் 268)
ஆகவே மொட்டை அடித்துக் கொண்டு இருப்பது கூடாது.
இதுபோன்ற ஹதீது ஆதாரங்களிலிருந்து நமது இமாம்கள் இதுபற்றிய சட்டங்களை விபரித்துத் தந்திருக்கிறார்கள். மஙானி என்ற ஷாபி மத்ஹப் சட்ட நூலில் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது, மீசையை உதட்டின் ஓரம் தெரியும் அளவுக்கு கத்தரிப்பது, தலையிலும் தாடியிலும் உள்ள நரைக்கு சிகப்பு அல்லது மஞ்சள் சாயம் பூசுவது, தலை தாடி முடிகளை சீப்பு கொண்டு விடுத்து சீவுவது, பெண்களுக்கு தாடி,மீசை முளைத்தால் அதனைப் பிடுங்குவது ஆகியவைகளை சுன்னத் என்கிறார்கள்.
எவரேனும் ஒருவர் புதன்கிழமைகளில் வாரத்திற்கு ஒரு தடவை வீதம் நாற்பது தடவை தலைமுடி இறக்கினால், அவர் ஃபிக்ஹில் பெரிய அறிவாளியாகிவிடுவார் என்று 'கலாயித்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
மார்க்கத் தீர்ப்பின்படி தாடியை சிரைப்பது ஹராமாகும். அவ்வாறே கருப்பு மையினால் சாயம் பூசுவதும், தலைமுடியுடன் நஜீஸான முடியை அல்லது வேறு மனிதருடைய முடியைச் சேர்ப்பதும் ஹராமாகும்.
தொண்டைக்கு மேலுள்ள தாடிமுடியை நீக்குவதும், தலைமுடியில் ஒரு பகுதியை சிரைத்து, மற்றொரு பகுதியை விட்டுவிடுவதும் மக்ரூஹ் ஆகும் என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் நல்லோர்கள் வழியில் நடாத்தாட்டி வைப்பானாக! ஆமீன்.