இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும், முக்கிய பிரார்த்தனைகளும்!
By Sufi Manzil
நம்மைப் படைத்த இறைவனிடம் நமது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள், கெடுதிகள் நீங்கவும் பிரார்த்தனைப் புரிகிறோம். அதாவது துஆ கேட்கிறோம். இதன் சிறப்புகள் என்ன? இதற்கு தக்க பலன் உண்டா? என்பது பற்றியும் சில முக்கியமான துஆக்கள் பற்றியும் இக்கட்டுரையில், அல்லாமா முஹம்மதுப்னு முஹம்மதுப்னு அல்ஜஸ்ரீ ரலியல்லாஹு அன்ஹு (ஹிஜ்ரி 833 ல் திமிஷ்க்-டாமஸ்கஸ் நகரில் பிறந்து, ஷீராஜ் நகரில் மறைந்தார்கள்) என்ற மகான் அவர்களால் ஸஹீஹான ஹதீதுகளிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த நூலிலிருந்து ‘அல்ஹிஸ்னுல் ஹஸீன்’ என்ற கிரந்தத்திலிருந்து சேகரிக்கப்பட்டு தொகுத்தளிக்கப்படுகிறது.
நாயகம் ஸல்ல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளதாவது, ‘துஆக் கேட்பதாகிறது அதுவே வணக்கமாகும். என்று கூறியனின், பின்வரும் ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
‘நீங்கள் என்னை அழையுங்கள். (என்னிடம் துஆ கேளுங்கள்) நான் உங்களுக்கு பதில் கூறுகிறேன். எங்கள் துஆவை ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயமாக எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்hரோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக விரைவினில் நரகினில் நுழைவார்கள் என்று உங்களுடைய ரப்பு கூறுகிறான்.’ -அல்குர்ஆன் 40:60
மற்றொரு ஹதீதில் ‘உங்களிலிருந்து எவரேனும் ஒருவருக்கு துஆவின் கதவு திறக்கப்பட்டால் (அதாவது துஆக் கேட்;கும் வாய்ப்புக் கிடைத்து விட்டால்) அவருக்கு ஏற்றுக் கொள்ளுதல் என்ற கதவு திறக்கப்பட்டு விடும் என்று அருளியுள்ளார்கள்.
அல்லாஹுத்தஆலாவிடம் கேட்கப்படும் துஆக்களில் உடல் நலத்தைக் கேட்பதை விட அவனுக்கு விருப்பமானது எதுவுமில்லை என்று மற்றொரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் அல்லாஹுத் தஆலாவிடம் துஆவை விட மிக சங்கைக்குரிய பொருள் வேறெதுவுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்விடம் துஆக் கேட்கும் விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்களாக ஆகிவிடாதீர்கள். ஏனெனில், துஆ கேட்டுக் கொண்டிருக்கும் எவரும் அழிவுக்குரியவராக ஆகிவிடமாட்டார்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
மற்றொரு அறிவிப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆவாகிறது முஃமினுடைய ஆயுதமாகவும், தீனுடைய தூணாகவும், வானங்கள், பூமியினுடைய ஒளியாகவும் இருக்கின்றது’ என்று கூறியுள்ளார்கள்.
மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ்வுடைய ‘களா’ என்னும் விதிப்பை துஆவைத் தவிர வேறெதுவும் தடுத்து விட முடியாது. நன்மை செய்வதைத் தவிர வேறெதுவும் வயதை அதிகப்படுத்தி விடாது’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
வேறொரு அறிவிப்பில், ‘அல்லாஹ்வுடைய களா கத்ரை விட்டும் (விதிப்பை விட்டும்) தப்பித்தல் முடியாது. எனினும், துஆவாகிறது வந்துவிட்ட துன்பத்தையும் இனி வரவிருக்கிற துன்பத்தையும் நீக்குவதில் மிக்கப் பலன் தரக்கூடியதாகும். துன்பமாகிறது வானிலிருந்து இறங்குகிறது. அதே நேரத்தில் அடியான் கேட்கும் துஆவாகிறது மேலே செல்லுகிறது.அப்பொழுது அந்தத் துன்பமும், இந்த துஆவும் இரண்டும் சந்தித்து மோதிக் கொள்கின்றன.(அந்தத் துன்பத்தை கீழே இறங்க விடாமல் இந்த துஆ தடுத்து விடுகிறது. எனவே துஆவின் பொருட்டால் அடியான் துன்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுகிறான்.) கியாமத்து நாள் வரை இந்நிகழ்ச்சி இவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கும்’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியிருக்கிறார்கள்.
துஆ கேட்பதின் ஒழுக்கங்கள்:
1. உண்ணுவது, குடிப்பது, ஆடைகள் அணிவது, சம்பாதிப்பது ஆகியவற்றில் ஹராமைத் தவிர்த்திருக்க வேண்டும்.
2. அல்லாஹு தஆலாவிற்காக (இக்லாஸ் என்னும்) மனத் தூய்மையுடன் இருக்க வேண்டும்.
3. துஆக் கேட்பதற்கு முன்னால் ஏ தாவது ஒரு நற்செயலை செய்வது (தருமம் செய்தல், நபில் தொழுதல் போன்று) துஆ கேட்கும்போது அந்த நற்செயல்களைக் கூறி அதன் பொருட்டால் துஆ கேட்பது.
4. அசுத்தங்களை விட்டும், அழுக்குகளை விட்டும் பரிசுத்தமாக இருப்பது.
5. உஓச் செய்து கொள்வது.
6. கிப்லாவை முன்னோக்குவது.
7. துஆவின் ஆரம்பத்திலும் கடைசியிலும் அல்லாஹ்வைப் புகழ்வது.
8. அவ்வாறே ஆரம்பத்திலும் கடைசியிலும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
9. இரண்டு கைகளையும் விரித்தவாறு தோள் புஜத்திற்கு நேராக உயர்த்தி அல்லாஹ்வின் சந்நிதானத்திற்குரிய ஒழுக்கத்துடன் பயபக்தியுடன், தாழ்மை பணிவுடன் துஆக் கேட்பது.
10. வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்தாமலிருப்பது.
11.அஸ்மாவுல் ஹுஸ்னா மற்றும் அல்லாஹ்வுடைய சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றைக் கூறி துஆ கேட்பது.
12. நபிமார்கள், இறைநேசர்கள் மற்றும் அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் பொருட்டால் துஆ கேட்பது.
13. சப்தமிடமால் மெதுவான குரலில் துஆ கேட்பது.
14. எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கிய கருத்துக் கொண்ட வாசகங்களைக் கொண்டு துஆ கேட்பது.
15. முதலில் தனக்காகவும், பிறகு தன் பெற்றோருக்காகவும், பிறகு முஃமினான சகோதரர்களுக்காகவும் துஆ கேட்பது.
16. இமாமமாக இருப்பவர் தனக்காக மட்டும் துஆ கேட்காமல் அனைவருக்காகவும் துஆ கேட்பது.
17. நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உறுதியுடனும், ஆசையுடனும், ஆர்வத்துடனும் கேட்பது.
18. மன ஓர்மையுடனும் ஆதரவுடனும் நன் முயற்சியைக் கொண்டு இதயப் பூர்வமாக துஆ கேட்பது.
19. முக்கியமான துஆவை மடக்கி மடக்கி கேட்பது. இதில் குறைந்தபட்சம் மூன்றுமுறை கேட்பது.
20. பாவகாரியங்களுக்கோ, உறவினர்களை துண்டிக்கவோ துஆ கேட்காமலிருத்தல்.
21. முடிந்து விட்ட காரியத்தைப் பற்றி (அது நிகழாமல் இருந்தால் நன்றாக இருக்கும். இது நிகழ்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று )துஆக் கேட்காமலிருத்தல்.
22. துஆ செய்பவரும் அதனைக் கேட்பவரும் ஆமீன் எனக் கூறுதல்.
23. துஆ முடிந்தவுடன் தன் இருகைகளையும் முகத்தில் தடவுதல்.
துஆ ஏற்கப்படும் நேரங்கள்:
1. லைலத்துல் கத்ருடைய இரவு.
2. அரபா நாளின் பகல்.
3. ரமலான் மாதம்.
4. ஜும்ஆ நாளின் இரவு மற்றும் பகல்.
5. ஒவ்வொரு நாளின் இரவின் பிற்பாதி.
6.இரவின் மூன்றிலொரு பாகத்தில் முற்பகுதி.
7. இரவின் மூன்றிலொரு பாகத்தில் கடைசிப் பகுதி.
8. இரவின் நடுநிசி.
9. இவ்வொரு நாளும் ஸஹ்ருடைய நேரம்.
10. ஜும்ஆ தினத்தில் துஆ ஒப்புக் கொள்ளப்படக் கூடிய நேரம். உலமாக்களிடையே இதில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளது. அவை:
இமாம் குத்பாவுக்காக மிம்பரின் மீது உட்கார்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரையுள்ள நேரம்.
ஜும்ஆ தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரையுள்ள நேரம்.
ஜும்ஆ நாளில் தொழுபவராக நின்றிருக்கும் நிலையில் துஆ கேட்கும் நேரம்.
ஜும்ஆ நாளில் அஸருக்குப் பின் சூரியன் மறையும் வரையுள்ள நேரம்.
ஜும்ஆ நாளில் பஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரையுள்ள நேரம்.
ஜும்ஆ நாளில் சூரியன் உதயமான பிறகு உள்ள நேரம்.
சூரியன் நடுஉச்சியை விட்டுச் சாய்ந்ததிலிருந்து ஒரு முழம் அளவுக்குச் சாய்கின்ற நேரம்.
இமாம் ஜும்ஆத் தொழுகையில் சூரத்துல்’ பாத்திஹா ஓதத் தொடங்கியதிலிருந்து ஆமீன் கூறும் வரையிலுள்ள நேரம்.
இமாம் குத்பா ஓதுவதற்காக மிம்பர் மீது ஏறியதிலிருந்து தொழுகை முடியும் வரையுள்ள நேரம். இதனை அபூ மூஸா அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருப்பதாக முஸ்லிம் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது.
துஆ ஏற்கப்படும் நிலைகள்:
1. தொழுகைக்காக பாங்கு சொல்லப்படக் கூடிய நேரம் (பாங்கு சொல்லி முடித்த பின் கேட்கும் துஆ)
2. பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியிலுள்ள நேரம்.
3. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்திற்காக அணிவகுத்து நிற்கும் நேரத்தில்.
4. போர்க்களத்தில் எதிரிகளுடன் மோதும் நேரத்தில்.
5. பர்ளான தொழுகை முடிந்தபின்.
6. ஸஜ்தா செய்யும் போது.
7. குர்ஆன் ஓதிய பின்.
8. ஜம்ஜம் தண்ணீர் குடிக்கும்போது.
9. கஃபாவை கண்ட நேரத்தில்.
10. சேவல் கூவும் நேரத்தில்.
11. முஸ்லிம்கள் நல்ல காரியத்திற்காக ஒன்று கூடும்போது.
12. திக்ருடைய சபைகளில்.
13. தொழுகையில் பாத்திஹா ஓதும் இமாம் வலள்ளாலீனு; என்று கூறிய பின்.
14. இறந்தவரின் கண்களை கசக்கி மூடுகின்ற நேரத்தில்.
15. தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுகின்ற நேரத்தில்.
16. மழை பெய்கின்ற ஆரம்ப நேரத்தில்.
17. கஃபாவைக் காணும் நேரத்திலும், குர்ஆனில் அல் அன்ஆம் என்ற ஸூரத்திலுள்ள ‘மித்ல மாஊத்திய ருஸுலுல்லாஹ் அல்லாஹு அஃலமு ஹைது யஜ்அலு ரிஸாலதஹீ…’ என்ற ஆயத்தில் இரண்டு தடவை கூறப்பட்டுள்ள அல்லாஹ் என்ற இரண்டு வார்த்தைகளுக்கு மத்தியிலும்; துஆ கேட்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது. இதுஅனுபவப்பூர்வமானது.
துஆ ஏற்கப்படும் இடங்கள்:
நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லா ஷரீபில் நின்று கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். பொதுவாக புனித இடங்கள் அனைத்திலும், குறிப்பாக இறைநேசர்களது மக்பராவில் நின்று கேட்கும் துஆவும் ஏற்றுக் கொள்ளப்படும். மக்கமா நகரில் 15 இடங்களில் துஆ ஏற்கப்படும் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
1. தவாபு செய்யுமிடத்தில்.
2. முல்தஜிம் என்ற இடத்தில் (ஹஜருல் அஸ்வத்திற்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள இடம்)
3. மீஜாபிற்கு கீழுள்ள இடம் (மீஜாப் என்பது கஃபாவின் மீதிருந்து தண்ணீர் கீழே விழுவதற்குரிய குழாய்)
4. கஃபாவின் உட்பகுதியில்.
5. ஜம்ஜம் கிணற்றின் அருகில்.
6,7. ஸபா, மர்வா என்னும் இரு மலைகளின் மீது.
8. ஸபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஸயீ செய்கின்ற இடத்தில்.
9. மகாமே இப்றாஹீமுக்குப் பின்னால்.
10. அரபா மைதானத்தில்.
11. முஜ்தலிபாவில்.
12. மினாவில்.
13, 14, 15 மினாவிலுள்ள ஜம்ராத் எனப்படும் கற்கள் எறியப்படும் மூன்று இடங்களில்.
துஆ ஏற்கப்படும் மனிதர்கள்:
1. நிர்ப்பந்தமான துன்பத்தில் அகப்பட்டுள்ளவன்.
2. அநீதி இழைக்கப்பட்டவன். அவன் பாவியாக, காபிராக இருந்தாலும் சரி.
3. மக்களுக்காக துஆ செய்யும் தந்தை.
4. நீதியுள்ள அரசன்.
5. நல்லொழுக்கமுள்ள சாலிஹான மனிதர்.
6. பெற்றோருக்கு உபகாரியாக நடந்து கொள்ளும் பிள்ளை.
7. மார்க்க முறைப்படி வெளியூர் செல்லும் பிரயாணி.
8. நோன்பு திறக்கும் திறக்கும் நேரத்தில் நோன்பாளி.
9. ஒரு முஸ்லிமுக்கு மறைமுகமாக துஆ செய்யும் மற்றொரு முஸ்லிம்.
10. அநியாயத்திற்கோ, உறவினரைத் துண்டித்துக் கொள்வதற்கோ துஆக் கேட்காமல் இருக்கும் ஒரு முஸ்லிம் துஆ செய்கிறேன் அது ஏற்றுக் கொள்ளப்படுவதே இல்லை என்று சலித்துக் கொள்ளாதவர்.