இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்கள்.

இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்கள்.

By Sufi Manzil 0 Comment July 1, 2011

இல்முல் ஃபராயிழை நீங்களும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் (கியாமத் நாள் நெருங்க நெருங்க) இல்முகள் கைப்பற்றப்படும். குழப்பங்கள் உண்டாகும். இருவர் பாகப்பிரிவினையில் தர்க்கித்துக் கொள்ள அவர்களுக்கிடையில் (தர்க்கங்களைத் தீர்த்து) தீர்ப்பு வழங்கும் நபரை அவர்கள் பெற மாட்டார்கள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(நூல்: ஹாகிம்)

மரணித்தவரின் சொத்திலிருந்து அவர் செலுத்த வேண்டிருந்த ஸகாத்தையும், அவர் மீது கடமையாகியிருந்த ஹஜ்ஜையும், கஃப்பாரா (குற்றப் பரிகாரங்)களையும் முதலாவதாக நிறைவேற்ற வேண்டும். பின்பு அவரது அசையும,
 அசையா சொத்துக்கள் ஈடு (அடைமானம் அல்லது ஒத்தி) வைக்கப்பட்டிருந்தால் அவற்றுக்குரிய பணத்தைச் செலுத்தி அவற்றை மீட்க வேண்டும். வியாபாரப் பொருட்களை அவர் வாங்கியிருந்து அவற்றுக்குரிய பணம் செலுத்தப்படாமலிருந்தால் அவற்றைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இதற்குப் பின் அவர் செலுத்த வேண்டிய கடன்களை (அது மனைவியின் மஹராக இருப்பினும்) செலுத்த வேண்டும். மரணித்தவரின் கபன், கப்ரு அடக்கம் ஆகிய செலவுகளையும் அதிலிருந்து செலவிட வேண்டும். இவற்றைக் கொடுத்தபின்பு மீதம் இருக்கும் சொத்தின் மூன்றில் ஒரு பகுதி அளவு கொண்டு மட்டும் மரணித்தவர் செய்திருக்கும் வஸியத்துக்களை (உயிலை) நிறைவேற்ற வேண்டும். வரிசைக்கிரமமாக இவற்றை செய்து முடித்தபின் மிஞ்சி இருக்கும் உடைமைகளை வாரிசுதாரர்கள்  அவரவர்களின் விகிதாச்சார அடிப்படையில் பங்கீடு செய்து கொள்ள வேண்டும்.

மரணித்தவருக்கு கடன் ஏதேனும் இருப்பின் அந்த அளவிற்கு சொத்தை விட்டு சென்றிருப்பின் அதிலிருந்து கடனை கொடுத்து விட வேண்டும். கடன் அடைக்கமுடியாத அளவுக்கு சொத்துக்கள் இருப்பின் வாரிசுதாரர்கள் அந்தக் கடனை ஏற்று செலுத்த வேண்டும்.

மரணித்தவரின் சொத்தில் வாரிசுரிமை பெறுவதற்குரிய காரணங்கள் நான்கு. அவை

1. முஸ்லிம்களால் பைஅத் வழங்கி கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் இல்லாததால் பைத்துல்மால் எனும் காரணம்.
2.போர்க்கைதிகள் என்னும் அடிமைகள் இல்லாததால் 'உரிமை விடுதல்' ஆகிய இரு காரணங்களும் இன்று நம் வழக்கில் இல்லை.
3. இரத்த சம்பந்தமான தாய் தந்தை வழி உறவின் முறை.
4. திருமண வழி உறவுச் சொந்தம் ஆகிய இரு உறவினர்கள் மட்டுமே தற்போது நடைமுறை வாரிசுகளாக உள்ளனர்.

வாரிசுகள்:

இவர்கள் மூன்று வகையினர் ஆவர்.

முதலாம் பிரிவினர் பங்குதாரர்கள். இவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்கைப் பெற உரிமையுள்ளவர்கள்.

இரண்டாம் பிரிவினர் அஸபா உறவினர்கள். இவர்களுக்கு பங்குகள் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட பங்குகளை அதன் உரிமையாளர்கள் பெற்ற பின்னர், எஞ்சியிருக்கும் எச்சத்திற்குரியவர்கள். நிர்ணயிக்கப் பெற்ற பங்குகளை அடையும் வாரிசுகளே இல்லாத போது அஸாபா வாரிசுகளே முழுச் சொத்துக்கும் உரியவர்களாவர்.

மூன்றாம் பிரிவினர் இரத்தத் தொடர்புடைய உறவினர்கள். பங்குதாரர்கள், எச்சதாரர்கள் ஆகிய இரு பிரிவினர்களும் இல்லாதபோது இவர்கள் தங்களுக்குரிய அளவு கொண்டு சொத்துக்களை பகிர்ந்து கொள்வர்.

ஆண் வாரிசுகள்:

1. மகன் 2.மகனுடைய மகன் மகனுடைய மகன் மகனின் மகனின் மகன்-இவ்வாறான ஆண் வழிச் சந்ததியினர் (பேரன்கள்) 3. தந்தை 4. தந்தையின் தந்தை அவருடைய தந்தை-இவ்வாறான ஆண்வழி மூதாதையர்கள்(பாட்டனார்கள்) 5. தந்தை தாய் வழிச் சகோதரன் (உடன் பிறந்த சகோதரன்) 6. தந்தைவழிச் சகோதரன் 7. தாய்வழிச் சகோதரன் 8. உடன்பிறந்த சகோதரனின் மகன். 9. தந்தை வழி சகோதரனின் மகன் 10 தந்தையின் உடன் பிறந்த சகோதரன் தந்தையின் தந்தை வழி சகோதரன் (சாச்சப்பா, பெரியப்பா) 11. தந்தையின் உடன் பிறந்த சகோதரனின் மகன் மற்றும் தந்தையின் தந்தை வழிச் சகோதரனின் மகன் (சாச்சா, பெரியப்பாவின் ஆண் மக்கள்) 12. பாட்டனாரின் உடன் பிறந்த சகோதரன் பாட்டனாரின் தந்தை வழிச் சகோதரன். 13. பாட்டனாரின் உடன் பிறந்த சகோதரனின் மகன். 14. பாட்டனாரின் தந்தை வழிச் சகோதரனின் மகன். 15. கணவன்.

பெண் வாரிசுகள்:

1. மகள் 2. மகனுடைய மகள், மகனுடைய மகனின் மகள் இவ்வாறான ஆண்வழிச் சந்ததியின் பெண்மக்கள் 3.தாய். 4. தாயுடைய தாய், தாயுடைய தாயின் தாய் இவ்வாறான பெண்வழி முந்தையர். மற்றும் தகப்பனாருடைய தாய், பாட்டனாருடைய தாய் இவ்வாறான ஆண்வழி முந்தையரின் தாய்மார்கள் மற்றும் தகப்பனாருடைய தாயின் தாய், அவரது தாய் இவ்வாறான ஆண்வழித் தொடர்புடைய பெண் முந்தையர். 5. உடன் பிறந்த சகோதரி 6. தந்தை வழிச் சகோதரி 7. தாய் வழிச் சகோதரி 8. மனைவி.

வாரிசுதாரர்கள் எவருமே இல்லையானால் ஷாஃபிஈ மத்ஹபு படி உலுல் அர்ஹாம் எனும் உறவினர்களை வாரிசுகாரர்களாக ஆக்க கூடாது. ஷாபிஈ மத்ஹப் ஆரம்பகால பத்வாபடி வாரிசுகாரர்களுக்கு பங்கிட்டது போக மீதி இருப்பின் மறுமுறை கொடுக்கவும் கூடாது. (ஹனபி மதஹபில் இவ்விரண்டு செயல்களும் கூடும்) இந்த நிலையில் சொத்துக்கள் முழுவதும் பைத்துல் மாலைச் சார்ந்ததாகும்.

பங்கு விகிதங்கள் (அஹ்வால்):

1. மரணித்தவருக்கு மகன் அல்லது மகனுடைய மகன் ஆகிய ஆண்வழிச் சந்ததிகள் இருந்தால் மரணித்தவரின் தந்தைக்கு சொத்தில் ஆறில் ஒரு பாகம் மட்டும் கிடைக்கும்.

2. மகனோ அல்லது மகனின் மகளோ ஆகிய பெண் சந்ததிகள் மட்டும் இருந்தால் தந்தைக்கு ஆறில் ஒரு பாகமும் மற்றுமுள்ள வாரிசுகளுக்கு கொடுத்தது போக எஞ்சும் எச்சமும் கிடைக்கும்.

3. மரணித்தவருக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண் அல்லது  பெண் சந்ததிகள் இல்லாதபோது தந்தை அஸபா எச்சதாரர் ஆகிறார்.

பாட்டனார்:

தந்தைக்குரிய அதே மூன்று வகையான பங்கு விகிதங்களும் இவருக்கும் கிடைக்கும். எனினும் தந்தை உயிருடன் இருக்கும்போது அவரது தந்தையான பாட்டனாருக்கோ பாட்டனார் உயிருடன் இருக்கும்போது அவரது தந்தையான கொள்ளுப் பாட்டனாருக்கோ பங்கு கிடைக்காது. மேலும் மரணித்தவரின் தந்தை உயிருடன் இருக்கும்போது மரணித்தவரின் மூலவழிச்  சகோதர சகோதரிகளுக்கும் சொத்தில் பங்கு கிடைக்காது. எனினும் பாட்டனார் எச்சதாரராக வரும்போது உடன் பிறந்த மற்றும் தந்தை வழிச் சகோதர சகோதரிகளுக்கு முகாஸமா எனும் விகிதாசாரப் பங்கு (உரிமை) கிடைக்கும்.

கணவன்:

1. மரணித்த மனைவிக்கு இந்தக் கணவன் மூலம் அல்லது முந்தைய கணவன் மூலம் குழந்தை இருந்தால் அல்லது ஆண் சந்ததியினரின் குழந்தை இருந்தால் கணவனுக்கு நான்கில் ஒன்றும்

2. இவர்களில் யாரும் இல்லாதபோது இரண்டில் ஒன்றும் பங்கு கிடைக்கும்.

மனைவி:

1. மரணித்த கணவருக்கு இதே மனைவியின் மூலம் அல்லது வேறு தாரத்தின் மூலம் குழந்தை இருந்தால் அல்லது ஆண் சந்ததியினரின் குழந்தை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும்

2. இவர்களில் யாரும் இல்லாத போது நான்கில் ஒரு பங்கும் உரிமை(பங்கு) கிடைக்கும். ஒருவருக்கு ஒன்றைவிட அதிகமான மனைவிகள் இருக்கும் போது இந்த நான்கில் ஒன்றை அல்லது எட்டில் ஒன்றை சமமாகப் பங்கிட்டுக் கொள்வர்.

தாய்:

1. மரணித்தவருக்கு குழந்தை அல்லது ஆண்வழிச் சந்ததியினரின் குழந்தை இருந்தால் அல்லது மரணித்தவாலின் மூலவழிச் சகோதர, சகோதரிகளில் இருவர் இருந்தால் தாயாருக்கு ஆறில் ஒன்றும்
2. இவர்களில் யாரும் இல்லாத போது மூன்றில் ஒன்றும்
3. மரணித்தவரின் தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி ஆகியோர் மட்டுமே வாரிசுகளாக வரும்போது கணவன் அல்லது மனைவிக்குரிய பங்கினைக் கொடுத்தது போக மீதியுள்ளதிலிருந்து மூன்றில் இரு பங்குகளை தந்தைக்கும், ஒரு பங்கினைத் தாயாருக்கும் வழங்க வேண்டும்.

பாட்டி:

தாய்வழி மற்றும் தந்தை வழி பாட்டியார் ஆகிய இரு பிரிவினரும் இருந்தால் இருவருமே தமக்குரிய ஆறில் ஒன்று பங்கினை சமமாக பங்கிட்டுக் கொள்வர்.
2. தகப்பனார் இருக்கும்போது தரந்தை வழிப் பாட்டியாரும் தாயார் இருக்கும்போது இருவழிப் பாட்டியாரும் பங்கின்றித் தள்ளப்படுவர்.
3. தாயார் இல்லாத போது தாய் வழிப்பாட்டியார் இருவழி தூரத்துப் பாட்டியாரையும், தந்தை இல்லாத போது தந்தை வழி பாட்டியர், கொள்ளுப் பாட்டியாரையும் பங்கின்றித் தள்ளிவிடுவர்.

மகள்:

நிர்ணயிக்கப்பட்ட பங்கினைப் பெறுபவராகவும், சிலநேரம் எச்சதாரராகவும் ஆகிறார்.

1. ஒரேயொரு  மகள் ம்டும் இருந்தால் இரண்டில் ஒன்றினையும்
2. இரண்டோ அதைவிட அதிகமான பெண் மக்களோ இருந்தால் மூன்றில் இரண்டினையும் பங்காக பெறுகின்றனர்.
3. இவர்களது சகோதரர் (மரணித்தவரின் மகன்) இருந்தால் ஒரு ஆணுக்கு இரண்டு, ஒரு பெண்ணுக்கு ஒன்று என்ற முறையில் அஸபா எச்சதாரர் ஆகின்றனர்.

மகனின் மகள்:

1. மரணித்தவரின் மகன் இருக்கும் போது மகனின் மகனும், மகளும் பங்கின்றித் தள்ளப்படுவர்.
2. மரணித்தவரின் பெண் மக்களில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இருக்கும்போதும் இவர்கள் பங்கின்றித் தள்ளப்படுவர்.
3. மரணித்தவருக்கு ஒரே ஒரு மகள் இருக்கும்போது மகனின் மகள் ஆறில் ஒரு பங்கைப் பெறுவார்.
4. மரணித்தவரின் மகன், மகள் யாரும் இல்லாத நிலையில் மகனின் மகள் ஒரேயொருவர் இருந்தால் இரண்டில் ஒன்றினையும்
5. இருவரோ இருவருக்கு மேற்பட்டவரோ இருந்தால் மூன்றில் இரண்டு பங்கினையும் பெறுவார்கள்.
6. இவர்களது தர மொத்த சகோதரர்களில் (அதாவது உடன்பிறந்த அல்லது சாச்சா, பெரியப்பா பிள்ளைகளில்) ஒருவரும் இருந்தால் ஒரு ஆணுக்கு இரண்டு ஒரு பெண்ணுக்கு ஒன்று என்னும் அஸபா எச்சதாரர் ஆகிவிடுவார்.

உடன்பிறந்த சகோதரி:

1. மரணித்தவரின் ஆண்வழிச் சந்ததியினர் (மகன், மகனின் மகன் போன்றோர்) மேலும் தந்தை ஆகியோரில் யாராவது ஒருவர் இருந்தாலும் இந்த உடன் பிறந்த சகோதரிகள் பங்கின்றித் தள்ளப்படுவர்.
2. மரணித்தவரின் பெண்மக்கள் அல்லது ஆண்வழி சந்ததியினரின் பெண்மக்கள் உடன் இணைந்து வரும்போது அந்த மகளுக்குரிய பங்கினை எடுத்தது போக எஞ்சியுள்ளவர்களுக்கு இந்த சகோதரிகள் அஸபா எச்சதாரர்கள் ஆகிவிடுகிறார்கள்.
3. மேற்கூறப்பட்ட இவர்கள் யாரும் இல்லாதபோது ஒரேயொரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு இரண்டில் ஒன்றினையும்
4. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சகோதரிகள் உள்ளபோது மூன்றில் இரண்டு பங்கினையும் பெறுவர்.
5.இவர்களது சகோதரர்களுடன் இணைந்து வரும்போது ஒரு ஆணுக்கு இரண்டு, ஒரு பெண்ணுக்கு ஒன்று என்ற அஸபா எச்சதாரர் ஆகின்றனர்.

தந்தைவழி சகோதரி:

உடன்பிறந்த சகோதரிக்குக் கூறப்பட்டுள்ள ஐந்து விகிதாசார அமைப்புகளுமே தந்தை வழிச் சகோதரிகளுக்கும் பொருந்தும். என்றாலும் மரணித்தவரின் உடன் பிறந்த சகோதரன் ஒருவரோ அல்லது உடன் பிறந்த சகோதரிகளில் இருவரோ வரும் போது தந்தை வழிச் சகோதரி பங்கின்றித் தள்ளப்படுவாள். மட்டுமல்ல உடன்பிறந்த ஒரேயொரு சகோதரி –  மரணித்தவரின் மகள் அல்லது ஆண்வழிச் சந்ததியினரின் மகளுடன் இணைந்து அஸபாவாக எச்சதாரராக வரும்போதும் தந்தை வழிச் சகோதரி பங்கின்றித் தள்ளப்படுவாள். தள்ளப்படாத அமைப்பில் ஒரேயொரு உடன்பிறந்த சகோதரியுடன் வரும்போது இவளுக்கு ஆறில் ஒன்று பங்காக கிடைக்கும்.

தாய்வழிச் சகோதரன் – சகோதரி:

இவ்வழி உறவினர்களில் ஆணும் பெண்ணும் பங்கு உரிமை பெறுவதிலும் பங்'கின்றி தள்ளப்படுவதிலும் சமநிலை உடையவர் ஆவார்.

1. மரணித்தவரின் தந்தை அல்லது பாட்டனார் அல்லது ஆண், பெண் வாரிசுகள் அல்லது ஆண் சந்ததியினரின் ஆண், பெண் பிள்ளைகள் இவர்களில் யாராவது ஒருவர் இருந்தால் தாய்வழிச் சகோதர, சகோதரிகள் பங்கின்றித் தள்ளப்படுவர்.
2. இவர்களில் யாரும் இல்லாதபோது தாய்வழிச் சகோதரிகளில் ஒருவர் மட்டும் இருந்தால் ஆறில் ஒன்றினையும்,
3. இவர்களில் இருவரோ அதிகமாகவோ இருப்பின் மூன்றில் ஒன்றினையும் பங்காகப் பெறுவர்.

அஸபா காரர்கள் – எச்சதாரர்கள்:

இவர்கள் நேரடி எச்சதாரர்கள், இணை எச்சதாரர்கள், நிகர் எச்சதாரர்கள் என்று மூன்று வகையாகப் பிரிவார்கள்.

1.மரணித்தவரின் ஒரு மகளுடன் அல்லது மகனின் ஒரு மகளுடன், மரணித்தவரின் உடன்பிறந்த அல்லது தந்தை வழிச் சகோதரி இணைந்து வரும்போது மகளோ அல்லது மகனின் மகளோ அவரவருக்குரிய பங்காக இரண்டில் ஒன்றினை எடுத்தது போக எஞ்சியுள்ள ஒன்றினை இந்த சகோதரி எடுத்துக் கொள்வார். இந்நிலையில் மட்டும் சகோதரி இங்கே நிகர் எச்சதாரர் ஆகிறார்.

2. மகள் அல்லது மகனின் மகள் அல்லது சகோதரி ஆகியோர் அவரவரின் சகோதரர்களுடன் இணைந்து வரும்போது ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பங்கும் என்று பங்கிட்டுக் கொள்வர். இவ்வாறு அவரவர் சகோதரர்களுடன் இணைந்து வரும் பெண்களே இணை எச்சதாரர் ஆவர்.

3. நேரடி எச்சதாரர்: ஆண் வாரிசுகளில் கூறப்பட்டுள்ள கணவன், தாய்வழிச் சகோதரன் ஆகிய இருவரையும் தவிர உள்ள பதினைந்து ஆண்வாரிசுகளும் நேரடி எச்சதாரர் ஆவர். இவர்களில் முதலில் உள்ளவர் முதன்மையாகவும் இரண்டாவது உள்ளவர் இரண்டாவதாகவும் இவ்வாறு வரிசைக் கிரமமாகப் பங்கினைப் பெறுவர். மட்டுமல்ல முதலாவதாக உள்ளவர் அவருக்கு கீழுள்ள அனைவரையும், இரண்டாவது உள்ளவர் அவருக்கு கீழுள்ள அனைவரையும் இவ்வாறு வரிசைக் கிரமமாக ஒவ்வொருவருக்கும் அவருக்கு கீழுள்ள அனைவரையும் எச்சதாரருக்குரிய பங்கின்றி கீழே தள்ளிவிடுவர். இதில் விதிவிலக்கான ஒரே ஒரு நிலை வருமாறு: மரணித்தவரின் பாட்டனாராவார். மரணித்தவரின் உடன் பிறந்த அல்லது தந்தைவழிச் சகோதரருடன் இணைந்து வரும்போது ஒருவர் மற்றவரைப் பங்கின்றி, தள்ளிவிடுவதில்லை. 'முகாஸமா' எனும் அவரவருக்குரிய தனிப்பட்ட விகிதாச்சாரம் கொண்டு பங்கிட்டுக் கொள்வர்.

அல்ஹஜப்-தள்ளிவிடுதல்:

வாரிசுகளில் ஒருவர் மற்றவரை பங்கின்றித் தள்ளி விடுவதற்கு இரண்டு பொதுக்காரணங்களும் ஒரு தனிக் காரணமும் ஆகிய மூவகைக் காரணங்கள் உண்டு.1. ஒருவர் மரணித்தவருக்கு எவரது துணை கொண்டு உறவினை ஏற்படுத்திக் கொள்கின்றாரோ அந்த அஸல் உறவினர் ஜீவித்திருக்கும் நிலையில் இவருக்கு பங்கு (உரிமை) கிடைப்பதில்லை. உதாரணமாக மரணித்தவரின் தந்தை ஜீவித்திருக்க பாட்டனாருக்கும், தாய் ஜீவித்திருக்க பாட்டியாருக்கும் மகன் ஜீவித்திருக்க மகனின் பிள்ளைகளுக்கும் பங்கு – உரிமையில்லை. இதில் விதிவிலக்கான ஒரேயொரு நிலை வருமாறு: தாய் ஜீவித்திருக்க தாய்வழிச் சகோதர சகோதரிகள் பங்கு (உரிமை) பெறுகின்றனர்.

2. மரணித்தவருடன் ஒரே மாதிரியான உறவினை இருவர் ஏற்படுத்திக் கொண்டால் அவ்விருவரில் நெருங்கியவர் அகன்றவரை பங்கின்றி தள்ளிவிடுவாhர். உதாரணமாக மரணித்தவரின் உடன்பிறந்த சகோதரர் இருக்கும் நிலையில் மரணித்தவரின் தந்தை வழி சகோதரருக்கு பங்கு (உரிமை) இல்லை. தந்தை வழிச் சகோதரர் இருக்கும் நிலையில் உடன் பிறந்த சகோதரரின் மகனுக்கு பங்கு உரிமை இல்லை.
தனிக் காரணம்: வாரிசுகளில் பங்குதாரர்கள் முழுப் பங்கினையும் மீதமின்றி எடுத்துக் கொள்ளும்போது எச்சம் இல்லாததால் எச்சதாரர்கள் பங்கின்றித் தள்ளப்படுவர். உதாரணமா மரணித்தவரின் கணவன், தாய், தாய் வழிச் சகோதரர், சிறிய தந்தை ஆகியோர் வாரிசுகளாக வரும்போது முழு உடைமையில் சமபாதியினை கணவரும் அதில் மூன்றில் ஒன்றினை தாயாரும், ஆறில் ஒன்றினை தாய்வழிச் சகோதரரும் பங்கிட்டுக்கொள்வர். எச்சம் இல்லாததால் சிறிய, பெரிய தந்தை பங்கின்றி தள்ளப்படுவர். இந்த தனிக் காரணத்தில் விதிவிலக்கான இரண்டு நிலைகளும் உண்டு.

1. மரணித்தவரின் கணவன், தாய், தாய்வழி சகோதரர்கள் இருவர் உடன் பிறந்த சகோதரர் ஆகிய வாரிசுகளைக் கொண்ட நிலையே முஷர்ரகாவாகும். முழு உடைமையில் சமபாதியினை (அதாவது) ஆறில் மூன்றினை கணவரும், ஆறில் ஒன்றினை தாயாரும், ஆறில் இரண்டினை தாய் வழி சகோதரர்களும் பங்கிட்டுக் கொள்வர். எச்சதாரர் ஆகிய உடன் பிறந்த சகோதரருக்கு எச்சமில்லாததால் பங்கின்றி தள்ளப்பட வேண்டும். ஆனால் உடன் பிறந்த சகோதரர் மற்றும் தாய்வழி சகோதரர்கள் யாவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளாக இருப்பதால் முழு உடைமையில் ஆறில் இரண்டு பங்கினை உடன் பிறந்த மற்றும் தாய் வழிச் சகோதரர்கள் சமமாக பங்கிட்டுக் கொள்வர்.

2. மரணித்தவரின் கணவன்-தாய்-பாட்டனார்-உடன் பிறந்த அல்லது தந்தை வழி சகோதரி ஆகிய வாரிசுகளைக் கொண்ட நிலையே 'அக்தரிய்யா' வாகும். முழு உடைமையினையும் எட்டு பங்குகளாகப் பிரித்து கணவருக்கு அதில் மூன்றும் தாயாருக்கு அதில் இரண்டும் சகோதரிக்கு அதில் மூன்றும் என்று பங்கிட்டுக் கொண்டு எச்சமில்லாததால் பாட்டனார் பங்கின்றித் தள்ளப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு பங்கிடாமல் முழு உடைமையினையும் இருபத்தி ஏழு பங்குகளாகப் பிரித்து கணவருக்கு அதில் ஒன்பதும் தாயாருக்கு அதில் ஆறும் சகோதரிக்கு அதில் நான்கும் பாட்டனாருக்கு அதில் எட்டும் வழங்கப்பட வேண்டும்.

முகாஸமத்:

மரணித்தவருடைய தந்தையின் தந்தை அல்லது அவரது தந்தை என்று மரணித்தவரின் முந்தைய (பாட்டனா)ரும், மரணித்தவரின் உடன் பிறந்த அல்லது தந்தை வழி சகோதர சகோதரிகளுடன் இணைந்து வந்து- அவரவருக்குரிய உரிமையை எடுத்துக்கொள்வதற்கு 'முகாஸமா' என்று சொல்லப்படும். இதனை ஒரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. இவர்கள் அல்லாத யாதொரு வாரிசும் வராமல் முகாஸமாவிற்குரியவர்கள் மட்டும் வருவது: முகாஸமாவிற்குரிய பாட்டனாரும், சகோதரா சகோதரிகள் மட்டும் வரும்போது உடைமையினை இருமுறைகளில் பங்கிட்டு – அவ்விரண்டிலும் அதிகமான அளவு பாட்டனாருக்கு உரிமையாகுமே- அதனை அவருக்கு வழங்க வேண்டும்.

அ) முழு உடைமையிலிருந்து மூன்றில் ஒன்றினை பாட்டனாருக்கு வழங்க வேண்டும். எஞ்சியவற்றை சகோதர சகோதரிகள் எச்சதாரர்களாகவும், இணை எச்சதாரர்களாகவும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

ஆ)பாட்டனாரையும் சகோதரர்களைப் போன்று எச்சதாரராக மாற்றி சகோதரிகளை இணை எச்சதாரிகளாக ஆக்கி பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு சகோதரர்கள் அல்லது நான்கு சகோதரிகள் அல்லது ஒரு சகோதரர்-இரண்டு சகோதரி ஆகிய நபர்களுடன் பாட்டனார் இணைந்து வரும்போது மொத்தப் பங்கிலிருந்து மூன்றில் ஒன்றினை அவருக்கு வழங்கினாலும் அல்லது சகோதரருடன் எச்சதாரராக மாற்றினாலும் இரண்டும் சம அளவே ஆகும். இவர்களை விட குறைந்த அளவாக சகோதர சகோதரிகள் வரும்போது பாட்டனாரை எச்சதாரராக ஆக்குவது அவசியமாகும். இவர்களை விட அதிக அளவாக சகோதர சகோதரிகள் வரும் போது மூன்றில் ஒன்றினை பாட்டனாருக்கு வழங்குவது அவசியம்.

2. இவர்களைத் தவிர உள்ள வாரிசுகளுடன் இணைந்து வருவது:முகாஸமாவிற்குரிய பாட்டனாரும், சகோதர, சகோதரிகளும் மற்றுமுள்ள வாரிசும் இணைந்து வரும்போது உடைமையினை மூன்று முறைகளில் பங்கிட்டு அம்மூன்றிலும் அதிகமான அளவு பாட்டனாருக்கு உரிமையாகுமே அதனை அவருக்கு வழங்க வேண்டும்.1. வாரிசுகளைப் போன்று பாட்டனாருக்கும் முழு உடைமையில் ஆறில் ஒன்றினை வழங்க வேண்டும். 2. சகோதரர்களைப் போன்று பாட்டனாரையும் எச்சதாரராக மாற்றி வழங்க வேண்டும். 3. வாரிசுகளுக்கு வழங்கியது போக மிஞ்சியதில் மூன்றில் ஒன்றினை பாட்டனாருக்கு வழங்க வேண்டும்.

உதாரணமாக 1. இரண்டு பெண் மக்கள், இரண்டு சகோதரர்கள் – ஒரு சகோதரி, பாட்டனார் ஆகியோர் வாரிசுகளாக வரும்போது பாட்டனாருக்கு முழு உடைமையில் ஆளில் ஒன்றினை வழங்க வேண்டும். 2. மனைவி-தாயார்-இரண்டு சகோதரர்கள்- ஒரு சகோதரி- பாட்டனார் ஆகியோர் வாரிசுகளாக வரும்போது வாரிசுகளுக்கு வழங்கியது போக மிஞ்சியதில் மூன்றில் ஒன்றினை பாட்டனாருக்கு வழங்க வேண்டும். 3. மகள்-சகோதரி-சகோதரன்-பாட்டனார் ஆகியோர் வாரிசுகளாக வரும் போது பாட்டனாரையம் எச்சதாரர்களில் ஒருவராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

விபரம்:

உடன் பிறந்த சகோதரருடன்-தந்தை வழி சகோதர சகோதரிகள் இணைந்து வரும்போது இவர்கள் பங்கின்றி தள்ளப்படுவர். ஆனால் முகாஜமாவின் இரு பிரிவுகளாலும் பாட்டனாரை எச்சதாரராக மாற்றும் போது தந்தை வழி சகோதர சகோதரிகளையும் எச்சதாரர்களில் ஒருவராக கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். எண்ணிக்கையில் இணைத்தாலும் இவர்களுக்குப் பங்குரிமை வழங்குவது கூடாது. எனினும் முகாஸமாவில் உடன் பிறந்த சகோதரி ஒரேயொருவர் பாட்டனாருடன் இணைந்து வரும்போது இருவரும் எடுத்தது போக எஞ்சியுள்ளவைகளை தந்தை வழி சகோதர சகோதரிகள் எடுத்துக் கொள்வர்.

மவானில் இர்ஃது- உரிமையைத் தடுத்தல்:

1. ஒருவருக்கு வேண்டுமென்றோ, தவறுதலாகவோ, தற்செயலாகவோ, அசட்டையாகவோ, பொழுது போக்காகவோ மரணத்தினை விளைவிக்கும் எந்தவொரு வாரிசும் மரணித்தவரின் சொத்துக்குரிய உரிமையை இழந்து விடுகின்றனர்.

2. மரணித்தவர் முஸ்லிமாகவும், வாரிசுகள் காஃபிர்களாகவும் அல்லது மதம் மாறியவர்களாகவும் இருந்தால் வாரிசுகள் தங்களுக்குரிய உரிமையை இழந்துவிடுவர். அதேசமயம் இறந்தவர் காஃபிராகவும், வாரிசுகள் முஸ்லிம்களாகவும் இருந்தாலும் வாரிசு உரிமையை இழந்து விடுவர்.

பொது விதிகள்:

1. முறையின்றி (ஜினாவில்) பிறந்த குழந்தையும் தந்தையின் சொத்தில் உரிமை பெற இயலாது.அதேபோல் வைப்பாட்டியினின்றும் பிறந்திருப்பினும் தந்தையின் சொத்திற்கு உரிமை கோர இயலாது. தாயின் சொத்திலிருந்து மட்டும் அது உரிமை பெறும்.

2. சொத்தில் பங்கு பெறுவதில் பிரதிநிதித்துவம் என்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. சொத்துகளுக்கு பிறப்புரிமை கிடையாது. ஒருவர் இறந்த பின்னர்தான் அவரது சொத்தில் அவரது வாரிசுகளுக்கு உரிமை ஏற்படுகிறது. அவர் இறக்கும் வரை அவரது சொத்தில் அவரது வாரிசுகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதேபோன்று வளர்;ப்பு பிள்ளைகளுக்கும் வளர்ப்புத் தாய் தந்தையரிடமிருந்து சொத்துரிமை இல்லை. முறைப்படி நன்கொடையாக வழங்கினால் மட்டுமே வளர்ப்பு பிள்ளைகளுக்கு உரிமை கிடைக்கும்.

ஒரு முஸ்லிம் இறந்த நேரத்திலேயே வாரிசு உரிமை விகிதாச்சாரப்படி அவரது சொத்துக்கள் வாரிசுகளுக்கு பங்கு உரிமை ஆகிவிடுகிறது. பங்கு பிரிக்கப்படாவிட்டாலும் வாரிசுகள் தத்தம் பங்கினை கையாளுவதற்கு முழு உரிமை உண்டு. பங்கு பிரிக்கப்படும் முன் வாரிசுதாரர் ஒருவர் இறந்து விட்டால் இரண்டாவதாக இறந்து விட்டவரின் வாரிசுகளுக்கும் முதலாவதாக இறந்தவரின் சொத்துக்களிலிருந்து  பங்கிட்டு கொடுப்பதற்கு 'முனாஸஃகா' என்று பெயர்.

தஃகாருஜ்- உரிமையிலிருந்து விலகி விடுதல்:

மரணித்தவரின் வாரிசுகளில் உரிமைக்குரியவரில் ஒருவர் ஏதோ காரணத்திற்காக சொத்துரிமையிலிருந்து விலகிக் கொள்ளலாம். இதற்கு தஃகாருஜ் என்று சொல்லப்படும். உதாரணமாக ஜைது என்பவரின் நான்கு ஆண்மக்களில் ஒருவர் தனது தந்தையின் சொத்துகளில் எனக்கு உரிமை வேண்டாமென்று விலகிக் கொண்டால் முழுச் சொத்தையும் மூன்று பங்கு செய்து மூன்று புதல்வர்களுக்கும் ஒவ்வொரு பங்கு வழங்க வேண்டும்.

இரண்டு உரிமைகள் உடையோர்:

1. ஒரு வாரிசு எச்சதாரர் பங்குதாரர் என்னும் உரிமை பெறுவதற்குரிய இரண்டு உறவுகளைப் பெற்றிருந்தால் அவ்விரண்டு உறவுகளின் மூலமாகவும் சொத்தில் இருவிதப் பங்குகளைப் பெறுவார். உதாரணமாக ஒருவர் தமது சிறிய தந்தையின் மகளை மணந்தார். அவரது மனைவி இறந்த பின்பு அவளுக்கு அவளைத் தவிர வேறு வாரிசு இல்லாதபோது கணவன் என்ற உறவின் மூலமாக அவளது சொத்தில் ஒரு பாதியையும், பெரிய தந்தையின் மகன் என்ற  உறவின் காரணமாக மறு பாதியையும் அவரே எடுத்துக் கொள்வார்.

2. ஒருவர் ஜைனபா என்ற பெண்ணை மணமுடித்து மகனை (அபூபக்கரை) பெற்றார். ஜைனபாவின் கணவர் இறந்த பின்பு அவரது சகோதரருக்கு ஜைனபா வாழ்க்கைப் பட்டு மற்றொரு மகனையும் (உமரையும்) பெற்றாள். ஜைனபாவின் இரண்டாவது கணவருக்கு வேறொரு மனைவி மூலம் இன்னொரு மகனும்(உதுமானும்) இருந்து வருகின்றான். பெற்றோர்களனைவரும் இறந்த பின்பு அபூபக்கர் மரணமடைகிறார். அபூபக்கரின் வாரிசுகளாக வரக்கூடிய உமரும், உதுமானம் சிறிய தந்தையின் பிள்ளைகளாவர். மேலும் உமர், அபூபக்கருடைய தாய்வழிச் சகோதரருமாவார். ஆகவே அபூ பக்கரின் சொத்துக்களிலிருந்து ஆறில் ஒன்றினை உமருக்கு வழங்க வேண்டும். பின்பு ஆறில் ஐந்தினை உமருக்கும் உதுமானுக்கும் இடையே எச்சதாரர்கள் என்ற அமைப்பில் சமமாகப் பங்கிட்டு வழங்க வேண்டும்.

3. ஒருவர் பங்குதாரர் என்ற உரிமைக்குரிய இரண்டு உறவுகளை உடையவராக இருப்பின் அவ்விரண்டிலும் பலமான உறவினைக் கொண்டு பங்கு பெறுவார். இதற்கு மூன்று நிலைகள் உள்ளன.

அ) சட்டங்களுக்கு கட்டுப்படாத காட்டுவாசி தெரிந்த நிலையிலோ அல்லது சட்டங்களுக்கு கட்டுப்பட்ட நாட்டுவாசி தெரியாத நிலையிலோ தனது தாயுடன் உறவு கொண்டு மகளைப் பெற்றான். பின்பு முஸ்லிமாக மரணித்தான். வாரிசாக வரக்கூடிய இவனது மகள்-மகள் என்றும், தாய்வழிச் சகோதரி என்றும் இரண்டு உறவுகளைப் பெறுகிறாள். இவளுக்கு மகள் என்ற உறவைக் கொண்டே பங்கு வழங்க வேண்டும்.

ஆ) இதேபோன்று காட்டுவாசியோ அல்லது நாட்டுவாசியோ தனது மகளுடன் உறவு கொண்டு மகளைப் பெற்றான். பிள்ளையைப்பெற்ற தாய் இறந்து விடுகிறாள். வாரிசாக வரக்கூடிய இவளது மகள்-மகள் என்றும் தந்தைவழிச் சகோதரி என்றும் இரண்டு உறவுகளைப் பெறுகிறாள். இவளுக்கு மகள் என்ற உறவைக் கொண்டே பங்கு வழங்க வேண்டும்.

இ) இதே போன்று காட்டுவாசியோ அல்லது நாட்டுவாசியோ தனது மகளுடன் உறவு கொண்டு மகளைப் பெற்றான். பின்பு மகளுடைய மகளுடனும் உறவு கொண்டு மகளைப் பெற்றான். இரண்டாவது மகள் இறந்த பின்பு மூன்றாவது மகளும் இறந்து விடுகிறாள். உயிருடன் உள்ள முதலாவது மகள் பாட்டி என்றும் தந்தை வழி சகோதரி என்றும் உரண்டு உறவினைப் பெறுகிறாள். இவளுக்கு பாட்டி (தாயின் தாய்) என்ற உறவினைக் கொண்டே பங்கு வழங்க வேண்டும்.

ஷர்த் – நிபந்தனைகள்:

மரணித்தவருடைய சொத்தில் மற்றவர்கள் பங்கு பெறுவதற்குரிய நிபந்தனைகள் மூன்றாகும்.

1. ஒருவர் மரணித்துவிட்டார் என்று உறுதியாகத் தெரிந்த பின்பே அவரது சொத்து அவரது வாரிசுகளுக்கு உரிமையுடையதாகும். விபரம் மஃப்கூத் (காணாமல் போனவர்) மஸ்அலாவில் பார்க்கவும்.

2. ஒருவர் மரணிக்கும் நேரத்தில் அவரது வாரிசுகள் உயிருடன் இருக்க வேண்டும். உயிருடன் இருக்கிறார் என்று தெரியாதவரையில் மரணித்தவரின் சொத்தில் அவருக்கு எவ்விதப் பங்கும் சேராது. விபரம் ஹம்லு-கர்ப்பம் மஸ்அலாவில் பார்க்கவும்.

இரண்டு வாரிசுகள் (உதாரணமாக தந்தையும் மகனும்) நீரில் மூழ்கி அல்லது தீயில் கருகி இறந்தனர். இருவரில் முதலாவதாக இறந்தது யார் என்று தெரியாத போது ஒருவர் மற்றவருக்கு வாரிசு ஆக முடியாது. அவ்விருவரையும் தவிரவுள்ள வாரிசுகளுக்குத்தான் அவ்விருவரின் சொத்துக்களிலிருந்து பங்கு வழங்க வேண்டும். இருவரில் ஒருவர் (உதாரணமாக தந்தை) முதலில் இறந்தார் என்று தெரிய வந்தது. பின்பு ஓதோ காரணங்களால் சந்தேக நிலை நீடித்தது. இப்போது சந்தேகம் நீங்கி உறுதியாகத் தெரிந்த பின்பே அல்லது மகனின் வாரிசுகள் – தந்தையின் வாரிசுகளிடம் சமாதானம் செய்து கொண்ட பின்பே தந்தையின் சொத்துகளிலிருந்து அவருடன் இறந்த மகனின் வாரிசுகள் பங்கு பெறுவார்கள்.

3. மரணித்தவருக்கும், அவரது வாரிசுதாரருக்கும்  உரிய உறவின் முறை தெரிந்திருக்க வேண்டும்.இவ்வாறு உறவின் முறையைத் தெரிய இயலாத நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை (குன்ஃதா-ஆண் பெண் அற்ற நிலை) மஸ்அலாவில் பார்க்கவும்.

மஃப்கூத் (காணாமல் போனவர்):

காணாமல் போன நபர் இறந்துவிட்டார் என்று நம்பத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு தெரிந்து கொண் பின்போ அல்லது இவரது சம காலத்தினர் அனைவரும் இறந்து விட்டனர். ஆகவே இவரும் இறந்து விட்டார் என்று இஸ்லாமியக் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின்னரே இவரது வாரிசுகள் இவரது சொத்துக்களில் பங்கு பெற முடியும். இவ்வாறு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு நிமித்திற்கு முன்பு வாரிசுகளில் ஒருவர் இறந்தாலும் அவருக்குப் பங்கு கிடைக்காது.

இறந்து போனவரின் வாரிசுகளில் ஒருவர் காணாமல் போயிருந்தால் அவர் இறந்து விட்டார் என்று தெரியாத வரையில் காணாமல் போனவரின் பங்கை ஒதுக்கி வைத்து விட வேண்டும். அவரைத் தவிர உள்ளவர்களுக்கு பேணுதலாகப் பங்கிட்டு வழங்க வேண்டும்.

ஹம்லு-கர்ப்பம்:

கர்ப்பத்திலுள்ள குழந்தை மரணித்தவரின் வாரிசாக வருமென்றால் -ஒன்று வாரிசு ஆகக் கூடும். அல்லது திண்ணமாக வாரிசு ஆகும் ஆகிய இரண்டு அமைப்புகளில் வரும்.

1. அ) கருவிலுள்ள குழந்தையானது மரணித்தவரின் சகோதரனுடைய குழந்தை. இந்தக் குழந்தை ஆணாகப் பிறந்தால் வாரிசு ஆகும். பெண்ணாகப் பிறந்தால் வாரிசு ஆகாது.

ஆ) மரணித்தவருடைய தந்தையின் மனைவியுடைய குழந்தை. இந்தக் குழந்தையுடன் இணைந்து மரணித்தவளின் கணவன் மற்றும் உடன் பிறந்த சகோதரியும் வாரிசு ஆக வரும்போது-குழந்தை ஆணாகப் பிறந்தால் எச்சம் இல்லாததால் பங்கு இல்லை. குழந்தைப் பெண்ணாகப் பிறந்தால் முழு சொத்தில் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும். குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன் பேணுதலாகப் பங்கிட்டு வழங்குவது அவசியமாகும். அதாவது குழந்தையை ஆண் என்று ஒரு கணிப்பும், பெண் என்று ஒரு கணிப்பும் செய்து இதில் வரும் அதிகமான அளவை குழந்தைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.குழந்தை பிறந்த பின்பு அந்தக் குழந்தையின் பாலினத்திற்கு ஏற்ப மீதமானவைகள அவரவர்களுக்கு வழங்க வேண்டும்.

2.  மரணித்தவருக்குரிய (மனைவியின்) கர்;ப்பத்திலுள்ள குழந்தை இந்தக் குழந்தை உயிருள்ள நிலையில் ஆணாகவோ, பெண்ணாகவோ, ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ பிறந்தாலும் திண்ணமாக வாரிசு ஆகும். இறந்த நிலையில் பிறக்கும் குழந்தை எந்நிலையிலும் வாரிசு ஆகாது. ஆகவே உயிருடன் பிறக்கும் குழந்தை கூட (பிறந்த பின்பு இறந்தாலும் சரியே) மரணித்தவருக்குரிய குழந்தை என்றுதான் அறியப்படும் காலக் கணிப்பில் பிறந்தால் மட்டுமே வாரிசு ஆகும். தாயின் வயிற்றில் கர்ப்பம் உண்டாகி அது பிறப்பதற்குரிய குறைந்தபட்ச காலகட்டம் ஆறு மாதமாகும். மிக அதிகபட்ச காலம் நான்கு வருடமாகும். ஆகவே ஒருவர் இறந்த பின் அவரது மனைவி இத்தா முடித்துக் கொண்டு வேறொரு கணவருக்கு மனைவியாகாமலும் – தவறாக உறவு கொள்ளாமலும் நான்கு வருடத்திற்குள் குழந்தை பெற்றாலும் அக்குழந்தை மரணித்தவரின் குழந்தையாகும். இத்தா காலம் முடிந்ததும் வேறொரு கணவருக்கு தாரம் ஆன பின்பு ஆறு மாதத்திற்குள் குழந்தை பெற்றாலும் அக்குழந்தை மரணித்தவரின் குழந்தையாகும்.

ஒரே சூழில் ஒரு குழந்தையோ அதைவிட அதிகமாக ஆண், பெண் என்று பெறுவதற்கு சாத்தியமிருப்பின் குழந்தை பிறந்தபின்போ பாகப்பிரிவினை செய்வது சாலச் சிறந்ததாகும்.

ஃகுன்ஃதா- ஆண், பெண் அற்ற நிலை:

ஆண் பெண் இன உறுப்புகள் இரண்டையும் ஒரு சேரப் பெற்றோ அல்லது அவ்விரண்டு உறுப்புகளும் இல்லாமல் படைக்கப்பட்டுள்ள மனிதனுக்கு குஃன்ஃதா என்று பெயர். இவர்கள் பருவ வயதை அல்லது பருவ காலத்தை அடையும் வரை எதிர்பார்த்திருந்து காத்திருக்க வேண்டும். பின் ஆண் இன இயல்புகள் மிகைத்திருந்தால் ஆண் என்றும், பெண் இன இயல்புகள் மிகைத்திருந்தால் பெண் என்றும் முடிவு செய்து அவரவருக்குரியது போன்று பங்கு உரிமை வழங்க வேண்டும். இவ்வாறு முடிவு செய்வதற்கு முன்பாக பங்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் பேணுதலாக பங்கிடுவது அவசியம். அதாவது அந்த மனிதனை ஆண் என்று ஒரு கணிப்பும், பெண் என்று ஒரு கணிப்பும் செய்து இவ்விரண்டு கணிப்பிலும் அதிகமான அளவினை அவனுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். குறைவான அளவினை மற்றுமுள்ள வாரிசுகளுக்கு வழங்க வேண்டும். ஆண் என்றோ பெண் என்றோ தெரிய வந்த பின்பு மீதமானவைகளை அவரவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஃதவில் அர்ஹாம் -உறவினர்:

பங்குதாரர்களாகவோ, எச்சதாரர்களாகவோ இல்லாத ரத்த உறவுள்ள உறவினர் ஆவர். முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் யாரும் இல்லாத போது மூன்றாம் நிலையிலுள்ள இந்த உறவினர்களுக்கு பங்கு வழங்கப்படும்.

1. நேரடி மகளின் அல்லது மகளுடைய மகளின் பிள்ளைகள்.
2.தாயுடைய தந்தை
3. தாயின் (மூலவழி) சகோதர சகோதரிகள்
4. தந்தையின் (மூலவழி) சகோதரிகள்.
5. உடன் பிறந்த அல்லது தந்தை வழி சகோதரர்களின் பெண் பிள்ளைகள்
6. (மூலவழி) சகோதரிகளின் ஆண், பெண் பிள்ளைகள்.
7.தந்தையின் தாய் வழி சகோதரர்கள்.
8. சாச்சா, பெரியப்பாவின் பெண் பிள்ளைகள்.
9.தாய் வழி சகோதரிகளின் ஆண், பெண் பிள்ளைகள்.
10. இவர்களைத் துணையாகக் கொண்டு வரும் உறவின்முறை சொந்தக்காரர்கள். இவர்கள் யாவரும் 'தவிஸ் அர்ஹாம்'கள் ஆவர். இவர்களுக்கு உடைமையினை அஹ்லுத் தன்ஸீல் என்ற நிலை கொண்டு வழங்க வேண்டும். அதாவது இவருக்கும் இறந்தவருக்கும் யாரது துணை கொண்டு உறவின் முறை ஏற்படுகிறதோ அவரது விகிதாச்சாரத்தினை இவருக்கும் வழங்க வேண்டும். உதாரணமாக மகளின் மகளும், மகளுடைய மகளின் மகளும் தவில் அர்ஹாமாக வரும்போது மகளின் மகளை- மகள் உடைய நிலைக்கு கொண்டு வந்து முழு உடைமையின் நான்கில் மூன்று பாகம் இவளுக்கும், மகனுடைய மகளின் மகளை -மகனுடைய மகளின் நிலைக்கு கொண்டு வந்து முழு உடைமையின் மீதமுள்ள நான்கில் ஒன்றினை இவளுக்கும் வழங்க வேண்டும்.

அகுன் முபாரகுன் – பாக்கிய சகோதரன்:

தந்தை வழி சகோதரி சில நேரத்தில் பங்குதாரராக வரும்போது அவருக்குரிய பங்கு உரிமையினைப் பெறுகிறார். ஆனால் அதே நிலையில் அவரது சகோதரருடன் இணைந்து இணை எச்சதாரராக வரும்'போது பங்கின்றித் தள்ளப்படுகிறார். உதாரணம் அக்தரிய்யா மஸ்அலாவில் காண்க. அதாவது அக்தரிய்யா மஸ்அலாவில் இருபத்தி ஏழில் நான்கினை தந்தைவழிச் சகோதரி பெறுவாள். அதே மஸ்அலாவின் வாரிசுகளின் தந்தைவழி சகோதரன் இணைந்தால் சகோதர சகோதரி இருவரும் பங்கின்றித் தள்ளப்படுவர். இவ்வாறான நிலையில் இந்த சகோதரருக்கு அகுன் மஷூமுன் துர்பாக்கிய சகோதரன் என்று பெயர் வழங்கப்படுகிறது. வேறு சில நேரத்தில் அவரது சகோதரர் வருவதினால்தான் அவருக்கு பங்கு உரிமையே கிடைக்கும். உதாரணம்: தந்தைவழி சகோதரி உடன் பிறந்த இரண்டு சகோதரிகளுடன் இணைந்து வரும்போது பங்கின்றித் தள்ளப்படுவார். ஆனால் அவர்களுடன் தந்தை வழிச் சகோதரனும் இணைந்து வரும்போது உடன் பிறந்த சகோதரிகளுக்கு முழு உடைமையிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஒரு பங்கினை மூன்றாகப் பிரித்து அதில் இரண்டு பங்குகள் தந்தை வழி சகோதரனுக்கும் அதில் ஒரு பங்கு தந்தை வழி சகோதரிக்கும் வழங்கப்படும். இவ்வாறான நிலையில் இந்த சகோதரருக்கு சௌபாக்கிய சகோதரன் என்று பெயர் வழங்கப்படுகிறது.

அவ்லு:

இதன் பொருள் அதிகப்படுத்துதல் என்பதாகும். அதாவது சொத்தினை பகிர்ந்தளிப்பதற்கான மொத்தப் பங்குகளைவிட பங்காளிகளின் பங்குகள் அதிகமாக வருவதாகும். இவ்வாறு வரும்போது உபரியான பங்குகளை மொத்தப் பங்கில் அதிகப்படுத்துவது அவசியமாகும். உதாரணமாக: 1. கணவன்- இரு சகோதரிகள்  வாரிசுகளாக வரும்போது மொத்தப் பங்கினை ஏழாக அதிகப்படுத்த வேண்டும்.  2. கணவன்-இரு சகோதரிகள் தாய்வழி சகோதரி ஒருவர் இதில் மொத்தப் பங்கினை எட்டாக அதிகரிக்க வேண்டும். 3. கணவன்-இரு சகோதரிகள்-தாய்வழி இரு சகோதரிகள் வாரிசுகளாக வரும்போது இதில் மொத்தப் பங்கினை ஒன்பதாக அதிகரிக்க வேண்டும். 4. தாயார்-கணவன்-இரு சகோதரிகள்-தாய் வழி இரு சகோதரிகள் வாரிசுகளாக வரும்போது இதில் மொத்தப் பங்கினை பத்தாக அதிகப்படுத்த வேண்டும். 5. இரு சகோதரிகள்-தாய்வழி  ஒரு சகோதரி-மனைவி ஆகியோர் வாரிசுகளாக வரும்போது மொத்தப் பங்கினை பதிமூன்றாக அதிகப்படுத்த வேண்டும். 6. இரு சகோதரிகள் – தாய் வழி இரு சகோதரிகள் – மனைவி ஆகியோர் வாரிசுகளாக வரும்போது மொத்தப் பங்கினை பதினைந்தாக அதிகரிக்க வேண்டும். 7. தாய்-தந்தை-மனைவி இரு பெண் மக்கள் ஆகியோர் வாரிசுகளாக வரும்போது மொத்தப் பங்கினை இருபத்தி நான்கிலிருந்து இருபத்தி ஏழாக அதிகப்படுத்த வேண்டும். இந்த ஏழாவது மஸ்அலாவிற்கு மின்பரிய்யா என்று பெயர். ஏனெனில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் குத்பா ஓதும்போது இது பற்றி வினவப்பட்ட போது – தாமதமின்றி மின்பரில் நின்ற வண்ணமே அதற்குரிய பதிலை அன்னார் அளித்தார்கள்.

ரத்து:

 சுருக்கிக் கொள்ளல் என்பது இதன் பொருள். அதாவது சொத்தினை பகிர்ந்தளிப்பதற்கான மொத்தப் பங்குகளை விட பங்காளிகளின் பங்குள் சுருங்கி விடுவதாகும். பங்காளிகளில் கணவன்-மனைவி ஆகிய இருவரைத் தவிர உள்ள பங்காளிகளுக்கு அவரவர் பங்கு விகிதாச்சார அளவு மொத்த பங்கில் மிஞ்சியதை பகிர்ந்தளிப்பதாகும். உதாரணமாக மரணித்தவரின் தாயாரும்-அவரது மகளும் வாரிசுகளாக வரும்போது, மொத்தப் பங்கான ஆறினை-நான்காக சுருக்கிக் கொண்டு நான்கில் மூன்றினை மகளுக்கும்- நான்கில் ஒன்றினை தாயாருக்கும் வழங்க வேண்டும்.

ஃபராயிழ் எழுத்தியல் சட்டங்கள் மட்டும் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. எண்ணியல் சட்டங்கள் தொகுக்கப்படவில்லை. இதை ஆசிரியரின் முன் அமர்ந்து படித்து தெரிந்து கொள்வதுதான் நல்லது.

இந்த பாகப்பிரிவினை பற்றிய ஃபிக்ஹ் சட்டங்கள் ஷாபிஈ மத்ஹபின் கிதாபுகளிலிருந்து ஸூபி மன்ஸில் வெப்தளத்திற்காக தொகுக்கப்பட்டுள்ளது.

முற்றும்.