( خُلْعُ) குல்உ, தலாக், ரஜ்ஈ தலாக், பஸஹு பற்றிய சட்டங்கள்-Islamic Law of Divorce,Fashu
By Sufi Manzil
குல் உ
குல்உ என்ற அரபிச் சொல்லுக்கு களைதல் என்று பொருளாகும். கணவன் தன் மனைவியை ஆடையைக் களைவது போன்று களைந்து பிரித்து விடுவதற்கு குல்உ என்று பெயர்.
குல்உ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பகரமாக மனைவியிடமிருந்தோ, அவள் சார்பாக வேறு யாரிடமிருந்தோ ஏதேனும் பொருளைப் பெற்றுக் கொண்டு தலாக் என்று சொல்லைக் கொண்டு அல்லது பிரிதல் என்ற சொல்லைக் கொண்டு அவளை நீக்கி விடுவதாகும். அது சண்டிவளம் என்றும் சொல்லப்படும்.
பகரம் கொடுப்பதென்பது பேசிக் கொள்ளாமல் – அவள் ஒப்புக் கொண்டுவிடுவாள் என்று எண்ணி குல்உ செய்து விட்ட பின் அவள் அதனை ஏற்றுக் கொண்டால், அவள் அவனுக்குத் தன் போன்றவர்களிடையே வழக்கில் இருக்கும் மஹரைப் போன்ற தொகையைக் கொடுப்பது கட்டாயமாகும்.
'உன்னை ஆயிரத்திற்குப் பகரமாக தலாக் சொன்னேன் அல்லது குல்உ செய்தேன் என்று கணவனே தொகையைக் குறிப்பிட்டு சொன்னால், அவள் அதனை ஒப்புக் கொள்வதற்கு முன் இவன் மீண்டு கொள்ளலாம். அவள் ஒப்புக் கொள்வதானால் அந்த இடத்திலேயே உடனே ஒப்புக் கொள்ளவேண்டும். உடனடியாக ஒப்புக் கொள்ளவில்லையானால் குல்உ செல்லாது.
நீ எப்போது இன்ன தொகையை எனக்குத் தருகிறாயோ அப்போது நீ தலாக் என்று கணவன் மனைவி இடம் கூறுவதற்கு தஃலீக்(சம்பந்தப்படுத்துதல்) என்று கூறப்படும். அவ்வாறு அந்த குறிப்பிட்ட தொகையை கொடுத்தபிறகுதான் அவள் தலாக் ஆவாள். அந்த சொல்லை விட்டு அவன் மீளவும் முடியாது. இந்த தஃலீகில் அவள் அதனை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதோ அல்லது அவன் கேட்டதை விரைவாகக் கொடுத்துவிட வேண்டுமென்பதோ ஷர்த்தில்லை.
நீ இன்னதைத் தந்தால் நீ தலாக் என்று நேரத்தை சம்பந்தப்படுத்தாமல் கூறினால் உடனடியாக கொடுப்பது நிபந்தனையாகும். அப்படிக் கொடுத்தால்தான் தலாக் உண்டாகும். இதற்கு தன்ஜீஜ் -ஒன்றையும் கொழுகாமல் வட்டுருக்கமாக பேசுவது என்று கூறப்படும்.
குல்உ உடைய விஷயத்தில் அவள் அவனுக்குக் கொடுப்பதற்கு பதிலாக அவன் அவளுக்குக் கொடுக்க வேண்டிய மஹரை நீக்கி விடுவதும் உண்டு.மனைவி தன்னுடைய மஹரை நீக்கி விடுவதற்கு அவள் பருவமடைந்தவளாகவும், சுய விளக்கமுள்ளவளாகவும் இருக்க வேண்டும். இன்னும் கணவன் மனைவி இருவருமே மஹருடைய அளவை (பெறுமதியை) அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் அந்த மஹரில் ஜகாத் விதியாகாமலும் இருக்க வேண்டும்.ஜகாத் விதியாகி இருக்கும் நிலையில் அதனைக் கணவனை விட்டும் நீக்கினால் கூடாது. ஏனெனில், அவன் மஹர் முழுவதையும் நீக்கி விட வேண்டும் என்று நிபந்தனையிட்டிருப்பதால் கூடாது.
கணவன் மனைவியிடம் நீ என்னை உன் மஹரை விட்டும் நீக்கி விட்டால் ஒரு மாதத்திற்குப் பின் நீ தலாக் ஆவாய் என்று கூறினான். அவ்வாறே அவள் மஹரை விட்டும் நீக்கி விட்டால் அவன் நீங்கி விடுவான்.பிறகு அவன் ஒருமாதம் வரை உயிருடன் இருந்தால் ஒருமாதம் முடிந்தவுடன் அவள் தலாக் ஆகிவிடுவாள். ஒரு மாதத்திற்கு முன் அவன் இறந்து விட்டால் அவள் தலாக் ஆக மாட்டாள். அவனின் சொத்திற்கும் வாரிசாக இருப்பாள். இத்தாவும் இருப்பாள்.
இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்படி தலாக்கை நாடப்படாத குல்உ என்ற சொல்லைக் கொண்டு ஏற்பட்ட பிரிவினையாகிறது ஃபஸ்குவைப் போல் எண்ணிக்கையை குறைக்காதது ஆகும். அதன்படி எத்தனை தடைவ குல்உ செய்தாலும் தஹ்லீல் இல்லாமல் அவளை நிகாஹ் செய்து சேர்த்துக் கொள்ளலாம். இதுதான் ஷாஃபியீ மத்ஹபின் ஃபத்வாவாக இருக்கும்.
தலாக்
ஹலாலான காரியத்தில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமானது தலாக்காகும் என்று ஹதீதில் கூறப்பட்டுள்ளது.
தலாக் சொல்வதில் வாஜிபு: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் நான் உடலுறவு கொள்ள மாட்டேன்' என்று சத்தியம் செய்தான். அதனால் அவளை உடலுறவு கொள்ளாமல் துன்புறுத்துவது அநீதியானதால் அவளைத் தலாக் சொல்வது வாஜிபாகும்.
தலாக்கில் சுன்னத்: அவளுடைய கடமைகளை நிறைவேற்ற முடியாதவனாக இருந்தால், அல்லது அவள் பத்தினியாக இல்லாதிருந்தால், அல்லது அவளுடைய தீய குணத்தின் மீது பொறுமை செய்ய இயலாதவனாக அவன் இருந்தால், அல்லது எவ்விதக் காரணமுமின்றி அவனுடைய தாய் தந்தையர் அவளைத் தலாக் சொல்லிவிடுமாறு கூறினால் தலாக் சொல்வது சுன்னத்தாகும்.
தலாக் சொல்வதில்; ஹராம்: உடலுறவு கொள்ளப்பட்ட மனைவியை அவளால் கொடுக்கப்டுகின்ற குல்உவுக்குரிய பகரமின்றியே ஹைலுடைய நேரத்தில் தலாக் சொல்வதும், உடலுறவு கொண்ட துப்புரவில் தலாக் சொல்வதும்(எனினும் தலாக் சொல்லும் நிர்பந்தம் ஏற்படின் துப்புரவான நேரத்தில் ஜிமாஉ செய்யாத நிலைமையில் சொல்லலாம்) தன்னுடைய சொத்துக்கு அனந்தரம் கொள்ளவிடாத நோக்கத்தில் தலாக் சொல்வதும், அவளுக்குரிய முறைவண்ணத்தைக் கெடுக்கும் நோக்கத்துடன் தலாக் சொல்வதும் ஹராமாயிருக்கும்.
மூன்று தலாக்குகளையும் ஒரே தடவையில் சொல்வது ஹராமல்ல. ஆனால் ஒரே தலாக்கின் மீதே நிறுத்திக் கொள்வது சுன்னத்தாகயிருக்கும்.
மேற்கூறிய மூன்றுவகை தலாக்குகளைத் தவிர மற்ற தலாக்குகள் அனைத்தும் மக்ரூஹ் ஆகும்.
சிறுபிள்ளை, பைத்தியக் காரன், ஒரு பொருள் போதையுண்டு பண்ணும் என்பதை அறியாமல் சாப்பிட்டு அதனால் போதையானவன், நிர்பந்திக்கப்பட்டவன் ஆகியோருடைய தலாக் செல்லாது. நிர்பந்திக்கப்பட்டது நியாயமானதாக இருந்தால்தான் தலாக் சொன்னது செல்லுபடியாகும்.
தலாக், ஃபிராக், ஸராஹ் ஆகிய மூன்று அரபி சொற்களும் நிகாஹை விட்டும் மனைவியை நீக்குவதற்காகவே குர்ஆனில் கூறப்பட்ட வார்த்தைகளாகும். ஆகவே இந்த மூன்று வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது அதன் மொழிபெயர்ப்பையோ உபயோகித்து தலாக் கூறினால் தலாக் நிறைவேறிவிடும். விளையாட்டுக்காக சொன்னாலும் தலாக் நிறைவேறிவிடும்.
தலாக் சொல்வதில் இன்ன பெண்ணை என்று குறிப்பிடுவது ஷர்த்தாகும்.
ஒருவன் மற்றொருவனைப் பார்த்து 'நீ உன் மனைவியை தலாக் சொல்லி விட்டாயா? என்று கேட்க, 'மெய்தான்' என்று அவன் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடும். அது கலப்பற்ற சொல்லாக இருக்கும்.
சாடையான தலாக்குடைய வாசகத்தைக் கூறியவன், நான் அதைக் கொண்டு தலாக்கை நாடவில்லை என்று கூறினால் சத்தியம் செய்யச் சொல்லி உண்மையாக்கப்படும்.
ஒருவன் லைலா என்று பெயருடைய தன் மனைவியை நோக்கி, ஸயீதாவே நீ தலாக் என்று கூறினால் அவள் தலாக் ஆகிவிடுவாள். ஏனெனில் அவளை முன்னோக்கி கூறியதால் அவள் மீதே அது நிகழும். பெயரை மாற்றியதால் எவ்வித இடையூறும் உண்டாகாது. தன் மனைவி அல்லாத ஒருத்தியை முன்னோக்கி மைமூனா என்ற தன் மளைவியுடைய பெயரைச் சொல்லி மைமூனாவே, நீ தலாக் என்று சொன்னால் அவனுடைய மனைவி தலாக் ஆக மாட்டாள். ஏனெனில் அவன் முன்னிலைப்படுத்தியது வேறொருத்தியாக இருப்பதால்.
ஒருவன் தன் மனதுக்குள் ஒரு தலாக்கையோ அல்லது இரண்டு தலாக்கையோ நிய்யத்து செய்து கொண்டு உன்னை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினால் அவன் எத்தனை தலாக்கை நிய்யத்து செய்தானோ அத்தனை தலாக்கும் எற்பட்டுவிட்டதாகக் கருதப்படும். எதனையும் நினைக்காமல் பொதுவாக தலாக் சொல்லிவிட்டேன் என்று கூறினால் ஒரு தலாக் மட்டுமே நிகழும். உன்னை ஒரு தலாக், இரண்டு தலாக் சொன்னேன் என்று கூறினால் முத்தலாக்கும் நிகழ்ந்து விடும்.
தலாக் சொல்வதற்காக ஒருவனை வக்கீலாக ஆக்குவது கூடும். அந்த வக்கீல் இன்ன பெண்ணை நான் தலாக் சொல்லிவிட்டேன் என்று சொன்னால் அது நிகழ்ந்து விடும். என்னை வக்கீலாக்கினவனுக்காக என்று அவன் நிய்யத்து செய்யாவிட்டாலும் சரி.
தலாக்குடைய வாசகங்களை ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது அவர் மொழிவதினாலோ எழுதுவதினாலோ உதாரணங்கள் கூறி விளக்குவதினாலோ உண்மையில் தலாக் என்பது நிகழ்ந்து விடாது.
முத்தலாக்கு விபரம்.
ஒருவன் தன் மனைவியை நோக்கி, உன்னை முத்தலாக்குச் சொல்லிவிட்டேன் என்று சப்தமிட்டுச் சொல்லியபின் இரண்டு தலாக்கைத் தவிர என்று மெதுவாக, தனக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னால், அந்த நீக்குதல் செல்லும். ஒரு தலாக் மட்டுமே நிகழும். இன்ஷாஅல்லாஹ் நீ தலாக் என்று ஒருவன் சொன்னால் தலாக் நிகழாது.
தலாக்கை நிபந்தனைப்டுத்தி சொல்லலாம். உதாரணமாக நீ வீட்டில் நுழைந்தால் தலாக் என்று நிபந்தனையிட்டு சொன்னால் அவள் வீட்டில் நுழைந்தால் தலாக் ஏற்பட்டுவிடும்.
முத்தலாக் சொல்லப்பட்டவளை சொன்னவன் மீண்டும் மனைவியாகச் சேர்த்துக் கொள்வது பற்றிய விபரம்:
'பின்னர் அவளை அவன் (முத்)தலாக் சொல்லிவிட்டால், அவனல்லாத ஒரு கணவனை அவள் திருமணம் செய்யும் வரையில் அவள் அவனுக்கு ஹலாலாக மாட்டாள்.' – அல்-குர்ஆன் 2:130
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரு ஆண்டு கால ஆட்சிவரை ஒரு மனிதர் முத்தலாக்கு ஒரே தடவையில் சொன்னாலும் அதை ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டு வந்தது. பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது ஆட்சியின் மூன்றாவது ஆண்டில் முத்தலாக்கை ஒரே தடவையில் சொன்னாலும் அதை மூன்று தலாக்குகளாகவே கணக்கிட வேண்டுமென்று கட்டளையிட்டார்கள். அந்த காலத்தில் முத்தலாக் என்ற விஷயத்தில் மக்கள் கேலிக் கூத்தாக்கியதனால் உமர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
இவர்களின் இந்த கருத்தையே நான்குபெரும் இமாம்களும் கொண்டு சட்டமியற்றியுள்ளனர்.
ஒரு நிகாஹிலோ அல்லது பல நிகாஹிலோ முத்தலாக்கு சொன்ன சுதந்திரமான மனிதனுக்கு (அவன் ஓர் அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும் சரி) அவனால் தலாக் சொல்லப்பட்டவள் மீண்டும் அவனுக்கு ஹலாலாக வேண்டுமென்றால், அவனல்லாத வேறொருவனுக்கு சரியாக நிகாஹ் செய்து கொடுக்கப்பட்டு அவன் அவளுடைய முன் துவாரத்தில் உசும்புதலுடைய தன் ஆண் குறியை கத்னாவரை மறையும் படியாக நுழைய வைத்து, பிறகு அவன் அவளைத் தலாக் சொல்லி, அதற்குரிய இத்தா முடிந்த பின் முந்தியவன் அவளை மீண்டும் நிகாஹ் செய்து கொண்டு தான் அவள் அந்த முந்திய கணவனுக்கு மீண்டும் ஹலாலாவாள். இரண்டாவது கணவனுடைய விந்து வெளிப்பட வேண்டுமென்று நிபந்தனையில்லை. இதற்கு தஹ்லீல் என்று கூறப்படும்.
தலாக் சொன்னதும், தலாக் சொன்னதாக விண்ணப்பம் செய்ததும் நீதமான சுதந்திரவான்களான இரண்டு சாட்சிகளைக் கொண்டு தரிபடும். பெண்களுடைய சாட்சியத்தால் தரிபடாது. பாவம் செய்பவர்களின் சாட்சியத்தாலும்,அடிமையின் சாட்சியத்தாலும் தரிபடாது. இதற்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும்.
தலாக் சொன்னவனைக் கண்ணால் காண வேண்டும். தலாக் சொல்லும் போது அதன் சப்தத்தைக் கேட்க வேண்டும். சப்தத்தை மட்டும் கேட்டுச் சொல்லும் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ரஜ்ஈ தலாக்கின் சட்டம்:
ரஜ்ஈ தலாக் என்பது இத்தா முடிவதற்குள் மனைவியைத் திரும்ப மீட்டுக்கொள்ளும் தலாக் என்பதாகும். மீட்டுக்கொள்வது இரண்டு தடவைகளாகும். அதைப் பற்றி இறைவன் குர்ஆனில்,
(ரஜ்யிய்யாகிய திரும்ப மீட்டுக்கொள்ளக் கூடிய) தலாக்காகிறது, இரண்டு தடவைகளாகயிருக்கும். (மூன்று தடவைகள் சொல்லிவிட்டால் மீட்டுக் கொள்ளக் கூடாது. அப்படி இரண்டு தலாக் சொன்னால் அவர்களை) மீட்டுக் கொண்டு முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) நன்றியுடன் விட்டுவிடலாம்' என்று கூறியுள்ளான்.-அல்-குர்ஆன் 2:229
ஃபஸ்கினால் பிரிந்தவளையும், பகரமாக ஒரு பொருள் கொடுத்து (அதாவது குல்உ செய்து) பிரிந்தவளையும், உடலுறவு கொள்ளும் முன் பிரிந்தவளையும், தலாக் சொல்லி இத்தா முடிந்தவளையும் மீட்டுக்கொள்வது கூடாது. இந்த நால்வரையும் திரும்ப மனைவியாக்கிக் கொள்ள வேண்டு மென்றால் புதிதாக நிகாஹ் செய்ய வேண்டும்.சாட்சிகளும், புதிய மஹ்ரும் ஏற்படுத்த வேண்டும். (இந்த விஷயங்களில் தஹ்லீல் தேவையில்லை.)
ரஜ்இய்யத்தான ஒரு தலாக், இரண்டு தலாக் சொல்லப்பட்டவளை மீட்டிக் கொள்வதற்கு முன் தனிமையாகப் பார்ப்பதோ, அவளிடம் வேறு ஏதேனும் சுகம் பெறுவதோ ஹராமாகும். தலாக் சொன்னானா இல்லையா என்று சந்தேகம் வந்தால் அவள் தலாக் ஆக மாட்டாள். இதில் பேணுதலாகிறது அவளை ரஜ்ஈ தலாக் சொல்லி மீட்டிக் கொள்வதாகும். ஒரு தலாக் சொன்னோமா இரண்டு தலாக் சொன்னோமா என்று சந்தேகம் ஏற்பட்டால் குறைந்தது தான் உண்டாகும்.
ஈலாஉ (சத்தியம் செய்தல்) உடைய சட்டம்.
தங்கள் மனைவிகளுடன் உடலுறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பது உண்டு. (அல்குர்ஆன் 2:226) என்ற ஆயத்து மனைவியுடன் சேரமாட்டேன் என்று கணவன் சத்தியம் செய்வதற்குரிய சட்டத்தை விளக்குகிறது.
உடலுறவு கொள்ளக் கூடிய கணவன் தன் மனைவியை நோக்கி நான் உன்னை நான்கு மாதங்களுக்கு உடலுறவு கொள்ள மாட்டேன் என்று சொன்னாலோ அதுமுதல் நான்கு மாத காலம் வரை அவளுடன் சேருதல் கூடாது. அதற்குள் அவள் அவனை உடலுறவுக்கு அழைத்தால் அல்லது அவனாகவே அவளை உடலுறவு கொண்டால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததற்காக சத்தியத்தை முறித்ததற்குரிய குற்றப்பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
நான்கு மாதங்களுக்குப் பின் அவள் அவனை உடலுறவுக்கு அழைக்கலாம். அல்லது தலாக் சொல்லுமாறு கேட்கலாம். இந்த இரண்டிலொன்றொன்றை அவன் செய்ய மறுத்தால் காழியிடம் சொல்லி விட வேண்டும். அவர் அவளைத் தலாக் சொல்லி விடுவார்.
மேற்கூறப்பட்ட ஈலாஉவில் தலாக்கை சம்பந்தப்படுத்தி சத்தியம் செய்திருந்தால் தலாக் நிகழ்ந்து விடும்.
சத்தியத்தை முறித்தால் அதற்குரிய பரிகாரமாவது அல்லாஹுதஆலா குர்ஆனில் சொல்லியவாறு பத்து ஏழைகளுக்கு நடுத்தரமான உணவளிக்க வேண்டும். அல்லது பத்து ஏழைகளுக்கு ஆடைகள் கொடுக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை உரிமைவிட வேண்டும். இம்மூன்றில் எதனையும் செய்ய இயலாவிட்டால் மூன்று நோன்புகள் வைக்க வேண்டும்.
ளிஹார் உடைய சட்டம்.
தனது மனைவியை தன் தாய் போன்ற மஹ்மரமத்தானவளுக்கு ஒப்பிட்டு பேசுவது பற்றிய சட்ட விளக்கம்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான், 'எனவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், (தம் மனைவியர் அந்தத் தாயைப்போல் மஹ்ரம் ஆகிவிடுவார். பின்னர்) அக்கூற்றிலிருந்து திரும்பி (மீண்டும் மனைவியருடன் சேர்ந்து கொள்ள விரும்பி) னால் அவ்விருவரும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இல்லாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்துக்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (என்று) இதன்மூலம் நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்.அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கிறான்.- அல்குர்ஆன் 58:3.
ளிஹார் என்பது வமிசத்தால் அல்லது பால்குடியால் மஹ்ரமாக இருக்கின்ற ஒரு பெண்ணுக்கு தன் மனைவியை ஒப்பிட்டுக் கூறுவதாகும். ஆனால் திருமண சம்பந்தத்தால் மட்டும் மஹ்ரமாகிப் போன ஒரு பெண்ணுக்கு ஒப்பிடுவது ளிஹார் ஆகாது.
இவ்வாறு சொல்லியவன் நீ தலாக் என்றோ, உன்னைத் தலாக் சொல்லி விட்டேன் என்றோ சொல்லுகின்ற நேரத்திற்குள் அவ்வாசகத்தைச் சொல்லாவிட்டால் அவள் அவனை விட்டு நீங்கமாட்டாள். ஆனால் ளிஹாருடைய வாசகத்தை அவன் கூறியிருப்பதால் அதற்குரிய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்றுவது அவன் மீது வாஜிபாகும். ளிஹாருடைய வாசகத்தைக் கூறிய நேரத்திலிருந்து அதற்குரிய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்றும் வரை அம்மனைவியை உடலுறவு கொள்வது ஹராமாகும்.
குற்றப் பரிகாரமாகிறது, முஃமினான ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அது சாத்தியப்படவில்லையெனில் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு பிடிப்பதாகும். அதற்கு சக்தியில்லையானால் அறுபது ஏழைகட்கு உணவளிப்பது ஆகும். அதாவது: அந்த ஊரில் உபயோகிக்கப்டும் அரிசி போன்ற தானியத்தில் ஓர் ஏழைக்கு ஒரு முத்து வீதம் (இருகைகள் நிரம்பிய அளவுக்கு முத்து என்று கூறப்படும்) அறுபது நபர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தலாக்குடைய இத்தா விபரம்:
திருமணமாகி தன் மனைவியை உடலுறவு கொள்ளும் முன்னர் தலாக் சொல்லிவிட்டால் இத்தா கிடையாது. உடலுறவுக்குப் பின் தலாக் சொன்னால் இத்தா இருப்பது வாஜிபாகும். கணவன், மனைவி இருவரும் சிறுவர்களாக இருந்தாலும், அல்லது இருவரும் பருவமடைந்தோராக இருந்தாலும் அல்லது ஒருவர் பருவமடைந்தவராக மற்றவர் சிறுவயதுடையவராக இருந்தாலும் இத்தா வாஜிபாகும். இத்தா விதியானவள் கர்ப்பவதியாக இருந்தால் குழந்தை பெற்றவுடன் இத்தா முடிந்து விடும். ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு:
1. வயிற்றிலுள்ள குழந்தை முழுவதும் வெளியாக வேண்டும். அது உயிருடன் பிறந்தாலும் சரி, உருவம் நிரப்பமாயிருக்கும் மய்யித்தாக வெளியானாலும் சரி, உருவம் முழுமை பெறாத சதைக் கட்டியாயிருந்தாலும் சரி. ஆனால், அது மனித உருவம்தான் என்று மருத்துவச்சிகள் சாட்சி கூற வேண்டும். இன்னும் அந்த கர்ப்பம் இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருப்பின் அத்தனை குழந்தைகளும் வெளியாக வேண்டும்.
2. பிறக்கும் அக்குழந்தை யாருக்காக இத்தா இருக்கிறாளோ அவன் பக்கம் சேர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும். ஒரு பெண் ஜினாவினால், அல்லது சந்தேகமான உடலுறவினால் கர்ப்பமாயிருந்தால் தலாக் சொன்னவனுடைய இத்தா குழந்தையை பிரசவிப்பதால் முடியாது. எனினும் பிரசவித்த பின்பும் தலாக் சொன்னதற்காக தனியா இத்தா இருக்க வேண்டும். இந்த சட்டம் கர்ப்ப காலத்தில் ஹைளு வராமலிருந்தால்தான். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்திலும் ஹைளு வந்தால் அவளுக்கு மூன்று துப்புரவின் மூலம் இத்தா முடிவடையும்.
இத்தா விதியானவள் கர்ப்பவதியாக இல்லையானால், அவள் மாதவிடாய் வருபவளாக இருந்தால் மூன்று துப்புரவைக் கொண்டு அவளுடைய இத்தா முடிவடையும். துப்புரவான நேரத்தில் தலாக் சொல்லியபின் அடுத்த நிமிடத்தில் அவளுக்கு ஹைளு வந்து விட்டாலும் ஒரு துப்புரவு முடிந்து விட்டது. பின்னர் இரண்டு துப்புரவு ஆனபின்னர் அவளுடைய இத்தா முடிவடைந்து விடும்.
ஹைளுடைய நேரத்தில் தலாக் சொன்னால் பிறகு மூன்று துப்புரவு ஏற்பட்டு நான்காவது ஹைளு ஏற்பட்ட நேரத்தில்தான் இத்தா முடிவடையும். முதலாவது ஹைளுக்கும் இரண்டாவது ஹைளுக்குமிடையில் நீண்ட நாட்கள் இருப்பதிலோ அல்லது குறைந்த நாட்கள் இருப்பதிலோ எந்த வித்தியாசமுமில்லை.
சில பெண்களுக்கு பதினைந்து நாட்கள் ஹைளு வரும். பிறகு ஆண்டுக்கண்காக கூட அவர்கள் துப்புரவாக இருப்பார்கள். இத்தகைய பெண்கள் தலாக் சொல்லப்பட்டாலும் மூன்று துப்புரவுக்குப் பிறகுதான் இத்தா முடியும்.
தலாக் சொல்லப்பட்டவள் ஹைளு வராத சிறுமியாக இருந்தாலும், அல்லது ஹைளு நின்றுவிட்டவளாக இருந்தாலும் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் எல்லாம் தலாக்குடைய இத்தாவைப் பற்றியதாக இருக்கும்.
ஏதேனும் ஒரு நோயின் காரணமாகவோ அல்லது பால் கொடுப்பதின் காரணமாகவோ அல்லது எவ்விதக் காரணமுமின்றியோ ஹைளு வராதவளாக இருந்தால் ஹைளு நின்று விடுகிற வயதை அடையும் வரை பொறுமையுடனிருந்து பிறகு மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.
இத்தா விதியாவதெல்லாம் இரண்டு காரணங்களுக்காக இருக்கும். ஒன்று தலாக் மற்றொன்று மவ்த். எனவே ஃபஸ்கு செய்தாலும், ஃகுல்உ ஏற்பட்டாலும், அல்லது பால்குடி, மதம் மாறுதல் போன்றவற்றால் நிகாஹ் முறிந்தாலும், சந்தேகமான உடலுறவு ஏற்பட்டாலும் மேற்கூறப்பட்ட தலாக்குடைய இத்தாவைப் போன்று தான் இத்தா இருக்க வேண்டும்.
மௌத்துடைய இத்தா:
உங்களிலிருந்து எவர் மனைவியரை விடடு இறந்து விடுகிறார்களோ அத்தகைய பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் எதிர்பார்க் வேண்டும். (குர்ஆன் 2:234) என்ற ஆயத்து மௌத்தின் இத்தாவுடைய சட்டத்தை விளக்குகிறது.
ஒரு பெண் ரஜ்யிய்யத்தான தலாக்குடைய இத்தாவிலிருக்கும்போது அந்தக் கணவன் இறந்து விடுவானேயானால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும்.
எந்தப் பெண்ணும் தன் கணவன் இறந்து விட்டதற்காகத் தவிர வேறு எந்த மய்யித்திற்காகவும் மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது கூடாது. கணவனுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பது வாஜிபாகும்' என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
வண்ணமுள்ள உடைகள் அலங்காரம் உண்டுபண்ணுமையாகையால் அவை முரட்டுத் துணியாக இருந்தாலும் இத்தா இருப்பவள் அவற்றை அணியாமல் இருப்பது வாஜிபாகும். வண்ணமில்லாத பட்டுத் துணியை அணிவது கூடும். இரவிலும் அணியலாம்.
நறுமணம் பூசாமலிருப்பதும், பகல் வேளையில் தங்கம், வெள்ளி நகைகள் மோதிரம், காதணி போன்றவற்றை அணியாமலிருப்பதும் அது உடைக்குள்ளிருந்தாலும் சரி வாஜிபாகும். மருதாணி இடுவதும், தலைக்கு வாசனை எண்ணெய் இடுவதும் கூடாது.வெற்றிலை போடுவது கூடும்.
முத்தலாக்கின் மூலம் அல்லது குல்உவின் மூலம் அல்லது ஃபஸ்கு செய்ததின் மூலம் கணவனை விட்டு பிரிந்தவளும் மேற்கூறப்பட்ட முறையில் துக்கம் அனுஷ்டிப்பது சுன்னத்தாகும். ரஜ்யிய்யத்தான தலாக்சொல்லப்பட்டவளும் இவ்வாறு துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் அலங்கரித்துக் கொள்வதால் கணவன் தன்னை மீட்டிக் கொள்வான் என்று ஆசை வைத்தால் அலங்கரிப்பது சுன்னத்து.
கணவன் இறந்து விட்டதற்காகவோ, அல்லது பஸ்கின் காரணமாகவோ இத்தா இருப்பவள் கணவன் பிரியும்போது இருந்த இடத்திலேயே இருப்பது வாஜிபாகும். இத்தா முடியும் வரை முக்கிய தேவைகளுக்காக வெளியில் பகலில் செல்லலாம். இரவில் செல்லக் கூடாது. இரவில் தன் வீட்டிலேயே தங்க வேண்டும். ரஜ்இய்யத்தான தலாக் பெற்றவள் இத்hவுடைய காலத்தில் அவனுடைய அனுமதியின்றி வெளியேறுவது கூடாது. இத்தா இருப்பவளுக்கு இத்தா முடியும்வரை குடியிருப்புக் கொடுப்பது வாஜிபு. ஆனால் அவள் இது விஷயத்தில் பிணக்கம் ஏதும் இல்லாதவளாக இருக்க வேண்டும்.
இத்தா இருப்பவள் தன் உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து ஏற்படும் என்று பயந்தால் வீட்டை விட்டு வெளியேறலாம். இத்தா இருப்பவள் தன்னைப் பிரிந்த கணவனுடன் குடியிருப்பது கூடாது. அவள் இருக்கும் வீட்டில் அவனும் (குருடனாக இருப்பினும் சரியே) நுழைவது கூடாது. அவ்வாறு நுடைந்தால் இயன்றமட்டும் அவனைத் தடுப்பது வாஜிபாகும்.
கணவன் அவளைப் பிரியும் நேரத்தில் அவள் பிரயாணத்தில் இருந்தாலும் அல்லது வேறு எங்கு இருந்தாலும் சொந்த வீட்டிற்குத் திரும்புவது வாஜிபு.
அடிமைப் பெண்ணும், பாதி அடிமை பாதி உரிமையுடையவளாக இருந்தாலும் சரி- உரிமைச் சீட்டு எழுதப்பட்டவளும், தன் எஜமானனுக்கு பிள்ளை பெற்றெடுத்தவளும் ஆகிய இவர்களெல்லாம் மௌத்துடைய இத்தா இரண்டு மாதங்கள் ஐந்து நாட்கள், தலாக்குடைய இத்தா இரண்டு துப்புரவுகளும் இருக்க வேண்டும். கர்ப்பவதியானவளுக்கு அவள் சுதந்திரமானவளாக இருப்பினும், அடிமையாகயிருப்பினும் குழந்தையைப் பெற்றெடுப்பது கொண்டு தலாக் உடைய இத்தாவும், மௌத்துடைய இத்தாவும் முடிவடைந்து விடும்.
தலாக் சொல்லப்பட்டவள் மூன்று குரூஉகள் (மூன்று கால கட்டங்கள்) எதிர்பார்க்கவும் (இத்தா இருக்கவும்)'-அல்குர்ஆன் 2:228
குரூஉ என்பதற்கு கால கட்டங்கள் என்பது பொருளாகும். மூன்று காலகட்டங்கள் என்பது ஹனஃபி மத்ஹபு படி மூன்று முறை மாதத் தீட்டு வரும் காலம் என்றும், ஷாஃபி மத்ஹபு படி மூன்று முறை (மாதத் தீட்டை விட்டும்) துப்புரவாக இருக்கும் காலமென்றும் வியாக்கியானப் படுத்தப்பட்டுள்ளதால் அந்தந்த மத்ஹபுகளின் படி அந்தந்த மத்ஹபுக்காரர்கள் இத்தா இருப்பது அவசியம். ஷாஃபி மத்ஹபு படி இத்தா முடிவதற்கு மிகக் குறைந்த காலம் 32 நாட்களும் இரண்டு வினாடிகளும் ஆகும். மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லப்பட்டால் அவளின் இத்தா முடிவதற்கு மிகக் குறுகிய காலம் 47 நாட்களும் ஒரு வினாடியுமாகும்.
ஜினாவில் கர்ப்பமுற்ற ஒரு பெண்ணை அவளுடைய கணவன் தலாக் சொன்னால் அவள் குழந்தை பெறுவது கொண்டு இத்தா முடிவடையாது. மாறாக, பிள்ளைப் பேற்றின் இரத்தம் நின்ற பின் இரண்டு துப்புரவு கொண்டு அவளுடைய இத்தா முடிவடையும்.
ரஜ்இய்யத்தான தலாக் சொல்லப்பட்ட பெண்ணை இத்தாவிற்குள் மீட்டிக் கொள்ளாத கணவன் அவளிடம் கலந்துரையாடுவதால் இத்தா முறிந்து விடும்.
சாதாரணமான நேரத்தில் எவரெவர் அவளைப் பார்ப்பதும் தொடுவதும் கூடுமோ அல்லது கூடாதோ அதே போன்றுதான் அவள் இத்தா இருக்கின்ற நேரத்திலும் சட்டமாகும்.
ஃபஸ்கு உடைய விளக்கம்:
மனைவியின் சிரமத்தை நீக்குவதற்காக நிகாஹை ஃபஸ்கு செய்வது (உடைப்பது, முறிப்பது) ஷாபியீ மத்ஹபில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹனபி மத்ஹபில் இதற்கு அனுமதி இல்லை.
பருவமெய்திய அறிவுள்ள மனைவி, கணவன் உடலுறவு கொள்ளும் முன் தவணை வைக்கப்படாத தன்னுடைய மஹ்ரைக் கேட்கும்போது அவன் அதனைக் கொடுக்க இயலாதவனாக இருந்தால் அல்லது குடியிருக்க வீடு அல்லது உடையில் தாழ்ந்ததையாவது அல்லது உணவு கொடுக்க இயலாதவனாக இருந்தால் அவனுடைய நிகாஹை ஃபஸ்கு செய்வது கூடும்.
பருவமடையாக, விளக்கமில்லாத சிறிய பெண்ணுடைய நிகாஹை அப்பெண்னின் வலீகாரன் ஃபஸ்கு செய்தல் கூடாது.
பருவமடைந்தவள் மனம் ஒப்பி (நிர்பந்தமின்றி) ஒரு தடவையாவது உடலுறவு கொண்டு விட்டால் பஸ்கு செய்வது கூடாது. மஹ்ரை தவணை வைத்து எழுதி அந்தத் தவணை வந்தபிறகும் அதை அவள் கேட்டும் அவன் கொடுக்காமலிருந்தால் ஃபஸ்கு செய்வது கூடும்.
கணவன் நஃபகா கொடுக்க இயலாதவன் என்பதற்கு ஹலாலான முறையில் சம்பாதித்து கொடுக்க முடியாதவன் என்பது கருத்தாகும். ஹராமான முறையில் சம்பாதிப்பவனை ஃபஸ்கு செய்யலாம்.
வசதியுள்ளவன் ஊரிலிருந்தாலும், அல்லது (ஊரிலோ அல்லது வெளியூரிலோ) மறைவாக இருந்தாலும் )மறைவாக இருப்பவனின் தொடர்பு அற்றுப் போகாமல் இருந்தால்தான்) ஃபஸ்கு கூடாது.
ஒருவன் நான்கு மாதங்களுக்கு மேல் உடலுறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தால் (அவளுக்கு சிற்றின்ப வேட்கை மேலீட்டால் அவளுடைய கற்பு சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற கருத்தில்) அவளைத் தலாக் சொல்லும்படி அவனிடம் கேட்பது கூடும் என்று ஹன்பலீ மத்ஹபைச் சார்ந்த இமாம்கள் ஏகோபித்துக் கூறியிருப்பதாக எழுதியுள்ளார்கள். அப்படி அவன் தலாக் சொல்லாவிட்டால் அவள் ஃபஸ்கு செய்து விடலாம் என்று ஷெய்கு முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் குன்யத்துத் தாலிபீனில் கூறியுள்ளார்கள்.
மேற்கூறிய காரணங்கள் நிரப்பமாக இருப்பின் காளியானவர் கணவனுக்கு மூன்று நாள் தவணை கொடுப்பார். நான்காம் நாள் ஃபஸ்கு செய்து விடுவார். அல்லது காளியின் அனுமதியின் பேரில் அவளே 'எனக்கும் என் கணவருக்கும் இடையிலுள்ள நிகாஹை ஃபஸ்கு செய்துவிட்டேன் என்று சொல்லுவாள். மேற் கூறப்பட்ட நான்காம் நாளில் ஃபஸ்கு செய்வதற்கு முன் அவன் அன்றைய நஃபகாவை கொடுத்துவிட்டால் பஸ்கு கூடாது.
திருமணம் முடிந்து உடலுறவுக்குத் தயார் செய்யும் முன்னதாக கணவன் காணாமல் போய்விட்டால் ஃபஸ்கு கிடையாது. மாலிகீ மத்ஹபில் தன்னைத் தயார் செய்து கொடுத்தவளும், தயார் செய்து கொடுக்காதவளும் சமம்தான். அவனிடமிருந்து நஃபகாவைப் பெறுவது சிரமமாக இருந்;தால், அவனைப் பற்றி ஒரு மாதம் ஆராய வேண்டும். அந்த ஒரு மாதத்தவணைக்குள் அவனைப் பற்றி தகவல் ஏதும் தெரியவில்லையானால் ஃபஸ்கு செய்து விடலாம்.
தாயும் தந்தையும் நிகாஹை விட்டு பிரிந்து விட்டால், குழந்தை பிரித்தறியும் வயதை அடைந்திருந்தால் அவ்விருவரில் அக்குழந்தை யாரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறதோ அவர்களிடம் இருக்கும்.
ஆண் குழந்தை தாயைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் இரவில் அவளிடமும், பகலில் தந்தையிடமும் இருக்கும். பெண் குழந்தை தாயைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் எப்பொழுதும் தாயிடமே இருக்கும். தந்தை அக்குழந்தையைப் பார்த்து வரலாம். ஆனால் தன்னிடம் வருமாறு அழைக்கக் கூடாது.
இரண்டு ஆண்டுகள் நிரப்பமாகும் முன் பால்குடியை முறிக்க விரும்பினால் இரண்டு பேரும் பொருந்திக் கொண்டால்தான் முறிக்கலாம்.
ஷாபியீ மத்ஹபு கிதாபுகளிலிருந்து ஸூபி மன்ஸில் இணையதளத்திற்காக தொகுக்கப்பட்டது.