Sariu Shakadi-ஸரீஅஸ்ஸக்தி ரலியல்லாஹு அன்ஹு

Sariu Shakadi-ஸரீஅஸ்ஸக்தி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 11, 2010

ஹஜ்ரத் மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஹபீப் ராய் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களுடைய ஆன்மீக மாணவராக இருந்த இவர்கள் பழைய பொருள்களை விற்கும் வணிகராக தம் வாழ்வைத் துவங்கினர். எனவே அதன் பொருள்படும் 'ஸகதீ' என்ற பெயர் அவர்களுக்கு துவங்கலாயிற்று.
 
இவ்வாறு வணிகராக வாழ்வைத்துவங்கிய அவர்களிடம், தாங்கள் எவ்வாறு ஆன்மீக ஞானியாக மாறினீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒருநாள் நான் கடையில் அமர்ந்திருந்தேன். அவ் வழியே ஹபீப் ராய் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்றார்கள். அவர்களை நான் அழைத்து ஏழைகளுக்கு வழங்குமாறு சில பொருட்களை வழங்கினேன். அவற்றைப் பெற்றுக் கொண்ட அவர்கள், 'இறைவன் உமக்குப் பேரருள் பாலிப்பானாக! என்று வாழ்த்தினர். அக்கணத்திலிருந்து எனக்கு உன் உள்ளத்தில் உலகப் பொருள்களின் மீதுள்ள ஆசை நீங்கத் துவங்கியது.
 
அடுத்தொரு நாள் ஹஜ்ரத் மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் அனாதைச் சிறுவனை அழைத்து வந்து அவனுக்கு உடையணிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவ்விதமே நான் செய்தேன். அவர்கள் 'இறைவன் உமக்கு இவ்வுலகை வெறுப்பாக்கி உம்முடைய கவலைகன் அனைத்தையும்விட்டு உமக்கு விடுதலை வழங்குவானாக! என்று  இறைஞ்சினர். அக் கணத்திலிருந்து அவர்களின் உள்ளத்தில் எஞ்சியிருந்த சிறிதளவு ஆசையும் இல்லாதொழிந்தது. இதிலிருந்து அல்லும்பகலும் இறைவணக்கத்தில் ஈடுபட துவங்கிய அவர்கள் சிறந்த ஆன்மீக ஞானியாக, இறைநேச் செல்வராக விளங்கலானார்கள்.
 
இறைச்சி அரசர்களின் உணவு என்பதால் அவர்கள் இறைச்சி உண்பதில்லை.தாம் உண்ணும் உணவில் சிறிதளவு உடுத்து தினமும் ஒரு பறவைக்குப் போட்டு வந்தார்கள். என் நப்ஸ் தேன் உண்ண வேண்டும் என்று 40 ஆண்டுகளாக என்னிடம் கூறிக் கொண்டிருக்கிறது. எனினும் நான் மறுத்துக் கொண்டுள்ளேன் என்று கூறினார்கள்.
 
அவர்களின் தேவைகளோ மிகவும் சொற்பமானவைகளாக இருந்தன. ஐந்து பொருள்களைத் தவிர இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் வீணாணவைகளாகும். அந்த 5 பொருட்கள்:-
 
1. உயிரை வைத்துக் கொண்டிருப்பதற்கான ரொட்டி. 
2. தாகம் தணிப்பதற்கான தண்ணீர். 
3. இன உறுப்பை மறைப்பதற்கான துணி. 
4.குந்திப் படுப்பதற்கான குடிசை. 
5. அமல் செய்வதற்குத் தேவையான மார்க்க அறிவு ஆகியவைகளே என்று அவர்கள் கூறினார்கள்.
 
தாம் பாவி என்ற எண்ணமே அவர்களிடம் மிகைத்திருந்தது. எனவே தம் பாவங்கள் காரணமாக தம் முகத்தில் கருமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, அவர்கள் தம் முகத்தை ஒவ்வொரு நாளும் பல தடவை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்.
 
இறைவணக்கத்தில் அயராது ஈடுபட்டிருந்த அவர்கள் தம் விலாவை மண்ணிலே சாய்த்துப்  படுத்துறங்குவது கூட உடலுக்கு இன்பம் வழங்குவதாகக் கருதினர். எனவே அவ்விதம் தம் வாணாளில் ஒரு போதும் செய்ததில்லை. இதுபற்றி அவரது மருமகர் ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி அவர்கள், 'ஸர்ரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போல் ஒரு வியத்தகு மனிதரை நான் காணவில்லை. அவர்கள் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுதேயொழிய வேறு ஒரு பொழுதும் பூமியில் தம் விலாவை சாய்த்து படுத்ததை நான் பார்த்ததில்லை' என்று கூறினர்.
 
ஒரு நாள் ஜுனைத் அவாகள் தம் மாமாவை நோக்கி இறைகாதல் பற்றி விளக்கம் தருமாறு வேண்டினர். அதற்கு அவர்கள் ' இறைவனுடைய விருப்பத்திற்கு அடிபணிந்து ஒழுகுதல் என்று சிலரும் இறைவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து ஒழுகுதல் என்று சிலரும் அதற்கு விளக்கம் பகர்கிறார்கள் என்று பதிலுரைத்தனர். அதன்பின் அவர்கள் தன் முன்னங்கையை நீட்டி அதன் தோலை இழுத்தார்கள். அவர்கள் மிகவும் மெலிந்து இருந்ததால் தோல் எலும்போடு  எலும்பாக ஒட்டிக் கொண்டு இழுபட மறுத்தது. அப்போது அவர்கள் தம் மருமகரை நோக்கி இறைகாதல் என் சதையையும்,இரத்தத்தையும் வற்றி வறளச் செய்து என்னை இந்நிலையிலாக்கி விட்டது என்று கூறினாலும் அதில் தவறில்லை என்று கூறினார்கள். 
 
ஒரு நாள் தெருவழியே அவர்கள் செல்லும்போது அங்கு குடித்துவிட்டு ஒருவன் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். எனினும் அவன் வாயிலிருந்து,அல்லாஹ்,அல்லாஹ் என்ற சொற்கள்வெளிவந்து கொண்டிருந்தன. எனவே அவனுடைய வாயை தண்ணீர் கொண்டு வந்து கழுவிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்கள். சற்று நேரம் கழித்து தன்னுணர்வற்று மயங்கி கிடந்த அவன் எழுந்தான்.அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் நடந்த செய்தியை அவனிடம் சொன்னார்கள்.அது கேட்டு அவன் வெட்கமடைந்தான். அக்கணத்திலிருந்து அவனுடைய வாழ்வில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது.
 
அன்றிரவு  ஸர் அஸ் ஸகதீ தூங்கும்போது, 'ஸகதீ! நீர் எனக்காக வேண்டி அவனுடைய வாயை துப்பரவு செய்தீர். நாம் உமக்காக வேண்டி அவனுடைய இதயத்தை துப்பரவு செய்தோம்' என்று அசரீரி கேட்டு திடுக்கிட்டு விழித்தார்கள். அதன்பின் தஹஜ்ஜத் தொழுவதற்காக அவர்கள் பள்ளிவாயில் சென்றபோது அங்கு அவன் பயபக்தியுடன் தொழுகையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்கள். தொழுகை முடிந்ததும் இதுபற்றி அவனிடம் கேட்டபோது, அவன் அதை என்னிடம் ஏன் வினவுகிறீர்கள்? அல்லாஹ்வே தங்களுக்கு அறிவித்துள்ளானே! என்று சொன்னபோது அவர்கள் வியப்பிலாழ்ந்தர்கள்.
 
இமாமுல் அவ்லியா என்று மக்களால் அழைக்கப்பட்ட அவர்கள் மாபெரும் இறைநேசச் செல்வராக இருந்ததோடு மட்டுமில்லாமல்,பல இறைநேசச் செல்வர்களையும் சந்திக்கும் பேறு பெற்றார்கள். இறைநேசச் செல்வர்களையும் உருவாக்கியுள்ளார்கள்.
 
எவர் மீதும் காழ்ப்போ, விரோதமோ கொள்ளாது வாழ்ந்து வந்தனர். நல்ல சொல்லாற்றல் உடையவராகவும் விளங்கினர்.
 
எவன் ஒருவன் தன்னைப் பற்றி தன்னிடமில்லாத ஒன்றை மக்களின் முன் பறைசாற்றுகின்றானோ, அவன் இறைவனைவிட்டும் தொலைவிலாகிவிட்டான் என்றனர். மேலும் மனோ இச்சையின் காரணமாக செய்யும் தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு உண்டு. பெருமையினால் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கிடையாது என்று கூறி அதற்கு ஆதாரமாக, பெருமையினால் தவறு செய்த இப்லீஸ் மன்னிக்கப் பெறாததையும், மனோஇச்சையினால் ஆதம் நபி அவர்கள் செய்த காரியத்தை இறைவன் பொருத்தருளியதையும் எடுத்துக்காட்டாக கூறினர்.
 
அவர்கள் மக்களை நோக்கி, வணக்கம் செலுத்த மிகவும் மேலான காலம் ஒருவனின் இளமைப் பருவமெயாகும் என்றனர். நீங்கள் பணக்கார அண்டை வீட்டார் தொடர்பையும், பணத்திற்காக தம் மார்க்க அறிவை விற்பவர் தொடர்பையும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினர்.
 
அவர்கள் அடிக்கடி செய்யும் இறைஞ்சல் ' இறைவனே எனக்கு நீ எத்தகைய தண்டனையைத் தந்த போதிலும் சரி, உன்னைத் தரிசிப்பதைத் தடை செய்யக் கூடிய தண்டனையை மட்டும் என்க்கு தந்துவிடாதே' என்பதாகும்.
 
நான் பகுதாதில் மரணமெய்த விரும்பவில்லை. ஏனெனில் என்னை பூமி ஏற்றுக் கொள்ளாது வெளியே தள்ளிவிடுமோ என்று அச்சமாக உள்ளது என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவரது மருமகர் ஜுனைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைக் காணச் சென்றார்கள். அவர்களி;டம் தங்கள் நிலை எவ்வாறு உள்ளது? என்று கேட்டார்கள். எச்செயலையும் ஆற்ற சக்தியில்லாத ஓர் அடிமையின் நிலைமை எவ்வாறிருக்குமோ அவ்வாறு உள்ளது என்றனர்.
 
இறுதியாக அவர்கள் முடிவும் அண்மியது.இதனை உணர்ந்தஜுனைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'தமக்கு இறுதி அறிவுரை சொல்லுங்கள்' என்று கேட்டனர். அதுகேட்ட அவர்கள் தம் மருமகரை நோக்கி, 'இறைவனின் படைப்புகளுடன் கலந்துறவாடுவதன் மூலமாக இறைவனை அசட்டை செய்துவிட வேண்டாம்' என்றனர். சிறிது நேரத்தில் அவர்களின் தொடர்பு இவ்வுலகைவிட்டு அறுந்தது. இது ஹிஜ்ரி 253ம் ஆண்டிலாகும் அப்போது அவர்களுக்கு வயது 98. அவர்களின் அடக்கஸ்தலம் பக்தாதிலுள்ள சூனியா என்ற அடக்கவிடத்தில் உள்ளது.