நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா?
By Sufi Manzil
கேள்வி: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான விசயங்களை அறியும் ஆற்றல் உண்டா? மறைவானவற்றின் திறவு கோல் தன்னிடமிருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே!அறியும் ஆற்றல் பிறருக்கு உண்டு என்றால் குர்ஆன் ஹதீது ஆதாரத்துடன் விளக்குக:
பதில்: மறைவானவற்றை அறியும் ஆற்றலை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அதிகமாகவே வழங்கியுள்ளான். குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
மறைவானவைகளை அறியக் கூடிய நாயன், தனமு மறைவானவைகளை ரஸூல்மார்களில் தான் பொருந்திக் கொண்டவர்களை அல்லாது மற்றவர்களுக்கு வெளியாக்க மாட்டான். (அல்-குர்ஆன்) என்ற திருவசனத்தில் தனது மறைவான விசயங்களை தான் பொருந்திக் கொண்ட திருத்தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பதாக இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
இன்ஸானை(அல்லாஹ்) படைத்து அவனுக்கு பயானை கற்றுக் கொடுத்தான்'என்ற தி இறைமறைவசனத்திற்கு, இன்ஸான் என்பது நபிபெருமான் எனவும், 'பயானைக் கற்றுக் கொடுத்தான்' என்றால் நடந்தவை, நடப்பவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். அன்னார் முன்னோர், பின்னோர் பற்றி அறிபவர்களாக இருந்தனர் எனவும் தப்ஸீர் கலை மேதைகள் கூறுகின்றனர்.
-தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல் பாகம் 7, பக்கம் 1, தப்ஸீர் காஸின் பாகம் 7 பக்கம் 2, தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 129, தப்ஸீர் ஜமல் பாகம் 4 பக்கம் 253.
'நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். உங்கள் மீது அல்லாஹ்வின் வருசை மகாத்தானதாக ஆகிவிட்டது' என்ற திருமறை வசனத்தின் கீழ்,சிருஷ்டிகளின் முடிவான் ஞானங்களும், நடந்தவை, நடப்பவை அனைத்து ஞானங்களும் கற்றுக் கொடுத்தான் என்கிறது தப்ஸீர்அராயிஸுல் பயான் (பாகம் 1, பக்கம்159)
'ஒவ்வொரு வஸ்த்துவையும் தெளிவாக விவரிக்கும் வேதத்தை உமக்கு இறக்கி வைத்தோம்.' என்ற வசனத்திற்கு எல்லா அறிவுகளையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிபவர்களாக இருந்தார்கள். என்ற விளக்கத்தை தப்ஸீர் அராயிசுல் பயான் பாகம் 1 பக்கம் 536 ல் காணலாம்.
'அவர்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறுவதற்காகவே அன்றி வேதத்தை உமக்கு அருளவில்லை.'(அல்-குர்ஆன் 16:64)
'அவர் உங்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுப்பார். நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.(அல்குர்ஆன் 2:15)
நாம் எடுத்தாண்டுள்ள வேத வசனங்களை தீர ஆராய்ந்து பார்க்கின் பின்வருபவை தெளிவாகும்.
1. அல்லாஹ் விரும்பி தன் தூதர்களுக்கு மறைவான விஷயங்களை வெளிப்படுத்துகிறான்.
2. பெருமானார் அறியாதவற்றை அல்லாஹ் அன்னாருக்கு கற்றுக் கொடுத்தான்.
3. அண்ணலாருக்கு நடந்தவை, நடப்பவை அனைத்தும் தெரியும்.
4. திருமறையில் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5. திருவேதம் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே பெருமானாருக்கு அருளப்பட்டது.
6. பெருமானார் ஹிக்மத்தையும், மக்கள் அறியாதவற்றையும் கற்பிப்பவர்களாக இருந்தனர்.
திருமறையாம் அருள்மறையில் அனைத்து வஸ்த்துகள் குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வஸ்த்து என்று சொல்லும் போது ' ஒரு பொருள் வெளியில் இருந்தாலும், அல்லது வெளியாகாமல் கற்பனையி;ல் இருந்தாலும் சரி. அவை வஸ்த்துவில்(ஷைய்) அடங்கும்' (நூல்: ஜம்உல் ஜவாமிஃ)
எனவே அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அருள்மறையை கற்றுகு; கொடுக்கிற தகுதிபெற்ற தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
'ஒரு நாள் நபியவர்கள் அஸர் தொழுவித்தபின் பிரசங்கம் செய்தார்கள். கியாமநாள் வரை நடக்கும் அனைத்து விசயங்களையும் எங்களுக்கு அறிவித்தார்கள். அதனை மனனம் செய்வோர் மனனம் செய்தனர். மறந்தோர் மறந்தனர்.'
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: திர்மிதி பாகம் 2, பக்கம் 42
'அல்லாஹ் உலகின் திரையை எனக்கு நீக்கினான். கியாம நாள் வரையிலும் நடக்கும் அனைத்தையும் எனது உள்ளங்கையில் பார்ப்பது போன்று பார்த்தேன்(அறிந்தேன்)
-தப்றானி-ஸர்கானி பாகம் 7 பக்கம் 204, கஸாயிசுல் குப்ரா பாகம் 2 பக்கம் 108, தலாயிலுன் நுபுவ்வத் பக்கம் 377.
'வானத்திலும் வானத்திற்கு மேலுள்ளவைகளும், பூமியிலும் பூமிக்கு கீழுள்ளவைகளும் பெருமானாருக்குத் தெரியும்.' என அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.
நூல்: மிஷ்காத் விரிவுரையான மிர்காத (பாகம்1, பக்கம் 463)
ஆக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரறிவுக்கு எல்லையில்லை. அவர்கள் அறிந்தவற்றின் அளவை மட்டுப்படுத்த எவருக்கும் ஆற்றலில்லை. இறைவன் ஒருவனே தனது இனிய தோழரின் அகமியத்தை அறிவான்.
நன்றி: வஸீலா 15-7-87