ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment February 24, 2015

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்பூமியில் இறங்கி 1642 வருடம் கழித்து இவர்கள் தோன்றினர். இவர்களின் பெயர் ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா என்றால் அழுபவர் என்று பொருள். பிரளயத்திற்குப் பின் இப்லீஸ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் தோன்றி, ‘உம்மால்தான் உம் இறைஞ்சுதலால்தான் இந்தப் பிரளயமும், இத்தகு அழிவும் ஏற்பட்டன’ என்று கூறியதாகவும், அதுகேட்டு தாங்கள் செய்த இறைஞ்சுதலை எண்ணி அழுததாகவும், அதன்காரணமாக இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டு என்றும், ஒரு நாயைப் பார்த்து ‘நீ எத்துணை அவலட்சணமாய் உள்ளாய்’ என்று இவர்கள் கூறியதற்காக இறைவன் இவர்களை கண்டிக்க, இவர்கள் தம் செயலை எண்ணி அழுது கொண்டு காடுகளில் அலைந்து திரிந்ததன் காரணமாக இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது என்றும், சுர்யாணி பாஷையில் நூஹ் என்பதற்கு அமைதி பெறுபவர் என்று பொருள் என்றும், பிரளயத்தில் வம்பர்கள் மடிந்து உலகம் அமைதி பெற்றதால் இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டதுத என்றும் கூறுவர்.

நபிமார்களில் இவர்கள்தான் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள். அதனால் ஷைகுல் முர்ஸலீன் என்று பெயர் ஏற்பட்டது என்றும்> கபீருல் அன்பியா என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு.

இவர்கள் ஈராக்கில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் தந்தையின் பெயர் லாமக். அன்னை பெயர் ஃபுஸூஸ்ஃ.

ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் மக்கள் நேர்மையை மறந்து அல்லாஹ்வை மறந்தனர். அக்கிரம வாழ்க்கையில் ஈடுபட்டனர். எனவே மக்களை சீர்படுத்தி, நேர்மையாளர்களாக> சத்தியசீலர்களாக வாழ வழிகாட்டியாக நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களிடையே அனுப்பி வைத்தான்.

لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.

قَالَ الْمَلَأُ مِن قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي ضَلَالٍ مُّبِينٍ

அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.

قَالَ يَا قَوْمِ لَيْسَ بِي ضَلَالَةٌ وَلَٰكِنِّي رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ

அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.

أُبَلِّغُكُمْ رِسَالَاتِ رَبِّي وَأَنصَحُ لَكُمْ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

 “நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் – மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).

அல்-குர்ஆன் 7:59-62

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஸுவாஃக், யகூஸ், யஊக், நஸர் போன்ற பெரியார்களின் பெயர்களில் உருவங்களை செய்து அவற்றை மக்கள் வணங்கி வர ஆரம்பித்தார்கள்.

அல்லாஹ் நூஹ் நபி அவர்களுக்கு சிறப்பான விசேஷங்களைத் தந்திருந்தான். அவை:

  1. ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு விசேஷ கண்ணியமும், மதிப்பும் கொடுத்திருந்தான். அவர்கள் ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் ஷரீஅத்தில் -விதிமுறைகளில் மாறுதலைச் செய்தார்கள்.
  2. ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலப் பிரளயத்தில் முடிந்து விட்டது. எனவே ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இரண்டாவது ஆதம் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் காலத்திலிருந்து மறுவழித் தோன்றல் ஆரம்பமாயிற்று.
  3. அச்சமயம் உலகில் வாழப்போகிற அத்துணை மக்களுக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்டார்கள்.
  4. முதன்முதலாக இறைநிராகரிப்பு செய்யக்கூடாது என்று மக்களை கண்டித்துப் பிரச்சாரம் செய்ய முன்வந்தது ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்.
  5. மறுமைநாளில் ஹழ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எழுப்பப்படும் நபர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்.
  6. நபிமார்களில் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள்.
  7. ஆயிரம் வருடங்களைக் கடந்தும் கூட நூஹ் நபி அவர்கள் திடகாத்திரத்துடன் இருந்தார்கள். ஒரு பல்லும் விழவில்லை. ஒரு முடியும் நரைக்கவில்லை.
  8. நாள் ஒன்றுக்கு இரவு பகல் 700 ரக்அத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
  9. சுமார் 950 வருடம் மக்களை நேர்வழிப்படுத்த பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஆனால் தம் மக்களிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள். இதைப் பற்றி அல்குர்ஆன் 10:71,72ல் இறைவன்:

  وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ وَشُرَكَاءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوا إِلَيَّ وَلَا تُنظِرُونِ

மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் – நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் – பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ

 “ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).

மக்களுக்கு நேரிடையாக பிரச்சாரம் செய்தால் அந்த மக்கள் அவர்களை அடித்து குற்றுயிராக்கி விடுவார்கள். இரவு நேரங்களில் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி மருந்திடச் செய்து சுகப்படுத்தி விடுவான். இப்படி பலதடவை நடைபெற்றுள்ளது.

அவர்களில் ஒருவன், நூஹ் நபியின் சிரசில் ஒரு தடியைக் கொண்டு முழு பலத்தோடு அடித்தான். இதனால் அவர்களது சிரசில் பலமான காயம் ஏற்பட்டு இரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது.

இதற்குப் பிறகுதான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் இரு கரங்களையும் வான்பக்கம் உயர்த்தி, ‘யா அல்லாஹ்! நீ எல்லாம் அறிந்தவனாக இருக்கிறாய். எல்லாவற்றின் அந்தரங்கத்தை அறிகிறாய். வெளிரங்கத்தை அறிகிறாய். நான் இவர்களுக்கு உபதேசிக்கிறேன். ஆனால் இவர்கள் யாரும் நேர்வழி பெறுவதாக தெரியவில்லை. மாறாக என்னை துன்புறுத்துகிறார்கள். உன் அருள் இருந்தால் மட்டுமே இவர்கள் நேர்வழி பெற முடியும். இவர்களில் யார் நேர்வழி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் பதில் சொன்னான்: உங்கள் மீது யார் விசுவாசம் கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அவர்கள் ஈமான் கொண்டு விட்டார்கள்’

அதற்கு நூஹ் நபி அவர்கள், மீதமுடையவர்களின் சந்ததியினர்களிலாவது யாராவது என்மீது விசுவாசம் கொண்டவர்களாக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

யாருமில்லை என்றான் அல்லாஹ்.

அப்படியென்றால் அவர்களை அழித்து விடுவாயாக! என்று உள்ளம் உடைந்துபோய் கேட்டார்கள்.

‘அவர்களை பிரளயத்தின் மூலம் அழிக்கப்போகிறேன். நீரும் உம்மைப் பின்தொடரும் அந்த ஒரு சிலரும் இந்த அழிவை விட்டும் பாதுகாப்பு பெறுவீர்கள்’ என்றான் அல்லாஹ்.

அல்லாஹ் ஒரு கப்பலை கட்டுமாறு நூஹ் நபிக்கு உத்தரவிட்டான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் மரங்களை நட்டு அதிலிருந்து ஒரு இலட்சத்து 24 ஆயிரம் பலகைகளை பெற்று ஒவ்வொரு பலகையிலும் ஒவ்வொரு நபியின் பெயரை எழுதினார்கள். முதல் பலகையில் அல்லாஹ்வின் பெயரையும் இறுதியில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரையும் எழுதினார்கள். கடைசி பலகையை பொருத்தியபோது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு தொனி வந்தது. அதில் நீர் தயாரிக்கும் கப்பல் நிறைவு பெற்றுவிட்டது என்று.

மற்றொரு அறிவிப்பின்படி, கடைசி பலகைகளை பொருத்திய பின் நான்கு பலகைகள் பொருத்தக் கூடிய அளவிற்கு இடைவெளி இருந்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து  எனது இறுதி நபியின் நான்கு பிரதிநிதிகளை(கலீபாக்களை) எழுதி பொருத்துங்கள் என்று சொல்லப்பட்டது. அவ்வாறு பொருத்தியதும் கப்பல் கட்டும் பணி நிறைவுற்றது.

கப்பல் கட்டி முடித்ததும் மக்கள் நூஹ் நபி அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தார்கள். மக்கள் அனைவரும் அந்தக் கப்பலில் போய் மலம் கழிக்க ஆரம்பித்தார்கள். இவர்களின் இச்செயல் நூஹ் நபி அவர்களை புண்படச் செய்தது. அதேசமயம் பிரளயம் ஏற்படப் போகும் காலமும் நெருங்கியது. அல்லாஹ்விடமிருந்தும் கப்பலை தயாராக வைத்திருக்க உத்திரவு வந்தது. கப்பலின் பரிதாப நிலையை அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அதற்கு அல்லாஹ் ஓர் அழகான உபாயம் செய்தான்.

அந்த மக்கள் அனைவருக்கும் சொரி, சிரங்கு நோயைக் கொடுத்தான். இரவும் பகலுமாக அவர்கள் சொரிந்து சொரிந்து, உடல் முழுவதும் இரணமாகி விட்டது. அந்த இரணத்தையும், சொரி, சிரங்கையும் போக்க அவர்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. இச்சமயத்தில் ஓரிரவு கப்பலில் மலம் கழித்து கொண்டிருந்த ஒருவன் அதில் தவறி விழுந்து விட்டான். பின் யாருக்கும் தெரியாது வீட்டிற்கு சென்று சுத்தமாகி கொண்டான். அத்தோடு அவனைப் பீடித்திருந்த சொறி, சிரங்கு போய்விட்டது. அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இச்செய்தி மக்கள் அனைவருக்கும் தெரியவந்தது. தங்களுடைய சொறி, சிரங்கிற்கு மக்கள் அந்த மலத்தை எடுத்து தங்கள் உடம்பில் தேய்த்துக் கொண்டார்கள். இதனால் கப்பல் இம்மியளவும் அசுத்தமில்லாது சுத்தமாகிவிட்டது.

இந்தக் கப்பலின் அளவானது நீளம் 1980 அடிகள். அகலம் 990 அடிகள். இதில் மூன்று தட்டுகள் இருந்தன. மேல் பாகத்திலிருந்த முதல் தட்டு ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காகவும், அவர்கள் மீது விசுவாசம் கொண்ட சிலருக்காகவும், நடுப்பாகத்திலுள்ள இரண்டாவது தட்டு விஷ ஜந்துகள், பறவையினங்களுக்காகவும், கடைசியிலிருந்த மூன்றாவது தட்டு ஐவாய் பிராணிகள், கால்நடைகளுக்காகவும் அமைக்கப்பட்டிருந்தன’ என்று மஆரிஜுத் நுபுவ்வத் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு தப்ஸீர்களில் பல்வேறு விதங்களாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிர்ப்பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியைத் திரட்டிக் கொள்ளும்படி அல்லாஹ்விடமிருந்து உத்திரவு வந்தது. ஐவாய் மிருகங்களுக்கிடையே இருந்த பகைமை உணர்வை அல்லாஹ் நீக்கியதால் கால்நடைகள் அன்பாகப் பழக ஆரம்பித்தன.

பிறகு மனிதர்களும், மற்ற ஜீவராசிகளும் கப்பலில் ஏற ஆரம்பித்தன. கப்பலில் தங்கியிருக்கும் வரை உடலுறவு கொள்ளக் கூடாது என்றும், மனிதர்கள் அல்லாஹ்வின் உத்திரவு வரும்வரை சாப்பிடவோ, அருந்தவோ கூடாது என்றும் அல்லாஹ் உத்தரவிட்டான். கப்பலிலுள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு தேவையான ஆகாரங்களை சேமித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.

பிரளயம் வருவதற்கு கூறப்பட்ட ரொட்டி சுடக் கூடிய கல்லினால் ஆன பாத்திரத்திலிருந்து நீருற்று ஏற்படும் என்ற அடையாளம் தென்படத் துவங்கியது. இந்தக் கல் ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரொட்டி சுட்ட கல் ஆகும். உடனே நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் குடும்பத்தினர்களை கப்பலில் ஏறச் சொன்னார்கள்.

ஆனால் அவர்களது மகன் கன்ஆன் தம் தாய் தாகிலாவுடன் கப்பலை விட்டு தூர விலகி காபிர்களுடன் சேர்ந்து நின்று கொண்டு பிரளயம் வந்து என்னை ஒன்றும் செய்யாது. நான் மலைகளின் உச்சி மீது ஏறிக் கொண்டு தப்பித்து விடுவேன் என்று சொன்னான். நூஹ் நபி அவர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவன் கப்பலில் ஏற மறுத்துவிட்டான். இதனைக் குறித்து அல்லாஹ்>

وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று. (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

قَالَ سَآوِي إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ ۚ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَن رَّحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ

அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

-அல்குர்ஆன் 11:42,43

நூஹ் நபி அவர்களுடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கும்போதே ஒரு அலை வந்து அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. அதனைக் காண சகியாத நூஹ் நபி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அதற்கு அல்லாஹ்

قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَن تَكُونَ مِنَ الْجَاهِلِينَ

 அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”

அல்குர்ஆன் 11:46ல் விரிவாகக் கூறுகிறான்.

பிரளயம் ஏற்படுவதற்கு முன் மக்களுக்கு நூஹ் நபியவர்கள் உபதேசம் செய்தார்கள். அல்லாஹ் அதனை

أَوَعَجِبْتُمْ أَن جَاءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ

உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

فَكَذَّبُوهُ فَأَنجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ

அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.

அல்குர்ஆன் 7:63,64

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம் அழைத்துக் கொண்ட பரிவாரத்தோடு ரஜப் மாதம் 10 ஆம் கூபா அல்லது இந்தியாவிலிருந்து கப்பலில் புறப்பட்டார்கள். அவர்களோடு வந்த மக்களில் அவர்களின் முஸ்லிம் மனைவி அவர்களுடைய ஹாம், ஸாம், யாபிஸ் என்ற மூன்று மகன்களும், அவர்களுது மனைவிமார்களும் இருந்தனர். மனிதர்களாக அக்கப்பலில் இருந்தவர்கள் மொத்தம் 8 பேர்தான் என்றும் ஒரு குறிப்பில் காணக் கிடக்கிறது.

அல்குர்ஆன் 54:10-13 வசனங்களில் நூஹ் நபி அவர்கள் கட்டிய கப்பல் பற்றியும், பிரளயம் பற்றியும் கூறுகிறான்.

فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ

அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே> நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُّنْهَمِرٍ

ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.

وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ

மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.

وَحَمَلْنَاهُ عَلَىٰ ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ

அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.

அல்குர்ஆன் 54:10-13

நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அங்கிருந்து புறப்பட்ட உடனே, உலகில் ஒரே இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளில் பகல்-இரவு என்ற வித்தியாசமே தெரியாது போய்விட்டது. தொடர்ந்து 40 நாட்கள் இரவும்> பகலும் பலத்த மழை பெய்து முழு பூமியும் வெள்ளக்காடாகி விட்டது. பொங்குக் கடலுக்கும்> பூமிக்கும் வித்தியாசமே தெரியாது போய்விட்டது. அந்தக் கப்பல் பூமயின் எல்லாப் பாகங்களிலும் வலம் வந்து கொண்டிருந்தது.

கஃபத்துல்லாஹ்வை பாதுகாக்க அல்லாஹ் அதனைச் சுற்றி ஓர் இயற்கையான தடுப்பை ஏற்படுத்தியிருந்தான். கப்பல் ஏழுமுறை கஃபாவை வலம் வந்தது.

சுமார்இரண்டு மாதங்கள் அல்லது 50 நாட்கள் வரை தண்ணீரில மிதந்து கொண்டே இருந்தது. உலகிலுள்ள அத்தனை காபிர்களும் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் வானம் மழையை நிறுத்தவும், பூமி தண்ணீரை உறிஞ்சவும் அல்லாஹ் உத்தரவிட்டான். அவ்வாறே நடந்தது.  ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் ஜூதி மலை அருகே போய் தங்கி விட்டது.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பலிலிருந்து இறங்கி பூமியில் கால் வைத்த நாள் முஹர்ரம் 10 ஆம் நாள் ஆகும். நீண்ட நாட்கள் இருட்டிலிருந்து வெளியே வந்ததால் கண்கள் கூச ஆரம்பித்தன. கண்களில் கூச்சம் தெளிவடையவும், கண்களில் பார்வை சக்தி பெறவும் அவர்கள் சுர்மா இட்டார்கள். இதிலிருந்துதான் கண்களுக்குச் சுர்மா இடும் பழக்கம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலையடிவாரத்தில் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருமாறு தம் மக்களுக்கு பணித்தார்கள்.

தம் மக்களை அழித்தொழிக்க இறைவனிடம் நூஹ் அலைஹிஸ்ஸலாம் வேண்டியதால் அவர்கள் நரகவாதிகளாகிவிட்டனர். பெரும் தொகையினரை நரகவாதியாக்கி எனக்கு உபகாரம் செய்து விட்டீர்கள் என்று இப்லீஸ் நூஹ் நபியைப் பார்த்து கூறினான். இதனால் அவர்கள் மிகவும் அழுது அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினார்கள். அழுது நிலைக்குலைந்து போயிருந்த அவர்களுக்கு மரணம் சமீபத்து விட்டதாக அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு வந்து விட்டது. உடனே ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகன் ஸாமை அழைத்து அவரைத் தமது பிரதிநிதியாக அமர்த்தி பல புத்திமதிகளை கூறினார்கள். அப்போது ஸாமின் வயது 448 வருடங்கள்.

அல்குர்ஆன் அத்தியாயம் 29 வசனம் 14 ல் :

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ

மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது.

ஹழ்ரத் அப்பாஸ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 40 ஆம் வயதில் நபிப்பட்டம் கிடைத்தது. 950 வருடங்கள் தம் மக்களுக்கு உபதேசம் புரிந்து இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். பிரளயத்திற்குப் பிறகு 200 வருடங்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும்போது அவர்களுக்கு வயது 1450 வருடங்கள். இவர்கள் சிரியாவில் கர்க் என்ற இடத்தில் அடங்கப்பட்டுள்ளார்கள் என்றும், மக்காவில் அடங்கப்பட்டுள்ளார்கள் என்றும் இருவித கருத்துக்கள் உள்ளன.

Add Comment

Your email address will not be published.