ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது தலைமுறையில் வந்தவர்கள். பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் திறவுகோல் இவர்களிடம் இருந்து வந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 1800வருடங்கள் கழித்து இவர்கள் தோன்றினார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தச்சு வேலை செய்து வந்தார்கள். அதிகமாக வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள். பனீ இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் இவர்களைத் தனது நபியாக அனுப்பியிருந்தான்.

ஜகரிய்யா நபி அவர்களின் மனைவவியார் மிகவும் அழகுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருசமயம் சிலர்> ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காண அவர்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களது மனைவியைப் பார்த்தவர்கள்> ஒரு நபிக்கு இவ்வளவு அழகான மனைவி எதற்கு? என்று தமக்குள் பேசிக் கொண்டு திரும்பச் செல்ல ஆரம்பிக்கும்போது, வழியில் ஜகரிய்யா நபியை கண்டார்கள்.

அன்னார் ஒரு வீட்டில் சுவர் எழுப்பும் பணிக்காக செய்த வேலைக்கு வாங்கிய கூலியான உணவைத் தாமே சாப்பிட்டு விட்டதைக் கண்டார்கள். மேலும் அவர்கள் அங்கிருந்து செருப்பில்லாமல் நடக்க ஆரம்பி;த்து விட்டார்கள்.

இந்த மூன்று செயல்களுக்கும் (அழகான மனைவி> தாமே சாப்பாட்டை உண்டது> செருப்பில்லாமல் நடந்தது) காரணம் கேட்டார்கள் வந்தவர்கள்.

பிற பெண்கள் மீது என் பார்வை பட்டு நான் பாவக்கடலில் மூழ்காமல் இருக்கவே பேரழகியைத் திருமணம் செய்து கொண்டேன். பிறருக்குத் தராது நான் முழு உணவையும் உட்கொண்டதற்கு காரணம் அந்த உணவு எனக்கே போதாதநிலையில் இருந்தது. அந்த உணவை பிறருக்கு கொடுத்துவிட்டு நான் பலஹீனமடைந்து விட்டால்> எனக்கு வேலை கொடுத்தவருக்காக திறமையுடன் வேலை செய்ய முடியாது போய் விடுமே என்ற பயத்தின் காரணமாக, நானே அந்த உணவை உண்டு விட்டேன். காலில் செருப்பு அணியாது நான் நடக்க காரணம் நான் இருவருக்கும் சொந்தமான இரு நிலங்களில் நடக்க வேண்டியதிருந்தது. காலில் செருப்புடன் நடந்து சென்றால்> ஒருவர் நிலத்து மண்> இன்னொருவர் நிலத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே என்ற அச்சத்தில்தான்’ என்று கூறினார்கள்.

ஹழ்ரத் ஜகரிய்யா நபிக்கு நீண்ட நாட்களாகவே பிள்ளை இல்லாதிருந்தது. அவர்களக்கு அப்போது வயது 130ம்> மனைவி ஈஷாவுக்கு வயது 90ம் ஆகியிருந்தது. தமக்குப் பிறகு தவ்ராத் வேதத்தை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க வாரிசு ஒன்று வேண்டும் என்று அவர்கள் மிகவும் கவலையடைந்திருந்தார்கள்.

இதற்காக அல்லாஹ்விடம் உருக்கமாக துஆ கேட்டார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: ‘ ஓ ஜகரிய்யாவே! உமக்கு ‘யஹ்யா’ என்ற பெயருடன் ஒரு மகனைத் தரப்போகிற நன்மாராயம் கூறுகின்றோம். அந்த மகன்> மிகவும் பொறுமையுள்ளவராகவும்> இறையச்சம் அதிகமுள்ளவராகவும்> எம்முடைய தூதராகவும் இருப்பார்;’ என்று.

என் மனைவி கருவுற்று விட்டாள் என்பதற்கு நான் என்ன அடையாளம் காண முடியும்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் நீர் நல்ல உடல் நிலையிலிருக்கும் பொழுதே> திடீரென்று உம்மால் பேசமுடியாது போய்விடும். இதேநிலை உமக்கு மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அப்போது நீர் காலையிலும்> மாலையிலும் எந்நேரத்திலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிரும்’ என்று கூறினான்.

இதற்குப் பின் சிறிது காலம் கடந்ததும் ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசும் சக்தியை இழந்து விட்டார்கள். அல்லாஹ் கூறியபடி இந்தநிலை அவர்களுக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அந்த மூன்று நாட்களிலும் அவர்கள் இறைதியானத்தில் அதிகமாக மூழ்கியிருந்தார்கள்.

இதை அல்குர்ஆன் 19:3-11தெளிவாகக் கூறுகிறது.

إِذْ نَادَىٰ رَبَّهُ نِدَاءً خَفِيًّا

19:3 அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).

قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا

19:4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا

19:5. “இன்னும்> எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும்> என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே> நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!

يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا

19:6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார்> யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”

يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُ مِن قَبْلُ سَمِيًّا

19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا

19:8. (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?”எனக் கூறினார்.

قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا

19:9. “(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து> நானே உம்மை படைத்தேன்”என்று இறைவன் கூறினான்.

قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۚ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا

19:10. (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!”என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்”என்று கூறினான்.

فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِ مِنَ الْمِحْرَابِ فَأَوْحَىٰ إِلَيْهِمْ أَن سَبِّحُوا بُكْرَةً وَعَشِيًّا

19:11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர்> “காலையிலும்> மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்”என்று உணர்த்தினார்.

ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களிடம் அறவழிபோதம் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் போதனைக்கு செவியேற்று அவர்கள் மீது விசுவாசம் கொண்டு ‘இம்ரான்’ என்பவர் செயலாற்றிக் கொண்டிருந்தார்.

இம்ரான் அல்லாஹ்வின் நல்லடியாராக இருந்தார் அவரது மனைவி ஹன்னாவும் ஒரு நல்லடியாராகவே இருந்தார். இத்தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாகவே மக்கள்பேறு இல்லாதிருந்தது. ஒரு நாள் ஹன்னா பைத்துல் முகத்தஸ் நீண்டநாட்களாகவே மக்கள்பேறு இல்லாதிருந்து வருகிறது. நீ எங்களுக்கு ஓர்ஆண் மகவு அருளினேயானால்> நான் அந்தக் குழந்தையை முழுக்க முழுக்க உன் இல்லத்தின் சேவைக்கே அர்ப்பணித்து விடுவேன் என்று நேர்ச்சை செய்து கொண்டார்.

இம்மாதிரி ஹன்னா நேர்ந்து கொண்ட சிறிது நாட்களிலேயே கருவுற்று விட்டாள். தாம் கருவுற்றதை அறிந்து சந்தோஷப்பட்டு பைத்துல் முகத்தஸுக்கு சென்று யா அல்லாஹ் எனக்கு ஆண் குழந்தையைக் கொடுப்பாயாக! அதை உன் இல்லத்தில் தங்கி சேவை செய்துவர அர்ப்பணித்த விடுவேன் என்று வேண்டிக் கொண்டார்.

இதனை

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

‘இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும்> நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்”என்று கூறியதையும்

– அல்குர்ஆன் 3:35.

இதன்பின் சில மாதங்களில் இம்ரான் இறந்;து விட்டார். அவரது மறைவிற்குப் பிறகு ஹன்னா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அவர் தமக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பி மிகவும் ஆசையோடு இருந்தார். அதனால் அவருக்கு ஏமாற்றமாக போய்விட்டது. பெண் மகவை பள்ளியில் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டார்களே! தமது நேர்ச்சை என்னாவது? என்று பெரும் துக்கப்பட்டார்கள். இச்சமயத்தில் அன்றிரவு அவரது கனவில் ஓர் அசரீரி குரல் பின்வருமாறு ஒலித்தது.

ஓ ஹன்னாவே! நீ நேர்ந்து கொண்டபடி உனது குழந்தையை மஸ்ஜிதின் பணிக்கு ஒப்படைத்து விடு. அல்லாஹ் உனது காணிக்கையை ஏற்றுக்கொண்டான்’.

இதனைக் கேட்டதும் திடுக்கிட்டு விழித்தெழுந்த ஹன்னா தமது குழந்தைக்கு மர்யம் என்று சூட்டினார்கள். மர்யம் என்றால் வணக்கம் புரிபவர் என்ற பொருளும்> இறை இல்லத்தில் ஊழியம் புரிபவர் என்ற பொருளும் உண்டு.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَىٰ وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَىٰ ۖ وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

3:36. (பின்> தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்”எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண்> பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும்> அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம்> அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார்> “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்”என்று அவள்(பதில்) கூறினாள்.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

மறுநாள் காலை> குழந்தை மர்யமை ஒரு துணியால் போர்த்திக் கொண்டு மஸ்ஜித் நிர்வாகிகளை சந்தித்து தாம் அல்லாஹ்விடம் நேர்ந்து கொண்டதை சொல்லி அதற்காக இதை ஒப்புக் கொள்ளும்படி சொன்னார்கள்.

குழந்தை அழகாக இருந்ததால் பலரும் குழந்தையை வளர்க்க போட்டி போட்டார்கள். ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் வயதில் மூத்தவனாக இருக்கிறபடியால் இக்குழந்தையின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். மேலும் என் மனைவி ஈசாஉ ஹன்னாவின் சகோதரியாகவும் இருக்கிறார் என்றார்கள்.

அங்கு இவர்களையும் சேர்த்து மொத்தம் 21பேர் இருந்தனர். அவர்களில் எவரும் ஹழ்ரத் ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், ஒவ்வொருவரும் தத்தம் எழுதுகோலின் மீது அவரவர் பெயர்களை எழுதி உர்துன் ஆற்றில் எறிய வேண்டியது. அவ்வாறு எறியப்படும் எழுதுகோலில் எவருடைய எழுதுகோல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாது ஒரே இடத்தில் மிதந்து கொண்டு தங்கிவிடுகிறதோ> அந்த எழுதுகோலுக்குரியவர்களிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்து விடுவது என்று முடிவெடுத்தனர்.

இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறை அல்குர்ஆன் 3:44ல் கூறுகிறான்:

ذَٰلِكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ

‘(நபியே) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி மர்யமை (வளர்க்க) அவர்களில் எவர் பிணையேற்றுக் கொள்வதென்று (குறி பார்த்து அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்,நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை’

அவ்வாறு செய்ததும்> ஹழ்ரத் ஜகரிய்யா நபி அவர்களின் எழுதுகோலைத் தவிர மற்றெல்லாவர்களின் எழுதுகோலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அதன்படி குழந்தை மர்யமை அன்னவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் பேணிப்போடு வளர்த்து வந்தார்கள். குழந்தை சற்று பெரியதானதும் தங்கள் வீட்டினருகேயே ஒரு சிறு வீட்டைக் கட்டி அதில் அவர்களை இருக்கச் செய்து உணவுகளை அவர்களுக்கு கொடுத்து வந்தார்கள்.

இவ்வாறு சில காலலம் சென்றபின் சிறுமி மர்யமின் வீட்டிற்குள் நுழைந்த ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு விதவிதமான கனிவர்;க்கங்கள் இருக்கக் கண்டு மிகவும் அதிசயத்துப் போனார்கள். மேலும் அந்தந்த பருவங்களில் விளையும் கனிவர்க்கங்களுக்கு மாற்றமாக புதிய கனிகள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் யார் உங்களுக்குத் தருகிறார்கள்? என்று மர்யமிடம் கேட்டார்கள் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து வருகின்றன. அவன் தான் நாடியவர்களுக்கு இவ்வாறெல்லாம் உணவளிக்கிறான்’ என்று கூறினாள் சிறுமி மர்யம்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு சென்று வந்துக் கொண்டிருந்தார்கள். இவற்றைக் கண்ணாணித்துக் கொண்டிருந்த பனீ இஸ்ரவேலர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஜகரிய்யா நபிக்கு எதிராக ஆபாசமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை அவர்களுக்கெதிராக கிளர்ந்து எழச் செய்தார்கள். அவர்களுக்கு விரோதமாகப் பல கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். ஊர் மக்கள் எல்லாம் அவர்களை ஒழித்துக் கட்ட முடிவு செய்தார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நகரின் ஒதுக்குப்புறமாக சென்று கொண்டிருந்தார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணிய அவர்களது எதிரிகள் அவர்களை பயங்கர ஆயுதம் கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அந்நிலையில் புகலிடத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மரத்தினருகில் சென்று> ‘ஓ மரமே! நான் ஒளிந்து கொள்ள எனக்குப் பாதுகாப்பை அளிப்பாயாக!’ என்று இறைஞ்சிக் கொண்டார்கள். உடனே அந்த மரம் இருகூறாகப் பிளந்தது. உடனே அந்தப் பிளந்த மரத்திற்குள் ஜகரிய்யா நபி அவர்கள் நுழைந்து கொண்டார்கள். உடனே அந்த மரம் ஒன்றாக இணைந்து விட்டது.

இதில் ஷைத்தான் ஒரு வேலையை கச்சிதமாக செய்தான். ஜகரிய்யா நபி அவர்கள் மரத்தில் உள்ளே நுழைந்தபோது அவர்களின் ஆடையின் ஒரு பகுதியை பிடித்து இழுத்துக் கொண்டான். மரம் மூடினாலும் அந்த ஆடை வெளியே தெரிந்து கொண்டிருந்தது.

அவர்களை விரட்டி வந்தவர்கள் அவர்களை காணாது திகைத்து அங்குமிங்கும் நோட்டமிட்டபோது> அவர்களில் ஒருவனின் பார்வைக்கு மரத்தின் வெளியே தெரிந்து கொண்டிருந்த ஆடையின் பகுதி தென்பட்டது. அனைவருக்கும் அதனை அடையாளம் காட்டினான் அவன். அனைவரும் ஆலோசனை செய்து அந்த மரத்தை எரித்து விட முடிவு செய்தனர். ஆனால் ஷெய்த்தான் மனித உருவில் வந்து> மரத்தை எரிப்பதை விட ரம்பத்தால் இருகூறாக அறுத்து விடுங்கள். அதற்குள் அவர் ஒளிந்திருந்தால் அவரும் மரத்தோடு இருகூறாகப் பிளந்து போவார் என்று யோசனை கூறினான்.

அவன் சொன்னபடியே அந்த மரத்தை இருகூறாக அறுக்க ஆரம்பித்தார்கள். அந்த ரம்பம் அவர்களின் தலையை உரச ஆரம்பித்ததும் அவர்கள் முனகினார்கள். உடனே அல்லாஹ் வஹீ அறிவித்தான். ‘ஓ ஜகரிய்யாவே! என்னிடம் பாதுகாப்பு கேட்காது இந்த மரத்;திடம் பாதுகாப்பு கேட்டீரல்லவா? இப்பொழுது அதன் பலனையும் அனுபவியும். இனியொரு தடவை உங்களிடமிருந்து சிறு சப்தம் வந்தாலும் உமது பொய் நபிமார்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பெறும் என்று.

இதே நிலையில் ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாகி விட்டார்கள். அப்பொழுது அவர்களது வயது 300. அன்னாரது பொன்னுடல் பைத்துல் முகத்தஸில் அடக்கம் செய்யப்பட்டது.

Add Comment

Your email address will not be published.