ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
By Sufi Manzil
ஹழ்ரத் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அரபி மொழிக்காக அனுப்பபட்ட நான்கு தூதர்களில் ஒருவர் . இவர் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த தமூத் என்ற கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் தோன்றிய தமூதுக் கூட்டத்தினர் ஹிஜ்ர் என்ற பகுதியில் வாழ்ந்தனர். இக்கூட்டத்தின் தலைமைப் பூசாரியாகிய காபூக் பின் உமைதின் மகனாகவே ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள். இவர்களின் அன்னை பெயர் ஜகூமு. இவர்கள் தங்களது 40ஆவது வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள்.
ஒரு நூற்றாண்டுகள் ஒரே இறைவனைப் பிரச்சாரம் செய்தும் பயன் ஏதும் கிடைக்காததால் மனம் வருந்தினார்கள். இவர் தனது ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் முன் அவர்களது சமூகத்தார்கள் இவரை அறிவு ஜீவியாகவும் நல்ல பண்புடயவகராகவும் கண்டார்கள். அனால் எப்பொழுது அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்களோ அன்றிலிருந்து அவர் அவமதிக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள்.
அதனால் இவர்கள் தனித்து ஒரு மலைமீது சென்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும்போது துயில் கொண்டார்கள். சுமார் 40 ஆண்டுகள் தூங்கிய பின் திரும்பி வந்தபோது எல்லாம் மாறுதலடைந்திருந்தது. இவர்களைப் பின்பற்றிய பலர் இறந்து விட்டனர். ஏனையோர் தங்கள் முந்தைய மதத்திற்கு சென்று விட்டனர்.
மேலும் நபி சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சமூகமான தமூது கூட்டம் எத்தகையவர்கள் என்றால் அவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளை குடைந்து கூடாரம் அமைத்திருந்தார்கள் என்பதை அல்லாஹுவே சாட்சி கூறுகிறான்
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
-அல்-குர்ஆன் 89 -9
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي قَرِيبٌ مُّجِيبٌ
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
அதற்கு அந்த மக்கள் கூறினார்கள் ஸாலிஹே (அலைஹிஸ்ஸலாம்) இதற்கு முன்னால் உங்களை நாங்கள் எங்களது விருப்பதுக்குரிய அறிவு ஜீவியாகவே நாங்கள் உங்களை கண்டிருந்தோம். ஆனால் நீங்கள் எங்கள் மூதாதையர்கள் வணங்கி கொண்டிருந்த அந்த சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களை தடுக்க நினைக்கிறீரா. மேலும் நீர் எதன் பக்கம் அழைக்கிறீரோ நிச்சயமாக நாங்கள் அதை சந்தேகித்தவர்களாகவே இருக்கிறோம் என்று கூறினார்கள். அம்மக்கள் சாலிஹே உனக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்று அம்மக்கள் ஏளனம் செய்தார்கள் .
அதற்கு சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்கு அல்லாஹுவுடன் இருந்து நல்லுபதேசம் வந்ததே தவிர வேறு இல்லை நான் உங்களை நல்வழியின் பக்கம் அழைக்க, ஆனால் நீங்களோ என்னை வழிகெட்ட கூட்டத்தினரின் பக்கம் அழைக்கிறீர்கள்.
மேலும் அவர் அல்லாஹ் அவன் புறத்திலிருந்து அருளை எனக்கு கொடுத்திருக்க நான் அவனுக்கு மாறு செய்தால் அதற்கு அவன் என்னை தண்டிக்கும் தருவாயில் அவனிடமிருந்து என்னை காப்பாற்றுபவன் யார் ? நீங்கள் அனைவரும் எனக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் எனக்கு அதிகமாக்கி விடமாட்டீர் என்று கூறினார்.
அதற்கு அம்மக்கள் எங்களுக்கு நீங்கள் நபிதான் என்பதை நிரூபிக்க ஒரு அத்தாட்சியை கொண்டு வாரும் என்று கூறினார்கள். அப்போது தமூதுகளின் அரசன் ஒரு மலையை சுட்டிக் காட்டி அதிலுள்ள பாறை ஒன்றிலிருந்து ஒரு சினையான ஒட்டகம் வெளிப்பட வேண்டும் என்றும் அது வெளிப்பட்ட அடுத்தகணம் எங்கள் கண்முன்னால் வைத்து ஒரு குட்டியை ஈன வேண்டும் என்றும் அவ்விதம் செய்யின் இவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான்.
பிறகு அதனை சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹுவிடம் மன்றாடியதில் 120 முழ நீளமும்> 100 முள அகலமும் 50 முழ உயரமும் உள்ள பிரமாண்டமான ஒட்டகம் ஒன்று அப்பாறையைப் பிளந்து ஒரு குட்டியை ஈன்றது. அதைக் கண்ட மன்னனும் மற்றும் பலரும் உருவத் தொழும்பை விட்டொழித்து அல்லாஹ்வின் அருள்மார்க்கத்தை மேற்கொண்டனர்.
மேலும் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
وَيَا قَوْمِ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக் கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதி சீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்). – அல்-குர்ஆன் 11:64
அவ்வொட்டகம் 30 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தது. அது பகலில் காடுகளுக்குச் சென்று மேய்ந்து விட்டு இரவில் ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் போய் நிற்கும். அதன் மடுவின் கீழ் கலசத்தை வைப்பின் பால் தானாகவே அதிலிருந்து சொட்டும். இவ்வாறு ஊரிலுள்ளோர் அனைவருக்கும் பால் வழங்கிவிட்டு அது ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பள்ளியில் போய்ப் படுத்துக் கொள்ளும்.
ஆனால் அம்மக்கள் அந்த ஒட்டகத்தை துன்புறுத்த நாடினார்கள். அதனிலும் அக்கூட்டத்து பெண்கள் அதில் மும்முரமாக இருந்தார்கள் .
மேலும்
قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِن قَوْمِهِ لِلَّذِينَ اسْتُضْعِفُوا لِمَنْ آمَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَالِحًا مُّرْسَلٌ مِّن رَّبِّهِ ۚ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلَ بِهِ مُؤْمِنُونَ
7:75. அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் – அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
அதற்கு அந்த கூட்டத்தின் தலைவர்கள் நீங்கள் நிச்சயமாக எதை விசுவாசம் கொள்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்க கூடியவர்கள் என்று கூறினார்கள்.
அதற்கு அந்த சமூது கூட்டத்தார்கள் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நிச்சயமாக நாங்கள் உம்மையும் உம்மை பின்பற்றும் அந்த மக்களையும் துர்ச்சகுனமாகவே கருதுகிறோம் என்று கூறினார்கள்.
அதற்கு சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் உங்கள் துர்ச்சகுணம் (அதன் காரணம் ) அல்லாஹுவிடமே இருக்கிறது மாறாக நிச்சயமாக அல்லாஹுவினால் சோதனைக்கு உள்ளாக்கப்படும் சமூகமாகவே இருக்கிறீர்கள் என்று கூறினார்கள்
அதற்கு அந்த மக்கள் கூறினார்கள்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வாக்களித்த அந்த வேதனையை எங்களுக்கு கொண்டு வரவும் என்று கூறினார்கள்
அதற்கு சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என் சமூகத்தாரே நன்மைக்கு முன்னால் ஏன் தீமையை எதிர் கொள்ள அவசரப்படுகிறீர்கள்? .நீங்கள் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கோர வேண்டாமா? அதன் மூலம் நீங்கள் அல்லாஹுவின் பொருத்தத்தை பெறலாமே என்று கூறினார் .
மேலும் அல்லாஹ் தனது திருமறையிலே சாட்சி அளிக்கிறான். ஒரு புதன் கிழமை குதார் என்பவனும், மஸ்தகு என்பவனும் தம் வயதொத்த எழுவரையும் சேர்த்துக் கொண்டு அந்த ஒட்டகத்தில் கால் நரம்பை அறுத்துவிட்டார்கள் . மேலும் அதனை கொலையும் செய்து விட்டார்கள் அதனை கண்ட சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் கூறினார்கள் அல்லாஹுவின் அத்தாட்சியை பொய்யாக்கி விட்டீர்கள். இதனால் நீங்கள் கண்டிப்பாக வேதனை அனுபவிப்பீர் . அதுகண்ட அதன் குட்டி அபயக்குரல் எழுப்பி மலைமீது ஓடிவிட்டது.
மேலும் அவர்கள் மற்றொரு சூழ்ச்சியை செய்தார்கள் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இரவோடு இரவாக நாம் அழித்துவிடுவோம் என்று நீங்கள் அனைவரும் அல்லாஹுவை கொண்டு சத்தியம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அவர்களது பாதுகாவலர்களிடம் நிச்சயமாக அவர்கள் அளிக்கப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை என்று திட்டமாக கூறிவிடுவோம் என்று. ஒரு சூழ்ச்சியை அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
91:11. “தமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான் இதுபோல இவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அதனை முறியடிக்க வேதனையை கொண்டு அல்லாஹுவாகிய அவன் சூழ்ச்சி செய்தான் என்று.
மேலும் அல்லாஹ் அதனை சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்து அவரையும் அவர்களது குடும்பத்தார்களையும் மேலும் அவரை பின்பற்றிய மக்களையும் அழைத்து செல்ல உத்தரவிட்டான்.
அதன்படி செல்லும் முன் நபி சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீங்கள் அல்லாஹுவிர்க்கு மாறுசெய்து அவனது அத்தாட்சிகளை பொய்யாக்கியதன் காரணமாக இன்னும் உங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி அல்லாஹ்விடம் பிராத்தித்து அவரும் அவரை சார்ந்தவர்களும் அந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டார்கள்
அல்லாஹ் அந்த மூன்று அவகாச நாட்களில் முதல் நாள் அந்த மக்கள் அனைவரின் முகங்களும் சிவப்பாக மாறியது. அதனை கண்டதும் அவர்கள் சற்று தர்கிக்க தொடங்கினார்கள். மேலும் சாலிஹ் அவர்கள் போகும்பொழுது நாம் அனைவருக்கு சூனியம் செய்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டார்கள். இரண்டாவது நாள் அவர்களது முகங்கள் கருப்பாக மாறிவிட்டது. மேலும் அவர்களுக்கு தர்க்கம் அதிகமாக மாறியது அவர்களின் சிந்தனை பலமாரியாக மாறியது மூன்றாவது நாள் அவர்கள் அனைவரின் முகமும் மஞ்சள் நிறமாக மாறிவிட்டது. அவர்களது உள்ளத்தில் ஒரு பய உணர்வு வந்துவிட்டது .
அவர்கள் தங்கள் முகங்கள் மாற மாற அவர்களின் சிந்தனைகள் சூனியமோ அல்ல, சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாபமா என்று தான் சிந்தித்தார்கள் அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.
மேலும் மூன்றாவது நாள் முடிவில் அல்லாஹ் தனது அதாபை (வேதனையை ) அல்லாஹ் இறக்கினான் ஒரே ஒரு இடி முழக்கம் தான் அவர்கள் அனைவரும் குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள் “
மேலும் மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் நமது நபி சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக ‘இந்த கூட்டத்தில் உள்ள ஒருவன் அதாபு வரும் முன் சிறு வேலையாக அந்த ஊரைவிட்டு வெளியே வந்து சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் அவரை சார்தவர்களுடன் மக்காவின் எல்லையில் ஒரு பள்ளத்தாக்கில் தங்கி இருந்தார்கள். அவர்களுடன் அவனும் வந்து சேர்த்து இருந்தான். பிறகு அவன் மக்காவின் எல்லையை தாண்டிய பொழுது அவனையும் இடி அழித்துவிட்டது என்று குறிபிடுகிறார்கள்.
மேலும் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் அவரை சார்ந்தவர்களும் ஹஜ்ஜுக்கு சென்றதாக கூறப்படுகிறது .
மேலும் இதனை பற்றி நமது நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம்அவர்கள் சஹாபக்களிடம் ஹஜ்ஜுக்கு செல்லும்பொழுது ஒரு பள்ளத்தாக்கை காண்பித்து இதன் பெயர் என்ன என்று கேட்டார்கள் அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு தாலா அவர்கள் இந்த பள்ளத்தாக்கின் பெயர் ‘வாதி அஸ்பான் ‘ என்று கூறினார்கள் அதற்கு நமது நாயகம் நபி சல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் இந்த வாதி அஸ்பானில்தான் நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் தங்கி ஹஜ்ஜு செய்ததாக கூறினார்கள் .
மேலும் தபூக் போருக்கு செல்லும் தருவாயில் நமது ஹபீப் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களை பார்த்து சமூது கூட்டம் வசித்த அந்த இடத்தை கடக்கும் பொழுது அனைவரும் அழுதவர்களாகவே வாருங்கள். அழுகை வரவில்லை என்றால் அழுவதுபோல் பாவனையிலாவது வாருங்கள். சிரித்தவர்களாக வந்துவிடாதீர்கள் ஏன் என்றால் அல்லாஹுவின் அதாபு உங்களையும் பிடித்து விடக்கூடும் . என்று அஞ்சினார்கள் .
மேலும் சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹரமின் (மக்காவின் ) எல்லை பகுதிகளிலேயே வசித்து வந்து அங்கேயே மரணித்து ஹரமின் எல்லையில் அவர்களை அடக்கம் செய்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவர்களின் வயது 258 என்றும், 280 என்றும், 200 என்றும், 80 என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ளது.